தேசிய மாநாட்டுக் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அதிகாரம் கிடைப்பதற்காகத் தொடர்ந்து போராடுவோம் என்று, தேசிய மாநாட்டுக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காஷ்மீர் விவாகரத்துக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்றும், அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டம் ஸ்ரீநகரில் 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடை பெற்ற இக்கூட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கியப் பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, செயல் தலைவர் ஒமர் அப்துல்லா உள்ளிட் டோர் அதற்குத் தலைமை வகித்தனர்.

அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இறுதியில் சில தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீரை பிளவுப்படுத்த முயலும் சக்தி களுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநிலத்தில் உள்ள மக்களுக்கு இருக்கும் அரசியல் சாசன உரிமைகளையும், இறையாண்மையையும் தடுக்கும் அவர்களது நடவடிக்கைகள் ஏற்புடையது அல்ல.

தற்போது காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சலு கைகளை சிறப்பு அந்தஸ்தாகக் கருத இயலாது. முதன் முதலில் வகுக்கப்பட்ட உண்மையான 370-ஆவது பிரிவின் அடிப்படையில் அந்த அந்தஸ்து கிடைக்கப் பெறவேண்டும்.

அதேபோன்று மாநிலத்துக் சுயாட்சி அதிகாரமும் வழங்கவேண்டும். அந்த இலக்குகளை வென்றெடுக்க தேசிய மாநாட்டுக் கட்சி அயராது தொடர்ந்து பாடுபடும்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும். அனைத் துத் தரப்பினருடனும் பேசி இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் தலைவரானார் ஃபரூக்

தேசிய மாநாடுக் கட்சியின் தலைவராக ஃபரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இது தொடர் பாக கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்ட போது, அதை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பேசிய ஃபரூக் அப்துல்லா, ‘வயோதிகம் காரணமாக தலைவர் பதவியை என்னால் வகிக்க முடியாது என்றும் ஒமர் அப்பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தேன்; ஆனால் அதை ஒமர் ஒப்புக்கொள்ளவில்லை; என்றாவது ஒருநாள் அப்பொறுப்புகளை அவர் ஏற்றுக் கொள்வார்’ என்றார்.

 நன்றி : தினமணி, 30.10.2017

Pin It