சைவத்தைப் பரப்புவதற்குப் பாடுபட்டவர்கள் நாயன் மார்கள். இவர்கள் 63 பேர். வைணவத்தைப் பரப்பு வதற்காகப் பாடுபட்டவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் 12 பேர். இதில் ஆண்டாள் என்பவரும் ஒருவராவார்.
ஆண்டாள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வரலாற்றில் எழுதியுள்ளனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது தமிழகத்தில் களப்பிரர்களை அழித்துவிட்டுப் பல்லவர்கள் கேலோச்சிய காலம். அதாவது சமணத் தையும், பௌத்தத்தையும் அழித்து சைவ, வைணவ சமயங்களைப் புதுப்பிக்கத் தொடங்கிய காலம்.
களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்களுக்கு இருந்த உரிமைகள் நீக்கப்பட்டன. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டு உழு குடிகளுக்குக் கொடுக்கப்பட்டன. எனவே வரலாற்றில் அதை இருண்ட காலம் என்று எழுதிவிட்டனர். குப்தர்கள் ஆட்சி பொற்காலம் என்று படிக்கிறேம். என்ன காரணம்? பார்ப்பனர்களுக்குப் பணமும், பொருளும் வாரிவாரி மன்னரால் வழங்கப்பட்டன. இதிகாசங்களில் இடம் பெற்றிருந்த பெயர்களெல்லாம் ஊர்ப் பெயர்களாக மாற்றப்பட்டன. ஆகவே அது பொற்காலம் என அழைக் கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பனர்கள் சுகமாக இருந்தால் அது பொற்காலம். பார்ப்பனர் களுக்கு தொல்லைகள் இருந்தால் அது இருண்ட காலம் என்று எழுதிவிடுகிறார்கள்.
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலை மயிலை சீனி. வேங்கடசாமி சான்றுகளுடன் எழுதி யுள்ளார். நல்ல நீதி நூல்களெல்லாம் அந்தக் காலத் தில்தான் எழுதப்பட்டுள்ளன.
ஆண்டாளுக்கு முந்தைய நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார் என்பவர், நாகப்பட்டினத்தில் இருந்த பொன்னால் செய்யப்பட்டிருந்த மிகப் பெரிய புத்தர் சிலையைத் திருடி வந்து அதை விற்று, அதனால் கிடைத்த பணத்தால் திருவரங்கம் கோயிலுக்குக் கோபுரம் கட்டினார் என்று அவருடைய வரலாறு கூறுகிறது. (டாக்டர் மா. இராச மாணிக்கனார் - பல்லவர் வரலாறு - பக்கம். 294)
ஆண்டாள் ஒரு துளசிச் செடியின் அடியில் அநாதைக் குழந்தையாகக் கிடந்தவள் என்றும், திருவில்லிப்புத் தூரில் வாழ்ந்து வந்த பெரியாழ்வார் என்னும் வைணவப் பார்ப்பனர், அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார் என்றும் அவருடைய வரலாற்றில் கூறப்பட் டுள்ளது.
ஆண்டாள் சிறு வயது முதலே கண்ணனையே காதலனாக ஏற்றுக்கொண்டு கோயிலில் எந்த நேரமும் வழிபாடு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆண்டாள் எழுதியது திருப்பாவை : முப்பது பாடல்கள். இப்பாடல்கள் இன்றும் மார்கழி மாதத்தில் பசனைப் பாடல்களாகப் பாடப்படுகின்றன. இவர் எழுதிய மற்றுமொரு தொகுப்பு நாச்சியார் திருவாய்மொழி ஆகும். இது 143 பாடல்கள்; கண்ணன் மீது காதல் இரசம் சொட்டச் சொட்ட பாடப்பட்ட பாடல்கள் ஆகும். இப்பாடல்கள் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் முதல் ஆயிரம் பாடல்களில் சேர்க்கப் பட்டுள்ளன. இவருடைய கொள்கையை திருப்பாவை இரண்டாவது பாடலிலேயே விளக்கியுள்ளார். அதாவது, “தீக்குறளை சென்றேதோம்” என்பதாகும். திருக்குறளை முதன்முதலாகத் தீக்குறளாகக் கூறியவர் ஆண்டாள் தான். (அப்படித்தான் செத்துப் போன பெரிய சங்கராச் சாரி பொருள் கூறினார் )
இவர் 15 வயது அடைந்தவுடன் பெரியாழ்வாரின் கனவில் கண்ணன் தோன்றி ஆண்டாளை திருவில்லிப் புத்தூரிலிருந்து அழைத்து வந்து திருவரங்கக் கோயிலில் விடும்படி கூறினாராம். மணமகள் கோலத்துடன் திருவரங்கம் கோயிலுக்குள் அனுப்பப்பட்டவள் வெளியில் வரவே இல்லை; இறைவனோடு அய்க்கியமாகிவிட்டாள் என்று அவர்கள் கூறுகின்றனர்.
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலில் கே.கே. பிள்ளையும் இதை உறுதி செய்திருக்கிறார்.
ஆண்டாள் நாச்சியார் இளம் வயதிலேயே திருவரங் கத்துக் கண்ணன் மேல் ஆறாதக் காதல் கொண்டு பல அகத்துறைப் பாடல்கள் பாடியுள்ளார். அக்காதல் முதிர்ந்து திருவரங்கம் கோயில் கருவறைக்குள் மணப் பெண் கோலத்துடன் நுழைந்து கண்ண பெருமானுடன் கலந்துவிட்டாள் எனக் கூறுவர். (தமிழக மக்கள் வரலாறும் பண்பாடும், டாக்டர் கே.கே.பிள்ளை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (பக்.234).
நந்தனாருக்கு ஏற்பட்ட கதிதான், வள்ளலாருக்கு ஏற்பட்ட கதிதான் ஆண்டாளுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது தெரிகிறது. நந்தனார் ஆதிதிராவிட விவசாயக் கூலி; ஒரு பார்ப்பானிடம் கூலி வேலை செய்து வந்தார். அவர் சிதம்பரம் சென்று நடராசனைப் பார்க்க ஆசைப்பட்டார். அவர் சிதம்பரம் நகர எல்லைக்குச் சென்று சுற்றிச் சுற்றி வருகிறார். இராசவீதிகளில் ஆதி திராவிடர்கள் செல்ல முடியாத காலம் அது. நடராசன் நந்தன் முன்தோன்றி, தீ வேள்வியில் புகுந்து இவ்வுடலைத் துறந்து பொன்மேனி பெற்று என்னை அடைவாய் என்று கூறினாராம்.
தீமூட்டி அதில் புகுந்த நந்தன் என்ன ஆகியிருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தணக் கோலம் பூண்டு இறைவனடி சேர்ந்தார் என எழுதப்பட்டுள்ளது.
சிவன் கோயிலில் நுழைய தீண்டப்படாத சாதியினர்- ஆதித்திராவிடர்கள் ஆசைப்படக் கூடாது. அப்படி மீறி ஆசைப்பட்டால் எரித்து விடுவோம் என்ற எச்சரிக்கை தான் நந்தனார் கதை. அதை உடைத்தவர்கள் சுயமரியாதை இயக்கத்தினரும், நீதி கட்சியினரும்தான். 1930இல் நந்தன் விழா என்ற பெயரில் சிதம்பரம் இராச வீதிகளில் ஆதித்திராவிடர்களை அழைத்துச் சென்றனர்.
5.4.1929இல் குத்தூசி குருசாமி, ஈரோடு ஈஸ்வரன் கோயிலுக்குள் ஆதித்திராவிடத் தோழர்கள் நால்வரை அழைத்துச் சென்றார். அதற்காக வழக்குத் தொடுக்கப் பட்டு ஈரோட்டில் ஓர் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஆகமம் தெரிந்தவரை அழைத்து வரச் சென்னார் நீதிபதி. அவ்வாறே அழைத்து வரப்பட்டார். அவர் ஆகமத்தைப் படித்து நீதிபதிக்குக் கூறினார். ஆகமப்படி ஆதித்திரா விடர்கள் சிவன் கோவிலின் உச்சி கோபுர கலசத்தைப் பார்த்து கும்பிட்டாலே மூலவரைப் பார்த்து கும்பிட்டதற்குச் சமம். அவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூறி னார். கீழமை நீதிமன்றம் 6 மாத தண்டனை விதித்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
வைரமுத்து முழுக்க முழுக்க ஆண்டாளைப் புகழ்ந்துதான் பேசினார். அவர் ஆண்டாள், தேவதாசி சமூகப் பெண்ணாக இருக்கலாம் என்று அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரின் ஆய்வை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். பா.ஜ.க.வின் எச்.ராசா இதைப் பிரச்சினை ஆக்கினார். ஏதாவது ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு மதக் கலவரத்தைத் தூண்டி இந்துத்துவா உணர்வையூட்டி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பதே பா.ஜ.க.வின் கனவு. இதற்கு வைரமுத்து பலியாக்கப் பட்டார்.
தேவதாசி முறையை உருவாக்கியவர்கள் யார்? அவர்களுக்குக் காலங்காலமாக ஆதரவாக இருந்தவர் கள் யார்? என்ற வரலாற்றை மறந்துவிட்டு அவர்கள் பேசுகிறார்கள்.
தமிழ்ச் சமூகத்தில் பரத்தையர் ஆதிகாலந்தொட்டே இருந்துள்ளனர். பரத்தை என்கிற சொல் தொல்காப்பி யத்தில் எட்டு நூற்பாக்களில் இடம் பெற்று இருப்பதையும் கற்பு ஆணுக்கு வலியுறுத்தப்படாமல் பெண்ணுக்கு மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளதையும் முனைவர் நர்மதா, தம்முடைய தமிழகத்தில் “தேவரடியார்-மரபு பன்முகநோக்கு” என்ற ஆய்வு நூலில் பக்கம் 3இல் கூறியுள்ளார்.
பரத்தையர் என்பது வேறு; தேவதாசி என்பது வேறு. முன்னவர், பணத்திற்காக ஆண்களுடன் கூடுபவர்கள் பின்னவர்கள், கோயில் பணியைச் செய்பவர்கள். சங்க காலத்தில் தேவதாசி முறை நடைமுறையில் இல்லை. ஏன் என்றால் அப்போது பெருங்கோயில்கள் தோன்ற வில்லை.
பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் கற்கோயில்கள், பெருங்கோயில்கள் தோன்றின. அப்போதே தேவரடியார் முறையும் தோன்றியுள்ளதை பல்லவர் வரலாற்றை எழுதிய டாக்டர் மா. இராசமாணிக் கனார் சான்றுகளுடன் எழுதியுள்ளார்.
பல்லவர் காலத்துக் கோயில்களில் இசையும் நடனமும் வளர்க்கப்பட்டன. இவை இரண்டும் சமயத்தின் உறுப்புகளாகக் கருதப்பட்டன. பல கோயில்களில் இவ்விரண்டையும் வளர்க்கப் பெண்கள் இருந்தனர். அவர்கள் அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் முதலிய பெயர்களால் குறிக்கப் பெற்றனர். முத்தீச்சரா கோயிலில் மட்டும் 42 அடிகள்மார் இருந்தனர். திருவொற்றியூர்க் கோயிலிலும் குடந்தை முதலிய பல இடங்களிலும் அடிகள்மார் பலர் இருந்தனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகக் கேயில்களில் அடிகள்மார் இருந்து, இசையையும், கலையையும் வளர்த்துள்ளனர் என்பதைப் பல்லவர் வரலாறு நூலில் பக்கம் 305இல் சான்றுகளுடன் குறித்துள்ளார். (தமிழ் குடிஅரசுப் பதிப்பக வெளியீடு)
பல்லவர்கள் காலம் முதலே தமிழகத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் வேகமாகப் பரவி உள்ளனர். அரசர்களை ஆட்டி வைத்துள்ளனர். அசுவமேதயாகம் அப்பொழுதே தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. முற்காலப் பல்லவ மன்னன் சிவஸ்கந்த வர்மன் தன்னை, அக்நிஷ்டோம-வாஜபேய-அஸ்வமேத ராஜ் என்று பட்டயத்தில் குறித்துக் கொண்டுள்ளான். (டாக்டர் மா.இராச மாணிக்கனார் பல்லவர் வரலாறு, பக்.238)
பார்ப்பனர்களுக்கு தேவதானம் என்ற பெயரில் பெருமளவு நிலங்கள் அப்போது வழங்கப்பட்டுள்ளன. பாரதக் கதை ஊர் ஊராக நடத்தப்பட்டுள்ளது. ஆரியக் கூத்து என்ற பெயரில் நடத்த நிலங்கள் மானியமாக விடப்பட்டுள்ளன.
புத்தர் திருமாலின் அவதாரம் என்று பல்லவர் காலத் தில்தான் புனையப்பட்டுள்ளது. இறுதியாக பௌத்த சமயம் தேய்ந்து மறைந்தே போயிற்று. புத்தரும் திருமாலின் அவதாரங்கள் பத்தினுள் ஒன்றாகச் சேர்க்கப் பட்டார். (டாக்டர் கே.கே.பிள்ளை, பக்.221)
பல்லவர் காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட சோழர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் மிகவும் அதிகரித்தது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருத்தொண்டுக் காக இராசராசன் நானூறு தேவரடியார்களை அமர்த்தி னான் என்றும், அவர்கள் அனைவருக்கும் தனித் தனி வீதிகள் வகுத்து, அவற்றில் வரிசை வரிசையாக வீடுகள் அமைத்துக் கொடுத்தான் என்றும் தஞ்சாவூர் கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. (தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும் என்ற நூலில் கல்வெட்டு ஆதாரங்களுடன் கே.கே.பிள்ளை சுட்டிக்காட்டி உள்ளார். பக்.336)
கோயில்களில் மார்கழி தோறும் திருவெம்பாவை ஓதப்பட்டு வந்தது. அதற்கெனவே தேவரடியார்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். வைணவத் திருப்பாடல்களாக திருப்பள்ளியெழுச்சியும் திருவாய்மொழியும் பாராயணம் செய்யப்பட்டன. தேவாரத் திருப்பதிகங்கள் ஓதுவதற்குப் பல நிவந்தங்கள் அளிக்கப்பட்டிருந்தன. (மேற்கண்ட நூல் பக்.338)
உண்மை இவ்வாறு இருக்க வைரமுத்து மீது பாய்வது ஏன்?
சோழர்கள் காலத்தில் தேவரடியார்களுக்கு அவர் கள் உடலில் சூலம் பொறிக்கும் வழக்கம் இருந்ததை ஆய்வாளர் நர்மதா கல்வெட்டுச் சான்றுகளுடன் எழுதியுள்ளார்.
தேவரடியார்களுக்கு அவர்கள் திருக்கோயிலைச் சார்ந்தவர்கள் என்பதற்கு அடையாளமாகச் சூலம் இலாஞ்சனையை (இலச்சினை) அவர்கள் உடலில் பொறிக்கும் வழக்கம் இருந்தது. திருவல்லம் உடையார் திருப்பாதத்திலே உதகம் பண்ணித் திரிசூலம் சாட்டித் தேவரடியாக ஆகிவிட்டேன் என்ற செய்தி திருவல்லம் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. (முனைவர் நர்மதா தமிழகத்தில் தேவரடியார் மரபு நூல், பக்.72-73)
பெண்களைக் கோயிலுக்கு பொட்டுக் கட்டும் வழக்கம் மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் நடை முறையில் இருந்ததை முனைவர் நர்மதா தன் ஆய்வில் கூறியுள்ளார். (மேற்கண்ட நூல் பக்.75)
சோழ மன்னர்கள் கோயில்களுக்குத் தேவதானம் அளிக்குங்கால், சில சமயங்களில் அவ்வூரிலுள்ள குடிகளையும் அவர்களுக்குரிய பழைய உரிமையோடு அக்கோயிலுக்குக் கொடுத்து விடுவதும் உண்டு. அத் தகைய தேவதானம் அக்காலத்தில் குடி நீங்கா தேவதானம் என்று வழங்கி வந்தது. அதாவது குடிமக்களோடு சேர்த்து கோயிலில் இருக்கும் பார்ப்பனர்களுக்கும் தானமாக வழங்கிவிடுவது. (தி.வை. சதாசிவ பண்டாரத்தார் - பிற்காலச் சோழர் வரலாறு, பக்.528-529, தமிழ்க் குடிஅரசுப் பதிப்பக வெளியீடு)
சோழர் ஆட்சிக் காலங்களில் மக்கள் தங்களை அடிமைகளாக விற்றுக் கொள்ளும் வழக்கம் இருந் துள்ளது.
அக்காலத்தில் ஆண் மக்களும் பெண் மக்களும் செல்வர்களிடத்தும், கோயில்களிலும், மடங்களிலும் தம்மை விற்றுக் கொண்டு அடிமைகளாயிருந்து தொண்டாற்றி வந்தனர் என்பது பல கல்வெட்டுகளால் நன்கறியக் கிடக்கின்றது. கொடிய பஞ்சம் தோன்றி நாட்டு மக்களை வருத்திய காலத்தில் அவர்கள் தம்மையும் தம் குடும்பத்தினரையும் பாதுகாக்க இயலாமல் தங்களை விற்றுக் கொண்டு அடிமைகளாக உயிர் வாழும்படி நேர்ந்தது என்பதைச் சில கல்வெட்டுகள் குறிப்பிடுதல் காணலாம். அன்றியும், வழிவழியாக அடிமைகளாக வாழ்ந்து வந்த குடும்பத்தினரும் உண்டு என்பது சில கல்வெட்டுகளால் புலப்படுகிறது. (பிற்காலச் சோழர் வரலாறு தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், பக்.547)
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கமும் இருந்துள்ளது.
பெரும் புகழ் படைத்த முதல் இராசராச சோழனுடைய அருமைத் தாயார் வானவன் மாதேவியார், தம் ஆருயிரனைய கணவனார் சுந்தர சோழனார், காஞ்சி மாநகரில் பொன் மாளிகையில் இறந்த ஞான்று அவ்வரசர் பெருமானைப் பிரிந்து உயிர் வாழ விரும்பாமல் உடன்கட்டையேறி ஒருங்கே மாய்ந்த வரலாறு, திருக்கோவிலூரில் முதல் இராசராசன் ஆட்சிக் காலத்தில் ஆசிரியப்பாவில் வரையப் பெற்ற கீழ்க்கண்ட கல்வெட்டொன்றில் படிப்போர் உள்ளம் உருகக் கூறப்பட்டுள்ளது. (மேற்கண்ட நூல், பக்.544)
மேலும் சில சோழ அரசிகள் உடன் கட்டை ஏறி உள்ளனர். ஆரியப் பார்ப்பனர்களின் பழக்கவழக்கங் களைத் தமிழகத்தில் திணித்தவர்கள் சோழ அரசர்களே. இவர்களைத் தான் புதிய தமிழ்த் தேசியர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
சங்கராச்சாரியார்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
சங்கரமடங்கள் என்றாலே வர்ண தருமத்தைக் காப்பவர்கள்தான். பௌத்த, சமண மதங்களை அழித்து, இந்து தர்மத்தை நிலை நாட்டவே ஆதிசங்கரன் தோற்றுவித்த சங்கர மடங்களில், காஞ்சி மடம் இல்லை என்பது வரலாறு.
பாரதியார் பகவத்கீதைக்கு உரையெழுதினார். அதன் முன்னுரையில் யாகங்களை அழிக்க வந்த பௌத்த, சமண சமயங்களை சங்காரம் செய்ய சிவபெருமானே ஆதி சங்கரனாக அவதாரமெடுத்தார் என்று எழுதியுள்ளார்.
சங்கராச்சாரிக்குத் தமிழில் பேசினால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமாம். உடனே குளிக்க வேண்டுமாம். இந்து மதம் எங்கே போகிறது? என்கிற நூலில் அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்-சங்கராச்சாரியாருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் அவர், சங்கராச்சாரி யாரைப் பற்றிப்பல செய்திகளைக் கூறியுள்ளார்.
.... இதே பாரும் தாத்தாச்சாரி அவரைப் பார்க்கறதுக்கு நோக்கு ஒண்ணுமில்லை. பார்த்தால் ஏதாவது கேட்பார். பதிலுக்கு நான் தமிழ் பேச வேண்டி வரும். நோக்குதான் தெரியுமே... தமிழ் பேசினால் எனக்குத் தீட்டு, மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யே... அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்பிச் சிடுங்கே” என்று கூறியுள்ளார். (பக்.102)
தமிழ் பேசினால் தீட்டு எனக் கூறும் சங்கராச்சாரி, தமிழ்நாட்டில் மடத்தை வைத்துக் கொண்டிருக்கலாமா?
தமிழில் பூசை செய்யவும், தமிழன் பூசை செய்வ தையும் சங்கராச்சாரி ஏற்க மறுத்தார் என இராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியுள்ளார்.
மதுரை ஆதினம் தமிழில் பூசை செய்யவும், தமிழன் பூசை செய்யவும் வேண்டும் என ஒரு கோரிக்கையை சங்கராச்சாரியிடம் முன் வைத்தார்.
சூத்ராள் பூசை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது என்றார் மகா பெரியவர். (இந்துமதம் எங்கே பேகிறது நூல் பக்.119)
பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்கக் கூடாது என்ற கொள்கை உடையவர்கள் சங்கராச்சாரியார்கள்.
இதப் பார்த்தீரா... ஸ்தீரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டபட்டவாகூட ஸ்திரீகள் ஓடிப் போய்டுவா. அபாண்டமா, அபச்சாரமா போயிடும் என அந்தப் பேப்பரைக் காட்டியபடி வியாக்யானம் செய்து கெண்டிருந்தார் மகா பெரியவர். (இந்துமதம் எங்கே பேகிறது பக்.110)
சங்கராச்சாரி தமிழை தமிழினப் பெண்களை எப்போதும் மதிப்பதே இல்லை.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு, குட்டி சங்கராச்சாரி எழுந்து நிற்காத காரணம் இப்பேது புரிகிறதா?
ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை தமிழ் இனத்தின் பகைவர்களே!
(சென்னையில் 30.1.2018 திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் வாலாசா வல்லவன் நிகழ்த்திய உரையின் சுருக்கம்)
நன்றி : நிமிர்வோம் இதழ் - பிப்ரவரி 2018