திண்ணிய தத்துவ மேதை தில்லைவனம் மறைந்தார்!

17-1-2012 இரவு 7 மணி! ‘அப்பா இறந்துவிட்டார்?’ எனக் கைப்பேசியில் கூறிவிட்டுக் ‘கோ’ வெனக் கதறினார், துரைசித்தார்த்தன். அப்போது நான் புதுவையில் என்மகன் வெற்றியின் வீட்டிலிருந்தேன். எனக்குக் கையும் ஓடவில்லை; வாயும் பேச வரவில்லை. அய்ந்து மணித்துளிகள் கழித்து, என் குடும்ப உறுப்பினர்களுக்கும், சென்னை ப.வடிவேலுவுக்கும், திருச்சி இரா.கலியபெருமாளுக்கும் இத்துயரச் செய் தியை அறிவித்தேன். அவர்களும், தமிழேந்தியும் மற்றும் அயலகத்திலுள்ள தமிழ்நாடனும் எல்லோருக்கும் கைப்பேசி வழியாகக் குறுஞ்செய்தியை அனுப்பினர்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த துணைப் பொதுச் செயலாளர்-செயல்வீரர் து.தில்லைவனம் அவர்கள் திடுமென மறைந்தார் என்ற செய்தி, கட்சித் தோழர்கள் அனைவரையும் ஓர் உலுக்கு உலுக்கி விட்டது. அவர்கள் காட்டுமன்னார்கோயிலில் குவிந்தனர். வீரவணக்கம் செலுத்தினர்.

மறைந்த அப்பெருமகனார், 7-1-2012 சனி பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற “மா.பெ.பொ.க. மாணவர்-இளைஞர் சுயமரியாதை, சமதர்ம மாநாட்டை”த் தொடங்கி வைத்து வீர உரையாற்றினார். பின்னும் பத்து நாள்களில் அவர் மறைந்துவிட்டார்.

thilaivanam_250தில்லைவனம் திண்ணிய தத்துவ மேதையாக விளங்கினார். அக்கொள்கைக் குன்றம் இன்று சாய்ந்துவிட்டது.

தில்லைவனம் முறையான வேளாண் பட்டப்படிப்புப் பெற்றவர் (B.Sc. Agri); ஆசிரியர் பட்டப் படிப்புப் பெற்றவர்; சுயமரியாதைச் சுடரொளியாகத் திகழ்ந்தவர்; தம் சிற்றப்பா வேலாயுதம், வீரானந்தபுரம் ஆசிரியர் ந.கணபதி, சின்னபுங்கனேரி கணபதி, மைத்துனர் புலவர் புங்கனேரியான் ஆகியோருடன் இணைந்து காட்டுமன்னார்குடிப் பகுதி முழுவதிலும் தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பிட அயராது உழைத்தவர்.

1952 முதல் நான் ஆண்டுக்கு இருதடவைகளேனும் வீரானந்தபுரம் ந.கணபதி வீட்டுக்குச் செல்வேன். தில்லைவனம் அங்குவந்து என்னுடன் மணிக்கணக்கில் அளவளாவுவார்.

1964 முதல் நான் நிரந்தரமாகத் திருச்சியில் தங்கினேன்; தனிப்பயிற்சிக் கல்லூரி நடத்தினேன். மாதம் ஒரு தடவையேனும் அங்குவந்து என் தொழிலுக்கு ஆக்கம் சேர்த்தார்; அஞ்சல்வழி வினாத்தாள் உருவாக்கும் பணிக்கு வழிவகை கூறினார்.

‘அண்ணி!’ என என் துணைவியார் சுசீலாவை வாய் நிரம்ப அழைத்த என் உற்ற தம்பி அவர்; என் மக்கள்பால் அன்பைப்பொழிவார். என் பள்ளியில் தங்கவரும் பெரியார் தொண்டர்களுடன் பெரியாரின் கொள்கை பற்றிக் கலந்துரையாடுவார்.

திருச்சி சிந்தனையாளர் கழகம் 7-3-1970இல் பெரியாரால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பொதுக்குழு, செயற்குழு மற்றும் நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் வருகை தந்து துணைபுரிவார்.

“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூலுக்குரிய வற்றை எடுத்தெழுதும் பணியை ஆசிரியர்கள் ந.கணபதி, வே.காசிநாதன் இருவரிடமும் ஒப்படை செய்தேன். தில்லைவனம் அடிக்கடி திருச்சிக்கு வந்து அப்பணிக்கு ஊக்கம் அளித்தார்.

17-08-1974 இல், நான் திருச்சியில் “சிந்தனை யாளன்” கிழமை ஏட்டைத் தொடங்கினேன். தில்லை வனம், சின்னபுங்கனேரியான் இருவரும் முறையே கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியும், உறுப்பினர் கட்டணம் சேர்த்தளித்தும் ஆக்கம் தேடினர்.

வேளாண்மைச் சிக்கல்களைப் பற்றியும், அரசியல் நடப்புகளைப் பற்றியும் தோழர் தில்லைவனம் எழுதிய கட்டுரைகள், மற்றும் சுயமரியாதையை விளக்கியும், மூடநம்பிக்கை ஒழிப்பை வலியுறுத்தியும் அவர் எழுதிய சிறுகதைகள் படித்தோர் நெஞ்சங்களை அப்படியே பிணிக்கும் தன்மை வாய்ந்தவை.

“பெரியார் சமஉரிமைக் கழகம்” என்னும் பெயரில் மா.பெ.பொ.க. இயங்கியபோது, 23-3-1979 இல், புது தில்லியில், முதன்முதலாக நடத்தப்பட்ட பெரியார் நூற்றாண்டுவிழாப் பேரணியில் தம் இரண்டாவது மகள் மலர் வாலண்டினாவுடனும் மற்றும் தோழர் களுடனும் ஆர்வத்துடன் பங்கேற்றார். அன்று முதல் இந்தியா முழுவதிலும் சென்று வகுப்புவாரி உரிமைக் குப் பாடுபடும் முயற்சிக்கு எனக்குத் துணை நின்ற வர்களுள் சீர்காழி மா.முத்துச்சாமி, சேலம் எம். இராஜூ, சேலம் அ.சித்தய்யன் அரியலூர் ஆ.செ.தங்கவேலு, து.தில்லைவனம், சங்கமித்ரா ஆகியோர் ஆற்றிய பங்கு அளப்பரியது. அரசுக்கு, வகுப்புரிமை பற்றி எழுத வேண்டிய கோரிக்கை விண்ணப்பத்தை வடிவமைப் பதில் எனக்குப் பேருதவியாகத் திகழ்ந்தவர் தில்லைவனம்.

இவற்றுக்கிடையே, தம் மக்கள் முத்தொளி-கோவிந்தராசு; மலர் வாலண்டினா-பழநியாண்டி; நிலா-தருமலிங்கம், துரை சித்தார்த்தன்-செம்மலர் ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழாக்களை என் தலைமையிலேயே நடத்துவதில் ஒரே குறியாக இருந்தார். என்னைத் தோழனாகவும் தம் கொள்கைக் குடும்பத் தலைவனாகவும் மனமாரக் கருதினார்; அவர் தம் ஆருயிர் துணைவியார் தில்லைநாயகி அவர்களும் என்னை அப்படியே மதித்தார். இன்று, என்னைவிடப் பத்தாண்டுகள் இளையவரான என் உடன் பிறவாத் தம்பி தில்லைவனம் அவர்களை இழந்து ஆறாத் துயரில் இவர்கள் அமிழ்ந்துள்ளனர்; நான் கனத்த நெஞ்சோடு உலவுகிறேன்.

கொள்கைக்குன்றமாக நம் தில்லைவனம் விளங் கினார் என்பது மிகப்பெரிய உண்மை.

வரலாற்றுச் சிறப்புமிக்க தன்மையில், 1991 அக்டோபர் 17, 18, 19 மூன்று நாள்கள் புதுதில்லியில், மவ்லங்கர் மன்றத்தில் ஆறு மாநாடுகளை நடத்தி னோம். தாம் வரமுடியாத நிலையில், தம் துணைவி யார் தில்லைநாயகியையும், மருமகன் கோவிந்தரா சுவையும் அனுப்பி வைத்தார். 1993 மே திங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை உணர்வை வடபுலத்தில் விதைத்திட வே.ஆனைமுத்து, எம்.இராசு, சங்கமித்ரா, பாரதி-சங்கமித்ரா, து.தில்லைவனம், ஆவடி க.நாகராசன் இத்துணைபேரும் ஒரே நேரத் தில், 30 நாள்கள், புதுதில்லியில் ஒரு சத்திரத்தில் தங்கிக்கொண்டு அன்றாடம் குழுக்களாப் பிரிந்து சென்று-பீகார், உ.பி., அசாம், கருநாடகா, ஆந்திரா மாநிலங் களின் மாளிகைகளில் (State Houses) இருந்த அந்தந்த மாநிலத்தாரிடம் கொள்கைப் பரப்புரை செய்தோம். காலையிலும், இரவிலும் கோதுமை ரொட்டி (Bread)மட்டுமே எங்களின் உணவு. எல்லோரும் துறவிகள் போன்றே செயல்பட்டோம். அதை நினைத்தால் ஒரு பக்கம் வேதனையும், மறுபக்கம் சிரிப்பும் வரும்.

மீண்டும், 2001 இல் ஒரே குழுவினராக வே.ஆனை முத்து, சங்கமித்ரா, எம்.இராஜூ, து.தில்லைவனம், இரா.பச்சமலை, சி.பெரியசாமி ஆகிய ஆறு பேரும்-கடன்வாங்கிக் கொண்டு சென்று உத்தரப்பிரதேசத்தில் 30 நாள்கள் பயணம் செய்தோம். அங்கு முனைவர் து.மூர்த்தியின் முயற்சியில் பியாரிலால் லோதி, எச்.எஸ்.யாதவ், அரி சிங் மற்றும் பலரும் சேர்ந்து 31 மாவட்டங்களில் வகுப்புவாரி உரிமை முழக்கத்தை எழுப்பினோம்.

து.மூர்த்தி, சங்கமித்ரா இருவரும் இந்திமொழியில் முழக்கினர். நானும், இரா.பச்சமலை, து.தில்லைவனம், சி.பெரியசாமி ஆகியோரும் ஆங்கிலத்தில் உரை யாற்றினோம். எம் தோழர்களின் ஆங்கிலவழி உரை களை இந்திவழி உரைகளைக் கேட்டு எனக்கு மட்டிலா மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டன. நம் இயக்கக் கொள்கைகளை ஏந்திக் கொண்டு எங்கே வேண்டு மானாலும் சென்றிட ஏற்ற இளவல்கள் நமக்கு இருக் கிறார்கள் என அப்போதே நான் ஊக்கம் பெற்றேன். இப்படிப்பட்ட எங்களை விட்டுவிட்டு-மற்ற எல்லோ ரையும் விட்டுவிட்டு இன்று திலைவனம் மறைந்து விட்டார்.

நான் 22-01-2012 காலையில் எந்த நாற்காலியில் உட்கார்ந்து அழுதுகொண்டே இதை எழுதுகிறேனோ-அதற்கு இரண்டடிகள் தொலைவில் என்னுடன் அமர்ந்து கொண்டு 2003-2004இல் இரண்டாண்டுக் காலம் பெரியாரியம்-அம்பேத்கரியம்-மார்க்சியம் பற்றி மணிக் கணக்கில் கலந்துரையாடிய மாமனிதர் தில்லைவம். 10-10-2004இல் “பெரியாரியல்” நூலின் முன்னு ரையில் இதைப் பதிவு செய்துள்ளேன்.

திருவல்லிக்கேணி சிவ.இளங்கோ கட்டடத்தில் அறை எண்.19, 18 இவற்றிலும், சிந்தனையாளன் அலு வலகத்திலும் து.தில்லைவனம், புலவர் இரா.கலியமூர்த்தி, வே.ஆனைமுத்து மூவரும் பல மாதங்கள் அமர்ந்து “பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்” இரண்டாம் பதிப்புக்கான விரிவாக்கப் பணி, மெய்ப்புத் திருத்தும் பணி இவற்றை இரவு பகலாக மேற்கொண்டோம்.

இத்தொகுதிகளில் அச்சிடப்பட வேண்டிய அடிக் குறிப்புகளுக்கான தரவுகளைக் திரட்டிவரப் பல நூல கங்களுக்கும் அலைந்தவர் து.தில்லைவனம், அ.பெரியசாமி இருவரும் ஆவர். அதே பணிக்காக, திருமுதுகுன்றம் தமிழ்நகர் பல்லடம் மாணிக்கம் நூலகத்தில் வே.ஆனைமுத்து, து.தில்லைவனம், தமிழேந்தி, பாவலர் வையவன், தஞ்சை குப்பு. வீரமணி ஆகியோர் ஒரு கிழமை தங்கித் தரவுகளைத் திரட்டினோம்.

அத்தரவுகளையும், திருத்தப்பட்ட மெய்ப்புகளையும் இரண்டு பெரிய பைகளில் சுமந்து கொண்டு சென்னை நோக்கித் தில்லைவனம் வந்த பேருந்து ஓர் ஓடையில் கவிழ்ந்து, நீருக்குள் அவர் மூழ்கிவிட்டார். அப்போதும் மனக்கலக்கமின்றி, வெளியேறி, சேறுடன் அவற்றைத் தூக்கிவந்து ஒப்படைத்த கடமைவீரர் அவர்.

21-3-2010 இல் “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூல் வெளியிடப்படுகிற வரையில், ஓய்வின்றி உழைத்த உயர் பண்பினர் அவர். ஆ.முத்தமிழ்ச் செல்வனின் உழைப்புக்கு ஊக்கம் அளித்தவர் அவர். அவர் நிமிர்ந்தே உட்காருவார்; சிரித்துக் கொண்டே உரையாடுவார்; பேசுவோரின் நிலை அறிந்து பேசுவார்; நான் கடிந்து பேசினால், சற்றுப் பொறுத்திருந்து மிகமிக நயமாக எனக்கு விளக்கம் கூறி மகிழ்விப் பார்; கட்சி அலுவலகத்துக்கு வரும் தோழர்களோடு கலகலப்பாகப் பேசுவார்; கொள்கை பற்றிய சிக்கல்கள்-அய்யங்களுக்கு ஆழ்ந்த சிந்தனையுடன் அரிய விளக்கங்களை அள்ளித் தருவார்; மதிய உணவுக்குப்பின் சற்றே அயர்வார்; மற்ற நேரம் முழுவதும் மாய்ந்து மாய்ந்து உழைப்பார். உழைப்பும், ஆழ்ந்த சிந்தனையும், புன்முறுவலும், வெடிச் சிரிப்பும் அவருக்கு மட்டுமே உரிய சொத்துக்கள்.

20-11-2008 முதல் மூன்று ஆண்டுகளாக அதிக நடமாட்டம் குன்றிய போதும்-அவருடைய சிந்தனை யில் தடுமாற்றம் இல்லை. அரிய செய்திகளைக் கொண்ட கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதித்தந்து எங்களை மலைக்க வைத்தார்.

ஆனால் இவருடைய உடல்நிலை கெட்டுப் போனதை அறிந்த இளைய அண்ணன் தெய்வசிகாமணி அன்று முதல் உணவு கொள்ள மறுத்தார்.

தம் இரண்டு தம்பிகளுக்கும் இந்தத் துன்பமான நிலைமை ஏற்பட்டுவிட்டதைக் தாங்கிக் கொள்ள முடியாமல் மூத்த அண்ணன் பழமலை 30-1-2009 இல் தன்னை மாய்த்துக் கொண்டார். இளைய அண்ணனும் 20-2-2009 இல் மறைந்தார். “இடும் பைகே கொள்கலம்” ஆன தோழர் தில்லைவனம், இப்பேரிழப்புகளை நெஞ்சுரத்துடன் தாங்கிக் கொண்டு செயல்பட்டார்.

இத்தகு அரிய பண்புகளின்-சீரிய செயல்களின் பெட்டகமாக நம்மிடையே நடமாடிய கொள்கைக் குன்றமாம் தில்லைவனம் சாய்ந்துவிட்டார்; தம் சிந்தனையை நிறுத்திக் கொண்டார். நம் எல்லோரிட மிருந்தும் விடை பெற்றுக் கொண்டார்.

மா.பெ.பொ.க. ஒரு மாபெரும் வழிகாட்டியை இழந்துவிட்டது; அன்னாரின் அன்புத் துணைவியாரும், மக்களும், மருமக்களும் தம் குடும்பத்தலைவரை இழந்துவிட்டனர்; நான் என் ஒருகையாக விளங்கிய தோழரை-என் உடன்பிறவா இளவலை இழந்து தவிக்கிறேன்.

நாம் ஒருவர்க்கொருவர் ஆறுதல் கூறுவோம். தில்லைவனம் விட்டுச் சென்ற பெரும் பணியை நாம் கூட்டாக நின்று தொடருவோம்.

மறைந்த மாமனிதர் தில்லைவனம் புகழ் ஓங்குக! ஓங்குக! என முழுங்குவோம் - வாரீர்!

Pin It