நூல் அறிமுகம்

நம்மொழி செம்மொழி | முனைவர் கி. இராசா | பக்: 80 | ரூ. 60

வெளியீடு : பார்த்திபன் பதிப்பகம், திருச்சி \ -21

தமிழ்மொழி செம்மொழியாக இருக்கின்ற இன்றைய நிலையில் செம்மொழி என்பது என்ன, செம்மொழி பற்றி இந்தியாவில் நடந்த விவாதங்கள், ஆரியம், திராவிடம், லெமூரியா ஆகியவைகள் பற்றிய அறிமுகங்களும், தமிழ் மொழியில் உள்ள சங்க இலக்கியங்கள் முதல் பிற்கால இலக்கியங்கள் வரை, அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ் நூல் எது என்று, தமிழ் மொழியைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் கேள்வி பதில் வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பு.

இளைஞர்கள் முன்னேற வ.உ.சி காட்டும் நல்வழிகள் (மெய்யறம்)

மரகத மீனாட்சி ராஜா | பக்: 112 | ரூ 50 | வெளியிடு வ,உ,சி வாலேஸ்வரன், மதுரை \ 19

மெய்யறம் என்ற இந்நூல் கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறையில் 1908 முதல் 1912 வரை வ.உ.சி. இருந்த போது அவரால் எழுதப்பட்டது. வ.உ.சி காலத்திலே இந்நூல் மூன்று முறை பதிப்பிக்கப்பட்டது. இந்த மூல நூலில் உள்ள சிவவற்றைத் தேர்ந்தெடுத்து வ.உ.சி. பேத்தியால் தொகுக்கப்பட்ட நூல் இது. இந்நூலில் மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணரியல், மெய்யியல் என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு எளிய சிறிய வரிகளில் இதற்கான கருத்துரைகளும், வ.உ.சி. வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்புச் சட்டமும், சமூகப் புரட்சியும், மக்களும்

நீதிநாயகம் றி.ஙி. சாவந்த், தமிழில்: என். இராமகிருஷ்ணன் | பக்: 74 | ரூ. 45/

சோக்கோ அறக்கட்டளை | மதுரை \-20

நமது அரசியல் சட்டத்தின் முன்னுரையும், கோட்பாடுகளும் இந்தியாவை சோசலிச சமுதாயமாக உருவாக உறுதி பூண்டிருந்தாலும், யதார்த்தத்தில் முதலாளித்துவ சமூகத்தை தோற்றுவிக்கவே இங்குள்ள ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள். நுகர்வு கலாச்சாரம், முதலாளித்துவ வளர்ச்சி, உலகமயம் ஆகிய பெயரில் நவீன காலனியாதிக்கம், அரசியல் வகுப்புவாதச் சக்திகளின் ஆகிக்கம் என்று இருக்கின்ற இன்றைய சூழலில் இந்நூல் ஆசிரியரான உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பி.பி. சாவந்த் அவர்கள் கொச்சி பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய இரண்டு உரைகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்டுரையும் உள்ளன. மேலும் இந்நூல் ஆசிரியர் இந்தியப்பத்திரிகை கவுன்சிலின் தலைவராக இரு முறையும் சர்வதேச பத்திரிகை கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றியவர்.

இந்திய விவசாயிகள் இயக்கத்தின் வரலாறு | ஹர்கிஷன்சிங் சுர்ஜித் தமிழில் : பேரா. ஆர். சந்திரா

பக்: 160 | ரூ. 60 | பாரதி புத்தகாலயம் சென்னை \ 18

இந்திய நாட்டில் எழுபது சதவிகிதத்திற்கு மேலான மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாயப் பொருளாதாரமும் இந்த தேசத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் விவசாயிகளின் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் சங்கம் அமைத்துப் போராடிய வரலாற்றைக் கூறுகிறது இந்நூல். இந்திய விவசாய சங்கத்தின் பவளவிழா வெளியீடான இந்நூலில் உலகமய சூழலில் விவசாயிகளின் நிலை, விவசாயப் பொருளாதாரம், விவசாய சங்கங்களின் செயல்பாடு பற்றிக் கூறப்பட்டுள்ளன.

பள்ளிக்கூடத்தேர்தல் (நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள்)

-\ பேரா. நா. மணி | பக்: 48 | ரூ. 20 | பாரதி புத்தகாலயம் சென்னை \ 18

இன்றைக்கு அரசாங்கம் தருகின்ற ‘நல்லாசிரியர் விருது’ எத்தனை நல்லாசிரியரைச் சென்றடைகிறது? உண்மையில் நல்லாசிரியரைத் தேர்வு செய்யும் தார்மீக உரிமை பெற்றவர் யார்? அரசாங்கமா? மாணவரா? ‘மக்களால் மக்களுக்காக’ எனும் குடியாட்சித் தத்துவம் போல் மாணவனே ஒரு நல்லாசிரியனைத் தேர்ந்தெடுத்தல் எத்தனை அழகான ஜனநாயகச் சிந்தனை? கனவு போன்றும் கற்பனை போலவும் மயக்கம் தரும் இதை நிஜப்படுத்திய அனுபவங்களைத்தான் ஒரு ஆசிரியரின் நேரடிக்குரலில் இந்நூல் விவரிக்கிறது.

Pin It