மதுரை மாநகரம் தொடர்ந்து இரண்டா யிரத்து ஐநூறு ஆண்டுகட்கும் மேலாக வாழ்ந்தும், வளர்ந்தும் வரும் நகரம். பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட இந்நகரத்தின் சிறப்பு களையெல்லாம் எத்தனை நூல்களில் கண்டாலும் இன்னும் அறியப்படாத செய்திகள் ஏராளமாய் உள்ளன. அவற்றையெல்லாம் தொகுக்கும் முயற்சியின் வெளிப்பாடாக அமைந்துள்ளது தோழர். ந. பாண்டுரங்கன் எழுதியுள்ள இந்நூல் ‘அறியப்படாத மதுரை’. வரலாற்று நோக்கில் கால வரிசைப்படி மதுரையின் பெருமைகளைப் பல நூல்களில் காண்கிறோம். இந்நூல் அவற்றிலிருந்து மாறுபட்டு அண்மைக்காலத் தரவுகளைக் கொண்டு பலதரப்பட்ட செய்திகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. மொத்தம் பத்து தலைப்புகளில் முத்தான செய்திகளைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர்.

ariyapadatha-maduraiமுதல் கட்டுரையான ஆலவாயன் தம்பிரான் கோயில் இன்றைய மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் பற்றிய பல அரிய தகவல்களைத் தமிழில் தந்துள்ளார். இதற்குமுன் ஏ.வி. ஜெயச்சந்திரன் அவர்கள் ‘மதுரைக் கோயில் வளாகம்’ என்னும் தனது ஆங்கிலநூலில் மிக விரிவாகத் தந்துள்ள செய்திகளையெல்லாம் மனங்கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் பற்றியும் தவறாது குறிப்பிட்டு உள்ளார். (இக்கட்டுரையில் திருப்பரங்குன்றம், கூடலழகர் கோயில், கீழக்குயில் குடி, செட்டிப் பொடவு போன்ற பல செய்திகளும் சேர்க்கப் பட்டுள்ளன. கட்டுரைத் தலைப்புக்குத் தொடர்பு இல்லாத செய்திகளாக இவை உள்ளன. இவற்றை யெல்லாம் தனிக்கட்டுரையாக எழுதிச் சேர்க்கத் தக்கவை.)

அடுத்த கட்டுரை மதுரை நகரின் தெருக் களைப் பற்றி ஆராய்வதாக அமைந்துள்ளது. நூலாசிரியர் சொல்வது போல் ‘ஒவ்வொரு தெருவின் பெயரும் அதன் அர்த்தத்தை வெளிப் படுத்துகிறது.’ (பக். 56) சோத்துக்கடைத்தெரு, நூலிசைக்காரத்தெரு, அக்கசாலை, எழுத்தாணிக் காரத்தெரு, வார்ப்புக்கன்னார் தெரு, சுண்ணாம்புக் காரத்தெரு, எனத் தொழில்ரீதியாக அமைந்த தெருக்களை அலசி ஆராய்கிறார் நூலாசிரியர். புரம் என்னும் பின்னொட்டு கொண்ட ஊர்களைப் பொதுவாக வணிக நகரங்களாக வரலாற்றாசிரி யர்கள் வகைப்படுத்துவர். இந்நூலிலும் ஆழ்வார் புரம், ஜம்புரோபுரம், வில்லாபுரம், இஸ்மாயில் புரம், சம்மட்டிபுரம், ஜெய்கிந்த் புரம், அவனியா புரம் எனப்பல ‘புரங்’களைப் பற்றிய தகவல்கள் உள்ளன. என்றாலும் அவனியாபுரம் பற்றி நூலா சிரியர் கூறும் பெயர்க்காரணம் மேலும் ஆராயத் தக்கது. அவனிபசேகரன், அவனிநாராணன் என்னும் பாண்டியர் பெயரால் இவ்வூர் பெயர் பெற்றிருக்கலாம் என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்தாகும்.

தோப்புகள், சத்திரங்கள், பாளையங்கள், பொட்டல்கள், திடல்கள் என அனைத்துவகை ஆதாரங்களையும் திரட்டித்தந்துள்ள ஆசிரியரின் உழைப்பு இந்நூலில் பளிச்சிடுகிறது.

பெருந்தெய்வக் கோயில்கள் ஆரியமயப் படுத்தப்பட்டு, ஆகமநெறிக்குட்படுத்தப்பட்டு மேட்டுக்குடியினருக்கு மட்டுமே உரித்தாகிப் போன நிலையில் தமிழ்மக்களின் குலதெய்வ வழிபாடும், நாட்டார் தெய்வவழிபாடும் தொடர்ந்து வந்து உள்ளன. தமிழ்மக்கள் ஆதியில் வீரவழிபாட்டையும், தாய்த்தெய்வ வழிபாட்டையுமே போற்றிவந்தனர். ‘கல்லேபரவின் அல்லது நெல் உகுத்துப்பரவும் கடவுளும் இலவே’ என்பது சங்க இலக்கியம். அத்தகைய நடுகல் வழிபாட்டின் எச்சமாக விளங்கும் முனியாண்டி, கருப்பசாமி கோயில்களைப் பற்றியும் மாரியம்மன், செல்லத்தம்மன், காளியம்மன் எனும் தாய்த்தெய்வ வழிபாடு பற்றியும் விரிவாக இந்நூல் பேசுகிறது.

அடுத்த இரண்டு கட்டுரைகள் மதுரையில் கிறித்துவம் பெற்ற இடம் குறித்து ஆராய்கிறது. சீர்திருத்தக் கிருத்துவம், கத்தோலிக்க கிருத்துவம் என்னும் இருபெரும்பிரிவுகளாகச் செயல்பட்ட கிருத்தவமதம் மதுரை மக்களின் கல்வி வளர்ச்சியில் குறிப்பாக ஆங்கிலக் கல்விக்கு ஆற்றியுள்ள, ஆற்றி வரும் பணி அளவிடற்குரியது. திருமலை நாயக்கர் காலத்தில் முதன்முதலாக ராபர்ட் நொபிலி என்னும் ரோமானியப் பாதிரியார் மதுரையில் வாழ்ந்து தமிழ்நாட்டுப் பார்ப்பனரைப் போல பூநூல் அணிந்து, சந்தனம் பூசி, குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு, அசைவ உணவைத்துறந்து தமது சமய நெறியைப் பரப்பினார். அதற்காக அவர்மீது ஒழுங்கு நடவடிக்கையும் அவரது சமயத் தலைமை மேற்கொண்டது. அவ்வகையில் வேர் கொண்ட கிறித்தவத்தின் பல்வேறு பரிமாணங் களையும், கல்வி, மருத்துவத் தொண்டினையும் விரிவாக இந்நூலில் காண்கிறோம். ஜான் டீபிரிட்டோ எனும் அருளானந்தர், ஜோஸப் பெஸ்கி எனும் வீரமாமுனிவர் போன்றோரின் அர்ப்பணிப்பு பணிகளையும் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

இஸ்லாமியர்களின் செல்வாக்கு பற்றிய தனது கட்டுரையில் அஞ்சுவண்ணத்தார் யார் என்பதற் குரிய விடையாக இலங்கை அறிஞர் உணவங் கூறும் கருத்தை எடுத்தாண்டு தெளிவுபடுத்து கிறார். காஜிமார் பள்ளிவாசல், ராவுத்தன், மரக்காயர், லெப்பை என்ற சொற்களின் உட் பொருளை ஆராய்கிறார். ‘கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சூபி ஞானிகள் மதுரைபாண்டிய மன்னன் கூன்பாண்டியனின் வெக்கை நோயைத் தீர்த்து நின்றசீர் நெடுமாறனின் பேரன்பைப் பெற்றனர்’ (பக். 159) எனும் செய்தி வரலாற்றுக்கு முரணான தகவல் ஆகும். இதனைத் தவிர்த்திருக்க வேண்டும். கூன்பாண்டியன் எனும் நின்றசீர் நெடு மாறன் கி.பி. 7ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர். திருஞானசம்பந்தரின் சமகாலத்தவர் என்பதே வரலாறு.

நூற்பாலைத் தொழிலாளர்களின் அவலம் அடுத்த கட்டுரையில் படம்பிடித்துக் காட்டப் பட்டுள்ளது. கைப்பைகளின் பரிணாம வளர்ச்சி எப்படி இழுவை சூட்கேஸ் ஆனது என்பதை நல்ல நகைச்சுவை உணர்வோடு இக்கட்டுரையைத் தொடங்குகிறார் நூலாசிரியர். மதுரை ஹார்வி மில்லின் தொடக்கம், மகாலட்சுமி மில்லின் வருகை, அவற்றில் ஏற்பட்ட போராட்டங்கள் அவற்றைத் தீர்ப்பதில் பசும்பொன் உ. முத்துராம லிங்கத்தேவர், தோழர் ஜீவா ஆகியோரின் பங்களிப்பு பற்றியெல்லாம் பதிவுபடும் செய்திகள் இவற்றை இன்றைய தொழிலாளர் வர்க்கம் கற்க வேண்டிய பாடமாகும். இக்கட்டுரையில் ‘ரிலாக்ஸ் சர்ட்’ என்பது எப்படி அரைக்கை சிலாக் ஆனது என்பது போன்ற சுவையான தகவலும் உண்டு. (பக். 179)

மதுரையில் அமைந்திருந்த திரை அரங்கு களின் முந்திய வரலாறு அவற்றின் இன்றைய நிலை, சினிமா ரசிகர்களின் அரசியல் நடவடிக் கைகள், மதுரை மக்களின் மனவோட்டம் அறிந்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் என பல அருமையான தகவல் களை அள்ளித்தருகிறார் ஆசிரியர்.

மதுரையில் மையப் பகுதிகளில் இருந்த பூங்காக்கள் இன்று மாறி வணிக வளாகங்களாகப் பரிணமித்த அவலத்தைக் கண்டு ஆதங்கப்படு கிறார். பல கிணறுகள் இருந்த இடங்கள் இன்று காணாமல் போன சதியைக் கண்டு கலங்குகிறார்.

மொத்தத்தில் இந்நூல் மதுரையின் பல்வேறு முகங்களைப்படம் பிடித்துக்காட்டுகிறது. எளிமை யான, சரளமான நடை. எல்லோரும் படிக்கும் வகையில் சாமானியர்களும் வரலாற்றை அறிவதற் காக எழுதப்பட்ட இந்நூலை தமிழ் வாசகர்கள் வரவேற்பார்கள் என்பது உறுதி.

அறியப்படாத மதுரை

ஆசிரியர்: ந.பாண்டுரங்கன்

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர் சென்னை - 600 098.

விலை - 165/-

Pin It