முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமியுடன் நேர்காணல் - சுப்ரபாரதிமணியன்

அடிப்படையில் இயற்பியல் விஞ்ஞானியான தங்களின் ஆர்வம் தமிழ் இலக்கியத்தில் அமைந்திருந்தாலும் அது “படுகளம்” போன்ற ஒரு பெரிய நூலை எழுத எந்தவிதத்தில் அடிப்படையாக இருந்தது?
 
எந்தத் துறையாக இருக்கட்டும் ஒரு பெரிய படைப்பைக் கொடுப்பதற்கு அதிகம் உழைக்க வேண்டும். ‘உழைப்புக்குத் தகுந்த ஊதியம்’ என்பது போல ஒரு பெரிய படைப்பு-அது கொஞ்சம் ஈர்ப்பாக அமைந்துவிட்டால் - ஆசிரியருக்கு உரிய அடையாளம் என்ற ஊதியத்தைக் கொடுக்கும்.  என்னுடைய முந்தைய ஆறு கட்டுரை நூல்கள் எனக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுக்க வில்லை.  அவை நல்ல மதிப்பீடுகளைப் பெற்றிருந் தாலும் அவற்றின் வாசகர் வட்டம் குறுகிப் போனதே அதற்குக் காரணம்.  ‘புதினம்’ என்பதன் வாசகர் வட்டம் விசாலமானது.  அதற்குள் காலடி வைக்கவேண்டுமென்ற ஆசை நீண்டகாலமாக இருந்தது.  கட்டுரைகள் எழுதியபோது எந்தப் பொருளையும் விளக்க, விவரிக்க எனக்கு மொழியும் நடையும் கைகொடுத்தன.  ‘கதை சொல்லுதல்’, ‘உரையாடல்’ போன்ற உத்திகள் கட்டுரைகளில் இயல்பாக இடம் பெற்றிருந்தன.  அந்த உத்திகளை ஒரு பெரிய படைப்பிலும் எளிதாகக் கையாள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.  எழு பதாண்டுத் தொடர்புடைய - அதிகம் பேசப்படாத மண்ணையும், மக்களையும், அவர்களுடைய வேளாண்மை வாழ்க்கையையும் நேரம் கொடுத் திருக்கும் ஓய்வுக்காலத்தில் பதிவு செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டபோது, கட்டுரைகளில் சொல்லுவதையும்விட, புதினத்தில் சொன்னால் ஈர்ப்பாக இருக்கும் என்ற சிந்தனை வந்தது.  ‘படுகளத்தில்’ இறங்கினேன்.
 
கொங்கு மண்ணின் கவுண்டர் ஜாதியைச் சார்ந்த கிராமத்து மனிதர்களை 1935-65 ஆண்டு கால வாழ்க்கையை இதன்மூலம் எழுதியதில் “அந்த ஜாதி பற்றிய பெருமை” என்று அடிப்படையில் எதாவது தங்களிடம் புதைந்திருக்கிறதா? அந்த ஜாதியின் ஒற்றுமை, பலம் என்பதுபற்றிச் சில இடங்களில் பேசப்படுகிறது.  அதுவே ஜாதி அதிகார வன்முறை யாகப் பிற ஜாதிகள் மேல் திணிக்கப்படுவதை இன்றைய கொங்கு நாட்டின் தொழில் சூழலை மையமாக வைத்து மறுக்க முடியுமா?
 
நீங்கள் நினைத்துப்பார்க்கும் சூழ்நிலை இருப் பதாக எனக்குப் படவில்லை.  இன்று எந்த ஜாதியும் வேறு எந்த ஜாதியையும் ஆதிக்கம் செய்துவிட முடியாது.  ‘படுகளத்தில்’ பேசப்படும் ஒவ்வொரு ஜாதியின் ஒற்றுமையும் பலமும், ஏன் பல ஜாதி களும் சேர்ந்த ஒரு கூட்டு ஒற்றுமையும், பலமும் குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.  எனக்குள் புதைந்திருந்தவர்கள் கண்ணுச்சாமி, பாலுச்சாமி, செங்கண்ணன், சோமுத்தேவர், நைனா முகம்மது, காளிமுத்து, திம்மண்ணன், கன்னியம் மாள், பெரியவள்ளி, மாராத்தாள், சரஸ்வதியம் மாள்- என்ற இயல்பான மனிதர்கள்தான்! அவர் களின் ஜாதிகள் அல்ல.  ‘படுகளத்தில்’ வரும் கிராமத்துக் கோயிலில் குடிகொண்டிருக்கும் தேவதை ‘தன்னை மக்கள் தரிசிக்க வரவில்லையே’ என்று ஏக்கத்தில் இன்னும் இருப்பதற்குக் காரணம் கண்டிருப்பீர்களே? கூட்டம் அதிகமான ஜாதியால் ஏதும் செய்யமுடிந்ததா? கொங்கு நாட்டின் தொழில் சூழல் - அது நன்றாயிருந்தாலும், சீர் கெட்டு இருந்தாலும் - ஜாதியின்பாற்பட்டு இல்லை, உலகச் சந்தை நிலைமையையும் நமது நிர்வாகத்தையும் சார்ந்து இருக்கின்றது.
 
கற்பனை அகன்ற எல்லைக்குள் விரியும்போது கலை இலக்கியமாகிறது.  கட்டுக்குள் விரியும்போது அறிவியல்- தொழில்நுட்பமாகிறது என்ற கருத்தைப் பல இடங்களில் தொட்டுக் காட்டுகிறீர்கள்.  இதை விளக்கமுடியுமா?
 
கலைப் படைப்பாகட்டும், இலக்கியப் படைப் பாகட்டும், அறிவியல்-தொழில்நுட்பப் படைப் பாகட்டும் அதைக் கொண்டுவரப் படைப்பாளி கற்பனை செய்தாகவேண்டும்.  எந்த அளவில், எந்த வகையில் கற்பனை செய்யலாம் என்பதில் இப் படைப்புகளைக் கொண்டுவருபவர்களுக்குள் வேறு பாடுகள் உள்ளதைக் காணலாம்.  ஓவியம் வரையவும், கவிதை புனையவும், எடுத்துக்கொண்ட பொருளை யொட்டிக் கற்பனையை இயன்ற அளவுக்கு விரித்துக் கொள்ளலாம்.  அந்தக் கற்பனையிலிருந்து ஓர் உருவகத்தைத்தான் காட்டமுயல்கிறோம், ஓர் உண்மையை அல்ல.  ஆனால் அறிவியல் கண்டு பிடிப்புக்குத் தேவைப்படும் கற்பனை, உருவகத்தோடு நின்றுவிடாமல், அதை உண்மையானதாகவும் மாற்றப் பயன்படவேண்டும்.  எண்ணம்போல் கற்பனையை விரித்துக்கொண்டு போகமுடியாது.  எல்லையைக் குறைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் வந்துவிடும்.  ‘மேகக்கூட்டம்’ என்று இலக்கியத்தில் கற்பனை செய்தால் கண்ணுக் கெட்டியவரை என்றும் கொள்ளலாம்.  அதையே அறிவியல் மூலம் படைப்பதென்றால் எந்த அளவிலும் என்பது முன்னிலைப் படுத்தப்படவேண்டும்.  அந்த அளவுக்குள் மட்டுமே கற்பனை படரவேண்டும்.  அப்போதுதான் உருவகம் உண்மையாகும் சாத்தியம் உண்டு.
 
இலக்கிய மொழியாகவும், கற்பனை மொழியாகவும் வளர்ந்த அளவில் துளியேனும் பிற கலை அறிவியல் துறைகளில் நாம் தாய்மொழியைப் பயன்படுத்தியிருக்கிறோமா?
 
பிற கலை அறிவியல் துறைகளில் தாய் மொழியை நாம் மிகக் காலம் கடந்துதான் பயன் படுத்த முற்பட்டோம்.  அவற்றின் முந்தைய வளர்ச்சியோடு தாய்மொழி இயைந்திருக்கவில்லை.  இலக்கிய வளர்ச்சிக்குப் பழைய படைப்புகள் பொக்கிசங்கள்: காலக்கண்ணாடிகள்.  புதிய படைப்புகள் வளர்ச்சியின் பரிமாணங்கள்.  ஆனால் பிற கலை அறிவியல் துறைகளின் நிலை அப்படியில்லை.  இங்கே பழைய படைப்புகள் பெரும் பாலும் சுமைகள்: காலந்தோறும் புதுப்பிக்கப்பட வில்லை என்றால் அவை பயனற்றுப் போய்விடு கின்றன.  பாடநூல்களை எடுத்துக் கொள்ளுங்கள்.  திருக்குறளையும், சங்கப்பாடல்களையும் எப்தும் சேர்த்துக் கொள்ளலாம்.  பிற துறை களின் ஒரு சில படைப்புகளின் ஒரு சில நல்ல பகுதி களையும்கூட அப்படிச் சேர்த்துக்கொள்ள முடியாது.  அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை உடனுக் குடன் சேர்த்து அப்படைப்புகள் புதிப்பிக்கப்பட வேண்டும்.  இது எளிதான செயலில்லை.  தாய் மொழிப் பயன்பாட்டில் நாம் மிகவும் பின்தங்கிப் போனதால் அது இயலாதது என்றே ஆகிவிட்டது.  ஆகவே பிறதுறைகளில் தாய்மொழிப் பயன் பாடில்லையே என்று நாம் வருந்துவதில் பொருளில்லை.
 
சமகாலத்தில் தங்களைப் பாதித்த அறிவியல் புனை கதை எழுத்தாளர்கள் யார்?
 
Science fiction என்ற பார்வையில் நான் ஒன்றும் அதிகம் படித்தவனில்லை.  Science literature என்ற பார்வையில் ஓரளவுக்குப் படித்திருக்கிறேன்.  ஐசக் அசிமோவ் (Isaac Asimov), ஆர்தர் கிளார்க் (Arthur C.Clarke), ஸ்நோ (C.P. Snow), ஸ்டீபன் ஹாக்கிங் (Stephan W. Hawking) போன்றவர்களின் படைப்பு களை விரும்பிப் படித்திருக்கிறேன்.  குறிப்பாக அசிமோவையும், ஸ்நோவையும் சொல்லலாம்.  இந்தியாவில் ஜெயந்த் நர்லிகர் (Jeyanth Narlikar) முக்கியமானவர்.  இவர்கள் எல்லாரும் நல்ல விஞ்ஞானிகளாகவும் பரிமளித்தவர்கள்.  புனை கதையாகவோ, மற்ற இலக்கிய வடிவங்களிலோ இவர்களின் படைப்புகள் வெறும் illusion ஆக இல்லாமல், மறுக்கமுடியாத எதிர்கால விஞ்ஞான மாக இருக்கும்.  ஐசக் அசிமோவை கார்னல் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவின்போது சந்தித்திருக்கிறேன்.
 
இன்றைய தமிழ் அறிவியல் புனைகதை உலகம் எப்படி உள்ளது?
 
அந்தப் பகுதியில் வெற்றிடம்தான் அதிகம் இருக்கிறது.  நீண்ட காலமாகவே அப்படித்தான் இருக்கிறது.  பாரதிதாசன் இதிலும் முன்னோடி.  அவனுடைய அறிவியல் வசன கவிதைகள் அறி வியல் இலக்கியத்துக்கு முன்னோடிப் பதிவு என்று எண்ணுகிறேன்.  பிறகு கல்கி இரண்டொரு புதினங் களில் முயற்சி செய்தார்.  பெ.நா. அப்புசாமியை இந்த வகையில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை.  சுஜாதாதான் அண்மைக்கால முன்னோடி.  பெ.நா. அப்புசாமி வரிசையில், நெல்லை சு.முத்து, கலிய பெருமாள் ஆகியோரைப் பார்க்கிறேன்.  அறிவியல் புனைகதை என்ற பார்வையில் இவர்கள் வர மாட்டார்கள்.  அறிவியல் அறிவுப் பின்னணியில் இன்று (சுஜாதாவுக்குப் பின்) புனைகதை எழுது பவர்கள் இல்லையென்றே சொல்லலாம்.  யாரும் இருந்தால் என் பார்வைக்கு எட்டாமலிருக்கலாம்.  வாசகர் வட்டம் சிறியது.  பதிப்பிப்பவர்களும் குறைவு.
 
அடுத்த படைப்பாக அறிவியல் புனைகதையை தங்களிடம் எதிர்பார்க்கலாமா?
 
அத்தகைய எண்ணம் இப்போதைக்கு இல்லை.
 
தாய்மொழி வழியாக நமது சமுதாயத்தை அறிவியல்-தொழில்நுட்பம் சார்ந்ததாக உயர்த்த முடியும் என்பது எந்த அளவில் நிறைவேறியுள்ளது?
 
பெரிய வளர்ச்சி ஒன்றுமில்லை.  தாய்மொழியை எந்த அளவுக்கு நாம் வகுப்பறை மொழியாகப் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நமது சமுதாயத்தை அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த தாக்கும் செயல் எளிதாகும்.  பள்ளிக்கல்வியில் பெரும்பாலும், உயர்கல்வியில் முழுதுமாகத் தாய் மொழி வகுப்பறைகள் இல்லை.  மாற்றம் வேண்டும்.  ஆனால் அது எளிதில்லை.
 
ஆங்கிலப் பள்ளிகள், கல்லூரிகள் புற்றீசல்போலப் பெருகிவிட்டாலும் 25 ஆண்டுக்கு முன்பிருந்ததை விட ஆங்கிலத்தைக் கையாளும் நாம் இழந்து கொண்டிருப்பதன் காரணம் என்ன?
 
எந்த வகுப்பில் ஆங்கிலம் ஆங்கிலமாகக் கற்பிக்கப்படுகிறது? எண்பது விழுக்காடு பள்ளி களில் பிழையில்லாமல் சொல்லிக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்கள் இல்லை.  கல்லூரிகளில் ஆங்கில வகுப்பில்கூட தமிழில் சொல்லிக்கொடுக்கலாம்.  ஆங்கிலத்தில் சிலவரிகள் தமிழில் சிலவரிகள் என்று ஒரு கேள்விக்குப் பதில் எழுதி முழு மதிப் பெண் பெறலாம்.  ஆங்கில மொழியறிவு பற்றி இப்படி ஒரு கேள்வி கேட்டுவீட்டீர்கள்! தமிழ் மொழியறிவு பற்றியும் அப்படிக் கேட்கலாம்.  ஆசிரியர் தரத்தில் நமக்கு அக்கறை இல்லை.  தேர்வு விழுக்காடுமட்டும் போதும்.
 
அறிவியலாளர்கள், இலக்கியவாதிகளை, சமகாலத்தில் இணைக்க ஆட்சியாளர்கள் இருக்கவேண்டும் என்று பலமுறை விருப்பம் தெரிவித்திருக்கிறீர்கள்.  இன்றைய நிலை என்ன?
 
ஆட்சியாளர்கள் அவர்களை இணைத்தும் கொள்கிறார்கள், அணைத்தும் கொள்கிறார்கள்.  உண்மை நிலை இதுதான்: 1) ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்வரை ஒரு சிலர் அருகில் இருந்துகொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒப்பம் தெரிவித்து மகிழ்ச்சிப்படலாம்; 2) ஆட்சி மாறினால் இவர்கள் வனவாசம் போய்விட வேண்டும்; 3) நடுநிலைக் கருத்துக்காரர் என்றால் மௌனம் சாதிக்க மறந்து விடக் கூடாது.
 
விவேகானந்தரை அறிவியல் பார்வையில் பார்க்கும் தங்களின் நோக்கம் என்ன?
 
அறிவியலாளர்கள் ஆன்மீகவாதிகளாகவும் இருப்பதை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் ஆன்மீகவாதிகள் அறிவியலாளர்களாக வெளிப்படுவது மிகவும் குறைவே.  விவேகானந்தரை அந்த வகையில் காணும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  விவேகானந்தரைப் பற்றிய ஒரு பன்முக ஆய்வு நூலைத் தயாரிக்க இருப்பதாகவும், அதில் இடம் பெறும் வண்ணம் ‘விவேகானந்தரின் அறிவியல் பார்வை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதித் தாருங்கள் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ப்பெருந்தகை முனைவர் கா. மீனாட்சிசுந்தரம் அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.  அதற்காக விவேகானந்தரின் படைப்புகளை ஆழ்ந்து படித்தேன்.  பாரதியைப் போன்றே விவேகானந்தரும் அறிவியல் பற்றி அதிகம் சிந்தித்திருப்பதைக் கண்டேன்.  அந்தச் சிந்தனைகள் அவருக்கு ஆன்மீகக் கருத்துக்களைத் துல்லியமாகச் சொல்ல உதவியிருப்பதை உணர்ந் தேன்.  அவர் கூறிய அறிவியல் கருத்துக்களை எளிமையாக வகைப்படுத்திக் கட்டுரையை எழுதிக் கொடுத்தேன்.  ஒரு நல்ல ஆன்மீகவாதியின் அறிவியல் உள்ளத்தைப் புரிந்துகொள்ளவேண்டு மென்பதுதான் என் முயற்சியின் நோக்கம்.
 
அறிவியல் சார்ந்ததாக சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற தங்கள் கனவு எந்த நாட்டின் மையத்தை முன் வைத்ததாகும்?
 
எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் மையப் படுத்திச் சிந்திக்கவில்லை.  நான் கற்றுக்கொண்ட அறிவியலின் ஆளுமைதான் என்னுடைய கனவின் களம்.
 
ஒப்பிக்கும் கல்வி முறைக்கு எதிராக இருந்தீர்கள்.  உறவுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை மாணவர் களிடமிருந்து எப்படிப் பெறுவது?
 
மொழிக்கல்வியின் மீது நம் கவனம் பதிய வேண்டும்.  தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர் களையும் எண்ணிப் பார்க்காத இளம் உள்ளம் இல்லை.  அந்த எண்ணத்தை வெளிப்படுத்த மொழி கைகொடுக்கவேண்டும்.  தவறென்றால் திருத்தி ஊக்குவிக்கும் வகுப்பறை வேண்டும்.  அந்தச் சுதந்திர உள்ளம் புதுமைகளைச் சொல்லும், எந்த உறவையும் வெல்லும்
 
“பொன்னுசாமி ஸ்கேல்” என்று தங்களுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த தேற்றம் பற்றிச் சொல்லுங்கள்.
 
உயிரியல்பியலில் இது ஒரு மிகச்சிறிய விளக்கம்.  உயிரினங்களின் செயல்களில் பல சிறிய-பெரிய மூலக்கூறுகள் இயங்கிக் கொண்டிருக் கின்றன.  புரதம் என்பது அவற்றில் ஒருவகைப் பெரிய மூலக்கூறு.  அது இருபது வகையான - அமினோ அமிலங்கள்- என்ற சிறிய மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் எண்ணிக்கையிலும் ஒரு சங்கிலியாக இணைவதால் உண்டானது.  இந்தப் பெரிய புரத மூலக்கூறு தனக்கு இயல்பாக அமையும் ஒரு முப்பரிமாண உருவத்தைப் பெறும்.  அந்த உருவில் இருக்கும்போது ஒரு வேலையை அது சரியாகச் செய்யும்.  உருவில் மாற்றம் ஏற்பட்டு விட்டால் அந்த வேலையை அது செய்யாது.  ‘இயங்கும் உடலில் ஒரு புரத மூலக்கூறு எப்படித் தனக்கு இயல்பான ஒரு முப்பரிமாண உருவத்தைப் பெறுகின்றது?’ என்பது பல்லாண்டுகளாக நடை பெறும் ஆராய்ச்சி.  அமினோ அமிலங்கள் என்ற 20 சிறிய மூலக்கூறுகள் தனித்தும் ஒன்றோ டொன்று இணைந்தும் இருக்கும்போது அவற்றின் குணங்கள் தெரிந்தால்தான் புரதங்களின் உருவ அமைப்பை அறிய முடியும்.  
 
‘நீரில் தனித்தும், புரதச் சங்கிலியில் ஒரு பகுதியாகவும் இருக்கும் போது இந்த 20 வகை அமினோ அமிலங்களும் தம் பண்புகளில் எப்படி மாறுபடுகின்றன’ என்பதை Hydrophobicity என்ற ஒரு பண்ணை வரிசைப் படுத்தி மணவாளன் என்ற மாணவரும் நானும் சூயவரசந என்ற இதழில் 1979-ஆம் ஆண்டில் பிரசுரித்தோம்.  அந்த இதழில் கட்டுரைகள் வெளிவருவதென்பது பெருமைக்குரிய செய்தி.  பிறகு அமினோ அமிலங்களின் வரிசைப்பாடு என் குழுவால் மேலும் துல்லியப்படுத்தப் பட்டது.  பலர் இந்தமாதிரியான அளவுகோல்களை முன் வைத்திருந்தாலும் எங்கள் அளவுகோல் சிறப்பான வற்றில் ஒன்று என்று முன்னிருத்திப் பயன்படுத்தப் படுகிறது.  ஒரு காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகளில் உலகில் அதிகம் பேரால் சுட்டிக் காட்டப்பட்ட கட்டுரைகளில் ஒன்றாக அது குறிப்பிடப்பட்டது.
 
துணைவேந்தராக இருபெரும் பல்கலைக்கழகங்களில் இருந்திருக்கிறீர்கள்.  அதன் அனுபவம்?
 
நிறையச் சொல்லலாம்.  சுருக்கம்: 1) ஆராய்ச்சிப் பணிகள் தடையின்றி நடைபெற எடுத்துக்கொண்ட முயற்சிகள்: திறமைமிக்க இளம் ஆசிரியர்களையும் ஆராய்ச்சி மாணவர்களையும் பாகுபாடின்றித் தெரிவுசெய்து அவர்களை ஊக்குவித்ததும் அதன் பயனும்; தொலைதூரக் கல்வியின் தரம் மேம் படுத்தப்பட்டு அதில் பயனும்: இவை மகிழ்ச்சி நினைவுகள்.  2) திறமைமிக்க ஆசிரியர்களை நியமிக்க எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சி களிலும் தோல்வி கண்டது: இது வருத்திடும் நினைவு.  3) பொறுப்பேற்றபோதும், பொறுப்பி லிருந்து விடுபட்டபோதும் இரண்டு பல்கலைக் கழக வளாகங்களிலும் கண்ட ஒரேமாதிரியான மகிழ்ச்சி வரவேற்பும், வாழ்த்தி வழியனுப்புதலும்: இப்போது என்னைக் ‘கொடுத்து வைத்தவன்’ என் கிறார்கள்.  4) துணைவேந்தர் நியமனம், ஆட்சிக் குழு அமைப்பு, ஆசிரியர் பணிநியமனம், தேர்வு முறை - என அனைத்துப் பரிமாணங்களிலும் நம் பல்கலைக்கழகங்களில் புகுத்தவேண்டிய மாற்றங்கள் நிறைய உள்ளன.  அப்படி நல்ல மாற்றங்கள் வருமா என்பது ஒவ்வொரு நடுநிலைக் கல்வியாளரின் ஏக்கம்.
 
அமெரிக்க வாழ்க்கை பற்றி...
 
நிறையச் சொல்லலாம்.  சுருக்கம்: 1) மிகப் பெரிய ஆராய்ச்சிக்கூடங்களிலும், நோபல் பரிசுக்குக் குறி வைத்து ஆய்வு செய்யும் பெரும் விஞ்ஞானி களின் குழுக்களிலும் இருந்து ஒருங்கிணைப்பையும் உழைப்பையும் கண்டது- கொஞ்சம் பங்கேற்றுப் பக்குவப்பட்டது; புதையல் களங்களான நூலகங்கள்; கல்விக்கூடங்களின் ஒளிவுமறைவற்ற கட்டண முறை, சுற்றுப்புறத் தூய்மை, வாங்கிப் பிடிக்காமல் போன பொருட்களைத் திருப்பித் தந்துவிடுதல், சாலைகளில் காவல் அதிகாரிகளின் கார்களைக் கண்டுவிட்டால் கதிகலங்கிப் போகும் காரோட்டிகள் - லஞ்சமே வாங்காத சாலைப் போலீஸ் அதிகாரிகள்; ஓரிரு நாட்கள் தள்ளிப்போனாலும் வீட்டு வாடகை யோடு கொஞ்சம் தண்டமும் பெற்றுவிடும் வீட்டு உரிமையாளர்கள், குறிப்பிட்ட நாளில் காலி செய்தே ஆகவேண்டிய குடித்தனக்காரர்கள், நெருக்கடி யில்லாத போக்குவரத்து வாகனங்கள்: எல்லாம் ஏக்கம் ஏற்படுத்திய நினைவுகள்.  2) நியூயார்க்கில் மாணவர்கள் தங்கியிருந்த ஓர் அறையில் விளக்கைப் போட்டதும் பறந்த கரப்பான் பூச்சிகள்; நியூ யார்க்கிலும், டெட்ராயிட் போன்ற பெரிய நகரங் களிலும் நுழைய அச்சம் கொடுக்கும் சில குடி யிருப்புகள், வீதிகள்; அனைத்து முயற்சிகளையும் முறியடித்து வெற்றி கண்டுகொண்டிருக்கும் நிறப் பாகுபாடு; சட்டென்று சிறுவர்கூட எடுத்துக் கொள்ளும் துப்பாக்கிகள்; நாற்பது ஐம்பது ஆண்டு வாழ்க்கைக்குப் பின்னும் இரண்டுவகைப் பண்பாடுகளிலும் சிக்கி இடர்ப்படும் இந்தியக் குடும்பங்கள், மொழிவழிச் சங்கங்கள்: இவை யெல்லாம் வருத்தும் நினைவலைகள்.  3) அந்த நாட்டிற்குப் போய்ப் புத்துணர்வு பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற- என்றும் மங்காத ஈர்ப்பு.
 
தாங்கள் சந்தித்த முக்கிய வெளிநாட்டு அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் இன்றைய இந்திய ஆராய்ச்சிக்கு முன்னோடியாகத் தேவை என்று கருதுபவற்றுள் சிலவற்றை...
 
என்னுடைய ஆய்வுப் பணிக்குத் தொடர் பானவர்களில் சிலரை மட்டும் குறிப்பிடுதல் பொருத்தம்: தோரத்தி ஹாட்ஜ்கின் ((Dorothy Hodgkin)) (இங்கிலாந்து; மூலக்கூறுகளின் முப்பரிமாணம் அறிய எக்ஸ்-கதிர்ப் பரிசோதனைகள் செய்து நோபல் பரிசு பெற்ற பெண் அறிஞர்;இப்போது உயிருடன் இல்லை); லைனஸ் பவுளிங் (Linue Pauling) (அமெரிக்கர்; மூலக்கூறுகளில் அணுக்கள் இணைவதையும், இணைவதற்கான அடிப்படைக் காரணங்களையும், இணைத்தூரங்கள், கோணங்கள் பற்றித் துல்லியமாகத் தெரிவித்தவர்; நோபல் பரிசு பெற்றவர்; இவரும் மறைந்து விட்டார்); ரோல்டு ஹாப்மேன் (Roald Hoffman) (அமெரிக்கர்; மூலக்கூறுகளில் அணுக்கள் இணை வதைப் பலவாறாக விளக்கியவர்; நோபல் பரிசு பெற்றவர்); நான் உடனிருந்து பணிபுரிந்த கார்நல் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஹெரால்டு செராகா (Herold Scheraga);  கொலம்பஸ் ஒகாயோ பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் பேராசிரியர் முத்தையா சுந்தரலிங்கம் (இலங்கைப் பிறப்புவழி) முக்கியமானவர்கள்.  சமகாலத்தில் இவர்களெல்லாம் இந்திய அறிவியலாளர்களுடன் நல்ல தொடர்புகொண்டிருந்தவர்கள்.  இவர்களுடைய கண்டுபிடிப்புகளெல்லாம் முக்கியமானவை.  
 
எந்த வெளிநாட்டு அறிஞரையும், அவருடைய கண்டு பிடிப்பையும் நம் அறிவியலறிஞர்கள் முன்னோடி களாக எடுத்துக்கொள்ளவேண்டிய தேவையில்லை என்பது என் கருத்து.  நம் அறிவியல் அறிஞர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று வரத் தங்குதடை இல்லையென்றால் முன்னேறிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளின் விளிம்புகள் அவர்களுக்குத் தெரியும்.  இருக்கும் குறைகள்; வல்லவர்கள் அதிகம் பேர் நம்மிடம் இல்லை.  இன்றைய நம் பல்கலைக் கழகங்களின் கட்டமைப்பு, நிர்வாகமுறை, ஆசிரியர் தேர்வுமுறை, அடையாளம் காட்ட முடியாத மறைவுத் தலையீடு - எனலாம் பெரிய சாதனை யாளர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையைத் தூரத் தள்ளிவிட்டுள்ளன.  ஆராய்ச்சி வண்டி ஓடிக்கொண்டு இருக்கும்.  அதிலிருந்து நம்மவர் இறங்கும்போது வயதுமட்டும் அறுபதோ அறு பதைந்தோ ஆகியிருக்கும்.  அவர்களின் சாதனைகள், கண்டுபிடிப்புகள் நமக்குப் பலனோ பெருமையோ சேர்க்க மாட்டா! இப்போது வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வெளிநாடுவாழ் தமிழர், பேராசிரியர் இராமகிருஷ்ணன் இங்கு இருந்திருந்தால் அதே வயதில்தான் இருந்திருப்பார்; ஆனால் அந்தப் பரிசைப் பெற்றிருக்க மாட்டார்.  நமக்கு இந்தநிலை போதும்! அவ்வளவுதான்.
 
Without experimentalists theorists tend to drift.Without theorist expermentalists tend to faulter என்கிற தங்கள் கருத்துப் பற்றி...
 
இக்கூற்று அறிவியல் உலகில் பலராலும் குறிப்பிடப்படும் ஒன்று.  அதைத்தான் என் கட்டுரை ஒன்றில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.  அறிவியல் வளர்ச்சி வரலாற்றில் பல நல்ல கருதுகோள்கள் (theories) உரிய பரிசோதனைகள் (experiments) மூலம் சரிபார்க்க முடியாமல் நீண்டகாலம் இருந்ததும், நல்ல பரிசோதனைகளின் முடிவுகளை ஒருங்கிணைக்கும் கருதுகோள்கள் இல்லாததால் நீண்டகாலம் பயனின்றி இருந்ததற்கும் நிறைய சான்றுகள் உள்ளதைக் காணலாம்.  எடுத்துக்காட்டுகள்:
 
1) சிக்காகோ நகரில் Enrico Fermi (அணுகுண்டை வெடிப்பதில் முன்னின்றவர்) Cyolotron என்ற ஆற்றல்மிக்க எந்திரத்தை அமைத்து அணுத்துகள் பரிசோதனைகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது Nucleon resonance என்ற ஒரு நிகழ்வு எந்திரத்துக்குள் நடந்துகொண்டிருந்தது.  சிறந்த கருதுகோள் அறிஞரான Fermi அந்நிகழ்வை எதிர் பார்க்காதால், அது நடந்துகொண்டிருந்தும் கண்டு கொள்ளவில்லை.  இன்னொரு பரிசோதனை அறிஞர் சுட்டிக்காட்டியபோதும் அலட்சியமாக இருந்துகொண்டார்.  பிறகு அது உண்மைதானென்று தெரிந்தபோது மகிழ்ந்தார்.  அக்கண்டுபிடிப்பு அணுத்துகள் சோதனைகள் பெரிதும் உதவியா யிருந்தது 
 
2) Muon என்பது தோன்றி அழியும் ஒருவகை அணுத்துகள்.  அதன் வாழ்க்கையை அறிய Michel parameter என்ற ஓர் அளவீடு உண்டு. அந்த அளவீட்டைப் பரிசோதனை அறிஞர்கள் அளந்த போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டிக் கொண்டே போய்க்கொண்டிருந்தார்கள்.  ஒரு கட்டத்தில் ஒரு கருதுகோள் அறிஞர் ஒரு கணிப்பீட்டின் மூலம் அந்த அளவீடு 0.75-க்கு மேல் இருக்கமுடியாது என்று சுட்டிக்காட்டினார்.  பிறகுதான் பரிசோதனையாளர்கள் அதைக் கூட்டிக் கொண்டு போவதை நிறுத்தினார்கள்!
 
“மாற்று வளர்ச்சி மாதிரி” தேவை? எப்படி?
 
அறிவியல் வளர்ச்சியை ஒட்டித்தான் இந்தக் கேள்வியை முன் வைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.  மாற்று வளர்ச்சிப் பாதை அறிவியலுக்கு தேவைதான்.  ஆனால் முன்னேறிய நாடுகள் அதை ஏற்கத் தயாராயில்லை.  ஓட்டத்தில் முன்னே போய்க் கொண்டிருப்பவர்கள், அந்த இடைவெளியைக் குறைத்துக்கொள்ளத் தயங்குவதில் ஒரு பொருள் இருக்கின்றது.  சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு அறிவியல் வளர வேண்டும்.  இதுதான் மாற்று வளர்ச்சிப் பாதை.  விளைநிலங்கள் பாழ்படக் கூடாது; ஓசோனைப் பாழ்படுத்தும் கழிவுகள் கூடாது.  மனிதனுக்குப் பந்தயவெற்றியும், மேலும் மேலும் கூடும் வசதியும் மட்டும் குறிக்கோளாக இருக்கமுடியாது.  
 
பாதுகாப்பும் சகோதரத்துவமும் தான் குறிக்கோளாக இருக்க முடியும்.  ஓர் அறிஞர் சொன்னார்: அறிவியல் ஓர் அற்புதமான திறவு கோல் (சாவி).  ஆனால் அது இரண்டு கதவுகளுக்குப் பொருந்தும்: ஒன்று சொர்க்கத்துக்கானது; மற்றது நரகத்துக்கானது.  மனிதன் எந்தக்கதவைத் திறக் கிறானோ அதன் பயன் கிட்டும்.  ஆக்கமா? அழிவா? - அவன் குழம்பிப் போயிருக்கிறான்.  ஆக்கத்திற்கான அறிவியல் வளர்ச்சி அழிவிற்கும் துணைபோகிறது.  பாதுகாப்பு என்ற போர்வையில் அறிவியல் வளர்ச்சி அழிவுக்குத் துணைபோகிறது.  எந்த ஓர் இசமும் இனி வழிகாட்டும் என்று மனிதனால் நம்பமுடிய வில்லை.  மனித இனம் இப்போது இருபெரும் பிரிவுகளாகப் பிளந்து நிற்கிறது.  அறிவியலாதிக்கத் தாக்குதலுடன் ஒரு பிரிவு; உயிர்க்குண்டுகளுடன் தாக்கும் இன்னொரு பிரிவு.  இதில் எந்தப்பிரிவும் வெற்றிபெற்றுவிட முடியாது.  அறிவியல் திறவு கோலை மானுடத்தின் மொத்தப் பாதுகாப்புக் காகவும், ஒருங்கிணைந்த வாழ்வுக்காகவும் பயன் படுத்தும் உலகத்தலைவர்கள் வேண்டும்.  அத்தகைய தலைவர்கள் காலத்தின் கட்டாயம்; மானுடத்தின் கட்டாயம்.  நாளைய அறிவியல் வளர்ச்சியின் மாதிரி அவர்கள் உருவாவதைப் பொருத்துத்தான் அமையும்.
 
அறிவியல் தொழில்நுட்பமும் சுரண்டலுக்கான கருவியாக இருப்பது பற்றி...
 
முந்தைய கேள்விக்கான பதிலில் தெரிவித்த கருத்துத்தான் இங்கும்.  எந்தக் கருவியையும் நன் மைக்கும் பயன்படுத்தலாம், தீமைக்கும் பயன் படுத்தலாம்.  அறிவியலும் தொழில்நுட்பமும் வலிமையான கருவிகள்.  அதைக் கையாளத் தெரிந்து கொண்டவர்கள் வெற்றியைமட்டுமே குறிக் கோளாகக் கொண்டு செயல்படுகின்றனர்.  புதியன வற்றை நாம் கிடைக்கும் விலைக்குத்தான் வாங்கி யாக வேண்டும்.  அதில் சுரண்டல் ஒளிந்திருக்கத் தான் செய்யும்.  இது தவிர்க்கமுடியாதது.
 
‘இராமன் விளைவு’ கருவி போன்ற எளிமையான கருவிகளை முன்வைத்து இன்று எளிமையான ஆராய்ச்சி இயலுமா?
 
‘இராமன் விளைவு’ எளிமையான கருவி கொண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால் அந்த விளைவைப் பயன்படுத்திப் பயன்களை அடையப் பெரியபெரிய கருவிகளை/ எந்திரங் களைத் தோற்றுவிக்க வேண்டியிருக்கிறது.  சக்கரம் எளிய கருவி; அதன் பயனைப் பெற சிறிய வண்டியை யோ பெரிய விமானத்தையோ உருவாக்கவேண்டும்.  அறிவியல் தொழில்நுட்ப முயற்சிகளில் அவ்வப் போது சில உரிய உண்மைகள் மிகச்சிறிய எளிய கருவிகள் வழியாக வெளிவந்துவிடும்.  ஆனால் அந்த உண்மைகளைப் பயன்படுத்தப் பெரிய கருவிகளை உண்டாக்கியாகவேண்டும்.  அறிவியல் தொழில்நுட்பமாகும்போது ‘மகத்’, ‘பிரம்மாண்டம்’ இன்றியமையாதது.  எளிமையான கண்டுபிடிப்பு களும் கருவிகளும் எப்போதாவது பெரும்பாலும் இயல்பாக வருபவையாகவே இருக்கும்.  திட்ட மிட்டுக் கண்டுபிடிப்புகளையும் கருவிகளையும் தேடும்போது கூட்டுமுயற்சியும், பெரும் கருவி களும் கட்டாயம் தேவை.  எப்போதும் எளிமை யான ஆராய்ச்சிகள் தொடரலாம்.  ஆனால் இன்றைய எதிர்பார்ப்புகளுக்கு பிரம்மாண்ட அறிவியல் மிகவும் தேவை.
 
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற குலோத்துங்கன் அவர்களைப்பற்றி ஆங்கில நூல் எழுதியுள்ளீர்கள்.  அவர் விஞ்ஞானி, தங்களைப்போல் என்பதால்தான் அவர் உங்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறாரா? அவரின் சமீபத்திய ‘மானுட யாத்திரை’ காவிய நூல்பற்றி...
 
குலோத்துங்கன் அவர்களைப்பற்றிப் பலர் நூல்கள் படைத்திருக்கிறார்கள்.  அதில் நானும் ஒருவன்.  அறிவியல் சிந்தனையோடு தமிழினத்தைப் பற்றியும் சிந்திப்பவர் அவர்.  நானும் அப்படித் தானே! அவருடன் விவாதிக்கும் நேரங்களும் எனக்கு அதிகம் கிடைத்திருக்கிறது.  ஓரிரு கட்டுரை களையும், ஓர் ஆங்கிலத் தொகுப்பு நூலையும் அவர் படைப்புகள் பற்றிக் கொண்டு வந்திருக் கின்றேன்.  நீங்கள் குறிப்பிடும் நூல் பல அறிஞர்கள் அவருடைய படைப்புகளைப் பற்றி எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.  நானே முழுமையாக அதை எழுதவில்லை.  அவருடைய சமீபத்திய ‘மானுட யாத்திரை’ மூன்று தொகுப்பு களாக வந்துள்ளது.  மூன்றையும் ஆழமாகப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  காவியப் படைப்பில் அது புதுமுயற்சி.  கதையொன்றின் பின்னணியில் இல்லாமல் மானுடத்தின் மொத்தப் பரிமாணத்தை முன்வைத்து எழுதப்பட்டிருக்கின்றது.  ஓர் அறிவியலாளரின் பார்வையில் அறிவியல்-தொழில் நுட்பம் மட்டுமல்லாது, சமயமும் ஆன்மீகமும் உலகப்பரப்பில் ஆழமாக வேர்பிடித்திருக்கும் பாங்கின் விவரிப்பு பிரமிக்க வைக்கிறது.  மானுட யாத்திரை ஓர் ஏக்கத்துடன் - ஆனால் பெரும் நம்பிக்கையுடன் தொடர்வதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
 
அறிவியல் வளர்ச்சியோடு சமயம் கைகோத்துப் போதல் என்பதைச் சில கட்டுரைகளில் விவாதமாகி யிருக்கிறீர்கள்.  இதுபற்றி...
 
இன்றைய அறிவியலின் அசுர வளர்ச்சி அப்படி ஒரு விவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று எண்ணுபவர்களில் நானும் ஒருவன்.  இந்த விவாதத்திற்கு கடவுள், சமயம் என்பது பற்றி யெல்லாம் ஆழமான சிந்தனைகள் தேவையில்லை.  மனித வாழ்க்கைக்குச் சில விழுமியங்கள் இன்றி யமையாதவை.  அவற்றை அறிவியல் அழித்து விடுமோ என்ற அச்சம் அவ்வப்போது தோன்று கிறது.  கடவுள் நினைவும், சமயமும் பெரும் பாலானருக்கு அச்சமயங்களில் ஆறுதல் கொடுக் கின்றன.  மூடநம்பிக்கைகளைக்கொண்டு அறிவியலை முடக்காத சமயத்தை வெறுக்கத் தேவையில்லை.  கண்டுபிடிப்புகளைக்கொண்டு மனித இனத்தை அழிக்காத அறிவியலை இப்போது சமயம் வெறுப்ப தில்லை.  அறிவியலும் சமயமும் ஒன்றையொன்று தழுவாமல்/ ஏற்காமல் தத்தம் பாதைகளில் அவை செல்லமுடியாது.
 
‘சூழலை’ எழுதுவது என்பது பற்றி...
 
நிறைய எழுத வேண்டிய கட்டாயம் இப் போது வந்துவிட்டது.  அறிவியல் கொடுக்கும் வளர்ச்சியென்ற தேவை பின்னாளில் திணித்து விடுகின்ற சூழல்கேட்டை அதே அறிவியலால் எதிர்கொள்ள முடியவில்லை...  ‘எளிதாக முள் மரம் களைதல் முடியாது’ என்ற உண்மையை ‘சாயத்திரை’யில் நீங்கள் காட்டியிருப்பதுபோலக் காட்டியாக வேண்டும்.  சூழல் பாதுகாப்பைப் பற்றி எழுதும்போது வளர்ச்சியையும் மனதில் கொண்டு தான் எழுதவேண்டும்.  சுற்றுச்சூழல் அறிவு பரவும் வகையில் அதிகம் எழுதவேண்டும்.  அதுதான் இன்று நமது தலையாய கடமை.
 
உங்களின் அடுத்த  அறிவியல் படைப்பு என்ன?
 
ஓரிரு ஆண்டுகளுக்கு ‘முழுதும் அறிவியல்’ என்ற நோக்கில் எதுவும் எழுதும் வாய்ப்புக் குறைவாக உள்ளது.
 
உங்களின் அடுத்த இலக்கியப் படைப்புப் பற்றி...
 
நாவல் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது.  அதிகம் பேசப்படாத நம் பல்கலைக்கழகங்களின் பின்னணி களமாக அமைகிறது.  நிறையப் பட்டறிவு உள்ளது.  தெரிந்த ஒன்றை எழுதுவது நல்லது தானே! பல்கலைக்கழகமென்றதும் மெத்தப் படித்தவர்களைப்பற்றி மெத்தப் படித்தவர் களுக்காக எழுதுப்படும் நாவல் என்று எண்ணிவிட வேண்டாம்.  அனைவரும் விரும்பிப் படிக்கத் தக்க தாகவே இருக்கும்.
 
‘ராகிங்’ பல சட்டங்களுக்குக் கட்டுப்படாதபடி இருக்கும் சூழலில் பொன் நாவரசு மரணம் எழுப்பிய கேள்விகள் இன்றும் தீவிரமாகியிருப்பதை எப்படி எதிர்கொள்வது?
 
அந்த மரணம் எந்தக் கேள்வியையும் எழுப்பி யதாக எனக்குப் படவில்லை.  ‘ராகிங்’ பற்றி என்னால் கருத்துக்கூற முடியாது.
 
பொன் நாவரசு அறக்கட்டளைப் பணிகள் எந்த அளவில்?
 
மிகச்சிறிய அளவில் போய்க்கொண்டிருக் கின்றது.  எங்கள் குடும்பத்தின் ஆத்ம திருப்திக்காகப் போய்க்கொண்டிருக்கின்றது.  ஏழை மாணவர் களின் கல்வி, பெண்களின் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு - என்ற சில எல்லைகளுக்குள் இயன்ற பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றது.
 
தங்களின் ஓய்வுப் பணியில் தாங்கள் நடத்தும் சிறு உயர்நிலைப் பள்ளியை முன்வைத்து கல்வித்தரம், பெற்றோர் நிலை பற்றி...
 
வடிகட்டி எடுக்கும் மேல்மட்ட மாணவர் களுக்குள்ளும் வடிகட்டிய சிலருக்கு மட்டும் கேள்வி- பதில் சொல்லிக்கொடுத்து செய்தித்தாள்களில் விளம்பரம் தேடும் வியாபாரப் பொருள்தான் இன்றைய பள்ளிக் கல்வித்தரம், கிராமப்புறங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளும் சிறிய தனியார் பள்ளிகளும் வழியற்று வரும் மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.  இங்கெல்லாம் தேர்வில் வெற்றி கிடைத்தால் அதுவே போதும்; கல்வித்தரம் பிறகுதான்.  வசதியான பெற்றோர்கள் எதிர்பார்ப்பதுபோலவே பெரிய அளவில் செலவு செய்யத் தயாராக உள்ளார்கள்.  ஏழைப்பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளுக்காவது இருக்குமளவிற்குச் சீருடையைத் தம் குழந்தை களுக்குப் பெரியதாகவே தைத்துக் கொடுக்கிறார்கள்; காலணிகளை அப்படி வாங்கிக் கொடுக்க முடியா மல் இருக்கிறார்கள்.  ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.  பயிற்சிக்கு நிறைய செலவு செய்து, நிறைய மதிப்பெண்களும் பெற்று வந்து வகுப்பறைகளில் தெரிந்ததைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டு போகிறார்கள்.  மாணவர் களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் குறை சொல்லமுடியாது.  கிராமங்களெல்லாம் நகரங்களாகும்போது சமச்சீர் கல்வி கிடைக்கும்.
 
விவசாயி என்ற அளவில் உலகமயமாக்கலை எப்படி எதிர் கொள்கிறீர்கள்? அதன் பாதிப்புகள் என்ன?
 
நாள் இரண்டு ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்கிறேன்.  என் அண்ணனும் அவர் மருமகனும் 15 ஏக்கரில் விவசாயம் செய்கிறார்கள் (தோல்விதான்; வெளி யேற வழியில்லை).  எங்களூரிலும் சுற்றுப்புறக் கிராமங்களிலும் விவசாயம்தான் வாழ்க்கைத் தொழில்.  ஒருசில பெரிய விவசாயிகளைத்தவிர (25-ஏக்கருக்கும் மேலாக) எல்லாரும் குறு-சிறு விவசாயிகள்தாம்.  எல்லாருக்கும் இப்போதைய பெரும் சிக்கல்; அது எப்போதும் வரும் போகும் - யாருக்கும் தெரியாது.  அருகில் தொழில் நகரம் திருப்பூர் இருக்கிறது.  ஒவ்வொரு கிராமத்துக்கும் வந்து சிற்றுந்துகளில் கிடைக்கும் தொழிலாளர் களைக் கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள்.  அப்படிப் போகமுடியாதவர்களுக்கு உதவியாயிருக் கிறது 100 நாள் வேலைத் திட்டம்.  கமிசன் பிடித்துப் போகக் கிடைக்கும் கூலி விவசாய வேலைக் கூலியை விடக் கூடுதலாகவும், எளிதாகவும் கிடைக்கிறது.  
 
வேலைக்கு ஆட்கள் கிடைக்கும் சிரமத்தை மனதில் கொண்டு பல்லாண்டுகளாய்ப் பயிரிட்டுவந்த கரும்பையும் நெல்லையும் குறைத்துக்கொண்டு தென்னைக்கு மாறிவிட்டார்கள் விவசாயிகள்.  அதிலும் சிக்கல் வந்துவிட்டது.  தென்னை மரமேற இப்போது ஆட்கள் கிடைப்பதில்லை.  காய்கள் தானாக விழுந்தால் பொறுக்கிக் கொள்ள வேண்டும்.  விளைபொருள்களின் சீரற்ற விலை, இடுபொருள் களின் தரமற்ற நிலை, தாறுமாறாக விலை, ஆட்கள் கிடைக்காமை, மின்சாரச் சிரமம்- எனச் சிறு-குறு விவசாயிகள் கலங்கிப் போயிருக்கிறார்கள்.  மாற்றுத் தொழில் வராது.  அவர்களுக்கு ஒரே நம்பிக்கை: எப்படியும் அவ்வப்போது ஏதோ ஒரு பெயரில் அரசுக்கடன் கிடைக்கும் என்பதும், பிறகு அந்தக்கடன் தள்ளுபடியாகும் என்பதும்தான்.  இந்தக் காட்சிகளெல்லாம் உலகமயமாக்கலின் தாக்கல்களா என்ன? எதனால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை ஆய்வதைவிட, எப்படி நம் விவசாயிகளைக் காப்பாற்றுவது என்பதுதான் இன்றைய கேள்வியாக இருக்கமுடியும்.  தள்ளுபடிக் கடன்கள் அவர்களைக் காப்பாற்ற முடியாது.  உற்பத்தி உதவி, பாதுகாக்கப்பட்ட விலை போன்றவை தான் அவர்களைக் காப்பாற்ற முடியும்.  ஒரு வேளை கூட்டுவிவசாயம், நடுத்தர, பெரிய விவசாயக் கருவிகள் பயன்பாடு - என்ற பாங்கில் ஒரு பெரிய அடிப்படை மாற்றம்தான் இன்றைய விவசாயி களைக் காப்பாற்றுமோ என்னவோ?- ஆய்வும் திட்டமும் தேவை.
 
அடுத்து வரும் நாவலில் கொங்கு மண்டலத்தைக் கடந்த 30 ஆண்டுகளாய்ப் பாதித்த தலித் பிரச்சினைகள், இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜாதிய இறுக்கங்கள், தொழில் வளர்ச்சி அனுபவங்கள் இருக்குமா?
 
அடுத்த நாவலுக்குக் கொங்கு மண்டலத்தைக் களமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை.  நீண்ட தொடர்பையும் நல்ல அனுபவத்தையும் எனக்குக் கொடுத்த இன்னொரு பகுதியான பல்கலைக்கழக வளாகங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றேன்.  ‘படுகளம்’ நாவல் முடியும் இடத்திலிருந்து இரண்டு பாதைகள் தொடங்குகின்றன: ஒன்று படித்த இளைஞர்கள் போகும் பாதை; மற்றது படிக்காத இளைஞர்கள் போகும் பாதை.  இப் போது உருவாகும் நாவல் முதல் பாதையில் செல்ல உள்ளது.  இரண்டாம் பாதையில் அடியெடுத்து வைக்க இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.  ஒவ்வொரு நாவலும் ஒரு காலகட்டத்தை முன்னிறுத்துவதால் அதுபோது சந்தித்த பலதிறப்பட்ட பிரச்சினைகள் அவற்றில் இடம்பெறும்.
 
நவீன இலக்கிய வாசிப்பு எந்த அளவில் உள்ளது? சமீபத்தில் தங்களைப் பாதித்த ஆங்கில இலக்கிய நூல்கள், அறிவியல் நூல்களின் பட்டியல் தர இயலுமா?
 
இலக்கிய வாசிப்பென்பது மிகக் குறைவாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது.  பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வீடுகளில் கதைப் புத்தகங்கள், நாவல்கள், தொடர்கதைகள் எனப் படிக்கும் பெண்கள் இருந்தார்கள்.  இப்போது அவர்களையெல்லாம் தொடர்கள், வாரங்கடந்து வரும் தொடர்கதைகளைச் சாப்பிட்டுவிட்டன.  அப்புறம் வாராந்தரிகளிலே தொடர்கதைகளும் சிறுகதைகளும் வருகின்றனவா என்ன? இப்படி நேரம் கிடைக்கும் பொதுப்பிரிவினரின் வாசிப்புப் பாதிக்கப்பட்டுப் போன பிறகு, இலக்கிய ஆர்வலர்கள் தாம் இன்றைய வாசிப்பாளர்கள்: படைப்பாளிகள் வாசித்தாக வேண்டும்.  படித்த இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கம் பெரிதாக ஒன்றும்- குறிப்பாகப் பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் இல்லை.  புத்தகக் கண்காட்சிகள்கூட கூட்டம் கூடும் இடங்கள் தாம்- அவை வாசிப்பைக் கூட்டிவிட்டதாகச் சொல்ல முடியாது.
 
ஆண்டுதோறும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அமெரிக்கா சென்று வருபவன் நான்.  அதில் எனக்குக் கிடைக்கும் ஒரு பெரு மகிழ்ச்சி வாசிப்புத்தான்.  பெரியபெரிய புத்தகக் கடைகள்.  கட்டுப்பாடில்லாமல் நுழைந்து தேவை யான நூல்களை எடுத்துப் படிக்கும் வாய்ப்பு.  நிறைய நேரம் அப்படிப் புத்தகக் கடைகளில் படிப்பது உண்டு.  எந்தப் புத்தகத்தையும் முழுமை யாகப் படிக்க முடியாது; ஆனால் பலவகைப் புத்தகங்களை, அதுவும் புது வரவுகளைப் பறவைப் பார்வையில் படித்துவிடுவது உண்டு.  மிகப் பிடித்தம்: மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் நல்ல பழைய புத்தகங்கள் சிலவற்றை வாங்கி வருவது.  அவற்றை நேரம் கிடைக்கும்போது படிப்பேன்.  அவற்றில் நாவல்கள் குறைவுதான்.  பொதுப்பிரிவுப் புத்தகங் களையும், இலக்கியப் புத்தகங்களையும் அதிகம் வாங்குவேன்.  குடியேறிய இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளையும் வாங்குவேன்.  
 
அப்படி அண்மையில் என்னைக் கவர்ந்த சில படைப்புகளை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.  ஆப்கானிஸ்தானின் ஆக்கிரமிப்பையும், மக்களின் அவலவாழ்க்கை யையும் கண்முன் பதிக்கும் Khaled Husseini-யின்  The Kite Runner (2003)  மற்றும்   A Thousand Splendid Suns (2007) அமெரிக்காவின் இன்றைய முன்னணி நாவலாசிரியர் John Grishjam  திரில்லர்கள் Summons (2002) மற்றும் The Associate (2009); இளமைக்காலத்திலும், பிறகு வந்துபோகும் காலங் களிலும் கண்ட பிறந்த இந்திய மண்ணின் மணத் தையும் மாற்றத்தையும் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் புள்ளியியல் பேராசிரியராய்ப் பணி புரிந்துகொண்டு எழுதும் Manil Suri-யின் The Death of Vishnu (2001) மற்றும் The Age of Siva (2009); Vikram Seth-‹ A Suitable Boy (2003); Kiran Desai யின் The Inheritance of Loss (2006) ; இந்த நாவல்களெல்லாம் விற்பனையில் முன்னிற்பதில் வியப்பில்லை என்பது படித்துச் சுவைத்தால் தெரியும்.  
 
நாவல்கள் அல்லாத படைப்புகள் வரிசையில் பின் வருவனவற்றைக் குறிப்பிடலாம்: Richard Rhodes-‹ Dark Sun - The Making of the Hydrogen Bomb (1995); William Cropper-‹ Great Physicists (The Life and Times of Leading Physicists from Galileo to Hawing) (2001): இந்த நூல்கள் அறிவியலையும் அறிவியலாளர்களின் வாழ்க்கை யையும் மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகள் தோன்றிய பாங்கையும் எளிமையாகக் கொடுக்கும் அற்புத நூல்கள்; ‘வாசிங்டன் போஸ்ட்’ பத்திரிகை ஆசிரியர் Bob Woodward-ன் State of Denial (Bush at War III; 2006); அமெரிக்க அதிபர் Barack Obama -வின் Dreams from My Father (A Story of Race and Inheritance) (2004 edn). இந்தப் படைப்புகளெல்லாம் ஒன்றுக்குப் பலமுறை என்று என்னைப் படிக்க ஈர்த்துக்கொண்டிருப்பவை.
 
 ஒரு பழைய இலக்கியப் பெட்டகம் எனக்குத் திரும்பத் திரும்பப் படிக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.  பதினேழாம் நூற்றாண்டிலிருந்து 20-ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரையிலான அமெரிக்க இலக்கிய வளர்ச்சியின் பதிவு இந்த The American Mind என்ற அருமைத் தொகுப்பு நூல்.  புகழ்பெற்ற எழுத் தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள் பலரின் படைப்புகளின் பகுதிகள் இதில் எடுத்துக்காட்டு களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.  எழுபது ஆண்டு களுக்கு முன்னால் வந்த நூலென்றாலும் ‘வாழும் இலக்கியமாக’ அது இன்றும் இருக்கின்றது.
 
தமிழில் அறிவியலைத் தரும் முயற்சியில் தங்களுடையது எவை எவை?
 
‘இயல்பியல் களஞ்சியம்’ என்ற அறிவியல் விளக்கத் தொகுப்பு நூலைத் தயாரித்தேன்.  இயல் பியலில் பயன்படும் பல, கருதுகோள்கள், பரி சோதனைகள், விளக்கங்கள், சொற்றொடர்களுக்கு நூறு சொற்களுக்குள் குறிப்புகள் தரும் அகராதி போன்ற நூல் அது.  பல்கலைக்கழக- கல்லூரி ஆசிரியர்களைக் கொண்டு எழுதி, அதைச் செப் பனிட்டுத் தொகுத்தேன்.  பாரதிதாசன் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து அத்தொகுப்பை வெளியிட்டன.  ‘அறிவியல் - சில பார்வைகள்’, ‘வளரும் அறிவியல் வாழும் இலக்கியம்’, ‘எதிர்காலம் இனிக்கும்’, ‘சூழலைக் காப்போம்’ (சுற்றுச்சூழல் பற்றிப் பல முன்னணிக் கவிஞர் களின் படைப்புகளின் தொகுப்பு) ஆகிய நூல் களை அறிவியல் தெளிவுகளாகப் படைத்தேன்.  சில கருத்தரங்குகளையும் நடத்தினேன்.  ‘தமிழில் அறிவியல்’ என்ற இயக்கம் தளர்ந்து போனது.  நானும் இலக்கியப் பக்கம் அதிகம் சார்ந்து கொண்டேன்.
Pin It