2014 நவம்பர் 7 முதல் இந்தியா முழுவதிலும் -எல்லா ஊடகங்களிலும், எல்லாக் கட்சிகளாலும், எல்லாச் சாதிச் சங்கங்களாலும் இரண்டு செய்திகள் பற்றி உரத்துப் பேசப்படுகின்றன.

1. 6-11-2014 அன்று வழக்குரைஞர் ஜி. சிவபால முருகன் என்பவர் 2 மாணவர்களின் சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் முன் ஒரு வழக்குத் தொடுத்தார்.

உச்சநீதிமன்றம் 16-11-1992இல் வழங்கிய மண்டல் பரிந்துரை பற்றிய தீர்ப்பில், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகிய மூன்று வகுப்பினருக்குமான மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்குள்தான் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தது. அதை மீறி, தமிழ்நாட்டு அரசு 1993இல் ஒரு சட்டம் இயற்றி, இவ்வகுப்பினருக்கு 1993 முதல் 69 விழுக்காடு இடஒதுக்கீடு தருகிறது; அதனால் தான் மனுதாரர்கள் இரண்டு பேருக்கும் இடம் கிடைக்க வில்லை. எனவே 69 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லாது என்று கூற வேண்டும் என்று அவ்வழக்குரைஞர் கோரினார்.

இதில் உள்ள இரண்டு செய்திகள் மிகவும் பழையவை. அதாவது இடஒதுக்கீடு அளிக்கப்படுகிற மூன்று வகுப்பாருக்கும் சேர்த்து, 50 விழுக்காட்டுக்குள் ­அதாவது 49.5 விழுக்காடு தான் தரவேண்டும் என்று 1963இல் உச்சநீதிமன்றம் முதன்முதலாகத் தீர்ப்புக் கூறியது. அதை எதிர்த்துப் பிற்படுத்தப்பட்டோர் கிளர்ச்சி செய்யவில்லை; 1963இல் இருந்த இந்திய அரசும் மேல்முறையீடு செய்து, அதை மாற்றவில்லை. எனவே, மண்டல் குழுவினர், அந்த 50ரூ உச்சவரம்பை மீறி டாத வகையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக் காடு தரவேண்டும் என்றே பரிந்துரைத்தனர். அதன்பேரில், 1993-இல், அந்த 50 விழுக்காடு என்கிற உச்சவரம்பை மீறக்கூடிய வகையில், திராவிடர் கழகம் முன்மொழிந்த ஒரு சட்டமுன்வடிவை ஏற்று, அன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசு, ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அந்தச் சட்டம் செல்லாது என்று கூறி, கே.எம். விஜயன் என்கிற மேல் சாதி வழக்குரைஞர் அப்போதே வழக்குப் போட்டார். அந்த மூல வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

அந்த வழக்கில் இடைக்காலத் தீர்வு ஒன்று அப்போதே அளிக்கப்பட்டது. அது என்ன கூறியது?

தமிழ்நாட்டு அரசினர் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு, பட்டியல் வகுப்பினருக்கு 18 விழுக்காடு, பழங்குடியினருக்கு 1 விழுக்காடாக, 69ரூ தந்துவிட்டு ­உடனடியாக, தகுதியுள்ள மாணவர்களுக்குத் தருவதற் கென்று புதிதாக 19 இடங்களை உண்டாக்கி, அதில் முற்பட்டோரும், மற்ற வகுப்பினரும் தகுதி அடிப்படை யில் போட்டி போடச் செய்து, அதன்படி அவ்விடங் களை நிரப்ப வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அதைத்தான், மீண்டும் 6-11-2014இல் இன்னொரு வழக்குரைஞர் கேட்டு, வழக்குத் தொடுத்தார்.

ஆனால் தமிழகத்திலோ, இந்தியாவிலோ எவரும் தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு மட் டும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு -யாரால், எப்போது வந்தது என்று அறிய விரும்பவில்லை.

1972 முதல் தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே தரப்பட்டது.

அந்த 31 விழுக்காடு வழங்கிய போது, 1979இல் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை 67.5 இருந்தது. எனவே, “67.5 விழுக்காடு உள்ள தமிழகப் பிற்படுத் தப்பட்டோருக்கு, 60 விழுக்காடு ஒதுக்கீடு தரவேண் டும்” என்ற கோரிக்கையை, 19-8-1979இல், அ.தி.மு.க. ஆட்சியினரிடம் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக் கட்சியும், அதன் சார்பில் இயங்கும் ஒடுக்கப் பட்டோர் பேரவையும் முன்வைத்தன. 1979 அக்டோபர் முதல் தொடர்ந்து அதற்கான அழுத்தத்தை வே. ஆனை முத்து, சேலம் அ. சித்தய்யன் இருவரும் அளித்தனர். அதனால்தான், தமிழகப் பிற்படுத்தப்பட்டோ ருக்கு முதன்முதலாக, 1-2-1980இல், 50 விழுக் காடு இடஒதுக்கீட்டை அ.தி.மு.க. அரசு அளித்தது.

எதைச் சான்றாகக் மா.பெ.பொ.க. மற்றும் பேரவையினர் காட்டி 60 விழுக்காடு ஒதுக்கீடு கேட்டனர்?

தில்லி உச்சநீதிமன்றத்தில், 1976 கடைசியில், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒரு வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில், ஒரு நீதிபதி யான மூர்த்துழா ஃபசல் அலி (Justice Murthuza Fazal Ali) என்பவர், “ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப் பட்டவர்கள் 80 விழுக்காடு இருப்பார்களானால், அவர்களுக்கு, 80 விழுக்காடு இடங்களை மாநில அரசு வேலைகளில் ஒதுக்கீடு செய்வதை அரசமைப்புச் சட்ட விதி 16(4) தடுக்குமா? தடுக்காது” என்று கூறியிருந் தார். (State of Kerala Vs N.M. Thomas - A.I.R. 1976; S.C.490) அதை மேற்கோளாகக் காட்டி, வாதாடித்தான், 50 விழுக்காடு ஒதுக்கீடு வர வழி வகுக்கப்பட்டது.

இந்த விவரம் அப்போதைய அரசுக்குப் புதிதாக இருந்தது.

இன்று தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்காகப் போராடுவோர் இருக்கிறார்கள். இவர்களுக்கு அறிவும் பொறுப்பும் இருந்தால் -இன்றைய கணக்குப்படி தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 விழுக்காடு கொடு என்று தமிழக அரசினரிடம் கோர வேண்டும்.

இந்திய அளவில், எல்லா மதங்களையும் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர் 2014இல் 57 விழுக்காடு உள்ளனர். இந்திய அரசில் 27 விழுக்காடு தருவதை 57 விழுக் காடாக உயர்த்தும் வகையில், அரசமைப்பைத் திருத்து என்று இந்திய அரசிடம் கோர வேண்டும். இது ஒரு தீர்வு.

அடுத்து, 7-11-2014இல் உச்சநீதிமன்றத்தில், தீபக் மிஸ்ரா தலைமையிலான மூவர் அமர்வு, ஒரு கருத்தை வெளியிட்டது.

ஏற்கெனவே, 2008இல் உச்சநீதிமன்ற நீதிபதி பாயசத் என்பவர், “1931இல் எடுத்த மக்கள் தொகைக் கணக்கை, இன்றைக்கும் பின்பற்றுவது சரியாகாது. தமிழ்நாட்டு அரசு உடனடியாக சாதிவாரிக் கணக் கெடுப்புச் செய்து, அவர்கள் 69 விழுக்காடு கொடுப்ப தற்கான நியாயத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று கூறினார்.

அதுபற்றிப் பிற்படுத்தப்பட்ட -பட்டியல் வகுப்புத் தலை வர்கள், படித்தவர்கள், பொதுமக்கள் எந்தக் கவலையும் படவில்லை. அதன் விளைவாக, காங்கிரசு அரசு என்ன செய்தது?

2010-இல், இந்திய அரசு, “வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக, சமூக-பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்” என்று மட்டுமே ஆணையிட்டது.

30-11-2014 நிலவரப்படி, இந்தியாவிலுள்ள மொத்த மாவட்டங்களில், 500 மாவட்டங்களுக்கான மேற்படிக் கணக்கெடுப்பின் வரைவுப் பட்டியல் அச்சிட்டு வெளி யிடப்பட்டுவிட்டது. இந்தக் கணக்கெடுப்பு 2011 சூன் திங்களில் தான் தொடங்கப்பட்டது.  

அப்படித் தொடங்கப்பட்ட போது, இந்தியாவில் உள்ள 6,700 உள்சாதிகளில், ஒவ்வொரு உள்சாதி யின்-படிப்பு நிலை, அரசு வேலையில் பங்கு, பொருளா தார ஆதாரங்கள், வருமானம், சமூக அந்தஸ்து இவ்வளவு விவரங்களையும் வீடுதோறும் சென்று பதிவு செய்ய வேண்டும் என்று, இந்திய அரசும், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையமும் ஆணையிடவில்லை. இதில் காங்கிரசு அரசு மக் களுக்கு எதிரான அரசாகவே செயல்பட்டது.

குறிப்பாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான நிலைப்பாட்டையே, 1956 முதல் பண்டித நேரு எடுத் தார். எப்படி?

1.  நேரு அவர்கள், 27-6-1960இல், அப்போ தைய மாநில முதலமைச்சர்களுக்குப் பின்வருமாறு மடல் எழுதினார் :

“தகுதியற்ற -இரண்டாந்தரமான மக்களுக்கு ஊக்கம் அளிப்பதை நான் அடியோடு வெறுக்கிறேன். என் நாடு எல்லா வகையிலும் முதல்தரமான நாடாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தகுதியற்ற ­இரண்டாம் நிலைக்காரர்களை ஊக்குவிக்கத் தொடங் கும் போதே, நம் நிலையை இழந்துவிடுகிறோம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உதவுவது என்பது, அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வழி செய்வது மட்டுமே ஆகும்” என்பதே அம்மடலின் சாரம் (“The New Indian Express”, 1-10-2014).

2. அதே நேரு தான், 1961 மே திங்களில், இந்திய அரசு அமைச்சரவையைக் கூட்டி, “காகா கலேல்கர் பரிந்துரைத்தபடி, 2999 உள்சாதிகளைக் கொண்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அரசு ஏற்க முடியாது என்றும், அவர்களுக்கு மத்திய அரசு வேலையில் இடஒதுக்கீடு தரப்போவதில்லை என்றும் முடிவு செய்கிறது” எனத் தீர்மானித்தார்.

3. அதே 1961 ஆகத்தில், எல்லா மாநில முதல் வர்களுக்கும் தனிப்பட்ட முறையில் மடல்கள் எழுதிய நேரு, “பிற்படுத்தப்பட்டோருக்குச் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தர மாநில அரசுகள் ஏற்பாடு செய்யக்கூடாது. அவர்களுக்கு உதவ வேண்டு மானால், படிப்புக்காகப் பணவுதவி செய்யலாம்” என்று துலாம்பரமாக எழுதினார்.

நேரு அவர்கள், இத்தன்மைகளால் -பிற் படுத்தப்பட்டோரின் முதல் எதிரி என்று கருதப்பட வேண்டியவர்.

அதனால்தான், அவர் எடுத்த நிலைப்பாடுகளை தோற்கடித்த -மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக் கட்சி, இடஒதுக்கீட்டுக் கொள்கையை அதன் இறுதி எல்லைக்குக் கொண்டு செல்வதற்கு ஒரே வழியாக, எல்லா வகுப்பினருக்கும் விகிதா சார இடப்பங்கீடு கோருகிறது.

இந்த இலக்கை அடைய அடிப்படைத் தேவைகள் இரண்டு ஆகும்.

1. உள்சாதி வாரியாக, 6700 உள்சாதிகளுக்கும் மக்கள் தொகைக் கணக்கை எடுக்க வழிகோலுவது.

2. கல்வியிலும், வேலையிலும் உள்ள 100 விழுக்காடு இடங்களையும் பங்கீடு செய்துதர ஏற்ற வகையில், அரசமைப்பில் இடஒதுக்கீடு தொடர்புடைய விதிகளைத் திருத்தச் செய்வது.

மேலே 1-இல் கண்டபடி, உள்சாதி வாரிக் கணக்கெடுப்புச் செய்வது செல்லாது என்றோ, கூடாது என்றோ, உச்சநீதிமன்றம் 7-11-2014இல் அளித்த தீர்ப்பில் எந்தக் குறிப்பும் இல்லை. அது தவறான புரிதலே ஆகும். நிற்க.

உச்சநீதிமன்றம், அரசு கொள்கை வழியான சாதிவாரிக் கணக்கெடுப்பு வழியான பொருள் என்பதி னால் அரசுதான் முடிவெடுத்துச் செயல்பட வேண்டுமே யன்றி நீதிமன்றம் அதன் வரம்பு மீது செயல்பட்டு ஆணை வெளியிட்டுள்ளதைத் தள்ளுபடி செய்வதாகத் தான் ஆணையிட்டுள்ளது.

1. பட்டியல் வகுப்பினருக்கு, தந்தை பெரியாரும், பொப்பிலி அரசரும் முயன்று, 1935இல் சென்னை மாகாண எல்லைக்குள் இயங்கும் எல்லா மத்திய அரசு அலுவலக வேலைகளிலும், 16 விழுக்காடு தனி இடஒதுக்கீடு பெற்றுத் தந்தனர்.

2. பட்டியல் வகுப்பினருக்கு, மேதை அம்பேத்கர், அனைத்திந்திய அளவில், 11-8-1943இல், மத்திய அரசு வேலைகளில் மட்டும் 8 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத்தந்தார். அதையே 12.5 விழுக்காடாக, 1946இல் அவரே உயர்த்திப் பெற்றார்.

3. பட்டியல் வகுப்பினருக்கான, இந்திய அளவி லான ஒதுக்கீட்டை, 1970இல், பாபு ஜெக ஜீவன் ராம் 15 விழுக்காடாக உயர்த்திப் பெற்றார். பதவி உயர் விலும் இடஒதுக்கீடு பெற்றார்.

இவ்வளவு வாய்ப்புகள் அளிக்கப்பட்ட பிற் பாடும், இன்று இந்திய அளவில் -25.50 விழுக் காடு உள்ள பட்டியல் வகுப்பினருக்கும், பழங்குடி யினருக்கும் (17 + 8.5) உயர் பதவிகளில், விகிதாசாரப் பங்கு கிடைக்கவில்லை.

4. 1994-இல் முதன்முதலாக மத்திய அரசில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு தரப்பட்ட பிற்படுத் தப்பட்டோருக்கு, 2008இல் 5.44 விழுக்காடு இடங்களே மத்தியஅரசு உயர் பதவிகளில் கிடைத்துள்ளன.

5. ஆனால் மொத்த மக்கள் தொகையில் வெறும் 17.5 விழுக்காடு உள்ள முற்பட்ட வகுப்பி னர், மத்திய அரசு உயர் பதவிகளில் 75 விழுக் காடு இடங்களைக் கைப்பற்றிக் கொண்டுள்ள னர்.

இந்நாட்டின் வெகுமக்களுக்கு இது அவமானமானது. இது இன்று நேற்று முதல் இல்லை. இதோ, 1890ஆம் ஆண்டைய அரசு வேலை

பற்றிய அதிகாரப்பூர்வமான பட்டியலைப் பாருங்கள்!

அரசு அதிகாரிகள் பட்டியலில், தெளிவாக, “பிராம ணர்கள்” -“சூத்திரர்கள்” என்ற இரண்டு பெரிய தலைப்பு களின் கீழே, அலுவலின் பெயரும், அலுவலரின் உள்சாதியும் பதிவு செய்யப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இது, ஈரோடு வருவாய் வட்டத்தில் 1890களில் பதவியிலிருந்த வட்டாட்சியர் முதல் -கீழ்நிலை வேலைகளில் இருந்தவர்களின் பட்டியல்.

“பிராமணர்கள்” என்ற தலைப்பின்கீழ் -தமிழ், தெலுங்கு, மாத்துவர், அய்யங்கார்கள் என்ற நான்கு பெரிய பிரிவுகளும், அந்த ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவரின் உள்சாதி என்ன என்ற பெயர் விவரமும் அச்சிடப்பட்டுள்ளன.

“சூத்திரர்கள்” என்ற தலைப்பின்கீழ் - முதலியார் கள், பிள்ளைமார்கள், நாயுடுகள், கவுண்டர்கள் என்கிற பெரும் பிரிவுகளும்; அந்த ஒவ்வொரு பிரிவினரிலும் சில உள்சாதிகளின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளன. மற்ற மதத்தினர், சத்திரியர், வைசியர் விவரங்களும் உள்ளன.

இன்று, பிராமணர் ஏது, சூத்திரர் ஏது என்கிற மே(ல்)தாவிகள் இந்தக் கண்ணராவி யைக் கண்ட பிறகாவது, அறிவுத்தெளிவும், ஆத்திரமும், காத்திரமும் கொள்ள வேண்டும்.

இன்று 90 அகவையிலுள்ள நான், 1940 முதல் 1946 வரையில், சென்னை மாகாண அரசினர் அச்சிட்டு வெளியிட்ட - “Quarterly Civil List” என்கிற, “பதிவு பெற்ற அதிகாரிகளின் காலாண்டுப் பட்டிய லை”ப் படித்திருக்கிறேன்.

அதில் -பதவியின் பெயர், பதவியிலிருக்கும் அதிகாரியின் பெயர், அவருடைய படிப்பு, பிறந்த நாள், ஊதிய விவரம், ஓய்வு பெறும் நாள், அலுவலரின் உள்சாதியின் பெயர் எல்லாமே இருந்தன.

1890- Civil List-பக்கம் 8, 9இல் உள்ளது.

உள்சாதியின் பெயர் இருந்தால் -அதிகாரப் பதவிகளில் பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர் கள், மேல்சாதி சூத்திரர்கள் ஆதிக்கம் அம்பலம் ஆகிவிடும் என்பதால், 1951 முதல், அப்படி வெளியிடப் படும் பட்டியலில், உள்சாதியின் பெயரைத் திட்டமிட்டே நீக்கிவிட்டார்கள்.

இப்போது தகவல் பெறும் அறியும் உரிமை சட்டம் நடப்புக்கு வந்துள்ளது.

அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் பதவிகள் முதல் காவலர், ஏவலர், தோட்டக்காரர் என்கிற எல்லா அரசு வேலைகளிலும் உள்ளவர்களின் பட்டியல்களையும் அவரவரின் உள் சாதியையும் உள்ளடக்கிய விவரங்களைப் பெற்றிட வேண்டும். மேலும் உச்சநீதிமன்றம் சாரிவாரி கணக் கெடுப்புக்கு தடை ஏதும் விதிக்கவில்லை என்பதால் அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று கோரி நாம் போராட வேண்டும்.

மக்கள் நாயக ஆட்சியில், பெரிய எண்ணிக்கை யிலுள்ள -உழைக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு 67 ஆண்டுகளுக்குப் பிறகும் உரிய பங்கு கிடைக்காம லிருப்பது பெருத்த இழிவும் அவமானமும் ஆகும்.

எனவே,

1. உள்சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கை உடனே பதிவு செய்!

2. கல்வியிலும், வேலையிலும் 100 விழுக்காடு இடங்களையும் பங்கீடு செய்!

3. பிற்படுத்தப்பட்டோர், முற்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் என்கிற நான்கு வகுப்பி னருக்கும் -100 இடங்களையும் பங்கீடு செய்து, அவரவர் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்பப் பிரித்துக் கொடு!

எனப் போராடுவோம் -வென்றெடுப்போம், வாருங்கள்!

- வே.ஆனைமுத்து

Pin It