“இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி

இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினார்.

தந்தை பெரியார், சாதியை ஒழிக்க அரை நூற்றாண்டுக்காலம் கடுமையாக உழைத்தார். ஆனால் இன்றும் சாதிவெறி தலைக்கேறி ஆடுகிறது.

நவம்பர் 7 சோவியத்து நாட்டில் சோசலிசப் புரட்சி வென்ற நாள்.

2012 இல் அதே நாளில் தருமபுரியிலிருந்து 10 கி.மீ. கிழக்கில், நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கி.மீ. வடக்கில் உள்ள நத்தம், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அண்ணாநகர், நெடுஞ்சாலைக்குத் தெற்கில் 2.5 கி.மீ. தொலைவிலுள்ள கொண்டம்பட்டி ஆகிய மூன்று ஆதிதிராவிடக் குடியிருப்பு வீடுகள் எரிக்கப்பட்டும் அடித்து நொறுக்கப்பட்டும் சூறையாடப் பட்டும் சேதப்படுத்தப்பட்டன என்பது உலகம் அறிந்த செய்தியாகிவிட்டது.

வேலூரிலிருந்து (வ.ஆ.) மா.பெ.பொ.க.கட்சி சா. குப்பன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஆ.சிங்கராயர் திராவிடர் விடுதலைக் கழகம் இரா.சிவா, தமிழ் இளைஞர் இயக்கம் அழகு ஒளி, சமூக ஆர்வலர் பாலா முதலான எண்மர் கொண்ட குழு 15.11.2012 காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை மூன்று பகுதிகளிலும், செல்லன் கொட்டாயிலும் மக்களிடம் நேர்காணல் செய்தோம்.

இந்த நிகழ்வுக்கு 40 நாள்களுக்கு முன் நத்தம், இளங்கோவன் மகன் இளவரசனும்; செல்லன் கொட்டாய், (நத்தத்திலிருந்து அரை கி.மீ. தள்ளியுள்ள சிற்றூர்) நாகராசன் மகள் திவ்யாவும் ஒருவரை ஒருவர் விரும்பித் திருமணம் செய்து கொண்டனர்.

வன்னியரான நாகராசன் நவம்பர் 7 அன்று பகல் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். நாகராசன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியா ளராக இருந்தவர். மகளை ஏன் சரியாகக் கண்காணித்து வளர்க்கவில்லை என்று நாகராசனின் சாதிக்காரர்கள் கடுமையாகக் திட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு சாராரால் கூறப்படுகிறது.

அக்கம் பக்கத்து ஊர்களில் வசிக்கும் வன்னியர்கள் சுமார் 500 பேர்களுக்குமேல் திரண்டு வந்து, இறந்துவிட்ட நாகராசனின் உடலை நத்தம்-இளவரசன் வீட்டுமுன் கிடத்திவிட்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில் சற்றுத் தள்ளியுள்ள அண்ணாநகர் ஆதித்திராவிடர் குடியிருப்பும் தாக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய நேரம் மாலை 4.30 மணி என்பதால் பெரும்பாலான ஆண்கள் வெளியே வேலைக்குச் சென்றுவிட்டிருந்தனர். மாணவர்கள் பள்ளிக்குச் சென்று திரும்புகின்ற வேளை. வீட்டிலிருந்தவர்கள்

அனைவரும் ஓடிச்சென்று அருகிலிருக்கும் சோளக்காடு, தோப்பு ஆகிய இடங்களில் ஒளிந்து கொண்டனர். தாக்குதல் இரவு 7.30 - 8.00 வரை நீடித்தது.

நத்தம் : (செல்லன் கொட்டாய்)

மொத்தமுள்ள வீடுகள் சுமார்     200

மக்கள் தொகை சுமார் 800

எரிக்கப்பட்ட வீடுகள்   20

அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்   80

எரிக்கப்பட்ட மகிழுந்துகள்   2

எரிக்கப்பட்ட இருசக்கர ஊர்திகள் சுமார்  70

அண்ணாநகர் : (நாய்க்கன் கொட்டாய்)

மொத்தமுள்ள வீடுகள் சுமார்     52

மக்கள் தொகை சுமார் 200

எரிக்கப்பட்ட வீடுகள்   10

அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்   36

எரிக்கப்பட்ட இருசக்கர ஊர்திகள் சுமார்  2

கொண்டம்பட்டி : (ஏழு சிற்றூர்களுக்கும் உட்பட்டது)

மொத்த வீடுகள் சுமார் 200

மக்கள் தொகை சுமார் 800

எரிக்கப்பட்ட வீடுகள்   10

சேதப்படுத்தப்பட்ட வீடுகள்  190

முதல் இரு பகுதிகளையும் தாக்கிய அதே கூட்டதினரே, இரண்டு சரக்குந்துகளிலும் மற்றும் மகிழுந்துகளிலும் மூன்றாவது இடமான கொண்டம்பட்டிக்குச் சென்று இரவு 7.00 மணி முதல் 9.00 மணிவரை தாக்கியதாக அங்குள்ள மக்கள் கூறினர். அங்கிருந்த மக்களும் உயிருக்கு அஞ்சி அங்கிருந்து ஓடி ஒளிந்தனர்.

கொண்டம்பட்டி தாக்கப்படக் காரணம்

15 மாதங்களுக்கு முன் கொண்டம்பட்டி ஆதித் திராவிடர் குடியிருப்பைச் சார்ந்த டி.இராஜூவின் மகன் நேதாஜியும், இங்கிருந்து 20 கி.மீ.க்கு அப்பால் உள்ள கருவேலம்பட்டி யைச் சார்ந்த வன்னியரின் மகள் முத்துலட்மியும் திருமணம் செய்து கொண்டனர். இவ்விருவரும் தருமபுரியில் உள்ள காமதேனு கல்லூரியில் பி.எஸ்சி. (வேதியியல்) படிப்பை ஒரே வகுப்பில் படித்தவர்கள். இவர்கள் தற்போது வெளியூரில் வசிக்கின்றனர். அப்போது தாக்குதல் எதுவும் நடைபெற வில்லை.

தாக்குதலுக்குள்ளான மக்கள் வாழ்நிலை :

நத்தம் : இங்குள்ள ஆதித்திராவிடர்களில் ஒரு பகுதி யினர் அக்கம்பக்கத்தில் உள்ள செல்லன் கொட்டாய், மிளகானூர், புதூர், சவலுப்பட்டி, கோணம்பட்டி, வெள்ளாளப் பட்டி, சவுக்குத்தோப்பு ஆகிய ஊர்களில் வன்னியர்கள், நாயுடுகளின் வயல்களில் வேலை செய்கின்றனர்.

இளைஞர்களாக உள்ளவர்கள் ஓசூர், பெங்களூர் முதலான நகரங்களுக்குச் சென்று கட்டடப் பணிகளில் உழைத்துச் சம்பாதித்து முன்னேறியுள்ளனர். நத்தத்தில் உள்ளவர்களில் சுமார் 20 வீட்டினருக்கு மட்டும் அரை ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரை நிலம் உள்ளது. ஒருவர் தருமபுரியில் வழக்குரைஞராகத் தொழில் புரிகிறார். ஆசிரியர்கள் மூவர்; காவல்துறையில் காவலராக மூன்று பேர் வெளியூர்களில் பணிபுரிகின்றனர்.

மேலும் 4 பேர் மருத்துவமனையில் கடைநிலை ஊழியர் போன்ற பணிகளில் உள்னர். சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட இளவரசன் காவலர் பணிக்குத் தேர்வாகி, பணி நியமன ஆணையை எதிர்பார்த்துள்ளார்.

அண்ணாநகர் : இப்பகுதியிலுள்ளவர்களில் எவருக்கும், வசிக்கின்ற வீடு தவிர, வேறு எந்தச் சொத்துமில்லi. இவ்வூரார் வயல் வேலைகளில் அதிகம் ஈடுபடுவதில்லை. கட்டடக் கூலி வேலைகள் தான் செய்கின்றனர். தற்போது மூவர் கல்லுரியில் படிக்கின்றனர். ஒருவர் மட்டும் வங்கியில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிகிறார்.

கொண்டாம்பட்டி : இங்குள்ளவர்களுக்கும் சொந்தமாக வேளாண் நிலம் இல்லை. பெரும்பாலும் அரசினர் கட்டித் தந்துள்ள தொகுப்பு வீடுகளே உள்ளன. பெரும்பாலானவர்கள் வேளாண் கூலி வேலையே செய்கின்றனர். வேறு பணிகளில் உள்ள சிலர் வெளியூர்களில் வசிக்கின்றனர்.

மேற்படி மூன்று பகுதிகளிலும் எரிக்கப்பட்ட வீடுகள் 40. வீடுகளில் இருந்த எல்லாப் பொருள்களும் சூறையாடப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. எல்லா வீடுகளிலுமிருந்த நிலைப்பேழைகள் (பீரோக்கள்) உடைக்கப்பட்டு பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள், துணிமணிகள், புத்தகங்கள் கொளுத்தப் பட்டுள்ளன.

மேற்படிச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து, தண்டிப்பதுடன் இச்செயல்களில் ஈடுபட்ட ஊர்களுக்குப் பொதுத் தண்டம் விதிக்கலாம்.

தீர்வுதான் என்ன?

1.    ஆதித்திராவிடர்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்ட வேண்டி, மற்ற சாதியினரின் நிலங்களைக் கையகப் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தற்போது அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே உள்ள குடிசை வீடுகளை மாற்றி, அதே இடங்களில் மெத்தை அடுக்குமாடி வீடுகள் கட்டித் தர வண்டும்.

2.    ஆதித்திராவிடர் நலத்துறை என வைத்துத் தனியாகப் பள்ளிகள் நடத்துவதை அடியோடு மாற்றி, பள்ளிகளுடன் சேர்த்து, அரசுப் பொதுப்பள்ளியாக நடத்த வேண்டும். ஆசிரியர்களையும் ஊழியர்களையும் மற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியருடன், அவர்களின் பணிமூப்பு பாதிக்கப்படாமல் இணைத்துவிட வேண்டும். இது உடனடித் தேவை.

3.    ஆதித்திராவிட மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் தங்கும் விடுதிகள் தனியே உள்ளன. இவ்விடுதிகள் யாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரே நிர்வாகத்தில் பொதுவாக “தமிழ்நாட்டு அரசு மாணவர் விடுதி” / “தமிழ்நாடு அரசு மாணவியர் விடுதி” என மட்டும் பெயரிட்டு நடத்தப்படவேண்டும்.

4.    ஊர்தோறும் உள்ள எல்லாக் கோயில்களிலும் ஆதித் திராவிடர் வழிபட நடவடிக்கைகளை அரசும், அந்தந்த ஊராட்சியும் உடனே மேற்கொள்ள வேண்டும்.

5.    எல்லா ஊர்களிலும் ஆதித்திராவிடர்களுக்கு தனிச் சுடுகாடு / இடுகாடு என்பதை பொதுச் சுடுகாடுகளாக / இடுகாடுகளாக ஆக்க வேண்டும். பார்ப்பனர் சுடுகாடு, குடியானவர் சுடுகாடு, பறையர் சுடுகாடு என இருப் பதைத் தனிச்சட்டம் போட்டு நீக்கவேண்டும்.

6.            ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வேலைகளைச் செய்வதைக் கண்டிப்பாக, விவசாயம் அதிகம் நடைபெறாத பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல்,மே, சூன் மாதங்களில் மட்டும்தான் செயல்படுத்தவேண்டும். அதுவும் அந்தந்த ஊர்களில் பாழாகிவரும் ஏரி, குளம், குட்டைகள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள், இணைப்புச் சாலை களைப் பழுதுபார்க்கும் பணிகள் மட்டுமே மேற்கொள் ளப்பட வேண்டும். இதனால் விவசாயப் பணிகள் நடைபெறும் நாள்களில், ஆள்பற்றாக்குறை நேரிடுவதை ஓரளவு தவிர்க்கலாம்.

7.            சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது சமூக அமைதிக்கு எதிராகச் செயல்படுவதாகச் குற்றஞ்சுமத்தி, நன்கு ஆராய்ந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டு அரசினர் இவற்றைப் பற்றி நன்றாகத் திட்டமிட்டு, இரண்டு மூன்று ஆண்டுகளில் முழுவதுமாக இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

- சா.குப்பன்

Pin It