முன்னுரை:

மதுரை மாநகரின் தெற்கில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் இன்று ஒரு நகர மாகவே வளர்ந்துவிட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இம்மலையில் முருகன் கோயில்மட்டும்தான் உள்ளதா? வேறு பிற வரலாற்றுச் சின்னங்கள் உள்ளனவா? கால மாற்றத்தில் இவ்வூர் எவ்வகையிலெல்லாம் வளர்ந்தும், பண்பாட்டு மாறுதல்கள் பெற்றும் திகழ்கிறது என்பது சுவையான செய்தியாகும்.

திருப்பரங்குன்றம் வரலாற்றை அறிவதற்குப் பல தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி அண்மைக் கால இலக்கியங்கள் வரை இவ்வூரின் வரலாற்றைப் பேசுகின்றன. அதுபோல் சங்ககாலக் கல்வெட்டு களாகக் கருதப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் தொடங்கி கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் சான்றுகள் இவ்வூர் பற்றிய பல சுவையான செய்திகளைத் தருகின்றன. அறுபடை வீடுகள் பற்றிப் பேசும் திருமுருகாற்றுப் படையும் முதல் படைவீடாகத் திருப்பரங்குன்றத் தையே சுட்டுகிறது. எண்பெருங்குன்றங்களை வரிசைப் படுத்தும் சமணப் பழம்பாடல் ஒன்றும் திருப்பரங் குன்றத்தையே முதல் சமணத் தலமாகக் குறிப்பிடு கிறது. அந்த வகையில் இவ்வூர் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த ஊராக வரலாறு நெடுகிலும் திகழ்ந் துள்ளது.

இலக்கியங்கள் காட்டும் பரங்குன்று :

காலத்தால் முற்பட்ட சங்க இலக்கியங்களான அகநானூறு, மதுரைக் காஞ்சி, கலித்தொகை போன்ற இலக்கியங்களும், சற்றே காலத்தால் பின்தங்கிய பரிபாடல், திருமுருகாற்றுப்படை, ஆகிய இலக் கியங்களும் இவ்வூரைப் பற்றிப்பேசும் தொன்மையான இலக்கியங்களாகும். பக்தி இயக்கத்தின் மூலவர் களான திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரப்பதிகங்கள் அடுத்த கட்டமாக இவ்வூரைப் பற்றிப் பேசும் இலக்கியங் களாகும். மாணிக்கவாசகரின் திருக்கோவையார், கல்லாடம், பெரிய புராணம் ஆகியவை 9 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை எழுந்த இலக்கியங்கள். இவை தவிர திருப்புகழ் முதலான பல புராணங்கள், கோவைகள், அந்தாதிகள், என இலக்கிய வகைகள் பலவும் இவ்வூரைப்பற்றிப் பாடுகின்றன.

அகநானூற்றில் மருதன் இளநாகனார் என்னும் புலவர் திருப்பரங்குன்றத்தை முருகன் குன்றம் (அகம் 59) என்றே பாடுகிறார். எருக்காட்டூர் தாயங் கண்ணனார் என்னும் சங்கப்புலவர் ‘ஒடியா விழவின் நெடியோன் குன்றம்’ (அகம் 149) எனப் பாடுகிறார். மதுரைக் காஞ்சியில் ‘தனிமழை பொழியும் தண் பரங்குன்றம்’ (மதுரைக்காஞ்சி. வரி. 264) எனத் திருப்பரங்குன்றம் சுட்டப்படுகிறது. பரிபாடலில் ஏழுபாடல்கள் பரங்குன்றின் முருகனைப் பற்றிய பாடல்களாக அமைந்துள்ளன. இதில் ஒரு பாடலில் திருப்பரங்குன்றத்தில் எழுத்து நிலை மண்டபம் ஒன்று இருந்ததாகவும், அங்குப் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் காணவந்த மதுரை மக்கள் இங்கிருந்த ரதி, மன்மதன், அகலிகை, கௌதமன், பூனை உருக்கொண்ட இந்திரன் ஆகியோரை அடையாளங் கண்டு வியந்தனர். மேற்சுட்டிய சங்கப்பாடல்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் முருகனுக்குரியது என்றே சான்று பகர்கின்றன. ஆனால் பின் வந்த தேவார மூவர் காலத்தில் சிவபெருமான் கோயிலாக இக்கோயிலும் மலையும் பேசப்படுவதைக் காணலாம்.

திருப்பரங்குன்றம் சிவன்கோயில்:

பரன் + குன்றம் என்பதே பரங்குன்றம் என் றானது பரன் என்பதை, சிவபெருமானுக்குரிய பெயராகவே கருதுவர். சங்க இலக்கியங்களில் பரங் குன்றம் என்றே சுட்டப்பட்டிருந்தாலும் இங்கு முருகன் உறைந்ததாகவே குறிப்புகள் உள்ளன. ஆனால் தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் இங்குள்ள சிவன்கோயிலே தலைமைக் கோயிலாகத் தலைமைக் கடவுளாகப் பேசப்பட்டுள்ளது.

‘அங்கமோராறும் அருமறை நான்கும்

 அருள்செய்து

பொங்கு வெண்ணூலும் பொடியணி

 மார்பில் பொலிவித்துத்

திங்களும் பாம்பும் திகழ்சடை

 வைத்தோன் தேன்மொழி

பங்கினன்மேய நன்னகர் போலும்

 பரங்குன்றே’

என்னும் ஞானசம்பந்தர் பாடல் அவர் வாழ்ந்த காலமான கி.பி.7ஆம் நூற்றாண்டில் சிவபெரு மான் இங்குத் தலைமைத் தெய்வமாகக் கருதப் பட்டுக் கோயில் கொண்டிருந்தார் என்பதையே காட்டுகிறது.

சுந்தரர் தேவாரத்தில் பரங்குன்றம் இரண் டாவது தலமாக வைத்துப் பாடப்பட்டுள்ளது. அவர் மதுரை மாநகரில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களுடனும் தங்கியிருந்து சுற்றி யுள்ள கோயில்களையெல்லாம் பாடியுள்ளார். சேரமான் பெருமாள் நாயனார், பாண்டிய மன்னன், அவன் மகளை மணந்து மதுரையில் தங்கியிருந்த சோழன் என்னும் மூவேந்தர்களே அவர்கள். இவர் களில் பாண்டிய, சோழ மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. சோழமன்னர்கள் அக் காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஆட்சி யாளர்களாக இல்லை. நின்றசீர் நெடுமாறனின் அரசி வளவர் கோன் பாவை மங்கையர்க்கரசி என அறிகிறோம். ஆனால் அப்போதைய வளவர் கோன் யார் என்று தெரியவில்லை. அது போலவே சுந்தரர் காலத்திய சோழ மன்னனும் யார் என்று அறியக்கூடவில்லை. சுந்தரர் காலத்தை சுமார் எட்டு (அ) ஒன்பதாம் நூற்றாண்டு என நாம் கருதினால் அப்போதைய பாண்டிய மன்னர்களாகப் பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் (கி.பி 768 - 815) அடுத்து அவனது மகன் ஸ்ரீமாற ஸ்ரீ வல்லபன் (கி.பி. 815 - 862) ஆகியோரையே குறிப்பிடவேண்டும். பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் காலத்தில்தான் குடை வரை கோயில் திருப்பரங்குன்றத்தில் முழுமை பெற்றுள்ளது என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமென்

                றமரர் பெருமானை ஆருரன் ஆரசி.

‘முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே

                மொழிந்தாறு மோர் நான்கு மோர்

 ஒன்றினையும்

படியாயிவை கற்று வல்லவ் வடியார்

                பரங்குன்றமே யமர மன்னடிக்கே

குடியாகி வானோர்க்கும் ஓர் கோவுமாகிக்

                குலவேந்தராய் விண்முழுதாள்பவரே.

என்னும் பாடலில் சுந்தரர் மூவேந்தர்களுடன் வணங்கிய செய்தி பெறப்படுகிறது. வேந்தர்களின் பெயர்கள் அறியப்படாவிட்டாலும் சேர, சோழ, பாண்டியர் என்னும் மும்மரபின் மன்னர்களும் திருப்பரங்குன்றம் கோவிலைச் சுந்தரரோடு வந்து வணங்கினர் என்பது உறுதிப்படுகிறது.

சங்ககாலத்தில் குறிஞ்சி நிலமாக, முருகன் குன்றமாகத் திகழ்ந்த பரங்குன்றம் அடுத்துவந்த பக்தி இயக்க காலத்தில சிவனுக்குரியதாக மாறி யுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் வைதீக சமயத்தின் கலப்பினால் தமிழ்த் தெய்வமான முருகன், சிவன் - பார்வதியின் மகனாக மாற்றப்பட்டுள்ளான்.

‘ஆல்கெழு கடவுள் புதல்வ மால்வரை

மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ

இழையணி சிறப்பின் பழையோள் குழவி’

எனத் திருமுருகாற்றுப்படை பாடுவதும் இவ்வைதீகக் கலப்பின் காரணமாகவே எனலாம். இவ்வாறாகத் தமிழ்க் கடவுள் முருகன் வைதீக மரபுக்குள் இணைக்கப் பட்டபின், தேவாரம் பாடப்பட்ட கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் தான் இங்கு, தற்போதுள்ள குடை வரை கோயில் குடைவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கி.பி.7-8ஆம் நூற்றாண்டுகளில்தான் பல்லவர், பாண்டிய நாட்டுப் பகுதிகளில் வைதீகம் சார்ந்த குடைவரைகள் தோற்றுவிக்கப்பட்டன. மிகத் தொன்மையான குடைவரையான பிள்ளையார் பட்டி குடைவரை வைதீகக் கடவுளாக அறிமுகம் ஆன விநாயகர்க்கு (கி.பி.500 - 550) எடுக்கப்பட்டது. மண்டகப்பட்டு குடைவரை சிவன், திருமால், நான் முகன் என மூவர்க்குமாக (கி.பி.600 - 630) எடுக்கப் பட்டது. அதனை ஒட்டியே மதுரைப் பகுதியிலும் குடைவரைகள் யாரால் எடுக்கப்பட்டது என்பதற்கு இங்குள்ள கல்வெட்டு ஒன்றே சான்றாக உள்ளது.

பராந்தக நெடுஞ்சடையனின் ஆறாம் ஆட்சி யாண்டைச் சேர்ந்த (கி.பி.773) இக்கல்வெட்டு, தரப்படுகிறது.

ஸ்ரீ கோமாறஞ் சடையற்கு

ராஜ்ய வருஷம் ஆறாவது செல்லா

நிற்ப மற்றவர்க்கு மஹா

சாமந்தனாகிய கரவந்த புராதி

வாசி வைத்யன் பாண்டி அமிர்

தமங்கல வரையரை இ

ன சாத்தங்கணபதி தி

ருந்து வித்தது திருக் கோஇ

லும் ஸ்ரீதடாகமும் இதனுள

றமுள்ளதும் மற்றவர்க்கு

தர்மபத்னி ஆகிய

நக்கங் கொற்றியாற் செயப்

பட்டது துர்காதேவி சோ

இலும் ஜேஷ்டை கோகிலும்.

இக்கல்வெட்டின் மூலம் பெறப்படும் செய்தி யாவது, மாறன் சடையன் என்னும் பராந்தக நெடுஞ் சடைய வர குணனின் ஆறாம் ஆட்சி ஆண்டில் (கி.பி.773ல்), இம்மன்னனின் படைத்தலைவன் சாத்தன் கணபதி இக்குடைவரையைத் திருத்துவித்தான். இவன் நெல்லை மாவட்டத்திலுள்ள ‘கரவந்தபுரம்’ என்னும் ஊரைச்சேர்ந்தவன். இக்கரவந்தபுரம் இன்று ‘உக்கிரன் கோட்டை’ என்று வழங்கப் படுகிறது. இவன் வைத்யகுலத்தைச் சேர்ந்தவன். இன்று லட்சுமி தீர்த்தம் என்று பெயர்பெற்றுள்ள குளத்தையும் இவனே அமைத்தான். அவனது மனைவி நக்கன் கொற்றி என்பவள் இம்மலையிலேயே துர்கா தேவி கோயிலும், ஜேஷ்டை கோயிலும் குடை வித்தாள். இவ்விரண்டு கோயில்களும், தற்போது மூடிவைக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டில் ‘திருத்துவித்தது’ என்ற ஒரு சொல் இடம்பெற்றுள்ளதைக் கொண்டு ஏற்கெனவே வணங்கப்பட்டுவந்த அநேகமாக முருகன் உறைவிட மாக வணங்கப்பட்டுவந்த இயற்கையான குகையை வரகுணன் முழுமைப்படுத்தினான் என்று கருத வாய்ப்புள்ளது. இவ்வாறு திருத்துவிக்கும் போது அப்போது வைதீகமாக்கப்பட்ட சமய நெறிகளின் படி சிவன், திருமால், முருகன், கணபதி, துர்க்கை என்ற ஐந்து தெய்வங்களுக்குமான கோயிலாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஐந்து தெய்வங்களை உள்ளடக்கியதாகப் பஞ்சாயதக் கோட்பாட்டின் அடிப்படையில் இக்கோயில் உரு வாக்கப்பட்டுள்ளது. இத்தெய்வங்களுடன் சூரியன் மட்டும் சேர்க்கப்பட்டுச் சண்மதக்கோட்பாடு உரு வாக்கப்பட்டு அதனைத்திருச்சியில் உள்ள பாண்டி யார் குடைவரையில் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். இவ்விதம் கலைச்சின்னங்களில் பலவித திரு உரு வங்கள் இடம்பெறுவதற்கு சமயக் கோட்பாடுகள் காரணமாக இருந்தன என்பதற்குத் திருப்பரங் குன்றம் ஒரு சிறந்த சான்றாக அமைகிறது.

இக்கோயிலில் நாம் காணும் இன்னொரு முக்கிய செய்தி ஜேஷ்டை வழிபாடாகும். தமிழகத்தில் குறிப்பாகப் பாண்டிய நாட்டு முற்கால குடை வரைகளில் விநாயகரும், ஜேஷ்டையும் இடம் பெறுவதும் உண்டு. ஜேஷ்டை வழிபாடு இத் தொடக்க காலத்தில் தாய்த்தெய்வமாக, வளமை வழிபாட்டின் வடிவமாகக் கருதப்பட்டுள்ளது. பிற்காலத்தில் திருமாலின் மனைவியாக திருமகள் ஏற்கப்பட்டபோது அவளே செல்வத்திற்குரிய தெய்வமாகக் கருதப்பட்டதால் சேட்டை வழிபாடு மங்கத் தொடங்கியது. அதற்கு ஒப்ப ஆழ்வார் பாடல்களிலும் இச்செய்தி படம்பிடித்துக் காட்டப் படுகிறது.

‘செய்ய கமலத் திருவுக்கு முன் பிறந்ததையல் உறவு தவிர்த்தோமே’ என்னும் நந்திக்கலம்பக வரியும் (பாடல் 112),

‘கேட்டீரே நம்பிமார்கள்

 கருடவாகனனும் நிற்கச்

சேட்டை தன் மடியகத்துச் செல்வம்

 பார்த்திருக்கின்றீரே’

(தொண்டரடிப் பொடியாழ்வார்)

என்ற இலக்கியச் சான்றுகள், வைணவத்தின் எழுச்சியின் காரணமாக சேட்டை வழிபாடு மறைந்தது என்பதைக் காட்டுகின்றன.

பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளில் (கி.பி. 12-13) திருப்பரங்குன்றம் உடைய நாயனார் என்று சிவபெருமானே சுட்டப்படுவதால் இக்கோயில் தொடர்ந்து சிவன் கோயிலாகவே வழிபடப்பட்டு வருகிறது. அருணகிரி நாதரின் வருகைக்குப்பின், முருக வழிபாட்டின் ஏற்றம் காரணமாக இவ்வூரில் முருக வழிபாடே மேலோங்கியுள்ளது. அமைப்பு வகையில் சிவன் கோயிலாக இருந்தாலும், வழி பாட்டு நெறியில் முருகவணக்கமே சிறப்பிடம் பெறு கிறது.

பிற்காலப் பாண்டியர்களால் (கி.பி. 12-13) அம்மனுக்கென்று தனியாகக் கட்டுமானக் கோயில் ஒன்று கட்டப்பட்டது. திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார் கோயில் எனப்படும். இத்திருக் கோயிலில் பல பாண்டிய மன்னர்களுடைய கல்வெட்டுகள் உள்ளன. நாயக்க மன்னர்கள் பல மண்டபங் களையும், சிற்றாலயங்களையும், கோபுரங்களையும் கட்டியுள்ளனர். மதுரையில் நாயக்கர் ஆட்சியை நிலைநாட்டிய விஸ்வநாத நாயக்கர் பேரனும், கிருஷ்ணப்ப நாயக்கரின் குமாரருமான வீரப்ப நாயக்கர் இன்றுள்ள பெரிய கோபுரத்தைக் கட்டி யுள்ளார்.

‘ஸகாப்தம் ‘1505 இன்மேல்

செல்லா நின்ற சுபானு

வருசம் கார்த்திகை 12 தேதி விசு

வநாத நாயக்கர் கிருஷ்ணப்ப

நாயக்கரய்யன் குமாரர்

வீரப்ப நாயக்க ரய்யன்

கட்டிவித்த கோபுரமும் திரு

மதிளும் உ’

என்ற கல்வெட்டு கோபுரத்தூணில் வலப்பக்கத்தில் உள்ளது. இது கொண்டு இக்கோபுரம் கி.பி. 1583இல் கட்டப்பட்டது என்பது உறுதியாகிறது. இதே ஆண்டில்தான் இதே வீரப்ப நாயக்கரால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கம்பத்தடி மண்டபமும் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் ஆட்சிக்கு முன்பாக ஆட்சி செய்த ஆறு நாயக்க மன்னர் களும் விஜயநகர மன்னர்களின் சிற்றரசர்களாகவே மதுரையை ஆட்சி செய்தனர். இதனைக் குறிக்கும் வகையில் ஒரு சான்று திருப்பரங்குன்றம் கோயில் கொடி மரத்தில் உள்ளது. கொடி மரத்தின் ஒரு புறம் விஜயநகர அரசு சின்னமாக வராகமும், வாளும், சூரியசந்திரருடன் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் மதுரை நாயக்கர் அரச சின்னமாக ஒரு மரத்தின் கீழ் படுத்திருக்கும் நந்தியும், குறுவாளும், சூரிய, சந்திரருடன் காட்டப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர்தான் தன்னாட்சி செலுத்தியவர். அவர் இக் கோயிலில் சொக்கநாதர் ஆலயம், பழனி ஆண்டவர் ஆலயம் என இரண்டு கோயில்களைக் கட்டியுள்ளார். அவருடைய உருவச் சிலைகளும் இங்குள்ளன. மங்கம்மாள் காலத்தில் இக்கோயிலின் இன்றுள்ள நுழைவாயில் மண்டபம் கட்டப்பட்டது. ஒரு தூணில் மங்கம்மாளின் சிற்பம் எதிர்த்தூணில் உள்ள முருகன், தெய்வயானைத் திருமணக் காட்சியைக் காண்பதாக வடிக்கப்பட்டுள்ளது கொண்டு இதனை உறுதிப் படுத்தலாம்.

திருப்பரங்குன்றத்தில் சாமானியர்களின் தொண்டு:

அரசர்களும், அவர்தம் தேவியரும் மட்டுமே திருப்பரங்குன்றம் கோயிலின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் பங்காற்றினர் என்பதில்லை. மாறாக, இங்குவாழ்ந்த அடித்தளமக்களும் இக் கோயிலைக் காப்பதிலும், வழிபடுவதிலும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக, ஓரிரண்டு செய்திகள் மட்டும் இங்கே தரப்படுகின்றன. கிபி. 1792 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. மதுரை மாநகரம் வெள்ளையர் ஆட்சிக்குட்பட்ட போது திருப்பரங்குன்றம் கோயிலையும் அவர்கள் ஆக்கிர மித்தனர். அதனைத் தடுத்து ஒரு கோயில் ஊழியர் ‘குட்டி’ என்பவர் கோபுரத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வறப் போரின் காரணமாக ஆங்கிலேயர் படை பின் வாங்கிச் சென்றது என்று ஒருகல்வெட்டு கூறுகிறது.

‘வெள்ளைக்காரர் பாளையம் வந்து இறங்கி சொக்கநாதர் கோயிலையும் இடித்து, பழனி யாண்டவர் கோவிலையும் இடித்து ஊரையும் ஒப்புக்கொண்டு, ஆஸ்தான மண்டபங் கைக்கொண்டு அட்சகோபுர வாசல் கதவையும் வெட்டி, கலியாண மண்டபத்துக்கு வருகிற பக்குவத்தில், திருவிழாவும் நின்று தலமும் ஊரும் எடுபட்டுப் போராதாயிருக்கிறது என்று... வயிராவி முத்துக்கருப்பன் மகன் குட்டியைக் கோபுரத்தில் ஏறிவிழச் சொல்லி, அவன் விழுந்து பாளையம் வாங்கிப்போனபடியினாலே, அவனுக்கு ரத்தக் காணிக்கையாகப் பட்டயம் எழுதிக் கொடுத் தோம்.’

இக்கல்வெட்டின் மூலம் கோயில் ஊழியம் செய்யும் கடை நிலைப் பணியாளர் கோயிலைக் காப்பதற்காகத் தன்னுயிரை ஈகம் செய்துள்ளமை அறியப்படும். பிற நிர்வாகிகள் பலர் இருந்தும் யாரும் உயிர்விடத் துணியவில்லை. வயிராசி மகன் குட்டிதான் வைராக்யனாகவும் திகழ்ந்துள்ளான்.

இதுபோல் கோயில் ஆடல்மகளிர்களும் தம் பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பதற்கு ஒரு சான்று. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 17 ஆம் ஆண்டில் (கி.பி.1233) ஒரு தேவரடியாள் பெண்ணுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டது என்ற செய்தி ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. எனவே அக்காலம் முதல் அண்மைக்காலம் வரை இங்கு தேவரடியாட்கள் பணியாற்றியிருந்தனர். அவர்களுள் ஒரு பெண், தான் இறந்த பின் தன் சொத்துக்களை வைத்து கோயிலில் ஓர் அறப்பணி செய்யவேண்டும் எனக் கல்வெட்டில் வெட்டிவைத்துள்ளாள்.

‘உ தாது வருசம் மாசி மாதம் 30 திருப்பரங்

 குன்றத்திலிருக்கும் தாசி

பொன்னம்மாள் மகள் பாப்பாள் யிறந்து

 போற காலத்தில் தன்னுடைய

சொத்துக்களை வித்து தனக்கு

 சமாதிகட்டும்படிக்கும் துவாதேசிகட்டளை

நடத்தும் படிக்கும் அதியான சேனாபதி

 அய்யர் குமாரசாமியா

பிள்ளை யிடத்தில் சொன்னபடிக்கி

 நடத்தியிருக்கிறது உ.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள சமாதி அண்மைக்காலம் வரை திருப்பரங்குன்றம் அனைத்துமகளிர் காவல் நிலையம் அருகில் இருந்தது. இக்கல்வெட்டு 2006 ஆம் ஆண்டில் இக்கட்டுரை ஆசிரியரால் வாசிக்கப் பட்டு அப்போதைய காப்பாட்சியர் சாம் சத்யராஜ் அவர்களால் ஆவணம் இதழ் 17இல் வெளியிடப் பட்டது. தற்போது மேம்பாலம் கட்டும் பணிக்காக இச்சமாதி முற்றாக இடிக்கப்பட்டுவிட்டது. கல் வெட்டும் காணப்படவில்லை. இதன்மூலம் நாம் பெறும் செய்தியாவது, திருப்பரங்குன்றம் கோயில் வளர்ச்சிப்பணிகளில் சாமான்ய மக்களும் பங்காற்றி யுள்ளனர் என்பதே. பல்வேறு சமூகத்தவரும் பல சத்திரங்களும், மண்டபங்களும் அமைத்து விழாக் காலங்களில் அன்னதானம் செய்து வருவதும் ஒருவகையில் மக்கள் சேவையே.

பரங்குன்றில் சமணம்:

சங்ககாலத்திலேயே மதுரைப்பகுதியில் சமண சமயம் செல்வாக்குப் பெற்றிருந்தது. திருப்பரங் குன்றத்திலும் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே சமணத்துறவிகள் தங்கியிருந்தனர் என்பதற்கு அடை யாளமாக அவர்களது கற்படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மூன்று கல்வெட்டுகள் இங்குள்ளன.

‘அந்துவன் கொடுபிதவன்’

‘எருகாடுர் இழகுடும்பிகன் போலாலயன்

செய்தான்

ஆய்சயன நெடுசாதன்’

‘மாரயது கயம’

இம்மூன்றும் இங்குள்ள குகையில் கற்படுக்கை களின் மீது வெட்டப்பட்டுள்ளன. இக்குகை இன்றைய புகைவண்டி நிலையத்தின் கிழக்கே (எதிரில்) உள்ள மலைப்பாறையில் உள்ளது. இச்சமணச் சான்றுகளின் காலத்திற்குப் பின்னர் பக்தி இயக்கக் காலத்தில் சமண சமயத்திற்குச் சற்றே பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் அத்தற்காலிகப் பின்னடைவி லிருந்து மீண்டு கி.பி.9-10 ஆம் நூற்றாண்டுகளில் சமணம் மீண்டும் தனது பழைமையான நிலைகளில் மையங் கொண்டது. இக்காலகட்டத்தில் அச்சணந்தி என்னும் சமணத் துறவி நாடெங்கும் அலைந்து திரிந்து சமண மறுமலர்ச்சிக்கு உழைத்தார். இந் நேரத்தில் சமண சமயவாதிகளின் சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. உருவ வழிபாடுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். பெண்களுக்கும் சமயத்தில் பங்களிப்பைக் கொடுத்தனர். நுண்கலைகளிலும் நாட்டம் செலுத்தினர். பல புதிய உறைவிடப் பள்ளி களை அமைத்து மக்களிடையே தொண்டாற்றினர்.

ஆவியூர்க்கு அருகிலுள்ள குறண்டி என்னும் ஊரில் திருக்காட்டாம்பள்ளி என்ற ஒரு பள்ளி சிறப்பாகச் செயல்பட்டது. பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளி என அது பெயர் பெற்றிருந்தது. இப்பள்ளியின் ஆசிரியர்களும், மாணாக்கர்களும் மதுரையைச் சுற்றியிருந்த பல பள்ளிகளோடும் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் பல இடங் களுக்கும் சென்று சமணத் திருமேனிகளைப் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கி வழிபடச் செய்தனர். திருப்பரங்குன்றம், கிழக்குயில் குடி, முத்துப்பட்டி, குப்பல்நத்தம், ஐவர் மலை போன்ற பல ஊர்களில் இவர்களது பணிகள் பற்றிய கல் வெட்டுகள் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலின் பின்புறம் ஓர் இயற்கை யான சுனை உள்ளது. அங்குள்ள பாறையில் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று மகாவீரர் உருவம், மற்றொன்று பார்சுவநாதர் உருவம். இவற்றின் கீழ் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று,

‘வெண்புநாட்டுத் திருக்குறண்டி

அனந்த வீர்யப்பணி’

அனந்த வீர்யன் என்னும் ஒரு சமண அடியவர் இங்குள்ள மகாவீரர் சிற்பத்தை அமைத்துள்ளார். இதன் அருகில் உள்ள பார்சுவநாதர் சிற்பத்தைச் செதுக்கியவர் பற்றிய குறிப்பு இன்னொரு கல்வெட்டில் உள்ளது.

‘ஸ்வஸ்திஸ்ரீ சிவிகை ஏறினபடையர்

நீலனாஇன இளந்தம்மடிகள்

மாணாக்கன் வாணன் பலதேவன்

செவ்விச்ச இப்பிரதிமை’

என்பது இதன் வாசகம். இக்கல்வெட்டுகள் கிபி.9-10 ஆம் நூற்றாண்டுகாலத்தைச் சேர்ந்தவை. இதே காலத்தில் மலை மேல் உள்ள காசிவிசுவநாதர் ஆலயத்தின் அருகில் உள்ள உயரமான பாறை யிலும் இரண்டு சமணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அதன்கீழ் கல்வெட்டுகளும் உள்ளன.

உமையாண்டார் கோயில்:

திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. இங்கும் ஒரு குடைவரைகோயில் கி.பி. 8-9ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்டுள்ளது. யாரால் எடுக்கப்பட்டது என் பதற்கான சான்றுகள் இல்லை என்றாலும் கோயிலின் அமைப்பைக் கொண்டு காலங்கணிக்கப்படுகிறது. இக் கோயில் சமணக் கோயிலாக இருக்கவேண்டும் என்பதற்கான எச்சங்களும் உள்ளன. கிழக்கு நோக்கிய ஒரு கருவறையும், அதனை அடுத்த முன் மண்டபமும் கொண்ட இக்கோயில் தெற்குப்பார்த்து அமைந் துள்ளது. கருவறையில் தற்போது நந்தியின் முன் புறம் நிற்கும் அர்த்தநாரி சிற்பமே உள்ளது. ஆனால் இச்சிற்பத்தின் தலைப்பகுதியில் அசோக மரத்தின் கிளைகள் காட்டப்பட்டுள்ளன. சைவக்கோயில் களில் இவ்வாறு காணப்படுவதில்லை. எனவே தொடக்கத்தில் அசோகின் கீழ் அமர்ந்த ஓர் சமணத் துறவி அல்லது மகாவீரர் சிற்பம் இங்கு இருந் திருக்கலாம். பின்னர் இது சைவக் கோயிலாக மாற்றம் பெற்றபோது இதனை அர்த்தநாரியாக மாற்றிவிட்டனர் எனத் தோன்றுகிறது.

இதற்கு ஆதரமாக எதிர் சுவரில் உள்ள மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டு ஒன்று (கிபி. 1233) இக் கோவில் பிரசன்னதேவர் என்னும் சைவ அடியாரின் வேண்டுகோளின்படி சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்னும் பெயரில் சிவன் கோயிலாக மாற்றம் பெற்றது என்ற செய்தியைத் தருகிறது. எனவே சமணக் கோயில் சைவக் கோயிலாக மாறியது என நம்பு வதற்கும் இடமுள்ளது. அம்மாற்றத்தின் போது நடராசர், சிவகாமி அம்மை, முருகன், வள்ளி தேவ சேனா, விநாயகர் உருவங்களும் செதுக்கப்பட்டு உள்ளன. வெளிப்புறப்பாறையில் தேவாரமூவர், பைரவர் சிற்பங்களும் உள்ளன. துறவியர் சிற்பங் களும் இடப்பக்கம் உள்ளன. இவர்களில் ஒருவர் பிரசன்ன தேவராக இருக்கலாம்.

இக்கோயிலும் பின்னாளில் சிதைக்கப்பட்டு உள்ளது. குடைவரைத் தூண்கள் நான்கும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. எக்காலத்தில், யாரால் இந்த அழிவு நேர்ந்தது என்று கூறுவதற்கில்லை.

திருப்பரங்குன்றத்தில் இஸ்லாம்:

திருப்பரங்குன்றம் மலையில் மதுரையை ஆட்சி செய்த சுல்தானிய மரபின் கடைசி மன்னன் சிக்கந்தர் ஷாவின் சமாதி இருப்பதாகக் கூறப்படு கிறது. அச்சமாதிக்குச் சென்று இஸ்லாமியர்கள் அவ்வப்போது வழிபாடு செய்வதுண்டு.

முடிவுரை:

சங்ககாலத்தில் அடர்ந்த மலையாக, குறிஞ்சி மக்கள் வாழ்ந்த பகுதி திருப்பரங்குன்றம். அவர் களின் தலைமைக்கடவுள் முருகன் உறைந்த குன்ற மாக இருந்தது. பின்னர் வைதீகத்தின் செல்வாக் கால் பரங்குன்றம் ஆனது. சிவன் தலைமைத் தெய்வமாக்கப்பட்டுத் தேவாரப்பாடல்களும், அதனையொட்டி குடைவரைகளும் உருவாக்கப் பட்டன. சங்காலத்திலேயே இம்மலையின் ஒரு பகுதியில் சமணர்களும் வாழ்ந்துள்ளனர். கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை அவர்களும் செல்வாக்குடன் விளங்கியுள்ளனர். 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இஸ்லாமியத் தொடர்பும் இம்மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில், சமய நல்லிணக்கத்தின் சான்றாகத் திருப்பரங்குன்றம் திகழ்கிறது.

பயன்பட்ட நூல்கள்:

1.            Early Tamil Eprigraphy – Iravatham Mahadevan, Crea, Chennai - 2003.

2.            Dr.Devakhanjari, Madurai Through the Ages, Madurai. 2004.

3.            செ. போசு - திருப்பரங்குன்றம். தொல்லியல் துறைவெளியீடு சென்னை- 1981

4.  ஆவணம் இதழ்கள் 17 & 23

(உங்கள் நூலகம் செப்டம்பர் 2012 இதழில் வெளியானது)

Pin It