கண்ணுறங்கு கண்ணுறங்கு
காவியமே கண்ணுறங்கு!
களம்நின்று போராடும்
காலம்வரைக் கண்ணுறங்கு!
முன்னிருந்த தமிழர்நலம்
மூத்தகுடி மொழியின்வளம்
மண்ணுரிமை யாகஇங்கு
மாறும்வரைக் கண்ணுறங்கு! (கண்ணுறங்கு)
முப்பாட்டன் கடல்தாண்டி
ஒர்குடையில் உலகாண்டான்
இப்போது நமக்கென்று
ஒர்நாடு இல்லையடி
திக்கெட்டும் ஆண்டமொழி
திக்கற்றுப் போனதடி
இக்கட்டைப் போக்கணும்நீ
இப்போது கண்ணுறங்கு!
தன்னலத்தில் தனையிழந்து
தாய்மொழியின் புகழ்மறந்து
பொன்னான தாய்நாட்டைப்
போற்றிடவும் மறந்துவிட்டு
இங்கிருக்கும் தமிழரெல்லாம்
மையிருட்டில் வாழுகின்றார்
ஈழமண்ணின் புதுவெளிச்சம்
இங்குவரும் கண்ணுறங்கு! (கண்ணுறங்கு)
நாடுவிட்டு நாடுசென்று
நாகரிகம் மாறிவந்து
வாடிநிற்கும் தாய்நாட்டை
வளஞ்செய்ய மறந்துவிட்டு
தேடுகின்ற செல்வமொன்றே
தேவையென தான்நினைக்கும்
கேடுகெட்ட ஈனர்களின்
கேடறுப்பாய்க் கண்ணுறங்கு!
நம்மினத்தைக் காத்திடவும்
நம்மொழியைப் போற்றிடவும்
நாளெல்லாம் போராடும்
நல்லதமிழ் நம்பியைத்தான்
நல்லறிஞர் முன்னிலையில்
நாம்மகனாய் ஏற்றிடுவோம்
நல்லதமிழ்த் திருமணத்தை
நடத்துவோம் கண்ணுறங்கு! (கண்ணுறங்கு)
குழல்போலும் யாழ்போலும்
குழந்தைகளை நீபெருவாய்
அமிழ்தான நற்றமிழில்
அவர்களுக்குப் பெயரிடுவாய்
பழுதான நம்வாழ்வின்
பாழ்நீக்க வந்தவளே
அமிழ்தான செந்தமிழே
அன்னையே கண்ணுறங்கு!
நமக்கென்று நாடுமில்லை
நாமுயர்த்தக் கொடியுமில்லை
நமக்கென்று அரசுமில்லை
நாமறைய முரசுமில்லை
தமக்கென்று வாழுகின்ற
தலைகளை வீழ்த்திவிட்டு
நமக்கென்று வாழவந்த
நல்லவளே கண்ணுறங்கு! (கண்ணுறங்கு)
கீழ்த்திசையில் தனிஈழம்
கீழறுப்பில் வீழ்ந்ததடி
மேல்வடக்கில் நதிநீரோ
மேல்மடையில் நின்றதடி
சுற்றிச்சுற்றிப் பகைவளர்ந்து
முற்றியிங்கு நிற்குதடி
வெற்றிகொள்ளும் வீரமுடன்
விடியலே கண்ணுறங்கு!
தங்கத்தமிழ்த் திருநாட்டின்
தன்மானம் மீட்பதற்கு
வங்கக்கடல் பேரலையாய்
வந்தவளே கண்ணுறங்கு
சங்கறுத்த மணிவளையே!
சந்தனத்து மலைமகளே!
பொங்குதமிழ்ப் பண்ணிசையே!
பூமகளே கண்ணுறங்கு!

More articles by பாவலர் வையவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.