Dr.Palaniappan 400பெரம்பலூர், அரியலூர், சிதம்பரம் வட்டாரங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் 1946 சூன் திங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தோம். பல்கலைக் கழக விடுதியில் சேர வசதியில்லாததால், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளித் தெருவில் “வன்னியர் வளர்ச்சிக் கழகம்” என்னும் விடுதியில் தங்கிப் படித்தோம். எங்களுக்கு அறிவுரை கூறிட அன்றாடம் ஒரு வேளை ந.வை. இராமசாமி, எஸ். திருவேங்கட நயினார், நடராசக் குருக்கள், அழகப்ப முதலியார், பால சுப்பிரமணிய உடையார் முதலான ஆசிரியப் பெருமக்கள் அவ்விடுதிக்கு வருவர்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பழநியப்பனின் தந்தையார் சு. பூவராகன், மாவட்ட நீதிபதி கசபதி நாயகர் இருவரும் வந்து, ஒவ்வொரு மாணவரையும் அழைத்து அறிவுரை கூறிச் செல்வர்.

தந்தை பெரியார், நடிகவேள் எம்.ஆர். இராதா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகிய பெருமக்கள் 1949-50 வரையில், சிதம்பரத்துக்கு வரும்போது அவ்விடுதியில் தான் தங்கிச் செல்வர். அங்கே தங்கியிருந்த மாணவர்களும், மேலே சொல்லப்பட்ட ஆசிரியர்களும் மேலே கண்ட பெருமக்களுடன் அங்கே கலந்துரையாடுவர்.

ஆவணப் பதிவுத் துறையில் சார்பதிவாளர்களாக விளங்கிய சு.பூவராகன், கொ.இரா.விசுவநாதன், பெரியண்ணன் என்பவர்களுடனும், உடையார் பாளையம் ஆசிரியர் சா.வேலாயுதத்துடனும் 1947 மே திங்களில் உடையார்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்த ஓர் ஆண்டு விழாவில் நானும் பேசினேன். அன்றே பூவராகனின் நெஞ்சில் இடம்பெற்றேன்.

பூதங்குடி பூ.தா. செயராமன் ஒரு பொறியாளர். அவருடைய திருமண விழாவில் பூவராகன் தலைமை யில் பேசினேன். அவ்விழாவில் தான் பழநியப்பனின் சிற்றப்பா மற்றும் குடும்ப உறுப்பினர்களில் சிலரை முதன்முதலாகப் பார்த்தேன்.

1956 வரையில் தென்னார்க்காடு மாவட்டத்தில் அரசு சார் பணியிலிருந்த நான், சிதம்பரம் வட்டத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு அழைக்கப்பட்டேன். 1957 முதல் 1981 வரையில் பெரிதும் திருச்சியிலும், என் சொந்த ஊரிலும் தங்கலானேன். நீண்ட இடை வெளிகளில் தான் பெரியவர் பூவராகன் அவர்களைக் காண்பேன்.

என் நல்லாசிரியர் தமிழ் மறவர் வை. பொன்னம் பலனார் 1972இல் நோய்வாய்ப்பாட்டார்; சென்னையில் அரசுப் பொது மருத்துவமனையில், மருத்துவம் பெற்றார். அவரை அவ்வப்போது கண்டு உதவி செய்து, தேறுதல் கூறும் பணியை மருத்துவர் பூ.பழநியப்பன் மிகப் பொறுப்புடன் செய்தார். அங்கு என் ஆசிரியரைக் காண நானும், ஓடாக்கநல்லூர் வை.இராமச்சந்திரனும் சென்றோம். “ஆசிரியர், புற்றுநோய்க்கு ஆளாகிவிட்டார்; அவரை இழக்க ஆயத்தமாகிவிடுங்கள்.

இங்கு எல்லா வைத்தியமும் அளிக்கிறோம்” என்று, தனிமையில் எங்களிடம் சொன்னார், பழனியப்பன். நாக்கில் மாங்காய் அளவு புற்றுக்கட்டி இருக்கிற நோயாளி களையெல்லாம் காட்டி, அந்நோயின் கொடுமையைப் பற்றி அன்று விளக்கினார்.

17-8-1974இல் திருச்சியில் நான் தொடங்கிய “சிந்தனையாளன்” இதழைத் தொடர்ந்து மருத்துவர் பூ. பழநியப்பன் பெற்றுப் படித்தார். 1978-1979 முதல் நான் வடமாநிலங்களைக் களமாகக் கொண்டு செயல் பட்டேன்.

தில்லியில் 15-11-1979 முதல் வகுப்புரிமைப் போராட்டம் நடத்துவதற்காக, 13-11-1979 அன்று தில்லிக்குப் போன நான், 13-12-1979 முடிய ஒரு மாதம் குளிக்காமலே இருந்து, 102 பாகை குளிர்காய்ச்சலோடு சென்னைக்கு வந்தேன்; நேரே மருத்துவர் பழநியப்பன் அவர்களிடம் சென்றேன். அன்று தான் அவருடைய மனித உறவைப் பேணும் தன்மை - மனிதநேயம் இவற்றை வருவோரிடமெல்லாம் அவர் பொழிவதைக் கண்டேன். என் பொறுப்பற்ற தன்மையைக் குறித்து அன்று கண்டிக்கவும் செய்தார்.

அப்போது சாலையைக் கடக்க முடியாத அளவு பெருமழை; ஏற்கெனவே அவரிடம் வந்திருந்த கலி. பூங்குன்றன் குடையுடன் வந்து பேருந்து நிறுத்தத்தில் என்னை விட்டுச் சென்றார்.

1981 முதல் சென்னையிலேயே நான் குடியேறி னேன். என் பணிகளைக் கூர்ந்து கவனித்த மருத்துவர் பூ.பழநியப்பன், சங்கமித்ரா, மலேசியா ஆ. கிருஷ்ண சாமி, துரை. கலையரசு நால்வரும் நான் பெரியாருக்கு நிலையான பணிகளைச் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு, ஒரு தொகையைத் திரட்டித்தந்திட கமுக்க மாகவே திட்டமிட்டனர்.

எதிர்பாராத தன்மையில் அதற்கான அச்சிட்ட வேண்டுகோள் என் கையில் சிக்கியது. இவர்கள் அனைவரையும் கண்டு, எதையும் பொதுவுக்கே செய்யுங்கள் என வேண்டினேன். உடனே “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூலை விரிவுபடுத்தி வெளியிடவும்; “பெரியாரின் - முழு வரலாற்றை” எழுதி வெளியிடவும், முழு முயற்சியை மேற்கொள்ளப் பணித்தனர்.

2010இல், முடிந்த அளவு விரிவாக்கம் செய்து, “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” 9,300 பக்கங்களில் வெளியிடப்பட இக்குழுவினர் போட்டது நல்ல அடித்தளம்; இதைச் சாதித்தவர்கள் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் செயல் மறவர்களே.

எங்கள் எல்லோரின் கூட்டு முயற்சியில் நிறுவப்பட்டுள்ளதுதான், “பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை.” அதன் முதலாவது சாதனைதான் மேற்படி நூல் வெளியீடு.

அறக்கட்டளைப் பணிகளுக்காக அம்பத்தூருக்குப் போகும் போதெல்லாம், அவருடைய இல்லத்திலோ, “தி கெஸ்ட் மருத்துவமனை”யிலோ நானும், தோழர் களும் மருத்துவர் பூ. பழநியப்பன் அவர்களைத் தவறாமல் பார்ப்போம்; அளவளாவுவோம்.

கடந்த 33 ஆண்டுகளில் ஓர் இருபது பேர்களுக்குப் பிள்ளைப்பேறு வாய்க்கும் உதவியை அவருடைய உயர்ந்த பிள்ளைப்பேறு மருத்துவ மேதைத் தன் மையால் பெற்றுத்தர என்னால் இயன்றது.

இடையில் அவருடைய மூத்த மருமகன் மறைவு, தந்தையார் மறைவு, அண்ணன் பூ. சோலையப்பன் மறைவு முதலான துன்ப நிகழ்ச்சிகளிலும்; இளைய மகள் வடிவு திருமணம், உறவினர் திருமணம் முதலான இன்ப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற நான் - இத்துணை விரைவில், என்னைவிட 5 ஆண்டுகள் இளையவரான இப்பெருமகனார் 23-3-2014இல் மறைந்துவிடுவார் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

13-3-2014 இரவு 8.45 மணிக்கு, வழக்கத்துக்கு மாறாக, பேராவலோடு அவரில்லம் சென்றேன். அவர் கைத் தாங்கியோடு நடந்துவந்து அமர்ந்து உரையாடினார், பெரியார் வரலாறு எழுதப்படும் பணியை விரைவு படுத்தக் கூறினார்; ஒவ்வொரு தடவை சந்திக்கும் போதும் இதையே கூறினார்; தம் நண்பர்கள் வழியா கவும் என்னை உசுப்பினார்.

அவர் தம் அன்புமகன் சேரலாதன், அவரிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு, 23.3.2014 முற்பகலில் 10 முதல் 12.30 மணிவரையில் அம்பத்தூரில் என்னோடும் தோழர்கள் ஆ.கிருஷ்ணசாமி, காவல்துறை முன்னாள் கூடுதல் தலைமைக் காவல்துறை இயக்குநர் கே. இராமலிங்கம், ஆ.கோ.குலோத்துங்கன், துரை. கலையரசு மற்றும் தோழர்களுடன் தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன் கொள்கைகளை வென்றெடுப்பதைப் பற்றிக் கலந்துரையாடினோம். இடையில் விடைபெற்றார், சேரலாதன். மாலை 5 மணிக்கு மற்றவர்களும் சென்றனர்.

“அய்யகோ! இரவு 8 மணிக்கு டாக்டர் பழநியப்பன் இறந்துவிட்டார்” என்ற துயரச் செய்தியை, 9.15 மணிக் குக் கலையரசு தெரிவித்தார்,எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது. தோழர்களை உசுப்பி, எல்லோருக் கும் இழவுச் செய்தியைச் சொல்லச் செய்தோம்.

மறுநாள் 24 காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நூற்றுக்கணக்கானோர் நேரில் வந்து மருத்துவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

26-3-2014 இறுதி ஊர்வலத்துக்கு முன், மருத்து வர் பழநியப்பன் அவர்களின் புகழைப் பாடினோம். நானும், தி.க. தலைவர் கி.வீரமணி, கலி. பூங்குன்றன், மருத்துவர் அ. இராசசேகரன் ஆகியோரும் இரங்கல் உரையாற்றினோம். கவிஞர் தமிழேந்தி 11.45 முதல் 1 மணிவரை அவரெழுதிய இரங்கல் ஒலி முழக்கங் களை வீட்டிலும், தெருவிலும் முழங்கிட, ஊர்வலம் சரியாக 1 மணிக்குப் புறப்பட்டது. மின் அடுப்பில் உடல் தள்ளப்படும் வரையில் பழநியப்பன் அவர்களின் முகத் தைப் பார்த்தோம்; சுருங்கிய முகத்துடன் அனைவரும் கலைந்தோம்.

மருத்துவர் பழநியப்பன் பெரியார் கொள்கையாளர்; மக்கள் பற்றாளர்; தமிழ்மொழிக் காப்பாளர்; தன்னலம் - தற்புகழ்ச்சி அறியாத மாமேதை.

உலக அளவில் மகப்பேறு மருத்துவத்தில் கை தேர்ந்தவர்; பி.சி. ராய் விருது, பத்மசிறீ விருதுகளைப் பெற்ற அரிய சாதனையாளர்.

நாமும் அவரைப் போல் புகழ்பெற ஆசைப்படு வோம்; அவரை நாம் முன்மாதிரியாகக் கொள்வோம்.

வளர்க மருத்துவர் பழநியப்பன் புகழ்!

- வே. ஆனைமுத்து

Pin It