உலக அளவில் 2014-15ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை “உயர் கல்விக்கான டைம்ஸ்” (Times Higher Education) அமைப்பு அண்மையில் வெளியிட்டது (The Hindu 2-10-14).

முதலில் உள்ள 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங் களில் ஒன்றுகூட இடம்பெறவில்லை. ஆனால் 276-300 வரிசைத் தொகுப்புப் பட்டியலில் இரண்டு இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று பஞ்சாப் பல்கலைக்கழகம். மற்றொன்று இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (Indian Institute of Science - IISC). இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் இவ்வாண்டுதான் முதல் தடவையாக இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் பட்டியலில் 226-250 எனும் தொகுப்பில் இருந்த பஞ்சாப் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு 276-300 பிரிவுக்குள் கீழே இறங்கிவிட்டது.

அடுத்து, 351-400 வரிசைத் தொகுப்பில் ரூர்கேலா விலும் மும்பையிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIT) இடம்பெற்றுள்ளன. இவற் றுள், மும்பை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இவ் வாண்டுதான் முதல்முறையாக இப்பட்டியலில் இடம் பெறுகிறது.

தரவரிசைப் பட்டியலில் முதலில் உள்ள 300 பல்கலைக்கழகங்களில் அமெரிக்காவின் சில தனியார் பல்கலைக்கழகங்களைத் தவிர மற்ற அனைத்தும் அரசுப் பல்கலைக்கழகங்களேயாகும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

அடிப்படையான கல்வியும் மருத்துவ வசதியும் எல்லா மக்களுக்கும் எளிதிலும், தரமான தன்மை யிலும், இலவயமாகவும் கிடைக்கச் செய்ய வேண்டி யது மக்களாட்சியில் அரசின் தலையாயக் கடமை யாகும். அதேபோன்று உயர்கல்வியும், உயர்நிலை மருத்துவஏந்துகளும் குறைந்த செலவில் மக்கள் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்வதும் அரசின் கடமையாகும்.

தொழில் வளர்ச்சி பெற்ற - தாராளமயம், தனியார் மயம் என்பதைக் கொள்கையாகக் கொண்ட அமெரிக் கா, கனடா, அய்ரோப்பிய நாடுகள், சப்பான், தென் கொரியா முதலான நாடுகளில் கல்வியும் மருத்துவமும் மக்களுக்கு அளிப்பது அரசின் கடமை என்கிற நடை முறை இருக்கிறது. ஆனால் இந்தியாவில் கல்வியும் மருத்துவமும் அளிக்க வேண்டியது அரசின் கடமை யல்ல என்ற நிலை 1990கள் முதல் உருவாகி மேலோங்கி விட்டது. அதனால் கல்வியும் மருத்துவமும், தனி யாரின் கொள்ளைக்கான வேட்டைக்காடாகிவிட்டன.

மழலையர் பள்ளிமுதல் உயர்நிலைக் கல்வி வரை தனியார் வணிகக் கல்வி நிறுவனங்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் புற்றீசல் போல் பெருகிவிட்டன. 1980இல் இந்தியாவில் சுயநிதி-தன்நிதிக் கல்லூரி என்பது ஒன்றுகூட இல்லை. ஆனால் இப்போது இந்தியாவில் 19,930 தன்நிதி கல்லூரிகள் உள்ளன. இவற்றுள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களாக 191 இருக்கின்றன. ஆனால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள் 13,000 மட்டுமே இருக்கின்றன.

மேலும் அரசுக் கல்லூரிகளிலும், அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளில் உள்ளதுபோல கல்விக் கட்டணம் செலுத்திப் படிக்கும் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுவிட்டன என்பது தனியார் மயம் எந்த அளவுக்குத் தலைவிரித்தாடு கிறது என்பதையே காட்டுகிறது. அனைவருக்கும் தரமான உயர்கல்வி வாய்ப்பை வழங்க வேண்டியது என்கிற பொறுப்பிலிருந்து அரசுகள் எந்த அளவுக்கு விலகிச் சென்றுள்ளன என்பதையும் இது வெட்ட வெளிச்சமாக்குகிறது.

கல்வியைத் தனியார்மயக் கொள்ளைக்குத் திறந்துவிட்டிருப்பதில் அமெரிக்கா போன்ற முதலாளிய நாடுகளையும் இந்தியா விஞ்சி நிற்கிறது. அமெரிக் காவில் உயர் கல்வி பயிலும் மாணவர்களில் அய்வரில் ஒருவர் அல்லது நால்வரில் ஒருவர் மட்டுமே தன்நிதி கல்லூரிகளில் படிக்கின்றனர். உலக அளவில் எடுத்துக்கொண்டால் 30 விழுக் காடு மாணவர்களே உயர்கல்வியில் தன்நிதி கல்வி நிறுவனங்களில் பயில்கின்றனர்.

இந்த எண்ணிக்கை தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளின் கூட்டமைப்பு (OECD) என்பதில் உள்ள நாடுகளில் வெறும் 15 விழுக்காடாக உள்ளது. அய்ரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 21 நாடுகளில் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் 8 விழுக் காடு மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். 2013 ஆம் ஆண்டின் நடுவண் அரசின் திட்டக் குழுவின் அறிக்கையின்படி, இந்தியாவில் தொழிற் படிப்பு களில் 75-80 விழுக்காடு, மற்ற கல்லூரிகளில் 66 விழுக்காடு மாணவர்கள் தன்நிதி கல்வி நிறு வனங்களில் படிக்கின்றனர். இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும், நடுவண் அரசும் தனியார் கல்வி வணிக முதலைகளின் கைக்கூலிகள் என்பதைத் தானே இந்தப் புள்ளிவிவரம் மெய்ப்பிக்கிறது.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பொருளா தாரத்தில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள், தங்கள் நாடுகளில் மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை அரசின் நிதியில் - பொறுப்பில் நடத்துகின்றன. ஆனால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கல்வியை முற்றிலும் தனியார் மயமாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஏனெனில் இந்நாடுகள் இவற்றுக்குப் போட்டியாக வளர்ந்து வரக்கூடாது என்ப துடன், தொழில்நுட்பம், மூலதனம் உள்ளிட்ட அனைத்துக்கும் அந்நாடுகளையே அண்டியிருக்க வேண்டும் என்பதும் அந்த ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சியாகும். இந்தச் சூழ்ச்சிக்கு இந்திய அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும், உயர் அதிகாரவர்க்கமும் கூலிக்கு விலை போகின்றனர்.

கல்விக் கட்டணம் :

இந்தியாவில் தன்நிதி கல்வி நிறுவனங்கள், ஒரு மாணவன் படிப்பதற்கான மொத்தச் செலவையும் அம்மாணவனிடமிருந்தே வசூலிக்கின்றன. தன்நிதி கல்வி நிறுவனங்கள், தாம் போட்ட முதலை ஒரு சில ஆண்டுகளிலேயே மாணவர்களின் கல்விக் கட்டணம், நன்கொடை என்கிற பல்வேறு பெயர்களில் எடுத்து விடுகின்றன. அதன்பிறகு பகற்கொள்ளைதான். அமெரிக் காவில் கல்விச் செலவில் ஒரு பகுதியை மட்டுமே தனியார் கல்வி நிறுவனங்கள் பெறுகின்றன. ஒரு மாணவனின் கல்விச் செலவில் 40 விழுக்காடு மட்டுமே மாணவர்களிடம் பெறுகின்றனர். மீதி 60 விழுக்காடு செலவை பிற வழிகளில் (non-state and non-student) திரட்டிய நன்கொடை மூலம் ஈடுகட்டுகின்றன. சப்பானில் தனியார் கல்வி நிறுவனங்கள் மொத்தச் செலவில் 59 விழுக்காட்டை மாணவர் கட்டணமாகவும், 49 விழுக் காட்டை அரசு-மாணவர் அல்லாத பிற நிதி ஆதாரங் கள் மூலம் திரட்டுகின்றன. இந்தியாவில் ஒரே ஒரு தனியார் கல்வி நிறுவனம்கூட மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் இந்த வழிமுறையைப் பின்பற்றவில்லை.

இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணம் அரசு நிறுவனங்களின் கட்டணத் தைப் போல 50 முதல் 80 மடங்கு அதிகமாக இருக் கிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள அமெரிக்கா, சப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் அரசின் கல்வி நிறுவனங்களைவிட 8 முதல் 10 மடங்கு மட்டுமே அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் பச்சையப்ப (முதலியார்) அண்ணா மலை (செட்டியார்) போன்றவர்கள் அறச்சிந்தனை யுடன் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார்கள். அதுபோல அமெரிக்காவிலும் ஹார்வர்டு, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. இலாபம் இவற்றின் நோக்கமாக இன்றுவரை இல்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மொத்தச் செலவில் மூன்றில் ஒரு பங்கு மாண வர்களின் கல்வி உதவித் தொகையாகச் செலவிடப் படுகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களில் 60 விழுக்காட்டினர் அவர்களின் கல்விக் கட்டணம், அறை வாடகை, உணவுச் செலவு ஆகியவற்றுக்கான தொகையை கல்வி உதவித் தொகையாகப் பெறுகின்றனர்.

இந்தியாவிலோ எந்தவொரு தனியார் கல்வி நிறுவனமும் ஹார்வர்டு நிறுவனம் போல் கல்வி உதவித் தொகை வழங்குவதில்லை. அரசு அளித்து வரும் கல்வி உதவித் தொகை கல்வியின் விரிவுக்கு ஏற்பப் பெருகாமல், சுருங்கிவிட்டது. இதற்கு மாற்றாக வங்கிகளில் கல்விக்கடன் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இது மாணவர்களின் - பெற்றோர்களின் கடன் சுமையை அதிகமாக்கி அல்லல்படுத்துகிறது.

பெரும்பாலான தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் நூலகம், ஆய்வுக்கூடம், ஆராய்ச்சி வசதி, தகுதியான ஆசிரியர்கள் முதலான கட்டமைப்பு வசதிகள் இல்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புவாரி இடஒதுக்கீடு இல்லை. இதுகுறித்து பேராசிரியர் யஷ்பால் சிங் குழு 2009இல் நடுவண் அரசுக்கு அளித்த அறிக்கையில் திட்டவட்டமாக விளக்கி யுள்ளது. இந்திய மருத்துவக் கல்விக் கழகத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் இருந்த கேத்தன் தேசாய் பல ஆயிரம் கோடி உருபா கையூட்டுப் பெற்றுக் கொண்டு, தரமற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தார். இதேபோல் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆள்களுக்குக் கப்பம் கட்டி பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால், உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிட அரசுக்கு உரிமையில்லை என்று தீர்ப்புகளை அளித்து அவர்களை அரவணைத் துக் கொள்கின்றன.

எனவே கல்வியில் தனியார் மயத்தை முற்றிலு மாக ஒழிக்க வேண்டும் என்றும், அரசே அனை வருக்கும் ஒரே தரமான கல்வியை அளிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். அப்போதுதான் மேல்சாதி - படித்த - பணக்கார வர்க்கத்துக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலைமாறி, காலங்காலமாக கல்வி உரிமை மறுக்கப் பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், உயர்கல்வி வாய்ப்புக் கிட்டும். கல்வியின் தரமும் உயரும்.

- க.முகிலன்

Pin It