கோவையில் ஜுன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு அங்கமாகத் தமிழ் இணைய மாநாடும் நடைபெற்றது. இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழின் தரத்தை உயர்த்தத் தமிழிணைய மாநாடுகள் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தமிழ் இணைய மாநாட்டின் சிறப்புகள் குறித்து தமிழ்இணைய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், கணித் தமிழ்ச்சங்க தலைவருமான மா. ஆண்டோ பீட்டர் விளக்கினார்.

தமிழ் இணைய மாநாட்டின் சார்பாக ஆய்வரங்கங்கள், இணையதள கண்காட்சி மற்றும் மாணவர்களுக்கான தமிழ்க் கணினி போட்டிகள் நடைபெற்றன. ஆய்வரங்கத்தை 24 ஆம் தேதி சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஈஸ்வரன் மற்றும் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா அவர்களும் தொடங்கி வைத்தார்கள். மாநாட்டில் ஐந்து ஆய்வரங்கங்கள் அமைக்கப்பட்டன. முரசொலிமாறன், யாழன் சண்முக லிங்கம், சுஜாதா, ஓமர் தம்பி, நா. கோவிந்தசாமி ஆகியோரின் பெயரில் ஆய்வரங் கங்கள் அமைக்கப்பட்டுச் சிறப்பிக்கப் பட்டது. மாநாட்டில் 130 தமிழ்க் கணினி ஆய்வுக்கட்டு ரைகள் விவாதிக்கப்பட்டன. 428 ஆய்வு அறிஞர்கள் பல உலக நாடுகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர். ஆய்வரங்கங்களில் தமிழ்க்கணினி அப்ளிகே­ன்கள், யுனிகோட், தமிழ் மொழியியல், தமிழ் மின்கல்வி, ஈ கவர்னன்ஸ், செல்பேசிகளில் தமிழ் ஆகிய தலைப்புகளில் ஆராய்ச்சி விவாதங்கள் நடைபெற்றன.

semmozhi_meeting_stalin

தமிழ் இணையதளக் கண்காட்சியில் மொத்தம் 126 அரங்குகள் இடம்பெற்றன. தமிழ் மென்பொருள்கள், பத்திரிகைகளின் இணையங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு மையங்கள் ஆகியன தங்கள் தமிழ்க்கணினிச் செயல்பாடுகளை விளக்கின. மைக்ரோசாஃப்ட், சிடிஎஸ், சிங்கப்பூர் கல்வித் திட்டம், என்ஐசி, எல்காட் எனப் பெரிய நிறுவனங்களும் கண்காட்சியில் கலந்து கொண்டன.

தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ்க் கணினி போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்களுக்கு அனிமே­ன் போட்டிகளும், கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா இணையபக்க வடிவமைப்பு போட்டிகளும் நடைபெற்றன. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் தமிழகத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பரிசளித்துச் சிறப்பித்தார்கள்.

மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை டாக்டர் மு. ஆனந்தகிருஷ்ணன் நம்மிடையே விளக்கினார்.

1. அ) சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ்க்கணினி ஆய்வுமையங்கள் தொடங்க வேண்டும்.

கணினித் தொழில்நுட்பத்தையும் பொறி யியலையும் முழுமையாகத் தமிழில் சொல்லிக் கொடுப்பதற்கான பயிற்சி முறைகளை உருவாக்குதல்.

கணினி கைக் கருவிகளில் (செல்பேசி, மின் படிப்பான்கள் போன்றவை) தமிழை முழுமையாக இயங்கவைக்கத் தொழில்நுட் பங்களை உருவாக்குதல்.,

கணினியால் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தமிழ் இலக்கணம், அகராதிகள், களஞ்சியங்கள், தரவுகள் போன்ற பல மொழிமூலங்களை உருவாக்கி, தொடர்ந்து அவற்றைப் புதுப்பித்துக்கொண்டே இருத்தல்.

2. தமிழக அரசு வாங்கும் கணினிகளிலும், தமிழக அரசு நிதி உதவிபெறும் நிறுவனங்கள் வாங்கும் கணினிகளிலும் தொடக்கத் திரை முதற்கொண்டு அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். அனைத்துச் செயலிகளும் தமிழில் இருக்க வேண்டும்.

3. தமிழகத்தில் விற்கப்படும் செல்பேசிகள் அனைத்திலும் தமிழில் எழுதவும் படிக்கவும் தேவையான தொழில்நுட்ப வசதிகள் செய்ய, சம்பந்தப்பட்ட (தொலைத்தொடர்பு நிறுவனங்கள், செல்பேசிகளைத் தயாரிப்போர், மென்பொருள் உருவாக்குபவர்கள், உத்தமம் போன்ற அமைப்புகள்) நிறுவனங்களை அரசு முன்னின்று ஒருமுகப்படுத்த வேண்டும்.

4. பள்ளி மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சி கொடுக்கும்போது, அவர்களுக்கு சமூக சேவையிலான ஆர்வத்தைத் தூண்டி, உள்ளூர் தகவல்களைச் சேகரித்தல், தரவுகளாக்குதல், பரவச்செய்தல் ஆகியவற்றை ஊக்குவிக்க, பன்னாட்டுக் குழுக்களை அமைக்க வேண்டும்.

5.அறிவியல், கணிதம் ஆகியவற்றுக்கு ‘ ஒலிம்பி யாட் ’ போன்ற போட்டி கள் நடத்துவது போல, தமிழில் கணினி ஒலிம்பி யாட் போட்டி ஒன்றையும் நடத்த வேண்டும்.

6. ஒவ்வோர் ஆண்டும் தமிழக உயர்கல்வி மாண வர்கள் சுமார் ஒரு லட்சம் ஆய்வேடுகளைச் சமர்ப்பிக்கிறார்கள். இவற்றில் மிகக் குறைந்த அளவே தமிழ்க் கணினி தொடர்பானவை. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த ஊக்க முயற்சிகள் பலவற்றையும் செய்ய வேண்டும்.

மேலே சொன்ன ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் இணையத்தில் ஒரே இடத்தில் கிடைத்தால் தமிழ் ஆய்வுக் கட்டுரைக் களஞ்சியம் ஒன்று தமிழர் களுக்குக் கிடைக்கும். எனவே அதற்காக ஓர் இணையத்தளம் அமைக் கப்பட்டு, தொடர்ந்து செயல்படுத்தப்படவேண்டும்.

7. தமிழ் இணைய மாநாட்டுக்காகத் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை நடத்திய தூரிகை, அசைகலை, விக்கிப்பீடியா போட்டிகள் போலவே ஒவ்வோர் ஆண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போட்டி களை நடத்திப் பரிசுகள் தரப்பட வேண்டும்.

8. ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ற இணையம் வழித் தமிழ்ப் பாடத்திட்டங்களை அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து பன்னாட்டுக் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் இந்தப் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.

9.மாற்றுத் திறனாளிகளில் கண்பார்வையற்றோருக்குத் தமிழ்க்கணினி கற்பிக்க புத்தகங்கள் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

- மா.ஆண்டோபீட்டர்

Pin It