கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டு வதற்காக ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டுக் கடற் கரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம் போன்ற வடிவத்தைக் கலங்கரை விளக்கம் என்பர். பண்டைக் காலத் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் துறை முகங்களும் அங்குக் கலங்கரை விளக்கு நிலையங்களும் அமைந்திருந்த குறிப்புகள் பழந்தமிழ் நூல்களில் கிடைக்கப்பெறுகின்றன.

light houseபழங்காலத்தில் இருந்த கலங்கரை விளக்கங்களில் தீயும் விளக்குகளும் ஒளி மூலங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்பொழுதுள்ள கலங்கரை விளக்கங்களில் ஒளி மிகுந்த நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

கலங்கரை விளக்குகள் துறைமுகங்களுக்கான பாதுகாப்பாக நுழையும் வழிகளைக் குறித்துக் காட்டு வதற்காகப் பயன்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் பெருமளவில் பயன்பாட்டிலிருந்த கலங்கரை விளக்கங் களின் தேவை இன்று குறைந்து வருகிறது. நவீன வகை யான மின்னணுவியல் வழிசெலுத்தும் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், கலங்கரை விளக்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. பண்டைக் காலத்தில் இதன் தேவை எவ்வாறு மிகுந்து இருந்தன என்பது பற்றிச் சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.

பண்டைக் காலத் தமிழர்கள் கப்பல் போக்கு வரத்திற்காகத் துறைமுகங்களில் கலங்கரை விளக்கங்களை அமைத்துள்ளனர். இது பற்றிய தரவுகள் சங்க இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. தமிழில் இந்தக் ‘கலங்கரை விளக்கம்’ என்பதற்குப் பொதுவகையில் இவ்வாறு பொருள் கொள்கின்றனர்.

கலம் - மரக்கலம், நாவாய்

கரை - அழைக்கிற, கூவுகிற

விளக்கம் - விளக்கு நிலையம்

இந்தக் ‘கலங்கரை விளக்கம்’ குறித்த பதிவுகள் சங்க இலக்கியத்தில் எவ்வாறு சுட்டப்பட்டுள்ளன என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

பரிசில் பெறுதற்குரிய பெரும்பாணன் ஒருவனைப் பரிசில்பெற்றானொருவன் காஞ்சிநகரத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த தொண்டைமான் இளந்திரை யனிடத்து ஆற்றுப்படுத்தியதாக அந்த மன்னனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும் பாணாற்றுப்படையில் தொண்டை நாட்டில் இருந்த கப்பல் துறைமுகம் குறித்தும் அங்கிருந்த கலங்கரை விளக்கம் குறித்தும் ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. அதாவது

வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய வேற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்

துறை................... (பெரும்பாண். 346 - 351)

எனவரும் பாடல் வரிகளில் கலங்கரை விளக்கு நிலைய அமைப்பு குறித்து விளக்கப்படுகிறது.

இதற்குப் பழந்தமிழ் உரையாசிரியர் நச்சினார்க் கினியர் ‘ஆகாயத்தே திரிகின்ற தேவருலகுக்கு முட்டுக் காலாக ஊன்றி வைத்த ஒரு பற்றுக்கோடு போல விண்ணைத் தீண்டும்படி ஓங்கின, தன்னிடத்துச் சாத்திய ஏணியால் ஏறுதற்கரிய தலையினையுடைய, கற்றை முதலியவற்றால் வேயாது சாந்திட்ட மாடத்தே, இராக்காலத்தே கொளுத்தின விளங்குகின்ற விளக்கு, உலாவுகின்ற கடற்பரப்பிலே வந்து நாம் சேரும் துறையன்றென்று நெகிழ்ந்து வேறொரு துறைக்கண் ஓடுங்கலங்களை இது நம்துறை யென்று அழைக்குந் துறை (பத்துப்பாட்டு, 1889, ப. 133). என்று உரைவிளக்கம் கண்டுள்ளார்.

காஞ்சிப் பட்டணத்தை நோக்கிச்செல்லும் பெரும் பாணனைச் சுட்டுவதாக இப்பாடல் வரிகள் அமைந்து காணப்படுவதால், தொண்டை மண்டலத்தில் இருந்த ஒரு துறைமுகத்தையும் அந்தத் துறைமுகத்தில் அமையப் பெற்றிருந்த ‘கலங்கரை விளக்கு’ நிலையம் பற்றிய தாகவும் இருக்கக் கூடும் எனக் கருத இடமுண்டு.

அந்தக் ‘கலங்கரை விளக்கு’ நிலையம் உயரமான கட்டடமாகவும், அது சாந்து (சுண்ணம்) பூசப்பட்டுத் தரவரிசையுள்ளதாகவும் (வேயாமாடமாக) இருந் துள்ளன. அதன் உச்சியில் இரவுப் பொழுதில் தீயிட்டு எரித்துள்ளார்கள். உச்சியில் ஏறி விளக்கு ஏற்றுதற்கு (தீ ஏற்றுதற்கு) ஏணிப்படிகள் கொண்டனவாக அமையப் பெற்றிருந்துள்ளது.

இன்றைக்கு உள்ள கலங்கரை விளக்கு நிலையம் போன்ற அமைப்பிலேயே இரண்டாயிரம் ஆண்டிற்கு முந்தைய கலங்கரை விளக்கு நிலையமும் அமைக்கப்பெற்றிருந்தன என்பதை இந்தப் பாடல் வரிகள் மூலம் அறியவருகிறது. இன்றைய நிலையத்திற்கு முன்மாதிரி வடிவமாகப் பண்டைய ‘கலங்கரை விளக்கு’ நிலையம் இருந்துள்ளமை சிந்திக்கத் தக்கது.

காப்பியச் சிலம்பிலும் கலங்கரை விளக்கம் குறித்த ஒரு குறிப்பைக் காணமுடிகிறது. கடல் ஆடு காதையில் புகார் நகரின் சிறப்புக்களைச் சுட்டுமிடத்துக் காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்புகள் சுட்டப்படுகின்றன. அப்பாடல் வரிகள், சொற்களால் ஓவியம் போல் தீட்டப்பட்டு அன்றைய காவிரிப்பட்டினத்தின் இரவுக் காட்சிகளை நம் மனக்கண் முன் நிறுத்துகிறார் இளங்கோவடிகள்.

பூம்புகார் பட்டினக் கடற்கரையில் இரவுப் பொழுதில் இருந்த விளக்குகளின் வகைகளையெல்லாம் சுட்டுமிடத்து ‘கலங்கரை விளக்கு’ குறித்த ஒரு குறிப்பும் காட்டப்படுகிறது.

வண்ணக் கலவைகளும், சாந்து வகைகளும், மலர்களும், சுண்ணப்பொடிகளும், பணியார வகைகளும் விற்போர் தம் கடைகளில் ஏற்றி வைத்திருந்த விளக்கு களும், தாம் செய்யும் தொழிலிலே சிறப்புடைய ‘கம்மியர்’ அணிகலன் செய்யும் இடங்களில் இருந்த விளக்குகளும், பிட்டு விற்கும் வாணிகர்கள் வரிசை வரிசையாக வைத்திருந்த விளக்குகளும், அப்ப வாணிகர் குடத்தண்டிலே வைத்திருக்கும் கரிய அகல் விளக்குகளும், கள் விற்கும் பெண்கள் தம் கடைகளில் ஏற்றி வைத்துள்ள விளக்குகளும், இடையிடையே மீன்விலை கூறுவோர் வைத்திருந்த விளக்குகளும், கடலிடையே ஓடும் கலங்களுக்கு வழிகாட்டி நிற்கும் கலங்கரை விளக்கும், மீன்களை வலைவீசிப் பிடிப் பதற்காகப் பரதவர்கள் தமது மீன்பிடி படகுகளிலே ஏற்றி வைத்திருந்த விளக்குகளும், வெவ்வேறு தேசத்து மக்களும் வைத்திருந்த விடிவிளக்குகளும், பண்டக சாலையைக் காவல் புரியும் காவலர்கள் கொண்டிருந்த விளக்குகளும், இவ்வாறு எண்ணுவதற்கரிய விளக்கு களால் ஒளிமயமாகத் திகழ்ந்த பூம்புகார் துறை...

அந்நீர்ப்பரப்பிலே தாமரையை வேலியாகக் கொண்ட அழகான மருதநிலம் போல, தாழையை வேலியாக வுடைய நெய்தலங்கானலில் கோவலனுடன் வந்த மாதவி தனது தோழியர் கூட்டத்துடன் விளையாடி மகிழ்ந்தாள். (சிலம்பு, 6. 133 - 151). என்று இளங்கோவடிகள் அந்தக் காட்சியைச் சொல்லிச் செல்கிறார்.

இவற்றுள் கலங்கரை விளக்கைக் காட்டும் பாடல் வரி இவ்வாறு அமைந்து காணப்படுகிறது.

‘இலங்கு நீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்’ (சிலம்பு. 6.141) இதற்கு அரும்பத உரைகாரர் ‘திக்குக் குறிகாட்டிக் கலத்தை (நாவாய்களை) அழைக்கிற விளக்கம்’ என்கிறார். அடியார்க்கு நல்லார் ‘நிலையறியாதே ஓடுங்கலங்களை அழைத்தற்கு இட்ட விளக்கு’ என்பார்.

சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாக அறியப்படுவன நான்காகும். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை முறை இவ்வாறு அமைந்து காணப்படும். கொற்கை - பாண்டிய நாட்டுத் துறைமுகம், புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் - சோழநாட்டுத் துறைமுகம் (சிலம்பு, பட்டினப்பாலை) எயிற்பட்டினம் - ஓய்மானாட்டுத் துறைமுகம் (சிறுபாணாற்றுப்படை), நீர்ப்பெயற்று - தொண்டைநாட்டுத் துறைமுகம் (பெரும்பாணாற்றுப்படை)இவற்றுள் காவிரிப்பூம்பட்டினம், நீர்ப்பெயற்றுத் துறைமுகம் ஆகிய இரண்டு துறைமுகத்திலும் ‘கலங்கரை விளக்கு’ இருந்தமை பற்றிய குறிப்புகள் பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகார நூல்களால் அறியவருகின்றன.

இவற்றிற்கெல்லாம் மேலாக அகநானூற்றில் ‘கலங்கரை விளக்கு’ குறித்த பெயரொன்று சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துகாணப்படுகிறது. மேற் கண்ட பதிவைப் போலல்லாமல் புதியவொரு பெயரில் அப்பதிவு இடம்பெற்றுள்ளது. பிரிவிடை வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்வதாக அமைந்த மதுரை மருதன் இளநாகனார் பாடிய பாலைத் திணைப்பாடலில் ‘கலங்கரை விளக்கு’ என்பது ‘மாடவொள்ளெரி’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பு இடம்பெற்றுள்ள பாடலடிகள் இவ்வாறு அமைந்து காணப்படுகின்றன.

உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்

புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ

இரவும் எல்லையும் அசைவின் றாகி

விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்

கோடுயர் திணிமணல் அகன்துறை, நீகான்

மாட வொள்ளெரி மருங்கறிந்து ஒய்ய (அகம்.255: 1-6)

உலகமே கிளர்ந்து எழுந்தாற்போன்ற அச்சம் பொருந்திய நாவாயானது, வேகமாக வீசும் இயல்பின தாய காற்று அசைத்துச் செலுத்த, இரவு பகலாக ஓரிடத்தும் தங்காது புலால் நாறும் அலைகளையுடைய பெரிய கடலின் நீர்ப் பரப்பைக் கிழித்துக் கொண்டு சென்றது, நாவாய் ஓட்டியும் கரை உயர்ந்த மணல் செறிந்த துறையிடத்தே, ஒளிபொருந்திய விளக்கினால் செல்லும் இடமறிந்து செலுத்தப் பொருளீட்டும் முயற்சியின் பொருட்டு நம் தலைவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றார் (அகநானூறு, 2011, ப. 765). என்று அகநானூற்றுப் பாலைத் திணைப்பாடல் சுட்டுகிறது.

‘மாட ஒள்எரி - கலங்கள் துறையறிந்து வருதற் பொருட்டு உயரிய மாடத்தின்மீது அமைக்கப்பெற்ற ஒள்ளிய விளக்கு. இது கலங்கரை விளக்கம் எனவும்படும்’ என்கிறார் வேங்கடசாமி நாட்டார் (அகநானூறு, 1968, ப. 281). இவ்வாறு மூன்று பழந்தமிழ் நூல்களுள் கலங்கரை விளக்கு குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. அகநானூற்றில் உள்ள கலங்கரை விளக்கு குறித்த பெயர் வேறுபட்டு அமைந்திருப்பது சிந்திக்கத்தக்கதாய் உள்ளது.

சில செய்திகள்

பண்டைக் காலத்தில் கடல் தொழில் சிறப்புற்றிருந்த செய்திகளைச் சங்க இலக்கியங்களில் காணப்படும் கலம், துறைமுகம், கலங்கரை விளக்கு நிலையம் போன்ற தரவுகள் வழி அறியமுடிகிறது.

கடலில் சென்று தொழில் புரிவதற்கு ஏற்ற கலங்களையும் அக்கலங்கள் சென்று வருவதற்கு ஏற்ற பாதுகாப்பான துறைகளையும் அமைத்துப் பண்டைத் தமிழர்கள் கடல் தொழில் செய்த வரலாற்றுக் குறிப்புகள் அக்காலத் தொழில் வளத்தைக் காட்டுவனவாய் உள்ளன; பழந்தமிழரின் தொழில் திறத்தை வெளிப்படுத்துவதாய் உள்ளன.

கடல் தொழிலிற்குப் பாதுகாப்பான வழிமுறைகளை அமைத்துக்கொண்ட தமிழரின் பாதுகாப்புச் சிந்தனையைக் கலங்கரை விளக்கம், கலங்கரை விளக்கு நிலையம் குறித்த பதிவுகளால் அறியவருகின்றன. இந்தப் பதிவுகள், பண்டைத் தமிழர்கள் அறிவார்ந்த நிலையில் கடல் தொழில் புரிந்த வரலாற்றையும் வெளிப்படுத்து வனவாய் உள்ளன. 

துணைநின்ற நூல்கள்

1. சாமிநாதையர், உ.வே. (ப.ஆ.). 1889. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், சென்னை: திராவிட ரத்னாகர அச்சுக்கூடம்.

2. சரவணன், ப. (பதிப்பும் உரையும்). 2008. சிலப்பதிகாரம் (எல்லோர்க்குமான எளிய உரை), சென்னை: சந்தியா பதிப்பகம்.

3. சாமிநாதையர், உ.வே. 1920. சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையும், சென்னை: கமர்ஷியல் அச்சுக்கூடம்.

4. பரிமணம், அ.மா. பரிமணம் & கு.வே. பாலசுப்பிரமணியன் (ப.ஆ.). 2011 (நான்காம் பதிப்பு). சங்க இலக்கியம் அகநானூறு (தொகுதி-2), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

5. வேங்கடசாமி நாட்டார், ந.மு. & வேங்கடாசலம், ரா. (பதவுரை, விளக்கவுரை). 1968. சென்னை: பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாத செட்டியார் உதவியுடன் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு.

Pin It