சாதியக் கட்டமைப்பு இப்போதும் உடைபடாமல் நீடிப்பதற்கு, சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் எனப்படும் ‘அகமண முறை’, ஒரு முக்கியக் காரணம் என்பதைக் கண்டறிந்தனர். அந்த அடிப் படையில், அகமண முறை உடைபட்டு, சாதி கடந்த காதல் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினர்.
அதனடிப்படையிலேயே சாதி கடந்த திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கி வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக அரசு விதிவிலக்காக, ‘பிராமணப்’ பெண்கள் சொந்த சாதிக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு ரூ. 3 இலட்சம் நிதியுதவி அறிவித் துள்ளது.
அதாவது, ‘பிராமண’ சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சொந்த ஜாதி அர்ச்சகர்கள் மற்றும் புரோகிதர்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ரூ.3 இலட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘மைத்ரேயி திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ள ‘பிராமண’ சமூகத்துக்கு இந்த நிதியுதவி கொடுப்பதற்கான தேவை என்ன, சாதிக்கு எதிராக அரசு செயல்படாமல் சாதிக்குள் திருமணம் செய்து கொண்டால் நிதியுதவி என்று அரசாங்கமே சொல்வது அரசியல் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? என்று கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
திருமணம் என்பது தனிப்பட்ட இருவரின் தேர்வாகும், இவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பிற்போக்குத் தனமானது மட்டுமன்றி பெண் சுதந்திரத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் இளைஞர் பிரிவின் தேசிய பிரச்சாரத் தலைவர் ஒய்.பி. ஸ்ரீவத்சா இதைக் கண்டித்துள்ளார்.
‘பிராமணப்’ பெண்களின் திருமண நிதியுதவிக்கு என்று தனியாக ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கும் ‘அருந்ததி’ என்ற திட்டத்தையும் கர்நாடக பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. கருநாடக பா.ஜ.க. ஆட்சி ‘பிராமண நல வாரியம்’ ஒன்றையும் உருவாக்கியுள்ளது. அந்த வாரியமே இந்த அரசு திட்டங்களை அறிவித்துள்ளது. (‘டைம்ஸ் ஆப் இந்தியா’ கண்ட தலையங்கம் வேறு இடத்தில் வெளியிடப்பட்டுள்ளது)
- விடுதலை இராசேந்திரன்