இலக்கியங்கள் வரலாற்றை எழிலாக எடுத்துரைப்பதைப் போல, இதழியல் அந்தப் பணியைச் சுமையாக ஏற்று, செயல்படுத்தி வருவது இருபதாம் நூற்றாண்டு முதல் கண்டுவரும் உண்மை. உலகப்போரின்போது, இதன் உன்னதம் மெய்ப்பிக்கப்பட்டு இன்றும் அது தொடர்கிறது. எங்கு வன்முறை நிகழ்ந்தாலும் பொதுச் சொத்துக்கள் தீயிட்டுப் பொசுக்கப்படும்போது, அதை ஊர் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முற்படும் இதழியல் செயல்பாட்டை முடக்க முனைகின்றன. இந்த 21-ஆம் நூற்றாண்டு கண்டுள்ள இழிநிலை இதுவே. ஒரு காலத்தில் உற்சாகத்திற்குகந்த உயர்தொழிலாக இருந்த இதழியல் தொழில், கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற கருத்தியல் தோன்றியதும் காணாமல் போய் விட்டது. போர்க் களங்களில் புகுந்து, படம்பிடித்து, செய்தி சேகரித்துத் தந்த உயிர்ப்போராட்டம் இன்றைய அரசியல் வன்முறை வாழ்வுக்கு உரியதாகி விட்டது. களத்தில் நிற்போர் களப்பலி ஆவது போல், நான்கு சுவர் களுக்கு இடையே இருந்து, நல்லது கெட்டதை விமர்சிக்கும் வேலைக்கும் உயிர் உத்தரவாதமற்றுப் போய் விட்டது. இதற்குரிய சான்றுகள் ஏராளம். இங்கே அவற்றை விவரிக்க, அதுவோர் தனிவரலாறாகிவிடும்.

madhurai_seide_640

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு நிகரான இதழியல் சிறப்புக்கள் மதுரை மண்ணிற்கும் உண்டு. எளிய தமிழின் இதழியல் தந்தை என இயம்பப்படும் சி.பா.ஆதித்தனார் தம் இதழியல் பணியைத் தொடங்கிய ஊர்களில் முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. சமஸ்கிருதத் தமிழுடன் தினமணி இதழ் தனிக்கொடி பறக்கவிட்ட காலங்களில் அக்கிரகாரங்களைக் கடந்த அன்றாடம் காய்ச்சிகளுக்கான நாளிதழாய், ‘தந்தி’ என்னும் பெயரில் ஆதித்தனார் தொடங்கிய பத்திரிகை அன்றைய இராம நாதபுரம் சாலையின் ஓரத்தில் கல்லறைச் சந்தில் அச்சிட்டு வெளியாகியது. இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலத்தில் காகிதத்தட்டுப்பாடு ஏற்பட்டது.  வைக்கோலை அரைத்த ஒரு கலவையில் தயாரித்த காகிதத்தைக் காயப் போடும் களமாக மாரியம்மன் கோவில் தெப்பக்குளப் படித்துறைகள் பயன்பட்டன. இந்தியசுதந்திரத்திற்குப் பின்னர், தந்தி பெற்ற புகழைத் தொடர்ந்து, ‘தினத்தந்தி’ என இன்றைய பெயர் மாற்றத்திற்குள்ளாகியது.

‘தினமணி’ நாளிதழ் இன்றைய செல்லம் சோப் கம்பெனிக்கு அடுத்து அமைந்த குடியிருப்புப் பகுதியில் மிகப்பெரிய தொழிற்சாலையாக இயங்கியது. ஒரே வளாகத்தில் தினமணியுடன் அதன் ஆங்கில நாளிதழான ‘இந்தியன் எக்ஸ்பிரசும்’ அங்கிருந்தே வெளியானது. ஏனைய நாளிதழ்களாக சுதேசமித்திரன், தி மெயில், தி ஹிந்து ஆகியவை சென்னையில் இருந்தே இங்கு வந்து கொண்டு இருந்தன.

தனித்தமிழில் ஓர் ஒப்பற்ற நாளிதழை மதுரையில் இருந்துகொண்டு வரும் பெரும் முயற்சியில், ஆலை அதிபர் கருமுத்து தியாகராசசெட்டியார் ஈடுபட்டார். மதுரை திருப்பரங்குன்றம் சாலையில், அன்றைய அவரது சிறப்பு இல்லம் எதிரே, இன்றுள்ள சாய்பாபாகோவில் பகுதியில் ‘தமிழ்நாடு’ என்னும் பெயரில் தனித்தமிழ் நாளேட்டைத் தொடங்கினார். தினமணிக்கு அடுத்து நடுத்தரத் தொழிற் சாலை போல் இருந்தது. தினத்தந்தியில் 6 பேர் செய்யக் கூடிய பணியை, 16 பேர் வரை சேர்ந்து செய்யத்தக்கதாக இயக்கினார். தமிழில் பட்டமேற்படிப்புப் பட்டம் பெற்றவர்களே ஆசிரியர், துணையாசிரியர்களாக இயங்கினர். பேராசிரியர் சாலை இளந்திரையன், என்.எச்.நாதன் போன்றோர் நீள்செவ்வக மேசையில் அமர்ந்து செய்தித்துறையை இயக்கியதை நேரில் கண்டிருக்கிறேன்.

தனித்தமிழில் எழுதும் பொருட்டு பாகிஸ்தான் என்று எழுதுவதற்கு மாறாக பாக்கிசுத்தான் என்றே குறிப்பிட்டனர். தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் கவிஞர்களும் என்ற குறைவான வாசகர் வட்டத்தால் நல்லதமிழ் நாளேடு குறுகிப்போனது.

இந்நிலையில் 1962ஆம் ஆண்டில் ‘தினத்தந்தி’ இடமாற்றம் பெற்று, இன்றைய பகுதிக்குச் சென்று விட்டதை அடுத்து அதே கல்லறைச் சந்து, பழைய தினத்தந்தி அலுவலகத்தில் ‘மாலைமுரசு’ அலுவலகம் செயல்படத் தொடங்கியது. மாலைப்பத்திரிகை வரலாற்றில் மதுரையில் சரித்திரச் சாதனைகள் நிகழ்த்தியது ‘மாலைமுரசு’ என்றால் அது மிகையாகாது. ஒரு காலைப்பத்திரிகைக்குப் பணியாற்ற 20 மணிநேரம்  கிடைக்கும் என்றால், மாலை நாளிதழுக்குப் பணியாற்ற 5மணிநேர கால அவகாசம் இருந்தது. இதற்குள் ஒரு காலைப் பத்திரிகைக்குரிய அத்தனை அம்சங்களுடன் மதியம் 2 மணிக்கே அச்சாகி 3 மணி முதல் 4 மணிக்குள் வாசகர்களைச் சென்றடைந்தாக வேண்டும், எனில் இத் துரிதப் பணிக்கு ஏராளமானவர்கள் அல்லவா வேண்டும்? இந்திஎதிர்ப்புப் போர் தொடங்கிய இடமான மதுரை மேலச்சித்திரை வீதியில் இருந்து கம்பம் கூடலூரில் கான்ஸ்டெபிள் ராமச்சந்திர சிங் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடிய செய்திவரை, தடியடிகள், கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சுக்கள், துப்பாக்கிச் சூட்டிற்குப் பலிகள், தீக்குளிப்புகள் என அன்றாடம் அனல் பறக்கும் செய்திகளைச் சுடச்சுடத் தந்து தமிழகத்தின் ‘சூடு இன்னது’ என்று இந்த உலகிற்கு எடுத்துகாட்ட முரசு கொட்டியது மதுரை மாலைமுரசு.

இந்தி எதிர்ப்புப் போராளியாகப் பேராசிரியர் இலக்கு வனாரை உயர்த்திக் காட்டிய மாலைமுரசு அலுவலகத்திற்கு உயர் காவல்துறை அதிகாரி ராமராஜன், சாதாரண உடையில் வந்து வேவு பார்த்தவர் திடுக்கிட்டுப் போனார். ‘தமிழ்நாடு’ இதழில் 12 துணையாசிரியர்கள் என்றால் அங்கு இரு துணையாசிரியரும் ஒரு செய்தி ஆசிரியருமாக மூன்று பேர்மட்டுமே அமர்ந்து இப்படி முழங்கிக் கொட்டுகிறீர்களே என்றார். இதை அடுத்து ஆதித்தனார், இலக்குவனார் போன்றோர் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

மதுரைநகர நாளிதழ் வரலாற்றில் மற்றோர் சாதனை நிகழ்த்தியது பழ.நெடுமாறனின் ‘செய்தி’ நாளேடும் ஒன்றாகும். ஒரு நாளிதழ் இயங்க, பணம் மட்டுமே போதுமானது என்பது என்றைக்கும் ஈடேற முடியாத எண்ணமாகும். முதலில் வாசகனும் இரண் டாவது விளம்பரமும், இருசக்கரங்கள் போல் உருள, ஓட்டிச்செல்ல உயர்ந்த சாரதியும் வேண்டும். அதைத் தொலை நோக்காகக் கொண்டு செயல்பட்டார் பழ.நெடுமாறன். மூன்று ஆண்டுகளுக்குரிய விளம்பரங்கள், செய்தி நாளிதழில் பிரசுரமாக, காத்திருப்புப் பட்டியலில் இருந்தது கால வரலாறு. இச்சையோடு தனித்தமிழ் இயக்கத்துக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட பேராசிரியர் இலக்குவனார் செயல்பட்டது எண்ணிப் பார்க்க இனியது.

கல்லூரிப்பேராசிரியர் பதவி மொழிப் போரால் காவுகொள்ளப்பட்டது. அவர் அஞ்சி ஒடுங்கி வாளாயிருக்கவில்லை. வாளாக ‘குறள்நெறி’ இயக்கத் தையே வார இதழ்வடிவில் வார்த்தெடுத்தார். வார இதழாகத் தொடங்கிய ‘குறள்நெறி’யை அடுத்தபடியாக நாளிதழாகத் தொடங்கி, அதன் பொறுப்பாசிரியராக என்னை அழைத்தபோது, அதில் உள்ள இடர்ப்பாடு களைக் கூறி முயற்சியைக் கைவிடக் கோரினேன். எனினும் அந்தத் தமிழ் இமயம் அசைந்து கொடுக்கவில்லை. திருப் பரங்குன்றத்தில் ஒரு திருமண மண்டபத்தில் அச்சகம் ஏற்படுத்திக்கொண்டு நாளிதழ் நடத்திட முற்பட்டார்.

மதுரை தமுக்கம் திடலில் இடதுசாரி இயக்கச் செம்மல் பி.ராமமூர்த்தி தலைமையில் ‘குறள்’என்ற நாளிதழாக வெளிவந்தது. இலக்கியவாதியாகவும் மாணவர்களாகவும் இருந்த பரிதிமாற்கலைஞன் பெயரன்  டாக்டர் கோவிந்தன், டாக்டர் அ.சிவக்கண்ணன், பேராசிரியர் முத்துச்சாமி ஆகியோர் உடன் இருந்து உதவினர். கடும் பொருளாதார நெடுக்கடியில், காலப் போக்கில் கோத்தமிழ் நாளிதழ் குறள்நெறி நின்று போனது, தமிழ் வளர்த்த மதுரைக்குத் தலைக் குனிவானது.

இந்தக் காலகட்டதில் ந.அருணகிரிநாதர் (ந.அ.) மாநிலஇந்தி எதிர்ப்புவரை செய்தியாளர், ‘தமிழ்முரசு’, ‘சீர்காழி’ எனக் கடிதமடல் அச்சிட்டு களப்பணியாற்றி வந்து, பின்பு மதுரைக்கே வந்து செய்தியாளராகப் பணி புரிந்து, பின்பு மதுரை ஆதினமாக மரியவர். இன்றைய பரபரப்பு மடாதிபதி அருணகிரிநாதர். தன் இதழியல் பணியை முன்பு அடிக்கடி எடுத்துரைத்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி, அவர் இன்னும் பிற மடங்களைப்போல் தமிழ்ப் பணியாற்றிட, தனி இலக்கிய இதழ் தொடங்க கவனம் செலுத்தவில்லை என்பது, அவரது ‘தமிழ் முரசு’ இதழாசான் என்கிற முறையில் எனக்கு அவ்வப்போது வருத்தம் எழுவதுண்டு.

தமிழ்முரசுக்கென, தனி அச்சு எந்திரம் வாங்கப் பட்ட போது, செல்லூர் சாலையில் பூந்தோட்டக் கால்வாய், மேற்குக் கரையோரக் கட்டடத்தில் இருந்து இயங்கத்தொடங்கியது. இதன் சென்னைப்பதிப்பு செயல்படத் தொடங்கியதும், சிறப்புக் குன்றி மூடுவிழா கண்டது. அந்த நிலையில், மதுரை பவர் ஹவுஸ் சாலையில் சிறப்பு முரசொலி நாளிதழ் அலுவலகம் செயல்பட்டு, மதுரை-திருப்பரங்குன்றம் சாலைக்கு, புதிய சொந்தக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கிய மாலை முரசு அலுவலகத்தில் முரசொலி அச்சாகியது.

மதுரையில் பெரும் ஆர்ப்பரிப்போடு ஒரு நாளிதழ் தொடங்கி, அடங்கிப் போய்விட்டதென்றால் அது ‘தினசரி’ நாளிதழே ஆகும். திருச்செந்தூர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராய் இருந்து, காலஞ் சென்ற கே.டி.கோசல்ராம் தொடங்கி நடத்த இயலாமல் போன ‘தினசரி’ நாளிதழ், பிரபல தொழில் அதிபர் பிரெட்காக் கியூம்ஸ் சொந்தப் பொறுப்பில் மதுரையில் தொடங்கப்பெற்றது.

thani_arasu_daily_640

இடதுசாரி இயக்கத்தின் இணையற்ற வெற்றித் திடல் எதுவென்றால் அது மாமதுரையாக இருந்தது கடந்தகால வரலாறு. சிறைக்குள் அடைபட்டுக் கிடந்த தோழர் பி.ராமமூர்த்தி மதுரை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

மக்கள் எழுச்சிக்குரிய செய்திகள் வெளிவராத காலத்தை உணர்ந்து மதுரையில் ஜனசக்தி, தீக்கதிர் நாளிதழ்கள் வெளிவந்து, அறிவார்ந்த இதழ்களாய் நாளிதழ் வரலாற்றில் நல்வழிகாட்டி நிற்கின்றன. விளாங்குடி அலுவலகத்தில் இருந்து தீக்கதிர் வெளி யாகிக் கொண்டிருக்கிறது.

இதை அடுத்து ஆதித்தனார் குடும்பம் வகுத்த பாதையில் இருந்து கே.பி.கந்தசாமியை நிறுவனராகக் கொண்ட ‘தினகரன்’ நாளிதழ் மதுரைப் பதிப்பு காமராசர் சாலை பழைய கட்டடம் ஒன்றில் அச்சு எந்திர அடங் கலுடன் தொடங்கி, அதற்கென ஒரு வாசகர் வட்டத்தை, கட்சிச் சார்பில் அமைத்துக் கொண்டது. மூடப்பட்ட முதல் தமிழ்முரசின் முகபாகங்களைத் தன்னகத்தே கொண்டு தனி வாசகர்களை வளைத்து நின்றது.

‘சிலம்பொலி’ என்ற வார இதழைத் தமிழரசுக் கழகத்திற்காகத் தொடங்கி நடத்திவந்த சொர்ணமணி அதைத் தொடர முடியாத நிலையில், தினமலர் நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றிய அனுபவத்தில் ‘மதுரை மணி’ என்ற நாளிதழைத் தொடங்கி அது இயங்கிக் கொண்டிருக்கிறது. மதுரையில் பரபரப்புடன் தொடங்கப் பெற்ற நாளிதழ் ‘மக்கள்குரல்’. தமிழகத்தின் தனித்திறன் வாய்ந்த ஆசிரியர் சண்முகவேல் தலைமையில் காலம் சென்ற இராஜாராம், சோலை ஆகியவர்களைக் கொண்டு மதுரைப் பதிப்பு தொடங்கியது.

தமிழக பத்திரிகை வரலாற்றில் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்து வாசகர் மத்தியில் மதிப்பிடம் பெற்றுவிட்ட நம்பிக்கையில், ‘இந்து’ நாளிதழ் மதுரையில் கே.கே. நகரில் தொடங்கப்பெற்று வளர்ச்சி கண்டது.

‘இந்து’ நாளிதழ் தனிவிமானத்தில் சென்னையில் இருந்து மதுரை வருவதற்கு முன்பு 1959-ஆம் ஆண்டு ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் ‘தனியரசு’ நாளிதழ் தி.மு.க.வின் மற்றொரு பிரச்சார நாளிதழாகச் சென்னையில் அச்சிடப் பெற்று விமானத்தில் வந்து விற்பனையான வரலாற்றையும் எளிதில் மறந்து விடலாகாது.

தி.மு.கழகம் அண்ணா காலத்தில் உடைந்து ஈ.வெ.கி.சம்பத், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் தமிழ் தேசியக் கட்சி தொடங்கிய காலத்தில் அதன் பிரச்சார இதழாக ‘தனியரசு’ நாளிதழ் இயங்கி ஆசைத் தம்பியின் தனித்திறனைக் காட்டி, பின் அடங்கிப் போனது.

மதுரையில் பெரும் பொருட்செலவில் தொடங்கப் பெற்ற நாளிதழ் ‘தினபூமி’. அதிர்ஷ்டசீட்டு விற்பனை யாளரான கே.ஏ.எஸ். குடும்பத்தில் இருந்து லாட்டரி சீட்டு முடிவுகளுக்காகவே வெளிவந்த நாளிதழ் அதிர்ஷ்டம். இதே நிறுவனத்தின் சார்பில் ‘வேலைவாய்ப்பு’, விளை யாட்டு இதழாக ‘சாம்பியன்’ என இதழ்கள் வெளி யாகின.  இதனை அடுத்து ‘தினபூமி’ அதிகப் பதிப்பு களுடன் நாளிதழாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதே போலப் புதிய ‘தினகரன்’ நாளிதழ் உத்தங் குடியில் இருந்து உதயமாகி, ஒருரூபாய் நாளிதழ் என்ற பெயரில் பெரும்பரபரப்பாய் விற்று முதலிடம் பெற்றது. நவீன அச்சு எந்திரவசதிகளுடன் பெரும்பொருட்-செலவில் தொடங்கப்பட்ட புதிய ‘தினகரன்’ நாளிதழுடன், ஏற்கனவே மதுரையில் அச்சாகி நின்றுபோன ‘தமிழ்முரசு’ நாளிதழ் புத்துயிர் பெற்று வெளிவந்து கொண்டிருக்கிறது.

புதிய தமிழ்முரசு முன்போல் மாலைநாளிதழாகவே வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அச்சாணியாகத் திகழும் இதழியல் எழுத்துச் சுதந்திரத்திற்கு எரியூட்டப்பட்ட இழிசெயல் மதுரை ‘தினகரன்’ இதழ் அலுவலகத்தில் ஏற்பட்டதும், அதற்காக உயிர்ப் பலிகள் நிகழ்ந்ததும் இக்கட்டுரைத் தொடக்கத்தில் கூறப்பட்ட கருத்துக்கு ஒரு சான்றாகவே கொள்ளலாம்.

இப்போதும் பத்திரிகை சுதந்திரத்திற்குப் பயமுறுத்தல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இதன்மூலம் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருவது மக்களாட்சிக்கே ஆபத்தாய் முடியும் என்பதில் ஐயமில்லை. தொடக்கத்தில் பெங்களூர் ‘தினச்சுடர்’ அலுவலகத்தில் அச்சாகி, தமிழகத்திற்கு அடி எடுத்து வைத்த ‘தமிழ்ச்சுடர்’ நாளிதழ் மதுரையில் சொந்த அச்சு எந்திர வசதியுடன் இயங்கிக் கொண்டிருக்க, இதற்கு முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடங்கப்பட்ட ‘தமிழ் ஓசை’ நாளிதழ் மதுரைப்பதிப்பு தொடங்கி இயங்கி இடையில் நின்று போனது.

உலகப்புகழ்பெற்ற ‘டைம்ஸ்ஆப் இந்தியா’ ஆங்கில நாளிதழ் தன் மதுரைப் பதிப்பை அண்ணாநகர் பகுதியில் தொடங்கி, ஆட்சி புரிந்துகொண்டிருக்கிறது.

மதுரையில் மாத, வார இதழ்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. சில இன்னும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஐம்பதுகளில் ஒப்பற்ற ‘தமிழன்’ பெயரில் இதழ்கள் வந்திருக்கின்றன. ஆதித்தனார் தொடங்கிக் கைவிட்ட ‘தமிழன்’ நாளிதழ் பின்னாளில் திராவிட இயக்க முகாமில் இருந்து வந்து நின்று போயிருக்கிறது. இதனிடையே இதே ‘தமிழன்’ பெயரில் மதுரையில் இருந்து ராஜாராம் ஆசிரியராகவும் உரிமை யாளராகவும் கொண்டு நல்லதமிழ் இலக்கியத் திங்கள் இதழாக வெளிவந்து நின்று போனது.

அப்போது மதுரை நகர தி.மு.க. செயலாளராக இருந்துவந்த எஸ்.முத்து மதுரை சென்ட்ரல் சினிமா சந்து இருந்த ஒரு கட்டடத்தின் மாடியில் இயங்கியபோது, ‘தமிழன்’ அங்கு அச்சாகிப் பல ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது. இதே சமயம் மதுரை நாயக்கர் புதுத்தெருவில் அடுத்தடுத்த கட்டடங்களில் இருந்து, இருவேறு இதழ்கள் அச்சாகி வெளிவரத் தொடங்கின. மதுரைக்கு மாண்புசேர்த்த மாதரசி ‘கண்ணகி’ பெயரால் கண்ணகி அச்சகத்தில் அச்சிடப்பட்டு, சந்திரமோகனை ஆசிரியராகக் கொண்டு பார்வர்டு பிளாக் கட்சிப் பிரச்சார இதழாக, வார இதழ் பல்லாண்டுகளாக பவனி வந்தது.

கண்ணகி அச்சகத்திற்கு அருகில் அன்றைய ஆர்.வி. நூற்பாலையில் எழுத்தாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் இரா.இரவி. இலக்கியத் தாக்கத்தோடு ஓய்வு நேரப்பணியாக ஒரு அச்சகம் ஆரம்பித்து இலக்கிய இதழும் தொடங்கி நடத்தி வந்தார். அதன் பெயர் ‘கலைக்கோவில்’. அதன் வடிவமைப்பும் இதழ் அளவும் நீளவாட்டத்தில் வண்ணத்தில் வெளியீடாக வந்து வாசகர்களைக் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் இதுவும் நின்று போனது.

அறுபதுகளில் அமோகமாக இயங்கி வந்திருக்கும் மதுரை எழுத்தாளர் மன்றத்தின் ‘தமிழ்ப்பாவை’ இதழ், திருவரங்கத்தைச்சேர்ந்த கருணைதாசனால் கட்டிக் காக்கப்பட்டு, அவர் காலம் வரை ஓடி நின்று போய் விட்டது. ஆனால் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் தொடங்கப் பெற்று, நூற்றாண்டைக் கடந்து ‘செந்தமிழ்’ இலக்கியத் திங்களிதழ் செவ்வனே வாசகர்களைச் செம்மைப் படுத்திக் கொண்டிருக்கிறது. மதுரையில் மாத, வார இலக்கிய இதழ்களும் ஏராளமாக வெளிவந்து பொருளாதார பூதத்திற்கு அஞ்சி ஒடுங்கிப் போய்விட்டன.

முன்னதாக மூத்த பத்திரிகையாளரான ‘தமிழ்நாடு’ துரைராஜ் ‘மதுரை டைம்ஸ்’ என்று வார இதழ் நடத்திய போது, ‘மதுரை பஜார்’ என்று மற்றொரு வாரஇதழ் வந்து மறைந்தது. மதுரை வார இதழ்களில் மகத்தான வசூலைக் குவித்த வார இதழ்களும் உள்ளன. மதுரை பழைய பேப்பர் வியாபாரியான முத்துச்சாமி, மதுரை சிறைச் சாலைக்கருகில் சொந்த அச்சகம் வைத்து, எம்.ஜி.ஆர். என்ற பெயரில் வார இதழ் நடத்தினார். அதே அலுவலகத்தில் இருந்து ‘சிவாஜி’ என்ற பெயரில் இன்னொரு சினிமா வார இதழ் வெளிவந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர் களின் ரசிப்புப் போட்டியை உரைகல்லாக்கி இந்த இதழ்கள் அதிகமாக விற்றன.

‘பொன்னி’ என்ற பெயரில் புதிய புதிய இலக்கியச் செய்திகள் ஏந்தி வந்தது அந்த நாளைய திங்களிதழ். அதற்கு ‘கலைப்பொன்னி’ எனப் பெயரிட்டுத் தொடங்கப் பட்ட இதழ் கால்நூற்றாண்டுகளைக் கடந்து, வெளி யாகிக்கொண்டு இருக்கிறது. இப்போது ஜோதிடப் பத்திரிகையாகிவிட்டது.

மற்றொரு ஜோதிடப் பத்திரிகை அமைப்பாளரான சுப்பிரமணி என்பவர் ‘நேசமலர்’ என்ற நாளிதழையும் நடத்தி வருகிறார். இதழியல் வழித்தடத்தில் இன்னும் எத்தனையோ இதழ்கள் பூக்களாய்ப் பூத்த வண்ணம் உள்ளன.

குழந்தை வேலனின் ‘இமைகள்’, மாதங்கனின் திருமகள், காசிநாதனின் ‘சொந்தம்’, வையை நட்புயிர், வைகை போன்ற ஏராளமான இதழ்களும் தோன்றி மறைந்துள்ளன. இன்னும் ‘புதுப்புதுப் பெயரில் இதழ்கள் பூத்த வண்ணம் உள்ளன. இறுதியாக, இதழியல் சோலையில் எனக்கு அறிமுகமாகி, நிழலாடிய நிகழ்வுகளின் அடிப் படையில், ஆல் போல் திகழும் நாளிதழ்கள் குறித்தும் அனிச்சமாகிப் போன அழகுத் தமிழ் இதழ்களை மட்டுமே கூற முடிந்திருக்கிறது. எனவே, என் இதழ் பெயரில்லை, என் பெயரில்லை என வருத்தப்பட ஏதுமில்லை என்பதே எனது தாழ்மையான வேண்டுதல்.

மதுரை இதழியலின் மற்றொரு புறத்தைத் தக்கதாய் ஆய்வு செய்து, தகவல் திரட்டி, கண்காட்சி நடத்திய என தருமை நண்பர் ஓவியர் கல் ஆர்ட்ஸின் தி.க.யானையப்பன் காலமாகிவிட்டதால் அவருக்காக அன்று நான் திரட்டித் தந்த திரவியம் என்னிடம் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை.

Pin It