தமிழர்தம் தாய்மொழியின் சிறப்பை ஓரார்!

     தாழ்ந்துகிடக் கின்றதுநம் தமிழெbன் றோர்வீர்!

தமிழினமே அடிமைப்பட் டுளதால் நம்தாய்த்

     தமிழுக்கும் உயர்வில்லை! அடடா! இங்கு

தமிழர்க்குத் தலைவரென வாய்த்தோர் எல்லாம்

     தம்நலத்தைப் பேணுவதில் குறியாய் உள்ளார்

அமிழ்தமிழ்து தமிழென்போம்! ஆனால் அந்த

     அமிழ்தையிவன் பருகுவதை மறந்தே போனோம்!

ஆங்கிலனுக் கடிமையென ஆகும் முன்பே

     ஆரியரின் வடமொழியே மேலென் றெண்ணித்

தாங்கியதால் நம்மொழிதாழ் வுற்றுப் பின்னர்

     சாம்நிலைக்கே போய்விட்ட நிலைகண் டுள்ளோம்!

ஆங்கிலனே வெளியேறிப் போன பின்னர்

     அம்மொழியின் ஆதிக்கம் இருக்க லாமா!

தூங்கியது போதுமடா தமிழா! வையம்

     தொலைதூரம் போகப்பின் தங்கி விட்டோம்!

தமிழரைப்போல் இழிந்தவினம் பாரில் இல்லை!

     தாய்மொழியென் பதைமுற்றாய் மறந்துவிட்டுத்

தமிழைவிடுத் தயன்மொழியாம் ஆங்கி லத்தில்

     தமிழ்கலந்து பேசுபவர் அதிகம்! இந்தத்

தமிழரைநாம் எவ்வாறு திருத்தக் கூடும்!

     தமிழ்நாட்டைத் தமிழரவர் ஆளுங் கால்நம்

தமிழ்மெல்லச் சாகாமல் விரைவாய்ச் சாகும்!

     தமிழ்காக்கத் திறனில்லா நாம்வாழ்ந்த தென்னாம்!

தமிழ்தமிழென் றேபேசிக் கொண்டி ருந்தால்

     தளையொடித்து விடுபடுதல் தள்ளிப் போகும்!

தமிழரெலாம் வெவ்வேறு கட்சி கண்டு

     தனித்தனியாய் இயங்குவது பயன்த ராது!

தமிழர்நலன் கருதியினி இணைய வேண்டும்!

     தமிழ்நாட்டைத் தமிழர்தாம் ஆள்தல் வேண்டும்

தமிழருக்குத் தலைவரென இருப்போரைநாம்

     தனித்தமிழ்நாட்டைப் படைக்க வேண்டுகின்றோம்!

- மருதநாடன், திருச்சி

Pin It