குழந்தை இலக்கியத்தில் கதைகள் கடல் போன்றது. அதன் பரப்பை ஒரு கட்டுரையில் சொல்லிவிட முடியாதுதான். என்றாலும் கதை களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவின் முக்கியத் துவத்தை எண்ணிப் பார்க்க முடியும்.

கதை உலகம் ஒரு மாயா பஜார். அது சிருஷ்டிக்கும் உலகத்தில் குழந்தைகள் சஞ்சரிக்க விரும்புகிறார்கள். அங்கே விலங்குகள், பறவை களின் மொழி குழந்தைகளுக்குத் தெரிந்திருக்கிறது. நடப்புலகில் இல்லாத தேவதைகளும் அரக்கர்களும் பாத்திரங்களாகின்றனர். பறக்கும் கம்பளத்தை குழந்தைகள் நம்புகின்றனர். மந்திரவாதியின் உயிர் ஏழு கடல்கள் தாண்டி, ஏழு மலைகள் தாண்டி ஒரு காட்டில் வசிக்கும் கிளியிடம் இருப்பதை அறிந்து, மந்திரவாதியைக் கொன்று திரும்பும் இளவரசனின் வெற்றி குழந்தைகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று கேட்ட ‘சுண்டைக்காயின் சாகசம்’ கதையை நாளையும் கேட்க குழந்தைகள் தயாராகவே இருக் கிறார்கள். கதைகள் அவர்களுக்கு சலிப்பூட்டுவதில்லை.

குழந்தைகளிடத்தில் கதையின் செல்வாக்கை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பஞ்ச தந்திரக் கதைகளைப் படைத்த அறிஞர் விஷ்ணு சர்மா இதை நிரூபித்துக் காட்டியவர்.

இந்தியாவின் தெற்குப் பகுதியில் ஆட்சி செய்த அரசர் அமர சக்தி. அவருக்கு மூன்று மகன்கள். மூவரும் முழு முட்டாள்கள். மகன்களின் நிலையை எண்ணி அரசர் வருந்தினார். அவர்களுக்கு நல்ல கல்வி அளித்து அறிவாளிகளாக்க ஆலோசனை வழங்கும்படி அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

இலக்கண இலக்கியங்கள், சாஸ்திரங்களைக் கற்க பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும் என்றார் அமைச்சர்.

இந்நிலையில் பிள்ளைகள் மூவரும் விஷ்ணு சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். விஷ்ணு சர்மா மூவருக்கும் பஞ்சதந்திரக் கதைகளைக் கற்பித்தார். ஆறு மாதங்களில் மூவரும் புத்திசாலி களாக மாறினார்கள்.

இன்னுமொரு எடுத்துக்காட்டு உண்டு, ‘ருஷ்ய புரட்சியின் கண்ணாடி’ என்று தோழர் லெனினால் புகழப்பட்டவர் டால்ஸ்டாய், அவர் தனது ‘யாஸ்னயா போல்யானா’ பண்ணையில் ஏழை விவசாயிகளின் பிள்ளைகளுக்குப் பள்ளி ஒன்று நடத்தினார். அப்பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்கள் பைபிள் கதைகள், ஈசாப் கதைகள், உலக நாடோடிக் கதைகளாகும். டால்ஸ்டாயும் நிறைய குட்டிக் கதைகளைக் குழந்தைகளுக்காக எழுதினார். அதில் ஒரு கதைதான் ‘பேராசைக்கார விவசாயி’. கடவுள் விவசாயியிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். தான் எவ்வளவு தூரம் ஓடுகிறேனோ அவ்வளவு தூரம் உள்ள நிலம் வேண்டும் என்று கேட்கிறான் விவசாயி. கடவுளும் சம்மதிக்கிறார். விவசாயி பேராசையினால் ஓடி ஓடிக் களைத்து கீழே விழுந்து இறந்து போகிறான். குழந்தையி லிருந்துதான் மனிதன் உருவாகிறான். அந்த குழந்தைகளிடம் நல்ல கதைகளைக் கூறுவதின் மூலம் நல்ல மனிதர்களாக உருவாக்க முடியும் என்று நம்பியவர் அறிஞர் டால்ஸ்டாய்.

மனித வாழ்க்கையில் குழந்தைப் பருவம் என்பது விடியற்காலையைப் போன்றது. இதை நம் முன்னோர் நன்றாக அறிந்திருந்தனர். அதனால் துவக்ககாலக் குழந்தை இலக்கியம், பாடல்களாக, கதைகளாகவே இருந்தன. அச்சில் ஏறும் வரை பெரியோர்கள் வாய்மொழியாகவே இவை வழங்கப் பட்டன. இவைகளில் நீதிநெறிகள் வலியுறுத்தப் பட்டன. பெரும்பான்மையாக மதஅறிவுரைகளும் இருந்தன.

ஒவ்வொரு நாட்டிலும் இவ்வாறு பெருஞ் செல்வமாக நாட்டுப்புறக் கதைகள் உருவாகி இருப்பதை அறிய முடிகிறது.

சீனா நாட்டில் திருவிழாக்களில் குழந்தை களுக்கு பாரம்பரியக் கதைகள் (Traditional Stories) இன்றளவும் சொல்லப்பட்டு வருகின்றன.

நம்முடைய பாரதநாடு கதைகளுக்குப் பேர் போனது. பஞ்சதந்திரக் கதைகள், புத்தர் ஜாதகக் கதைகள், ஜென் கதைகள், இதிகாசக் கதைகள், புராணக் கதைகள், வேதாளக் கதைகள் என்று மாபெரும் செல்வமாக நமக்கு இருக்கிறது. 11-ஆம் நூற்றாண்டில் சோமதேவர் கதா சாகரமே படைத்தார். எண்ணிலடங்கா நாட்டுப்புறக் கதைகள் மறைந்து கிடக்கின்றன. சுமார் 2000 கதைகளைக் கண்டு பிடித்துத் திரட்டி நூல்களாக்கி ஆங்கிலேயரான வெரியர் எல்வின் வெளியிட்டார். நாம் அதைச் செய்யவில்லை. அவருடைய ‘உலகம் குழந்தையாக இருந்த போது’ என்ற நூல் அற்புதமான நாட்டுப் புறக் கதைகளைக் கொண்டது. உலகம் குழந்தை யாக இருந்த போது... என்றால் என்ன அர்த்தம்? காடுகளில் வாழ்ந்த ஆதிகால மனிதனைப் பற்றியது அது! இயற்கையும் வாழ்க்கையும் அவனுள் பல கேள்விகளை எழுப்புகிறது. பிறப்பும் இறப்பும் புதிர்களாக இருக்கின்றன. இதற்கான விடைகளை குழந்தையைப் போல் மனிதன் கற்பனை செய்து பார்த்திருக்கிறான். அந்தக் கற்பனைக் கதைகள் தான் இந்நூலில் இருக்கின்றன. மனிதர்கள் முதன் முதலில் தம் வாலை இழந்த கதை, மனிதர்கள் பேசத் துவங்கிய கதை, வீடு கட்டிய கதை என்று நம் மூதாதையர்களின் சிந்தனைகள் இக்கதைகளில் வெளிப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மறைந்து கிடக்கும் நாட்டுப் புறக் கதைகளைச் சேகரித்து வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியவர் ஆராய்ச்சி அறிஞர் நா.வானமாமலை ஆவார். இத்தூண்டுதலின் பயனாய் கி.ராஜநாராயணன், வீர.வேலுச்சாமி போன்றோர் கரிசல் வட்டார நாட்டுப்புறக் கதை களைத் தொகுத்துத் தந்துள்ளனர். முனைவர் ரோஸ் லெட் டானிபாய் கல்குளம் (குமரி மாவட்டம்) வட்டார நாட்டுப்புறக் கதைகளை (158 கதைகள்) தொகுத்துத் தந்துள்ளார். வட்டாரம் வட்டாரமாய் இன்றும் சேகரிக்க வேண்டிய கதைகள் நிறைய இருக்கின்றன. சமீப காலத்தில் எழுத்தாளர் பொன்னீலன், பாரத தேவி ஆகியோர் நாட்டுப் புறக்கதைகளைச் சேகரித்து வருகின்றனர்.

எல்லாத் தரப்புக் குழந்தைகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டது நாட்டுப்புறக் கதைகளே. கதைக்கு கண்ணுமூக்குக் கிடையாது என்று குழந்தை களை நம்பச் செய்பவை நாட்டுப்புறக் கதைகளே. குழந்தைகளுக்கும் நாட்டுப்புறக் கதைகளுக்கும் உள்ள உறவு தொப்புள் கொடி உறவு போன்றது. ஆடு மாடு மேய்த்துத் திரியும் படிக்காத குழந்தைகள், மலை ஜாதி குழந்தைகள் கூட நாட்டுப்புறக் கதைகளை எளிதாக, சுவையாகச் சொல்லுகின்றனர். ‘வால் போச்சு கத்தி வந்தது டும்... டும்...’ என்ற நரி பற்றிய கதைப் பாடலாகவும் இருக்கிறது. ‘வாலு போச்சு கத்தி வந்தது டும்... டும்... டும் கத்தி போச்சு மாம்பழம் வந்தது டும், டும், டும், மாம்பழம் போச்சு பொண்ணு வந்தது டும், டும், டும், பொண்ணு போச்சு எண்ணெய் வந்தது டும், டும், டும் எண்ணெய் போச்சு தோசை வந்தது டும், டும், டும் தோசை போச்சு கொட்டு வந்தது டும், டும், டும் என்பதே அந்தப் பாடல்.

நாட்டுப்புறக் கதைகள் முகந்தெரியாத மக்களின் படைப்பு. அனுபவத்தின் வெளிப்பாடு, இலைக்குள் இருக்கும் சாறாக, பாலுக்குள் இருக்கும் தயிராக கதைக்குள் வாழ்வின் உயரிய நெறிகள் உறைந்திருக் கின்றன. அந்த உயரிய நெறிகளின் சாரம் என்பது ‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ என்று நம்பிக்கையைத் தருவதாகும். நாட்டுப்புறக் கதைகளின் முக்கியத் துவத்தை மேலை நாட்டவர்கள் உணர்ந்து கொண்ட பிறகு அவைகளை அசுர வேகத்தில் சேகரித்து வெளியிடத் தொடங்கினர். அவர்களில் முக்கிய மானவர்கள் கிரீம் சகோதரர்கள், அவர்களின் சேவை மகத்தானது. உலகத்தை வலம் வந்து நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து வெளியிட்டனர். 1920-இல் சோவியத் ரஷ்யாவில் குழந்தை இலக்கி யத்தின் பொற்காலமாக இருந்தது. ‘ருஷ்ய நாட்டுப் புறக் கதைகள்’, ருஷ்ய தேவதைக் கதைகள்’ என மிகப் பெரிய தொகுப்புகள் வந்தன. குடியேறிகளான அமெரிக்கா நாட்டினர் ஆதி இன மக்களான செவ்விந்தியர்களின் நாட்டுப்புறக் கதைகளை சேகரித்து வைத்துச் சொந்தம் கொண்டாடுகின்றனர். உலக மக்களின் நாட்டுப்புறக் கதைகளை உயர்ந்த தரத்தில் தங்கள் நாட்டுக் குழந்தைகளுக்காக வெளி யிடுகின்றனர். இன்று பிரபலமாக இருக்கிற ஜே.ஜே.ரெவ்ளிங் எழுதியிருக்கிற ஹாரிபாட்டர் கதைகள் (Horry Potter Series - 1997) நமது மாயஜாலக் கதைகளின் தாக்கத்தில் பிறந்தவையே. ஏகாதி பத்திய சந்தைத் தளத்தில் அவை மினுக்குகின்றன. நமது நாட்டுப்புறக் கதைகள் எளிமையானவை, இனிமையானவை, ஏழையின் இதயம் போன்றது.

இன்று தமிழில் புதிதாகக் குழந்தைகளுக்கு எழுத வந்திருக்கும் பெ.கருணாகரன், விழியன் போன்றவர்களின் கதைகளில் நாட்டுப்புறக் கதை களின் சாயலையும் தாக்கத்தையும் காண முடிகிறது. அவர்கள் கதைகளுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள மரபுரீதியான உறவைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். பெ.கருணாகரன் எழுதியுள்ள நூலான ‘அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும்’ குழந்தைகள் கதைகள். அவை பல நாட்டுப்புறக் கதைகளின் சாயலைப் பெற்றுள்ளன. ‘தவளையார் கொடுத்த பர்த்டே பார்ட்டி’ என்கிற கதை தவளைகளின் குரல் உலகமெங்கும் கரடுமுரடாக இனிமை இல்லாமல் மாறிவிட்டதைப் பற்றிக் கூறுகிறது. இதே போல் தவளைகளின் தலைகள் நசுங்கியே இருப் பதற்கான காரணத்தை ‘உலகம் குழந்தையாக இருந்த போது’ என்ற நூலில் உள்ள கதை கூறுகிறது. விழியன் எழுதியுள்ள ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’ நூலில் சரண் என்கிற பையன் நிலாவிற்குப் போவது பாட்டி நிலாவிற்குச் சென்று வந்த ஒரு நாட்டுப்புறக் கதையின் தாக்கத்தில் விளைந்த கற்பனை தான்.

நாட்டுப்புறக் கதைகளையும் அதன் தன்மையில் உள்ள புதிய கற்பனைக் கதைகளையும் குழந்தைகள் அதிகமாக விரும்புகிறார்கள். ‘அம்புலிமாமா’ வெற்றியின் இரகசியம் இதுதான்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட சுனாமியின் போது ஏராளமான குழந்தைகள் உறவுகளை இழந்தனர். அதனால் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆற்றுப்படுத்துவதற்காக ‘எய்டு இந்தியா’ தன்னார்வ தொண்டு நிறுவனம் பணியாற்றியது. குழந்தைகளின் மனநிலையை மாற்றுவதற்காக அவர்கள் கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம் கதைகள் ஆகும். வண்ணப் படங்களுடன் நாட்டுப் புறக் கதைகள் உள்ள கதை - அட்டைகள் குழந்தை களுக்கு வாசிக்கக் கொடுக்கப்பட்டன. ‘அத்ரி பச்சா - கொழுக்கட்டை’ போன்ற கதைகள் அவர்களைத் துன்பத்தை மறந்து சிரிக்க வைத்தன. கதை அட்டைகள் குழந்தைகளின் வாசிப்புப் பயிற்சிக்கும் உதவுகின்றன. ஒரு பக்கம், இரண்டு பக்கங்கள் உள்ள ஏராளமான கதை அட்டைகளை என்.சி.பி.எச்., யுரேகா, ஸ்ரீராம், செம்பருத்தி, குழந்தைகள் உலகம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. அவை களில் பெரும்பாலானவை நாட்டுப்புறக் கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான நாட்டுப்புறக் கதைகள் சிறு கதைகளே. பெரிய குழந்தைகளின் வாசிப்புப் பசிக்கு இவை போதாதுதான். அறிவியல் எழுச்சியும் வரலாற்றுணர்வின் பெருக்கமும் நடப்புலகின் தாக்கமும் குழந்தை இலக்கியத்திலும் எதிரொலித்தன. இதன் விளைவாக 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பள்ளிச் சூழல் கதைகளுக்கும் (School Story Tradition) சாகச கதைகளுக்கும் (Adventure Stories ) வரவேற்பு எழுந்தது, 1857-இல் தாமஸ் ஹக்கிஸ் எழுதிய ‘டாம் பிரவுன்சின் பள்ளி நாட்கள்’ என்ற நாவலும் 1865-இல் லூயிஸ் கரோல் எழுதிய ‘அற்புத உலகில் ஆலிஸ்’ நாவலும் பெரிய வெற்றியைப் பெற்றன. கார்லே கலோடி எழுதிய ‘பினோச்சி யாவின் சாகசங்கள்’, மார்க் ட்வைன் எழுதிய ‘டாம் சாயரின் சாகசங்கள்’ போன்ற நாவல்கள் குழந்தை இலக்கியத்தில் புதிய நடையையும் உள்ளடக்கத் தையும் கொண்டு சேர்த்தன.

தமிழிலும் சிறுவர்களுக்காகத் தொடர்கதை களும் நாவல்களும் எழுதப்பட்டன. பெரும் பாலான நாவல்கள் நற்பண்புகளை எப்படியாவது போதித்து விட வேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டுள்ளன. நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான் என்கிற ‘பார்முலா’ கதைகள் பெருகி யுள்ளன. ஆயினும் சிறுவர்களுக்காகச் சிறந்த நாவல்கள் எழுதப்படாமல் இல்லை. பூவண்ணனின் ‘காவேரியின் அன்பு’, அழ.வள்ளியப்பாவின் நீலா - மாலா, ரேவதியின் ராம் - ரஹீம், ஆர்வியின் ‘சந்திரகிரிக் கோட்டை, லூர்து எஸ்.ராஜீயின் ‘காணாமல் போன மணியார்டர்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மாயாஜாலக் கதைகள், மர்மக் கதைகள், பேய்க் கதைகள், துப்பறியும் கதைகள் தனிப்பிரிவு. அந்தக் காலச் சிறுவர்கள் இவற்றைப் படித்து சொக்கிப் போனார்கள். இத்தகைய கதைகளை எழுதுவதில் வாண்டுமாமா, முல்லை தங்கராசன், கூத்தபிரான், தமிழ்வாணன் போன்றோர் பேர் வாங்கினர். பேய்க் கதைகள் குழந்தைகளிடம் பய உணர்வை ஏற்படுத்துவதால் இக்கதைகள் தேவை தானா? என்ற சர்ச்சை உள்ளது. துப்பறியும் கதை களில் துப்பாக்கிகள் வருவதால் அவை குழந்தை களின் மனதைக் கெடுப்பவை என்று அந்தக் காலத்தில் தமிழ்வாணனுக்கு அழ.வள்ளியப்பா எதிர்ப்பு தெரிவித்தார். ‘சங்கர்லால் துப்பறிகிறார்’ என்ற கதைக்காகவே தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ சிறுவர்களுக்கிடையே வரவேற்பைப் பெற்றதும் உண்மை.

ஆங்கிலத்திலிருந்தும் இந்தியாவின் பிறமொழி களிலிருந்தும் சிறந்த சிறுவர் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவை அதிகமில்லை, அலாவுதீன், அலிபாபா, சிந்துபாத் கதைகள் எப்போதும் சிறுவர்களைக் கவருபவை. தற்போது தாமரையின் கிளாசிக் வரிசை என்று உலகப் புகழ் பெற்ற இலக்கியப் படைப்புகள் சிறுவர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. யூமா.வாசுகி ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளிலிருந்து சிறுவர் கதைகளை மொழிபெயர்த்து தருகிறார்.

நாவலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் லூயிஸ் கரோலின் ‘ஆலிஸின் அற்புத உலகம்’ நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். தனது 10ஆம் வயதில் ஆலிஸின் அற்புத உலகம் நாவலை வாசித்ததாகக் குறிப்பிடுகிறார் அவர். இது குழந்தைகளுக்கான புத்தகம் மட்டுமல்ல, எந்த வயது மனிதர் வாசிக்கும் போதும் அவரைக் குழந்தையாக்கிவிடும் மாயக் கண்ணாடி என்பது அவருடைய கருத்து. உலகின் மிகச் சிறந்த 10 புத்தகங்களில் ஒன்றான இந்நாவலை இக்கட்டுரை ஆசிரியர் சுகுமாரன் ‘அற்புத உலகில் ஆலிஸ்’ என்று அண்மையில் மொழிபெயர்த்து அது சிறுவர்மணியில் தொடராக வந்துகொண் டிருக்கிறது.

தமிழில் பிரபல நாவலாசிரியர்கள் குழந்தைகளுக்காக ஓரிரு நாவல்களையே தந்திருக்கிறார்கள். சுஜாதா, ‘பூக்குட்டி’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார்.

பூக்குட்டி என்பது வேலாயி என்ற குப்பை பொறுக்கும் சிறுமி வளர்க்கும் நாய்க்குட்டி. விம்மு என்ற பணக்கார சிறுமி வேலாயி, பூக்குட்டி மீது அன்பும் நட்பும் பாராட்டுகிறாள். அதை விரும்பாத படித்த, பணக்காரப் பெற்றோர் தடை விதிக்கிறார்கள். சிறுமிகளைப் பிரித்து வைக்கிறார்கள். இறுதியில் அன்பும் நட்பும் வெல்கிறது. பூக்குட்டி சிறுவர்களுக்கான நாவலாக தெரியவில்லை. பணக்காரப் பெற்றோருக்கு புத்திமதி சொல்லுகிற கதை.

குழந்தைகளுக்காக எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் எழுதியிருக்கிற நாவல் ‘சிரிக்கும் வகுப்பறை’. சுஜாதா பெற்றோருக்கு அறிவுரை கூறுகிறார் என்றால் ராமகிருஷ்ணன் ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். நூலின் முன்னுரையில் ‘பள்ளிக்கூடம்’ ஒரு சிறுவனின் ஆளுமையை வளர்த்து எடுப்பதற்குப் பதிலாக, அவனது இயல்பான கற்பனைகளை எப்படிச் சிதைக்கிறது என்பதையே இந்நாவலின் வழியே சுட்டிக் காட்டியிருக்கிறேன்’ என்கிறார். அக்ரமா என்கிற ஒரு தண்டனைப் பள்ளியை படைத்து அம்மாதிரி பள்ளிகளை குழந்தைகள் விரும்பமாட்டார்கள். அவர்கள் விரும்புவது சிரிக்கும் வகுப்பறையே என்கிறார். இவ்வறிவுரை பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையானது அல்லவா! மேலும் அக்ரமா பள்ளியில் ஒரு மாணவி கூட இல்லை. மாணவர்கள் மட்டுமே தண்டனைக் குரியவர்களா? இந்நாவல் குழந்தைகள் மொழியில், இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டிய திருக்கிறது.

நாவலாசிரியர் ஜெயமோகன் எழுதி சிறுவர் மணியில் தொடராக வந்த நாவல் ‘பனி மனிதன்’. முன்னுரையில் ‘இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதியிருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு தேறிய ஒரு குழந்தை இதை வாசிக்க முடியும்’ என்று கூறுகிற ஜெயமோகன் அடுத்த பத்தியிலேயே அதை மறுக்கிறார். ‘ஆனால் இந்த நாவல் வெறும் குழந்தைக் கதை அல்ல. இதில் தத்துவமும் ஆன்மிகமும் அறிவியலும் உள்ளன. இந்தப் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்ன என்ற கேள்வி உள்ளது. அந்தக் கேள்வி பெரியவர்களுக்கும் உரியது’ என்கிறார்.

நிச்சயமாக அந்தக் கேள்வி குழந்தைகளுக்கானதல்ல. மனிதனின் பேராசை உலகை அழிக்கிறது என்று மனித வெறுப்பு இந்நாவலில் பேசப்படுகிறது. எந்த மனிதன் உலக அழிவுக்கு காரணமாகிறான்? சாதாரண மனிதனா? உலகக் கோடீஸ்வரனாகத் துடிக்கும் முதலாளி அல்லவா இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கிறான். பொத்தாம் பொதுவாக மனிதன் என்று குறிப்பிடு வானேன்? பரிணாம வளர்ச்சியில் பின்தங்கிப் போன உயிரினங்கள் இமயமலையில் இரகசிய இடத்தில் இன்னும் வாழ்வதாகவும் அவ்வுயிரினங்களில் ஒன்றுதான் பனி மனிதன் என்றும் அபத்தமாகக் கற்பனை செய்கிறது இந்நாவல். தெளிவாக இருக்கும் பரிணாமக் கொள்கையை இந்நாவல் வீணாகக் குழப்புவதின் நோக்கமென்ன? இந்துமத, புத்தமத மறுபிறவிக் கொள்கையை இந்நாவல் பிரச்சாரம் செய்கிறது. இந்நாவலின் பொருள் குழந்தைகளுக்குரியதல்ல. இந்நாவலை ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தையால் படிக்க முடியும் என்கிறார் கதாசிரியர். அதுவும் சாத்தியமல்ல என்றே எனக்குப் படுகிறது.

வட்டார மனத்துடன் குழந்தைகளின் மன இயல்போடு கூடிய நாவல்களே நம் குழந்தை களுக்குத் தேவை. அத்தகைய ஒரு குழந்தை நாவல் கி.ராஜநாராயணன் எழுதிய ‘பிஞ்சுகள்’. 1979-ஆம் ஆண்டில் இலக்கியச் சிந்தனை விருதை கையெழுத்துப் பிரதியிலேயே பெற்றது.

வெங்கடேசு என்ற சிறுவனின் கதை, வெங்கடேசுக்கு படிப்பைவிட ஊரைச் சுற்றித் திரிவதில் ஆர்வம் அதிகம். பறவைகளின் முட்டை களைச் சேகரிப்பான். பறவைகளின் பழக்கவழக்கங் களைக் கூர்ந்து கவனிப்பான். சிறுவனின் குணத்திற்கு ஏற்றவராக திருவேதி நாயக்கர் இருக்கிறார்.

உள்ளூர் பள்ளியில் படிப்பு வராத வெங்க டேசுவை அவனுடைய அப்பா வெளியூர் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார். சுற்றித் திரிந்த ஊரையும் நட்பாக இருக்கும் திருவேதி நாயக்கரையும் பிரியும் சிறுவனின் மனவேதனைதான் இந்நாவலின் கரு, கரிசல் காட்டுச் சிறுவனின் சித்திரம் இந்நாவலில் இயல்பாக வெளிப்பட்டிருக்கிறது.

9 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பிரியமானவை தேவதைக் கதைகள் (Fairy Tales), வீரதீரக் கதைகள் (Legends) சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக்கூடிய கதைகளான தெனாலிராமன், மரியாதை ராமன், பரமார்த்தகுரு, பீர்பால், முல்லா கதைகள் அவர்களுக்கு நெருக்கமானவை, புதிர்கதைகளும் அறிவியல் கதைகளும் குழந்தைகளின் அறிவையும் சேர்த்து வளர்க்கின்றன. ரேவதி, பேராசிரியர் எ.சோதி, லூர்து எஸ்.ராஜ் போன்றோர் இத்தகைய படைப்புகளை நிறைய தந்துள்ளனர்.

5 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படக்கதைகள், குறுங்கதைகள் (Fables) ஏற்றவை. இவ்வயதினருக்குப் பெரிய நீதிக் கருத்துக்களை சொல்ல வேண்டியதில்லை. குடும்பம் சார்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைகள், விலங்குகள், பறவைகள் பற்றிய கதைகள் அவர் களைப் பெரிதும் கவருகின்றன. ‘ஒரு ஊர்ல ஒரு அப்பா - அம்மா. அவங்களுக்கு ரெண்டு பிள்ளைகள். அண்ணன் குறும்புக்காரன், அண்ணன் செய்கிற குறும்புகளைத் தம்பி தாங்கிக் கொள்வான்’ என்று குடும்ப நிகழ்ச்சிகளைக் கதையாகக் கூறினால் குழந்தைகளுக்கிடையே சகோதர பாசம், பொறுமை போன்ற பண்புகள் இயல்பாகவே ஏற்படுகின்றன. படுக்கையில் கூறினால் குழந்தைகளைத் தூங்க வைக்கும் சக்தி கூட கதைகளுக்கு உண்டு.

குழந்தை இலக்கியம் படைப்பதிலும் அவற்றை புத்தகமாக்குவதிலும் வயது பிரிவுகளை (By age Category) கவனத்தில் கொள்வது முக்கியமானது. தமிழில் அதற்கான கவனமும் சிரத்தையும் குறை வாகவே உள்ளது. குழந்தைகள் வாசிப்பு உலகில் நுழைவதற்கு வாசலாக அமைபவை கதைகளே. எனவே வாசலை, குழந்தைகளுக்கு நல்வரவு கூறுபவையாக அமைப்போம்.

Pin It