1.போக்கிரி : திருமதி ஸ்லேட்டர் அம்மாளை மீராபாயம்மாளாக்கி, முக்காடு போட்டு ஆபாசமாக்கி சீமைக்கு அழைத்துப் போய் இந்திய நாகரீகத்தைப் பாருங்கள் என்று வெள்ளைக்காரர்களுக்கு காட்டுகிறாரே அது ஏன்? முக்காடு என்ன அவ்வளவு அழகா? அல்லது, தன்னை ஒரு சனாதன இந்து என்பதற்காகவா?
யோக்கியன்: அதைப்பற்றி கவலை உனக்கு எதற்கு? அது அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்தது.
போக்கிரி : சரோஜனி அம்மாள் அப்படியில்லையே?
யோக்கியன்: மறுபடியும் பேசுகிறாயே?
- போக்கிரி: சரி, அதைப்பற்றி பின்னால் பேசிக்கொள்ளலாம். திரு. காந்திக்கு திரு.ஏ. ரங்கசாமி அய்யங்கார் அவர்களின் யோக்கியதை தெரியுமா? தெரியாதா?
யோக்கியன்: தெரியும். ஏன்?
போக்கிரி : அவர் காந்தியை மீறித்தானே வட்டமேஜைக்குப் போனார்?
யோக்கியன்: ஆம்.
போக்கிரி : அப்படி இருக்க, திரு.காந்தி அவரை எதற்காகத் தனக்கு அரசியல் ஆலோசனை சொல்லும் அமைச்சராக வைத்துக் கொண்டார்.
யோக்கியன்: இது வேண்டுமானால் நல்ல கேள்வி. ஏன் வைத்துக் கொண்டார் என்றால், திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார் ‘இந்து’ ‘சுதேசமித் திரன்’ பத்திரிகைகளின் ஆசிரியாய் இருக்கின்றார் என்பதற்காகத்தான். அன்றியும் திரு.ரங்கசாமி அய்யங்காரிடம் திரு.காந்தியின் கைவரிசை ஒன்றும் செல்லாது. ஏனெனில் இந்து பத்திரிகையொன்றாலே திரு.காந்திக்கு எப்போதும் நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு உண்டு.
போக்கிரி : அதெப்படி?
யோக்கியன்: காலஞ் சென்ற ஒத்துழையாமையின்போது கூட இந்து பத்திரிகை ஒத்துழையாமைக்கு விரோதமாய் விஷமப் பிரசாரம் செய்தும் திரு.காந்தி அடிக்கடி அதன் ஆசிரியருக்குக் கடிதம் எழுதி அவரைக் கைக் குள் போட்டு, ‘ஒத்துழையாமையை தயவு செய்து கவனித்துக் கொள்ளுங் கள்’ என்று கடிதமெழுதி இருக்கிறார். அன்றியும் ‘இந்து’வும் ‘சுதேச மித்திர’னும் சேர்ந்துதான் திரு.தாசுக்கு விளம்பரம் கொடுத்து அவரை ‘தேசபந்து’ வாக்கி ‘மகாத்மாவை’ தோற்கடித்து ஒத்துழையாமையைப் புதைத்து விட்டதுகள். ஆதலால் அதுபோலவே இப்போதும் செய்து விடுமோ என்கின்ற பயத்தால்தான் திரு.ரங்கசாமி அய்யங்காரை திரு.காந்தி தனது மந்திரியாக்கிக் கொண்டார்.
போக்கிரி : மற்றவர்களையெல்லாம்விட திரு.ஏ.ரங்கசாமி அய்யங்காரிடம் மாத்திரம் என்ன அவ்வளவு பயம்?
யோக்கியன்: ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’ என்றால் பார்ப்பனர்கள் என்று அருத்தம். அதுவும் ‘தென்னாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள்’என்று அர்த்தம். திரு.காந்தியைப்போல் ஆயிரம் காந்தியை அய்யங்கார் பார்ப் பனர்கள் ஆக்கவும் கூடும். அழிக்கவும் கூடும். திரு.காந்தி இவையெல்லாம் தெரியாதவரல்ல. யார்யாரைப் பிடித்து எப்படி எப்படி சரிபண்ணலாம், எப்படி எப்படி விளம்பரம் செய்யலாம் என்பதில் அவருக்கு அனுபவ முண்டு - லார்டு இர்வினை ‘மகாத்மா இர்வின்’ என்று காந்தி கூப்பிட்டாரே எதற்கு? என்பது உமக்குத் தெரியுமா?
போக்கிரி : சரி, விளங்கிற்று இனி ஒன்றும் தெரிய வேண்டாம்.
புதிய தொண்டரும் பழைய தொண்டரும்
புதுத் தொண்டர்: வட்டமேஜை முறிந்து போனால் என்ன செய்வது? ‘ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டி வரும்’ என்று காந்தி சொல்லுகின்றாரே’.
பழய தொண்டர்: அட பயித்தியக்காரா! வட்டமேஜை மகாநாடு முறிந்தால் தான் நமக்கு நல்லது.
புதுத் தொண்டர்: அதென்ன அப்படி?
பழய தொண்டர்: வட்டமேஜை மகாநாடு முறிந்து போனால், திரு.காந்தி இந்தியாவுக்கு வந்து, மறுபடியும் ஏதாவது சத்தியாக்கிரகம் - சட்டமறுப்பு- என்பதாக, எதையாவது ஒன்றைச் செய்யச் சொல்வார்.
புதுத் தொண்டர்: அதனால் நமக்கென்ன லாபம்? ஜனங்களுக்கு கஷ்டம் தானே?
பழய தொண்டர்: அட முட்டாளே! ஜனங்கள் எக்கேடு கெட் டேனும் தொலையட்டும். அதைப் பற்றி நமக்கென்ன கவலை? நமக்கு எப்படியும் ஒரு வேலை இருக்குமல்லவா? அதனால் உண்டி வசூலிக்கவோ, பணம் வசூல் செய்யவோ, தேசாபிமானியாகவோ சவுகரியம் இருக்கும். அப்படியில்லா விட்டால் நம்மை எவன் சட்டை பண்ணுவான்?
புதுத் தொண்டர்: நமக்கு வேலை வேண்டியதற்காகவா தேசியத் தொண்டு செய்வது?
பழய தொண்டர்: சரி! சரி! உனக்கு ஒன்றும் தெரியாது. உங்கள் வீட்டில் ஏதோ சோற்றுக்குக் கொஞ்சம் வகை இருக்கின்றது போல் தெரி கின்றது, அதனால் உனக்கு வட்டமேஜை முறிய வேண்டிய அவசிய மில்லையென்று தோன்றுகின்றது.
புதுத் தொண்டர்: அதென்ன அப்படி சொல்லுகின்றாய்?
பழய தொண்டர்: வட்டமேஜை ஏதாவது ஒரு வழியில் வெற்றி பெற்று விட்டால், இந்தியாவில் வேலையில்லா கஷ்டம் எவ்வளவு அதிகரிக் கும் தெரியுமா? முக்கால்வாசிப் பத்திரிகைகள் ஒழிந்து போகும். முன்பெல் லாம் பாமர மக்களை ஏமாற்ற மதம் ஒன்று தான் இருந்தது. இப்போது நமது பிராமணப் பெரியோர்கள் தயவினால் தேசீயம் என்பதாக ஒன்று ஏற்பட்டு, இதில் அனேகம் பேருக்கு ஜீவனோபாயம் உண்டாயிற்று. மகாத்மா காந்தி அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார். அதனால் இப்போது நம்போலியர்க்கெல்லாம் சோற்றுக்குச் சோறு, துணிக்குத்துணி, கை செலவுக்குத் தாராளமாகக் காசு இவ்வளவும் தவிர, போகின்ற பக்கம், வருகின்ற பக்கம் எல்லாம் திருப்பதி குடை யாத்திரைக்காரருக்கு காலில் தண்ணீர் விட்டு விழுந்து கும்பிட்டு, தட்டத்தில் காசு போடுகின்ற மாதிரியான மரியாதை-இவ்வள வெல்லாம் இருக்கின்ற போது, இவை அத்தனையும் ஒழிந்து போகின்ற மாதிரியில் ‘வட்டமேஜை வெற்றி பெற்றால்’ என்று கேட்கின்றாயே, பாவி! இதைக் கேட்டதும் எனக்குத் திகீர் என்கின்றது.
புதுத் தொண்டர்: கோபித்துக் கொள்ளாதீர்கள்! எனக்கு அனு போகம் இல்லாததினால் இப்படிக் கேட்டேனே ஒழிய, உங்கள் பிழைப்பில் நான் கை வைக்கவில்லை.
சத்தியாக்கிரகமும் தடையும்
கேள்வி: ‘சத்தியாக்கிரகம்’ என்பதை குற்றம் சொல்லுவதின் காரணம் என்ன?
விடை: சத்தியாக்கிரகம் என்கின்ற வார்த்தையில் மனிதத் தன்மைக்கு மீறினதான, ஏதோ ஒரு ‘தெய்வீக’சக்தி இருப்பதான கருத்து இருக்கின்ற படியால், தெய்வத்தன்மை என்பதை ஒப்புக்கொள்ளாதவன் சத்தியாக் கிரகத்தை ஒப்புக் கொள்ளமுடியாது.
கேள்வி: அப்படியானால் முழுச் சுயமரியாதைக்காரர்கள் என்பவர்கள் கூட சத்தியாக்கிரகம் செய்கின்றார்களே அதன் அருத்தம் என்ன?
விடை: பசிக் கொடுமையால் உலகில் நடக்கும் எத்தனையோ விதமான அற்புதமல்லாதவைகளில் சுயமரியாதைக்காரர் என்பவர்கள் சத்தியாக்கிரகம் செய்கின்றார்கள் என்பதும் சேர்ந்ததாகும். ‘யாரைவிட்டது காண் பசிக் கொடுமை எவரை விட்டது காண் பசிக் கொடுமை’ என்பதும், ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்பதும் இதில் சேர்ந்தவைதான்.
கேள்வி: ‘மகாத்மா’காந்தி எத்தனையோ காரியத்திற்கு சத்தியாக் கிரகம் செய்கின்றாரே? இந்த தீண்டாமைக்கு ஏன் சத்தியாக்கிரகம் செய் வதில்லை?
விடை: அவர் தீண்டாமை விலக்குவதில் சத்தியம் இருக்கின்றதா இல்லையா என்பதில் இன்னமும் முடிவு காணாமல் இருக்கின்றார். ஆதலால் தான் தீண்டாமை ஒழிப்பதற்கு சத்தியாக்கிரகம் செய்யும் விஷயத்தில் பயப்படுகிறார்.
கேள்வி: அப்படியானால் வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு அவர் எப்படி உதவி செய்தார்?
விடை: வைக்கம் சத்தியாக்கிரகம் திரு காந்தி ஆரம்பித்ததல்ல. மற்றவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். ‘நம்பிக்கை இருக்கின்றவர்கள் செய்யுங்கள்’ என்று அனுமதி மாத்திரம் கொடுத்துவிட்டார்.
கேள்வி: வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு ‘மகாத்மா’ பணம் கூட கொடுத்தாரே.
விடை: ஆம். அந்தப் பணம் கொடுத்தது எதற்கென்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தை நடத்தப் பஞ்சாப்பில் இருந்து சீக்கியர்கள் பதினாயிரக்கணக்கான ரூபாய்களுடன் வந்து விட்டார்கள். அவர்களைக் கொண்டு சத்தியாக்கிரகம் நடந்தால் ஜனங்கள் சீக்கியர்கள் ஆய்விடுவார்களே என்று கருதியும், மற்றும் பணம் தாராளமாய் இருந்தால் தீண்டாமை விலக்குக்கு நினைத்த இடங்களில் எல்லாம் சத்தியாக்கிரகம் தொடங்கப்பட்டு விடுமே என்று பயந்தும், சீக்கியர்களை திரும்பிப் போகும்படி செய்துவிட்டார். அதனால் சிறிது உதவி செய்ய வேண்டியதாயிற்று.
('சித்திரபுத்திரன்', குடி அரசு - உரையாடல் - 15.11.1931)