sanga ilakkiyamதமிழ்க் களஞ்சியமா திராவிடக் களஞ்சியமா என்கிற வாதங்களுக்குப் பின்புலமாக இருப்பது “திராவிடம்” என்கிற கருத்தியல் மீது, பண்பாட்டு அடையாளத்தின் மீதுள்ள காழ்ப்பே என்பது வெளிப்படை.

தமிழ் மொழி, தமிழ் மக்கள்,ஆகிய கருத்தியல்களுக்கும், அடையாளங்களுக்கும் திராவிடம் என்பது முரணானது என்கிற கருத்துப் பிழையை பரவலாக்கும் உள்நோக்கம் கொண்டவை.

 திராவிடமும் தமிழும் ஒன்றே எனில் தமிழ் என்றே கூறலாம்; திராவிடம் என்பதைத் தவிர்க்கலாமே என்கிற வாதம் மேற்போக்காகப் பார்க்கும்போது சரியாகப் படலாம். தமிழ் முழுக்க முழுக்க மொழி சார்ந்தது. திராவிடம் மொழியோடு, சமூகப் பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கியது.

ஆரியப் பார்ப்பனீய விழுமியங்களுக்கும், பண்பாட்டு அடிப்படைகளுக்கும், மரபுகளுக்கும் , தத்துவங்களுக்கும் மாறானது.கடந்த அய்யாயிரம் ஆண்டுகளாக ஆரிய(பார்ப்பனீய)மல்லாத, பார்ப்பனீயத்திற்கு இணங்க மறுக்கிறச் சமூகங்களின் பொது அடையாளமாக “திராவிடம்” எனபதை ஆரிய இலக்கிய மரபுகளே ஏற்றுக் கொண்டுள்ளன.

ஆரியம் பல மொழிப் பிரிவுகளைக் கொண்டிருப்பதைப் போன்று திராவிடமும் பல மொழிகளைக் கொண்டு உள்ள ஒரு பெரும் நாகரீக மரபாகும். வெண்கலக் காலத்துச் சிந்துவெளி நாகரீகமும் திராவிட நாகரீகமென்பதை இந்த அடிப்படையில்தான் உலக வரலாற்றாளர்கள் அடையாளப் படுத்தியுள்ளனர்.

மொழி மட்டுமன்றி, இனக்கூறுகள், பண்பாட்டு மரபுகள், தத்துவ நிலைகள், சமூகக் கண்ணோட்டங்கள் போன்ற பல நிலைகளிலும் பொதுத் தன்மை கொண்டது திராவிட அடையாளம். இந்தத் திராவிடத்தில் தமிழின் தொன்மை, தமிழின் முதன்மையை மறுப்பார் இல்லை.

 தமிழில் பார்ப்பனீயத் தவிர்ப்பு என்பதை, சமத்துவ விழுமியங்களை உறுதி செய்வது என்பதற்கான அடையாளமாகத் திராவிடம் கையாளப்படுகிறது. மொழி மட்டுமல்ல, மொழி கடந்த நிலையிலும் ஒரு நியாயமான, அநீதிகளுடன் சமரசம் செய்து கொள்ளாத, இணங்கிப் போகாத உறுதியான நிலைப்பாட்டினை வலியுறுத்தும் கருத்தியலாக திராவிடம் கையாளப்படுகிறது.

 மொழியுடன் நியாயமான சமூக நோக்கங்களையும் உள்ளடக்குவதாகவே திராவிடக் களஞ்சியம் பொருள்படும்.

உலகளாவிய நிலையில், ‘தமிழ் முதன்மை பெறும் திராவிடம்’ என்பதற்குக் குறைந்தது ஆறாயிரம் ஆண்டுத் தொன்மை உண்டு. திராவிட மறுப்பை முதன்மைப்படுத்துபவர்கள், இந்தியாவின் முதல் நாகரிகமும், ஒரே நாகரீகமும் (சமஸ்கிருத) வேத நாகரீகமே என்கிறவர்களுக்கு வலுச் சேர்ப்பவர்களாக அமைந்து விடுவர்.

 அறியாமலா இதைச் செய்கின்றனர்? தூங்குவதைப் போன்று பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியுமா?

பேராசிரியர் கருணாநந்தன்

Pin It