m.s.s.pandian 600தமிழ் அறிவுச்சூழலில் நன்கு அறிமுகமான ஒரு ஆளுமை எம்.எஸ்.எஸ்.பாண்டியன். வரலாற்றியல் எழுத்தை அடித்தள மக்கள் சார்ந்து எழுதும் ஒரு சமூக ஆய்வியல் அறிஞராக செயல்பட்டவர். பொருளியல் மற்றும் பண்பாட்டுத்துறை ஆய்வு அவருக்கு மிக நெருக்கமாக இருந்தது. திராவிட இயக்க வரலாற்றியல் நோக்கையும், தேசிய இனங்களின் அடையாளங்கள் குறித்தும் சாதிய ஒடுக்குமுறை சிக்கல்களையும் தனது ஆய்வியல் எழுத்தில் விரிவாக விவாதித்தவர்.

தமிழ் அறிவுச்சூழல் தாண்டி ஆங்கில அறிவுச் சூழலுக்கு பெரியாரையும், சுயமரியாதை சார்ந்த கருத்தியல் விளக்கங்களையும் எடுத்துச் சென்றதில் மிக முக்கியப் பங்கு அவருக்குண்டு. அண்மைக்காலத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையையும், அவர்களின் நியாயங் களையும், வலிகளையும், தமிழ் அல்லாத பிற இந்திய மொழியாளர்களுக்கு கொண்டு சென்றதிலும் எம்.எஸ்.எஸ். பாண்டியனுக்கு முக்கியப் பொறுப்பு உண்டு.

பிராமணர், பிராமணர் அல்லாதார் இயக்க பிரச்சினைகளினூடே விவாதங்களை உருவாக்கிய "Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present" என்ற நூலை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

தமிழக சினிமா ஊடகத்தின் மூலம் தனக்கான ஒரு பிம்ப அரசியலை வெற்றிகரமாக உருவாக்கிக்கொண்ட, மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். குறித்து அவர் எழுதிய இமேஜ்ட்ராப் (Image Trap) என்ற புத்தகம் ஊடக அரசியலின் நுட்பமான தளங்களையும், வெகு மக்கள் மத்தியில் கட்டமைக்கப்படும் உளவியல் சார்ந்த அதிகார ஒப்புதல்களையும் விவாதங்களாக முன்வைத்தது.

இந்திய அளவிலான எழுத்து ஊடகத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் ‘எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’ இதழில் 1980களிலிருந்தே ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் பழக்கம் உள்ளவராக இருந்தார்.

தலித்கள் மற்றும் இடைநிலைச் சாதிகளின் மோதல்கள் குறித்து எம்.எஸ்.எஸ்.பாண்டியன் முன் வைத்த அணுகுமுறையைப் பற்றி பெரியாரிய-மார்க்ஸிய ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“தமிழகத்தில் தலித்துகள் மீது பிற்படுத்தப்பட்ட மக்கள் நடத்தும் தாக்குதல்களை, இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கமாகக் காணாமல், அந்த இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கம் சரிந்து வருவதற்கான அடையாள மாகவே அதைக் காண வேண்டும் என்ற புதிய பார்வையை அவர் அண்மையில் முன்வைத்திருந்தார்” என்கிறார்.

முனைவர் டி.தருமராஜன், ‘எம்.எஸ்.எஸ். பாண்டியனின் ஆய்வியல் எழுத்து’ குறித்து இவ்வாறு விவாதிக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழக அரசியலில் ‘பிராமணர்’, ‘பிராமணரல்லாதோர்’ என்ற அடையாள உருவாக்கங்கள் நடைபெற்ற விதத்தை ஆய்வு செய்ய விரும்பிய பாண்டியன், ஜீனியாலஜி (கால வழி மரபு) மற்றும் சபால்டர்ன் (அடித்தள மக்கள்) ஆய்வு முறையியல்களைக் கடைபிடித்திருப்பதாய்க் கூறு கின்றார். இவற்றுள், மிஷல் ஃபூக்கோ முன்மொழிந்த ஜீனியாலஜி ஆய்வையே தமிழ்ச் சமூகத்தின் மீது தான் செய்து பார்ப்பதாக அட்டையிலேயே அறிவித்திருக் கிறார்.

திராவிட அரசியல் குறித்துக் காத்திரமான ஆய்வு களோ படைப்புகளோ இதுவரையில் செய்யப்பட்ட தில்லை. குறிப்பாகச் சமூக அறிவியல் நோக்கில் எழுதப் பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கைகூடச் சொற்பம் தான்.

மேலும், பின்னை அமைப்பியல்வாதச் சிந்தனை யாளரான மிஷல் ஃபூக்கோ, ழாக் தெரிதா, ழாக் லெக்கன் போன்றோரின் பெயர்கள்தான் தமிழகத்தில் உதிர்க்கப் பட்டிருக்கின்றனவே ஒழிய, அவர்களது அணுகுமுறை களைப் பயன்படுத்தித் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வெளியை எவரும் ஆய்விற்கு உட்படுத்தியதில்லை.

அதேபோல, கடந்த பத்திருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமான பேசுபொருளாக இருந்து வரும் சபால்டர்ன் ஆய்வுகள் முழுமையான தன்மையில் தமிழ்ச் சமூகம் சார்ந்து செய்யப்படவில்லை.

இதுபோன்றதொரு சூழலில், மேற்கூறிய அத்தனை வெற்றிடங்களையும் இட்டு நிரப்பிவிடக்கூடிய சாத்தியங்களைக் கொண் டிருக்கும் நூல் போல அமைந்திருக்கும் பாண்டியனின் புத்தகம் என்ன சொல்கிறது? என விவாதிக்கும் முனைவர் டி.தருமராஜன், இந்த நூலில் பாண்டியன் முன் வைத்துள்ள கருத்துகளில் மூன்று விஷயங்கள் விவாதத் திற்குரியவை என்று நினைக்கிறேன் என்கிறார்.

ஒன்று, ‘பிராமணர்’ அடையாளம் உருவாக்கப்பட்ட விதம், அதற்கான சூழல் என்று அவர் கற்பனை செய்வது. இரண்டு, அயோத்திதாசர் - மறைமலையடிகள் பற்றிய அவரது பார்வையின் போதாமைகள். குறிப்பாக, அயோத்திதாசரை அவர் தவறாகச் சித்தரிக்க முயல்வது. மூன்றாவது, திராவிட அரசியலைச் சபால்டர்ன் அரசியலாக அவர் சித்தரிப்பதிலுள்ள கோளாறுகள் என்பதான மதிப்பீட்டை தனது நீள்ஆய்வின் மூலம் நிறுவுகிறார்.

அண்மைக்காலத்தில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ‘எக்கனாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழ்களில் எழுதிய, தமிழகத்தில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டம் தொடர்பான விவாதங்கள்(Denying Difference), தர்மபுரி கல்வரம் தொடர்பான மேலாண்மை சாதிய அரசியல் (Slipping Hegemony of Intermediate Castes), என்சிஇ ஆர்டி பாடநூலில் நாடார் சமூகம் குறித்த பிரச்சினை (A History of Nadar Censorship), தமிழ் மதசார்பின்மையும் சாதி அரசியலும் (Tamil Secularism and Caste Politics), திராவிட அரசியலும் முஸ்லிம்களும் (Dravidian Politics and Muslims)என்பதான கட்டுரைகள் அவரது எழுத்துலகில் நிகழ்ந்த சமகால நிகழ்வின் உடனடி எதிர்வினை கருத்துலகங்களாகக் கருதலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன், நாகர்கோவில் ஸ்காட்கிறிஸ்டியன் கல்லூரியில் 1978ஆம் ஆண்டு பி.ஏ. முடித்து சென்னை பல்கலைக்கழகத்தில் 1980ஆம் ஆண்டு எம்.ஏ. முடித்தார்.

பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1987ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற எம்.எஸ்.எஸ். பாண்டியன், சென்னை எம்.ஐ.டி.எஸ் சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தில் (Madras Institute of Development Studies) ஆய்வாளராகப் பணியாற்றினார். 2009ஆம் ஆண்டு முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

ஆக்ஸ்போர்டு, ஹவாய், மின்னிசோட்டா உள்ளிட்ட பல மேல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்த அவர் சமீபத்தில் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். ஐம்பத்து ஏழு வயதான எம்.எஸ்.எஸ்.பாண்டியன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) சேர்க்கப்பட்டு 10-11-2014 திங்கள் மாலை காலமானார். அவருக்கு மனைவி முனைவர் ஆனந்தியும், ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர். ஒரு கல்விப் புலம் சார்ந்த அறிவுலக சிந்தனையாளனின் பிரிதலுக்கு நாம் ஆழ்ந்த வருத்தங்களைப் பகிர்ந்து கொள்வோம்.

Pin It