கதிர்வேலனுக்கும் அவனது மனைவி மாதவிக்கும் ஒரு வார காலமாக இடைவிடாத விவாதம். அடுத்த வாரம் அவர்களுடைய ஒரே மகள் பத்மாவிற்கு விடுமுறை முடிந்து, பள்ளி திறக்கிறது. அவள் பத்தாவது வகுப்பில் அடியெடுத்து வைக்கப் போகிறாள். அவளுக்கு அறிவியல், கனிதம் மட்டுமல்லாமல் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களிலும் ஆர்வம் அதிகம். பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பாள். தகுதித் தரவரிசையில் (Rank) முதலில் வரவேண்டும் என்று கதிர்வேலன் அவளை வற்புறுத்துவான்.

ஆனால் மாதவி தரவரிசையில் முதலிடம் பெறுவதைவிட, பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதுதான் முக்கியம் என்று அறிவுரை கூறுவாள். பத்மா தாயின் அறிவுரையையே பின்பற்றினாள். சிலசமயங்களில் தரவரிசையில் முதலாவதாக வந்ததுண்டு. ஆனால் பொதுவாக மூன்றாவது, நான்காவது, எட்டாவது என்ற வரிசையில் இருப்பாள்.

முதலாவது வரிசையில் வராத போதெல்லாம் கதிர்வேலன் மகளைக் கண்டிப்பான். ஆனால் மாதவி அவனைத் தடுத்து பாடங்களைப் புரிந்துகொண்டு படிக்கும் தன்மையை எடுத்துக்காட்டி, அதைப் பாராட்டும்படி கூறுவாள். இப்படி எப்போதுமே மகளின் படிப்பைப் பற்றி விவாதிக்கும் அவர்கள், தங்கள் மகளை நாட்டிய வகுப்பில் தொடரவிடுவதா, இல்லையா என்பதைப் பற்றி மிகவும் தீவிரமாக அன்று விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.

பத்மா மற்ற பாடங்களைப் போல நாட்டியக் கலையிலும் சிறந்து விளங்கினாள். அவள் படிக்கும் பள்ளியில் தனியாக நாட்டிய வகுப்பும் நடத்தப்பட்டுக் கொண்டு இருந்தது. நாட்டியம் பயில விரும்புகிறவர்கள் அதற்கெனக் கட்டணம் செலுத்தி அவ்வகுப்பில் சேர வேண்டும். பாட வகுப்புகள் முடிந்த பிறகுதான் நாட்டிய வகுப்புகள் நடக்கும் என்றாலும், அடிக்கடி விழா என்ற பெயரில் வகுப்பு நேரத்தில் வெளி இடங்களுக்கும், சில சமயங்களில் வெளியூர்களுக்கும் போக வேண்டியிருக்கும்.

இதனால் படிப்பு பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். பத்மா இவ்வாண்டு பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்றும், அடுத்த இரு ஆண்டுகள் கல்விப் பயணத்தின் மிக முக்கியமான காலகட்டம் என்றும், ஆகவே நாட்டிய வகுப்பைத் தொடரவிடக்கூடாது என்றும் மாதவி கூறினாள்.

ஆனால் பத்மா இவற்றையெல்லாம் ஈடுகொடுத்துப் படித்துவிடுவாள் என்றும், அவளுக்கு நாட்டியக் கலையில் இருக்கும் திறமையை வளரவிடாமல் தடுத்துவிடக்கூடாது என்றும் கதிர்வேலன் வாதம் செய்தான்.

“டான்ஸ்லே திறமை வளர்ந்து என்னங்க ஆகப் போவுது?” பொறுக்க முடியாத மாதவி, சத்தம் போட்டே கேட்டுவிட்டாள்.

“மத்த பாடங்கள்லே திறமை வளர்ந்தா என்ன ஆகுமோ அதே தான் டான்ஸ்லேயும் ஆகப்போவுது” - கதிர்வேலனும் விடாமல் பதில் கூறினான்.

“நம்ம பொண்ணு நல்லாப் படிச்சா நல்ல வேலை கெடக்கும். டாக்டர் ஆகலாம்; இன்ஜினியர் ஆகலாம்; ஐ.ஏ.எஸ். எழுதி கலெக்டரா ஆகலாம். இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம். டான்ஸ் கத்துக்கிட்டு என்ன பண்ண முடியும்?” என்று மாதவி பொரிந்து தள்ளினாள்.

“ஏன் டான்ஸ்லெ மட்டும் பெரிய ஆள வரமுடியாதா? நம்ம பொண்ணுக்கு இருக்கிற டேலன்டுக்கு அவ பத்மா சுப்பிரமணியம் மாதிரி பெரிய டான்ஸரா வரலாமே?” கதிர்வேலனும் விட்டுக்கொடுக்காமல் வாதாடினான்.

“ஆமா! நீங்க புரிஞ்சிக்கிட்டுத்தான் பேசுறீங்களா? இல்லெ பேசணுங்கிறதுக்காக ஏதாவது பேசறீங்களா?” இது நம்ம பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சினங்க” என்று மாதவி கவலையுடன் கூற, “எனக்கு அது தெரியாதா? எவ்வளவு பெரிய வேலையிலே சேர்ந்தாலும் டான்ஸ்லே கெடக்கிற பாப்புலாரிடி கிடைக்காது. தெரியுமா?” என்று கதிர்வேலன் எதிர்வாதம் செய்தான்.

மாதவி சிறிது நேரம் தன் கணவனை வெறிக்க வெறிக்கப் பார்த்தான். பின் மெதுவாக “ஆமா! டான்ஸ் ஃபீல்ட்லெ எத்தனை பேருக்குப் பாபுலாரிடி கெடச்சிருக்கு? எத்தனை பேர் இருக்குற எடம் தெரியாம புழுங்கிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியுமா?” என்று கேட்டாள்.

கதிர்வேலன் சிறிது நேரம் யோசித்துவிட்டு “இதை ஏன் கேக்குறே?” என்று வினவினான். மாதவியும் “டான்ஸ் ஃபீல்ட்லெ நம்ம பொண்ணு பாப்புலாரிடி அடையறது கஷ்டம். படிச்சு டாக்டராவோ, இன்ஜினியராவோ, கலெக்டராவோ போனா அவளாலே நெறைய சாதிக்க முடியும்” என்று தனக்குப் பட்டதைக் கூறினாள். கதிர்வேலனும் விடாமல் “டான்ஸ்லெ மட்டும் சாதிக்க முடியாதுன்னு ஏன் நெனக் குறே?” என்று வினவினான்.

கணவனின் வினாவைக் கேட்ட மாதவி சற்றுக் களைத்துவிட்டாள். சிறிதுநேர அமைதிக்குப்பின் “உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி இருக்கேன். நான் டான்ஸ் கத்துக்கிட்டு இருக்கேன். எங்க கிளாஸ்லெயே நான்தான் நன்றாக டான்ஸ் ஆடுவேன். என்னை மாடலா வச்சுத்தான் மத்தவங்களுக்கு ஸ்டெப்ஸ் போடக் கத்துக் குடுப்பாங்க.

ஆனா புரோக்ராம்னு வர்ரப்போ எனக்கு சான்ஸ் கொடுக்க மாட்டாங்க. பாப்பாத்தி களுக்கே எல்லா சான்சும் போயிடும். புரோக்ராம்லெ கூட அவாள் நல்லா பெர்ஃபார்ம் பண்றதுக்கு ஸ்கிரீனுக்குப் பின்னாலே நான் ப்ராம்ப்டரா இருக்கணும். அவாள் பேரெல் லாம் தட்டிட்டுப் போயிடுவாங்க. எனக்கு மெக்கானிகலா ஒரு ‘தாங்க்ஸ்’ சொல்லிடுவாங்க. இந்த மாதிரி ஒரு கேவலமான நிலைமை நம்ம பொண்ணுக்கு வேணாம். அதனாலேதான் டான்ஸ் கிளாஸ் வேணாம்னு சொல்றேன்” என்று அழுத்த மாகப் பதில் கூறினாள்.

மனைவியின் நீண்ட உரையைக் கேட்ட கதிர்வேலன் உடனே பதில் சொல்ல முடியாமல் சிறிது நேரம் திணறினான். பின் தனக்குத் தெரிந்த நண்பர்களின் உறவினர்களின் பெண்களைக் குறிப்பிட்டு அவர்கள் நாட்டியக் கலையில் ஈடுபட்டு இருக்கிறார்களே என்று கேட்டான். அவர்களில் ஒவ்வொருவரைப் பற்றியும் விவரங்கள் கூறி அவர்களுக்கு அறிவியல் துறைகளில் படிப்பு ஏறவில்லை என்பதை மாதவி சுட்டிக்காட்டினாள். அறிவியல் துறைகளில் மிளிர முடியாத அவர்கள் ஆடல் கலைகளில் நுழைந்திருப்பதும், அங்கும் மிளிர முடியாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினாள் மாதவி. அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கும் தங்கள் மகளை ஆடல் கலைக்கு அனுப்ப நினைப்பதும் பொருத்தமாக இருக்க முடியாது என்றும் வாதாடினாள்.

மாதவியின் வாதத்தைக் கேட்டு, கதிர்வேலனும் களைத்துவிட்டான். ஆனால் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தொடர்ந்து வாதாடினான்; “அவங்களுக்கு எல்லாம் அதிகமாக திறமை இல்லாததாலே அப்படி இருக்கலாம். ஆனா பத்மாவுக்கு நல்ல திறமை இருக்கு இல்லே? அதனாலே அவ நல்லா வருவா” என்று கூறினான்.

“என்னங்க இது? சொன்னதெல்லாம் விட்டுட்டு சொரைக்காயிலே உப்பு இல்லேன்னு சொல்ற மாதிரி. டான்ஸ்லே நான் பெரிய திறமைசாலி. ஆனா என்னைவிட திறமை கொறஞ்சவங்களுக்கு எல்லாம், அவங்க பாப்பாத்திங் கறதாலே சான்ஸ் கெடச்சது. எனக்குக் கெடக்கலேன்னு கிளிப்பிள்ளைக்குச் சொல்ற மாதிரி சொல்றேன். அதைக் காதுலேயே வாங்க மாட்டேங்கிறீங்களே!” என்று சற்று உரத்த குரலிலேயே மாதவி கேட்டாள்.

“இல்லே மாதவி! உனக்கு சான்ஸ் கெடக்கலேங்குறதுக்காக நீ பிராமின்சுக்கு எதிரா பயஸ் ஆயிட்டே. இப்போ நிலைமை மாறிடிச்சு. திறமை இருந்தா யாருன்னாலும் முன்னுக்கு வரலாம்” என்று கூறி மனைவியின் மனதை மாற்றப் பார்த்தான் கதிர்வேலன்.

இதைக் கேட்ட மாதவி பெருமூச்சு விட்டாள். பின், “நான் ஒண்ணும் பயஸ் ஆகலே. உங்க டிபார்ட்மெண்டை எடுத்துக் குங்க. அதிலே எழுபது பெர்சன்டுக்கு மேலே அதிகாரிங்க பிராமின்ஸ் தானே?” என்று கேட்டாள். “ஆம்” என்று கதிர்வேலன் விடையளித்தான்.

“ஒண்ணுந் தெரியாதவங்க எல்லாம் ஆபிசரா வந்து நம்ம கழுத்த அறுக்குறாங்கன்னு எத்தனை தடவை நீங்க புலம்பி இருப்பீங்க?” என்று மாதவி கேட்டவுடன், “என்ன நீ? சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டு இருக்கே?” என்று கதிர்வேலன் கேட்டான்.

“என்ன சம்பந்தம்ன்னு அப்புறம் எக்ஸ்பிளெய்ன் பண்றேன். என்னோட கேள்விக்குப் பதில் சொல்லுங்க” என்று மாதவி கேட்கவும், ஆம் என்று கதிர்வேலன் ஒப்புக் கொண்டான்.

உடனே மாதிவி இன்னொரு வினாவைத் தொடுத்தாள். “அப்படி ஒண்ணுமே தெரியாதவங்க எல்லாம் எப்படி அதிகாரிகளா செலக்ட் ஆனாங்க?”

கதிர்வேலன் தடுமாறினான். “அதுவந்து.. அதுவந்து... ரிசர்வேஷன்லே மார்க் எடுத்தவங்க எல்லாம் செலக்ட் ஆயிடுறாங்க” என்று திணறிக்கொண்டே கூறினான்.
“நீங்க அப்படித்தான் ஆனீங்களா?”
“நான் இல்லே. ஆனா மத்தவங்க...” என்று கதிர்வேலன் கூறிக்கொண்டே இருக்கும்போதே இடைமறித்த மாதவி, “உங்க லிஸ்ட்லெ இருக்குற ஒண்ணுந் தெரியாத ஆபிசருங்க எல்லாருமே ரிசர்வேஷன்லே செலக்ட் ஆன வங்களா?” என்று கேட்டாள்.

சிறிது நேரம் யோசித்த கதிர்வேலன் “அப்படிச் சொல்ல முடியாது...” என்று மென்று விழுங்கிக் கொண்டே கூறினான்.

“நல்லா யோசிச்சுப் பாருங்க. உங்க ஒண்ணுந் தெரியாத ஆபிசருங்க லிஸ்ட்லே ரிசர்வேஷன்லே செலக்ட் ஆனவங்க அதிகமா? இல்லேன்னா பொதுப் போட்டியிலே செலக்ட் ஆனவங்க அதிகமாக” என்று இன்னொரு வினாக் கணையை வீசவும், கதிர்வேலன் தயங்கிக் கொண்டே ஒரு அசட்டுச் சிரிப்புடன் “பிராமின்ஸ்லே தான் அதிகம்” என்று பதிலளித்தான். “ஒண்ணுந் தெரியாதவங்க எல்லாம் எப்படி பொதுப் போட்டியிலே செலக்ட் ஆக முடியுது?” என்ற மாதவி யின் தொடர் வினாவிற்குப் பதிலளிக்க முடியாத கதிர்வேலன் “நீ என்ன சம்பந்தம் இல்லாமலேயே பேசிக்கிட்டு இருக்கே?” என்று மீண்டும் கேட்டான்.

“என்ன சம்பந்தம்னு கடைசியிலே சொல்றேன்னு சொல்லி இருக்கேன் இல்லே! இப்போ என்னோட கேள்விக்குப் பதில் சொல்லுங்க” என்று மாதவி கண்டிப்புடன் பேசிவும், கதிர்வேலன் அமைதியானான். அவன் மனதில் பலவிதமான பதில்கள் உருவாயின. ஆனால் அவற்றை வரிசைப்படுத்தி, மாதவியிடம் தன்னுடைய விடையாகக் கூற முடியாமல் திணறினான்.

தன் கணவன் திணறுவதைக் கண்ட மாதவி தானே அதற்குப் பதிலளித்தாள்.

அறிவும் திறமையும் அனைத்து வகுப்பு மக்களுக்கும் பொதுவாக உள்ளன. சூழ்ச்சிகள் ஏதும் உள்ளீடாக இல்லாமல் இருந்தால் பொதுப் போட்டி முறையில் அனைத்து வகுப்பு மக்களும் தேர்ந்தெடுக்கப்படவே செய்வார்கள். ஆனால் அதிகார மையங்களின் உயர்நிலைகளில் பார்ப்பனர்கள் அமர்ந்து சூழ்ச்சிகள் செய்வதால்தான், உயர்நிலை வேலைகளில் மிகப் பெரும்பான்மை இடங்களில் பார்ப்பனர்கள் தேர்ந்து எடுக்கப்படு கிறார்கள். பார்ப்பனர்கள் அனைவரும் அறிவும் திறனும் உடையவர்களாக இருக்க முடியாது என்பதால், தேர்ந்தெடுக்கப்படும் பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களும் இருப்பது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

இடஒதுக்கீடு இல்லாத காலத்தில் இது வெளிப்படையாகத் தெரியாமல் இருந்தது. இப்பொழுது இடஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்நிலைகளில் செல்லும் போது, பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் உயர்நிலைகளுக்குத் தேர்ந் தெடுக்கப்படும் விஷயம் வெளியில் தெரிகிறது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் பார்ப்பனர்களைவிட அதிகமான அறிவும் திறமையும் உடையவர்கள் என்று வெளிப்படையாகத் தெரியவும் செய்கிறது. அதாவது இடஒதுக்கீடு என்பது இருந்தால்தான் திறமைசாலிகள் உயர்நிலைகளுக்குச் செல்ல முடியும். இடஒதுக்கீடு இல்லாவிட்டால் பார்ப்பனர்கள் தான் உயர்நிலைக்குச் செல்ல முடியுமே ஒழிய திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைகளை அடைய முடியாது.

மேற்கண்ட விவரத்தை நிதானமாக மாதவி கூறிய பின் கதிர்வேலன் “நீ திரும்பத்திரும்ப, ஏதோ சம்பந்தமில்லாமத் தான் பேசறே” என்று கூறினான்.

“இல்லே! நான் நாம பேசற சப்ஜெக்ட்டுக்குச் சம்பந்த மாகத்தான் பேசறேன்னு உங்களுக்கு இப்போ புரிஞ்சு இருக்கணும்” என்று மாதவி கூறியதும், கதிர்வேலன் குழப் பத்துடன் மாதவியைப் பார்த்தான்.

மாதவி ஒரு பொருள் பொதிந்த பார்வையுடன் “ரிசர் வேஷன் இருந்தாத்தான் திறமைசாலிங்க மேலே வர முடியும்னு எக்ஸ்ப்ளய்ன் பண்ணேன் இல்லே?” என்று கேட்க, ஏதோ புரிந்ததும் புரியாததும் போல் “ஆம்” என்று கதிர்வேலன் பதிலளித்தான். “இன்னைக்கு டான்ஸ்லே அவாளே கொடிகட்டிப் பறக்குறாங்கன்னா அங்கே ரிசர்வேஷன் இல்லே. அதனாலே திறமை இல்லாவிட்டாலும் அவாளாலே ஈஸியா மேலே போக முடியுது. ரிசர்வேஷன் இருந்து நம்ம ஜனங்க மேலே போயிப் பார்த்தாத்தான் அவாளோட வண்டவாளம் எல்லாம் தெரியும்” என்று மாதவி கூறிக் கொண்டு இருக்கும்போதே, எதிர்வேலன் இடைமறித்து “அப்படீன்னா டான்ஸ்லே ரிசர்வேஷன் வர்ற வரைக்கும் நம்ம ஜனங்க யாருமே அந்தப் பக்கம் போகக் கூடாதுன்னு சொல்றியா?” என்று கேட்டான்.

“நான் அப்படிச் சொல்லல்லே. மத்த பாடங்கள்லே சாமர்த்தியம் இல்லாம, டான்ச்லே சாமர்த்தியம் உள்ளவங்க, அங்கே போயி நம்ம உரிமைக்காகப் போராடட்டும். அதிகாரத் துறையிலே போகச் சாமர்த்தியம் உள்ளவங்க, அதிகாரத் துறையிலே நுழைஞ்சி நம்ம உரிமைக்காகப் போராடுறது தான் நல்லதுன்னு சொல்றேன். அவங்க டான்ஸ்லே போனா நம்ம வலிமை வேஸ்ட் ஆகும்” என்று கூறி முடித்தாள்.

“அப்படீன்னா நீ என்ன தான் சொல்ல வர்றே?” என்று கதிர்வேலன் பரிதாபக் குரலில் கேட்டான்.

“நம்ம பொண்ணு அதிகாரத் துறைப் படிப்புக்கு ஏற்றவள். அவளெடான்சுக்கு அனுப்பி வேஸ்ட் பண்ண வேணாம்னு சொல்றேன்” என்று உறுதியாகக் கூறினாள்.

கதிர்வேலனுக்கு மாதவியின் வாதம் முழுமையாகப் புரியாவிட்டாலும், அவள் பக்கம் தான் நியாயம் இருப்பதாகத் தோன்றியது. மனைவியின் யோசனையை ஒப்புக்கொண் டான். பள்ளி திறந்தவுடன் பத்மா நாட்டிய வகுப்பில் சேர மாட்டாள் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டான்.

Pin It