அந்தக் காலங்களில் வீடுதோறும் பின்புறத்தில் கிணறு இருக்கும். வீட்டின் பின்புறத்தைக் கொல்லைப் புறம் என்று சொல்வர். புதிதாக வீடு கட்டுபவர்கள் முதலில் கிணறுதான் தோண்டுவார்கள். பிறகுதான் மற்ற வேலைகளைத் தொடங்குவர். கிணற்றை ஒட்டிய பகுதியைக் கிணற்றடி என்றழைத்தனர். துவைப்பதற்கு கல் போடப்பட்டிருக்கும். கிணற்றிற்கு இரண்டு பக்ககமும் தூண் எழுப்பி இரண்டு தூண்களையும் நீண்ட சட்டத்தால் இணைத்திருப்பர். அந்தச் சட்டத்தின் மீது உருளை இருக்கும். பிற்காலத்தில் அது இரும்பு ராட்டினமாக மாற்றப்பட்டது.

wellஅதில் நீண்ட கயிற்றினைப் போட்டு நுனியில் வாளியைக் கட்டி கிணற்றில் இருந்து நீரை இறைப்பர். இந்த சின்ன வாளியை ‘கடகா’ என்கிற பெயரிலும் அழைத்தனர். கிணற்றில் இருந்து நீரை இறைத்து ஆண்கள் அப்படியே தலையில் ஊற்றிக் குளிப்பார்கள். இது ஒரு வகையான உடற்பயிற்சியாகக் கருதப்பட்டது. இந்த நீர் போய் பாய்வதற்கென்று பூச்செடிகள், வாழைக் கன்றுகள் கொல்லைப் புறத்தில் வளர்ப்பார்கள். சில வீடுகளில் கிணற்று நீர் குடிக்க உகந்ததாக இருக்கும். பெரும் பாலான வீடுகளில் தண்ணீர் சற்று உப்பு கலந்தாற் போன்று இருக்கும்.

மற்ற புழக்கத்திற்குக் கிணற்று நீரைப் பயன்படுத்திக் கொண்டு குடிநீருக்குத் தாய்மார்கள் வேறு இடம் சென்று எடுத்து வருவார்கள். இந்தக் கிணற்றை வருடந்தோறும் சுத்தம் செய்வார்கள். அதற்கு ‘தூர் வாருதல்’ என்று பெயர். தூர் வாரும் தொழில் செய்ய ஊருக்கு நான்கு பேர் இருப்பார்கள். சரியாகக் கணக்கு வைத்து வருடந்தோறும் அவர்களே வீடு தேடி வந்து விடுவர். சாப்பாடு போட்டு ஐந்து ரூபாய் கொடுத்தால் போதும்.

கிணற்றில் இறங்கிக் கிணற்றை நன்கு சுத்தம் செய்து விடுவார்கள். கவிஞர் நா.முத்துக்குமாரின் தூர் என்ற கவிதையில் கிணற்றில் தூர் எடுத்தபோது கிடைத்த பொருட்களின் பட்டியலில் வேலைக்காரி திருடியதாக சந்தேகப்பட்ட வெள்ளித் தம்ளர் ஒன்று என்கிற வரி வாசிப்போரின் மனதைத் தொடும்.

கிணற்றை வைத்துப் பல பழமொழிகள் பயன் படுத்தப்படுகின்றன.

‘கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல’
‘பாதிக் கிணறு தாண்டிய கதையாய்’
‘தோட்டத்தில் பாதி கிணறு’
‘கிணற்றுத் தண்ணியை வெள்ளமா கொண்டு போகப் போகிறது’
‘அவன் ஒரு கிணத்துத் தவளை’
‘கிணத்தில போட்ட கல்லாய்..’
இறைக்க இறைக்கத்தான் கிணறு ஊறும்’

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். “வீட்டில் இருக்கிற அண்டாவுக்கு அடைப்பில்லை” என்று கிணற்றிற்கு விடுகதையும் போடுவார்கள்.

‘மல்லாங்கிணறு’, ‘கிணத்துக் கடவு’, ‘நாரைக் கிணறு’, ‘காவல்கிணறு’ போன்ற பெயர்களில் ஊர்களும் இருக்கின்றன. திருச்செந்தூரில் ‘நாலிக் கிணறு’ என்ற நல்ல தண்ணீர் கிணறு உள்ளது. வள்ளி நாழிகை நேரத்தில் தோன்றியதாம்...

அதனால் இதன் பெயர் நாழிகைக் கிணறு. இது நாளடைவில் நாலிக் கிணறு ஆகிவிட்டதாம். புக்கத்தில் கடல் நீர் உப்பாக இருந்தபோதிலும் இதில் நல்ல தண்ணீர் எடுக்க... எடுக்க... வருவது இதன் தனிச்சிறப்பு ஆகும். கிணற்றைச் சில பகுதிகளில் ‘கேணி’ என்று விளிக்கிறார்கள். அதனால்தான் கல்வியின் சிறப்பைச் சொல்ல வந்த வள்ளுவர்...

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” என்கிறார்.

கிராமங்களில் தற்கொலை செய்யும் பெண்கள்
நீர் நிறைந்த கிணறுகளைத்தான் தேர்ந்தெடுப்பர்.

வறுமையின் கொடுமையால் பெற்ற பிள்ளைகள் ஏழு பேர்களையும் கிணற்றில் தூக்கிப் போட்டுத் தானும் விழுந்ததாக “நல்லதங்காள்” கதை சொல்லுகிறது.

“ஓவ்வொரு பிள்ளையாக நல்லதங்காள் கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து தாயின் காலைக் கட்டிக்கொண்டன. காலைக் கட்டிய பிள்ளையைப் பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டு விட்டாள். மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான். ‘என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே’ என்று கெஞ்சினான்.

தப்பிப் பிழைத்து அம்மா - நான்
தகப்பன் பேர் சொல்லுவேன்
ஓடிப்பிழைத்து அம்மா--நான்
உனது பேர் சொல்லுவேன்
என்று சொல்லித் தப்பித்து ஓடினான்.

ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள். இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக் கொண்டு வந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்துக் கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள்.

ஏழு பிள்ளைகளும் கிணற்றில் இறந்து மிதந்தார்கள்”
--என்கிற ரீதியில் விருதுநகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் இன்றளவும் பெரியோர்களால் பேசப்படுகிறது.

பெண்களுக்குப் புகுந்த வீடு சரி இல்லை என்றால் “பாழுங் கிணத்தில பெண்ணைத் தள்ளி விட்டார்கள்” என்கிற சொற்றொடரைப் பயன்படுத்துவோர் இன்று நகரங்களில் கூட இருக்கிறார்கள்.

வாசுகி கிணற்றில் தண்ணீர் இறைக்கும் போது... வள்ளுவர் அழைக்க... வாளியை அப்படியே விட்டபடி சென்றாளாம் வாசுகி. வாளி கிணற்றுக்குள் விழாமல் நின்றதாகச் செவி வழிச் செய்தி ஒன்று உண்டு.

சமீப வருடங்களில் நகரங்களில் பிறக்கும் பிள்ளைகள் கிணற்றைப் பார்த்திருக்க மாட்டார்கள். வீடுகளில் கிணறுகள் மூடப்பட்டு ஆழ்குழாய் தோண்டி விட்டோம். கிணற்றடி குழாயடியாய்ப் போயிற்று. கொல்லைப்புறங்கள் அழிக்கப்பட்டு சின்னஞ்சிறு அறைகள் அடங்கிய வீடாக்கப்பட்டு வாடகைக்கு விட்டு விட்டோம். கிராமங்களில் விளைநிலங்களில் மட்டும் பம்ப் செட்டுடன் கிணறுகள் இருக்கின்றன. ஊருக்குள் பொதுக்கிணறுகள் மூடப்பட்டு மேனிலை தண்ணீர்த் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

1935ஆம் வருடத்தில் மானாமதுரையில் காந்தி பொதுக்கிணறு என்ற பெயரில் அரிஜனங்களும் பயன்படுத்தும் வகையில் கிணறு தோண்டப்பட்டது. இதற்கு நன்கொடையாக அந்தக் காலத்திலேயே காந்திஜி நூறு ரூபாய் வழங்கி இருக்கிறார். சுதந்திரப் போராட்டத் தியாகி பி.எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் தலைமையில் இராஜாஜி முன்னிலையில் காந்திஜி பொதுஜன உபயோகத்திற்காக இதனை அர்ப்பணித்திருக்கிறார். 1980 வரையில் இந்தக் கிணறு காந்தி சிலை அருகில் உபயோகத்தில் இருந்தது. இப்போது அந்தக் கிணறு இருந்த இடம் தெரியவில்லை. அங்கு வணிக வளாகம் கம்பீரமாகக் காட்சி தருகின்றது.

பெரியாரை சிராவயல் கிராமத்தில் அரிஜனங்களுக்காகத் தனிக்கிணறு தோண்டும் பணியைத் தொடங்கி வைக்க அழைத்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் உங்களுக்காகத் தனியாகத் தண்ணீர்க் கிணறு தோண்டுவதை விட பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கப் போராட வேண்டும் என்று பெரியார் பேசி இருக்கிறார்.

கிராமங்களில் அந்தக் காலங்களில் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க அரிஜனங்களுக்கு அனுமதி கிடையாது. பிற ஜாதியினர் தண்ணீர் இறைக்கும் போது ஓரமாக நின்று தண்ணீரைக் குடத்தில் ஊற்றச் சொல்லிப் பிடித்துச் செல்ல வேண்டும். இதனை அறிந்து மகாகவி பாரதி “கிராமங்களில் பறையர்களைப் பற்றிப் பேசு... அவர்களை ஒன்று திரட்டு... விபூதி நாமத்தைப் பூசும் பள்ளிக்கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு” என்று எழுதினார்.

ஒவ்வொரு கோயிலுக்கும் முன்பாக கிணறுகள் இருந்திருக்கின்றன. இப்போது அவைகளும் கூட மூடப்பட்டுவிட்டன அல்லது உபயோகமற்றுப் போய் விட்டன. கோயில்களிலும் குழாய் இணைப்புக் கொடுத்து விட்டோம். இராமேசுவரத்தில் கடலில் குளித்துவிட்டு... கோயிலுக்குள் 21 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவது வழக்கம். இவற்றை ஆன்மீக மொழியில் ‘தீர்த்தங்கள்’ எனச் சொன்னாலும் நிஜத்தில் இவைகள் கிணறுகளே..!

மானாமதுரை ஆனந்தவல்லி ஆலயத்திற்கு எதிரில் ஒரு கிணறு இருந்திருக்கிறது. இது “சந்திரபுஸ்கான்” என்ற சமஸ்கிருதப் பெயரில் அழைக்கப்பட்டதாகச் சொல்வர். இந்தக் கிணற்று நீருக்குத் தொழுநோயைக் குணப்படுத்து கின்ற தன்மை உண்டாம். அதனை அடிப்படையாக வைத்து கிருத்துவ மிசினரி மானாமதுரையில் தொழு நோய் மருத்துவ மனையைத் தொடங்கினார்களாம் அதுதான் இன்றும் செயல்படுகிற தயாபுரம் தொழுநோய் மருத்துமனை என்று பெரியோர் சொல்லக் கேள்விப் பட்டதுண்டு.

திரைப்படங்களைப் பொறுத்த வரையில் கறுப்பு வெள்ளைக் காலத்தில் இருந்து கிணற்றடியைக் காட்டி இருக்கிறார்கள். காதலர்கள் இந்தக் கிணற்றடியில் காதல் காட்சியில் பாடி ஆடுவதாக ஒரு காட்சியாவது அமைத்திருப்பார்கள். ரஜனிகாந்த் நடித்த படையப்பா படத்தில் வித்யாசமான கிணறு காட்டப்படும். ஆம் திருமணம் ஆகப் போகும் இணைகளை விருப்பம் கேட்பார்.

விருப்பம் இல்லையெனப் பதில் வந்தால் அந்தத் திருமண தாம்பாளத்தை அதில் உள்ள பொருட்களோடு அந்தக் கிணற்றில் போட்டு விடுவார்கள். நகைச்சுவை நடிகர் வடிவேல் ஒரு படத்தில் கிணற்றையே காணவில்லையென காவல்துறையினரை அழைத்து வந்து ரசிகர்களைச் சிரிக்க வைப்பார்.

தொழில்நுட்ப வளர்ச்சி நவீன நாகரிகம் முதலியனவற்றால் விளைந்த வசதிகளை நாம் ஏற்காமல் இருக்க முடியாது. இருந்தாலும் கிணற்றைப் பயன் படுத்திய பழைய காலங்களை அது தொடர்பான செய்திகளை... இன்றியமையாத தகவல்களை... நினைத்து அசைபோடுவதில் ஒருவிதமான மனச்சுகம் இருக்கத்தானே செய்கிறது.

Pin It