அன்பின் அடையாளம், பண்பின் உறைவிடம், தமிழ் இலக்கியக் கடல், தமிழரின் நல்வாழ்வில் தனித்த ஆர்வம், தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டுமென்ற துடிப்பு இவ்வளவு தன்மைகளையும் ஒருங்கே கொண்டவர்தான், 16-11-2011 அன்று மறைந்து விட்ட மலேசியத் தமிழர் காவலர் மு.மணிவெள்ளையன் அவர்கள்.

அன்னார் 64 ஆண்டுகளே வாழ்ந்திருந்தாலும் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் சமூக வாழ்வு, பொருளாதார வாழ்வு, தாய்மொழி அறிவு இவற்றைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக முயன்று, மலேசியத் தமிழர்களுள் தமிழ் ஆர்வம் உள்ளவர் களை ஒன்று திரட்டி, அவர்கள் தமிழ் புலவர் பட்டம், தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் தமிழ் இளங்கலைப் பட்டம், தமிழ் முதுகலைப்பட்டம் இவற் றில் தகுதி பெற்றவர்களாக ஆக வேண்டும் என்பதற் கான முழு முயற்சி இவற்றுக்கே தன் முழு நேரத் தையும், உடலுழைப்பையும், சிந்தனையையும் பயன் படுத்தினார்.

புலவர் இரா.ந.வீரப்பன் அவர்களால் நிறுவப்பட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தில் பேரார்வத்துடன் ஈடுபட்டு உழைத்தார். புலவர் வீரப்பன் தமிழர் வாழும் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் சென்று தமிழர்களி டையே மொழி உணர்வை வளர்த்தார் அந்தப் பணி களிலும் மு.வெள்ளையன் அவர்களுக்குப் பெரும் பங்குண்டு.

பின்னர் தம் முயற்சியால் தமிழ் இலக்கியக் கழகம் என்பதை நிறுவி, அதன் வழியாகத் தமிழ் இலக்கியங் களைத் தமிழ் இனத்தில் பிறந்த ஆண் பெண் அனை வருக்கும் கற்பிக்கும் ஆர்வத்தோடு தமிழ் இலக்கிய வகுப்புகளை நடத்தினார். எல்லாவற்றும் மேலாகத் தமிழர் ஒவ்வொருவரும் திருக்குறளைக் கற்க வேண் டும்; வீட்டில் நாள்தோறும் திருக்குறளை ஓத வேண்டும்; திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள நல்ல நெறிகள் எல்லா வற்றையும் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார். வாரந்தோறும் தமிழ்க் குடும்பத்தினர் ஒரு தமிழரின் வீட்டில் கூடி ஆடவர், மகளிர், குழந்தைகள் எல்லோரும் ஒரு மணி நேரத் திற்கு மேல் திருக்குறளைக் குழுவாக ஓத வேண்டும் என்ற நெறியை 1990குப் பிறகு அறிமுகப்படுத்தினார். அவருடைய இல்லத்தில் அவருடைய குடும்பத்தார னைவரும் இன்றும் காலையும் மாலையும் திருக்குறள் ஓதுவதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள். இந்தப் பழக்கம் தமிழ் நாட்டிலோ, தமிழர்கள் வாழும் பிற நாடுகளிலோ இவ்வடிவத்தில் மேற்கொள் ளப்பட வில்லை என்பது ஒரு வரலாற்று உண்மை யாகும். இத்தகைய புதிய வரலாற்றைப் படைத்தவர் என்கிற பெருமை மு.மணி வெள்ளையன் அவர் களையே சாரும்.

1995 இல் பொங்கல் விழாவையொட்டி மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு வே.ஆனைமுத்து அழைக்கப்பட்டார். அவர் ‘தமிழர்க்கான வாழ்க்கை நெறி’ என்ற தலைப் பில் ஆற்றிய உரையை மலேசியாவில் வாழும் தமிழர் களுக்குரிய வாழ்க்கை நெறியாகவே ஆக்கப்பட வேண்டுமென்று அம்மாநாட்டிலேயே மணி வெள்ளையன் அறிவித்தார். வே.ஆனைமுத்து பெரியார் வரலாறு தொடர்பாக பழைய ஆவணங்களைத் திரட்டுவதற்குத் துணையாக, அவர் 37 நாள்கள் தங்கியிருப்பதற்குத் தம் பொறுப்பிலிருந்த கழக அலுவலகத்தில் ஒரு பகுதி யை ஒதுக்கிக் கொடுத்தார். அத்துடன் வே.ஆனைமுத்து 1950களில் நடத்திய ‘குறள்மலர்’ கிழமை இதழின் ஓராண்டுக்கான தொகுதியை ஒளிப்படம் எடுத்துக் கொடுத்து உதவினார். மலேசிய திராவிடர் கழகத்தினரோடு மணி வெள்ளையன் நல்ல தொடர்பு கொண்டிருந்தார். அவர்கள் வழியாக, மலேசியா முழுவதிலும் பினாங்கிலும் வே.ஆனைமுத்து பல பொதுக்கூட்டங்களில் பேசுவ தற்கு அடித்தளமாக விளங்கினார்.

பின்னர், தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் தமிழ் பயின்றவர்களுக்கு தமிழ்மணி பட்டயச் சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு, 2005 மே திங்களில் வே.ஆனைமுத்துவை அழைத்தார். ஏறக்குறைய 100 பேர்களுக்குப் பட்டயச் சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. அப்போது முதல், இரண்டு முயற்சிகளை மணி வெள்ளையன் மேற்கொண்டார்.

1.     உலகில் வாழும் தமிழர்களுக்குத் தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு நாள் என் பதை உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் வேண்டு கோள் விடுப்பதன் மூலம் அது நடை முறைக்கு வருவதற்குத் தூண்டுகோலாக விளங்கி னார். தமிழ்நாட்டு அரசுக்கும் அவ்வேண்டு கோளை விடுத்து வைத்தார்.

2.     தமிழ் இலக்கியக் கழகத்தின் மூலம் தமிழைப் பயில்பவர்கள் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழ கங்களுக்கு வருகை தந்து, பாடம் பயின்று இளங் கலைப் பட்டம், முதுகலைப்பட்டம் ஆகியவை பெறுவதற்கு வழிவகுத்தார். அவரே தமிழ் எம்.ஏ., இல் தேர்ச்சி பெற்றார். மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுவதற்கான வழி வகைகளை, அவர் அண்மையில் சென்னைக்கு வந்தபோது வே.ஆனை முத்துவிடமும், முனைவர் பொற்கோவிடமும், முனைவர் ஒப்பிலா மதிவாணனிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆர்வத்துடன் மலேசியா திரும்பினார். மலேசியா திரும்பும் போதே உடல் நலம் கெட்டு இருத்த அவர், இவ்வளவு விரைவில் மறைந்து விடுவார் என்று நான் எண்ணவே இல்லை. அவருடைய மறைவுச் செய்தி என்னையும் என்னை போன்று தமிழ்நாட்டில் உள்ள பலரையும் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது. அவருடைய மறைவு மலேசியத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும், அன் னாரின் குடும்பத்தார்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினரின் துக்கத்தை நாம் பங்கிட்டுக் கொள்கிறோம்.

மணிவெள்ளையனின் தந்தையார் பெயர் முத்துசாமி. அவர் தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட் டத்தில் துறையூர் பக்கத்திலுள்ள நரசிங்கபுரத்தில் பிறந்தவர். முத்துசாமி தன் பதினோராவது வயதில் தன் தமக்கை வீரம்மாளுடன் மலேசியாவிற்குச் சென் றார். உழைப்பால் முன்னேறிய அவருக்கு அய்ந்து ஆண் மக்களும் இரண்டு பெண் மக்களும் பிறந்தனர். எல்லோருக்கும் மூத்தவர் மணி வெள்ளையன் ஆவார். அவருடைய நேர் இளையதம்பி தமிழகத்திற்கு வந்து நரசிங்கபுரத்தில் தங்கிப் பள்ளிப் படிப்பை முடித்துப் பின்னர் மருத்துவப் படிப்பையும் முடித்துச் சென்றார். அவரின் தம்பி செல்லதுரை 10 ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார். இப்போது துணைவியார் புஷ்பவதி அம்மையாரும், தம்பிகள் மருத்துவர் மு.துரைராஜ், மு.பாலகிருஷ்ணன், மு.சரவணன்; மற்றும் இரண்டு தங்கைகள், மகன்கள் இளஞ்சித்திரன், இளவரசன், மகள்கள் அருள்மொழி, அமுதா மற்றும் உறவினர்களும் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகிவிட்டனர். இவர்கள் அனைவர்க்கும் இரங்கலை உரித்தாக்குகிறேன்; அனை வரும் மனந் தேற வேண்டுகிறேன்.

மணிவெள்ளையன் அவர் பிறந்த நாள்முதல் நரசிங்க புரத்துக்குச் சென்ற தில்லை. 1997 வாக்கில் அவரை நரசிங்கபுரத்திற்கு வே.ஆனைமுத்து அழைத்துச் சென்றார். அதன்பின்னர் அங்கிருந்த தன் சின்ன அத்தை கருப்பாயி அம்மாள் குடும்பத்தோடு தொடர்பு கொண்டு அவருடைய வீட்டிற்கு ஆண்டு தோறும் சென்று வந்தார். 90 ஆண்டுகளுக்கு முன் நரசிங்கபுரத்தை விட்டுச் சென்ற தன் தந்தையா ருக்கு உரிய சொத்தை ஒரு குறிப்பிட்ட விலை கொடுத்துத் தன் அத்தையின் குடும்பத்தாரிடமிருந்து பெற்றார். அவ்வூரிலேயே மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு நல்ல வீட்டைக் கட்டினார். தமிழர்களோடெல்லாம் உறவு கொண்டு விளங்கிய அவர், தம் முன்னோர்களு டன் உறவு கொள்வதிலும் பேரார்வம் கொண்டிருந்தார். அந்த ஊர் மக்களுக்கு மணிவெள்ளையன் மறைவு பேரிழப்பாகும். மணி வெள்ளையனின் சின்ன அத் தையும் 40 நாள்களுக்கு முன் மறைந்துவிட்டார் என்பது வருந்தத்தக்க செய்தி யாகும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் சார்பிலும், மா.பெ.பொ.க. தோழர்கள் சார்பிலும், சிந்தனையாளன் ஆசிரியர் குழு சார்பிலும், என் சார்பிலும் மறைந்த மலேசியத் தமிழர் காவலர் மு.மணிவெள்ளையன் அவர்களுக்கு இறுதி அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

வாழ்க மு. மணிவெள்ளையன் புகழ்.!

Pin It