திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப் பெரியாரைப் பின்பற்றியவர்; தன் வாழ்நாள் முழுதும் ஒரே தலைவன் ஒரே கட்சி என்று வாழ்ந்தவர். மலை குலைந்தாலும் மனம் குலையாத கொள்கை மறவன். சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்கு! சாதி, மத, மூட நம்பிக்கைகளை எதிர்த்துத் தினம் மேடையமைத்துப் பரப்புரை செய்துவந்தவர்.

somaskhandhan 350புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன்-கண்ணம்மா இணையருக்கு 23-06-1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்துவிட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள வாவிடை மருதூர் கிராமத்தில் வளர்ந்தார் மதுரையில் உள்ள பசுமலை அமெரிக்கன் உயர் நிலைப்பள்ளியில் இறுதிவகுப்பு வரை பயின்றார்.

முதலாம் உலகப் போரின் போது, 1914-1918 தனது முன்னோர்களைப் பின்பற்றி இராணுவத்தில் சேர்ந்து பணிபரிந்தார்.இராணுவப் பணியின் போது மெசபடோமி யாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பிரிட்டிஷ் இராணுவத்தினர் இந்தியப் படை வீரர்களைத் தவிக்க விட்டு விட்டு இங்கிலாந்து சென்றுவிட்டனர். அழகிரி, கவலைப்படாமல் கடல்வழியாகக் கல்கத்தா வந்தடைந்தார். கல்கத்தாவில் சிறிது நாள்கள் தங்கிவிட்டு, தனது சித்தப்பா வேணுகோபால் நாயுடு இல்லம் சென்று தங்கினார். அகவை 20 இல், தனது அத்தை மகள் எத்திராஜ் என்பவரை 1920 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண் மக்களும் மூன்று பெண்மக்களும் அவர்களுக்குப் பிறந்தனர்.

பெரியார் சுயமரியாதை இயக்கம் காண்பதற்கு முன்னரே, பட்டுக்கோட்டையில் அழகிரிசாமி அவர்கள் சுயமரியாதைச் சங்கம் நிறுவிச், சாதி சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்துச் சொற்பொழிவுகள் ஆற்றிப் பெரியாரின் கருத்து களை மக்களிடையே ஆக்கத்தோடும் ஊக்கத்தோடும் பரப்பி வந்தவர்.

தில்லை நடராசனையும் சீரங்கநாதனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ? என்று முதன் முதலில் முழங்கியவர் அஞ்சாநெஞ்சர்தான். பின்னாளில் அவ்வரிகளைக் கலைஞர் பேசியதாகத் தவறாகக் கூறினர். இது போன்ற பேச்சுக்களால் அந்நாளில் அழகிரிசாமி கல்லடிகளையும் சொல்லடிகளையும் பரிசாகப் பெற்றார்.

சேரன்மாதேவி குருகுலம்

பட்டுக்கோட்டைக் கூட்டுறவுச் சங்கமொன்றில் எழுத்தராகப் பணியில் அமர்ந்தார். 1925 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் அளிக்கும் கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கருத்தை ஏற்று வ.வே.சுப்பிரமணிய ஐயர் (வ.வே.சு.ஐயர்) சேரன்மா தேவி என்ற ஊரில் தேசியக் கல்வி நிலையம் (குருகுலம்) ஒன்றை நிறுவினார். அப்பொழுது தமிழ்மாநிலக் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தவர் பெரியார்.

குருகுலத்திற்குப் பொதுமக்கள் நிதி உதவினர். காங்கிரஸ் உரூபாய் 10,000/ நிதி வழங்க ஒப்புக்கொண்டது. முதல் தவணையாக உரூபாய் 5,000/- க்குக் காசோலை வழங்கினார் பெரியார்.

அந்தக் குருகுலத்தில் வர்ணாசிரம தர்மம் கடை பிடிக்கப்படுகிறது  என்று பெரியார் அவர்களுக்குச் செய்தி கிடைத்தது; சீற்றம் கொண்டார். குருகுலத்திற்குத் தரவேண்டிய உரூபாய் 5,000/- தர இயலாது என்று பெரியார் கூறிவிட்டார். ஆனால், இன்னொரு பார்ப்பனச் செயலாளரிடம் காசோலையைப் பெற்றுக் கொண்டார் வ,வே.சு,ஐயர்.

பெரியார் இதனால் வெகுண்டெழுந்து குருகுலத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். காந்தியாருக்குச் செய்தி அறிவிக்கப் பட்டது. ஓரு சாரார் மற்றவர்களோடு கலந்து அமர்ந்து உணவு உண்ண விரும்பவில்லை என்றால் அவர்களின் அந்த உணர்வினை மதித்திடவேண்டும் என்ற காந்தியாருடைய கருத்து 12 மார்ச் 1925 அன்று “இந்து” பத்திரிக்கையில் வெளியாயிற்று. பெரியார் அதனால் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தினார்.

இந்நிலையில், பிராமணரல்லாத மாணவர், பிராமண மாணவர்க்கென வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பானை யிலிருந்து தண்ணீர் அருந்தினார் என்று அந்த மாணவ ரைக் குருகுலக் காப்பாளர்கள் அடித்து விட்டனர் அதனை அறிந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமி குருகுலத்தை எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்.

சுயமரியாதை எல்லோர்க்கும் வேண்டும்

1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் அழகிரிக்கு இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பதவி வாய்த்தது. பசுமலையில் போர் ஆதரவுக் கூட்டங்களில் போருக்கு ஆதரவாய்ப் பேசாமல் சுயமரி யாதை இயக்கப் பிரச்சாரம் செய்தார். அவரின் எதிரிகள் சென்னை ஆளுநருக்கு அழகிரி தன்னுடைய பதவியை முறைகேடாகப் பயன்படுத்து கின்றார் என்று  முறையீடு செய்தனர். ஆளுநர் ஆய்வு செய்திட வந்தார். நீர் போர்ப் படைக்கு ஆள் தெரிந்தெடுக்காமல், கட்சிப் பணி புரிவ தாகக் குற்றம் சாட்டியுள்ளனரே என்று வினவினார். அதற்கு அழகிரி, என் பேச்சால் இராணுவத்தில் இளை ஞர்கள் சேர்கின்றார்களா என்று மட்டும் பாருங்கள். என் கட்சிப் பணியைப் பற்றிக் கவலை தங்களுக்கு வேண்டுவ தில்லை, என்றார். ஆளுநர், உங்களை எச்சரித்து அனுப்புகின்றேன், என்றார். அழகிரி அதற்கு, நான் தவறேதும் செய்யவில்லை. தங்கள் மன்னிப்போ, எச்சரிக்கையோ தேவையில்லை. இந்த வேலையும் வேண்டாம், என்று கூறிவிட்டுப் பணியிலிருந்தும் விலகிவிட்டார்; காரணம் சுயமரியாதை உணர்வு.

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில், புகழ் பெற்ற நாதசுவர இசைக் கலைஞர் சிவக்கொழுந்து அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது; இசைக்கலைஞர் தோளில் துண்டு அணிந்து கொண்டிருந் தார். அதனைக் கண்ட ஆதிக்கச் சாதியினர், ‘சிவக்கொழுந்து தோளிலுள்ள துண்டை எடு’ என்று கோபக்குரலில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இசைக்கலைஞர் சாதிய அமைப்பில் கீழ்ச் சாதியைச் சார்ந்தவர்; மேல் சாதியினர் முன்னிலையில் கீழ்ச் சாதியினர் தோளில் துண்டு அணிதல் கூடாது என்பது சனாதன தர்மம்; ஆதலின் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆங்கே கூட்டத்தில் இசையைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்த பட்டுக்கோட்டை அழகிரி, நீங்கள் தோளில் போட்டுள்ள துண்டை எடுக்கவேண்டாம்; எவர் என்ன செய்கிறார் என்று நான் பார்க்கிறேன்; நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள், என்று சிம்மம் எனக் கர்ஜித்தார். அழகிரியின் தோற்றமும் குரலில் இருந்த உறுதியும் சாதிவெறிக் கும்பலை அடக்கிற்று.

பெரியார் காங்கிரஸிலிருந்து விலகல்

1925 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் சென்னை மாகாண காங்கிரசு மாநாடு திரு.வி.க. தலைமையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் பெரியார் வகுப்பு வாரித் தீர்மானம் கொண்டு வந்தார்.

‘தேசிய முன்னேற்றத்துக்கு இந்து சமூகத்தாருக்குள் பற்பல சாதியாருக்குள் பரஸ்பரம் நம்பிக்கையும் துவேச மின்மையும் ஏற்பட வேண்டுமாகையால் ராஜ்ய சபை களிலும் பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமண ரல்லாதார், தீண்டாதார் எனக் கருதப்படும், இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத் தொகை விழுக்காடுக்கு ஏற்பத் தங்கள் தங்கள் சமூகத்திலிருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டும்’ என்பதுதான் அந்தத் தீர்மானம்.

வகுப்புவாரித் தீர்மானத்தைக் காங்கிரசு மாநாட்டில் பெரியார் கொண்டுவருவது முதன்முறையன்று. 1920 திருநெல்வேலி மாநாட்டில் கொண்டு வந்திருந்தார். பொது நலனுக்குக் கேடுபயக்கும் என்று மாநாட்டுத் தலைவர் எஸ்.சீனிவாசய் யங்கார் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

1921 தஞ்சை மாநாட்டின் தலைவர் இராஜாஜி, கொள் கையாகக் கொள்வோம் தீர்மானம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

1922 திருப்பூர் மாநாட்டிலும் தீர்மானத்தை ஏற்க வில்லை என்றதும், சாதி வேற்றுமையை வலியுறுத்தும் மனுதர்மத்தையும், இராமயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று ஆவேசப்பட்டார். கலவரம் ஏற்பட்டு விஜயராகவாச்சாரியார் அடங்கிவிட்டார்.

1923 சேலம் மாநாட்டிலும் கலகமாகும் என்றதும் ஜார்ஜ் ஜோசப்பும், டாக்டர். நாயுடுவும் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

1924 திருவண்ணாமலை மாநாட்டில் பெரியார் தலைமை என்றபோதும், எஸ்.சீனிவாச ஐயங்கார் போன்ற தலைவர்கள் சென்னையிலிருந்து ஏராளமான உறுப்பினர்களைத் தருவித்துத் தீர்மானம் நிறை வேறாமல் தடுத்து விட்டனர்.

காஞ்சிபுரம் மாநாட்டிலும் திரு.வி.க தலைமையென்ற போதும் தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதிக்க வில்லை. பெரியாரின் கோபம் எல்லை மீறியது; காங்கிரசு பிராமணர் நன்மைக்காகச் செயல்படுகிறது. பிராமணர் ஆதிக்கத்திலுள்ளது. இனி பிராமணர் ஆதிக்கத்தையும் காங்கிரசையும் ஒழிப்பதே என் முதல் வேலை என்று கூறிவிட்டுக் காங்கிரசை விட்டுவிலகினார். அவருடன் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், சர்க்கரைச் செட்டியார், மணப்பாறை ரெ.திருமலைச் சாமி, டி.ஏ. இராமலிங்கச் செட்டியார், எஸ்.இராம நாதன் உள்ளிட்ட பலரும் காங்கிரசைவிட்டு விலகினர்.

1926 ஆம் ஆண்டில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

குடியரசு எனும் வார ஏட்டின் மூலம் பகுத்தறிவுச் சுடர் விடும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வெளிவந்தன. ப. ஜீவானந்தம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, சௌந்திர பாண்டியன், குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார், சிங்காரவேலர், கைவல்யசாமி, எஸ்.இராம நாதன் போன்ற பலர் பெரியாருக்குத் துணையாக நின்று சுயமரியாதைக் கருத்துகளைச் சூறாவளி வேகத்தில் தமிழகத்தில் பரப்பி வந்தனர்.

ரிவோல்ட் என்ற ஆங்கில இதழைப் பெரியார் 7-11-1928 அன்று (அன்று இரசியப் புரட்சி நாள்) தொடங்கி நடத்தினார். பெரியாரும், எஸ்.இராமநாதன் எம்.ஏ.,பி.எல் அவர்களும், எஸ். குருசாமியும் அதன் ஆசிரியர்களாக இருந்தனர். ஆசிரியர் குத்தூசி எஸ்.குருசாமி அவர்களை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டுத் திரும்பினார். அந்த வழக்கு நீதி மன்றம் சென்றது. அந்த வழக்கில் அழகிரிக்காக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வழக்கறி ஞராக வழக்கினை நடத்தினார்.

தமிழகத்தில் 28-5-1928 இல் பெருத்த எதிர்ப்பு களிடையே முதல் சாதி மறுப்புச் சுயமரியாதைத் திருமணத்தைப் பெரியார் நடத்திவைக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ விசுவநாத னும், சிதம்பரம் என்.தண்டபாணியும் உறுதுணை யாக இருந்தனர்.

செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு

17-2-1929 அன்று செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது அம்மாநாட்டில் பி.டி.இராஜன் மாநாட்டுக் கொடியை ஏற்றினார். முதலமைச்சர் டாக்டர்.சுப்பராயன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பட்டிவீரன்பட்டி டபிள்யூ. பி.ஏ.சௌந்திரபாண்டியன் தலைமையில் மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் ஈ.வெ.ரா.நாகம்மையார், ஆர்.கே. சண்முகம், எஸ்.இராமநாதன், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  ஆகியோர் உரையாற்றினர். இந்த மாநாட்டில் பட்டுக் கோட்டை அழகிரிசாமி எழச்சியுரையாற்றினார். இம் மாநாட்டிற்குப் பின் பல கலப்புத் திருமணங்களும், விதவைத் திருமணங்களும் நடைபெற்றன. அந்தத் திருமணங்கள் சீருடனும் சிறப்புடனும் நடந்திட அஞ்சா நெஞ்சர் அழகிரி உறுதுணையாக இருந்து வேண்டும் ஏற்பாடுகளைச் செய்தார்.

திருவாரூரில் இந்தித் திணிப்பை எதிர்த்து அஞ்சா நெஞ்சன் சிம்மம் எனக் கர்ஜித்தார். இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் தமிழர்களே என்று இடியின் ஓசையை மிஞ்சும் பெருங்குரலெடுத்து உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். பேசி முடித்ததும் குருதி கக்கி மயங்கி விழுந்தார். அடி வயிற்றிலும், விலாவிலும் தாங்கமுடியாத வலியில் துடி துடித்தார். அங்கே நின்றுகொண்டு அவரது உணர்ச்சியைத் தூண்டும் சொற் பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த சிறுவன்,எதனால் இப்படி இவர் துடி துடிக்கிறார்? துன்பப்படுகிறார்? ஏன்? என்று வினவினார். அவர் நோயாளி என்றனர் கூடியிருந்தோர் நோயாளியான இவர் ஏன் இப்படிக் கத்திப் பேசவேண்டும் என்று கேட்டான் அந்தச் சிறுவன். சிறுவனின் வினா அழகிரி யின் செவியில் விழுந்துவிட்டது. அந்தச் சிறுவனை அன்போடணைத்து, தம்பி, என்னைவிட இந்த நாடு நோயாளியாக இருக்கிறது! டாக்டருக்கு காய்ச்சல் என்பதற்காக மிகவும் மோசமாக நோய் கண்டவனைக் கவனிக்காமலிருக்க முடியுமா?அது போலத்தான் நான் பணியாற்றுகிறேன் என்றார் அஞ்சா நெஞ்சர். பக்கத்தில் நின்று கேள்வி கேட்டச் சிறுவன் சிந்திக்கலானான். அவர் தான் பின் நாளில் கலைஞர் கருணாநிதி என அறியப் பட்டவர். திருவாரூர் நிகழ்வுக்குப் பின்னர் தோழர் பட்டுக்கோட்டை அழகிரி முழுமூச்சுடன் இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தின் தளபதியாக நடைப்பயணத்தை அடலேறு என வழி நடத்திச் சென்றார்.

இந்தி எதிர்ப்புப் போர்

1-8-1938 அன்று அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி தலை மையில்  திருச்சியருகிலுள்ள உறையூரிலிருந்து  தமிழர் படை அணிவகுத்து சென்னை நோக்கிப் பயணமாயிற்று. அந்த அணியில் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம் மையார், நகரதூதன் ஆசிரியர், மணவை. திருமலைச் சாமி, பாவலர் பாலசுந்தரம், திருப்பூர் மொய்தீன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

அழகிரிசாமி, சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளிப் பேச்சாளர். தனக்கென எதுவும் வேண்டாதவர். நாட்டுப் பணிக்கே தன்னை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டவர்.

அழகிரிக்குக் கோடையிடிப் பேச்சாளர் என்றொரு பெயரும் உண்டு. நெடிதுயர்ந்த உருவம், சுமார் 6 அடி உயரம். அதற்கேற்ற வாறு அகன்று விரிந்த மார்பு, நீண்ட நெடிய கைகள், இரணுவ நடை,  எளிய வாழ்க்கை. அவர் தலைமையில் தமிழர் பெரும் படை திருச்சி உறை யூரிலிருந்து சென்னை நோக்கி நடைப் பயணம் கிளம்பிற்று.

மூவலூர் இரமாமிர்தம் அம்மையார் சமூகச் சேவைக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்; பல நற்றொண்டுகள் ஆற்றியவர். விதவைத் திருமணங்கள் பலவற்றை நடத்தி வைத்தவர்; சுயமரியா தைக் கருத்துகளை பரப்புரையாற்றி வந்தவர்; அந்த அம்மையார் வழி நெடுக தமிழர் படைக்கான உணவி னைத் தயாரிக்கும் பணியினை ஏற்றுக்கொண்டார்.

‘நகர தூதன்’ ஆசிரியர் மணவை திருமலைச்சாமி அரசியல் கருத்துகளை நெஞ்சைத் தொடும் வண்ணம் எழுதும் ஆற்றல் பெற்றவர். அவரும் தமிழர் படைக்கு ஒரு தளபதியாகத் திகழ்ந்தார்.

இந்த இந்தி எதிர்ப்புப் படையினர் வழி நெடுகிலும் புரட்சிப் பாவேந்தர் எழுதிய இந்தி எதிர்ப்புப் பாடலை பாடிய வண்ணம் உற்சாகத்துடன் நடை பயின்றனர். அந்தப் பாடல்:

இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமாம் - நீங்கள்

எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!

செந்தமிழுக்கு தீமைவந்த பின்னும் இந்தத்

தேகம் இருந்தொரு லாபமுண்டோ?

விந்தைத் தமிழ்மொழி எங்கள் மொழி - அது

வீரத் தமிழ் மக்கள் ஆவி என்போம்!

இந்திக்குச் சலுகை தந்திடுவார் - அந்த

ஈனரைக் காறி உமிழ்ந்திடுவோம்!

இப்புவி தோன்றிய நாள் முதலாய் - எங்கள்

இன்பத் தமிழ் மொழி உண்டு கண்டீர்!

தப்பிழைத் தாரிங்கு வாழ்ந்த தில்லை - இந்தத்

தான்தோன்றி கட்கென்ன ஆணவமோ?

எப்பக்கம் வந்து புகுந்துவிடும்? - இந்தி

எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்?

அற்பமென்போம் அந்த இந்திதனை - அதன்

ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம்!

எங்கள் உடல் பொருள் ஆவியெலாம் - எங்கள்

இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம்!

மங்கை ஒருத்தி தரும் சுகமும்  எங்கள்

மாத்தமிழுக் கீடில்லை என்றுரைப்போம்!

சிங்கமென்றே இளங் காளைகளே - மிகத்

தீவிரங் கொள்வீர் நாட்டினிலே!

பங்கம் விளைந்திடல் தாய்மொழிக்கே - உடற்

பச்சை ரத்தம் பரிமாறிடுவோம்!

தூங்குதல் போன்றது சாக்காடு! - பின்னர்

தூங்கி விழிப்பது நம் பிறப்பு!

தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம் - உயிர்

தித்திப்பை எண்ணிடப் போவதில்லை!

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை

மாட்ட நினைக்கும் சிறைச்சாலை!

ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே - உயிர்

இவ்வுடலை விட்டு நீங்கும் வரை!!

சென்றவிடமெல்லாம் இந்தி எதிர்ப்பாளர்களை மக்கள் வரவேற்றனர். இந்தி ஆதரவுக் காங்கிரசார் எதிர்த்தனர். கல்லடியும் சொல்லடியும் நிறையவே தந்தனர்.

எனினும் எவரும் சோர்வு பெற்றாரில்லை! பாவேந்தர் இசைப் பாட்டால் சோர்வு நீங்கினர்; ஊக்கம் உற்றனர்; உணர்வு பெற்றனர்! காணும் ஊர் தோறும்  சிம்மக்குரல் அஞ்சாநெஞ்சரின் இந்தி எதிர்ப்புச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. கேட்ட மக்கள் உணர்ச்சிப் பிழம்பாயினர். இந்தி ஒழிக என்றும் தமிழ் வாழ்க என்றும் விண்ணதிர முழக்கமிட்டனர்.

எதிர்ப்போர் இல்லாமலா?

சிற்றூர் சாலை ஒன்றில் இந்தி ஆதரவு காங்கிரசார் செருப்புக்களைத் தோரணமாகக் கட்டி,  தமிழர் படையி னருக்கு வரவேற்புத் தந்தனர்-அவமானப்படுத்தினர். அந்த ஊரிலிருந்த தமிழ் உணர்வாளர்கள், அந்தச் செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிய முனைந்தனர். அஞ்சா நெஞ்சன் அவர்களைத் தடுத்து, அந்தத் தோர ணத்திற்கு முன் நின்று கொண்டு பேசத் தொடங்கினார்.

உனக்கும் எனக்கும் உரிமையான தமிழுக்கு வருகின்ற தீங்கை எதிர்த்து இந்த சுட்டெரிக்கும் வெய்யி லிலே பாதங்கள் கொப்பளிக்க நடைப்பயணம் செய் கின்றோம் தோழர்களே! நீங்கள் தோரணமாய் கட்டி யிருக்கின்ற செருப்புகளை எங்கள் மீது வீசியிருந்தால் அதை எங்கள் கால்களில் அணிந்து கொண்டு நடந்திருப் போம் என்று பேசத் தொடங்கினார். கூடியிருந்த நல் லுள்ளம் கொண்ட மக்கள்  அந்தத் தோரணத்தை அவிழ்க்க முனைந்தனர்..

அழகிரி அவர்களைத்தடுத்து, கட்டியவர்களே அவிழ்க் கட்டும் என்றார்.

இறுதியாக அழகிரி, இன்னும் சிறிது காலத்தில் செருப்புத் தோரணம் கட்டியோர் இறந்திடுவர்,  நானும் என் இயக்கத்தினரும் இறந்திடுவோம். வருங்காலச் சந்ததிகள் எங்கள் சமாதிகளைப் பார்த்து எங்கள் மரியாதைக்குரிய வாழ்வுக்கு வழி வகுத்தத் தொண் டர்கள் என்று மலர்  தூவி நன்றி செலுத்துவார்கள். ஆனால் செருப்புத் தோரணம் கட்டி எங்களை இழிவு செய்கிற தோழர்களே உங்களது சமாதிக்கு உங்கள் சந்ததியினர் கூட வரமாட்டார்கள். காக்கையும் கழுகும் தான் உங்கள் சமாதியில் எச்சமிட்டுவிட்டுப் போகும். என்று தன் சொற்பொழிவினை முடித்தார்.இதனைக் கேட்ட தோரணம் கட்டிய தோழர்கள் கண்ணீருடன் செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிந்துவிட்டு மன்னிப்புக் கேட்டனர்.அதுமட்டுமன்றி, தமிழர் படைக்குத் தேநீர் விருந்தும் நடத்தி வழியனுப்பி வைத்தனர்.

தமிழர் படையினர் சென்ற வழியெல்லாம் உள்ள சிற்றூர்களிலெல்லாம் இந்தி எதிர்ப்பு உணர்வை விதைத்துச் சென்றனர்.

அழகிரியின் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு நடைப்பயணம் 42 நாள்கள் தொடர்ந்தது; 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 11ஆம் நாள்  சென்னை நகர் வந்தடைந்தது. 234 ஊர்களைக் கடந்து 87 பொதுக் கூட்டங்களைச் சிறப்புடன் நடத்தி அந்தப் படை வந் திருந்தது. அவர்களை வரவேற்க சென்னை திருவல்லிக் கேணி கடற்கரையில் ஓர் இலக்கத்திற்கும் மேற்பட்டப் பொதுமக்கள் திரண்டிருந்தனர். கடற்கரையில் நடந்த பாராட்டு விழாவில் தந்தை பெரியார், மறைமலையடிகள்,  சோமசுந்தர பாரதியார், பி.டி இராஜன், டபிள்யூ.பி.ஏ. சௌந்தர பாண்டியன், அறிஞர் அண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கே பேசிய தந்தை பெரியார், தமிழ்நாடு தமிழருக்கே, என்று முழங்கினார்.

வடமாநிலங்களில் இந்து முஸ்லீம் போராட்டம் நடைபெற்ற நேரத்தில், தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடை பெற்றது. இந்திய முஸ்லீம் லீக் இந்தி கட்டாயமாகப் பள்ளிகளில் புகுத்துவதைக் கண்டித்து எதிர்ப்புக் குரல் எழுப்பியது. அதனால் தமிழ் நாட்டு முஸ்லீம்கள் நீதிக்கட்சித் தலைவர்களுடன் நட்புறவு கொண்டிருந்தனர். தமிழ் நாட்டில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாக்களில், பெரியார், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, அண்ணா, சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்கள். இத்தகைய நல்லெண்ண நிகழ்வுகளே திராவிடர் இயக்கத்திற்கும் முஸ்லீம் லீக்கிற்கும் இடையே நல்லுறவு இன்றும் தொடர்வதற்குக் காரணமாயிற்று.

22 ஜூலை1945 அன்று புதுவையில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. பெரியார், அண்ணா, அழகிரிசாமியுடன் பல்வேறு கழகத் தலைவர்கள் பங்கேற்றனர் காலை பத்துமணிக்கு மாநாடு தொடங்கிற்று. நூற்றுக் கணக்கான  எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி, திரும்பிப் போங்கள் என்று எதிர்ப்பு முழக்கங்கள் செய்திட்டனர்,

அறிஞர் அண்ணா, வந்தாரை வா என்றழைப்பது தான் தமிழர் பண்பாடு. போ என்று கூறிடக் காரணம் யாதோ? என்று தொடங்கி  அரியதோர் உரையாற்றினார். பின்னர் கழகக் கொடியை ஏற்றினார்.கொடி ஏற்றப்பட்ட அடுத்த வினாடியே கொடிமரத்தை வெட்டி வீழ்த்திவிட் டார்கள் அதைத் தொடர்ந்து பெருங்கலவரம் நடைபெற்றது. மாநாட்டின் காலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

இதற்கிடையில் கலகம் விளைவித்தவர்கள், மாநாடு ஏற்பாடு செய்த புரட்சிப்பாவேந்தர் பாரதிதாசன், காஞ்சி கல்யாணசுந்தரம், கருணாநிதி ஆகியோரைச் சூழ்ந்து கொண்டனர்.கவிஞரையும் கல்யாணசுந்தரத்தையும் அச்சுறுத்தி அனுப்பிவிட்டனர்.ஆனால் கருணாநிதியை மட்டும் நையப்புடைத்தனர்.அவரை மயங்கிய நிலையில் சாலை ஓரத்தில் எறிந்துவிட்டுச் சென்றுவிட்டனர். காரணம், கருணாநிதி எழுதி நடித்த பழனியப்பன் அல்லது சாந்தா என்ற நாடகத்தில் சிவகுரு என்ற கதாப்பாத்திரத்தில் வந்து வசனங்கள் மூலம் கேலியும் கிண்டலும் செய்து காங்கிரசு கட்சியைக் கண்டனம் செய்வார். அதனால் காங்கிரசு கட்சியினர் பழி தீர்த்துக் கொண்டனர்.

காலையில் கலைக்கப்பட்ட மாநாடு மீண்டும் மாலை யில் கூடிற்று.அழகிரிசாமி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், காலையில், சில கவலை தரத்தக்க நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கேள்விப் பட்டேன். நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லனவாக இருக்கட்டும். இந்த வரிகள் திராவிட இயக்கத்தின் முத்திரை பதித்த வைர வரிகளாக இன்று வரையில் நிலைத்து நிற்கின்றன!

16 மே 1946 அன்று மதுரையில் கறுப்புச் சட்டை மாநாடு நடைபெற்றது திராவிடர் கழகத் தொண்டர்கள் கறுப்பு உடையில் திரண்டிருந்தனர். அம்மாநாட்டிற்கு பட்டுக்கோட்டை அழகிரிசாமி, பாவலர் பாலசுந்தரம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட தலை வர்கள் முதல் நாள் மாநாட்டில் கலந்து கொண்டனர். அண்ணா அந்த மாநாட்டிற்கு வரவில்லை.திடீரென வன்முறையாளர்கள் மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத் தனர். தொண்டர்கள் தாக்கப்பட்டனர். மாநாடு அரைகுறை யாக முடித்துக் கொள்ளப்பட்டது.

கவர்னர் ஜெனரல் இராஜாஜிக்குக் கறுப்புக்கொடி எதிர்ப்பு

1948 ஆகஸ்டில் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜாஜி சென்னை வருவதாக இருந்தார். அவ்வமயம் அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பட்டுக்கோட்டை அழகிரி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு-திராவிடர் கழக மாநாடு

1948,அக்டோபர் 23, 24 ஆகிய நாள்களில் இந்தியை எதிர்த்துத் திராவிடர் கழகத் தனி மாநில மாநாடு ஈரோட்டில் அண்ணா தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமியின் பேச்சு மாநாட்டில் கூடியிருந்த தொண் டர்கள் அனைவரின்  நெஞ்சை உருக்கும் தன்மையில் அமைந் திருந்தது.

தோழர்களே! இந்த மாநாட்டிற்குப் பின் சிறை செல்ல நேரிடும். எனவே,அவ்வகையில் இது கடைசி மாநாடு என்றெல்லாம் பத்திரிக்கையில் பார்த் தேன். என்னைப் பொறுத்தவரையில், என் உடல் நிலையைக் கவனித்தால், எனக்கு இதுவே கடைசி மாநாடாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். என் தலைவனுக்கு என் இறுதி வணக்கத்தைத் தெரி வித்துக் கொள்ளவே இன்று இங்கு வந்தேன். என் உடல் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. நோயினால் படுத்த படுக்கையாக இருந்து வந்தேன். இனி என் உடல் தேறும் வரை நான் இயக்கப் பணியில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கின்றேன். இது எனக்கு மிகவும் வேதனையைத் தருகிறது, என்றார்.

அழகிரிக்கு அதுவே கடைசி மாநாடாக அமைந்து விட்டது.நோயில் விழுந்தவர் மீண்டு வரவில்லை.

ஈரோடு மாநாடு நடைபெற்று முடிவுற்றதும் அண்ணா, அழகிரியைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். சென் னைக்கு அவரை அழைத்து வந்து தாம்பரம் என்புருக்கு நோய் மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் செய்திட ஏற்பாடு செய்தார். பொதுக்கூட்டங்களுக்குத் தன்னை அழைக்கும் தோழர்கள், அழகிரியின் மருத்துவச் சிகிச்சைக்காக உரூபாய் நூறு அழகிரியின் குடும்பத்திற்கு காசோலை அனுப்பிவிட்டு, அந்த இரசீதை தனக்கு அனுப்பிவைத்தால்தான் கூட்டங்களுக்கு ஒப்புக்கொள்வ தாக அண்ணா அறிவித்தார். அதற்கேற்பத் தோழர்கள் பலர் அழகிரியின் குடும்பத்திற்கு நிதி அனுப்பினர். ஆயினும், தாம்பரம் மருத்துவமனை அழகிரியைக் கைவிட்டது; இயற்கையும் அவரைக் கைவிட்டுவிட்டது அவரைப்பற்றிய காச நோய் 28-3-1949 அன்று  நம்மிடமிருந்து அவரின் உயிரைப் பறித்துவிட்டது!

தந்தை பெரியார் இரங்கல்

‘நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன்.30 ஆண்டு கால நண்பரும், மனப்பூர்வமாக நிபந்தனை இன்றி நமது கொள்கைகளைப் பின்பற்றிவருகிற ஒரு கூட்டுப் பணியாளருமாவார். 30 ஆண்டுகளில் என் கொள்கை, திட்டத்தில், ஆலோசனையில் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்துத் தொண்டாற்றியவர். அவரது முழு வாழ்க்கை யிலும் இயக்கத்தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. விளையாட்டுக்குக் கூடக் கொள்கையை விலை பேசி இருக்க மாட்டார்’. என்று இரங்கல் செய்தி விடுத்தார் பெரியார்.

திராவிடர் கழக வரலாறு தந்தை பெரியாரின் தலைமையில் கல்லடியும் சொல்லடியும் பெற்ற வீர மறவர்களைக் கொண்டதாகும்! இந்த வீரர் வரிசையில் வந்த முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி! அவர் வழி நின்று எந்நாளும் சுயமரியாதை காப்போம்!

பட்டுக்கோட்டை அழகிரிசாமி புகழ் வாழ்க!

Pin It