பா.ஜ.க. நடுவண் அரசில் ஆட்சியமைத்த பிறகு 100 நாட்களில் கறுப்புப் பணத்தை வெளிநாட்டி லிருந்து கொண்டு வருவேன் என்றார் மோடி. தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி இணைக்கப்பட்டது. மேலும், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வெளி நாடுகளிலிருக்கும் பல இலட்சங் கோடிகளை இந்தியா விற்குக் கொண்டு வந்தால் ஒவ்வொரு இந்தியருக்கும் தலா 7 இலட்சம் ரூபாய் கிடைக்கும் என்று மோடி தவறாமல் குறிப்பிட்டார். தற்போதோ உச்சநீதிமன்றம், கறுப்புப் பண வழக்குத் தொடர்பாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணக்காரர்களின் பட்டியலைக் கேட்டால், முந்தைய காங்கிரசு அரசைப் போன்றே பல சாக்குப் போக்குகளை நடுவண் அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ குறிப்பிடுகிறார்.

காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். சீடரான மோடிக்குத் திடீரென்று காந்தி மீது குஜராத்தி மோகம் ஏற்பட்டுள்ளது. தற்போது பட்டேல் மீதும் பாய்ந் துள்ளது. சீனப் பிரதமரை காந்தியின் ஆசிரமத்தில் உட்கார வைத்து இவரும் அருகே உட்கார்ந்து ஊஞ்சல் ஆடுகிறார்.

இந்தத் திருவிளையாடல்கள் போதாதென்று காந்தி பிறந்த நாளில் இந்தியாவில் குவிந்து வருகின்ற குப்பைகளை அகற்றியே தீருவேன் என்று அறைகூவல் விடுகிறார். வண்ண வண்ண உடையலங்காரத்துடன் நாளும் உலாவரும் நமது பிரதமர் ஒரு நாளில் துடைப் பத்தால் குப்பையைக் கூட்டுகிறார். குப்பை அள்ளுவ தற்குப் புகழ்மிக்க நடிகர்களை இந்தியா முழுவதும் இணைத்து ஒரு இயக்கமாக மாற்றுவேன் என்றும் மோடி குறிப்பிடுகிறார். நம்ம ஊர் நாயகன் கமலும் இதில் சிக்கிக் கொண்டார். ஆனால், இந்தியாவில் குவி யும் குப்பையைப் பற்றி யாரும் கவலையே கொள்வ தில்லை. இந்தியாவில் தினமும் குவியும் குப்பையைத் தவிர்த்து வெளிநாடுகளில் இருந்துவரும் குப்பைகள் தான் அதிகம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குப்பைகள் பலவிதம். மனிதக் கழிவு, தொழிற் கூடங்களில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட மின்உபகரணக் கழிவு கள் ஆகியன நாள்தோறும் பெருகிக் கொண்டே வரு கின்றன. உலகில் அதிகமான முறையில் குப்பை களை, கழிவுகளைக் கொட்டும் பத்து நாடுகளின் பட்டியல் வெளிவந்துள்ளது. அமெரிக்கா குப்பைகளைக் கொட்டுவதிலும், கடன் வாங்குவதிலும் முதலில் உள்ளது. ஆண்டொன்றுக்கு 260 மில்லியன் டன் அளவிற்குக் குப்பைகளை உலகிற்கு அமெரிக்கா தருகிறது. உல கின் 5 விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்கா 30 விழுக்காடு குப்பைகளைக் கொட்டு கிறது. இதில் அதிகம் பிளாஸ்டிக் கழிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, பிரேசில் 210 மில்லியன் டன், ஜப்பான் 53 மில்லியன் டன், ஜெர்மனி 49 மில்லி யன் டன், இங்கிலாந்து 35 மில்லியன் டன், மெக்சிகோ 32 மில்லியன் டன், பிரான்சு 32 மில்லியன் டன், இத்தாலி 30 மில்லியன் டன், ஸ்பெயின் 26 மில்லி யன் டன், துருக்கி 25 மில்லியன் டன் என்று நாடுகள் வரிசைப் பட்டியலில் இடம்பெறுகின்றன. சீனாவும், இந்தியாவும் சில ஆண்டுகளில் 11 மற்றும் 12ஆம் இடங்களைப் பிடிக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடு கின்றனர். இதற்கு முதன்மைக் காரணம், தொழில் வளர்ச்சியை விரைவுப்படுத்தும் போது, நகரங்கள் உருவாகின்ற போது பல நுகர்ப்பொருட்கள் சந்தை களில் விற்கப்படும் போது, இந்தக் கழிவுகளும், குப்பைகளும் அதிகமாகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி என்னவென் றால், வளர்ந்த நாடுகளில் உருவாக்கப்படும் பல அபாயகரமான கழிவுகள் வளர்கின்ற நாடுகளுக்குச் சுத்திகரிப்பு என்ற பெயரில் இறக்குமதி செய்யப்படு கின்றன. இதற்குக் காரணம், இந்தச் சுத்திகரிப்புத் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குறைந்த கூலி வழங்கப்படுகிறது. இப்பணிகளை வளர்ந்த நாடுகளி லேயே மேற்கொண்டால் வளர்கின்ற நாடுகளின் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியைவிட 10 மடங்கு உயர்த்தி வழங்கும் சூழல் ஏற்படுகிறது. சான் றாக, ஒரு டன் கழிவுகளைச் சுத்திகரிப்பு செய்ய இலண்டன் மாநகரில் இந்திய ரூபாய் மதிப்பில் 12000 செலவாகிறது. ஆனால், இந்தியாவில் 2800 ரூபாயில் சுத்திகரிப்பு செய்யலாம்.

இவ்விதப் போக்கினைத்தான் நச்சுத்தன்மைக் கொண்ட காலனி ஆதிக்கம் என்று சிலர் குறிப்பிடு கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்; தடுக்க வேண் டும் என்ற நோக்கில் 1989ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உதவியோடு சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. ஒரு பன்னாட்டு ஒப்பந்தமும் உருவா யிற்று. இந்தியா உட்பட ஏறக்குறைய 180 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. பொருளா தாரக் காரணங்களுக்காகவும், சுத்திகரிப்புக் காரணங் களுக்காகவும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குக் கழிவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வகுக்கப்பட் டுள்ளன. குறிப்பாக, மானுடத்திற்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கின்ற ஆபத்தான பொருட்களை இறக்குமதி செய்வதில் கடைபிடிக்க வேண்டிய கூறுகள் இவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளன. இதற்குப் பிறகு குப்பைக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக BAMAKO Convention, 1991, Rotterdom Convention 1998, Stockholm Convention 2001, Electronic Waste Convention, 2004 போன்ற பல ஒப்பந்தங்கள் பன்னாட்டு அளவில் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மேற்பார்வையோடு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் பெயரளவிலான ஒப்பந் தங்களாகவே உள்ளன.

நடைமுறையில் தொடர்ந்து இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வளர்கின்ற நாடுகளில்தான் கழிவுச் சுத்தி கரிப்புத் தொழில்கள் என்ற பெயரில் நோய்களைப் பரப்புகின்ற, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைக்கும் பல இலட்சம் டன் கழிவுகள் இந்தியாவின் பல துறை முகங்களில் மறைமுகமாக வந்த வண்ணமே உள்ளன. அண்மையில் மருத்துவர் இராமதாசு கோழிக் கால் களை இந்தியா இறக்குமதி செய்வதைத் தடுக்க வேண் டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2009 அக்டோபர் 24ஆம் நாள் தெகல்கா ஏடு - தூத்துக்குடி அருகே உள்ள போல்பேட்டை என்ற ஊரில் மறுசூழற்சிக்காகவும், இரப்பரைப் பயன்படுத்தி பிவிசி (PVC) கதவுகள் செய்வதற்காகவும் சில இரசாயனக் கழிவுகளை எக்ஸல் (Excel) என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்தது. ஆனால் உண்மையில் மறு சுழற்சி முறையில் எவ்வித துணைப் பொருட்களை யும் உருவாக்காமல், இந்தக் கழிவுகளை எரித்து இலாபம் அடைந்தது. இதேபோன்று தூத்துக்குடி அருகே பெட்ரோலிய இரசாயனத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கு இத்தொழிலுக்கு தேவை யானப் பொருட்களை இறக்குமதி செய்கிறோம் என்ற பெயரில் உலோக, எண்ணெய் கழிவுகளைத் தூத்துக் குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்து எரித்து விடுகிறார்கள். சுற்றுச்சூழலைப் பற்றி கவலைப்படாமல் பணக்கொள்ளை அடிக்கிறார்கள் என்று அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது.

அரசு சார்ந்த துறைமுகத்தில் எவ்வாறு எவ்வித கண்காணிப்பும் இல்லாமல் இவ்வித ஆபத்தை விளை விக்கும் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இந்தியாவில் உள்ள எந்தத் துறைமுகத்திலும் இறக்குமதி செய்யப் படும் பொருட்களைத் துல்லியமாகக் கண்டறியும் ஸ்கேனர் கருவிகள் இல்லை என்பதையும் இந்த ஏடு சுட்டியது. ஒருமுறை சுங்கத் துறையின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய சந்திரமோகன் இந்தக் கழிவுப் பொருட்களைக் கண்டறிந்து மீண்டும் வெளி நாட்டிற்கே திருப்பி அனுப்பினார். இந்தியாவில் புரை யோடிப் போன ஊழல் வழித்தடங்கள் வழியாகப் பெரும்பாலான கழிவுப் பொருட்கள் வெளிநாடுகளி லிருந்து இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகின்றன என்பதுதான் உண்மை.

2010 ஏப்ரல் 24ஆம் நாளிட்ட ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு, தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஸ்பெயின், சவூதி அரேபியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து கழிவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய் வாளர் தூத்துக்குடி துறைமுகம் சிறிய துறைமுகமாக இருப்பதால் எளிதாக இந்தக் கழிவுப் பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள் என்கிறார். இங்கிலாந்தின் லீட்சு நகரிலிருந்து மருத்துவக் கழிவுகள், இரத்தக்கறை படிந்த கழிவுப் பொருட்கள் தூத்துக்குடி வழியாக, கோவை மாவட்டத்தின் குமாரபாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விளைநிலங்களில் எரிக்கப்பட்டது என்று பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் வழியாக இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஒரு தொண்டு நிறுவனம் அம்பல மாக்கியது.

இதன் காரணமாகவே ரவி அகர்வால் என்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர் இந்தியா கழிவுப்பொருட்கள் குவிக்கப்படும் சொர்க்கமாகவே மாறி வருகிறது. இந்தியாவில் மலை, நிலம், நீர், வனப்பகுதிகள், ஊர், நகர்ப்பகுதிகள் ஆகிய இடங்களில் நாள்தோறும் அளவிட முடியாத அளவிற்குக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மோடி முதல்வராக இருந்த குசராத்தில் சூரத் நகரில் 1994ஆம் ஆண்டு பிளேக் நோயால் பலர் மாண்டனர். பிறகு, அப்போது காங்கிரசு அரசு, போர்க்கால அடிப் படையில் சூரத் நகரில் உள்ள குப்பைக் கூளங்களை அகற்றி சாக்கடைத் தண்ணீரை ஒழுங்குப்படுத்திய பிறகுதான் இந்நோய் முற்றிலும் அகற்றப்பட்டது.

இந்தியாவில் ஏறக்குறைய 70 விழுக்காட்டு மக்களுக் குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை என்று பல பன்னாட்டு நிறுவனங்களின் ஆய்வறிக் கைகள் குறிப்பிடுகின்றன. ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் எல்லாவற்றிலும் தொழிற்சாலைக் கழிவு கள், இரசாயனக் கழிவுகள், வேளாண்மையால் ஏற் படுகின்ற கழிவுப் பொருட்கள் கலந்து உள்ளதால் தூய்மையான நீர் கிடைக்கவில்லை என்பதை இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கடலோரப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடை நீர் கலந்து நாள் தோறும் பெருமளவில் கடல் நீர் மாசுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகக் கடல்வாழ் உயிரினங் கள் பெருமளவில் இறந்துவிடுகின்றன. அண்மையில் இந்தியாவில் உருவாகும் குப்பைக் கழிவுகளைப் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி எரிசக்தியாக மாற்ற முடியும் என அறிவியல் ரீதியாகச் சிலர் மெய்ப்பித்து வருகின்றனர். சில தனியார் தொண்டு நிறுவனங்களும் இவ்வகைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, குப்பைக்கழிவுகளை நீக்கிப் பல ஆக்கப் பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி இதற்கென்று முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டி, நீண்ட காலத் திட்டத்தை அறிவித்து இருந்தால், இந்தப் பிரச்சனையை அவர் தொலைநோக்குப் பார்வையோடு அணுகியிருக் கிறார் என நம்பலாம். 2014 நாடாளுமன்றத் தேர்த லுக்கு முன்பு மோடி ஒவ்வொரு கோயிலுக்குப் பதிலாக ஒரு கழிவறை இருந்தால் இந்தியாவின் சுற்றுச்சூழ லைப் பாதுகாக்கலாம் என்று குறிப்பிட்டார். கோயில் மீது கை வைத்தவுடன் தங்களின் ஆதிக்கம் பறி போகும் என்று சங்கப் பரிவாரங்கள் கூக்குரல் இட்டவுடன் மோடி அமைதியாகிவிட்டார்.

மேலும், இந்தியாவில் உள்ள பெருநகரங்கள், நகரங்களில் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவல நிலை இன்றும் தொடர்கிறது. மனிதக் கழிவு களைக் குழியில் இறங்கி சுத்தம் செய்யும் போதுத நச்சு வாயுக்களால் தாக்கப்பட்டு ஆண்டுதோறும் பலர் இறக்கின்றனர். செவ்வாய் கிரகத்திற்குச் செயற்கைக் கோளை அனுப்பி புகைப்படம் எடுக்கும் தொழில் நுட்பத்தைப் பெற்றுள்ள நாடு என்று பெருமை அடித்துக் கொள்ளும் மேல்தட்டு வர்க்கமும், ஆளும் வர்க்கமும் இதுவரை ஏன் எவ்விதத் தொழில்நுட்பத்தையும் மனிதக் கழிவுகளை நீக்குவதற்குப் பயன்படுத்த வில்லை என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

சென்னை பெருநகர் என்று பெருமை பேசுகிற நகரில் இரு நாட்கள் மழை பெய்தால் பல தொற்று நோய்கள் குடிசைவாழ் மக்களைத் தொற்றிக் கொள் கின்றன. போதிய பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதி ஆகியவை இன்றும் பல இலட்சம் ஏழை மக்களுக்குக் கனவாகவே உள்ளன. அதேநேரத் தில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேர மின்சாரமும், ஆலைகளுக்குத் தேவையான நிலமும், நீரும் வழங்கப்படுகின்றன.

1999ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் நகர்ப்புற திடக்கழிவு மேலாண் மைச் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் நடுவண் அரசு இயற்றிய பல நூற்றுக்கணக் கான சட்டங்கள் போல தில்லிப் பேரரசின் குப்பைக் கூளங்களில் செயல்படாமல் மறைந்து கிடக்கிறது. இந்தியாவில் உள்ள பெருநகரங்கள், நகரங்கள் அனைத் திற்கும் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்று வதற்கு ஏறக்குறைய அறுபதாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மதிப் பிடப்பட்டது. கடுமையான முறையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வங்கிகளில் இருக்கின்ற வாராக்கடன் பணத்தை மீட்டாலே அரசுக்குச் சேர வேண்டிய பல இலட்சம் கோடிகள் கிடைக்கும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது. இத்தொகையை மேற்கூறிய திட்டத்திற்குப் பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடு கின்றனர்.

சதுப்பு நிலங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அரண் என்று பல சூழலியல் அறிஞர்கள் குறிப் பிடுகின்றனர். ஆனால் சென்னையை எடுத்துக் கொண் டால், பள்ளிக்கரணையில் காணப்படும் சதுப்பு நிலப் பகுதிகளில்தான் சென்னை மாநகரின் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருகிறது. புதுதில்லியின் அரகே மின்னணுக் கழிவுகள் சுத்திகரிப்புச் செய்யப் படுகின்றன. இந்தச் சுத்திகரிப்புத் தொழிலில் ஈடு பட்டுள்ள பல தொழிலாளர்கள் கடுமையான நெஞ்சக நோய்களாலும், சுவாசக் கோளாறுகளாலும், தோல் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் இறந்தும் விட்டனர். இதுபோன்று முன்னிலைப்படுத்த வேண்டிய அடிப்படையான கழிவு அகற்றும் திட்டங்களை அறி விப்பதற்குப் பதிலாக மோடி, காந்தியைப் பயன்படுத்தி மோடி வித்தைக் காட்டுவது கண்டனத்திற்குரியது.

மோடி நாடகத்தைக் கண்டு தில்லி பொருளாதாரப் பள்ளியின் சமூகவியல் ஆய்வு மாணவர் தம்மா தர்சன் நிகம், அருமையான கருத்தைச் சிறிய கட்டுரை வடிவில் மும்பையில் இருந்து வெளிவரும் அரசியல்-பொருளாதார வார ஏட்டில் (Economic and Political Weekly, 11th Oct. 2014, P.12)) வடித்துள்ளார். ஓட்டு வங்கி அரசியலைக் கடுமையாகச் சாடும் நிகம், உச்சநீதிமன்றம், மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களைப் பற்றி 2004 மார்ச்சு திங்களில் வழங்கிய தீர்ப்பை இக்கட்டுரையில் சுட்டிக்காட்டி யுள்ளார். 1993ஆம் ஆண்டில் மனிதக் கழிவுக் குழி களில் இறங்கி மரணமுற்ற எல்லாத் தொழிலாளர் களையும் முதலில் இனங்கண்டு அவர்களின் குடும் பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 10 இலட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பினை நடுவண் அரசு மதித்ததா? சமுதாயத்தி னுடைய அடித்தட்டில் காலங்காலமாக அடிமைப்பட்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவோர்க்கு என்ன திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன போன்ற கேள்வி களை எல்லாம் தொடுத்து மிக அழகான முறையில் விளக்கமளித்துள்ளார். முத்தாய்ப்பாக, பார்ப்பன சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொள்வதை நான் வெறுக் கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் (I hate being trapped in the web of brahminic al ideology). பா.ஜ.க. அரசினுடைய போலி நாடகத்தைச் சரியான முறையில் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்குத் தேவையான திட்டங்களை உரிய முறையில் அளிக் காமல் மேலெழுந்தவாரியாகத் தேர்தல் கால பாணியில் இணையத்தில் எழுதி, மேடையில் முழங்கிவரும் மோடியின் இந்துத்துவா, முதலாளித்துவ அரசியல் முகமூடி பல ஆய்வாளர்களால் கிழிக்கப்படுகிறது. குப்பைக் கூளங்களை அகற்றுவதிலும் நீரோ மன்னன் பாணியில் மோடி மகுடி வாசிக்கலாமா?

Pin It