அண்மையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத் கரிய செயற்பாட்டாளர்களை மெய்சிலிர்க்க வைத் திருக்கிறது.

கர்நாடக மாநில கலால் வரித்துறை அமைச்சராக இருக்கிறார் சதீஷ் ஜார்கி ஹோலி என்பவர். இவர் தனது சொந்த மாவட்டமான பெலகாவியில் உள்ள சதாசிவ நகர் வைகுந்தம் சுடுகாட்டுக்குக் காலையில் சென்றார். அங்கு பிணங்கள் எரிக்கும் இடத்தில் அமர்ந்து காலை உணவு உண்டார். அதனைத் தொடர்ந்து அங் குக் கூடிய மக்களிடம் மூடநம்பிக்கை, மனித சமூகத் தை எப்படியெல்லாம் கெடுக்கிறது என்பது குறித்துத் துண்டறிக்கைகளை விநியோகித்தார். இதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் சிலருடன் அங் கேயே சிறிய அளவில் மேடை அமைத்துத் தங்கினார். மதிய உணவு, இரவு உணவு அனைத்தும் அங்கேயே சாப்பிட்டார். மேலும் பொதுமக்களிடம் மூடநம்பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகப் பிணம் எரிக்கும் இடத்தில் சனிக்கிழமை இரவு படுத்து உறங்கினார். அப்போது தன்னுடன் யாரும் துணைக்குப் படுக்கக் கூடாது எனக்கூறி அனைவரையும் அனுப்பிவிட்டார். அடுத்த நாள் அவரைப் பத்திரிகையாளர்கள் சந்திக் கிறார்கள். அந்த அமைச்சர் அவர்களுடன் பேசுகிறார், கேட்போம்:

“மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச் சாரங்களும், போராட்டங்களும் நடத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள்களாக எனது மனதில் இருந்தது. அதனை அம்பேத்கரின் நினைவு நாளன்று (டிசம்பர் 6) தொடங்கி இருக்கிறேன். அம்பேத்கர் காட்டிய வழியில் அரசியலுக்கும், மதத்துக்கும் அப்பாற் பட்டு இந்தப் போராட்டத்தை மாநிலம் முழுக்க நடத்தத் திட்டமிட்டுள்ளேன். சுடுகாட்டில் பேய்களும், பிசாசு களும் இருக்கின்றன என்ற மூடநம்பிக்கை மக்களிடை யே நிலவுகிறது. எனவே சுடுகாட்டைப் பார்த்து பயந்து நடுங்குகிறார்கள். இங்கு வந்தால் பிணங்கள் எழுந்து வந்து மனிதர்களைத் தின்றுவிடும் எனக் குழந்தை களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். சுடுகாட்டில் கூடச் சாதிவாரியாகத் தனித்தனியாகப் பிணங்களை எரிக் கிறார்கள். ஆதிக்கச் சாதியினர் புதைக்கப்படும் இடத்தில் தலித் மக்களைப் புதைக்க மறுக்கிறார்கள். ஆனால் பிணங்களை எரிக்கவும், குழிவெட்டவும், இன்னபிற சடங்குகளைச் செய்யவும் தலித் மக்களைப் பயன் படுத்துகிறார்கள், மனிதனின் வாழ்க்கை முடியும் இடத் தில் கூட மூடநம்பிக்கை நிலவுகிறது. எனவே சமூகத் தைச் சீரழிக்கும் மூடநம்பிக்கைக்கு எதிரான எனது போராட்டத்தைச் சுடுகாட்டில் இருந்து தொடங்கி இருக்கிறேன்.

மக்களிடையே நிறைந்திருக்கும் மூடநம்பிக்கைக் குக் காரணம் அறியாமையும், கல்லாமையும்தான். கல்வியின் மூலமாகவே மூடநம்பிக்கையையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் போக்க முடியும். இலட்சுமியை பில்கேட்ஸ் வணங்குவதில்லை. அவர்தான் உலகப் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கிறார். நான் கூட இலட்சுமியை வணங்குவதில்லை. எனது வணிகத் தில் எனக்கு ரூ.600 கோடிப் பணம் புரள்கிறது. தொடர்ந்து சாதிக்கு எதிராகவும், பெண் அடிமைக்கு எதிராகவும் சுடு காட்டில் தங்கும் போராட்டங்களை நடத்தத் திட்ட மிட்டுள்ளேன்” - என்று பேசியிருக்கிறார்.

இவரின் இந்தச் செயல்பாட்டிற்குப் பல்வேறு முற் போக்கு இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தச் செய்தியை யார் தெரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, பெரியாரின் கையைப் பிடித்து வளர்ந்த வர்களும், அவரது அடிச்சுவட்டில் மாறாது கால் பதித்து நடப்பவர்களும், ஒட்டுமொத்த தமிழரின் விடுதலை ஈழவிடுதலையில்தான் இருக்கிறது எனத் தொண்டை கிழிய முழங்குபவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும்.

கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயிலில் பார்ப்பனர்கள் சாப் பிட்ட எச்சில் இலைகள் மீது, இதர சாதியினர் மேல் உடைகளைக் கழற்றிவிட்டு உருளுவதால் தங்கள் பாவங்கள், பிரச்சனைகள், நோய்கள் தீரும் என நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் ‘உருளு சேவை’ மூன்று நாள் களுக்கு நடைபெறுகிறது. இதில் ஏராளமானவர் கலந்து கொள்கின்றனர். இந்த எச்சில் இலை மீது உருளும் சேவை மாநிலத்தின் மற்ற கோயில்களிலும் நடை பெறுகிறது.

இத்தகைய மூடநம்பிக்கை தொடர அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி தலித் கூட்டமைப்பினர் பல்வேறு முற்போக்கு அமைப்பினருடன் இணைந்து போராடி வந்தனர். இந்த உருளும் சேவைக்குக் கர்நாடக உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்தது. அதனால் இந்த ஆண்டும் வழக்கம் போல் உருளும் சேவை நடந்தது. கர்நாடகத் தலித் கூட்டமைப்பினர் உருளும் சேவைக்குத் தடைவிதிக்குமாறு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் மதன் பி. லோகூர் மற்றும் பானுமதி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் நிர்வாகம் சார்பில்-500 ஆண்டுகளுக்கும் மேலாக உருளும் சேவை நடந்து வருகிறது. இந்தச் சடங்கில் பங்கேற்றால் பக்தரின் வேண்டுகோள் நிறைவேறு கிறது; அவர்களின் உடலிலுள்ள நோய்களும் குணமா கின்றன என வாதிடப்பட்டது. தலித் கூட்டமைப்பினர் சார்பில், “உருளும் சேவை மனித உரிமைக்கு எதி ரானது. 21-ஆம் நூற்றாண்டிலும் சாதியின் பெயரா லும், மதத்தின் பெயராலும் மனிதத்தன்மையற்ற மூடநம்பிக்கைகள் தொடரக் கூடாது” என்று வாதிடப் பட்டது.

“500 ஆண்டுகாலமாக நடக்கும் ‘உருளும் சேவை’ என்ற வழக்கமான பிரார்த்தனை முறை என்பதை ஏற்க முடியாது. மிகப் பழமையான சடங்கு என்பதால் கண்மூடித்தனமாக எதையும் ஏற்க முடியாது. தீண்டாமை கூடப் பழங்கால வழக்கம்தான். அதை அனுமதிக்க முடியுமா? ஒரு தரப்பினர் உண்ட எச்சில் இலை மீது இன்னொரு தரப்பினர் உருளும் சடங்கை அனுமதிக்க முடியாது” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகூர், பானுமதி அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

“சாதி, மத, மூடநம்பிக்கைக்கு எதிராக விழுந்த மாபெரும் அடியாக இதைப் பார்க்கிறோம். இனிவரும் காலங்களில் உருளும் சேவை போன்ற மூடநம்பிக்கை எங்கும் நடக்காதவாறு கர்நாடக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என்று தலித் கூட்டமைப்புச் செயற் பாட்டாளர் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பைப் பல்வேறு முற்போக்கு இயக்கத்தினரும், பிற்படுத்தப்பட்ட சாதி அமைப்பினரும், முற்போக்கு மடாதிபதிகளும் வரவேற் றுள்ளனர்.

கர்நாடகத்தில் நடைபெற்ற இரு பெரிய இந்நிகழ்வு களையும் ஊடகங்கள் பெரிதும் வெளிச்சம் போட்டு வெளிப்படுத்தவில்லையென்றாலும், அமைச்சர் ஒருவர் இதுபோன்ற செயலைச் செய்ததினால் வேறுவழியில் லாமல் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது, நாடாளுமன்ற சனநாயகத்தை ஏற்றுக்கொண்டு வாக்கு அரசியலில் விளம்பரமும், அதிகாரமும் அடைந்தவர்தான் சதீஷ் ஜார்கி ஹோலி. ஆயினும், இந்தப் போலிச் சனநாய கத்திலும் ஒரு மனிதன் எந்த நிலையிலும் தனது சமூகக் கடமையை ஆற்றலாம் என்று நிரூபித்திருக் கிறார். “பதவி போனாலும் பரவாயில்லை; மூடநம்பிக்கை ஒழியப் பாடுபடுவேன்” என்று அதிகாரத்தின் மீது அமர்ந்துகொண்டு பேசுவது என்பதும், அதிகாரமற்ற தலித் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களினால் மனித உரிமைகளை வென்றெடுத்தது என்பதெல்லாம் மேதை அம்பேத்கரை ஒழுங்காகப் புரிந்துள்ளனர் என்பதைத்தான் காட்டுகிறது. புரட்சிகர அரசியல் பேசு பவர்களெல்லாம் வாக்கு அரசியலில் வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். முற்போக்குப் பேசுபவர் களெல்லாம் சாதி அரசியலில் சிக்கி முகவரி இழந்து கொண்டிருக்கிறார்கள். தேசிய அரசியல் பேசுபவர்க ளெல்லாம் முதலாளிமார்களுக்குத் தொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். இம்மூன்று வகை பிரிவினருக் கும் சரியான தீர்வு மேதை அம்பேத்கரும், பெரியார் ஈ.வெ.ரா.வும் தான்.

பார்ப்பனியம்தான் இச்சமூகச் சீர்கேட்டுக் கெல்லாம் அடிப்படைக் காரணம் என்று ஆதாரங் களோடு விளக்கியவர்கள் பெரியாரும், அம்பேத் கரும், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களாகிய நாம் என்ன தெரிந்து கொண்டோம் அவர்களிட மிருந்து? பிறவியிலேயே ஒருவனை உயர்ந்தவன் என்றும், தாழ்ந்தவன் என்றும் பிரித்து வைத் தால் தாழ்த்தப்பட்டவன் எப்படி மேலே வருவான்? அவனது சிந்தனை எப்படித் தெளிவாகும்? கடவுள், மதம், சாதி போன்றவைகள் எல்லாம் மேல்சாதிக்காரன், கீழ்ச்சாதிக்காரனைச் சுரண்டு வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட கற்பனைகள். இவைகளையும் மீறிக் கீழ்ச்சாதிக்காரன் திமிரி எழுந்தால் அவனை அடக்குவதற்காக ஏற்படுத் தப்பட்ட ஏற்பாடுகள்தான் பேய், பிசாசு, பில்லி, சூனியம், தலைவிதி, சகுனம், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவைகள் எல்லாம். மேலும் விசுவாசம், நன்றி, எஜமான், அடிமை, நீதி, நேர்மை, பாவம், புண்ணியம் போன்ற வார்த் தைகள் எல்லாம் மேலிருப்பவன் கீழிருப்பவ னைத் தந்திரமாகச் சுரண்டுவதற்காகத்தான். அதனால்தான் “ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு வர்க்கம் அடங்கி இருக்கிறது” என்றார் மார்க்சு.

“பேய், பிசாசு, ஆத்மா, மோட்சம், நரகம் எல்லாம் மூடநம்பிக்கை போட்ட குட்டிகள்” என்றார் பெரியார். இவைகளெல்லாம் பாமர மக்களைச் சுரண்டுகிற வடிவங்கள். அதனால்தான் மேலும் பெரியார் சொன் னார் : “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை; கடவுளை வணங்குகிறவன் முட்டாள்; கடவு ளைக் கற்பித்தவன் முட்டாள்; காட்டுமிராண்டி; கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்; ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர்லோகம் ஆகியவைகளை நம்புகிறவன் மடையன்; அவற்றால் பலன் பெறுகிறவன் மகாமகா அயோக்கியன்” என்றார்.

கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் மக்கள் இன்றும் மூடநம்பிக்கை போதையிலும் சாதிச் சகதியிலும் மூழ்கியபடியே உள்ளனர். பொதுவு டைமை, தேசிய இன விடுதலை, திராவிட அரசியல் போன்றவைகளில் தங்களது அளப்பரிய பங்களிப்பைச் செலுத்துகிற தலித் மக்களை -தலைவர்களை அவர் கள் செத்த பிறகு தனிச் சுடுகாட்டில் புதைக்கும் அவலம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதே போல் சில பகுதிகளில் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சுடுகாட்டுக்குப் பிணம் எடுத்துச் செல்லும் பாதைகளில் கூட ஒடுக்குமுறைகள். தலித்துகள் மட்டும் அன்றாடம் அனுபவிக்கும் கொடுமைகள் இவை. இந்து மதத்தில் இருக்கிற மற்ற சமூகத்தினர் பழக்கவழக்க அடிப்படை யில் விடுதலையாகிவிட்டார்களா? இல்லையே...

மழை பொழிய கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் நடத்துகிறார்கள். நேர்த்திக் கடனுக்கு மொட்டை அடிக்கிறார்கள். முற்றிய தேங்காயைத் தலையில் அடித்து உடைக்கிறார்கள். குழந்தைகளுக்கு நோய் தீர, குழந்தையைப் படுக்க வைத்து மேலே ஏறி பூசாரி நடக்கிறான். குழந்தையை நல்லபடி அழகுபடுத்திக் கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைத்து திருஷ்டி (கண் படுதல்) கழிக்கிறார்கள். தனது எதிர் காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள கிளியிடம் சோசியம் கேட்கிறார்கள். கறுப்பு வண்ணத்தை ஆகாது என்கிறார்கள். வீட்டுக்குள் பேய், பிசாசு வருவதைத் தடுக்கும் வகையில் அடுக்கிய பச்சை மிளகாய் மேல் எலுமிச்சம் பழம் வைத்து வாயிற்படியில் கட்டுகிறார்கள். வெள்ளிக்கிழமை விரதம் என்ற பெயரில் வயிற்றைப் பட்டினிப் போட்டு உடலை வதைத்துக் கொள்கிறார்கள். ஆகாத நாள், நேரம், எண், இடம் என்று ஒதுக்கியும், ஒதுங்கியும் வாழ்கிறார்கள். இன்னும் சமூகத்தில் மண்டிக்கிடக்கும் முட்டாள்தனங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மக்களின் மூடநம்பிக்கை பழக்கவழக்கங் களைக் காலங்காலமாகப் பின்பற்றுகின்ற சாதியப் பழக்கவழக்கங்களை மாற்ற முடியுமா? என்று கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, மாற்றப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் கேள்வி. அப்போது நாம் ஒவ்வொருவரும் பெரியாராக, அம்பேத்கராக மாறலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது சமூகக் கடமையையும், நம் சொந்த கடமையையும் ஒன்றாகக் கருதுவதுதான். அப்போதுதான் தன்னல மற்றவர்கள் தானாகவே பெருகுவார்கள். சாதி ஒழிந்த, சமத்துவமுள்ள சமூகம் உருவாக இதுவே தொடக்கமாக இருக்கும்.

Pin It