செருமனியின் பன்னாட்டு நிறுவனமான பேயர் (Bayer) சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்தாக நெக்சவார் (Nexavar) எனும் மாத்திரையைத் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இம்மருந்தைத் (Sorafenib Tosylate) தயாரிப்பதற்கான காப்புரிமையை 2021ஆம் ஆண்டுவரையில் பெற்றுள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு நோயாளிக்குத் தேவைப்படும் 120 மாத்திரைகள் அடங்கிய ஒரு பெட்டியின் விலை ரூ.2.84 இலட்சம். பெரும் செல்வர்களால் மட்டுமே இம்மருந்தை வாங்க முடியும். இவ்வளவு விலை கொடுத்தாலும் சில சமயங்களில் இம்மருந்து கிடைப்பதில்லை.

அய்தராபாத்தில் உள்ள நேட்கோ ஃபார்மா (Natco Pharma) என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் 120 மாத்திரைகள் கொண்ட இம்மருந்தை ரூ.8,800 விலையில் உற்பத்தி செய்வதற்கு உரிமம் வழங்கு மாறு, இந்திய காப்புரிமை ஆணையர் அலுவலகத் திற்கு விண்ணப்பத்திருந்தது. 12.03.2012 அன்று இந்திய காப்புரிமை அலுவலகம் ‘கட்டாய உரிமம்’ என்ற விதியின் கீழ் நேட்கோ நிறுவனம் நெக்சவார் எனும் வணிகப் பெயர் கொண்ட இம்மருந்தைத் (Sorafenib Tosylate) தயாரிப்பதற்கு அனுமதி அளித்தது. பேயர் நிறுவனத்தின் விலையை விட நேட்கோ பார்மாநிறுவனத்தின் மருந்து விலை 97 விழுக்காடு குறைவு. 

மேலும் இந்தியக் காப்புரிமை அலுவலகம் ஆண்டுக்கு 600 நோயாளிகளுக்கு இந்த மாத்திரைகளை இலவ யமாக அளிக்க வேண்டும் என்று நேட்கோ நிறுவனத் துக்கு நிபந்தனை விதித்துள்ளது. காப்புரிமை பெற் றுள்ள பேயர் நிறுவனத்துக்கு நேட்கோ நிறுவனம் இம்மாத்திரைகளின் ஆண்டு விற்பனையில் 6 விழுக் காடு தொகையைக் காப்புரிமைக் கட்டணமாக 2021 ஆம் ஆண்டு வரை செலுத்த வேண்டும். இதன் பிறகும் நேட்கோவுக்கு இலாபம் கிடைக்கும் என்பதால்தானே இம்மருந்தைத் தயாரிக்க முன்வந்துள்ளது. அப்படி யானால் 97 விழுக்காடு அதிக விலையில் விற்றுவந்த பேயர் நிறுவனம் இதுவரை எவ்வளவு கொள்ளை இலாபம் ஈட்டியிருக்கும்?

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையை விட இலாப விழுக்காடு அளவில், மருந்து தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தாம் கொள்ளை இலாபம் ஈட்டி வருகின்றன. இதற்கு மனிதர்களின் உயிரச்சத் தையும், காப்புரிமைக் கோட்பாட்டையும் கருவியாகப் பயன்படுத்துகின்றன. காப்புரிமை ஏன் வேண்டும்?

120 மாத்திரைகள் கொண்ட நெக்சவார் மருந்தின் விற்பனை விலை ரூ.2.84 இலட்சம். ஆனால் இதே மருந்தை இந்தியாவின் நேட்கோ ரூ.8,800/-க்கு விற்கிறேன் என்கிறது. விலையில் ஏன் இவ்வளவு வேறுபாடு? காப்புரிமை பெற்றுள்ள பேயர் போன்ற நிறுவனங்கள் கூறுகின்றன: “நோயைக் குணப்படுத்த வல்ல - அல்லது முற்றிலுமாக நீக்கக் கூடிய மருந்தைக் கண்டுபிடிப்பதற்காகக் கோடிக்கணக்கில் பணம் செல விட்டு பல ஆய்வுகளைப் பல ஆண்டுகள் நடத்துகின்றோம். இவற்றில் பல தோல்வியில் முடிந்தாலும், பெரும் பணம் பாழானாலும், இறுதியில் நோயை நீக்கவல்ல மூலக்கூறுக் கலவையை உருவாக்குகிறோம். நாங்கள் இட்ட பெரும் மூலதனத்தை, மருந்தின் விலையில் சேர்ப்பதன் மூலமாகத்தானே நாங்கள் திரும்பப் பெற முடியும். எனவே இம்மருந்தைத் தயாரிப்பதற்கான தனி உரிமையை நாங்கள் பெற வேண்டியுள்ளது. எனவே காப்புரிமைக்காலம் முடியும் வரையில் இம் மருந்தைத் தயாரிக்கும் உரிமையும், இதன் விலையை நிர்ணயிக்கும் உரிமையும் எங்களுக்கு மட்டுமே உண்டு.”

முதலாளியத்தின் உயிர் மூச்சே கொள்ளை இலாபமும் மூலதனத் திரட்சியுமேயாகும். முதலாளிய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை அறிவியல் கண்டு பிடிப்புகள் மானுடத்திற்கே பொதுப் பயன்பாட்டுக்குரிய னவாக இருந்தன. காரல்மார்க்சு, 1848இல் வெளியிட்ட கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில், “முதலாளியம், மருத்துவரையும், வழக்கறிஞரையும், சமயகுருவையும், கவிஞரையும், விஞ்ஞானியையும் தனது கூலியுழைப் பாளர்களாக ஆக்கிவிட்டது” என்று எழுதினார். முதலா ளியம் ஏகாதிபத்தியமாக உருப்பெற்றக் கட்டத்தில், சந்தையில் தன் போட்டியாளர்களை ஒழித்துக்கட்ட, புதிய உயர் தொழில்நுட்பம் எனும் கருவி தேவைப் பட்டது. விஞ்ஞானிகள் என்னும் கூலியுழைப்பாளர் களைக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை உரு வாக்கி, குறைந்த செலவில் அதிகமாக உற்பத்தி செய்த முதலாளிகள் ஏகபோக முதலாளிகளாயினர். “புதியதாய் உருவாகியவை எல்லாம் இறுகிக் கெட்டியாவதற்கு முன்பே பழமைப்பட்டுவிட்டன. கெட்டியானவை யாவும் கரைந்து காற்றிலே கலக்கின்றன” என்று காரல் மார்க்சு கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் கூறியிருப் பது போல, முதலாளியம் புதிய புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளின் மூலம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. காப்புரிமை என்பது முதலாளியம் தன் இலாப வேட்டைக்காகக் கண்டுபிடித்த கருவியாகும்.

காட் ஒப்பந்தம் 1994இல் ஏற்பட்டது. 1995 சனவரி முதல் உலக வணிக அமைப்பு என்ற புதிய பெயருடன் காட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. காட் ஒப்பந் தத்தின் வாயிலாகக் காப்புரிமைக் கோட்பாடு பன்மடங்கு வலிமையானதாக ஆக்கப்பட்டது. வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை (Trade Related Intelectual Property Rights - TRIPs) என்கிற விதி உருவாக்கப்பட்டது. இதன்படி அடுத்த பத்தாண்டுகளுக்குள் - அதாவது 2005ஆம் ஆண்டிற்குள் உலக வணிக அமைப்பில் உள்ள நாடுகளில் அறிவுசார் சொத்துரிமை (காப்புரிமை)யை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். 

இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் பகற்கொள்ளையைத் தடுத்திட, 1970ஆம் ஆண்டு இந்திராகாந்தியின் ஆட்சியில், புதிய காப்புரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்கான செய்முறைக்கு மட்டுமே காப்புரிமை (Process Patent) வழங்கப்படும்; மருந்துக்குக் காப்புரிமை (Product Patent) இல்லை என்று அச்சட்டம் அறிவித்தது. அதனால் காப்புரிமை பெற்ற மருந்துகளின் மூலக்கூறுக் கலவையை வேறு செயல்முறைகள் மூலம் இந்தியாவில் மருந்து நிறுவனங்கள் தயாரித்துக் குறைந்த விலையில் விற்கத் தொடங்கின. மேலும் 1978ஆம் ஆண்டு மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி 340 மருந்துகள் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயிக்கும் விலையில் தான் விற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் உலகிலேயே இந்தியாவில்தான் மருந்துகள் விலை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் காட் ஒப்பந்தத்தின் விளைவாக மருந்துகளின் விலைகள் வேகமாக உயர்ந்தன. மக்களிடம் இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.

1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் சியாட்டில் நகரில் நடைபெற்ற உலக வணிக அமைப்பின் கூட்டத்தை உலக நாடுகள் பலவற்றிலிருந்து மக்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டு எதிர்த்ததால், அக்கூட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. 2001ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் உலக வணிக அமைப்பு நாடுகளின் கூட்டம் நடை பெற்றது. அம்மாநாட்டில், எந்தவொரு நாட்டிலேனும், காப்புரிமை காரணமாக, மக்கள் உயிர்க் காப்பு மருந்து கிடைக்கவில்லையென்றாலோ அல்லது மக்களால் வாங்க முடியாத அளவுக்கு அதிக விலையில் விற்றா லோ அந்நாடு கட்டாய உரிமம் வழங்கி உள்நாட்டி லேயே அம்மருந்தைத் தயாரித்துக் கொள்ளலாம் என்று அறிவுசார் சொத்துரிமை விதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

2001ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்த விலக்கு உரிமையை இந்தியா 2012 மார்ச்சு மாதத்தில்தான் முதன்முறையாக - நெக்சவார் மருந்தை நேட்கோ பார்மா நிறுவனம் தயாரிக்க அனுமதி வழங்கியதன் மூலம் பயன்படுத்தியுள்ளது. பேயர் நிறுவனம் ரூ.2.84 இலட்சத்திற்கு விற்கும் மருந்தை நேட்கோ நிறுவனம் ரூ.8,880/-க்கு விற்கவுள்ளது.

அறிவுசார் காப்புரிமை பெற்றள்ள 60 மேற்பட்ட மருந்துகளின் காப்புரிமைக் காலம் விரைவில் முடிய வுள்ளது. அதனால் இந்த மாத்திரைகளை இதே அடிப் படையில் தயாரிக்கக் கட்டாய உரிமம் வழங்கினால், மேலும் பல உயிர்க் காப்பு மருந்துகளின் விலை மளமளவென சரியும். நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் நிதிச் சுமையிலிருந்து மீள்வார்கள். ஏனெனில் தனியார் மருந்துக்கடைகளில் இந்திய அளவில் மக்கள் ஓராண்டில் ரூ.56,000 கோடிக்கு மருந்து வாங்குகிறார்கள். அரசு மருத்துவமனைகளுக் காக அரசு மருந்துகளைக் கொள்முதல் செய்கிறது. அரசு, கொள்முதல் செய்யும் விலையைவிட 100 விழுக்காடு முதல் 5000 விழுக்காடு வரை மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

2005ஆம் ஆண்டிற்குப்பின், மருந்துகளுக்கும் காப்புரிமை (Product Patent) வழங்கும் வகையில் இந்தியக் காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்டது. மருந்து விலைக் கட்டுப்பாடு பட்டியலில் இருந்த 300க்கும் மேற்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை 30ஆகக் குறைக்கப்பட்டது. அதனால் மருந்துகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள், காப்புரிமை மூலம் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காகப் பல தில்லுமுல்லு வழிகளைக் கையாள்கின்றன. எல்லா வகையிலும் புதியதாக உருவாக்கப்படும் மருந்துக்கு மட்டுமே (புதிய மூலக்கூறுகளின் கலவைக்கு) காப்புரிமை பெற முடியும். ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் முன்பே காப்புரிமை பெற்ற மருந்துகளில் சிறிய மாற்றங்களைச் செய்து விட்டு, அவற்றைப் புதிய மருந்து என்ற பெயரில் காப்புரிமை பெற முயல்கின்றன.

பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் மனிதர்களின் குருதியில் வெள்ளை அணுப் புற்றுநோய்க்கான புதிய மருந்து- கிளிவெக் (Gleevec) என்னும் மருந்துக்குக் காப்புரிமை அளிக்க வேண்டும் என்று இந்தியாவை வற்புறுத்தி வருகிறது. ஆனால் இந்தியக் காப்புரிமை அலுவலகம், வெள்ளை அணுப் புற்றுநோய்க்கு நோவார்டிஸ் தற் போது சந்தையில் விற்கும் மருந்தின் வேறுபட்ட வடிவம் தான் கிளிவெக்; எனவே இது புதிய கண்டுபிடிப்பு அல்ல. அதனால் கிளிவெக் மருந்துக்குக் காப்புரிமை தரமுடியாது என்று கூறிவிட்டது. ஆனால் இதை எதிர்த்து நோவார்டிஸ் நிறுவனம் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதன்மீதான விசாரணை இம்மாத இறுதியில் நடக்கவுள்ளது.

இந்தியாவில்தான் மக்கள் மருத்துவம் செய்துகொள்ள தங்கள் சொந்தப் பணத்தை 80 விழுக்காடு அளவில் செலவிடுகின்றனர். இதில் 70 விழுக்காட்டுத் தொகை மருந்துளை வாங்குவதற்காகச் செலவு செய்கின்றனர். வளர்ந்த நாடுகளிலோ மக்களின் மொத்த மருத்துவச் செலவில் 80 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை அரசு செலவு செய்கிறது. எல்லா மக்களுக்கும் மருத்துவ வசதிகளையும் மருந்தையும் அரசு இலவயமாக அல்லது மிகக் குறைந்த செலவில் அளிக்க வேண்டும் என்று மக்கள் போராட வேண்டும்.

Pin It