Misc-Bazaar 600அறிவுக்கரசர் வள்ளுவராசான் “மணிநீரும் மண்ணும் மலையும் அணி நிழல் காடும் உடையது அரண்” என்ற அம்சங்கள் நிறைந்தது வையை எனும் பொய்யாக் குலக்கொடி பாய்ந்தோடிய பழம்ம துரையும் அதன் சுற்றுச் சூழலும் ஆகும்.

மருதம் செழித்த மதுரை சங்கம் வைத்து சான்றோரை சார்ந்து இருந்தது போன்றே சாத்து வணிகத்தையும் சார்ந்து இருந்தது. சிலப்பதிகார காலத்தில் இருந்து சிறந்து வந்த மதுரை மாற்றார் ஆட்சிக்கு உட்பட்ட போதில் மக்களோடு மக்களாய் வணிகமும் மாண்டு போக ஆங்காங்கே பற்றாக்குறை நிலவி பஞ்சமும் பட்டினியும் ஏற்படக் காரணமாயிற்று.

வழிப்பறிக்கொள்ளை வன்முறைகளால் வணிகம் முற்றாக சிதைந்தது.  இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலைப்பாடு வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது போலும்?  அதனால்தான்,

“பொருள் அல்லவரைப் பொருள் ஆகச்செய்யும்

பொருள் அல்லது இல்லை பொருள்”

எனப் பகன்றார் போலும்.  பொருள் செயல் வகை அதிகாரத்தில்,

“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு”

என வணிகக் கோட்பாட்டை வலியுறுத்துகிறார்.

இதனால் நம் முன்னோர் திரை கடலோடி திரவியம் திரட்டினர்.  குடும்ப சுகதுக்கங்களைத் துறந்த துறவிகள் போலும் நிலவியலிலும் பொருள் சேர்க்கப் போராடிய சாத்து வணிகத்தில் மதுரை சாதனை நகராக திகழ்ந்திருக்கிறது. வணிகர்கள் தத்தம் பொருளை சந்தைப் படுத்துவதற்கு ஆங்காங்கே சந்தைப் பேட்டை களை அமைக்கலாயினர்.

நெல்லை மாவட்டத்து வணிகர்களே இந்தப் பேட்டை அமைப்பின் பிதாமகன்களாகத் திகழ்ந் துள்ளனர்.  தமிழகம் முழுவதும் தட்சிணமாற நாடார்கள் சங்கம் என்ற பெயரில் இவர்கள் தடம் பதித்து தங்களை பாண்டிய இனத்தவர் என அடையாளப்படுத்தி உள்ளனர்.

மதுரை கீழவெளி வீதியின் வடகிழக்கு மூலையில் தெட்சிணமாற நாடார் சங்கப் பேட்டை. அமைந்துள்ளது.  500 ஆண்டுகள் பழமையான இந்த வணிகப் பேட்டை தொடக்கக் காலத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் அன்றைய வைகைக் கரை யோரம் அமைந்து கால வெள்ளத்தில் கரைந்து இன்றைக்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் சுருங்கிய நெல்பேட்டையாய் பெயர் நிலவி வருகிறது.

அன்றைய வணிகச் சந்தையாய் விளங்கிய மதுரை நகரை நோக்கி நாலா திசைகளில் இருந்தும் பொருள்கள் வந்து குவிந்து விற்பனையாகி உள்ளன.

தூத்துக்குடியில் இருந்து உப்பும், கருவாடும், நெல்லை சீமையின் கருப்பட்டியும் தெட்சிணமாற நாடார் சங்க பேட்டைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனையாகி உள்ளன. அதற்கான வழிப்பயணத்தில் இளைப்பாறுதல் பொருட்டு வழிநெடுகிலும் உள்ள, அன்றைய பெருங் கிராமங்களில் வண்டிப்பேட்டைகள் அமைக்கப்பட்டன.

கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், நாகலா புரம், புதூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராமநாதபுரம், உச்சிப்புளி, தேனி, சின்னமனூர், திண்டுக்கல், பழனி என இந்த சார்பு நிலைப் பேட்டைகள் பட்டியல் விரிந்து செல்கிறது.

மதுரை நெல்பேட்டை தொடக்க காலத்தில் கருவாடு, உப்பு, கருப்பட்டி சந்தையாக இருந்த போது எங்கும் வேப்ப மரங்கள் நிறைந்து வேப்பந் தோப்பாக இருந்துள்ளது அன்றைய வணிகர் களுக்கு வாய்ப்பாக இருந்துள்ளது.

பெருவணிகர் மாட்டு வண்டிகளிலும், சிறு வணிகர் பொதி சுமந்த மாடுகள் மூலமாகவும் தத்தம் பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்த போது மாடுகளை வேப்பமரத்தில் கட்டி வைத்து தீவனம் தந்து வைகை ஆற்றில் இறக்கி குடிநீர் வழங்கி உள்ளனர்.

தாய்ப்பேட்டையாக அமைந்த இந்த பேட்டையை சார்ந்து இதே பகுதியில் வெற்றிலைப் பேட்டை,  வாழைக்காய் பேட்டை, வைக்கோல் பேட்டையும், தெற்கே, தெற்கு வாசல் பகுதியில் மரக்கறிப் பேட்டையும் இன்ன பிற பேட்டைகளும் அமைந்தன.

வணிகர்கள் தம் குடும்பங்களை மாதக் கணக்கில் பிரிந்து வணிகம் செய்ய நேர்ந்ததால் பேட்டைப் பகுதியிலேயே தமக்குரிய உணவை தாங்களே சமைத்து உண்டனர்.

ஆரம்ப காலத்தில் பழனி, சின்னமனூர், தேனி, ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, உச்சிப்புளி என 6 ஊர் வணிகர்கள் வந்து கூடி வணிகம் புரிந்ததால் 1943-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சந்தையாக நெல்லையைத் தலைமை இடமாகக் கொண்ட தட்சிணமாற நாடார் சங்கத்துடன் நிர்வாக ரீதியில்  இணைக்கப் பெற்றதாக 51 நிர்வாகிகளில் மூன்றாம் இடம் வகிக்கும் கல்வியாளர் பி.எஸ். கனிராஜ் தெரிவித்தார்.

மும்பையிலும் அச்சங்க கிளை மனை அமைந்திருந்ததின் காரணமாக அந்த வணிகர் பேட்டை இப்போது கல்விக்கூடமாய் காமராஜர் ஆங்கிலப் பள்ளி என்று பிறப்பெய்தி உள்ளது.

குமரி மாவட்டம் கள்ளிக்குளத்தில் காமராஜர் தொழிற் கல்லூரி இயங்கி வருகிறது.

பல்லாயிரங்கோடி மதிப்புள்ள அதன் சொத்துக்களை பராமரித்து வரும் சங்கத்தின் தலைவராக இதழாளர் டி.ஆர். சபாபதி பொறுப்பு வகிக்கத் தொடங்கியதும் சென்னை மீஞ்சூரில் சங்க விரிவாக்கத்துக்காக ரூ. 2 கோடி மதிப்பிலான மனை வாங்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப் பட்டது.

மதுரையின் மற்றொரு வணிக மையம் ஆதி சொக்கநாதர் ஆலயம் அருகே அமைந்திருந்தது. 

1419-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட தலைக் கட்டுகளைக் கொண்ட வணிக சமூகத்தினர் தாங்கள் விளைநிலங்களில் உற்பத்தி செய்த தானிய வகைகளைப் பொதிகளாக மாட்டு வண்டி களில் ஏற்றி மதுரைக்கு கொண்டு வந்தபோது வழியில் கொள்ளையர் தொல்லை  இருந்ததால் தங்கள் ஊரான பாலையப்பட்டியில் குஸ்தி, சிலம்பப் பயிற்சிப் பள்ளிகளை தொடங்கி தமக்குத் தாமே உரமேற்றிக் கொண்டனர்.

அந்நாளில் மதுரையில் இருந்து பாளையப் பட்டி அருப்புக்கோட்டை வழியே தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்வதற்கான நேர் வழியாக  இருந் திருக்கிறது.

எனவே கள்வர் தொல்லைக்கு அஞ்சிய விருதுநகர் வணிகர்கள் அருப்புக்கோட்டைக்கு வந்து அங்குள்ள வணிகர்களுடன் இணைந்து பாளையப்பட்டிக்கு வருவார்கள்.

ஆயுதம், ஆள்பலம் கொண்ட பாளையப் பட்டி வணிகர்கள் வண்டி முன்னாலும் பின்னாலும் அணிவகுத்து செல்ல நடுவில் அருப்புக்கோட்டை விருதுநகர் வணிகர்களுடன் பொதி மாட்டு வண்டிகள் அணிவகுத்துச் செல்லும்.  இந்த வகையில் ஒரே சமயம் இருநூற்றுக்கும் மேற்பட்ட வணிகசாத்து வண்டிகள்  மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

பின்னாட்களில் விருதுநகராகிய  முந்தைய விருதுபட்டியிலும் வணிக சாத்தர்கள் மல்யுத்தம் கற்றும் சிலம்பப் பயிற்சிக் கூடங்கள் அமைத்ததின் பேரில் விருதுநகர் ஆறுமுக வணிகர் மல்யுத்த வீரரானார்.

நாகலாபுரத்தைச் சேர்ந்த வணிகர் நல்லதம்பி மதுரையில் பின்னாட்களில் நடந்த பெரிய மல் யுத்தப் போட்டிகளில் வடவரையும் வென்ற மாவீரராகி மதுரை கீழ் வெளிவீதியில் அதி பரானார் என்பது இடைப்பட்ட வரலாறுகள்.

விருதுநகர், அருப்புக்கோட்டை பாலையப் பட்டி வணிகர் ஒரே அணியில் பாதுகாப்பு கருதி மதுரைக்கு வந்தாலும் தனித்தனியே வணிகத்தில் ஈடுபட்டதால் சொக்கநாதர் கோவில் வடபுரம் இருக்கும் மனையைத் தங்களூர் சந்தையாக்கிக் கொண்டனர்.

அங்கு மாட்டுவண்டிகள் நிற்கவும் தங்கள் எதிர்காலத்திற்கு உகந்ததாகவும் வசதிகள் செய்து கொண்டனர்.  கிணறு வெட்டி நந்தவனம் அமைத்து வணிகர் பொருட்களின் வைப்பிட மாகவும், விற்பனை சந்தையாகவும் பயன்படுத்தினர்.

இதே சமயம் விருதுநகர் அருப்புக்கோட்டை வணிகர்கள் கீழ மாசி வீதியில் தங்கள் சந்தைப் பேட்டைகளை ஒன்றாகவே அமைக்க இந்த இடத்திலும் பாலையப்பட்டி வணிகர்கள் வந்து தங்கி வணிகம் புரிந்தனர்.

இந்தப் பேட்டைகளில் உள்ள பெரும் சிறப்பு என்னவெனில் மரங்கள் வளர்ப்பது, எந்த வகை மரங்கள் எத்தனை எத்தனை உள்ளன என்பதை அதையும் கணக்கிட்டு பராமரித்து வந்துள்ளனர்.

மதுரை கீழமாசி வீதியில் உள்ள கீழப் பேட்டை இடம் 1823-ம் ஆண்டு தனியாரிடம் இருந்து பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்து வணிகர்களால் விலைக்கு வாங்கப்பட்டது.

எனினும் இந்த மூன்று ஊர்களிலும் தனித்தனி உறவின் முறைகள் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டு இருந்ததால் உறவின்  முறைகளுக்கு சொந்தமான தாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இங்கு அமைந்த மொட்டை வினாயகர் கோவிலுக்கு தனி அறக்கட்டளை அமைக்கப்பட்டு பராமரிப்பு நடக்கிறது.

பாலையப்பட்டி பழைய நந்தவனம் பின்னாளில் உடற் பயிற்சிக் கூடமாக்கப்பட்டு அதன் பின் பகுதி வணிக வளாகமாகி உள்ளது.

இதே போல மூன்று ஊர் உறவின் முறைக்கு சொந்தமான கீழப்பேட்டையும் வணிக வளாகமாக உருவாகி இதன் உட்புறம் திருமண மண்டபமாகி உள்ளது.

திருமங்கலம் மற்றும் சாத்தங்குடி வணிகர் களும் சாத்து வணிகம் புரிந்துள்ளனர்.  மதுரைக்கு வரும் வழியில் திருப்பரங்குன்றத்தில் 1904-ம் ஆண்டில் பாண்டிய சத்திரியகுலத்து திருமங்கலம் நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பேட்டை என்ற  முகவரியிட்ட கருங்கற்களைக் கொண்டு பேட்டை கட்டினார்.  இது தற்போது திருமண மண்டப மாக செயல்படுகிறது.

இது தவிர்த்து மதுரை யானைக்கல் பகுதி யிலும் கீழமாசி வீதியிலும் திருமங்கல வணிகர் பேட்டை அமைந்துள்ளது.

மதுரையின் கீழமாசி வீதியையொட்டி

மேற்கு புறம் அமைந்த வெங்கலக் கடைத்

தெருவில் வெள்ளையர் காலந்தொட்டு இன்றளவும் துப்பாக்கி வணிகம் நடைபெற்று வருகிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.  “வெ.கு.மீனாட்சிசுந்தர நாடார் துப்பாக்கி தோட்டா வணிகம்” என்று பெயர் பலகை இருக்கக் காணலாம்.

இது பற்றி அறிய முனைந்த போது மேனகா இராமலிங்கம் திருமண மண்டப உரிமையாளரான மீனாட்சிசுந்தர நாடாரின் வாரிசுகளில் ஒருவரான எஸ்.வி.கே.எம் ராமலிங்கம் கூறிய தகவல்.

எனது தந்தையின் தந்தையரான பாட்டனார் நாட்டு மருந்துகளுடன் கந்தகமும் விற்பனை செய்து வந்தார்.  அப்போது மதுரையில் ஆட்சி யராக இருந்தவர், ‘மதுரையில் எங்கு துப்பாக்கி தோட்டா கிடைக்கும்?’ என்று கேட்க இங்கு அம்மாதிரி  வணிகர் யாரும் இல்லை என அதிகாரிகள் கூறியதுடன், கந்தகம் மட்டும் ஒருவர் விற்று வருகிறார் எனக் கூற அது குறித்து விசாரித்த ஆட்சியர், எங்கள் தந்தையார் பெயரில் துப்பாக்கி களும் தோட்டாக்களும் விற்பதற்கு அனுமதி வழங்கினார்.

துப்பாக்கி தோட்டா விற்பனை அனுமதிக்கு பின்பு  அதே ஆட்சியில் அப்பாவின் கடைக்கு தன் மனைவியுடன் இரண்டு குதிரைகளில் வந்து கடை முன்பு உள்ள மரத்தூண்களில் இரு குதிரை களையும் கட்டிப் போட்டுவிட்டு துப்பாக்கிகள் தோட்டாக்கள் வாங்கி வேட்டைக்கு சென்று உள்ளனர்.  நாட்டு விடுதலைக்கு பின்னரும் எங்கள் கடை வணிகம் நடக்கிறது என்றார்.

இதே வெங்கலக் கடைத் தெருவில் தெற்கு நோக்கிய முட்டுச் சந்தில் கே.டி. கூளைய நாடார் வணிகப் பேட்டை கம்பீரக் கட்டட பொலிவிழந்து காட்சி தருகிறது.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நவதானிய வணிகம் மும்முரமாக நடந்துள்ளது.  கேப்பை, கம்பு, தினை, குதிரைவாலி, கேழ்வரகு ஆகிய மூடைகள் தனித்தனியே அம்பாரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.  அவற்றை வாங்கி செல்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருக்கும் வணிகர்கள் தங்கள் மாட்டு வண்டி களை வெங்கலக் கடைத்தெருவில் வரிசை யாக நிறுத்தி வைத்து இருப்பார்கள்.

தானியம் கேட்கும் வணிகர்களுக்கு குத்தூசி கொண்டு சாக்கு மூடைகளில் இருந்து எடுத்த வற்றை தனித்தனி ஈய வட்டில்களில் காண்பிப் பார்கள்.  மாதிரி பார்த்த பிடித்த தானியமும் பிடிக்காத தானியமும் வாசலின் இருபக்கம் கல் தொட்டிகளில் போடப்படும்.

இவற்றை அங்கு கட்டப்பட்டிருக்கும் வகை வகையான வளர்ப்பு மான்கள் உண்டு மகிழும்.  இது காத்து இருக்கும் வணிகர்களுக்கு பொழுது போக்காய் திகழும்.  எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு வணிகம் கொடிகட்டிப் பறந்தது என்கிறார் நூறு வயதை எட்டிக்கொண் டிருக்கும் தெற்கு வாசல் வணிக பிரமுகர் மணி.

மதுரை தெற்கு வாசல் பகுதியில் கிருதமால் நதியையொட்டி மரக்கறி பேட்டையும் உள்ளது.  இங்கும் வணிகர்கள் தங்கள் வண்டிகளுடன்

வந்து தங்கி சென்றுள்ளனர்.  மாடுகளுக்கு லாடம் அடிக்கும் தொழிலும் இங்கு நடைபெற்றிருக்கிறது.

கொங்குச் சீமையிலும் சாத்து வணிகம் நடந்த சந்தையின் சான்றாக பொள்ளாச்சி திகழ்கிறது.  சாத்து வணிகத்தில் வணிகர்கள் கொள்ளையர் களால் தம் சொத்து சுகங்களை இழந்ததுடன் உயிரையும் இழந்துள்ளனர்.  என்றாலும் அவர் தம் துணைவியர் தாமே தொழில் வணிகம் புரிந்திருப் பதை,

“கொல்லன் கொடுத்த கதிர் இருக்கு

கொளுநாட்டுப் பஞ்சு இருக்கு

நுறு வயசுக்கும்

நூத்துப் பொழச்சிக்கம்மா”

என்ற நாட்டுப்புற பாடல் நமக்கு உணர்த்துகிறது.  “பருத்திப் பெண்டிர் பனுவல் அன்ன” என்ற புறநானூற்று (121 : 1) பாடலும் புலப்படுத்துகிறது.

Pin It