எல்மர் பெர்க்மன் (Elmar Bergmann) இதைச் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. தன்னிடம் உள்ள பணத்தையும் பொருட்களையும் கொள்ளை அடித்தது மட்டும் அல்லாமல், தன்னுடைய வாகனத்தையும் அடித்து, ஓட முடியாதபடி பழுது செய்து, அந்த இரவு நேரத்தில் தனியாக விடப்பட்டதை நினைத்து வருத்தமும், அச்சமும் ஒருசேர அடைந்தான்.

எல்மர் பெர்க்மன் ஒரு ஜெர்மானியன். வணிக நோக்கத்துடனும், மனமகிழ் நோக்கத்துடனும் அவன் ஹங்கேரி நாட்டிற்குச் சென்றிருந்தான். ஹங்கேரி நாட்டின் ஒரு சிறிய நகரமான டோராக் (Dorog) நரகத் தில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் தன் வேலை யை முடித்தபின், மகிழ்ச்சியாக அவ்வூரில் பொழுதைக் கழித்துக் கொண்டு இருந்தான். அன்று சனிக்கிழமை. பணம் படைத்த மனிதர்கள் வார விடுமுறையைக் கொண்டாடி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருந் தனர். எல்மர் பெர்க்மனும் நடன அரங்குகள், களி யாட்ட விடுதிகள் என்று பல இடங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான். ஹங்கேரியில் சமதர்ம ஆட்சி முடிவடைந்தபின் கடந்த இருபது ஆண்டுகளில் இதுபோன்ற களியாட்டங்கள் நன்றாகத்தான் வளர்ச்சி பெற்றுள்ளன என்றும் இன்னும் முயற்சி செய்தால் மேற்கு ஜெர்மனியைப் போலவே முன்னேறிவிட முடியும் என்றும் அவன் தன் ஹங்கேரிய நண்பர் களிடம் கூறினான். பின் அன்று இரவே ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட (Budapest) அடைந்துவிட வேண்டும் என்று புறப்பட்ட போது தான் வழியில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

பணத்தை மட்டும் கொள்ளை அடித்துவிட்டு வாகனத்தைப் பழுதாக்காமல் விட்டிருந்தால், அவன் புடாபெஸ்ட் நகரத்தை அடைந்து இருக்கமுடியும். அங்கு சென்று விட்டால், எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் புரட்டிவிடுவான். ஆனால் அவனைக் கொள்ளை அடித்த வர்கள் வாகனத்தையும் அல்லவா ஓடமுடியாதபடிச் செய்துவிட்டார்கள்? கைப்பேசியில் யாருடனாவது பேசி ஏதாவது உதவி கோரலாம் என்றால் அதையும் அந்தக் கொள்ளையர்கள் பறித்துக் கொண்டுவிட்டார்கள். வெள்ளிக் கிழமை என்றால் களியாட்டத்திற்குச் செல்பவர்கள் ஏராளமாகப் பயணம் செய்து கொண்டு இருப்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்றாலும் களியாட்டம் முடிந்து திரும்புகிறவர்கள் பயணம் செய்து கொண்டு இருப் பார்கள். அன்று சனிக்கிழமையாதலால் அந்தச் சாலையில் பயணம் செய்பவர்களைக் காண்பது அரிதாக இருந்தது. அவநம்பிக்கையுடன் அமர்ந்து கொண்டி ருந்த அவனுக்கு யாரோ ஒரு கிழவர் நடந்துவருவது தெரிந்தது. அவர் அருகில் வந்தவுடன் அவரை நிறுத்தி, தனக்கு நேர்ந்த துயர நிகழ்வை விளக்கிக் கூறிவிட்டுத் தனக்கு எந்த வகையிலாவது உதவி செய்யுமாறு கேட்டான். அக்கிழவரும் அவன்மேல் இரக்கப்பட்டு, வாகனங்களைப் பழுது பார்க்கும் தொழிலாளியான தனது நண்பரின் வீடு அருகிலேயே இருப்பதாகவும், அவரை அழைத்து வருவதாகவும் கூறினார். தனியாகவே இருப்பதில் இருப்புக் கொள்ளாத எல்மர் பெர்க்மனும் அவருடன் கூடவே சென்றார்.

அவர் வீட்டை அடைந்தவுடன் வெளியில் இருந்து “டேனியல், டேனியல்” என்று அக்கிழவர் அழைத்தார். மிஸிடேனியல் என்ற அத்தொழிலாளி வெளியே வந்து விவரத்தைத் தெரிந்துகொண்டார். மூவரும் பழுதடைந்த வாகனம் இருந்த இடத்திற்குச் சென்றனர். வாகனத்தை ஆராய்ந்து பார்த்த மிஸி டேனியல், வாகனத்தை ஓடும் விதமாகச் சரிசெய்து விட முடியும் என்றும் அதற்குக் கூலியாகத் தர வேண்டிய பணத்தையும் கூறினார். எல்மர் பெர்க்மன் இதைவிட இரண்டு மடங்கு பணமும் தரத் தயாராக இருந்தார். ஆனால் அந்தச் சமயத்தில் அவரிடம் பணமே இல்லை. தான் புடாபெஸ்ட் நகரம் சென்று அடைந்த உடன் பணத்தை அனுப்புவதாகக் கூறினார். ஆனால் மிஸிடேனியல் ஒப்புக்கொள்ளவில்லை. பணம் இல்லாவிடில் வேலை செய்ய முடியாது என்று கூறி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

“இப்படியும் ஒரு கல்நெஞ்சக்காரன் இருப்பானா?” எல்மர் பெர்க்மனின் மனம் பொருமியது. ஆனால் அதை வெளிப்படுத்த முடியாமல் தவித்தான். அந்தக் கிழவர் டேனியலைத் தடுத்து நிறுத்தினார். துன்பத்தில் உள்ள ஒருவரை இவ்வாறு தவிக்க விட்டுப் போவது மனிதப் பண்பு அல்ல என்றும், அதுவும் ஒரு வெளிநாட்டானை இப்படித் தவிக்கவிட்டால் ஹங்கேரி யின் புகழுக்கு இழுக்கு என்றும் வாதிட்டார். ஆனால் டேனியலோ தன்னுடைய பிரச்சினைகளை எல்லாம் சுட்டிக்காட்டி அதற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது என்று கேட்டார். மேலும் பிறகு பணம் தருகிறேன் என்று உறுதிகூறியதின் பேரில் செய்த வேலைகளி னால் பலரிடம் ஏமாந்து இருப்பதாகவும், இருபதாண்டு களுக்கு முன்பு போல் இப்போது மக்கள் நாணயமாக இல்லை என்றும் கூறினார்.

“முன்புபோல் மக்கள் நாணயமாக இல்லை”என்று டேனியல் கூறியதைக் கேட்ட எல்மர் பெர்க்மன், நான் அப்படி இல்லை” என்று எவ்வளவு கூறியும் டேனியல் ஏற்க மறுத்தார். இப்பொழுது எல்மர் பெர்க்மனுக்குத் தன் தந்தை கூறிய நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் எல்மர் பெர்க்மனின் தந்தை புருனோ பெர்க்மன் புடாபெஸ்ட் நகருக்கு வந்து இருந்த போது அவருடைய வாகனம் எதேச்சையாகப் பழுதடைந்து சாலையில் நின்றுவிட்டது. அவர் எவ்வளவோ சரிசெய்ய முயன் றும் முடியவில்லை. அப்பொழுது அவ்வழியே சென்ற ஒருவர் அவருடைய நிலைமையைப் புரிந்துகொண்டு, தான் வாகனத்தைப் பழுதுபார்க்கும் தொழிலாளி என்றும், சற்றுநேரம் பொறுத்திருந்தால் அருகில் இருக் கும் தன் வீட்டிற்குச் சென்று வேண்டிய கருவிகளைக் கொண்டு வந்து, பழுதுநீக்கித் தருவதாகவும் கூறி விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் கருவிகளுடன் வந்த அவர் பழுது நீக்கி வாகனத்தை ஓடும்படிச் செய்து விட்டார். புருனோ பெர்க்மன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அதற்குக் கூலியாக நிறையப் பணம் கொடுத்தார். அதைப்பெற்றுக் கொள்ள மறுத்த அத்தொழிலாளி, திசை தெரியாமல் தவிப்பவர்களுக்கு உதவி செய்வது மனிதப்பண்பு என்றும், அதற்குக் கூலி வாங்கிக் கொள் வது மனிதப் பண்பைக் கேலிக் கூத்தாக்கிவிடும் என்றும் கூறிப் பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். வியப்படைந்து போன புருனோ பெர்க்மன், ஒரு புட்டி பீராவது (Beer) பெற்றுக்கொள்ளும்படிக் கூற, அதுவும் தவறு என்று கூறிவிட்டார்.

பொதுவாகப் பெருநகரங்களைவிட, சிறிய ஊர்களில் மனிதநேயம் மிகுந்து இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் புடாபெஸ்ட் நகரத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் வியக்கத்தக்க வகையில் இருந்த மனிதநேயம், இன்று சிறிய ஊரான டோராக் நகரத்தில் காணமுடிய வில்லையே என்று வருத்தம் மிக்க வியப்பை அடைந் தான் எல்மர். எல்மர் நாக்குழறிக் கொண்டே கூறிய நிகழ்வைக் கேட்ட மிஸி டேனியலும், அந்தக் கிழவரும் ஒரு சிறிய அதிர்ச்சியுடன் எல்மனைப் பார்த்தனர். எல்மரின் தந்தைக்கு மனிதநேயத்துடன் உதவி செய்த அந்தத் தொழிலாளி வேறுயாருமல்ல; மிஸி டேனியல்தான். இப்பொழுது மிஸி டேனியல், எல்மர் பெர்க்மனின் முகத்தை உற்றுப் பார்த்தார். புருனோ பெர்க்மனின் சாயல் அவருடைய மகனிடம் தெரிந்தது. நாற்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அந்நிகழ்வும் அவருடைய மனதில் நிழலாடியது. அதுவும் எல்மர் அந்த நிகழ்வைச் சொன்னவிதம், அந்நிகழ்வைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.

தன்னுடைய பணத்தேவைகளையும் மீறி அவரு டைய மனதில் இரக்கம் சுரந்தது. உடனே வாகனத் தைப் பழுதுபார்க்க ஆரம்பித்தார். வேலை செய்து கொண்டே அவனுடைய தந்தைக்கு உதவி செய்த தொழிலாளியைப் பற்றிய விவரம் ஏதாவது தெரியுமா என்று கேட்டார். விவரங்கள் எதுவும் தெரியாது என்றும், ஆனால் தன் தந்தை இந்நிகழ்வைப் பற்றித் தன்னிடம் கூறி இருப்பதாகவும் கூறினான்.

“உன் தந்தையின் பெயர் பெர்க்மன் என்பதாக நினைவு” என்று டேனியல் கூறியவுடன், ஆமாம் அது உங்களுக்கு எப்படித் தெரியும்? அப்படியானால் அந்தத் தொழிலாளி நீங்கள் தானா? வியப்பை அடக்க முடியாமல் எல்மர் பெர்க்மன் கூவினான்.

அதுசரி! மனிதநேயத்தின் உச்சத்தில் இருந்த மிஸி டேனியல், பிறருடைய துன்பத்தைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாத மனிதராக எப்படி மாறினார்? அவரிடமே நேரடியாகக் கேட்டுவிடலாமா என்று எல்மர் பெர்க்மன் நினைத்தான். ஆனால் ஏதாவது கேட்கப் போய், அவருக்குக் கோபம் வந்து வேலையை நிறுத்தி விட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்ததால் பேசாமலேயே இருந்தான். பழுது பார்க்கும் வேலை மணிக்கணக்கில் நீண்டது.

எல்மர் பெர்க்மன் மெதுவாக அந்தக் கிழவருடன் பேசத் தொடங்கினான். பேச்சுவாக்கில் மிஸி டேனிய லின் குணமாற்றத்தைப் பற்றிக் கேட்டான். உடனே அந்தக் கிழவர் “இந்த மாற்றத்தைப் பற்றி மட்டும் கேட்கிறாயா? அல்லது வேறு மாற்றங்களைப் பற்றியும் கேட்கிறாயா?” என்று வினவவும் “வேறு மாற்றங்கள் என்றால்...!” எல்மர் மென்று விழுங்கினான்.

“உன்னிடம் இப்பொழுது கொள்ளை அடித்து விட்டுப் போயிருக்கிறார்களே! இதுபோல் இருபது ஆண்டு களுக்கு முன் ஹங்கேரியில் எந்த மூலையிலாவது கொள்ளை அடிக்கப்பட்ட நிகழ்வு நடந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறாயா?” என்று கிழவர் கேட்டதும், அதுபற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று எல்மர் கூறினான்.

“சரி! இருபது ஆண்டுகளுக்குமுன் உன் தந்தை, மற்ற உறவினர்கள், நண்பர்கள் எத்தனை தடவைகள் ஹங்கேரிக்கு வந்திருப்பார்கள்; யாராவது இந்த மாதிரி நடந்ததாகக் கூறி இருக்கிறார்களா?” என்று கிழவர் கேட்டதற்கு இல்லை என எல்மர் விடையளித்தான்.

“அது தான் தம்பி! இந்த இருபதாண்டுகளில் தான் எல்லா அயோக்கியத்தனங்களும், கொடுமைகளும் ஹங்கேரியில் வளர்ந்து உள்ளன. இருபது ஆண்டு களுக்கு முன் ஹங்கேரி, மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உன்னதமான இடமாக இருந்தது” என்று கிழவர் கூறிய உடன், “இப்பொழுது ஏன் இப்படி மாறி விட்டது?” என்று எல்மர் கேட்டான்.

அதற்கு அந்தக் கிழவர், “இப்பொழுது ஹங்கேரியில் முதலாளித்துவம் ஆட்சி செய்கிறது. முதலாளித்துவத்தில் எந்த வாழ்க்கையும் உறுதியாக இராது. ஒரு வனுக்கு வேலை கிடைக்குமா என்பது நிச்சயமில்லை. கல்வி, மருத்துவம் என மனிதனின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பணம் செலவழித்தால் தான் கிடைக்கும். ஆகவே அனைவரும் பணத்தைச் சம் பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மற்ற எதை யுமே மறந்துவிடுகின்றனர். வேலை கிடைக்காத வர்கள் பணத் தேவைக்காகக் கொள்ளை அடிக்கவும் தயங்குவதில்லை” என்று கூறினார்.

உடனே எல்மர் “காவல்துறை என்ன செய்கிறது?” என்று கேட்டான். அந்தக் கிழவர் “உங்கள் நாட்டில் காவல்துறை என்ன செய்கிறதோ அதைத்தான் இங்கும் எங்கள் காவல் துறை செய்கிறது. உங்கள் நாட்டில் காவல்துறை நேர்மையாகச் செயல்படு கிறதா?” என்ற வினாவுடன் முடித்தார். இதற்கு விடை யளிக்க முடியாமல் எல்மர் தத்தளித்தான்.

இதைப் பார்த்த அந்தக் கிழவர் “தம்பி! இருபது ஆண்டுகளுக்குமுன் எங்கள் நாட்டில் சமதர்ம ஆட்சி இருந்தது. அனைவருக்கும் வேலை உத்தரவாதம் இருந்தது. கல்வியும் மருத்துவமும் இலவசமாக இருந்தன. மனிதனுடைய அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் கிடைக்கும்படி உத்தரவாதம் இருந் தது. அடிப்படைத் தேவைகளாக இல்லாத மற்ற விருப் பங்கள் கூட அவரவர்களுடைய விருப்பப்படி நிறை வேற்றிக் கொள்ள வழிகள் எளிமையாக இருந்தன. ஆகவே யாரும் திருடவோ கொள்ளையடிக்கவோ வேண்டிய அவசியமோ ஏற்படவில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது மனநிறைவை நோக்கி மட்டுமே செயல்பட முடிந்தது. அந்த உதவிகளுக்குக் கூலி பெற்று, அப்பணத்தால் நிறைவேற வேண்டிய தேவை கள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆகவே அன்று சகமனிதர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் இருந் தது” என்று கூறிச் சற்று நிறுத்தினார்.

கிழவரின் சொற்பொழிவைக் கேட்ட எல்மர் பெர்க் மனுக்கு வேப்பங்காயைக் கடித்தது போல் இருந்தது. அவன் முதலாளிவர்க்கத்தைச் சேர்ந்தவன். கிழவரின் கருத்துகளை அவனால் செரிக்க முடியவில்லை. மெதுவாக “ஆனால் முதலாளித்துவத்திற்கு மாறிய பிறகு, பொருளாதார வளர்ச்சி அதிகமாகி உள்ளது அல்லவா?” என்று கேட்டான்.

“பூமித்தாயை அளவிற்குமேல் பிழிந்து நமக்குத் தேவை இல்லாத பொருட்களை எல்லாம் உற்பத்தி செய்வதுதான் பொருளாதார வளர்ச்சியா? இப்படி அளவிற்குமேல் இயற்கை வளங்களைப் பிழிவதால் எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் துரோகம் செய் கிறோம் அல்லவா?”

கிழவரின் கூரிய வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் திணறினான் அவன். சிறிது நேரம் கழித்து, “பெரும்பான்மையான மக்களின் விருப்பப்படி தானே அரசு நடந்துகொள்கிறது. உங்களைப் போன்றோர் மிகச்சிறிய எண்ணிக்கையில் தானே இருப்பீர்கள். ஆகவே உங்கள் கொள்கைகள் தோல்வி அடை கின்றன” என்று கூறவும், “வேலை இல்லாத மக்கள் சமதர்ம ஆட்சி வந்தால் தங்களுக்கு வேலை கிடைத்து விடும்; முதலாளித்துவம் இருந்தால்தான் வேலை யில்லாமல் துன்புறுவோம்; ஆகவே முதலாளித்துவம் வேண்டும் என்று கூறுகிறார்களே? மருத்துவச் செலவிற்கும் கல்விக்கும் பணம் இல்லாதவர்கள், அவையெல்லாம் இலவசமாகக் கிடைக்கும் சமதர்மம் வேண்டாம், என்று கூறுகிறார்களா?” என்று கிழவர் எதிர்வினாத் தொடுத்தார். எல்மர் பெர்க்மென் மௌன மாகிவிட்டான்.

கிழவர் தொடர்ந்தார். “தம்பி! முதலாளித்துவத்தில் பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி எதுவும் நடப்பதில்லை; முதலாளிகளின் விருப்பப்படித்தான் எல்லாம் செய்யப்படுகின்றன. சமதர்மத்தில் உழைக்கும் மக்களின் விருப்பப்படி எல்லாம் செய்யப்படுகின்றன. முதலாளித்துவத்தில் தங்கள் நலனுக்கு நேர்எதிரான நலன்கள் கொண்ட தொழிலாளர்கள் அவசியம் தேவை. ஆகவே மக்களிடையே மோதல்களைத் தவிர்க்க முடிவதில்லை. ஆனால் சமதர்மத்தில் முதலாளிகள் தேவை இல்லை. ஆகவே மக்களிடையே மோதல்களும் இராது.” இப்படிக் கூறிக்கொண்டு இருக்கும்போதே மிஸி டேனியல் வாகனத்தைப் பழுது நீக்கி நேராக்கி விட்டார். எல்மர் பெர்க்மனும் புடாபெ°ட் சேர்ந்த உடன் பணம் அனுப்புவதாக உறுதி அளித்துவிட்டு மிஸி டேனி யலின் முகவரியை வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு மிஸி டேனியல் தன் நண்ப னான அந்தக் கிழவரைப் பார்த்து “இவ்வளவு விவரங் களை அவனுக்குக் கூறினாயே? அவனுள் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார். அந்தக் கிழவரும் “பெரும்பாலும் ஏற்படாது” என்று கூறவே “அப்படி என்றால் அவனுக்கு உதவி செய்யும்படி ஏன் வற்புறுத்தினாய்?” என்று கோபமாகக் கேட்டான் டேனியல்.

“மிஸி! அது அவர்களுடைய குணம். அவர்கள் சரியாக இல்லை என்பதற்காக நம்முடைய பண்பை நாம் விட்டுவிடக்கூடாது. மேலும் நமக்கு முதலாளிகள் வர்க்கம் தான் எதிரியே ஒழிய, தனிப்பட்ட முதலாளி அல்ல; நாம் அவனுக்கு உதவாமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும். ஓரிரு நாட்கள் அவன் சிரமப்பட்டு இருப்பான். மிஞ்சிப் போயிருந்தால் இந்தக் குளிரில் விறைத்து அவன் செத்திருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அதனால் நம் வர்க்கத்திற்கு என்ன நன்மை ஏற்பட முடியும்? இவன் செத்தால் இன்னொரு முதலாளி. நாம் இழந்து போன சமதர்ம ஆட்சியை மீண்டும் அமைக்க என்ன செய்ய வேண்டுமோ அந்த நோக்கத்தில் தான் செயல்பட வேண்டுமே ஒழிய, அற்பத்தனமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்று அக்கிழவர் கூறினார்.

மிஸி டேனியல், “ஏதோ நீ சொன்னால் சரி” என்று கூறி அமைதியானார்.

Pin It