“இலங்கை அரசு, விடுதலைப்புலிகளின் மீதான 2009ஆம் ஆண்டைய இறுதிக்கட்டப் போரில் மேற் கொண்ட போர்க்குற்றம் பற்றி, அய்.நா.மனித உரிமை கள் காப்பு மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பது பற்றி, இப்போது திட்டவட்ட மான முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா இதுபற்றி இப்படி முடிவெடுப்பது - ஒரு கட்டத்தில் மிக எளிதாக இருக்கக் கூடும். ஆனால் இந்தியா ஜெனிவாவில் நடைபெறும் மாநாட்டில் குறிப்பிட்ட ஒரு நாட்டின் மீது குற்றம் சாற்ற விரும்பவில்லை. இதுபற்றி, இலங்கை அரசு, மிக முதன்மையான ஒரு அறைகூவலை முன்வைக்கிறது.

“...ஜெனிவாவில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என்று இந்தியா முடிவெடுத்தால், அது, இலங்கை அரசு மீதான போர்க் குற்றத்துக்கு இந்தியா ஆதரவு அளித்துவிட்டதாக ஆகாது. அக்கறையுள்ள எல்லோருக்கும் இது புரிய வேண்டும். இலங்கை அரசு இதுபற்றி இப்படிக் கருதினால் அதுவும் தவறாகும்.

இந்திய அரசு வாக்கெடுப்பில் பங்கேற்பது இல்லை என்று முடிவெடுத்தாலும், அல்லது அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்தாலும், அது இந்திய அரசின் மீது இப்போது இருப்பதைவிட அதிகச் சுமையான பொறுப்பை ஏற்படுத்தும் என்பதே உண்மையாகும். அதாவது, இராஜபக்சா அரசு (தமிழர்களுக்கு) அதிக அதிகாரம் வழங்குவதற்கும், அவர்களின் மனித உரிமைகளைக் காப்பதற்கும் ஏற்ற பெரிய முயற்சியையும், தூது சென்று இவற்றைச் சாதித்துத் தீரவேண்டிய பணியையும் இந்திய அரசு செய்து தீரவேண்டிய நிலையை உருவாக்கும்.”

மேலே கண்ட கருத்தை “தி இந்து” ஆங்கில நாளேடு, 16.3.2012 தலையங்கத்தில் மிகத் துணிச்சலாக எழுதியுள்ளது. இக்கட்டுரையில் இன்னும் சில செய்திகளையும் அவ் ஏடு குறிப்பிட்டுள்ளது.

“இலங்கையின் மீதான போர்க்குற்றம் பற்றித் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கண்டனம் தெரிவிப்பது தங்களின் குற்றம் காணுகிற உணர்வுகளை வெளிப்படுத்த மட்டுமே பயன்படும்” என்று இவ் ஏடு இழித்துக் கூறியுள்ளது.

மேலும், “2009 நாடாளுமன்றத் தேர்தலில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், இலங்கையில் விடுதலைப்புலிகளின் இறுதித் தோல்வி நேரிட்டது. தேர்தலின்போது இலங்கைப் போரின் கொடுமை பற்றி வாய்கிழியப் பேசிவிட்டுத் தேர்தல் முடிந்த கையோடு, புதிய அமைச்சரவையில், எத்தனை அமைச்சர் பதவிகளைப் பெறுவது - எந்தெந்தத் துறைகளைப் பெறுவது - எந்தெந்தத் துறையில் அமைச்சர்களை அமர்த்தப் பெறுவது என்பதில் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் அக்கறை கொண்டிருந்தது” என்பதை இதற்குச் சான்றாகக் காட்டியுள்ளது.

2009 மே 18, 19 அன்றைய முள்ளிவாய்க்கால் போரின் போது, வெள்ளைக் கொடியேந்தி - தக்க முன்னறிவிப்போடு இலங்கைப் படை முன்னர் அடைக்கலம் புகச் சென்ற தீரர் நடேசன் குழுவினர் காணப் பொறுக்காத கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

மாவீரன் பிரபாகரன், அவருடைய இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வெற்றிக்களிப்பில் ஆணவத்தோடு இன்று ஆட்சி புரியும் மகிந்த இராஜபக்சாவும், அவருடைய தம்பிகளும், மற்றும் இராணுவத் தளபதிகளும் புரிந்த காணப் பொறுக்காத போர்க் கொடுமைகள் பற்றி, உலக மனித உரிமைக்காப்பு மாநாட்டில் குற்றம் சாற்றி, மெய்ப்பித்து, அவரையும் மற்றவர்களையும் உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரித்து உரிய தண்ட னையை அவர்களுக்கு வழங்குவது மிகவும் முதன்மையாகும்.

இதிலிருந்து தப்பித்திட இராஜபக்சா மூன்று வகை யான அநீதியான முறைகளை மேற்கொண்டுள்ளார்.

1.     தமிழீழத் தமிழர்களுக்கு எந்த அளவு உரிமைகள் அடங்கிய அரசமைப்பை அல்லது ஆட்சிப் பொறுப் பை ஒப்படைப்பது என்பது பற்றிக் கடந்த 33 மாதங்களில் தம் எண்ணத்தை இராஜபக்சா வெளிப்படுத்தவே இல்லை. வாளாவிருக்கிறார். இது ஆபத்தானது.

2.     போரின் போது பாதுகாப்பு வளையத்தில் வைத்துக் கொடுமைப்படுத்தப்பட்டுத் தத்தம் வாழ்விடங்களுக்கு அனுப்பப்பட்ட தமிழர் குடும்பங்களின் மறு வாழ்வுக்கான எந்த ஏற்பாட்டையும் இராஜபக்சா அரசு இன்றுவரை செய்யவில்லை. அதனைத் தாமதப்படுத்தி, அப்பகுதிகளில் சிங்களவர்களை விரைந்து குடியமர்த்த எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்கிறார்.

3.     போர்க்களத்தில் நடந்த கொடிய காட்சிகளின் கடு மையையும் அளவையும் குறைத்துக் காட்டுகிற தன்மையிலான ஆவணப் படங்களை அவசர அவசரமாக உருவாக்கி, அவற்றை ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் காப்பு மாநாட் டிலும், உலக நாடுகளிலும் காட்சிப்படுத்தி, இலங் கையில் போர்க் குற்றம் நடைபெறவில்லை - அது வெறும் போர் தான் என்று எண்பிக்க எல்லாம் செய்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில், (1) இரண்டாவது உலகப் போரில் 1939-1945 காலகட்டத்தில், அடால்ப் இட்லரின் நாசிப் படைகள் விளைவித்த போர்க் குற்றங்களை இழைத்த இராணுவத் தளபதிகளை 1970-80களில் கூட, நூரம்பர்க் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்து, உரிய தண்டனைகள் வழங்கப் பட்டதை நாம் இந்தியாவெங்கிலும், உலக நாடுகளிலும் எடுத்துக்கூறி, அதேபோல், 2005-2009இல் இலங்கைப் போர்க் குற்றத்தை இழைத்த இராஜபக்சா மற்றும் தளபதிகளுக்குத் தக்க தண்டனை அளிக்கப்பட வழி செய்ய வேண்டும்.

(2) கவுதமாலா அல்லது குடிமாலா என்கிற நாடு தென் அமெரிக்காவுக்கும், வடஅமெரிக்கா வுக்கும் இடையில் உள்ளது. அந்நாட்டில் 1960இல் தொடங்கி 1996 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில், 1982இல், லா°டோ° இரா° என்ற இடத்தில், 201 பொது மக்களைச் சம்மட்டியால் அடித்துக் கொன்ற அந்நாட்டு முன்னாள் இராணுவ வீரர் - அமெரிக்க லா° ஏஞ்செல்° நகரத்தைச் சார்ந்த பெட்ரோ பிமன் டெல் (55) என்பவருக்கு, கவுதமாலா நீதிமன்றத்தில் 2011 ஆக°டில் 6060 (ஆறாயிரத்து அறுபது) ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டுச் சட்டப்படி அதிக அளவு 50 (அய்ம்பது) ஆண்டுகள்தான் சிறைத் தண்டனை வழங்க முடியும். ஆனாலும் குழந்தைகள் உள்பட ஆண், பெண்கள் 201 பேரைக் கொடூரமாகக் கொன்றதால் - ஒவ்வொரு கொலைக்கும் 30 ஆண்டுகள் வீதம் 6030 ஆண்டுகளும், மனித உரிமை மீறலுக்கு 30 ஆண்டுகளும் என மொத்தம் 6060 ஆண்டுகள் சிறைத்தண்டனை சென்ற ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. (“தினத்தந்தி”, சென்னை 14.3.2012).

அந்தக் குற்றம் நடந்தது 1982இல்; குற்ற வாளி தண்டிக்கப்பட்டது 2011இல்.

“அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக, யார் தண்டனை வழங்குவது” என்று, ஜெனிவா மாநாட்டில், எதிர்க்கேள்வி எழுப்பியுள்ள இராஜபக்சா கும்பலுக்கு - “இதோ, மத்திய அமெரிக்க அரசு போர்க் குற்றத்துக்கு எதிரான தண்டனையை நேற்று அளித்த தைப் பார்! என, 2013இலும் நாம் உலகின் முன் கூறலாம்.

ஈழப் போர்க்குற்றம் பற்றி 2009இல் கவலைப் படாத தமிழ்நாட்டுத் தேர்தல் கட்சியினர் எல்லோரும், ஒருமுகமாக நின்று, 12.3.2012 அன்று புதுதில்லியில் நாடாளுமன்றத் தொடர் கூட்டம் தொடங்கப்பட்ட உட னேயே, மக்களவையில், “இந்திய அரசினரே இலங்கை மீதான போர்க் குற்றத் தீர்மானத்தை ஆதரியுங்கள்!” என, ஓங்கிக் குரல் எழுப்பியது - தமிழகத் தமிழருக்கு இன்னமும் சொரணை இருக்கிறது என்பதைக்காட்ட நல்ல சான்றாக அமைந்தது. இதற்காக இவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.

இது அப்படியே தொடர வேண்டும் என, மா.பெ.பொ.க. தமிழ்நாட்டுக் கட்சிகளையும், மக்களையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறது.

11.3.2012 மாலை புதுதில்லியில், மா.பெ.பொ.க. நடத்திய ஈழவிடுதலை பற்றிய கூட்டத்தில், நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழர் அறிய ஏற்றவை.

- வே.ஆனைமுத்து

Pin It