திராவிடர் இயக்கம் பற்றித் தமிழிலும் ஆங்கி லத்திலும் பல அறிஞர்கள் நூல்களை எழுதியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ். சரசுவதி, ஈ.சா. விசுவநாதன், பேராசிரியர் வி. சண்முகசுந்தரம், முரசொலிமாறன், நாவலர் இரா. நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, எஸ்.வி. இராசதுரை, வ. கீதா, எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆகியோர் ஆவர். அயல் நாட்டுக்காரர்கள் ஜூனியர் ஹார்டு கிரீவ் மற்றும் ஒருவர் ஆவர்.

mss pandianஇவர்களுள் மிஞ்சி நிற்பவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆவார்.

முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களும், முனைவர் வி. சண்முகசுந்தரம் அவர்களும் மனமுவந்து “Periyar Era” ஆங்கில மாத இதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பேற்றிருந்தனர். 1994இல், எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இதற்கு அவருடைய ஒப்புதலைப் பெற்றேன்.

முனைவர் வி.சண்முகசுந்தரம் அவர்களை அவரு டைய ஆய்வகத்தில் நேரில் பார்த்து ஒப்புதல் கேட்டேன். அவர், “என்னை ஏன் அழைக்கிறீர்கள்?” என்று கேட்டார். “திராவிட இன அறிஞர் என்பதால் அழைக்கிறேன்” என்று மட்டும் கூறினேன். அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தந்தார். அவர், 2000இல், ஒரு தடவை “Periyar Era” அலுவலகத்துக்கு வந்து, நம் முயற்சியை மனமாரப் பாராட்டிச் சென்றார்.

எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்கள் தம் கட்டிளங் காளைப் பருவத்தில் பெரும் பகுதிக்காலம் “மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் (MIDS)” என்ற தனியார் ஆய்வு நிறுவனத்தில் தலைசிறந்த ஆய்வறிஞராகப் பணியாற்றினார். அவருடைய ஆய்வுக் கட்டுரைகளை, “Economic and Political Weekly” என்னும் கிழமை இதழிலும், “The Hindu” நாளிதழி லும் படித்த திராவிடர் இயக்கத்தினரும், இயக்க ஆய்வு மாணவர்களும் அவரை நேரில் அணுகி வேண்டிய விளக்கங்களைப் பெற்றுப் பயனடைந்தனர்.

அப்படிப்பட்ட சிறந்த அறிஞரைத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தேடி அழைத்துப் பயன்படுத்திக் கொள்ளாதது, திராவிடர் இயக்க ஆய்வுலகத்துக்கு மிகப் பெரிய இழப்பாகும்.

பின்னாளில், தில்லியில் நேரு பல்கலைக்கழகத் தில் உரிய பொறுப்பில் அமர்ந்து, அங்குப் பயின்ற பல்வேறு இந்திய மொழி மாணவர்களுக்கும், திராவிடர் இயக்க ஆய்வு மாணவர்களுக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்ந்தார். மிகச் சில ஆண்டுகளே அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

தமிழகத்தில் பணியாற்றிய காலத்தில் ஒரே ஒரு தடவை அவர் தம் துணைவியாரின் பணியின் நிமித்த மாக என்னைக் கண்டு பேசினார். நல்ல அறிஞர்களைப் போற்றிப் பாதுகாத்துப் பயன்பெறத் தகுதி அற்ற தமிழகம் அவரைப் போற்றி ஊக்குவிக்கத் தவறிவிட்டது.

அத்தகைய பேரறிஞர் தம் பாதி வயதில் - வெறும் 56ஆம் அகவையில் மறைவுற்றது திராவிடர் இயக்கத் துக்கும், திராவிடர் இயக்க ஆய்வுலகத்துக்கும் பெரும் பேரிழப்பாகும்.

இவ்வகையில் பார்ப்பனர்களின் இனவுணர்வை அடையாளங் கண்டு, திராவிடத் தமிழினத் தலைவர்கள் என்போரும், அவ்வப்போது ஆட்சியிலிருப்போரும் - இனியேனும் திருந்த வேண்டும்.

“A Brahmin is communally communal but a non-brahmin is individually communal” என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுத் திராவிடரின் இனப்பற்று அற்ற பகைக் குணத்தை - தன்னல இழிகுணத்தைச் சுட்டிக்காட்டுவார். அறிஞர் எம்.எஸ்.எஸ். பாண்டியனைப் போன்ற பேரறிஞர் களைப் போற்றாப் பயன் துய்க்கத் தெரியாத - தவறி விட்ட தமிழகம் அவருடைய அரிய ஆய்வு முடிவு களின் பயனை இனியேனும் புரிந்துகொண்டு, இனி வாழப் போகும் இளந்தலை முறையினருக்கு அவற் றைக் கொண்டு சேர்ப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதையும் இறுதி அஞ்சலியும் ஆகும்.

Pin It