ஒல்லிய உருவம்! சிரித்த முகம்! ஈழத் தந்தை செல்வாவின் 5-12-1976 இலங்கை நாடாளுமன்ற உரையை நேரில் கேட்டு மாந்தியவர்; ஈழ விடுதலைப் போரில் தம்முடன் கைது செய்யப்பட்ட தன் தோழர் டாக்டர் இராஜசுந்தரம், சிங்களக் காடையரால் 27-7-1983இல் அடித்துக் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவர் - தான் கொல்லப்படுவதிலிருந்து ஒரு கணத்தில் உயிர் தப்பியவர் - தமிழீழத் தமிழர் விடுதலைப் போருக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் - 1983 முதல் ஈழ அகதியாகத் தமிழகத்தில் வாழ்ந்த போதும் தன் உழைப்பை நம்பி வாழ்ந்தவர் - தமிழகத்தில் ஒரு ஈழப் போராளிக் குழுவினரால் பணத்துக்காகக் கடத்தப்பட்டுக் கொல்லப்படுந் தறுவாயில் இன்னொரு குழுவினரால் மீட்கப் பட்டு உயிர் பிழைத்தவர், நம் ச.அ. டேவிட் அவர்கள்!

“நாம் ஒன்று, சிங்களவர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறவேண்டும்; அல்லது கூண்டோடு செத்துமடிய வேண் டும்” எனத் தமிழீழத் தந்தை செல்வநாயகம் இலங்கை நாடாளுமன்றத்தில் 5-12-1976இல் முழங்கியதை நேரில் கேட்டு, அதன்வழி விடுதலை உணர்ச்சி பெற்றவர் நம் ச.அ. டேவிட்!

அவர், பல இலக்கம் தமிழீழ அகதிகளுள் ஒருவராகத் தமிழகத்தில் 1983இல் கால் பதித்தவர்.

அவர் தமிழகம் வந்தவுடன், “தமிழன்” என்ற பெய ருள்ள ஒரு தமிழ்த் திங்கள் இதழைத் தம் சொந்தப் பொறுப்பில் வெளியிட்டுத் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு திரட்டியவர்.

அவருக்கும் எனக்கும் 1991இல் பெரியார் அச்சிடுவோர் குழுமத்தில் அறிமுகம் ஏற்பட்டது. இ.பி.ஆர்.எல்.எஃப். வரதராசன், பத்மநாபன் குழுவினர் எங்கள் அச்சகத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்த நேரம் அது!

இராஜீவ்காந்தியால் ஈழத்துக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை ஈழத்தை விட்டு வெளியேறி, இந்தியாவுக்குத் திரும்பிய நேரமது.

இந்திய அரசு வெளிப்படையாகத் தமிழீழ விடுதலைக்கு எதிராக எல்லாம் செய்த இக்கட்டான நேரம்! இந்திய அரசின் சொற்படித் தமிழக அரசு செயல்பட்ட கேடான நேரம் அது!

என் சொந்த உணர்வு, 1981 நவம்பர் முதற்கொண்டு, “தமிழகத்தில் தமிழரை வழிநடத்தத் திராணி உள்ள தலைவர் எவரும் இல்லை; இல்லை. இப்படிப்பட்ட தமிழக அரசியல் தலைவர்களை, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் நம்புவதும், நாடுவதும் தவறு; மாபெருந்தவறு” என்று, 8.11.1981இல் பெரி யார் திடலில் நான் இடித்துக் குறிப்பிட்ட அந்த நிலைப்பாட்டி லிருந்து மாறிவிட, 1991லும் தக்க முகாந்திரம் எமக்குக் கிடைக்கவில்லை.

“தமிழக அரசு இந்தியாவுக்கு அடிமை; தமிழகத் திராவிடத் தலைவர்கள் தில்லிக்கு அடிமை. இந்த அடிமைகளின் பரிந்துரை இந்திய அரசை அசைக்காது; இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஈழத் தமிழர் விடுதலை ஏன் என்பதன் உண்மையை உணர்த்தாது; உணர்த்தவில்லை. நானும் நீங்களும் 6 மாதம் வடக்கே பயணிப்போம்; பஞ்சாப், அசாம், தில்லி, பீகார் முதலான மாநிலங்களுக்குச் செல்வோம். வட இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செய்தி ஊடகத்தார் ஆகியோருக்கு ஈழத் தமிழர் யார், இலங்கை இந்தியத் தமிழர் யார் என்பதைப் புரிய வைப்போம்! இதற்கு ஆவன செய்யுங்கள்” என, 1991 நவம்பரில் டேவிட் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.

அவராலும், என்னாலும் அது முடியவில்லை.

பின்னும் 3 ஆண்டுகள் கழித்து, 1994 செப்டம்பரில் அவரும், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும் கூட்டாக முதலீடு செய்து, 1994 அக்டோபரில் பெரியார் ஈரா (Periyar Era) என்கிற ஆங்கில மாத ஏட்டைத் தொடங்கினோம்.

இந்திய அரசு அமைச்சர்கள், இந்தியாவிலுள்ள அயல் நாட்டுத் தூதுவர்கள், சில இந்தியத் தலைவர்கள் - இங்கிலாந்து, கனடா, நார்வே, அமெரிக்கா முதலான அயல்நாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் போராளிகள் என, மாதம் ஒரு 300 படி களை 15 ஆண்டுகள் தொடர்ந்து விடுத்தோம். எவரிடமிருந்தும் எந்த ஆதரவும் கிட்டவில்லை; எந்த எதிர்வினையும் இல்லை.

இந்நிலையில், என் விருப்பத்தை அரைகுறை மனதோடு ஏற்று, 2003 ஆகத்து “பெரியார் ஈரா” இதழில், “A Draft Model Constitution for Federal Sri Lanka” - ‘இலங்கைக் கூட்டாட்சிக்கான அரசமைப்புச் சட்ட வரைவு’ என்ற ஓர் ஆவணத்தை ச.அ. டேவிட் அவர்கள் பெயரில் வெளியிட்டோம்.

பிறகு, “2010இல் ஈழ விடுதலை நிலை - எப்படி இருக்கும்?” என்ற ஒரு கட்டுரையை, இலண்டன் சிவநாயகம் விருப்பப்படி, ச.அ. டேவிட் அவர்களை எழுதச் செய்து, அதையும் “பெரியார் ஈரா”வில் வெளியீடு செய்தோம்.

2005 சூன் திங்களில் நான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளில் 14 நாள்கள் - தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பயணித்தேன். கொழும்பு, கண்டி, மலையகத் தமிழர் பகுதிகளில் 14 நாள்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தோழர்களுடன் பயணித்தேன்,

2.6.2015 மாலை கிளிநொச்சியில் ஈழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், தமிழேந்தி; 7-6-2015இல் தமிழ்ச்செல்வன், புலித்தேவன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் ஆகியோரைக் கண்டு பேசினேன். சிங்களப் பேராசிரியர் உயங்கொடா, கண்டியில் நெடுஞ்செழியன் அந்தணி ஜீவா மற்றும் இலண்டன் சிவநாயகம் ஆகியோ ரையும் கண்டுபேசினேன். அங்கே இருந்த உண்மையான களநிலைமை ஈழவிடுதலைக்கு ஊக்கம் தருவதாக இல்லை என்பதைக் கண்டு மனம் நொந்தேன்.

தமிழகத்துக்கு வந்த மூன்றே மாதங்களில், என் ஈழப்பயணம் பற்றிய கருத்தை ஒரு நூல் வடிவில் தமிழில் எழுதி 2005 செப்டம்பரில் வெளியிட்டேன்.

அதற்கு முன்னரே, தோழர் ச.அ. டேவிட் அவர்கள் 1994 முதல் 2004 வரை ஈழவிடுதலை பற்றி “பெரியார் ஈரா”வில் ஆங்கிலத்தில் எழுதிய பல கட்டுரைகளைத் தொகுத்து, 2004 நவம்பரில், “TAMIL EELAM FREEDOM STRUGGLE - தமிழீழ விடுதலைப் போர்” என்னும் ஒரு நூலை, அன்னாருடைய சொந்தச் செலவில் வெளியிட்டார். இந்நூலை உலகின் பல பகுதிகளில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர்களுக்கு அவருடைய சொந்தச் செலவில் விடுத்தார். இப்படிப்பட்ட எங்கள் முயற்சி எதுவும், எந்த எதிர் வினையையும் எவரிடத்தும் உண்டாக்கவில்லை. ச.அ. டேவிட் அவர்கள் தம் சேமிப்பில் ஒரு பகுதியை, “பெரியார் ஈரா”வுக்குச் செலவிட்டார். அவரோடு பழகிய ஈழத் தமிழர் சிலரும், தமிழகத் தமிழர் சிலரும் அவரிடம் கடன்பெற்றும், அவரை ஏமாற்றியும் அவருடைய சேமிப்பைக் கரைத்துவிட்டனர்.

இத்தனை பொருள் இழப்புகளுக்கு அவர் ஆளானார். யாரிடமும் மனம் விட்டுப் பேசாமல், சென்னை, புழல் காவாங்கரையில், ஈழத் தமிழ் அகதிகள் குடியிருப்பில், அழகிரி தெரு 23ஆம் எண் வீட்டில் தங்கியிருந்த ச.அ. டேவிட் அவர்களை, 2015 மே 25இல் நானும், அண்ணா நகர் தி.மு.க. தோழர் மு.நடராசனும் - நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்டு அளவளாவினோம்.

மீண்டும் 19-9-2015 அன்று அவரைக் காண அங்குச் சென்றோம். அதன் பதிவு கீழே உள்ளது.

மூன்று ஆண்டுகள் சந்திக்கத் தவறிய நிலையில், நானும் தி.மு.க. தோழர் அண்ணா நகர் மு. நடராசனும், புழலை அடுத்த காவாங்கரையில், அழகிரி தெரு 23ஆம் எண் வீட்டில் 25-5-2015 பிற்பகல் 3 மணிக்கு ச.அ. டேவிட் அவர்களைக் கண்டோம். உடல் நலிந்தும் மெலிந்தும் படுத்திருந்த 92 அகவையை எட்டிய அப்பெருமகனார் மகிழ்ச்சி யுடன் உரையாடினார்.

தன்னை இலங்கைக்கு அழைத்துப் போகத் தன் தங்கையின் மகள் முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

மீண்டும் அன்னாரைப் பார்க்க விரும்பி, அவர் தங்கி யிருந்த வீட்டுக்கு 19.9.2015 பகல் 12 மணிக்குச் சென்றோம். அவர் அங்கு இல்லாதது கண்டு, அத்தெருவாரிடம் உசாவினோம்.

அதே தெருவில் 21ஆம் வீட்டிலிருந்த பிரான்சிஸ் அடைக்கலராஜின் துணைவியார் மேரி ஓடோடி வந்து, தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அமர வைத்து, டேவிட் அவர்கள் கடந்த சூலை வரை பட்ட துன்பங்களையெல்லாம் விவரித்துச் சொன்னார். அவர் விரும்பியபடி உணவு, தேநீர், மாம்பழம் இவற்றை மகிழ்ச்சியுடன் தந்து அவரைப் போற்றியதைக் கூறினார்.

டேவிட் அவர்கள், சூலை இறுதியில், கண்ணீர் மல்க அத்தெருவாரிடம் விடைபெற்றுச் சென்றதையும், இலங் கையை அடைந்தவுடன் தன்னுடன் தொலைப்பேசியில் அவர் பேசியதையும் மனநெகிழ்ச்சியுடன் கூறினார்.

இலங்கைக்குப் போன பிறகு, நடக்கும் போது தவறிக் கீழே விழுந்துவிட்டதாகவும், அதனால் சற்று உடல் நிலை கெட்டிருப்பதாகவும் அவரது தங்கையின் மகள் கூறியதாகவும் மிகப் பொறுப்புடன் கூறினார்.

மேரி அவர்கள் படிக்காதவர், எனவே டேவிட் அவர் களின் இலங்கை தொலைப்பேசி எண், வீட்டு முகவரி எதையும் அவர் குறித்து வைக்கவில்லை. கனத்த நெஞ்சுடன் இருவரும் மீண்டோம்.

92 அகவை நிரம்பப் போகும் டேவிட் அவர்களைத் தமிழகத் தமிழர்கள் போற்றத் தவறிவிட்டோம்.

ஈழத்தந்தை செல்வநாயகத்தைத் தலைவராக ஏற்று, அவர் விரும்பியவாறு தமிழீழ விடுதலையை வென்றெடுக்கப் பாடுபட்ட ஒரு பேரறிவாளர் - ஈடுஇணையற்ற விடுதலைப் போராளி - கற்றறிந்த அரசியல் மேதை - ஆங்கில மொழி வல்லுநர் மறைந்த நம் ச.அ. டேவிட் அவர்கள், 91 ஆண்டு கள் 6 மாதங்கள் - ஈழத்திலும், உலகின் பல நாடுகளிலும், தமிழகத்திலும், இறுதியாகத் தாம் பிறந்த இலங்கையில் இரண்டு மாதங்களும் துன்பங்களின் கொள்கலனாக வாழ்ந்து, 11-10-2015 ஞாயிறு அன்று, இலங்கையில் ஓர் முதியோர் இல்லத்தில் மறைந்துவிட்டார் என்கிற துன்பச் செய்தி நம் நெஞ்சை உலுக்கிவிட்டது.

ச.அ. டேவிட் அவர்களின் தமையனார் அயல்நாட்டில் நலமாக உள்ளார். தம் இளவலை இழந்து துன்புறும் அப்பெருமகனாருக்கும், அவர்களின் தங்கை, தங்கையின் மக்கள் மற்றும் எண்ணற்ற தமிழீழ விடுதலைப் போராளிகள், தமிழகத் தமிழர்கள் ஆகிய அனைவர்க்கும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பிலும், என் குடும்பத்தார் சார்பிலும், என் சார்பிலும் மனங்கசிந்த இரங் கலையும் இறுதி அஞ்சலியையும் உரித்தாக்குகிறேன்.

வாழ்க! வாழ்க! ச.அ. டேவிட் புகழ்!

14-10-2015          - வே.ஆனைமுத்து

Pin It