குழந்தை இலக்கியம் பல பிரிவுகளைக் கொண்டது. பாடல்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. கதைகள் குழந்தைகளுக்கு கற்பனையைத் தூண்டுகிறது. நாடகம் அவர்களின் உணர்ச்சிகளை மீட்டுகிறது. குழந்தை இலக்கியத்தில் வாழ்க்கை வரலாறு என்பது குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டுகிறது. அவர்களின் ஆளுமையை வளர்க்கிறது.

வாழ்க்கை வரலாறு என்றால் என்ன? ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிய கதை. சாதாரண மனிதரைப் பற்றி வாழ்க்கை வரலாறு எழுதப்படுவதில்லை. மனித குலத்திற்கு மாபெரும் பங்களிப்பைச் செய்த மனிதரைப் பற்றியோ, உலகத்தை மாற்றியமைத்த சிந்தனை யாளரைப் பற்றியோ தான் வாழ்க்கை வரலாறு எழுதப்படுகிறது. எனவே அத்தகைய பெரியோரின் வாழ்க்கை நாளைய பெரியோராக ஆகப் போகிற குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமையும் அல்லவா!

child “இன்றுள்ள ஜனநாயக அமைப்பிலே, ஒரு குக்கிராமத்தில் ஒரு சின்னஞ்சிறு குடிசையிலே பிறந்த குழந்தையும், நாளைய குடியரசுத் தலை வராகலாம்; பிரதமராகலாம்; முதலமைச்சரா கலாம்; உலகம் புகழும் விஞ்ஞானியாகலாம்; தொழில் நிபுணராகலாம்; மருத்துவராகலாம்; கவிஞராகலாம்; எழுத்தாளராகலாம்; கல்வி யாளராகலாம்; இசை மேதையாகலாம்; கலைஞ ராகலாம். அவர்கள் அப்படி ஆவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தருபவை வாழ்க்கை வரலாறு களே” என்று கூறுகிறார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா.

குழந்தைக் கவிஞரின் கூற்றின் அடிப்படையிலே தமிழில் ஏராளமாக வாழ்க்கை வரலாற்று நூல்கள் நாட்டுக்கு உழைத்த நல்ல வர்கள், அறிவியல் அறிஞர்கள் சமயச் சான் றோர்கள் என்று வரிசையாக வெளியிடப்பட்டிருக்கின்றன. ‘நல்லவனாக வாழ்’- நல்ல அறிவுரை தான்! எப்படி நல்லவனாக வாழ்வது? நல்லவர் களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தால்தான் நல்லவராக வாழ முடியும்’ என்று இத்தகைய வாழ்க்கை வரலாற்று நூல்களை வெளியிட்டுள்ள பதிப்பகத்தின் விளம்பர வாசகம் கேட்கிறது. சரிதானே!

பொதுவாக வாழ்க்கை வரலாற்று நூல்கள் சார்ந்து எழும் சிக்கல்களை மனதில் கொள்ள வேண்டியுள்ளது.

உயர்ந்த மனிதர்கள் பற்றியே வாழ்க்கை வரலாறு எழுதப்படுகிறது. அந்த உயர்ந்த மனிதர்கள் காலத்தின் படைப்பு. அந்தக் காலத்தைப் புரிந்து கொள்ளும் அளவிற்குக் குழந்தைகள் வரலாற்று அறிவும் உணர்வும் படைத்தவர்கள் அல்ல.

சில நேரம் வாழ்க்கை வரலாற்று நூல்கள் குழந்தைகளிடம் துதிபாடும் தன்மையை (Hero Worship) குருட்டுத்தனமாக வளர்க்கிறது. வாழ்க்கை வரலாற்றை எழுதும் எழுத்தாளரின் பக்கச்சார்பு, விருப்பு வெறுப்புகள் முழு உண்மையைத் தருவ தில்லை. உயர்வு நவிற்சியாகச் சொல்லப்படும் விஷயங்கள் உண்மையை மறைக்கின்றன.

சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல்கள் இந்த சிக்கல்களைத் தாண்டி விடுகின்றன. அத்தகைய நூல்கள் தமிழில் குறைவாகவே உள்ளன.

தமிழில் வாழ்க்கை வரலாற்று நூல்கள் எப்படி இருக்கின்றன? பெரும்பான்மையான நூல்கள் குழந்தைகளைக் கவரும் விதத்தில் இல்லை. இக் குறைபாட்டிற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டி யவர்கள் எழுத்தாளர்களும், அந்த எழுத்தாளர் களின் குறைப்பிரசவத்தை மேலும் அரைகுறையாக வெந்தும் வேகாமலும் வெளியிடும் பதிப்பாளர்களும் தான். குழந்தைகள் படிக்க ஆர்வம் ஊட்டக் கூடியதாகத் தமிழில் வாழ்க்கை வரலாற்று நூல்கள் இல்லை என்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.

இங்கு முதலில் குழந்தைகளின் வயது, மன நிலை, கொள்ளும் அளவுக்கேற்ப வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதப்படுவதில்லை; வரவில்லை.

ஆங்கிலத்தில் அப்படியல்ல. உதாரணமாக டார்வின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் எட்டு வகைகளாக வந்துள்ளன. ஆறு வயது குழந்தைக்கு டார்வின் வரலாறு புகைப்பட வாழ்க்கை வரலாறாக (Photo biography) தரப்படுகிறது. ஏழு வயது குழந்தைக்குப் புகைப்படங்களுடன் வாழ்க்கைக் குறிப்புகளும் விவரங்களும் உள்ள நூல் தரப் படுகிறது. ஒன்பது வயது குழந்தைக்குத் தேவையான அளவு புகைப்படங்களும் டார்வின் வாழ்க்கை, ஆய்வு முயற்சிகள், இறப்பு வரை விவரங்கள் தரப்படுகிறது.

பத்து முதல் பன்னிரண்டு வயது வரை குழந்தைகளுக்கு மேலும் விவரங்கள் சேர்க்கப் படுகின்றன. மேலும் பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நூல்கள் பெரிய அளவிலும் பல வண்ணங்களிலும் அச்சிடப்பட்டுள்ளன. அதற்கு மேல் வயதுள்ள குழந்தைகளின் நூல்களில் டார்வினின் முழு வாழ்க்கையும் ஆய்வு விவரங்களும் தரப்படுகின்றன. ‘மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான்’ என்ற அவரது முடிவுக்கு எழுந்த மத ரீதியான எதிர்ப்புகள், சர்ச் பிஷப் எழுதிய கடிதங்கள், அதற்கு டார்வினின் பதில்கள், சம காலத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் ஆதரவுக் கடிதங்கள் என விவரங்கள் சுருள் கம்பியாக விரிந்து செல்கின்றன.

தன் குழந்தையின் வயதிற்கேற்ப ஒரு நூல் இருக்கிறதா என்பதை யோசிக்காமல் அதிக செய்திகள், அதிக விவரங்கள், அதிக பக்கங்கள் கொண்ட நூல்களை வாங்க வேண்டும் என்று நினைக்கிற பெற்றோரின் புரிதல் நிலையும் இங்கு பலவீனமாக இருக்கிறது.

எத்தகைய படைப்பாக இருந்தாலும் குழந்தை எழுத்தாளர் குழந்தையின் மன நிலையிலிருந்து தான் எழுத வேண்டும். அந்த நிலைப்பாடு வாழ்க்கை வரலாற்றை எழுதுவதிலும் பொருந்தும்.

ஒரு பாடலோ, கதையோ எழுதக் கற்பனை போதும். வாழ்க்கை வரலாறு எழுத உண்மையும் ஆதாரங்களும் வேண்டும். அதனால் வாழ்க்கை வரலாறு எழுதும் எழுத்தாளனுக்குத் தேடலும் உழைப்பும் அவசியம்.

பாரதியாரைப் பற்றி எழுதும் போது எட்டையபுரத்தை எட்டிக் கூடப் பார்க்க வில்லை என்றால் எப்படி? பத்து புத்தகங்களைப் புரட்டி விட்டு பத்தோடு பதினொன்றாக ஒரு நூலை எழுதும் போக்கு அதிகமாகி விட்டது. நூறு பூக்களில் இருந்து தேனைச் சேகரிக்கலாம். தேன் பாட்டிலிருந்து உறிஞ்சுவது எப்படி?

வாழ்க்கை வரலாற்று நூல்கள் செயற்கையாக, தயாரிக்கப்படுவதாக இல்லாமல் உயிரோட்டமாக எழுதப்படவேண்டும். ஏனென்றால் வாழ்க்கை வரலாறு என்பது ஒருவரின் வாழ்க்கை, அதில் உயிர் இருக்க வேண்டும். செய்திகளும் விவரங் களும் மட்டுமே வாழ்க்கை வரலாற்று நூலை உயிரோட்டம் உள்ளதாக ஆக்க முடியாது.

தன் மகனுக்கு ஒரு தந்தை தன் தந்தையின் வாழ்க்கையைச் சொல்லும் போது தன் தந்தை பிறந்த வீட்டைக் காட்ட மாட்டானா? வளர்த்த தென்னை மரத்தைக் காட்ட மாட்டானா? வாழ்க்கை வரலாற்று நூல் கடந்த காலத்தைக் குழந்தையின் முன்னே விவரிக் கிறது. அப்போது அது அடையாளங்களுடன் தான் பேச வேண்டும்.

இத்தகைய ஜீவனுள்ள அடையாளங்களுடன் தடங்களுடன் மகாகவி பாரதியின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் ‘சித்திர பாரதி’ தந்துள்ளது. யார் செய்த புண்ணியமோ? ‘பாரதி அறிஞர்’ ரா. அ. பத்மநாபன் எழுதியுள்ள நூல் அது.

மகாகவி பாரதி பற்றி 220 அரிய புகைப் படங்களுடன் உள்ளது. மருந்துக்குக் கூட ஒரு புகைப்படம் கூட இல்லாமல், ஓவியம் கூட இல்லாமல் நூற்றுக்கணக்கான குழந்தை வாழ்க்கை வரலாற்று நூல்கள் தமிழில் வந்து கொண்டு இருக் கின்றன. ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு நூல் ‘சித்திர பாரதி’, சித்திர பாரதி பெரிய அளவில் கெட்டி அட்டையில் அச்சிடப்பட்டு உள்ளது.

தமிழில் அபூர்வ செயல். வாழ்க்கை வரலாற்று நூல்களில் எழும் சிக்கல்களைத் தாண்டும் விதமாகத் தென் தமிழ்நாட்டின் வரை படம். 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு எட்டயபுரத்தைப் பற்றிய விவரங்கள், படங்கள், பாரதியின் குடும்ப வமிசாவளி வரைபடம், பாரதியின் கையெழுத்தில் உள்ள பாடல்கள், கடிதங்கள், பாரதி காலத்தில் வாழ்ந்த தலைவர்களின் படங்கள், காசி கங்கைக்கரை, புதுச்சேரி என்று எல்லாச் செய்திகளும் வரலாற்று உணர்வுடனும் ஆதாரத்துடனும் தரப்படுகிற நூலாக ‘சித்திர பாரதி’ உள்ளது.

சித்திர பாரதி பன்னிரண்டு முதல் பதினாறு வயது வரை உள்ள பிரிவினருக்கு என்றால் நேஷனல் புத்தக டிரஸ்ட் வெளியீடாக வந்துள்ள ‘பாரதியார்’ என்ற நூல் ரா. அ. பத்மநாபனே எழுதியது, ஆறு முதல் பன்னிரண்டு வயது குழந்தைகளுக்குரியது ஆகும். ஓவியர் இரவிவர்மாவிற்கு ஈடாகச் சொல்லத்தக்க வரான ஓவியர் கோபுலுவின் கை வண்ணத்தில் நிறைய ஓவியங்களும் புகைப்படங்களும் நிறைந்த நூலாக, கையடக்கமான நூலாக வயதிற்கேற்ப உருவான இன்னொரு ‘சித்திர பாரதி’.

தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களுக்கு துணைப்பாட நூல்களாகத் தரப்பட்டுள்ள நூல்களின் தன்மையை எண்ணிப் பாருங்கள். அவை குழந்தைகளுக்குப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துமா?

1983-ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர் களுக்கு மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு ‘என் வாழ்க்கைக் கதை’ என்ற பெயரில் தரப் பட்டுள்ளது. மேலட்டையில் கூட காந்தியின் படம் இல்லை. மேலட்டையிலே படமில்லை யென்றால் உள்ளே இருக்குமா? வாசல் இல்லாத வீட்டிற்கு உள்ளே விளக்கும் இல்லை.

காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனையின் சுருக்கந் தான் எனினும் குழந்தைகளுக்குரியதாக இல்லை. இது போலவே விநோபா பாவே நூலும் அன்னை தெரசா பற்றிய நூலும் உள்ளது. ‘கப்பலோட்டிய தமிழன் நூலில் கப்பல் படம் கூட இல்லை. கல்வித் துறைக்குக் குழந்தை இலக்கியம்பற்றி எந்த சிந்தனையும் இல்லை என்பது தெளிவாகிறது.

1960-70களில்தான் நாட்டுத் தலைவர்கள் பற்றி விடுதலைக்கு உழைத்த வீரர்களைப் பற்றி நிறைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் வந்தன. விடுதலை அடைந்த பத்தாண்டுகளில் மறந்துவிட்ட தலைவர்களைப் பற்றி நினைவுபடுத்துவதற்காக அந்நூல்கள் எழுதப்பட்டனவோ என்னவோ! தலைவர்களில் மகாத்மா காந்தி பற்றியே அதிக நூல்கள் எழுதப் பட்டுள்ளன.

‘பாட்டிலே காந்தி’, ‘பாப்பாவுக்கு காந்தி’ வாழ்விக்க வந்த காந்தி’ பற்பல விதங்களில் வந்தாலும் உரைநடைக்கே முக்கியத்துவம் உள்ள தாக இருக்கின்றன. ‘பாப்பாவுக்கு காந்தி’ என்ற நூல் தி.ஜ.ர. எழுதியது.

நூலின் தொடக்க வரியே ‘காந்தி நாட்டுக்கு சுதந்தரம் வாங்கித் தந்தார்’ என்று ஆரம்பிக்கிறது. நூற்றுக்கணக்கான மக்களும் பங்கேற்ற சுதந்தர வேள்வியை இவ்வரி கொச்சைப் படுத்துகிறது. வரலாற்று உண்மையைத் தட்டை யாக்கும் நூல்களாகவே தமிழில் காந்தியைப் பற்றிய நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதிய ‘பெரியோர் வாழ்விலே’ இரண்டு நூல்கள் வாழ்க்கை வரலாற்று நூல்கள் இல்லையென் றாலும் பெரியோரின் வாழ்வில் நடந்த சுவையான சிறு வயது நிகழ்ச்சிகளைப் புதுமையான உத்தியில் தருபவை.

‘குழந்தைகள் உலகம்’ ஏ.ஜி.எஸ். மணி வாழ்க்கை வரலாற்று நூல்களைச் சிறப்பாக எழுதியவர். புரியும் வார்த்தைகளும் எளிமையான நடையிலும் அவர் எழுதிய ‘எடிசனின் கதை’ வண்ணங்களில் அச்சிடப்பட்ட படங்களுடன் பெரிய எழுத்துகளில் உள்ளது.

அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் தமிழில் நிறையவே வந்துள்ளன. நமது குழந்தைகளின் அறிவியல் உணர்வைத் தூண்டி அவர்களைக் கண்டுபிடிப்பாளர்களாக மாற்றும் வித்தையை அந்நூல்கள் செய்யவே இல்லை.

குறை நூல்களிடமா? இல்லை. குழந்தைகளிடமா? இல்லை. சமுதாயச் சூழல் அப்படி. பழமையின் பிடிப்பு தளரவில்லை. படிப்பு தாய்மொழியில் இல்லை. அந்நிய மொழியில் படிப்பதின் நோக்கமே வயிற்றைக் கழுவுவதற்கு என்றால் அங்கே மூளைக்கு வேலையில்லை. சுய சிந்தனைக்கும் இடமில்லை. இங்கே எழுதப்படும் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் விழலுக்கு இறைந்த நீராகும்.

சமயச் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களும் மாணவர்களுக்காக எழுதப்படுகிறது. புத்தர், விவேகானந்தர், இயேசுநாதர், நபிகள், இராமானுஜர் போன்ற மனிதகுலத்திற்குச் சேவை செய்தவர்களின் முக்கியத்துவத்தைக் குழந்தைகள் உணர்ந்துகொள்வது அவசியமே.

உலகத்தையே மாற்றியமைத்தவர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மா.சே.துங் வாழ்க்கை வரலாறும் மிக முக்கியத்துவம் கொண்ட வையே, குழந்தைகளுக்கு உணர்வு பூர்வமாக லெனினை அறிமுகப்படுத்தும் மாக்சிம் கார்க்கி எழுதிய ‘லெனின் கதை’ எடுத்துக்காட்டான நூலாகும்.

ஆகா! எவ்வளவு தலைவர்கள், அறிஞர்கள், ஒப்பற்ற மனிதர்கள். உலக வரலாற்றையே உரு வாக்கிய வரலாறு அவர்களுடைய வாழ்க்கை வரலாறு. இவர்களின் வாழ்க்கையிலிருந்து சேவை, பொதுநலன், போர்க்குணம் ஆகியவற்றைச் சென்ற தலைமுறை வரை குழந்தைகள் கற்றுக் கொண்டனர்.

ஆனால் இப்போது புதிய போக்கு தலை தூக்குகிறது. சமீப காலத்தில் காந்தி, பாரதி, பகத்சிங், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், காமராஜர், ஜீவா போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு எல்லாம் விதந்தோதப்படுவதில்லை.

இவர்கள் இன்றைய இளைய தலைமுறையின் முன்மாதிரிகள் (Role Model) இல்லை. எதற்கென்று தெரியவில்லை. புரட்சியாளர் சேகுவாரா டி சர்ட்டுகளில் டிசைன் போல் அச்சிடப்பட்டு இளைஞர்கள் புரியாமலே அணிந்து கொள்கிறார்கள்.

‘அனைத்துக்கும் ஆசைப்படு’ என்று ஒரு சாமியார் பிரசங்கிக்கிறார், நுகர்வோர் கலாச் சாரத்தை வளர்க்கவோ, என்னவோ! விவேகானந்தரை விடவா, வர் பெரியவர்.

‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’. உலகத்தை உய்விக்க உழைத்த உத்தமர்களின் வாழ்க்கையைப் படிப்பது என்பது வளரும் பயிரான குழந்தைகளுக்கு உரமாகப் பயன்படும் ஒன்று.

வாழ்க்கை வரலாற்று நூல்கள் வரலாற்றின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்துவதாகும். மறக்க முடியாத மனிதர்களுக்குக் குழந்தை களின் மனதில் எழுப்பப்படும் நினைவு கல்வெட்டுகளாகும். குழந்தை இலக்கியத்தில் வாழ்க்கை வரலாற்று நூல்களின் முக்கியத்துவத்தைத் தமிழ்ச் சமூகம் உணருவது மிக அவசியம்.

Pin It