இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் மிகப்பெரியது; பீகார் அடுத்துப் பெரியது.

இப்பரப்பில்தான் வற்றாத ஆறுகளான கங்கை, கண்டக், சோன் முதலானவை பாய்கின்றன.

ஆனால் இப்பகுதிகளில் 100க்கு 90 பட்டியல் வகுப்பினர் சொந்த நிலமற்ற வேளாண் கூலிகள்.

இந்தியா முழுவதிலும் உள்ள பொதுவுடைமையாளர்களும், முற்போக்காளர்களும் 23 - மார்ச்சு அன்று மாவீரன் பகத்சிங் தூக்கிடப்பட்ட நாளில் வீர வணக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில், பீகாரில் பிக்ரம் கஞ்ச் பகுதியில், ஆரா நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள ரெபுரா (Repura) என்ற ஊரைச் சார்ந்த புத்ராம் பஸ்வான் (Budhram Paswan) என்னும் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர், முதல் நாள் இரவில் படுகொலை செய்யப்பட்டு, 23.3.2014 காலை பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அவர் சார்பேர்கரி வட்டார - “இந்திய - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பொதுவுடைமைக் கட்சி”யின் செயலாளராகப் பணியாற்றியவர். அவருடைய கட்சி யின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிடுகிற வேட்பாளருக்குத் தேர்தலுக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்த போதே கொலை செய்யப்பட்டார்.

உ.பி.யிலும், பீகாரிலும் சமார், துசாத், டோம், டோபி (வண்ணார்), மேஹ்டார், முசாகர், பஸ்வான் என்னும் 23 பிரிவினராகப் பட்டியல் வகுப்பினர் உள்ளனர்.

பஸ்வான் வகுப்பினர் காவல் பணிபுரிவோர்.

படுகொலை செய்யப்பட்ட புத்ராம் இவ்வகுப்பைச் சேர்ந்தவர்.

பீகாரில், 1980-1990களில் லோரிக் சேனை, ரண்வீர் சேனை என்கிற - பெருநில உடைமைக்காரர்களான - சத்திரியர், பூமிகார், குர்மி, யாதவர் வகுப்பி னரின் அடியாள் படையினர் கைத் துப்பாக்கிகள், மெஷின் துப்பாக்கிகளைக் கொண்டு, பட்டியல் வகுப்பு வேளாண் தொழிலாளர்களைக் கும்பல் கும்பலாகச் சுட்டுக் கொன்றார்கள்.

லாலுபிரசாத் யாதவ் ஆட்சிக் காலத்திலும், இப்போது கொடிய குர்மி வகுப்பினரான நிதிஷ்குமார் ஆட்சிக் காலத்திலும் பீகாரில் அப்படிப்பட்ட கொலைகள் 1980-1982களிலும், 2012இலும் நடைபெற்றதை நாமே நேரில் சென்று பார்த்தோம்.

காங்கிரசு அங்கு ஆட்சி புரிந்த காலத்தில், 1952-1977 தேர்தல்கள் வரையில், பீகார் பட்டியல் வகுப்பு மக்கள் வாக்குப் போடும் இடத்துக்கு வராமலே, எல்லா மேல் சாதிக்காரர்களும் தடுத்துவிட்டார்கள், 1980 சனவரி தேர்தலிலும் பீகாரில் பிக்ரம் கஞ்ச், சசாராம் தொகுதிகளில் அம்மக்கள் அப்படித் தடுக்கப்பட்டதை நானும், சீர்காழி மா. முத்துச்சாமியும் நேரில் பார்த்தோம்.

இது விடுதலை பெற்ற நாட்டின் நடப்பா? உண்மையான விடுதலை ஏழை உழைப்பாளிச் சாதியினருக்கு வந்திருக்கிறதா என்பதை எல்லோரும் மனங் கொண்டு சிந்தியுங்கள்.

Pin It