படித்துப் பாருங்களேன்...

David West Rudner, 1994, Caste and Capitalism in Colonial India; The Nattukottai Chettiars, Munshiram Manoharlal Publishers Pvt Ltd

இன்றையத் தமிழ்நாட்டில் எண்ணிறைந்த சாதிப்பிரிவுகள் உள்ளன. இவற்றுள் சில மக்கள்தொகை எண்ணிக்கையில் அதிகமானவை, சில எண்ணிக்கை குறைந்தவை. சில சாதியினர் பொருளியல் நிலையில் வளமானவர்களாகவும், அரசியல் அதிகாரத்துடன் நெருக்கமானவர்களாகவும் விளங்குகின்றனர். இவர் களுள் சிறுபான்மையினராகவும், பொருளியல் நிலையில் வலுவானவர்களாகவும் விளங்குபவர்கள் ‘நகரத்தார்’ என்னும் சமூகத்தினர். தம் பொருளியல் நிலை மற்றும் பெரிய கல்விக்கூடங்களை நடத்தி வருதல் என்பன வற்றால் அரசியல் செல்வாக்கும் உடையவர்கள்.

chettiyaarஇவர்களது பெயருக்குப் பின் ‘செட்டியார்’ என்ற சாதிப் பின்னொட்டு உண்டு. செட்டியார் என்ற சாதிப்பின்னொட்டுடன் வேறுபல சாதியினரும் உண்டு என்பதால் அவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும் வகையில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்றும், நகரத்தார் என்றும் அழைக்கப்படுகின்றனர். (பிற்காலச் சோழர் ஆட்சிக்காலத்தில் வணிகர்கள் வாழும் பகுதி ‘நகரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது) தன வணிகர் என்ற பெயரும் இவர்களுக்குண்டு.

காஞ்சிபுரத்தில் தொடக்கத்தில் வாழ்ந்த இச்சமூகத்தினர் வரிக்கொடுமை தாளாது காவிரிப்பூம் பட்டிணத்திற்கு இடம்பெயர்ந்ததாகவும், பின்னர் பாண்டிய மன்னனது அழைப்பின் பெயரில் அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்போது வாழும் பகுதிக்கு வந்து சேர்ந்ததாகவும் வாய்மொழி வரலாறுள்ளது. இவர்கள் குடியேறிய நிலப்பகுதியின் எல்லையை,

வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பிரான்மலையாம்

தெள்ளார் புனல்வைகை தெற்காம்- ஒள்ளியசீர்

எட்டிக்கடல் கிழக்காம் இஃதன்றோ நாட்டரசன் சேர்

செட்டிநாட் டெல்லையெனச் செப்பு

என்று, ‘பாடுவார் முத்தப்பச் செட்டியார்’ பாடியுள்ளார். தொடக்கத்தில் மேற்கூறிய எல்லைப் பகுதிக்குள் 96 ஊர்களை இவர்கள் உருவாக்கி வாழத் தொடங்கி யுள்ளனர். இந்நிலப்பகுதியே செட்டிநாடு எனப்பட்டது. இன்று 74 ஊர்களை இவர்கள் தம் பூர்வீக ஊர்களாகக் கொண்டுள்ளனர். 78 ஊர்கள் என்ற கருத்தும் உண்டு. செட்டிநாடு என்று இவர்கள் வாழும் நிலப்பகுதி அழைக்கப்பட்டாலும் இப்பகுதியில் பல்வேறு சமூகத்தினரும் வாழ்கின்றனர்.

நகரத்தார்; கோத்திரம் என்ற சாதி உட்பிரிவைக் கடைப்பிடிப்பவர்கள். ஒவ்வொரு கோத்திரமும் தனக்கென ஒரு கோவிலைக் கொண்டுள்ளது. இவ்வகையில்

1. இளையாற்றக்குடி கோயில்

2. மாற்றூர்க் கோயில்

3. வைரவன் கோயில் 

4. இரணக்கோயில்

5. பிள்ளையார்பட்டிக் கோயில்

6. நேமங்கோயில்

7. இலுப்பைக் குடிக்கோயில்

8. ஆழைக்குடிக் கோயில்

9. வேலங்குடிக் கோயில்

என்ற ஒன்பது கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுடனும் நகரத்தாரின் கோத்திரங்கள் சில இணைந்திருக்கும். ஒரே கோத்திரத்தில் உள்ளவர்களை சகோதர சகோதரி உறவுடையவர்கள் என்று கருதுகின்றனர். இதனால் ஒரே கோத்திரத்திற்குள் திருமணம் செய்வதில்லை. பிள்ளை இல்லாத நிலையில் தத்தெடுப்பவர்கள் தம் சுய கோத்திரத்தில் இருந்து தத்தெடுக்க வேண்டும்.

***

நகரத்தார் அல்லாத சாதியினரிடம் நகரத்தார் என்றதும் நினைவுக்கு வருவது அவர்களது அரண்மனை போன்ற வீடுகளும், சமையல் முறைகளும் வட்டித் தொழிலும்தான். அவர்களது வட்டித்தொழிலை மையமாகக் கொண்டு பல வாய்மொழி வழக்காறுகள் உழுகுடிகளிடம் இன்றும் வழக்கிலுள்ளன. இவை பகடியுடன் கூடிய எதிர்க்குரல்கள்.

தனிச்சொத்துரிமை உருவாகி நாணய வடிவிலான பணப்புழக்கம் பரவலாக அறிமுகமான பின்னர் தோன்றிய பல தொழில்களில் கடன் கொடுத்தலும் ஒன்று. நிலவுடைமை வளர்ச்சியுற்றிருந்த பிற்காலச் சோழர் ஆட்சிக்காலத்தியக் கல்வெட்டுக்களில் ‘பொலிசை’ என்ற பெயரில் வட்டி குறிப்பிடப் பட்டுள்ளது. கோவில்களும் கூட இத்தொழிலைச் செய்துள்ளன.

பொருளியல் வரலாற்றில் இன்றைய வங்கித் தொழிலின் முன்னோடித் தொழிலாக வட்டித் தொழிலைக் குறிப்பிட இயலும். இவ்வகையில் வங்கித் தொழிலின் முன்னோடிகளாக நகரத்தார் இருந்துள்ளனர்.

டேவிட் வெஸ்ட் ருட்னர் ‘நகரத்தார் சமூகம்’ குறித்து எழுதிய ‘Caste and Capitalism in Colonial India; The Nattukottai Chettiars’ நூலின் சில முக்கிய பகுதிகளை இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது. நூலாசிரியர் ஃபோஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் உதவிப்பேராசிரியராக விளங்குபவர். ஆழமான களஆய்வின் அடிப்படையிலும், ஆவணச் செய்திகளின் அடிப்படையிலும் எழுதப்பட்ட இந்நூல் விவரணத் தன்மை மட்டும் கொண்டதல்ல. மாக்ஸ் வெப்பர் போன்ற சமூகவியலாளர்களின் கோட்பாடு களைப் பொருத்திப்பார்த்து ஆய்வு செய்துள்ளார்.

1870 முதல் 1930 வரையிலான காலத்தில் வங்கித் தொழிலிலும், வாணிபத்திலும் முக்கியப் பங்காற்றிய நாட்டுக்கோட்டைச் செட்டியார்களை மையமாகக் கொண்டே இந்நூலை எழுதியுள்ளார். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் பாரம்பரியமான வாணிப முறையை மேற்கொண்டு வந்த ஒரு சாதியின் மீது காலனியம் ஏற்படுத்திய தாக்கத்தை இந்நூல் வெளிப் படுத்துகிறது.

நகரத்தார் சாதியின் தோற்றம் குறித்த புராணச் செய்திகள், வழிபாட்டு முறைகள், வாழ்க்கை வட்டச் சடங்குகள், சாதி அமைப்பு உருவாக்கிய நிர்வாக உறுப்புகள், வட்டித் தொழில்முறை, மேற்கொண்ட அறச்செயல்கள், இவர்களிடையே உருவான மேட்டிமை யோர் எனப் பல விரிவான செய்திகளை இந்நூல் தன்னுள் கொண்டுள்ளது. விரிவஞ்சி நகரத்தாரின் சாதி சார்ந்த அமைப்புகள், அவர்களது வட்டித்தொழில் செய்யும் முறை என்பன தொடர்பான செய்திகளை மட்டுமே இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது. கோட் பாட்டடிப்படையிலான விவாதங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன.

***

வட்டித்தொழிலுக்கான மூலதனம்

ஆங்கிலக் காலனியத்திற்கு முந்தைய ஆவணப் படுத்தப்படாத காலம் தொட்டு 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை உப்பு வணிகம், அரிசி, பருத்தி வணிகம் ஆகியனவற்றில் நகரத்தார் ஈடுபட்டு வந்துள்ளனர். இலங்கை, வங்கம் ஆகிய பகுதிகளிலும் இவ்வாணிபத்தை விரிவுபடுத்தினர்.

பர்மாவையும் (மியான்மர்), மலேசியாவையும் முழுமையாக ஆங்கிலேயர் கைப்பற்றிய பின் 1850-1860 காலகட்டத்தில் காலனிய வளர்ச்சிக்கும் தம் சுரண்டலுக்கும் உதவும் வகையில் உள்நாட்டுப் பகுதிகளை வாணிபத்திற்குத் திறந்துவிட்டனர்.

1869இல் சூயஸ் கால்வாயைத் திறந்துவிட்ட பின் ஆசியாவுக்கும் அய்ரோப்பாவுக்கும் இடையே வாணிபம் அதிகரித்தது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்பு கூடியது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேளாண்குடிகள், மலைத்தோட்ட உரிமை யாளர்கள், சுரங்க உரிமையாளர்கள் ஆகியோர் அதிகரித்தனர். ஏற்கனவே சந்தைக் கடன் வழங்குவதில் ஈடுபட்டிருந்த நகரத்தார் சமூக வணிகர்கள், கடன் வழங்குவதை, தனித்ததொரு தொழிலாக மேற்கொள்ளத் தொடங்கினர். இதற்கு அதிக அளவில் நிதி மூலதனம் தேவைப்பட்ட நிலையில் அதைத் திரட்டலாயினர். இவ்வாறு அவர்கள் திரட்டிய மூலதனம் பின்வருமாறு அமைந்தது.

நகரத்தார் ஒருவர் வட்டித்தொழிலில் ஈடுபடும் போது அவர் முதலீடு செய்யும் பணம் முதல்பணம் எனப்பட்டது. சொந்த தவணைப்பணம் என்றும் இதைக்குறிப்பர். இது முற்றிலும் அவரது சொந்தப் பணமாகும். இது தவிர தொழிலுக்கான மூலதனமாகப் பல்வேறு வகைகளில் வைப்புத் தொகை (டெபாசிட்) பெற்றனர். வைப்புத்தொகையாகப் பெறப்படும் பணம் மேம்பணம் எனப்பட்டது. இது பல்வேறு பெயர்களில் அமைந்தது. அது வருமாறு;

ஆச்சிமார் பணம்

நகரத்தார் சமூகப் பெண்களிடம் இருந்து இது பெறப்பட்டது. பொதுவாக உரிமையாளரின் மனைவி, மருமகள்களின் சீதனப்பணம் வைப்புத் தொகையாகப்      பெறப்பட்டது. தாயாதிக்காரர்களின் பணமும் இவ்வாறு கூறப்படும்.

தண்டுப்பணம் அல்லது தண்டுமுறைப்பணம்

தாயாதியல்லாத பிற நகரத்தாரிடம் இருந்து பெறும் வைப்புத்தொகை. வளவித்தொகை என்றும் இதை அழைப்பர்.

கோவில் பணம்

நகரத்தார்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் களில் இருந்து பெறப்படும் வைப்புத்தொகை. தர்மப்பணம் என்றும் இதைக்குறிப்பர்.

அடத்திக்கடைப்பணம்

நகரத்தார்களின் மூல வங்கி மற்றும் நகரத்தார் சமூகத்தின் பெரும் செல்வந்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் பணம்.

வெள்ளைக்காரன் பணம்

அய்ரோப்பியர்களுக்கு உரிமையான வங்கிகளில் இருந்து பெறும் பணம். இது மிகவும் குறைந்த விழுக்காட்டில்தான் கிடைக்கும். அனைவருக்கும் கிடைத்தல் அரிது.

இவைதவிர மலேசியா, சிங்கப்பூர், ரங்கூன் போன்ற பகுதிகளில் வாழும் சீனர்களிடமிருந்தும் இப்பகுதியில் தொழில் புரியும் நகரத்தார் வைப்புத் தொகை திரட்டினர்.

கடன் வழங்கல்

பெரிய அளவிலான சொத்துக்களை ஈடாகப் பெற்றுக் கொண்டு பெருந்தொகையைக் கடனாக வழங்குவது ஒரு நடைமுறை.

மற்றொரு பக்கம் சிறுகடைக்காரர்கள், சிறு வணிகர்கள் ஆகியோருக்குக் கடனாகத் தருவது கண்டு கிஸ்தி எனப்படும். இவர்களிடம் கடன்தொகை கொடுக்கும்போதே வட்டி பிடிக்கப்படும்.

சக நகரத்தாரின் வட்டிக்கடையில் அவசரத் தேவைக்காக வாங்கும் பணம் கைமாத்துப் பணம் எனப்படும். இதைப் பெற ஆவணம் தேவையில்லை. அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வரைதான் கைமாத்துப் பணம் வாங்க முடியும். இது விரைவில் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

தவணைவட்டி, கூட்டு வட்டி என இருவகை வட்டியுண்டு. நகரத்தார் அல்லாதவர்களிடம் இருந்தும் உள்நாட்டிலும் வைப்புத்தொகை பெறப்படும். இதற்கு தனிவட்டி வழங்கப்படும். இது வயன்வட்டி என அழைக்கப்படும்.

கணக்குப்பதிவேடுகள்

பல்வேறு வகையிலான கணக்குப் பதிவேடுகளை நகரத்தார் பராமரித்து வந்தனர்.

அனைத்து வரவு செலவுகளும் பதிவாகும் கணக்கேடு பேரேடு எனப்பட்டது.

நிலுவையில் உள்ள தொகை, கடன்கள் வைப்புத் தொகை தொடர்பான கணக்குகளின் பதிவேடு பாக்கிப் புத்தகம் எனப்பட்டது.

வைப்புத்தொகை செலுத்தியவர்களுக்கு வழங்க வேண்டிய வட்டி குறித்த கணக்கேட்டின் பெயர் வட்டிச்சிட்டை என்பதாகும்.

அன்றாட வரவு செலவுகளின் பதிவு, குறிப்பு என்ற பெயரிலான கணக்கேட்டில் இடம்பெற்றது. குறிப் பேட்டில் பதிவான கணக்குகள் பேரேடுக்கு மாற்றம் பெறும்.

இரண்டு மாதம் முதல் ஆறு மாதம் வரையிலான காலஅளவு குறுகிய கால வைப்புத்தொகை தவணைக் கணக்கு எனப்படும்.

அலுவலகமும் ஊழியர்களும்

நகரத்தாரின் அலுவலகம் கிட்டங்கி எனப்படும். இது இச்சமூகத்தினரின் பொதுக்கட்டடங்களிலும், நகரத்தாருக்கு உரிமையான விடுதிகளிலும் (சத்திரம்) சாதிக்குரிய கோவில்களிலும் இடம்பெற்றது. இது பெரும்பாலும் 8ஜ்4 அடி பரப்புள்ளதாக விளங்கும். நகை, ரொக்கம், தொழில் தொடர்பான ஆவணங்கள், கணக்கேடு, கடிதப்போக்குவரத்து ஆகியனவற்றை வைக்கும் வகையில் சிறு மரப்பெட்டியன்று இங்கிருக்கும்.

இவ்வலுவலகத்தை நிர்வகிப்பவர் நாள்தோறும் நகரத்தார் கோவிலுக்குச் சென்று பணத்தேவை, பரிவர்த்தனை, மதிப்பு, சரக்குகளின் விலை, அரசின் சட்டவிதிகள், அரசியல் ஆகியன தொடர்பான செய்தி களை ஏனைய நகரத்தாரிடம் அறிந்து கொள்வர். நகரத்தார் சமூகக் கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் விருந்தினர்களைச் சிறப்பான முறையில் உரிமையாளரின் சார்பில் கவனித்துக் கொள்வதும் இவரது பொறுப்பு.

இவரையடுத்து இருப்பவர் முதல் ஆள் எனப்படும் கட்டுக்கணக்கப்பிள்ளை இருப்பார். உண்மையில் இவர்தான் கடையை நிர்வகிப்பவர். இவரை அடுத்துப் பணிபுரிபவர் அடுத்தாள் எனப்படுவார்.

அயல்நாடுகளில் தொழில்புரியச் செல்லும் நகரத்தார் தம் வீட்டுப்பெண்களை அழைத்துச் செல்லும் பழக்கமில்லை. எனவே கடைநிர்வாகி மற்றும் ஊழியர்களுக்கு உணவு தயாரிக்க சமையல்காரர் ஒருவரும் இருப்பார். எடுபிடி வேலைசெய்ய பெட்டி யடிப் பொடியன் என்ற பெயரில் சிறுவன் ஒருவன் பணி புரிவான்.

பெரிய கடைகளில் நீதிமன்ற வழக்குகளைக் கவனிக்க கிரானி என்ற பெயரில் எழுத்தர் ஒருவர் இருப்பார். காசாளர் ஒருவரும் இருப்பதுண்டு.

பணத்தைச் சரிபார்ப்பதும், கடையை மூடுவதும் முதல் ஆளின் பணியாகும். வாடிக்கையாளரைச் சந்திப்பது, நிறுவனத்துக்குரிமையான இடங்களை நிர்வகிப்பது தொடர்பான பணிகளை பர்மிய மொழி தெரிந்த உள்ளுர்வாசி ஒருவர் கவனித்துக் கொள்வார்.

அன்றாடம் பணத்தைக் கையாள்வது ‘கைமாத்துப் பணம்’ வாங்கி வருவது போன்ற செயல்களை மேற் கொள்ளப் பையன் ஒருவனும் இருப்பதுண்டு. இவனுக்கு ஊதியம் எதுவும் கிடையாது. கிட்டங்கியில் தங்குமிடமும் உணவும் இலவசம். அவன் பணியை விட்டுச் செல்லும்போது அன்பளிப்பாகச் சிறுதொகை வழங்கப்படும். இப்பையன்கள் வட்டித்தொழிலின் நுட்பங்களை இப்பணியின் வாயிலாக அறிந்து கொள்வர். இன்று தொழில் பழகுவோர் (அப்ரண்டிஸ்) என்ற பெயரில் பணிசெய்வதற்கு இது இணையானது. பெரும்பாலான நகரத்தார்கள் இம்முறையில் பணிசெய்தே தம் தொழில் வாழ்வைத் தொடங்கி யுள்ளனர்.

நகரத்தார் விடுதி

நகரத்தார்கள் சாதி அடிப்படையில் தமக்கென்று நிறுவிய ஒரு முக்கிய நிறுவனம் விடுதி ஆகும். இது ஒருவகையில் சத்திரம் போன்றதாகும். நகரத்தாருக்கு உரிமையான கோவில் பகுதியிலோ அதன் அருகிலோ அமைக்கப்படும். நகரத்தார் மடம் என்றும் இதைக் குறிப்பிடுவதுண்டு.

இவ்விடுதியின் முதல்தளத்தில் தனித்தனி அறைகள், பொதுப் படுக்கையறைகள், பொருள் வைப்பறைகள், கூட்ட அறை, உணவருந்தும் கூடம், பெண்கள் பயன்படுத்தும் வகையிலான சமையலறை என்பன இருக்கும்.

இரண்டாம் தளத்தில் கருவறை அல்லது கோவில் இடம் பெற்றிருக்கும். அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படும் இவ்விடுதியில் பயணம் செய்யும் நகரத்தாருக்கு உதவும் வகையில் மேலாளர் ஒருவரும் ஊழியர்களும் இருப்பார்கள். தொழில் முறையாகப் பயணம் செய்யும் நகரத்தாருக்கு உதவியாய் விடுதி விளங்கும்.

நகரத்தாரில் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் இத்தகைய விடுதிகள் உருவாக நிதி உதவி செய்வர். ஏனைய நகரத்தாரும் இயன்ற வரையில் நிதி வழங்குவர். விடுதியைப் பயன்படுத்துவோர் மகமை என்ற பெயரில், பெயரளவிலான வாடகை தருவர்.

செட்டிநாட்டுப்பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள விடுதிகள் நகரத்தாரது கிராமக் கோயில்களின் விரிவாக்கம் போன்றவையாகும். உள்ளுர் நகரத்தாரின் சாதிக் கூட்டம், கிராம அளவிலான சமயச் சடங்குகள் ஆகியன நிகழ விடுதி பயன்படும். இவ்விடுதிகள் தங்குவதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை. உள்ளுர் நகரத்தாரின் நிதி உதவியால் இவ்விடுதி பராமரிக்கப்படும். பெரும் செல்வர்கள் அதிகளவில் நிதி வழங்குவர்.

தாம் வணிகம் நிகழ்த்தும் ஊர்களில் எல்லாம் கடல் கடந்தும் கூட இத்தகைய விடுதிகளை உருவாக்குவர். 1880இல் சென்னை துறைமுகப்பகுதியில் விடுதி யன்றை நிறுவினர்.

நகரத்தாரின் விடுதியென்பது தங்கும் இடம் மட்டுமல்ல. நகரத்தாரின் சமூக நிறுவனமாக இது விளங்குகிறது. வாணிபம் தொடர்பான செய்திப் பரிமாற்றம் செய்யும் இடமாகவும், நகரத்தார் அனைவரும் ஒன்று கூடும் இடமாகவும், அன்னதானம் வழங்கும் இடமாகவும், ஒருவரின் வாணிபம் தொடர்பான செய்திகளை மற்றவர் அறிந்து கொள்ளும் இடமாகவும் நகரத்தாரின் விடுதி பயன்படுகிறது.

சாதிப் பஞ்சாயத்து

நகரத்தாரின் சாதிப்பஞ்சாயத்தானது மையமான அமைப்பன்று. எனவே அனைத்து நகரத்தாருக்கும் எனப் பொதுவான தலைமை கிடையாது.

வட்டார அளவிலேயே நகரத்தாரின் பஞ்சாயத்து செயல்படுகிறது. மேலே குறிப்பிட்ட நகரத்தாரின் விடுதி அல்லது கோவில்கள் பஞ்சாயத்து கூடும் இடமாக அமையும். சமயம் மற்றும் வாணிபம் தொடர்பான சிக்கல்கள் மட்டுமின்றி ஒருவரின் விதவைத்தாய் அல்லது திருமணமாகாத சகோதரிக்கு வாழ்க்கைப்பணம் வழங்குதல், திருமணமான சகோதரிகளுக்கு வழங்க வேண்டிய முறைப்பணம், கூட்டுக்குடும்ப வாழ்க் கையில் உருவாகும் சிக்கல்கள், கூட்டு வாணிபத்தில் ஏற்படும் பிணக்குகள், சொத்துக்களைப் பிரிவினை செய்தல், மருமகள் தரவேண்டிய வரதட்சணைப் பணம், மாமியார் மருமகள் சண்டை ஆகியன சாதிப்பஞ்சாயத்தில் இடம்பெறும்.

நகரத்தார் சமூகத்திற்கு உரிமையான கோயில் களுக்குத் தரவேண்டிய வரியைத் தராதிருத்தல், அயற்சாதிப்பெண்ணைத் திருமணம்செய்தல், பணம் கொடுக்கல் வாங்கலில் அசல் அல்லது அசலுக்கான வட்டியைக் கொடுக்காதிருத்தல் தொடர்பான சிக்கல் களும் பஞ்சாயத்தில் இடம்பெறும்.

பஞ்சாயத்தின் முடிவை ஏற்க மறுப்பவர்களின் குடும்பத்துடன் மணஉறவு மேற்கொள்வது தடை செய்யப்படும். நகரத்தார் சமூகத்துக்கு உரிமையான விடுதி, கோயில் நுழையும் உரிமை பறிக்கப்படும். ஏனைய நகரத்தார் அவருடன் வாணிப உறவு மேற்கொள்வதும் தடைசெய்யப்படும்.

கோவில் திருப்பணி

நகரத்தார் சமூகத்தின் முக்கிய பொதுப்பணியாக அமைவது கோவில்களைப் பராமரித்தலாகும். தொடக்கத்தில் குறிப்பிட்ட நகரத்தாரின் ஒன்பது கோவில்களை மட்டுமன்றி அவர்கள் வாழும் 78 ஊர்களின் கோவில்களையும் தம் ஊருக்கு அருகில் உள்ள முப்பத்து நான்கு கிராமக் கோவில்களையும் அவர்கள் பராமரித்து வந்தனர். இவை தவிர தமிழ்நாட்டின் சோழநாடு, பாண்டியநாடு, கொங்கு நாடு, நடுநாடு, தொண்டை நாடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங் களுக்கு நிதி வழங்கிப் பராமரித்துள்ளனர். இச்செயல் அவர்களது பாரம்பரியச் செயலாக அமைந்துவிட்டது.

இச்செயலின் காரணமாகக் கோவிலின் சிறப்பு மரியாதையை இச்சமூகம் பெற்றதுடன், கோவில் நிர்வாகத்திலும் பங்குபெறும் வாய்ப்பை அடைந்தது. இவை தமிழ்ச்சமூகத்தில் ஓர் உயரிய சமூக மதிப்பைப் பெற்றுத்தந்தன.

தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி தம் சமூகத்தின் வாயிலாகவும் இவற்றை மேற்கொண்டனர். இதற்கான நிதி ஆதாரத்தை (வீ) புள்ளி வரி (வீவீ) ஆஸ்தி என்ற இரு வகையான வரிகளின் வாயிலாகப் பெற்றனர்.

புள்ளி வரி

இவ்வரியானது நகரத்தார் சமூகத்தின் கோத்திரங் களுக்குரிய ஒன்பது கோவில்களுக்குத் தரவேண்டிய வரியுடன் தொடர்பில்லாதது. இது நகரத்தார் வாழும் ஊரின் கிராமக்கோவிலை மையமாகக் கொண்டது. வணிகர்கள் என்ற முறையில் சரக்குகளின் எண்ணிக் கையை புள்ளிகள் இட்டு எண்ணி வந்ததன் அடிப் படையில் நகரத்தார் குடும்பம் ஒவ்வொன்றும் ஒரு புள்ளியாகக் கணக்கிடப்பட்டது. ஒவ்வொரு புள்ளிக்கும் (குடும்பத்துக்கும்) விதிக்கப்பட்ட கோவில்வரி புள்ளி வரி எனப்பட்டது. இது ஆண்டுக்கு ஒருமுறை வாங்கப் படும். இவ்வரித்தொகை ஊருக்கு ஊர் சற்று வேறுபடும். பணம் மட்டுமின்றி அரிசியும் பெறப்படும்.

ஒவ்வொரு நகரத்தாரின் கிராமக் கோவிலிலும் புள்ளி வரிக் கணக்கு முறையாகப் பராமரிக்கப்படும். இவ்வரியைக் கொடாதவர்களின் பெயரில் அவர்கள் தரவேண்டிய வரித்தொகைக் கடனாகப் பதிவு செய்யப் படுவதுடன் அதற்கு வட்டியும் விதிக்கப்படும்.

குடும்பத்தலைவர் இறந்துபோனால் அவரது மனைவியை அரைப்புள்ளியாகக் கணக்கிட்டு, புள்ளி வரியில் பாதி வரி வாங்கப்படும். இறந்தவரின் மகன்களுக்குத் திருமணம் நடந்தபின் அவர்கள் தனிப்புள்ளியாகக் கணக்கிடப்படுவர். மகன்களுக்குத் திருமணம் நிகழ்ந்த பின்னர் இறந்தவரின் மனைவி புள்ளிவரி செலுத்த வேண்டாம்.

புள்ளிவரியை முறையாகச் செலுத்தாதவர் தம் வீட்டில் நிகழும் மங்கல, அமங்கல நிகழ்ச்சிகளை யட்டி அதைச் செலுத்திவிட வேண்டும். அவ்வாறு செலுத்தாவிடில் அக்கிராமத்தில் வாழும் ஏனைய நகரத்தார் அதில் கலந்துகொள்ள மாட்டார்கள்.

ஆஸ்தி வரி

புள்ளிவரியினால் கிட்டும் வருவாய் போதவில்லை யென்றால், அதை ஈடுகட்ட ஆஸ்தி வரி என்ற வரி விதிக்கப்படும். இதுகுறித்து முடிவு செய்ய ‘நகரக் கூட்டம்’ என்ற பெயரிலான நகரத்தாரின் சாதிக் கூட்டம் நிகழும். இக்கூட்டம் ஆஸ்திவரிக் கூட்டம் எனப்படும். இக்கூட்டத்தில் இவ்வரி விதிப்புக்கு ஆளாக வேண்டியவர்களின் பெயர்களும், அவர்கள் செலுத்த வேண்டிய வரித்தொகையும் முடிவு செய்யப்படும். இது அரசின் செல்வ வரி போன்றது.

நகரத்தார் சமூகத்தின் இடப்பெயர்ச்சியும், சடங்குகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதும், வேறுபல தொழில்களை மேற்கொள்வதும் அண்மைக் கால நிகழ்வுகளாய் உள்ளன. இதனால் மேற்கூறிய இருவரிகளையும் வாங்குவது பெரும்பாலும் மறைந்து வருகிறது. அதேநேரத்தில் பொருள்வளம் மிக்க சில நகரத்தார்கள் தம் ஊர்ப்பகுதிகளில் உள்ள சிவன் கோவில் களில் தம் சொந்தச் செலவில் புனரமைப்பு வேலை களை மேற்கொள்கின்றனர். இதன் விளைவாக நகரத்தாருக்கும், நகரத்தார் அல்லாத சாதியினருக்கும் இடையில் பிணக்குகள் உருவாகின்றன. இது தொடர்பான வழக்குகளின் அடிப்படையில் சில கோவில்கள் மூடப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.

மேட்டிமையோர்

நகரத்தார் சமூகமானது வாணிபம், வட்டித்தொழில் என்பனவற்றில் தொடக்கத்தில் ஈடுபட்டுப் பின்னர் காலனிய ஆட்சியின் விளைவாக உருவான வணிக முதலாளித்துவத்திற்குள் நுழைந்தபின், இச்சமூகத்தில் மேட்டிமையோர் உருவாகத் தொடங்கினர். இதன் விளைவாக ராவ்பகதூர், ஜமீந்தார், ராஜா, மேயர், அமைச்சர் போன்ற பட்டங்களையும் பதவிகளையும் இவர்கள் பெற்றனர். அத்துடன் சென்னை நகர அரசியலில் ஈடுபடலாயினர். தமிழ் உணர்வைப் பயன்படுத்தி வளர்ந்த நீதிக்கட்சி அரசியலில் தம்மையும் ஈடுபடுத்திக்கொண்டனர்.

ஆனால் நகரத்தார் சமூகம் முழுமையும் ஆங்கில அரசுக்கு ஆதரவாய் செயல்பட்டு வந்த நீதிக்கட்சியின் அரசியலை ஆதரித்தது என்று கூற முடியாது. 1937இல் நிகழ்ந்த நகரத்தார் சங்கக் கூட்டத்தில் நீதிக் கட்சியைப் புறந்தள்ளி காந்தியின் தலைமையிலான காங்கிரசை ஆதரித்தது.

நகரத்தார் சமூகத்தின் மேட்டிமையோரில் முக்கிய இடம் பெறுவது அண்ணாமலை செட்டியார் குடும்பமாகும். அண்ணாமலை செட்டியாரின் தந்தை முத்தையா செட்டியார் ஆங்கில அரசுடன் நெருக்கமான பிணைப்புக்கொண்டவர். ‘ராஜா சர்’ என்ற பட்டத்தை ஆங்கில அரசிடமிருந்து இவரது மகன் பெற்றதுடன், செட்டிநாட்டின் ராஜாவாக அறிமுகமானார். இங்கு ‘செட்டிநாடு’ என்பது இப்பெயரால் அழைக்கப்படும் பரந்துபட்ட நிலப்பரப்பைக் குறிக்கவில்லை. புதிதாக உருவான செட்டிநாடு கிராமத்தையே குறிப்பதாகும். அண்ணாமலை செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார். இதன் வெளிப்பாடாக 1942இல் ‘தமிழிசை மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

இம்மன்றத்தின் கட்டடச் செலவுக்கான பணத்தை அண்ணாமலை செட்டியாரும், நகரத்தார் சமூகத்தின் செல்வந்தர்களும் வழங்கினர். இம்மன்றத்தின் முன்பகுதியில் உயரமான அளவில் அண்ணாமலை செட்டியாரின் சிலை உள்ளது. இதுதொடர்பாக ஒரு செய்தியுண்டு.

1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னர் இந்துக்கோயில்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை நுழைய அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றினார். இச்செயலுக்காக அவரைப் பாராட்டும் வகையில் அவரது சிலையை அன்றைய சென்னை மாநிலத்தின் முதல்வராக இருந்த இராஜாஜி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுவினார்.

திருவிதாங்கூர் மகாராஜாவின் சிலையைவிட உயரமாக அதற்கு எதிர்ப்புறத்தில் அண்ணாமலை செட்டியார் தன் உருவச்சிலையை நிறுவ விரும்பினார். அவரது மறைவுக்குப்பின் அவரது விருப்பத்தை அவரது மகன் ராஜா சர்.முத்தையா செட்டியார் நிறைவேற்றினார்.

அரசிடமிருந்து தொண்ணுற்றொன்பது ஆண்டு களுக்குக் குத்தகையாக இச்சிலை நிறுவ இடம் பெறப்பட்டது. இதற்கான குத்தகைத் தொகை ஆண்டுக்கு ஒரு ரூபாய் ஆகும். திருவிதாங்கூர் மன்னரின் சிலையைவிட உயரமாக அண்ணாமலை செட்டி யாரின் சிலை இந்த இடத்தில் இன்றும் காட்சியளிக் கிறது.

***

நீதிக்கட்சியின் தலைமைக் கொறடாவாகவும், தலைவராகவும் ராஜா சர். முத்தையா செட்டியார் இருந்தார். 1934ஆம் ஆண்டில் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் வேட்பாளராக ஆர்.கே.சண்முகம் செட்டியார் (நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லர்) என்பவர் போட்டியிட்டார். இவரை ஆதரித்து முத்தையா செட்டியார் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. தேர்தலில் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தோல்வியடைந்தார். இதனால் நீதிக் கட்சியின் சார்பில் முதல்வராக இருந்த பொப்பிலி ராஜா, கொறடா பதவியில் இருந்து முத்தையா செட்டியாரை நீக்கினார்.

இந்நிகழ்ச்சி நடந்து நான்கு மாதங்கள் கழித்து தன்னுடைய சொந்தக்கட்சியின் அமைச்சரவை மீதே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முத்தையா செட்டியார் கொண்டு வந்தார். இதுதொடர்பாக சென்னையின் ஆளுநராயிருந்த எர்ஸ்கின் பிரபு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாயிருந்த வெலிங்டன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு;

சாதாரணமான அரசியல் வழிமுறைகளை அவர் மேற்கொண்டிருந்தால் எவரும் அதைக் குறை கூற முடியாது. ஆனால் தன்னுடைய பழிவாங்கும் செயலை வெகுசனக் கையூட்டு வாயிலாக மேற்கொண்டார். முப்பதினாயிரம் ரூபாய் வரை இதுதொடர்பாக அவர் செலவழித்துள்ளார். அத்துடன் மேலும் முப்பதினாயிரம் ரூபாய் வரை செலவு செய்யவும் ஆயத்தமாயுள்ளார். அற்பத்தனமான அரசியல் நடத்துவதை நான் உணர் கிறேன். இத்தகைய இந்தியர்களுக்குத் தலைவணங்கித் தான் ஆகவேண்டும். இக்கலையில் அவர்கள் வல்லவர் களாய் உள்ளனர். இதனையடுத்து வரும் நாட்கள் கையூட்டின் களியாட்டமாகவும் கபடச்செயலாகவும் அமையும்.

***

1938இல் நடந்த தேர்தலில் சென்னை மாகாண ஆட்சியை நீதிக்கட்சியிழந்தது. காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாயிற்று. நீதிக்கட்சியின் சார்பில் சட்டமன்றத் தலைவராக இருந்த முத்தையா செட்டியார் தான் செலுத்த வேண்டிய எஸ்டேட் வரி தொடர்பாகப் பேரம்பேசி சலுகைபெற்றார். 1938இல் தஞ்சாவூரிலும் மதுரையிலும் நடந்த சுயமரியாதை மாநாட்டில் அவரது இச்செயல் கண்டனத்துக்குள்ளானது.

1934இல் தலைமைக் கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்டமையும், 1938இல் சுயமரியாதை இயக்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானமும் வேறு ஒரு மனிதருக்கு நிகழ்ந்திருந்தால் அவரது அரசியல் செல்வாக்கு பலவீனமடைந்திருக்கும். ஆனால் முத்தையா செட்டியாரைப் பொறுத்தளவில் அவரது அரசியல் நீடிப்பானது பொது அமைப்புகளிலும் அரசியலிலும் பதவி வகிப்பதற்கு துணைநின்று அவரது பலமாகத் தொடர்ந்தன. 1928-32ஆம் ஆண்டுகளில் இந்தியன் வங்கியின் இயக்குநர் பதவியில் தொடங்கி 1962-82 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர் முடிய அவர் பொது நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சட்ட மன்றம் எனப் பல்வேறு அமைப்புகளில் இருந்துள்ளார். சென்னை மாநகராட்சியின் முதல் நகரத் தந்தை (1933-35), சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் (1933-37), கல்வி மற்றும் மருத்துவ அமைச்சர் (1936), அறநிலையத் துறை அமைச்சர் (1937), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் (1948-1982), பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினர் (1928-63) என்பன குறிப்பிடத்தக்கவை.

முத்தையா செட்டியாரைப் போன்று இத்தகைய பதவிகளை வகிக்காவிட்டாலும், நகரத்தார் சமூகத்தின் மேட்டிமையாளர்களாக வேறு சிலரும் திகழ்ந்தனர். இவர்களுள் கருமுத்து தியாகராயர் செட்டியார், ஆர்.எம்.அழகப்ப செட்டியார், சித.சிதம்பர செட்டியார், அ.மு.மு.முருகப்ப செட்டியார், அ.மு.மு.அருணாசலம் செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.

முடிவுரை

நவீன வங்கித் தொழிலின் முன்னோடிகளாக நகரத்தார் சமூகம் விளங்கியதையும் அதன் சாதிக் கட்டமைப்பு சார்ந்து உருவான அமைப்புகளையும் இந்நூல் அறிமுகம் செய்கிறது. வட்டித் தொழில், அதன் வளர்ச்சி நிலையான வங்கித் தொழில் தொடர்பாக அவர்கள் உருவாக்கிப் பயன்படுத்திய கலைச் சொற்களும், நிதி மூலதனத்தை அவர்கள் திரட்டிய முறையும், மண்சார்ந்த வணிகவியல் அறிவின் அடையாளங்களாய் அமைந்துள்ளன. இவற்றை மேலும் ஆய்வு செய்யத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

பயன்பட்ட இதர நூல்கள்

1.    அண்ணாமலை,பழ., 1994, நகரத்தார் பண்பாடும் பழக்கங்களும்.

2.    சேஷாத்ரி சர்மா, அ., 1999, நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு.

Pin It