1976 செப்டம்பரிலிருந்து 1987 ஏப்ரல் வரை நான் மாஸ்கோவில் இருந்தேன். படித்து முடித்து ஊருக்கு வந்தவுடன் சிவசுப்பிரமணியன் சாரைத் தூத்துக்குடியில் சென்று சந்தித்தேன். அவரது பேச்சும் பழக்கவழக்கங்களும் பெரிதும் மாறிப்போயிருந்தன.

76-இல் நான் மாஸ்கோ புறப்பட்டுச் சென்ற போது, இடையில் இரண்டு முறை விடுமுறைகளில் வந்த போது, நான் பார்த்த அவருக்கும் இப்போதைய அவருக்கும் ஏராளமான மாற்றங்கள். என்ன அந்த மாற்றம்?

அவர் இப்போது முழுக்க நாட்டார் வழக்காறுகளில் நனைந்து போயிருந்தார். 76-இல் இன்னும் அவர் தமிழ்ப் பேராசிரியராகத்தான் இருந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 87-இல் அவரிடம் ஒரு தமிழ்ப் பேராசிரியரின் உரையாடல் மொழியோ உடல் மொழியோ அணுகுமுறையோ இல்லை.

முழுவதும் ஒரு நாட்டுப்புற வழக்காற்றாளராக மாறிப்போயிருந்தார். அதிகம் சிரிக்காத, சீரியசான விஷயங்களை மட்டுமே பேசும் ஆசிரியரின் தோரணை இப்போது அவரிடம் இல்லை. உடல் நெகிழ்ச்சியடைந்துவிட்டது. பேச்சில் ஏராளமாகக் கேலியும் கிண்டலும். பழமொழிகள், விடுகதைகள், பகடிகள் என்று ஒரு கிராமப்புறத்து குறும்புக்கார மனிதரின் பண்புகளெல்லாம் அவரிடம் குடிகொண்டிருந்தன.

கேலியும் கிண்டலும் பகடியும் கொண்ட பேராசிரியர் சிவத்தின் பழக்கவழக்கங்களுக்குச் சரியான ஜோடியாக அமைந்தவர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றுத் துறையின் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. லூர்து.

1990 வாக்கில் பாளையங்கோட்டையை மையமாகக் கொண்டு இருவரும் சேர்ந்து ஒரு புதிய ஆய்வாளர் வட்டத்தை உருவாக்கியிருந்தார்கள். பக்தவச்சல பாரதி, நா. ராமச் சந்திரன், ஸ்டீபன், பிலவேந்திரன், தனஞ்செயன், செல்லப் பாண்டியன், முத்துக்குமாரசாமி என ஒரு வட்டம். நாட்டார் வழக்காற்றியலாளர்கள், மானுட வியலாளர்கள், சமூக ஆய்வாளர்கள்.

இவர்களோடு விரைவில் அருள்தந்தை ஜெயபதி வந்து சேர்ந்து கொண்டார். அருள்தந்தை ஜெயபதி ஓர் அற்புதமான மனிதர். அவர் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் ஓர் ஆய்வாளர் வட்டத்தை உருவாக்கி விடுவார். ஆய்வுக் கூட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல்கள், கள ஆய்வுகள் எனக் கலக்கி விடுவார். எல்லாவகையான கோட்பாடுகள் குறித்த நூல் களையும் கொண்டுவந்து குவித்து விடுவார். பணம், செலவு ஆகியவை அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. காரியம் நடக்க வேண்டும் என்ற முனைப்பில் எல்லா வற்றையும் எளிதாக்கிவிடுவார். இந்நேரத்தில் மதுரையில் எனக்குப் பேராசிரியர்கள் தொ.பரமசிவன், இ. முத்தையா போன்றோர் அறிமுகமாகிவிட்டனர்.

பேராசிரியர் சிவம் தான், என்னை அமைப்பியலைப் படி என்றார். தமிழவனின் முதல் நூல் ஒன்றும் இன்னும் சில நூல்கள் மட்டுமே தமிழில் அப்போது வெளிவந்திருந்தன. தமிழவனின் நூல் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தது என்பது உண்மை. மாஸ்கோவில் லேவி ஸ்ட்ராசும் அல்த்தூசரும் எனக்கு அறிமுகமாகி யிருந்தனர். அல்தூசரை மேலை மார்க்சியரில் சிலர் நிராகரித்த போதிலும் அவரை ரஷ்ய மார்க்சியர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

லேவி ஸ்ட்ராசின் “அமைப்பியல் நோக்கில் மானுடவியல்” ((Structural Anthropology) நூல் என்னிடம் ரஷ்ய மொழிபெயர்ப்பில் இருந்தது. இருப்பினும் சசூர், ரோமன் யாக்கப்சன், விளாதீமிர் பிராப் போன்றோரின் நூல்களைத் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டியிருந்தது. அவர்களைப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினேன். ரஷ்ய உருவவியல் அமைப் பியலுக்கு ஒரு வகையில் முன்னோடி. எனவே எனது அமைப்பியல் பற்றிய புரிதல் ரஷ்ய முன்மாதிரிகளைப் பின்பற்றியதாக இருந்தது. தொடர்ந்து மிகயில் பக்தீன் பற்றி ஆர்வம் கொண்டேன். பக்தீனின் வழியாக பின்னை அமைப்பியலுக்கு எளிதில் வரமுடிந்தது. மிகயில் பக்தீன் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் மீது காதல் கொண்டவர். அந்தக் காதல் இப்போது என்னையும் பற்றிக் கொண்டது.

அமைப்பியல் குறித்து “ஏய், அது அப்படித்தானே, இது இப்படித்தானே” என்று பேராசிரியர் சிவம் சில வேளைகளில் என்னிடம் கேட்பார். எனக்குச் சிரிப்பாக இருக்கும். ஏனென்றால், நான் புரிந்துகொண்ட வரையில், பேராசிரியர் சிவத்திற்கு அந்தக் கோட்பாடு களெல்லாம் தேவையில்லாதவை. அவர் மிக வித்தியாச மான ஓர் ஆய்வாளர். அவர் அவர் போக்கிலேயே செல்ல வேண்டும், அவருக்கு எதற்கு அமைப்பியல்? என்று நான் நினைப்பேன்.

தமிழ்நாட்டில் கோட்பாடுகள் சார்ந்து மட்டுமே சிந்திக்கத் தெரிந்த ஓர் அறிவாளிகள் பட்டாளம் உண்டு. அடுத்தடுத்து ஏதாவது கோட் பாடுகள் ஆங்கிலத்தில் வராமல் போய்விட்டால் இவர் களால் ஒரு கட்டுரை கூட எழுத முடியாமல் போய் விடும். திக்குமுக்காடித் திணறிப் போய்விடுவார்கள். ஆனால் பேராசிரியர் சிவம் அடிப்படையிலேயே அவர் களிடமிருந்து வேறுபடுபவர். அவர் கோட்பாடுகள் சார்ந்த ஆய்வாளரே அல்ல. மார்க்சியத்தைக் கூட அவர் அவருக்கே உரிய முறையில் சொந்தமாகப் புரிந்து கொண்டவர்.

அந்தோனியோ கிராம்சி சொல்லுவாரே, அதுபோல, அவர் தமிழ் மரபின் சொந்த (Organic) முறையியலிலிருந்து நமக்குக் கிடைத்த அறிஞர். சைக்கிளில் கூட ஏறிப்போகாமல் பஸ்ஸில் மட்டுமே பிரயாணம் செய்வார், தவிர நடந்தே செல்லுவார். தனியாக நடக்கும்போது வேகமாக நடப்பார். இப்போதுதான் சில வேளைகளில் பைக்கில் ஏறி பின்னால் ரொம்பப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு அமர்ந்து பயணம் செய்கிறார். அவரது ஆராய்ச்சிகளும் அப்படித்தான் என்று எனக்குத் தோன்றும். அடித்தள மக்கள் வரலாறு (Subaltern history), இனவரைவியல் நாவல் (Ethnographic Novel), வாய்மொழி வரலாறு (OralHistory), பண்பாட்டு அரசியல் ((Cultural Politics) என்றெல்லாம் அவர் தலைப்பிட்டு எழுதுவது நம்மூரில் உள்ள ஆங்கிலம் அறிந்த அறிவாளிகளை ஏமாற்று வதற்காகத்தான் என்று எனக்குத் தோன்றும்.

விஷயம் என்னவென்றால், இந்தக் கோட்பாடுகள் மேலைநாடு களிலிருந்து தமிழுக்கு வருவதற்கு முன்னாலேயே, பேராசிரியர் சிவம் அந்த வட்டாரங்களுக்குள் நுழைந்து விட்டார். நாட்டார் வழக்காற்று ஆய்வுகளில் அவர் ஈடுபடத் தொடங்கியதிலிருந்து, ஒரு மார்க்சியருக்குத் தேவையான சமூக வரலாற்றுப் பார்வையில் அவற்றை அவர் பயிலத் தொடங்கியபோது, மிக இயல்பாகவே அந்த வட்டாரங்களுக்கு அவர் வந்து சேர்ந்து விட்டார். மற்றவர்களுக்குக் கோட்பாடுகளின் மூலமாகக் கிடைத்த சில வெளிச்சங்கள் அவருக்கு அவரது சொந்த ஆய்வுகளின் வழியாக உள்ளுக்குள்ளிருந்தே கிடைத்து விட்டன.

பொருளாதார அடிப்படை, கருத்தியல் மேற் கட்டுமானம் என்ற இரண்டு கருத்தாக்கங்களுக்கு இடை யிலான உறவுகளைப் புரிந்துகொள்ளுவதற்கு என் போன்றவர்கள் ஏராளமாக மேற்கத்திய மார்க்சிய நூல்களைப் படித்துத் திணறிக் கொண்டிருப்போமாக இருக்கலாம். அல்லது பண்பாட்டு மார்க்சியம் என்றால் என்ன? என்பது குறித்துப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்போமாக இருக்கலாம். ஆனால் பேராசிரியர் சிவம் அவரது ஆய்வுக் களத்தை விட்டுத் துளியும் விலகா மலேயே அது போன்ற பிரச்சினைகளை அனக்க மில்லாமல் கடந்து சென்று விடுவார்.

“அனக்க மில்லாமல்” என்று நான் சொல்லும்போது அந்தச் சொல்லின் பொருளை உணர்ந்து சொல்லுகிறேன். கோட்பாட்டுக் கறார்த்தனங்களுக்கு அப்பாற்பட்டு நின்று எந்த ஆர்ப்பாட்டமும் அலட்டலும் இல்லாமல் அவர் அம்மாதிரிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவிடுவார். கிராமப்புற விவசாயிகளிடையில் வேலை செய்து அனுபவப்பட்ட ஒரு கம்யூனிஸ்டிடம் உள்ள நுட்பம் பேராசிரியர் சிவத்திடம் தென்படும். விவசாயிகள் சங்க மாநாடுகளில் பேராசிரியர் சிவத்தை விரும்பி அழைப்பார்கள். ஏனெனில் அவர் பேசுவது அவர்களுக்கு நன்றாகப் புரியும். கோட்பாடுகளை மனனம் செய்பவர்கள் விவசாயிகளைச் சந்தித்தால் திணறிப் போய்விடுவார்கள்.

கோட்பாடுகளுக்கும் எதார்த்தத்திற்கும் நடுவிலான இடைவெளி குறித்த பிரச்சினை இது. ஒரு கோட் பாட்டாளனுக்குத்தான் இந்த இடைவெளி பூதாகரமாகக் காட்சியளிக்கும். அது தீர்க்கவே முடியாத ஒன்றாகத் தோன்றும். ஆனால் நடைமுறையாளன் ஒருவன் அதனை மிக லாவகமாகக் கடந்துவிடுவான். இன்னொரு விஷயம் தெரியுமா, மார்க்ஸ் சொல்லுகிறார், கோட் பாட்டுத் தளத்தில் தீர்வு காணமுடியாமல் நம்மைத் தவிக்க வைக்கும் சில பிரச்சினைகளுக்கு நடைமுறையில் தீர்வு கண்டுவிடலாம் என்பார். இதனைப் பேராசிரியர் சிவத்திடம் நான் கண்டுள்ளேன்.

அடிப்படை/மேற்கட்டுமானம், பண்பாட்டு அரசியல், ஃபிராய்டியமும் மார்க்சியமும், நனவிலி மனமும் நனவு மனமும், பொருளாதாரப் பிரச்சினைகளும் பண்பாட்டுப் பிரச்சினைகளும், வர்க்கமும் சாதியமும், மார்க்சியமும் தலித்தியமும், மார்க்சியமும் பெண்ணியமும், வடிவமைக்கப்பட்ட போராட்டங்களும் தன்னிச்சையான எழுச்சிகளும், ஒன்றிணைந்த போராட்டங்களும் உதிரியான எழுச்சிகளும் - இப்படிப் பலவகையான பிரச்சினைகளைப் பேராசிரியர் சிவம் தனது கட்டுரை களிலும் நூல்களிலும் கையாண்டுள்ளார். மிக அற்புத மாகக் கையாண்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைகளைக் கையாளுவதில் பேராசிரியர் சிவம் வெகுதூரம் பயணித்திருக்கிறார். இப்பிரச்சினைகளை அவர் கோட்பாடாக இல்லாமல், “சாமியாடும் பெண்கள்” என்ற ஒரு கட்டுரையிலோ அல்லது “முத்திரை மரக்கால்” பற்றிய கட்டுரையிலோ செய்திருப்பார். ஆனால் என் போன்றவர்கள் மிகக் கொஞ்சமாகவேனும் அவற்றைக் கோட்பாட்டு விவாதங்களாக எழுதும்போது மூத்த பேராசிரியர்கள் தோதாத்ரி போன்றோர், “என்ன, மார்க்சியத்திலிருந்து விலகிப் போகிறாயே!” என்று எச்சரிப்பார்கள்.

பேராசிரியர் சிவத்தையும் கூட பின்னை நவீனத்துவ செல்வாக்கு கொண்டவர் என விமர்சித் திருக்கிறார்கள். பேராசிரியர் சிவத்தின் கோட்பாட்டு அலங்காரங்கள் இல்லாத நடைமுறைக் களம் சார்ந்த அணுகுமுறை அவரது மிகப்பெரிய பலம் ஆகும். அவர் எடுத்துக் கொள்ளும் பிரச்சினையே, அது குறித்த தரவுகளே வெளிப்படையான கோட்பாட்டுத் தலை யீடுகள் இன்றி அவருக்குரிய அணுகுமுறையை வழங்கிவிடும்.

20 ஆம் நூற்றாண்டில் மார்க்சியத்தில் நடந்த மிகப் பெரிய விவாதம் பொருளாதாரச் சுரண்டலுக்கும் சமூக அடக்குமுறைகளுக்கும் (Exploitation and Social Oppression) இடையிலான உறவுகள் குறித்தது. இப் பிரச்சினையைப் பெரிதுபடுத்திப் பேசியவர்கள் மேற் கிந்திய மற்றும் ஆப்பிரிக்கக் கறுப்பினச் சிந்தனை யாளர்கள். முதலாளியம் பொருளாதாரரீதியாக உழைப்பாளிகளைச் சுரண்டுகிறது என்பதை அவர்கள் மறுக்கவில்லை. ஆனால் அவர்களின் சொந்த எதார்த்தம் இன்னும் கூடுதலான ஒன்றாக இருந்தது. பொருளாதாரச் சுரண்டல் தவிர நிறவெறி அடக்குமுறைகளுக்குப் பலியானவர்களாக அவர்கள் இருந்தனர். எனவே பொருளாதார ஆதிக்கத்திலிருந்தே அடக்குமுறைகளும் எழுகின்றன என்ற கணக்கு அவர்களுக்குப் போது மானதாக இல்லை. நிறவெறி என்ற ஒன்று தனித்த, சுயாதீனமான ஓர் அடக்குமுறை வடிவமாகத் தொழில் படுகிறது என அச்சிந்தனையாளர்கள் வலியுறுத்தினார்கள். ஆக, சுரண்டலும் அடக்குமுறையும் என்ற பிரச்சினை கறுப்பினப் புரட்சியாளர்களுக்கு ஒரு முதன்மையான பிரச்சினையாகியது.

இருத்தலியம், ஃபிராய்டியம், பின்னை நவீனத்துவம் எனப் பல தத்துவங்கள் இந்த விவாதத்தில் ஈடுபட்டுள்ளன. சுரண்டலும் அதிகாரமும், சுரண்டலும் ஆணாதிக்கமும் என அப்பிரச்சினை இன்னும் பல வடிவங்களை ஏற்று வளர்ந்தது. இந்திய, தமிழ்ச் சூழல்களில் இப்பிரச்சினை சாதியமைப்பு, ஆணாதிக்கம், தேசீய இன ஒடுக்குமுறை போன்ற நமது விவகாரங்களுடன் தொடர்பு கொண்டது என்பது சொல்லத் தேவையில்லை.

மேற்கிலும் கிழக்கிலும் இது குறித்து ஏராளமான விவாதங்கள் இன்று வரை நடந்து வருகின்றன. மார்க்சியம் இந்தியச் சூழல்களுக்கு ஏற்பத் தகவமைவதில் இப்பிரச்சினை முக்கிய இடம் வகிக்கிறது. இன்னும் இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை நாம் முழுதும் உணர்ந்து கையாளவில்லை. ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்றுதான் தடுமாறிக் கொண்டிருக்கி றோம்.

பேராசிரியர் சிவம் அவர்களின் நூல்களை எடுத்துப் படித்துப் பாருங்கள். சுரண்டலும் அடக்குமுறைகளும் என்ற பிரச்சினையை அவர் மிக அற்புதமாகக் கையாண் டிருப்பார். அவரது எழுத்துக்களில் பொருளாதாரச் சுரண்டல் எங்குமே தனித்த வடிவில் தொழில் பட்டிருக்காது. சுரண்டல் இங்கு அதிகாரத்தோடும் அடக்குமுறைகளோடும் இணைந்தே பயணித்திருக்கிறது. அவற்றை எந்த விதக் கோட்பாட்டுத் தூண்டுதலுமின்றி உழைக்கும் மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என அவர் விவரித்திருப்பார்.

கொலையில் உதித்த தெய்வங் களாக இருக்கட்டும், துவிக்குத்தகைப் போராட்டமாக இருக்கட்டும், வடக்கன்குளம் ட்ரவுசர் சர்ச்சின் வரலாறாக இருக்கட்டும், பிள்ளையார் அரசியலாக இருக்கட்டும், இவை எல்லாவற்றிலும் பொருளாதாரச் சுரண்டலும் சாதி அடக்குமுறைகளும் புனித அதிகாரங் களும் இணைந்து தொழில்பட்டதை அவர் சித்திரித் திருப்பார். ஆப்பிரிக்க கறுப்பினப் புரட்சிக்காரர்களைப் படித்துவிட்டு, அல்லது மேலை மார்க்சியத்தைப் பாராயணம் செய்துவிட்டு, பேராசிரியர் சிவம் இக்கட்டுரைகளை எழுதத் தொடங்கவில்லை. தனது உண்மையான அணுகுமுறையாலும் கடுமையான உழைப்பாலும் பேராசிரியர் சென்று சேர்ந்த இடங்கள் இவை. தோழர்கள் ப.மாணிக்கம், ஆர்.நல்லகண்ணு, பேராசிரியர் நா.வானமாமலை என்ற ஒரு பள்ளியில் நேரடியாகப் பயின்று வளர்ந்தவர் பேராசிரியர் ஆ. சிவ சுப்பிரமணியன் என்பதை இன்னும் பல காலத்துக்குச் சுட்டிக்காட்டும் இடங்கள் இவை. இந்த நேர்காணல் களின் ஊடாக இதனை உங்களால் உணரமுடியும். 

நாட்டுப்புற வழக்காறுகள் என்பவற்றிலிருந்து பண்பாட்டை நோக்கி, நாட்டுப்புறச் சமயம் என்பதி லிருந்து நிறுவனச் சமயங்களை நோக்கி, வழக்காறுகள், இனவரைவியல் என்பவற்றிலிருந்து எழுத்திலக்கியம் நோக்கி, மீண்டும் தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், பழங்குடி இலக்கியம் போன்றவற்றை நோக்கி, கிறித்தவ நாட்டுப்புறவியல், இஸ்லாமிய நாட்டுப்புறவியல், அடித்தள மக்கள் வரலாறு, பெண்ணிய ஆய்வுகள், புழங்குபொருள் பண்பாடு, பண்பாட்டு அரசியல், வெகுசன அரசியல், இந்துத்துவ எதிர்ப்பு, பகடி மற்றும் கலக வழக்காறுகள் என்று மிக விஸ்தீரணமான பரப்புகளை நோக்கிப் பயணப்பட்டவர் பேராசிரியர் சிவம். நாட்டுப்புறவியலின் சகல பண் பாட்டு வாய்ப்புகளையும் பல திசைகளிலான வளர்ச்சிப் போக்குகளையும் முழுமையாகக் கண்டுணர்ந்து ஆய்வு செய்தவர் அவர்.  

20 ஆம் நூற்றாண்டின் ஒரு மிகப்பெரும் பிரச்சினை மார்க்சியத்துக்கும் மானுடவியலுக்கும் இடையிலான பிரச்சினை ஆகும். மார்க்சியம் சமூக மாற்றத்தை நோக்கியது. சரியாகச் சொல்லுவதானால், மார்க்சியத்தின் சமூக விளக்கங்களே சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்டமைவன. மானுடவியலின் நோக்கம் சமூக மாற்றம் அல்ல. அது சமூகப் பண்பாட்டு இருப்பை விளக்குவது மட்டுமே. மானுடவியல் தளத்தில் உருவான பண்பாட்டு அரசியலும் சமூகப் பண்பாட்டு இருப்பினையே முன்னிலைப்படுத்தும். மார்க்சியம், மானுடவியல் என்ற இரண்டு பரப்புகள் சந்திக்கும் போது, அவை சமூகப் பண்பாட்டு இருப்பை முன்னிலைப்படுத்துமா, சமூக மாற்றத்தை முன்னிலைப்படுத்துமா? என்ற கேள்வி கட்டாயமாக எழுந்தே தீரும்.

நவீன ஐரோப்பியச் சூழல்களில் பகுத்தறிவு, அறிவொளி இயக்கம் (Rationalism, Enlightenment ) ஆகியவை 18, 19ஆம் நூற்றாண்டுகளில் முன்கை எடுத்தன என்பதை நாம் அறிவோம். விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவை அத்தகைய கால

கட்டத்தின் முன்னோடிச் சிந்தனைகளாக அறியப் பட்டன. இவையெல்லாம் அறிமுகமான அன்றைய நாட்களில் அறிவுக்கு அமோகமான சமூக விமர்சன ஆற்றல் இருந்தது. இன்றும்கூட அறிவுக்கு அந்த ஆற்றல் உண்டு. இது ஒருபுறமிருக்க, முதலாளியத்தின் அபத்தமான வளர்ச்சி விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் தன் கைக்கருவிகளாக்கிக் கொண்டது.

இத்தகைய சூழல்களில்தான் மானுடவியல் என்ற துறை அறிவின் மற்றும் அறிவொளி இயக்கத்தின் எல்லைகளைச் சுட்டிக்காட்டி அதனைக் கட்டுப்படுத்தும் முகமாகத் தோன்றிச் செயல்பட ஆரம்பித்தது. அறிவொளி இயக்கம், மானுடவியல் என்ற முரண் ஐரோப்பியச் சூழல்களில் நிலைபெறத் தொடங்கியது. அறிவு, பண் பாடு (Reason and Culture) ஆகியவற்றுக்கு இடையிலான முரணாகவும் இது பரிணமித்தது.

அறிவு என்னும் உரைகல்லில் உரசி, அதற்கு அகப்படாதவற்றை விமர்சன ஆயுதத்தால் உடைத்தெறியும் நவீன சிந்தனைக்கு மாற்றாக, மக்கள் கூட்டங்களின் நீண்டகால வழக்காறு களினூடாகத் தங்கிநிற்கும் பண்பாட்டைப் பேணிக் கொள்ளும் மானுடவியல் அரசியல் அங்கு முன்னுக்குக் கொண்டு வரப்பட்டது.

மேற்குறித்த முரண் வெறுமனே ஐரோப்பாவில் மட்டும் நிகழவில்லை. மிகவும் விசித்திரமான முறையில் அது தமிழிலும் நிகழ்ந்திருக்கிறது. பெரியார் ஈவெராவின் சிந்தனைகளுக்கும் பெரியாரின் பிள்ளைகளாகத் தம்மை அறிவித்துக் கொண்ட அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் போன்ற இரண்டாம் தலைமுறையினருக்கும் இடையிலான முரண்பாடாக இது தமிழில் 20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கிறது. பெரியார் பகுத்தறிவை முன்னிலைப் படுத்தினார்.

இரண்டாம் தலைமுறையினர் மொழியை, இலக்கியத்தை, பண்பாட்டை முன்னிலைப்படுத்தினர். பகுத்தறிவும் பண்பாடும் முரண்பட்டவை அல்ல என்று காட்டுவதற்கு இரண்டாம் தலைமுறையினர் பெரிதும் பிரயத்தனப்பட்டனர். பெரும்பாலும் தமிழ் கூறு நல்லுலகு அப்படி ஒரு முரண் இல்லை என நம்பவும் செய்தது. இருப்பினும் பெரியாரின் பகுத்தறிவு பின்னுக்குத் தள்ளப்பட்டு இங்கு ஒருவிதமான பண்பாட்டு அரசியல் முன்னுக்குக் கொண்டுவரப் பட்டது. செவ்வியல் இலக்கியங்கள் சார்ந்த செம்மொழி அரசியல் இங்கு மீண்டுநின்றது.   

அறிவுக்கும் பண்பாட்டுக்கும் இடையில் ஐரோப்பியச் சூழல்களில் எழுந்த அந்த முரண், மார்க்சியத்தின் மீதும் விடிந்தது. மார்க்சியத்தின் மீது அந்த முரண் இறங்கியபோது, அந்த முரண் மேலும் தீவிரம் கொண்டதாகக் காட்சியளித்தது. அறிவுக்கும் பண்பாட்டுக்கும் இடையிலான அந்த முரண், மார்க்சியச் சொல்லாடல்களுக்குள் இறங்கியபோது, பொருளாதாரத்திற்கும் பண்பாட்டுக்கும் இடையிலான முரண்பாடாகவும், பண்பாடுகளைத் தக்கவைப்பதற்கும் மாற்றுவதற்கும் இடையிலான முரண்பாடாகவும் புதுவடிவங்களைப் பெற்றது.

சமூகமாற்றம் இருக்கட்டும், பண்பாடு குறித்த மார்க்சியர்களின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியாக அது உருப்பெற்றது. 20ஆம் நூற்றாண்டின் அரசியலில் இந்தியப் பண்பாடு குறித்த மார்க்சியர்களின் நிலைப்பாடு என்ன? தமிழ்ப் பண்பாடு குறித்த மார்க்சியர்களின் நிலைப்பாடு என்ன? என்பது போன்ற கேள்விகளாக அது பிரத்தியட்சப்பட்டது.

இன்னொரு புறம், இந்தியப் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு என்ற பெருஞ்சொல்லாடல்களை ஒடுக்கப் பட்ட மக்கள் அவர்களின் நோக்கிலிருந்து கேள்விக்கு உள்ளாக்கினார்கள். இந்தியமும் தமிழும் எங்களுக்கு அடிமைத்தனத்தையே கையளித்திருப்பதால் பண்பாடு பற்றி நாங்கள் ஏன் அக்கறைப்படவேண்டும்? என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைப்பாடாயிற்று.

அவற்றுக்கு மாற்றாக நாங்கள் தலித் பண்பாடு என்பதை மட்டும் முன்வைக்கிறோம் என்பது அவர்களது நிலைப்பாடாயிற்று. கூடுதலாக சிறுபான்மையினோர், பழங்குடிகள், பெண்கள் என்ற வகையில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் அரங்கின் முன்வட்டாரங்களை நெருங்கி வந்தபோது பன்மீயப் பண்பாடுகளை அங்கீகரித்தல் என்ற வேலைத்திட்டம் உருவாகியது.

இத்தோடும் பிரச்சினை முடிவதாக இல்லை. பன்மைப் பண்பாடுகள் என்பவை ஏற்றுக்கொள்ளப்படும்போது கூட, அவ்வகையான பன்மைப் பண்பாடுகளைத் தக்க வைப்பதா, அவை சமூக மாற்றம் என்ற மார்க்சிய வேலைத்திட்டத்தை ஏற்று நிற்குமா? என்ற கேள்வியும் முன்னுக்கு வருகிறது.

பேராசிரியர் சிவசுப்பிரமணியன் அவர்கள் பயணம் செய்து வந்திருக்கின்ற பாதைகளின் பரப்பு இதுவே. அவர் ஒரே வேளையில் ஒரு மார்க்சியர். சமூக மாற்றத் துக்காக நிற்பவர். ஒடுக்கப்பட்ட மக்களோடு நிற்பவர். இன்னொரு புறம் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு வெளிகளினூடாகப் பயணப்பட்டவர். ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதில் அவர் தொழிலாளர், விவசாயிகள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடிகள் எனப் பலதரப்பட்டோரை இணைத்து நோக்குகிறார் என்பதை அவரது ஆய்வுகள் காட்டி நிற்கின்றன. அவர் வாழும், ஆய்வுகள் மேற்கொள்ளும் இக்காலகட்டம் மார்க்சியத்திற்கும் மானுடவியலுக்கும் இடையிலான முனைப்பான முரண்கள் தம்மை அறிவித்துக்கொண்ட காலம்.

பேராசிரியர் சிவம் அவர்களின் அற்புதமான நிலைப்பாடு என்னவெனில், அவர் மேற்குறித்த சிக்கலான இம்முரண்களை எந்த ஓர் ஆய்விலும் தவிர்த்து ஒதுங்கியது கிடையாது. மாறாக இந்தப் பல்வகைப்பட்ட முரண்களை அவர் எதிர் கொண்டார். அந்த முரண்களை நோக்கி அவர் சென்றார். அவற்றைப் பதிவு செய்தார். அவற்றை ஆய்வு செய்தார்.

வெவ்வேறு வகையான முரண்கள் அவரது ஆய்வுகளில் பட்டுத் தெறித்தன. எந்த ஒரு முரணையும் அவர் இல்லாமலாக்க முயலவில்லை. நான் ஒரு மார்க்சியன், எனவே பொருளாதார முரண்களை மட்டும் முன்னிலைப் படுத்துகிறேன் என்ற ஒற்றைப் பிடிவாதம் அவரிடம் தொழில்படவில்லை.

அவர் விரும்பிச் சென்ற, அவர் நேசித்த அம்மக்களின் சமூக வாழ்க்கைக்கு, அவர்களது வாழ்வியல், பண்பாட்டுப் பிரச்சினைகளுக்கு அவர் உண்மையாக இருந்தார். இந்தத் தேர்வு ஒரு கோட்பாட்டு நிலைப்பாடாக அவரிடம் உருவெடுக்கவில்லை என்று அவர் சொல்லலாம். ஆயின் அது ஒரு வாழ்க்கை முறையாகவே, ஒரு மார்க்சியராக வாழ்ந்ததால் உருவான ஒன்றாகவே அவரிடம் அமைந்துபோயிற்று.  

தமிழ்ச் சூழல்களில் தமிழ்ப் பண்பாடு, தலித் பண்பாடு, பெண்ணிய நோக்கில் பண்பாடு, சிறுபான்மையினோர் பண்பாடு ஆகியவை குறித்த பேச்சுக்கள் தீவிரப்பட்டு வரும் சூழல்களில் தாம் பேராசிரியர் சிவம் அவர்களின் ஆய்வுகள் நிகழ்ந்து வந்துள்ளன, நிகழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மக்கள் கூட்டமும் தமது நலன்கள், உரிமைகள் என்ற தளத்தில் சிந்தித்து வரும்போது, அவற்றைத் தமது பண்பாட்டு அரசியலின் வழி வெளிப்படுத்தி வரும்போது, மீண்டும் பண்பாடு களைத் தக்கவைத்தலா, சமூக மாற்றத்தை நோக்கி நகர்வதா? என்ற கேள்வி மிகப்பெரும் சவாலாக எழுகிறது.

இது ஒரு மார்க்சியக் கேள்வி. இந்தக் கேள்வியை ஒட்டித்தான், பேராசிரியர் சிவசுப்பிரமணியன் இன்றைய தமிழகத்தின் சிந்தனையாளர்கள் பலரிடமிருந்து வேறு பட்டு தனித்து நிற்பார். அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடுகளைப் பற்றி, பழக்க வழக்கங்களைப் பற்றி எழுதுகிறார், ஆயின் அவை ஒவ்வொன்றிலும் வெளிப் படும் ஒடுக்குமுறைக்கான எதிர்ப்புகளும், எதிர்ப்புச் செயல்பாடுகளும் தாம் அவர் கண்களில் படுகின்றன.

அவரது “சமூகம் சார் கொள்ளையர்கள்” கட்டுரையில் அவர்கள் கொள்ளைக்காரர்கள் அல்ல, போராளிகள். அவரது “கொலையுண்ட தெய்வங்க”ளில் அவர்கள் வெறுமனே அடிதடிகளில் கொலையுண்டவர்கள் அல்ல, சாதி அமைப்புக்கு எதிரான செயல்பாடுகளால் கொலையுண்டவர்கள். “பூச்சியம்மன் வில்லுப்பாட்”டில் நிகழும் சடங்குகள் அச்சடங்குகளைத் தக்க வைக்க வேண்டுமென்ற அக்கறையால் சொல்லப்பட்டவை அல்ல, அச்சடங்குகளில் பதிவாகியுள்ள சமூக அடக்கு முறையின் கொடூரத்தை உணர்த்துவதற்காகச் சொல்லப் பட்டவை.

மதமாற்றம் பற்றிய அவரது கட்டுரைகள் மதக்கடைகளுக்கு ஆள் சேர்ப்பதற்காக அல்ல, மத மாற்றத்தின் சமூகப் பண்பாட்டு உள்ளடக்கத்தைச் சொல்லுவதற்காக எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பற்றிய அவரது கட்டுரைகள் சாதிப் பெரு மிதங்களைக் கட்டி எழுப்பி அவற்றை நிரந்தரப்படுத்து வதற்காக அல்ல, ஒடுக்கலை எல்லாச் சூழல்களிலும் எதிர்க்கும் உழைக்கும் மக்களின் உளவியலைச் சொல்லு வதற்காக எழுதப்பட்டவை. அவரது சாதாரண விவரணைகளும்கூட மாற்றத்திற்கான வேர்களை உள்ளீடாகவே கொண்டுள்ளன.

எனது விவரணைகள் கோட்பாட்டுரீதியானவை அல்ல என்று அவர் இந்த நேர்காணல்களில் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அதன் பொருள் என்ன? அவரது விவரணைகளிலிருந்து கோட்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதே அதன் பொருள். ஆய்வு என்பது அந்நியப்பட்ட எழுத்து அல்ல, அது சமூக மாற்றத்துக்கான செயல்பாடு என்பதே அதன் பொருள். பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் இந்த தத்துவார்த்த நிலைப்பாடே நமக்கு அவரைச் சரியாக அடையாளப்படுத்துகிறது.  

Pin It