carl marx library 600பல அறிஞர்களின் ஞானச் சிந்தனை, உருவ மாகவும், கலைக் கோயில்களாகவும் நூலகங்கள் உள்ளன. மனித சிந்தனைகளைச் சீர் செய்து கொள்ளவும், சரிபார்த்துக் கொள்ள உதவும் கருவியாகவும் களமாகவும் இருப்பவை நூல்களே. நூலகங்கள் வெறும் புத்தகக் கிடங்குகளல்ல. அவை கருத்துக் கருவூலங்கள், கலைக்கண்ணாடிகள். வாழ்வைச் செம்மைப்படுத்தும் சிற்பிகள். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிஞர் அண்ணா அவர்கள் வீடுகளில் புத்தகச் சாலைகள் அமைக்க வேண்டும் என்று சொன்னார். பல வீடுகளில் இராமாயணம், மகாபாரதம், தேவாரம், திரு வாசகம் போன்ற பக்தி நூல்கள் இருப்பது என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் குறைந்தபட்சம் திருக்குறளாவது இருக்க வேண்டும்.

நூல் நிலையம் என்பதைக் குறிக்கப் பயன் படும் லைப்ரரி என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வேறு சொல் “லிபர்” என்ற இலத்தீன் மொழிச் சொல் லாகும். அரசு ஆவணங்கள், சாசனங்கள் இவை பாதுகாத்து வைக்கப்படும் இடம் லிப்பேரியா என்றும் அழைக்கப்படுகிறது. ‘ரோஜாவை எந்த பெயர் இட்டு அழைத்தால் என்ன’ என்றார் ஷேக்ஸ்பியர். அதுபோல் நூல் நிலையமும். பண்டைய இலக்கியங்களில் கல்லிலும், களி மண்ணிலும் செப்பேடுகளிலும் பதிக்கப்பட்டன. அவை அதிகமாகப் பனை ஒலைகளிலும் மடல் களிலும் வரையப்பட்டன. மனிதன் காலடிப்பட்ட இடம் அவன் வழித்தடம் பதித்த பகுதி சுவடு என்று சுட்டப்படுவதைப் போல் அவன் சிந்தனைத் தடம் சுவடியாயிற்று.

தஞ்சையை ஆண்ட மாமன்னன் இராசராச சோழன் தில்லை கோயிலில் மறைந்து கிடந்த பக்தி திருமுறை நூல்களை நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு திருமுறையைத் தொகுக்கச் செய்தார். இதுவே முதல் தமிழ்ச்சுவடியாகும். அறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை வானொலியில் பேசும்போது,“அறியாமைஇருளகற்றும் ஒளிவிளக்குகள் நூல்கள்” என்றும், “சுபநிகழ்ச்சிகள், திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளில் அன்பளிப்பாக நூல்கள் வழங்கப்பட்டால் மனிதவாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்” என்றும் பேசினார்.

சோவியத் மக்கள் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் யுகப் புரட்சியை ஏற்படுத்தியவர் மாவீரன் லெனின். அவர் 1902ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மியூசியப் பொறுப்பாளருக்கு ரஷ்யாவில் இருந்து விவசாய பிரச்சினைகளைப் பற்றி ஆராய வந்து இருப்ப தாகவும், தனக்கு அந்த மியூசிய வாசக சாலையில் படிக்க அனுமதி சீட்டு வழங்கக் கோரி எழுதிய கடிதம் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகும், பிரிட்டன், பிரான்சு, ஜெர்மன், சுவீடன், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள நூலகங் களில் லெனின் வாசகராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும்.

பல நாடுகளில் கல்வி புகட்டும் நாற்றாங் கால்களாக இருப்பவை நூலகங்களே. இந்த வகையில்

“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தலும்

ஆலயம் பதினாயிரம் நாட்டலும்

அன்னயாவினும் புண்ணியங்கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

- என்றான் பாரதி

1931-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு நடமாடும் நூலகத்தை, நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் திறந்து வைத்தார். அப்போது மன்னார்குடியை சுற்றியுள்ள 242 கிராமங்களில் சுமார் 75 கிராமங்கள் பயன்பெற்று இருக்கின்றன. இதில் இரண்டு பேருக்குத்தான் அதிக பங்கு, ஒருவர் பொறியாளர் கனகசபை, இன்னொருவர் சென்னைப் பல்கலைக் கழக நூலகர் எஸ். ஆர். ரெங்கநாதன்.

“தெள்ளிய ஆலின் சிறுபழத்தொரு விதை

நுண்ணிதே ஆயினும்... மன்னர்க்கிருக்க நிழலாகும்

என்பதை போல பலபேரின் அறிவுப்பசியை போக்கியவை நூல்களாகும். மிகவும் பழமையான நூலகம் என்று கருதப்படுவது எகிப்தில் நைல் நதி முகத்துவாரத்தில் அமைந்திருந்த அலெக்சாண்டிரிய நூலகம் என்பது அறிஞர்கள் கருத்து. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் முதலாம் தாலமியால் தோற்று விக்கப்பட்ட அந்நூலகத்தில் 7 லட்சம் நூல்கள் இருந்தாக வரலாறு கூறுகின்றது.

தமிழ் மொழியில் “நூலகம்” இதழ்தான் முதல் இதழ். 1966 செப்டம்பர் மாதம் வெளிவந்த குயில் பதிப்பகத்தின் நூலில் முதல்வர் பக்தவத்சலம், டி. புருஷோத்தமன், சாண்டில்யன், வே. தில்லை நாயகம், திருமலை முத்துசாமி ஆகியோரின் படங்கள் அச்சடிக்கப்பட்டு வந்தன.

ஒரு நூலகத்தை ஒரு ஊரில் தொடங்குவதற்கு என்ன பாடுபடவேண்டும் என்பதை 1967-ல் பிப்ரவரி மாதம் “நூலகம்” இதழில் வெளி வந்துள்ள “மன்னார்குடி மாட்சி” என்ற கட்டுரை படம் பிடித்துக் காட்டுகிறது.

நூலக விஞ்ஞானி என்றும் நூலகத்தின் தந்தை என்றும் போற்றிப் புகழப்படுவார் டாக்டர். எஸ்.ஆர்.ரெங்கநாதன் அவர்கள். 1892-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி சீர்காழியில் பிறந்த இவரே தமிழக நூலக இயக்கத்தின் முன்னோடி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் நூல்களை வகுத்து வரிசைப்படுத்தும் முறையான “கோலன்” முறையைக் கண்டுபிடித்தார்.

1924-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் நூலகராகப் பணியில் சேர்ந்து நூலகப் பயிற்சி பெற இங்கிலாந்து சென்று திரும்பி, 20 ஆண்டுகள் இடைவிடாது பாடுபட்டுப் பல திருத்தங்களும் அபி விருத்திகளும் செய்து கோலன் பகுப்புமுறையை, உலகம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் கொண்டு வந்தார்.

நூலக இயல் கொள்கைகளைப் பரப்பியும் நூலகத் துறை, நூலக இயல் தொடர்பான ஆராய்ச்சி நூல்களையும் எழுதி உள்ளார். இவரின் நூலகப் பணியைப் பாராட்டி, டில்லி பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகமும் இணைந்து இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. இவர் தான் சம்பாதித்த 1 லட்சம் பணத்தை, சென்னை பல்கலைக்கழகத்திற்குப் பெருமையுடன் வழங்கினார். இவர் நூலகர் மட்டுமன்று; கணிதத்துறையில் பயிற்சி பெற்ற பேராசிரியருமாவார்.

1935-இல் ஆங்கி லேயர் ஆட்சியிலே “இராவ்சாகிப்” பட்டம் பெற்ற இவருக்கு 1956-இல் “பத்மஸ்ரீ” விருது வழங்கியது இந்திய அரசு. 1962-இல் பெங்களூரில் தொடங்கப் பெற்ற வணத் தொகுப்பு ஆய்வு மைய நிலையத்தின் பேராசிரியராகவும் பதவி வகித்தார். இவர் 1972-இல் செப்டம்பர் 27-ஆம் தேதி மரணமடைந்தார், நூலகத் துறைக்கு மிகப் பெரும் இழப்பாகும்.

பாரதி, தமிழ் விதைக்கு உரமிட்டவன், உயிரூட்டியவன், சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ என்று பாரதிதாசன் போற்றிக் கொண்டாடத் தக்க புதுயுகம் பாடிய புலவர், தேசிய கவிஞன், தேசிய விழிப்புணர்ச்சிக்குப் பாட்டிசைத்த தியாகி, தமிழைப் பூஜை மாடத்திலிருந்து பொதுமக்கள் மேடைக்குக் கொண்டு வந்த புனிதன், கைப் பிள்ளையாக இருந்த தமிழைப் பாமரர்கள் நெஞ்சிலும், நினைவிலும் தவழவிட்டன் பாரதி. படித்தறியாப் பாமரனும் கூடத் தமிழ்ப்பாட்டை முணுமுணுக்க வைத்தவன்- இவ்வாறாக நூல்களின் வாயிலாக மனிதனையும், மனிதநேயத்தையும் வளர்க்க நூலகத்தின் பயன்பாடு அதிகமாகப் பயன் படுகிறது.

கன்னிமரா நூலகத்தின் நூலகர் வே. தில்லை நாயகம் அவர்கள் பலருக்கும் பயன்தரும் பல பொருட்களை ஒரே இடத்தில் ஒரு தனிமனிதனால் பாதுகாத்து வைக்க இயலாது. எனவே, கலை கருவூலங்கள் மூலம்தான் மனிதனின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறி, நூலகப் பணி மூலமாக இவற்றை வெற்றி காண முடியும் என இந்திய நூலக சங்கம் 1918-இல் நடத்திய இலாகூரில் நடைபெற்ற மாநாட்டில் “நூலகச் சங்கங்களும், நூலகப் பணியும்” என்ற தலைப்பில் விரிவாகப் பேசினார்.

நூல்கள் பல வரலாற்றுச் செய்திகளைத் தாங்கி நிற்பவை, அந்த வகையில் இலக்கியம், நாடகம், சங்கீதம், மொழி, திரைப்படம், கலை, இசை, அரசியல் இப்படிப் பல பரிமாணங்களில் செய்தி களை நமக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்து வதுடன் அவற்றின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கின்றன.

பல தேசிய இயக்கத்தின் விடுதலை வீரர் களை நம் கண்முன் கண்ணோட்டமாகவும், வழி காட்டியாகவும், தீர்க்கதரிசியாகவும், கண்ணாடி போல் முன் கொண்டு வந்து நிறுத்தி அவர்களின் வரலாற்றை நமக்குப் பறை சாற்றுபவை நூல்களே. சான்றாக, தென்னாட்டுத் திலகர் என்றும் கப்ப லோட்டிய தமிழர் என்றும் போற்றப்படும் தியாகசீலர் வ.உ.சிதம்பரம்பிள்ளை, பாரதி, பாரதிதாசன் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்.

ஒரு முறை 1933-இல் மே மாதம் 10-ஆம் நாள் நள்ளிரவில் ஜெர்மன் பல்கலைக்கழக நூலகம் எரிந்து கொண்டு இருந்தது. அப்போது நூலகங் களில் இருந்து நூல்களை மாணவர்கள் வெளியில் கொண்டு வந்து போட்டு எரித்தார்கள். அதைப் பார்த்த ஜெர்மன் பிரச்சார் மந்திரி கொயபெல்ஸ் ஜெர்மன் மக்களின் ஆன்மாவை அவர்களே புலப் படுத்துவார்கள். அவர்களுக்குப் புத்தகம் தேவை யில்லை. இங்கே எரிவதெல்லாம் பழமைகள் என்று சொன்னார்.

ஆனால் அமெரிக்கப் புத்தக வியாபாரிகள் “புத்தகங்களைத் தீயிட்டுக் கொல்ல முடியாதென்று” சொன்னார்கள், உண்மைதானே. நம் குழந்தைகளுக்கு எதைப் பார்த்தாலும் படித் தாலும் உள்ளத்தில் அப்படியே பதிந்துவிடும் தன்மை உண்டு. எதிர்காலத்தில் கல்வியில் அறிவும், பண்பும் அவர்களுக்குப் போதிக்க புத்தகம் தேவைப்படும். மகாத்மா காந்தி சிறுவனாக இருந்தபோது பார்த்த அரிச்சந்திரா நாடகம் அவர் மனதில் பதிந்துவிட்டதால்தான் பிற்கால வாழ்க்கையில் சத்தியம் என்பதை உயிர்மூச்சாகக் கொண்டார். சிரவணரின் கதையைப் படித்ததால் கடமையோடு பணியாற்றினார். இந்த இரண்டும் தான் அவரை மகாத்மாவாக உருவாக்கியது.

மராட்டிய வீரர் சிவாஜி, இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கேட்டதால்தான் அதில் வரும் வீரர்களைப் போல் பிற்காலத்தில் விளங்கினார். நூல்கள் என்பது பள்ளியுடனோ, கல்லூரியுடனோ முடிந்து விடுவதில்லை. ஆயுள் முழுவதும் படித்துக் கொண்டு இருப்பது. ஆகையால்தான் சிறுவர்கள் மனத்தில் பதியக்கூடிய வகையில் நமது கல்வித் திட்டம் மாற வேண்டும்.

இப்படி நாம் பார்க்கும் வகையில் மனிதனை மனிதனாக மாற்றுவதில், மனிதநேய மேம் பாட்டிற்குப் பெரும் உதவியாக இருப்பவை நூல்களும், நூலகமும்தான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

Pin It