இந்தியா விடுதலை பெற்ற நாடு என்று எல்லா மக்களாலும் நம்பப்படுகிறது. ஆனாலும், இந்தியாவில் வெகுமக்களாக உள்ள உழைப்பாளி மக்களுக்கு நாடு விடுதலைபெற்று 63 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் நாயக உரிமைகள் வந்து சேரவில்லை. ‘ஒரு நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள மக்களுக்கு அதிக நன்மை வந்து சேரும்படியான கொள்கைகளைக் கொண்டதுதான் உண்மையான குடியரசு ஆட்சியாகும் என்று அரசியல் அறிஞர் பெந்தாம் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிலும், ஸ்காட்லாந்திலும் ‘பிரதிநிதித்துவம் கொடு- இல்லாவிட்டால் வரி கொடுக்கமாட்டோம் என்று பல பத்தாண்டுகள் மக்கள் முழங்கினர் - போராடினர், அதனால்தான். அங்கெல்லாம் முதலாளித்துவப் பொருளதாரமுறை இருந்தாலும், வெகுமக்களுக்கு நன்மைதரும் நலத்திட்டங்கள் இலவசமாக நிறைவேற்றப்பட்டன. ஆனால். இந்தியாவில் அப்படி இல்லை.

இந்திய சமூகஅமைப்பில் நூற்றுக்கு எண்பத்தைந்து பேர் இந்துக்கள். இவர்களில் சமுதாயத்திலும், கல்வியிலும், பொருளாதாரத்திலும், அரசியல் உரிமை யிலும் ஒடுக்கப்பட்ட மக்களாக வைக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும், அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னரே, உரிய பங்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தென்னாட்டில் பட்டியல் வகுப்பு மக்களுக்கு மாகாண அரசில் 1927லேயே இடஒதுக்கீடு தரப்பட்டது. அவர்களுக்கு, சென்னை மாகாணத்தில் மட்டும் மத்திய அரசுத்துறையில் 1935லேயே விகிதாசார இடஒதுக்கீட்டை பொப்பிலி அரசரும், பெரியாரும், ஏ. இராமசாமி முதலியாரும் பெற்றுத்தந்தனர். அதன்பின், தனியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முதல்முதலாக 1947இல் 14%ம்; 1971இல் 31%ம் மாநில அரசுக் கல்வியிலும் வேலையிலும் தந்தை பெரியார் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார். அதாவது 1947இல் 14%இட ஒதுக்கீடு இந்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கியவர் காங்கிரஸ் பிரதமர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார். 1954 இல் இந்து இஸ்லாம் கிறித்தவ பிற்படுத்தபட்டோருக்கு 25%இடஒதுக்கீடு வழங்கியவர் காங்கிரஸ் முதலமைச்சர் கு. காமராசர். 25% ஒதுக்கீட்டை இவ்விரு வகுப்பின ருக்கு 31%ஆக உயர்த்தியவர் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. 31% ஆக இருந்த இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தி அளித்தவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இவையெல்லாம் மாநில அரசில் மட்டுமே கிடைத்தவை.

31 என்பது 50 ஆக உயர்ந்து எப்படி?

31% இட ஒதுக்கீடு 1979 சூன் வரை எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்தது. 1979 கல்வி ஆண்டுத் தொடக்கத்தில் பிற்படுத்தப்பட்டவர்களில் ஆண்டுக்கு 9 ஆயிரம் ரூபா வருமானம் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வியிலோ, வேலையிலோ இடஒதுக்கீடு பெறமுடியாது என எம்.ஜி.ஆர். அரசு ஆணையிட்டது. அந்த ஆணையைத் தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சியினரும் எதிர்த்தனர். திராவிடர் கழகம் அந்த ஆணையின் படியை எரித்தது. ஆனால், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும் அந்த ஆணை அரசமைப்புச் சட்டத்தில் உள்ள கோட்பாட்டிற்கு எதிரானது எனவும், மொத்த மக்கள் தொகையில் 67% ஆக உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 31% என்பதை 60% ஆக உயர்த்த வேண்டும் எனவும், கோரிக்கை வைத்து அ.தி.மு.க. அரசிடம் நூல் வடிவில் அச்சடித்த கோரிக்கையை 17-8-1979இல் முன்வைத்தது.

இக்கோரிக்கை பற்றிப் பேசிட வே. ஆனைமுத்துவும், சேலம் அ.சித்தையனும் எம்.ஜி.ஆரிடம் ஒப்புதல் கேட்டபோது, அவர் தொலைபேசியில், நீங்கள் நேரில் சொன்னாலும் ரூபா 9000ம் என்பதை 12000 என உயர்த்துவேனே தவிர, வருமான வரம்பு என்பதை நீக்கமாட்டேன் எனத்திரும்பத் திரும்பச் சொன்னார். அத்துடன் கோரிக்கை ஆவணத்தைக் கல்வி அமைச்சர் சி. அரங்கநாயகத்திடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள் என்றார். நாங்கள் ஆவணத்தை அரங்கநாயகத்திடம் கொடுத்தபோது, நீங்கள் வாய்மொழியாகச் சொல்லுங்கள் என்றார்.

நாங்கள் ரூ.9000 வருமான வரம்பு ஆணையைத் திரும்பப் பெறுங்கள் என்று சொன்னவுடன் நீங்கள் எல்லாம் புதிய பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள் என்ற கிண்டலாகச் சொன்னார். அவரிடம் கொடுத்த ஆவணத்தைத் திரும்ப வாங்கி வந்துவிட்டோம். இது தொடர்பாகவும், விகிதாசார இட ஒதுக்கீடு கோரிப் புது தில்லியில் போராட்டம் நடத்துவது பற்றித் தீர்மானிக்க வேண்டியும், 1979 அக்டோபரில் சேலத்தில் அனைத்திந்திய மாநாடு ஒன்றை நடத்தினோம். அம்மாநாட்டில் உ.பி. முன்னாள் முதலமைச்சர் இராம் நரேஷ்யாதவ் உரையாற்றினார். தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி நிறைவுரை ஆற்றினார்.

அம் மாநாட்டில் உரையாற்ற அழைப்பதற்காக 7.10.1979 இல் அ.தி.மு.க. அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனைச் சந்தித்தோம். அப்போது வே.ஆனைமுத்து, அ. சித்தையன் ஆகியோரிடம் இடஒதுக்கீடு சிக்கல் பற்றி அவர் விவாதித்தார். 31 விழுக்காட்டை 60% ஆக உயர்த்திட எங்களிடம் கேட்கிறீர்கள். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவரிடம் ஏன் கேட்கவில்லை என ஒரு பெரிய கேள்வியை அவர் எழுப்பினார்.

1976 சனவரியில் கலைஞர் பதவியை இழந்துவிட்டார், பாலாஜி X மைசூர் அரசு இடையே நடைபெற்ற வழக்கில் 1963இல் உச்சநீதி மன்றம் இடஒதுக்கீடு பற்றிய ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தது. அதாவது இடஒதுக்கீட்டின் மொத்தஅளவு எப்போதும் 50% க்குக் குறைவாகவே இருக்க வேண்டும் என்பதே அத்தீர்ப்பு ஆகும். அதற்கு மாறான கருத்து உச்சநீதி மன்றத்தில் 1976 இறுதியில்தான் வெளிவந்தது. அது கூறுவது என்ன என்பதை விளக்கினோம்.

‘ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 80% அளவுக்குப் பெரிய எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்கள் இருப்பார்களானால் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரும் தன்மையில் வேலையில் 80% இடங்களை அரசு ஒதுக்குவதாக வைத்துக்கொள்ளுவோம். அப்படி அரசு செய்வதானது கேடானது என்றோ - விதி 16(4) இல் உள்ளதை மீறுவதாகும் என்றோ கூறமுடியுமா? அரசு அப்படிக் கூறமுடியாது என்பதுதான் இதற்கான விடையாகும்”, என்று நீதிபதி மூர்த்துழா பசல் அலி கூறியுள்ளார்.

(Suppose for instance, a State has a large number of BCs of citizens which constitutes 80% of the population and the Govt.in order to give them proper representration, reserves 80% of the jobs for them, can it be said that it is bad and violates clause 4 of the Article 16 ? The answer must necessarily be in the negative”. Justice Murthuza Fazal Ali - State of Kerala. N.M. Thomas A.I.R. 1976 S.C. 490) 

இது அமைச்சருக்குப் புதிய வெளிச்சம் தந்தது. அவர் எழுப்பிய மற்ற எல்லா அய்யங்களுக்கும் விடை தந்தோம். அடுத்த நாள் 8.10.1979 அன்று எம்.ஜி.ஆரிடம் இவற்றை அமைச்சர் விளக்கிச் சொன்னார். ஆனாலும் அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகும் அதனையடுத்து வரவிருந்த சட்ட மன்றத் தேர்தலை எண்ணி அச்சம்கொண்டும்தான், 1.2.1980 இல் பிற்படுத்தப்பட்ட இந்து, இஸ்லாம், கிறித்துவர்களுக்கு 31% என்பதை 50% ஆக உயர்த்திஇட ஒதுக்கீடு எம்.ஜி.ஆர். வழங்கினார். வருமான வரம்பும் நீக்கப்பட்டது. 31% என்பது எந்த முயற்சியும் இல்லாமல் 50% ஆக ஆகிவிடவில்லை. மேலே கண்ட விளக்கங்களையோ, கோரிக்கையையோ எந்த ஏடும், எந்த அமைப்பும் அரசிடம் முன் வைக்கவில்லை.

தி.க.வும், தி.மு.க.வும் இதற்காக எம்.ஜி.ஆரைக் கிண்டல் செய்துதான் எழுதின. இந்த உண்மை வரலாற்றை எந்தத் தலைவரும், எந்தக் கட்சியும் எந்த அமைப்பும் மக்களிடம் சொல்வதில்லை. இந்த இட ஒதுக்கீட்டை இரண்டாகப் பிரித்து 20% இடங்களை மருத்துவர் ச. இராமதாசின் கோரிக்கையை ஏற்று 1989இல் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு முதல்வர் கலைஞர் கருணாநிதி வழங்கினார். 1993ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு உருவாக்கிய - தி.க. தலைவர் கி. வீரமணி அளித்த சட்ட வடிவின் அடிப்படையில் நிறைவேற்றிய 69% இட ஒதுக்கீடு சட்டம் குறித்து இறுதியான ஆணை பிறப்பிக்காமல் இரண்டு செய்திகளை இப்போது உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

1. “69% இட ஒதுக்கீடு சட்டம் இன்னும் ஓராண்டுக்கு அப்படியே நீடிக்கும்.”

2. “இன்னும் ஓராண்டுக்குள் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள்’ எத்தனை விழுக்காடு உள்ளனர் என்பதைத் தமிழ்நாட்டு அரசு தெளிவாகக் கணக்கிட்டு அறிவிக்க வேண்டும்”.

அப்படி அறிவித்துள்ளபோது, 69% இட ஒதுக்கீட்டைப்பெற்று வருபவர்களான பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் ஆகியோரின் மக்கள் தொகை உண்மையில் மொத்த மக்கள்தொகையில் 69% இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், இந்த 69% இட ஒதுக்கீட்டை அனுபவிப்பதும், அது நீடிப்பதும் செல்லும் என ஆகிவிடும். இது இந்த மூன்று வகுப்புக் குடிமக்களுக்கும் விகிதாசார இட ஒதுக்கீடு என்கிற திசையில் இது ஒரு வெற்றிக்கல் ஆகும். இந்த இடத்தில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 16(4)இல் உள்ள ‘எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்களுக்கும்’ என்பது சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்களையும், பட்டியல் வகுப்பினரையும், பழங்குடியினரையும் ஆக மூன்று வகுப்பினரையும் குறிப்பதேயாகும்.

மேலே நம்மால் குறிப்பிடப்பட்டுள்ள உச்சநீதி மன்றத்தின் 1976 கருத்தும், இப்போது உச்சநீதி மன்றம் கூறியுள்ள கருத்தும் இந்த உள்ளடக்கத்தைக் கொண்டவையே ஆகும். நிற்க. தமிழ்நாட்டிலுள்ள - இட ஒதுக்கீட்டில் உண்மையான பற்றுக்கோடும் அக்கறையும் கொண்ட எல்லாக் கட்சிகளும், எல்லா இயக்கங்களும் “இட ஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிக்கிற அதிகாரத்தை மாநில அரசுகளிடம் அளியுங்கள்” என இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கின்றன.

தமிழ்நாட்டு அரசுக்கு அப்படிப்பட்ட அதிகாரம் வந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். 1979கணக்குப்படி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் தொகை மட்டும் 67.5% ஆக இருந்தது. இப்போது பிற்படுத்தப்பட்டோர் தொகை 70% ஆக உள்ளது. இப்போதுள்ள 70% இட ஒதுக்கீட்டைத் தருவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அந்த விகிதாசார அடிப்படை என்பது மாநில அரசுக் கல்வி, வேலை என்பதற்கு மட்டுமே செல்லும். அத்தகைய விகிதாசார இடஒதுக்கீட்டை மய்ய அரசுக் கல்வியிலும், வேலையிலும், பெற்றிட இதன்மூலம் எப்படி அதிகாரம் வரும்? இதற்கு இக்கட்சிகளின் தலைவர்கள் கூறும் விடை என்ன?

இவர்கள் எல்லோரும் கூறும் இந்த அடிப்படையிலான இட ஒதுக்கீடு - “விகிதாசாரம்” என்கிற அடிப்படையில் மய்ய அரசிலும், மாநில அரசுகளிலும் 1970களிலேயே பட்டியல் குலமக்களுக்கும், பழங்குடிமக்களுக்கும் வந்துவிட்டதே! அதாவது மய்ய அரசைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட ஒரே விகிதாசாரத்தைப் பெற்றதாகவும், மாநில அரசுகளைப் பொறுத்தவரையில் அந்தந்த மாநிலத்திலுள்ள பட்டியல் குல, பழங்குடியினர் விகிதாசாரத்திற்கு ஏற்ப வேறுவேறு எண்ணிக்கை உடையதாகவும் இட ஒதுக்கீடு இருக்கிறதே!

எடுத்துக்காட்டாக, இந்திய அளவில், பட்டியல் குலத்தாருக்கு இப்போது 15% இட ஒதுக்கீடு தரப்படுகிறது. தமிழ்நாட்டுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் கூட அதுதான். ஆனால், மாநிலங்களைப் பொறுத்தவரையில் இவ்விரு வகுப்பாருக்கும் இது வேறுவேறாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, 4 தமிழ்நாட்டில் பட்டியல் குலத்தாருக்கு 18%; கேரளாவில் 10%; காசுமீரில் 8% தரப்படுகிறது. அந்தந்த மாநிலத்திலுள்ள பட்டியல் குலத்தாரின் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கேற்ப அப்படித் தரப்படுகிறது. இதன் உள்ளடக்கம் என்ன? பட்டியல் குலத்தாருக்கும், பழங்குடியினருக்கும் மய்ய அரசிலும், மாநில அரசிலும் அவரவர் மக்கள் தொகை விகிதாசாரப்படி ஒதுக்கீடு தர வழியிருக்கிறது என்பதால்தான்.

அரசமைப்புச் சட்ட விதி 15(4), 16(4)இல் இதற்கான வாசகம் இல்லாதபோதும், இவர்களுக்கு விகிதாசாரம் தரப்படுகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. சட்ட ஏற்பாட்டில் இல்லாததை எப்படித் தரமுடிந்தது? டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மேதைத் தன்மையால் அது சாத்தியமானது. இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே- அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் முன்னரே-1946 சூனிலேயே பட்டியல் குலத்தாருக்கு விகிதாசார அடிப்படையில் 12.5% இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் பெற்றுத் தந்துவிட்டார். அது தொடர்ந்து அமல்படுத்தப்படுகிறது என்கிற அடிப்படையில் சட்ட வலிமையைப் பெற்றுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்குத் தந்தை பெரியாருக்குப் பின்னர் இதில் நாட்டமும், மேதைத் தன்மையும் உள்ளவர்கள் இல்லாததாலும், இருப்பவர்கள் சரிவர முயற்சிக்காததாலும், பிற்படுத்தப்பட்டோருக்கு இன்றுவரை மய்ய, மாநில அரசுகளில் விகிதாசார இட ஒதுக்கீடு என்பது ஏற்கப்படவுமில்லை- நடைமுறைக்கு வரவுமில்லை.

இந்தப் பெரிய இடைவெளியை ஈடுசெய்யும் தன்மையில்தான் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக்கட்சி 8.5.1978 முதற்கொண்டும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவை 19.8.1978 முதற்கொண்டும் பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அரசிலும், மாநில அரசுகளிலும் விகிதாசார இட ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துத் தொடர்ந்து போராடி வருகின்றன. இவ்வமைப்புகள் 1978 செப்டம்பர், அக்டோபரில் பீகார் முழுவதிலும் பரப்புரை செய்து, 19.10.1978 முதல் பாட்னாவில் பெரும் போராட்டம் நடத்தியதன் விளைவாகத்தான், 20.12.1979இல் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவை பி.பி. மண்டல் தலைமையில் அமைத்திட சனதாக் கட்சி அரசு அறிவித்தது. அப்போராட்டத்தின் விளைவாகத்தான் 1978 நவம்பரில் முதன்முதலாக பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

தில்லி மாநகரில் 1979 நவம்பர், திசம்பரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தியதாலும், 29.4.1981 முதல் 29.10.2008க்குள் 28 ஆண்டுகளில் தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆறு தடவைகள் கூட்டங்கள் நடத்தி அவர்களுக்கு விளக்கம் அளித்ததாலும், 19.10.1991இல் தில்லி மௌலங்கர் அரங்கில் அனைத்திந்திய விகிதாசார இட ஒதுக்கீடு மாநாட்டை நடத்தியதாலும் எல்லா சாதி, மத வகுப்பினருக்கும் அவரவர் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப மய்ய அரசுக் கல்வியிலும், வேலையிலும், மாநில அரசுக் கல்வியிலும், வேலைகளிலும், மய்ய மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களிலும், மய்ய, மாநில அரசுகளிடமிருந்து ஏதேனும் ஒருவடிவில் உதவிபெறும் தனியார் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களிலும் விகிதாசார இடஒதுக்கீடு பெற்றே தீர வேண்டும் என்பதை இறுதி இலக்காக மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக்கட்சியும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும் மக்களிடம் கொண்டு சென்று போராடத் தலைப்பட்டுள்ளன.

இதற்கு ஏற்ற வண்ணம் இந்திய அரசமைப்புச்சட்ட விதிகள் 15(4), 16(4), 16(4)(B). 29(2), 338(10) ஆகியவற்றை அடியோடு திருத்தி அமைக்கவேண்டும். பட்டியல் குலத்தாருக்கும், பழங்குடியினருக்கும் உரிமையை மறுக்கும் விதி 335ஐ அடியோடு நீக்க வேண்டும். இவை நிறைவேறாமல் பேரறிஞர் பெந்தாம் கருதியபடி, வெகுமக்களுக்கான மக்கள்நாயக உரிமை இந்தியாவில் வந்து சேராது. பிற்படுத்தப்பட்டோரின் தலைவர்களும் அமைப்புகளும் பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டுமெனத் தீர்மானம் போடுவதும், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்கிற ஆணையை நீக்க வேண்டுமெனத் தீர்மானம் போடுவதும்- மேலே கண்டவாறு அரசமைப்பு விதிகளில் திருத்தம் செய்வதுமூலமே கைகூடும். இதை இப்போதேனும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பட்டியல்குலத்தாருக்கும் பழங்குடியினருக்கும் பதவி உயர்வு செல்லாது என ஆனபோது, 17.6.1995லும், 9.6.2000லும் அது செல்லுவதற்கான இரண்டு திருத்தங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அச்சட்டங்கள் இரண்டும் செல்லாதவை என அப்போதே நாம் 5 குறிப்பிட்டோம். அப்படியே பின்னர் உச்சநீதிமன்றமும் கூறியது. அவ்வளவு அறிவுக்கொழுந்துகளாக நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்!

விதி 16(4)(a). 16(4)(b) நிறைவேற்றப்பட்டபோது, “பிற்படுத்தப்பட்டோர்” (B.C.)என்கிற சொல்லையும் அவற்றில் சேர்க்க வேண்டும் என்று எந்தக்கட்சியும் முயற்சிக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட தலைவர்களுக்கு இதில் போதிய புரிதல் இல்லை. அதேபோல், “பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டில் இடம் தரக்கூடாது” என்று அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் 25.9.1991இல் ஒரு திருத்த ஆணையை வெளியிட்டார். அக்கோரிக்கையை உச்சநீதி மன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்றுக்கொண்டது.

விதி 15(4)இல் பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை விளக்கும் தன்மையில், “சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட” என்று மட்டுமே உள்ளது. (Socially and Educationally Backward classes). இதுபற்றிய தீர்மானத்தை 2.6.1951இல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு நிறைவேற்றியபோது, “சமுதாயத்திலும் கல்வியிலும்” என்று - பிற்படுத்தப்பட்டோரைக் குறித்த தீர்மானத்தை விவாதத்திற்கு வைத்தார். அத்தீர்மானத்திற்கு ஆதரவாக 243 பேரும், எதிராக 5 பேரும் மட்டுமே வாக்களித்தனர். அதனால்தான் “சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர்” என்ற சொற்கோவை அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றப்பட்டது. “பொருளாதாரத்திலும்” என்ற சொல் புறக்கணிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத ஒன்றை- பிரதமர் வி.பி.சிங் 13.8.1990இல் வெளியிட்ட இட ஒதுக்கீடு ஆணையில் இடம்பெறாத ஒன்றை, பிரதமர் நரசிம்மராவ் 1991 செப்டம்பரில் தீய எண்ணத்தோடு சேர்த்தார். இந்த இரண்டையும் மனத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்டோர் வகுப்புத் தலைவர்கள், 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பெரியதான உச்சநீதி மன்ற அமர்வுக்கு மேல்முறையீடு செய்திட, மய்ய அரசுக்கு அப்போதே அழுத்தம் தந்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இவற்றை ஏற்றுக்கொண்டதால் - இவை, “நீதிபதிகள் செய்த சட்டம்” என்கிற வலிமையைப் பெற்றுவிட்டன. மேல்முறையீட்டில் வெற்றிபெற்றாலோ அல்லது இத்தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டம்செய்தாலோ, அன்றி இவை நீக்கப்பட முடியாது.

மண்டல் பரிந்துரையின் பேரிலான தீர்ப்பு 1992 நவம்பரில் வெளிவந்தது. அதுமுதல் இன்றுவரை மேலே கண்ட இரண்டு கோரிக்கைகளைப்பற்றித் தீர்மானங்களும் கோரிக்கைகளும் வைப்பதனாலேயே வருமான வரம்பை நீக்கிட நினைப்பதும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பெற நினைப்பதும் மூடத்தனமாகும். இவ்வகையில் தமிழகத்திலும் மற்ற தென் மாநிலங்களிலும் உள்ள புரிந்துணர்வு வட மாநிலத் தலைவர்களுக்கு அறவே இல்லை.

உச்சநீதி மன்றமும், உயர்நீதி மன்றங்களும் இன்றைய ஆளும் வர்க்கத்தினைக் காப்பாற்றவே தீர்ப்புகளை வழங்குகின்றன. எனவே, நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது இனியும் தொடரக்கூடாது. மக்களை நாடி அவர்களைத் தெருவுக்குக் கொண்டுவந்து இன்றைய ஆளும் வர்க்கங்களை அடியோடு ஒழிக்க எல்லாம் செய்வதுதான் இந்திய அளவில் 60% உள்ள இந்து, இஸ்லாம், கிறித்தவப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இந்திய அளவில் 25% உள்ள பட்டியல், பழங்குடி இனத்தினர் ஆகிய 85% மக்களின் ஒரே கடமையாகும்.

இச்செய்திகளைப் பார்ப்பன, பனியா, மார்வாடி ஆதிக்கத்தில் உள்ள செய்தி ஊடகங்கள் மக்களிடையே கொண்டுசெல்லமாட்டா. நாம்தான் இந்திய மொழிகளில் பலவற்றில் நம் கோரிக்கைகளை அச்சிட்டுக்கொண்டு, பல மாநிலங்களுக்கும் சென்று ஒடுப்பட்ட வகுப்பு மக்களிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், கட்சித் தலைவர்களிடமும் போதிய புரிந்துணர்வை உண்டாக்க வேண்டும்.

மக்கள் நாயக உரிமைகளை வென்றெடுக்காமல் நாம் வாழ்வதைவிட அவற்றை வென்றெடுத்திடப் போராடி வீழ்வதே மேலாகும். மக்கள் நாயக உரிமைகளை வென்றெடுத்திட வாரீர்! வாரீர்!

- வே.ஆனைமுத்து

(சிந்தனையாளன் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியானது)

Pin It