“கன்னடமாம்
களி தெலுங்காம்
சேர நன்னாடாம்”
“வடவேங்கடம்” எப்பொழுது
தமிழ்கூறு நல்லுலகிலிருந்து
கழன்று போனதோ
அப்பொழுதே தொடங்கியது
ஆண்ட தமிழனுக்கு
அழிவும் அரசியல் சுரண்டலும்
சிங்களத் தேசத்திற்குப் போட்டியாய்
தமிழினத்தை அழிப்பதற்கு
அண்டை மாநிலங்களும்
அணிவகுத்து நிற்கின்றன
அண்டை நாடுகளும் அவனுக்குத்
துணைநின்றன
எதிர்த்து நின்றவர்களைவிட
கூடிக்கெடுத்தவர்கள் ஏராளம்!
காவிரியில் நீர்விடாமல்
கன்னடன் அட்டூழியம்!
முல்லைப் பெரியாறு
இருக்கட்டும்
அட! கண்ணகி கோவிலைப்
பார்க்கவிடாமல்
கதவைச் சாத்துகிறான்
கேரளன்
ஆந்திர தேசமும்
தன் பங்கிற்குத் தொடங்கிவிட்டது
ஈவிரக்கமற்ற
இனப் படுகொலையை!
நாலாப் பக்கமும்
உதைகளை வாங்கிக் கொண்டு
நடிகர்களை இன்னமும்
நம்பிக் கொண்டிருக்கிறான்
தமிழன்
“மரம் வெட்டினானாம்”
சரி!
வெட்டியவர் இருபதுபேரை
நிற்கவைத்துச் சுட்டுக்கொன்றீர்கள்!
இருக்கட்டும்!
வெட்டச் சொன்னவனின்
ஒரு மயிரையும் புடுங்கவில்லையே
ஆந்திர அரசு!
எப்படியோ
அடுத்த தேர்தலுக்கு
அச்சாரம் போட்டுவிட்டது
ஆந்திரக் காவல்துறை
கட்சிக்காரங்க
அரசியல் பண்ணுங்க!
சினமாக்காரங்க இத வச்ச
அடுத்த படத்திற்கு
‘ரூம் போட்டு டிஸ்கஸ்’ பண்ணுங்க!
மத்தவங்க எல்லாம்
பணத்தைக் கொண்டுபோய்
திருப்பதி உண்டியலில் கொட்டி
மானத்தையும் மயிரையும்
மழித்துக் கொண்டு
‘மொட்ட அடிச்சு
நாமம் சாத்திக்குங்க’
எல்ல்ல்லாம் சரியாப் போயிடும்!
புரட்சிகரமான
புரட்டாசி முடிந்து
கறிக் கடைகளெல்லாம் இப்போதுதான்
களைகட்ட ஆரம்பித்திருக்கின்றன
இன்னும் ஆயிரம்
பெரியார்கள் பிறந்தாலும்
பாவாணர்கள் பெருஞ்சித்திரனார்கள்
பிரபாகரன்கள் பிறந்தாலும்
தமிழனுக்குச் சொரணை வராதோ!
“தமிழரின் இன உணர்ச்சிக்குக்”
கோவிந்தாஆஆஆ...
கோஓஓஓ...விந்தாஅ!