இரண்டு பங்கு உழைப்பை மனமார ஈந்து, கட்சியையும் ஏட்டையும் வளர்ப்போம்!

நாம், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை நல்லவண்ணம் புரிந்தவர்கள்.

தந்தை பெரியார், தமிழர்கள் மானம் உள்ள வர்களாக வாழவேண்டும்; சூத்திரர்களும் ஆதி சூத்திரர்களும் பிறவி இழிவிலிருந்து விடுதலை பெறவேண்டும்; அதுவரையில் அந்தந்த வகுப்பு எண்ணிக்கைப்படி விகிதாசாரப் பங்கை ஒவ்வொரு வகுப்பும் பெற வேண்டும்; இறுதியாகத் தனித் தமிழ்நாடு அடைந்து, அங்கு சமதர்ம ஆட்சியை நிறுவ வேண்டும் என்பவையாகும்.

மேலே கண்ட கொள்கைகளுள் தனித் தமிழ்நாடு அடைவது நம் காலத்தில் முடியாது என்பதால், இந்தியக் கூட்டாட்சிக் கொள்கையை நாம் ஏற்றுக் கொண் டோம். இந்தியாவில் “சமதர்மம் மலர்ந்த மொழிவழி மாநிலங்கள் ஒருங்கிணைந்த இந்தியக் கூட்டாட்சி அமைக்கப்பட வேண்டும்” என்கிற கோட்பாடு கொண்டவர்கள் நாம்.

நம் கட்சியும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும்தான் இந்தியாவில் அவரவருக்கு விகிதாசார ஒதுக்கீடு என்பதைக் கொள்கையாகவும் வேலைத் திட்டமாகவும் கொண்டவையாகும்.

அதேபோல் மார்க்சியம் பெரியாரியம் என ஏன் அழைக்க வேண்டும்? அதன் உட்பொருள் என்ன? என்பதைத் தந்தை பெரியார் அவர்கள், 1931 இலேயே “குடிஅரசு” ஏட்டில் வரைந்துள்ளார். அதை அடிப்படையாகக் கொண்டு, நாம் மார்க்சியப் பெரியாரியம் பற்றித் தெளிவான விளக்கங்களை உருவாக்கி இருக்கிறோம். நம் தோழர்களுக்கு அதன் அடிப்படைகளைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறோம், அந்த அடிப்படைகளை எளிமைப்படுத்தி, மீண்டும் நம் கட்சித் தோழர்களுக்குக் கற்பிப்போம்.

நம் கட்சி 8.8.1976-இல் தொடங்கப்பட்டது. நம் “சிந்தனையாளன்” ஏடு 17.8.1974-இல் தொடங்கப்பட்டது. சிந்தனையாளன் ஏடு 44-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது; நம் கட்சி 43-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

என் துணைவியார் ஆ. சுசீலா அவர்களின் மறைவால் என் குடும்பம் திகைத்து நிற்கிறது. நம் தோழர்கள் 1.5.2019-இல் தாம்பரத்துக்கு வருகை தந்து, எங்கள் குடும்பத்தின் துயரத்தை எங்களுடன் பங்கிட்டுக் கொண்டனர்.

அதேபோல் கவிஞர் தமிழேந்தியின் மறைவு நம் இயக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். நாம் எல்லோரும் 5.5.2019-இல் அரக்கோணம் சென்று அவருடைய குடும்பத்தாருக்கும், சோளிங்கபுரம் க. முகிலன் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தோம்.

மானிடன் பிறந்த போதே இறப்பது உறுதி என்பது உலகம் அறிந்த உண்மை. என் துணைவியார் மறைவு எனக்குப் பாதி மனவலிமையைக் குறைத்துவிட்டது. ஏன் என்றால், அவர் தாங்க முடியாத துன்பங்களைத் தாங்கிக் கொண்டு என்னை நாட்டுக்கு உழைக்க எனக்குப் பின்புலமாக இருந்தார். இனி அந்தத் தெம்பு எனக்கு வராது. கட்சித் தோழர்கள் அதை உணர்ந்து ஈடுகட்ட முன்வர வேண்டும் என்று அன்போடு வேண்டு கிறேன்.

திருச்சியில் இருந்து சிந்தனையாளன் வெளிவந்த வரையில், நானும் என் மக்கள் அறுவரும் கூட்டாக உழைத்து அந்த ஏட்டை நிலைப்படுத்தினோம். இப்போது அது கட்சி ஏடாக உள்ளது. கட்சி ஏட்டை இப்போதுள்ள எண்ணிக்கையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மடங்கு எண்ணிக்கை அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று எல்லா மாவட்டச் செயலாளர்களையும் அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

ஏடு பற்றியும் கட்சி உறுப்பினர் சேர்க்கை பற்றியும் மே இதழில் நான் விடுத்துள்ள வேண்டுகோளை எல் லோரும் மனம் கொண்டு செயல்படுத்த வேண்டுகிறேன்.

இனி மாவட்ட வாரியாக இணக்கமான தோழர்களை அழைத்து மூன்று நாள் அடிப்படைக் கொள்கைப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எல்லா மாவட்டச் செயலாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். மாவட்டச் செயலாளர்கள் ஒரே சமயத்தில், சூன் திங்களில் அம்பத்தூருக்கு வந்து தங்கி இரண்டு அல்லது மூன்று நாள் பயிற்சி எடுத்துக்கொள்ள முன் வருமாறு வேண்டுகிறேன்.

நான் இப்போதுள்ள உடல்நிலையில் 95ஆம் ஆண்டை நிறைவு செய்வேனா என்பது கேள்விக்குறியாக உள்ளது; நிறைவு செய்வேன் என்று நம்புகிறேன்.

மன அமைதி குன்றிய நிலையில் எனக்குத் தோன்றிய எண்ணங்களை இங்குப் பதிவு செய்துள்ளேன். இதை என் இன்றியமையாத வேண்டுகோளாகக் கருதி மா.பெ.பொ.க. தோழர்கள் எல்லோரும் செயல்பட வேண்டுகிறேன்.

2019 மே மாத இதழை மிகச் செப்பமாக அமைத்து வெளியிட்ட நம் ஆசிரியர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் இனி, ஆசிரியர் குழுவினர் இதே போல், இணைந்து செயல்பட்டு, “சிந்தனையாளன்” இதழை வலிமையுள்ளதாக ஆக்குங்கள் என வேண்டு கிறேன்.

Pin It