இந்திராகாந்தி 1971ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது, ‘வறுமையே வெளியேறு’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தினார். இப்போது, சோனியா காந்தி தலைமையிலான - வெட்கங்கெட்ட காங்கிரசுக் கட்சியின் ஆட்சி ‘வறுமையே வெளியேறு’ என்ற பெயரை, ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்’ என்று மாற்றி, 3-7-2013 அன்று ஓர் அவசரச் சட்டமாக அறிவித்துள்ளது.

நாடு சுதந்தரம் பெறுவதற்கு முன்பே - 1946ஆம் ஆண்டிலேயே நேரு இந்தியாவின் தலைமைய மைச்சராகிவிட்டார். சுதந்தரம் பெற்றபின் கடந்த 66 ஆண்டுகளில் பதிமூன்று ஆண்டுகள் தவிர்த்து, மீதி 53 ஆண்டுகள் காங்கிரசுக் கட்சியே நடுவண் அரசில் ஆட்சியில் இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சவகர்லால் நேரு, இந்திரா காந்தி, இராசிவ்காந்தி ஆகி யோர் 40 ஆண்டுகள் நாட்டின் தலைமை அமைச்ச ராக ஆட்சி செய்தனர். ஆனால் வறுமையை ஒழிக்க வில்லை. ‘பிரதமர் மன்மோகன்’ என்ற முகமூடியுடன் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சோனியாகாந்தியின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் தான் உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது சோனியாவின் கனவுத் திட்டம் என்று கூறப்படுகிறது.

‘எது உண்மையான மக்கள் நலன், நாட்டின் நலன்’ என்கிற அரசியல் தெளிவும் புரிதலும் இல்லாமல், சாதிப்பற்று, மதப்பற்று, கட்சிப்பற்று, தலைவர் ‘பக்தி’ மற்றும் பணம், பிரியாணி, சாராயம், அடியாள் என்ப வற்றின் அடிப்படையில் வாக்களிக்கும் மக்களை ஆர வாரமான தேர்தல் முழக்கங்களால் அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. மக்களை ஆட்டுமந்தையைப் போல ‘வாக்கு மந்தை’யாகவே அரசியல் கட்சிகள் கருதுகின்றன. சுதந்தரம் பெற்று 66 ஆண்டுகளுக்குப் பின்னும், வெகுமக்களுக்கு, உயிர்வாழ்வதற்கு முதன் மையான அடிப்படைத் தேவையான உணவை ஏன் வழங்கவில்லை என்று அரசியல் கட்சிகளைத் தட்டிக் கேட்கும் அரசியல் புரிதல் ஏற்படாதவாறு மக்கள் ‘செம்மறி’ மந்தைகளாகவே வைக்கப்பட்டுள்ளனர்.

முடிசூடா மன்னராக மதிக்கப்பட்ட நேரு 1952, 1957, 1962 என மூன்று நாடாளுமன்றத் தேர்தல் களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து தலைமை அமைச் சராக இருந்தார். இந்திராகாந்தி கூட தொடர்ந்து இரண்டு அய்ந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் - சோனியா காந்தியின் எடுபிடியான மன்மோகன் சிங் தொடர்ந்து இரண்டு அய்ந்து ஆண்டுகள் தலைமை அமைச்சராக இருந்த பெருமையைப் பெறு கிறார். 2009இல் இரண்டாவது தடவையாக மன் மோகன் தலைமை அமைச்சரான பிறகு, அடுத்தடுத்து மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் ஆட்சி!

எனவே 2014ஆம் ஆண்டு ஏப்பிரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுக் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையும் வெல்லுமா? என்ற வினா காங்கிரசுக் கட்சியை அச் சுறுத்துகிறது; ஆர்.எஸ்.எஸ். ஆணையின்படி பாரதிய சனதாக்கட்சி ‘பிரதமர் வேட்பாளராக’ நரேந்திர மோடி யைக் களமிறக்கியுள்ளதால் காங்கிரசுக் கட்சி மேலும் மிரண்டு போய் உள்ளது.

2009ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசுக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதற்கு ‘நூறு நாள் வேலைத் திட்டம்’ என்று கூறப்படும் காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் தான், முதன்மையான காரணம் என்று தேர்தல் குறித்த ஆய்வுகள் தெரி வித்தன. நூறுநாள் வேலைத் திட்டத்தைப் போல, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உணவுப் பாது காப்புச் சட்டம் என்பதைத் துருப்புச் சீட்டாகப் பயன் படுத்திட சோனியா காந்தி முயல்கிறார்.

2009ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று காங்கிரசுக் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சியில் மீண்டும் அமர்ந்தபின், பிரணாப்முகர்ஜி தலைமையில் உணவுப் பாதுகாப்புச் சட்ட வரைவை உருவாக்க அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2011 திசம்பர் 22 அன்று நாடாளு மன்றத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. இச்சட்ட வரைவு நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. இக் குழு 2013 பிப்பிரவரியில் தன் அறிக்கையை அளித்தது. 2013 மார்சு மாதம் நடுவண் அரசின் அமைச்சரவை சில திருத்தங்களுடன் இச்சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்தது. 2013 மே 2 அன்று இச்சட்டவரைவு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்மொழியப் பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேறாமல் போயிற்று. இச் சட்டத்தின் மீது திருத்தங்கள் கொண்டுவந்து, நீண்ட விவாதம் நடத்திட, போதிய நேரம் இல்லாததால், இதை நிறைவேற்றிட அனுமதிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறின.

காங்கிரசுக் கட்சி, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதா? அல்லது அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பதா? என்று தடுமாறிக் கொண்டிருந்தது. இறுதியில் 2013 சூலை 3 அன்று இதற்கான அவசரச் சட்டத்தை நடுவண் அரசு பிறப்பித்தது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த அவசரச் சட்டத்திற்கு 5-7-2013 அன்று ஒப்புதல் வழங்கினார். இந்த அவசரச் சட்டத்திற்கு ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும். இல்லாவிடில், அச்சட்டம் செல்லாததாகிவிடும்.

அய்ந்தாண்டுகளாக ஆறப் போட்டுவிட்டு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஓர் அவசரச் சட்டமாக அறி வித்தது ஏன்? வழக்கமாக சூலை மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும். அவ்வாறிருக்க சூலை 3 அன்று அவசரச் சட்டமாக அறிவித்தது, சனநாயக நெறிமுறைக்கு முற்றி லும் எதிரானதல்லவா என்ற எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. ஆனால் காங்கிரசுக் கட்சி அரசியல் ஆதாயத் தைக் கருத்தில் கொண்டே இதை அவசரச் சட்டமாகப் பிறப்பித்தது.

மழைக்காலக் கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சிகள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிடுமோ என்று காங்கிரசு அஞ்சியது. மேலும் 2013ஆம் ஆண்டிற்குள் அய்ந்து மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இம்மாநிலங் களின் தேர்தலுக்குமுன், அவசரச் சட்டமாகப் பிறப்பித் தால், தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கருதி அதற்குத் தடைபோடக்கூடும் என்று காங்கிரசுக் கட்சி ‘தேர்தல்’ அரசியல் கணக்குப் போட்டது.

பாரதிய சனதாக்கட்சி, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முற்றிலுமாக எதிர்க்க முடியாது. ஏனெனில் பா.ச.க. ஆட்சி செய்யும் சத்தீ°கர் மாநிலத்தில் 90 விழுக்காடு மக்கள் பயன்பெறும் தன்மையில் இப்போது உணவுப் பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முற்றிலுமாக இச்சட்டத்தை எதிர்த் தால், பா.ச.க. மக்களுக்கு உணவு கிடைப்பதைத் தடுக்கிறது என்று காங்கிரசுக் கட்சி பரப்புரை செய்யும் என்பது பா.ச.க.வுக்குத் தெரியும். அதனால்தான் 2-5-13 அன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவ ரான சுஷ்மா சுவராஜ் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், சூலை 3 அன்று இது அவசரச் சட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆகத்து 5 முதல் 30 வரை நடைபெறவுள்ள நாடாளு மன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தில் எதிர்க் கட்சிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டிய நிலையைக் காங்கிரசுக் கட்சி ஏற்படுத்தியுள்ளது. ஆகத்து மாதத்தில் இச்சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைப்பது என்பது உறுதியாகிவிட்டது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள உணவுப் பாது காப்புச் சட்டத்தின்படி, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு அரிசி அல்லது கோதுமை அல்லது சிறுதானியம் 5 கிலோ வழங்கப்படும். ஒருரு கிலோ அரிசி ரூ.3, கோதுமை ரூ.2, சிறுதானியம் ரூ.1 என்கிற விலையில் வழங்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்த ஓராண்டிற்கு 6 கோடி டன் தானியமும், 1.25 இலட்சம் கோடி உருபாயும் தேவைப்படுகிறது. எனவே மக்களுக்கான நலத்திட்டங்களில், உலகிலேயே மிகப்பெரிய திட்டம் இது என்று காங்கிரசார் பெரு மிதத்துடன் கூறுகின்றனர். இது உண்மையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அய்ம்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆட்சிசெய்த போதிலும், வெகுமக்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளையேனும் வயிறார உணவு உண்ண இயலாத அவல நிலையில் இருப்ப தற்குக் காங்கிரசுக் கட்சியின் ஆட்சிதானே காரணம் என்பதை மறக்க முடியுமா?

ஒரு வேளைகூட வயிறார உணவு உண்ண இய லாமல் கொடிய வறுமையில் உழல்பவர்களுக்கென்று நடுவண் அரசு, அத்தியோதயா அன்னயோஜனா திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு கிலோ ரூ.3 விலையில் 35 கிலோ அரிசி அல்லது கிலோ ரூ.2 விலையில் கோதுமை வழங்கி வருகிறது. ஆயினும் இத்திட்டத்தில் பயன்பெற முடியாமல் எண்ணற்ற வறிய குடும்பங்கள் இருக் கின்றன.

அதேபோன்று, வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு மாதந்தோறும் நடுவண் அரசு கிலோ ரூ.5.65 விலையில் 35 கிலோ அரிசி அல்லது கிலோ ரூ.4.15 விலையில் கோதுமை 35 கிலோ மாநில அரசுகள் மூலம் வழங்கிவருகிறது. வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு கிலோ ரூ.8.30 விலையில் 15 கிலோ அரிசி அல்லது கிலோ ரூ.6.10 விலையில் கோதுமை 15 கிலோ வழங்கி வருகிறது.

இவ்வாறாகப் பழைய திட்டத்தின்படி, ஆண்டிற்கு 5.4 கோடி டன் தானியம் மானிய விலையில் 45 விழுக்காடு மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக நடுவண் அரசு உணவு மானியமாக ரூ.95,000 கோடி செலவிட்டது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி 6 கோடி டன் தானியம் மானிய விலையில் 67 விழுக்காடு மக்களுக்கு வழங்கப்படும். இதற்காகத் தேவைப்படும் மானியத் தொகை ரூ.1,25,000 கோடியாகும். எனவே கூடுத லாக 60 இலட்சம் டன் தானியமும், மானியத் தொகை ரூ.30,000 கோடியும் உணவுப் பாதுகாப்புச் சட்டத் தைச் செயல்படுத்தத் தேவைப்படுகின்றன. காங்கிரசுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறுவதுபோல, உணவுப் பாதுகாப்புச் சட்டம் வெகுமக் களின் வாழ்வைக் காப்பாற்றி முன்னேற்றுமா?

நடுவண் அரசின் திட்டக்குழுவின் அளவுகோலின் படி, ஊரகப் பகுதியில் ஒரு நாளைக்கு 2200 கலோரிக் கும் குறைவான சக்தி தரும் உணவு உண்போரும், நகர்ப்புறத்தில் 2100 கலோரிக்குக் குறைவாகப் பெறு வோரும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள் ஆவர்.

திட்டக்குழுவின் அறிக்கையின்படி வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் விவரம்:

ஆண்டு

ஊரகப் பகுதி

நகர்ப்பகுதி

1973-74

54%

60%

1983-84

56%

58.50%

1993-94

58.50%

57%

2004-05

69.50%

64%

2009-10

76%

73%

(தி இந்து 20.5.2013)

ஆனால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஊரகப் பகுதியில் 75 விழுக்காட்டினருக்கும் நகர்ப்பறத்தில் 50 விழுக்காட்டினருக்கும் மட்டும் மானிய விலையில் தானியம் விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு, கிட்டத்தட்ட அனைவருக்கும் மானிய விலையில் தானியம் வழங்க வேண்டும் (Universal Public Distribution) என்று நடுவண் அரசுக்கு ஏற்கெனவே அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் 2011 திசம்பரில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்ட வரைவில் ஒரு குடும்பத் திற்கு 35 கிலோ என்பதற்குப் பதிலாக, ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 7 கிலோ வழங்கப்படும் என்று மாற் றப்பட்டது. 2013 பிப்பிரவரியில் அளிக்கப்பட்ட நாடாளு மன்ற நிலைக்குழுவின் அறிக்கையிலும் 7 கிலோ என்று இருந்தது. ஆனால், பெருமுதலாளிகளுக்கு ஆண்டிற்கு அய்ந்து இலட்சம் கோடிக்குமேல் வரிச் சலுகை அளித்துவரும் மன்மோகன் அரசு, தற்போது இதை 5 கிலோவாகக் குறைத்துள்ளது.

15 முதல் 64 அகவையில் உள்ள ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 14 கிலோ தானியம் தேவை. எனவே 5 கிலோ தானியம் என்பது உழைப்பதற்கான - ஆரோக்கியமுடன் உயிர் வாழ்வதற்கான ஊட்டச்சத்தை எப்படித் தரமுடியும்? இந்தியாவில் சராசரியில் ஓராண்டில் ஒருவருக்குக் கிடைக்கும் தானியம் 160 கிலோ. இது அமெரிக்காவில் 900 கிலோ. அமெரிக்காவில் 900 கிலோவையும் தானியமாக உண்பதில்லை. அமெரிக்கர் கள் உண்ணும் பால்பொருட்கள், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் உற்பத்திக்குத் தேவைப்படும் தானிய மும் இதில் கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்தியாவை விட மக்கள் தொகை அதிகம் உள்ள சீனாவில் சராசரி யில் ஒருவருக்கு 450 கிலோ தானியம் கிடைக்கிறது. ஏனெனில் சீனாவில் ஒரு எக்டரில் கிடைக்கும் அரிசி 5332 கிலோ; ஆனால் இந்தியாவில் 1,909 கிலோ தான் கிடைக்கிறது. எனவேதான் உலகில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை இந்தியாவில் இருக்கிறது.

1955-56ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பதுக்கலும் கள்ளச்சந்தையும் பெருகி யது. தானியங்கள் விலை தாறுமாறாக உயர்ந்தது. ஏழை மக்களுக்காக அரசு கஞ்சித் தொட்டிகளைத் தொடங்கியது. அந்நிலையில் நடுவண் அரசு, இது குறித்து ஆராய, அசோக் மேத்தா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையின் படி, இந்திய உணவுக் கழகமும் வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையமும் அமைக்கப் பட்டன. நெல்லுக்கும் கோதுமைக்கும் அரசே கொள் முதல் விலையை நிர்ணயித்தது. இது குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) எனப் பட்டது. அரசே தானியங்களைக் கொள்முதல் செய்து, பொது வழங்கல் முறையில், நியாயவிலைக் கடைகள் மூலம் தானியங்களை வழங்கத் தொடங்கியது. 1967 இல் தொடங்கிய பசுமைப்புரட்சிக்குப்பின் விளைச்சல் அதிகரித்ததால், அரசின் கொள்முதலும், பொதுவழங்கல் முறையும் மேலும் விரிவடைந்து வளர்ச்சி பெற்றன.

பொதுவழங்கல் முறை தென்மாநிலங்களில் நன்கு வளர்ச்சி பெற்றது. வடஇந்திய மாநிலங்களில் இதில் பாதியளவு கூட வளர்ச்சி அடையவில்லை. இந்திய அளவில் 18 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 1.95 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றுள் 1.85 கோடி குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில் அரிசி வாங்குகின்றன. அதாவது 90 விழுக்காடு குடும்பத்தினர் பங்கீட்டுக் கடையில் வாங்குகின்றனர். பீகாரில் 16 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே நியாயவிலைக் கடையில் அரிசி வாங்கு கின்றன. வடமாநிலங்களில் கோதுமையை வாங்கு வதிலும் இதே நிலைதான்.

மேலும் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் நியாயவிலைக் கடைகள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் தனியாரிடம் உள்ளன. அதனால் அங்கெல்லாம் ஊழல் அதிக அளவில் நடக்கிறது. இந்திய அளவில் பொதுவழங்கல் முறைக்கு மானிய விலையில் ஒதுக் கப்படும் தானியத்தில் 40 விழுக்காடு வெளிச்சந்தை யில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய ஊழலைத் தடுப்பதுடன், தமிழ்நாட்டில் இருப்பது போன்று, அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வடஇந்திய மாநிலங்களில் நியாயவிலைக் கடைகள் தேவையான எண்ணிக்கையில் தொடங்கப்பட வேண்டும். தற்போது வடஇந்தியாவில் நகர்ப்புறங்களில் மட்டுமே பொது வழங்கல் முறை செயல்பாட்டில் உள்ளது. ஊரகப் பகுதிகளில் இல்லை என்று சொல்லும்படியான நிலைதான் இருக்கிறது. இவற்றையெல்லாம் சீர்ப்படுத் தாமல், வரப்போகும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் குறைந்த அளவில் கூட ஏழை, எளிய மக்களுக்குப் பயன்கிட்டாது.

2011 மே மாதம் அ.தி.மு.க. ஆட்சியில் அமர்வதற்கு முன் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்திற்கு 25 கிலோ அரிசி, கிலோ ஒரு உருவா விலையில் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. 2011 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி யளித்தபடி, 2011 சூன் முதல் 20 கிலோ அரிசி இலவய மாகவே தரப்படுகிறது. பொது வழங்கல் முறையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கு அதிகவிலை, கீழ் இருப்பவர்களுக்குக் குறைந்த விலை என்ற வேறுபாடு இல்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த வேறு பாட்டின் அடிப்படையில் இரண்டு விலைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் 31,500 நியாயவிலைக் கடைகள் உள்ளன. நடுவண் அரசிடமிருந்து தமிழ்நாடு மாதந் தோறும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்ற பிரிவினருக்கென 1.5 இலட்சம் டன் அரிசியை, கிலோ ரூ.5.65 விலையில் வாங்குகிறது. வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவர்கள் என்ற பிரிவினருக்கென கிலோ ரூ.8.30 விலையில், 1.26 இலட்சம் டன் அரிசி வாங்குகிறது. இவ்வாறு பெறப்படும் அரிசியை, ஒரு குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி என இலவயமாக வழங்குகிறது. தமிழ்நாடு அரசு ஓராண்டில் உணவு மானியத்துக்காக ரூ.4500 கோடி செலவிடுகிறுது. இதில் அரிசிக்கான மானியம் மட்டும் ரூ.2500 கோடி. மீதி கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகிய வற்றுக்கான மானியமாகச் செலவிடப்படுகிறது. உண்ணும் தானியத்தை இலவயமாக அரசு அளிப்பது வாங்குவோரின் தன்மான உணர்வை இழிவுபடுத்து வதாகும். உணவுத் தானியம் அல்லது உணவுப் பொருள் இலவசம் என்பது சோவியத்து நாட்டில் கூட இல்லை. இலவயம் என்பது கேடான பொருளாhரக் கொள்கை. எனவே தமிழ்நாட்டு அரசு மிக்க துணிவு டன் முடிவெடுத்து ஒரு கிலோ அரிசி ரூ.3 என ஒரு குடும்பத்துக்கு 35 கிலோ அரிசியை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி இலவயமாகக் கொடுக்கப்பட்ட போதிலும் வெளிச்சந்தையில் நல்ல அரிசி ரூ.50க்குமேல் விற்கப்படுகிறது. ஏனெனில் தற் போது தமிழ்நாட்டில் மக்கள் பயன்படுத்தும் அரிசியில் 50 விழுக்காடு வெளிச்சந்தையில் வாங்கப்படுகிறது. பீகாரிலும் மேற்குவங்கத்திலும் 90 விழுக்காடு அரிசியை மக்கள் வெளிச்சந்தையில் தான் வாங்குகிறார்கள். கோதுமையே முதன்மையான உணவாக உள்ள உத்திரப்பிரதேசம், இராஜ°தான், குசராத் போன்ற மாநிலங்களில் 85 விழுக்காடு கோதுமையை மக்கள் வெளிச்சந்தையில் வாங்குகின்றனர். இது அம்மாநிலங் களில் எந்த அளவுக்குப் பொதுவழங்கல் முறை செயல் பாட்டில் இல்லை என்பதைப் புலப்படுத்துகிறது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள உணவுப் பாது காப்புச் சட்டம் 67 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. மீதி 33 விழுக்காடு மக்களை விலக்குவதற்கான அளவுகோல் இச்சட்டத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை. முன்பு வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்தவர்களில் பாதிபேருக்குமேல் அதற்குரிய குடும்ப அட்டை கிடைக்கவில்லை என்று இந்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பே கூறியிருந் தது. எனவே சமூக அக்கறை கொண்ட பலதரப்பி னரும் வலியுறுத்தி வருவதுபோல், அனைவருக்குமான உணவுப் பாதுகாப்புச் சட்டமாக இது இயற்றப்பட வேண்டும். ஒரு குடும் பத்துக்கு 35 கிலோ தானியம் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் பொதுவழங்கல் முறையில் முறை கேடுகளும் ஊழல்களும் உள்ளபோதிலும், தமிழ்நாட் டில் இருப்பதுபோல், எல்லா மாநிலங்களிலும் நியாய விலைக்கடைகள் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட வேண்டும். இந்த நிலையை வடஇந்திய மாநிலங்கள் எட்டுவதற்குப் பல ஆண்டுகளாகும். அதன்பிறகே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் ஓரளவு மக்களுக்குப் பயன் கிடைக்கும்.

இந்திய வேளாண்மை வேகமாக இந்திய மற்றும் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. விதை, உரம், பூச்சிமருந்து, கருவி கள், இயந்திரங்கள் முதலான இடுபொருள்கள் முதலாளிகளின் ஆதிக்கத்தில் உள்ளன. வேளாண் விளைபொருளின் கொள்முதலும், விற்பனையும் பெரு முதலாளிய நிறுவனங்களின் ஆதிக்கத்தின்கீழ் போய்க் கொண்டிருக்கின்றன. இப்போக்கினைக் கட்டுப்படுத் தாமல், பொதுவழங்கல் முறையாலும், உணவுப் பாது காப்புச் சட்டத்தாலும் மக்களுக்குப் பயன் ஏதும் விளையாது. எனவே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் கிடைக்கக் கூடிய பயன் என்பது வலது கையால் கொடுத்து இடது கையால் பறித்துக் கொள்வதாகவே இருக்கும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டச் செயல்பாட்டின் அனுபவத்தின் அடிப்படையில் நோக்கும்போது, உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது காங்கிரசுக் கட்சி 2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காள மீன்களைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்த உள்ள தூண்டிலின் இரையாகவே தோன்றுகிறது.

Pin It