காலத்தால் முற்பட்ட வியாச பாரதத்தைத் தமிழில் காவியமாக எழுத முற்பட்டவர்கள் பெருந்தேவனார், வில்லிபுத்தூரார், நல்லாப்பிள்ளை ஆகிய மூவர் ஆவர். ஆயினும், வில்லிபுத்தூரார் கம்பனின் காவியத்தால் ஈர்க்கப்பட்டு, வியாச பாரதத்தின் பத்துப் பருவங்களை மட்டும் கொண்டு, 4377 பாடல்களால் (பாண்டவர் முடிசூடல் வரை) பாடியுள்ளார். அதுவே இன்றும் வில்லிபாரதம் என்ற பெயரில் நிலைத்து விட்டது.bharatham 700பெருந்தேவனார் பாடிய பாரதம் முழுவதும் கிடைக்கப் பெறாமல் அறிஞர்கள் அதனை ஒரு முன்மாதிரியாகக் கொள்கின்றனர். நல்லாப் பிள்ளை, வில்லிபுத்தூராரின் 3000 பாடல்களைப் பயன்படுத்தி, பல்வேறு கிளைக் கதைகளுடன் 10,554 பாடல்கள் பாடியுள்ளார். எனினும், அனைத்து கூறுகளிலும் வில்லிபாரதமே இன்றும் சிறப்பித்துக் கூறப்படும் காவியமாக விளங்குகிறது. பாண்டவர்களுக்கு உரிய பங்கைத் தர மறுத்த கவுரவர்களின் தலைவனான துரியோதனனுடன் கூட்டணி சேர்ந்த சகுனி, கர்ணன் துச்சாதனன் ஆகிய நால்வரும் அதர்மத்தின் வழி நிற்கின்றார்கள். ஆனால், பாண்டவர்கள் தாய்மாமனான மதுராபுரி கண்ணனைத் துணைக் கொண்டு, தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் இரு பக்கமும் தத்தமது வெற்றிக்காக, தமக்குதவும் அரசக் கூட்டணியையும் போர்க்கூட்டணியையும் அமைத்துக் கொண்டனர். களம் கண்ட அக்கூட்ட ணியின் பலமும் பலவீனமும், பாண்டவர் கவுரவர்கள் தமது அரசியல் ஆட்சியில் வெற்றி பெற எத்தகைய கூட்டணியை அமைத்து செயல்பட்டார்கள் என்பதும், கூட்ட ணிக்குள் எத்தகைய தந்திரங்களைக் கையாண்டனர் என்பதும் "வில்லிபாரதத்தில் அரசியல் கூட்டணி" எனும் தலைப்பின் கீழ் ஆராயப்பட்டுள்ளது.

அரசியல்

நாகரீகம் அடைந்த ஒரு சமூகத்தின் அரசாங்கம், அடிப்படைச் சட்டம், மக்கள் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள தொடர்புகள், அவற்றை வகுத்துக் காக்கும் நியதிகள், சமூக நிலைகள், அவற்றின் குறிக்கோள்கள் என்பவற்றைக் கூறும் ஒரு துறையே அரசியல் என்று அழைக்கப்படுகின்றது.

கூட்டணி

கூட்டணி என்பது ஒரு தனிமனிதன் ஒரு நிகழ்வை எதிர்கொள்ள தன்னுடன் பிறரையும் சேர்த்துக் கொண்டு வெற்றி பெற முயல்வதாகும். அதுவே ஒரு நாட்டின் அதிகாரத்திற்காக நடைபெறும் போட்டியில் ஒரு அமைப்பு மற்ற அமைப்புகளைச் சேர்த்துக்கொண்டு போட்டியில் வென்று ஆட்சி அமைப்பது அரசியல் கூட்டணி எனப்படும். ஒரு நாட்டின் மன்னன் பிற நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி பெறவும், அரசனது அதிகாரத்தை நிலை நாட்டவும், ஆட்சி எல்லைகளை விரிவுபடுத்தவும் தனது நட்பு நாடுகளையும் அதன் படைபலத்தையும் சேர்த்துக் கொண்டு எதிரி நாட்டை வெற்றி பெறுவது இயல்பான அரசக் கூட்டணியாக இருந்துள்ளது. நட்பானவர்களை இணைத்துக் கொள்வதும், எதிரியின் கூட்டணியில் இருப்பவரைத் தன் பக்கம் இணைத்துக் கொள்வதும், எதிரியைப் பலம் இழக்கச் செய்வதும், எதிரியுடைய கூட்டணிக்குள் குழப்பத்தை விளைவிப்பதும், அங்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும், அரசியல் கூட்டணியின் இயல்பாகக் கருதப் படுகிறது. அதுவும் கூட்டணியின் அரசியல் ராஜதந்திரம்.

தமிழக வரலாறு, இலக்கியங்களில் கூட்டணி

தமிழகத்தினுடைய பல்வேறு இலக்கியங்களிலும், அரசியல் கூட்டணி குறித்த செய்திகள் கூறப்பட்டுள்ளன.

அ) கம்பனில் கூட்டணி

கம்பனின் இராமாயணத்தில் இராமன் வனவாசம் புறப்பட்டுச் செல்லும் போது கங்கையைக் கடக்க குகனின் துணையைப் பெறுகிறான். பின், தன் மனைவி சீதையை இராவணனிடமிருந்து மீட்க, கிட்கிந்தையில் சுக்ரீவனின் வானரப் படையையும், அனுமனையும் துணைக்குச் சேர்த்துக் கொள்வதுடன், எதிரியின் தம்பியான விபீடனனையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு தன் வலிமையுடன் துணை வலிமையையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு இறுதி வெற்றி பெறுகிறான் இராமன்.

ஆ) மூவேந்தர் கூட்டணி

பறம்பு மலையை ஆண்ட வேள்பாரி மன்னனுடைய நண்பராகவும், புலவராகவும் இருந்த கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடலிலிருந்து அன்றைய தமிழகத்தில் சேர சோழ பாண்டிய மூவேந்தர்கள் கூட்டணி அமைத்ததைக் காண முடிகிறது. "அளிதோ தானே பாரியது பறம்பே! நளி கொள் முரசின் மூவேந்தரும் முற்றினும்..." - என்று கபிலர் வேள்பாரியைப் புகழ்ந்து கூறும் வேளையில், சேர, 'சோழ' பாண்டியர் எனும் மூவேந்தர்களும் கூட்டணி கொண்டு முற்றுகையிடினும் பறம்பு மலையை வெல்ல முடியாது; பாரிவேளை வெல்ல முடியாது என்பதாகப் பாடுகிறார் கபிலர். இதிலிருந்து அக்காலத்தில் மூவேந்தர்களும் பாரியை எதிர்க்க அரசியல் கூட்டணி அமைத்துப் போரிட்டுள்ளது தெரிய வருகிறது.

இ) பல்லவ மன்னனுடன் கூட்டணி

பல்லவ மன்னன் நரசிம்மவர்மனின் காலத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டணியைக் காசாக்குடி கல்வெட்டு உணர்த்துகிறது. "இலங்கையை வென்ற இராமனுடைய பராக்கிரமத்தை ஒத்த வீரம் கொண்டவனும் வாதாபி நகரத்தை அழித்தவனுமான நரசிம்மவர்மன் அகத்திய முனிவரை ஒத்திருந்தான்" - என்று புகழ்கிறது காசாக்குடி கல்வெட்டு. இதன்படி, இலங்கையை ஆண்ட காசிபன் எனும் மன்னனின் மகன் மானவர்மன், தமிழகத்தின் பல்லவ மன்னனான நரசிம்மவர்ம பல்லவனுடன் கூட்டணி அமைத்து, கிபி 668 இல் தனது எதிரியான உரோகன நாட்டு இக்குவாக வம்ச மன்னன் மானா எனும் மன்னனை வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளான் என்பது தெரிகிறது.

ஐவர் பாண்டியர் கூட்டணி

தஞ்சையைக் கிபி 1018இல் ஆண்ட ராஜேந்திர சோழன், பாண்டியர்களை வென்று அங்கு தன் மகன்களை ஆட்சி புரிய வைத்துள்ளார். இதனைப் பிற்காலத்தில் ஐவர் பாண்டியர் எனும் பாண்டிய மன்னர்களின் அரச கூட்டணி எதிர்த்துப் போரிட்டுள்ளது திருவாரூர் கோயில் கல்வெட்டில் குலோத்துங்க சோழனால் பொறிக்கப்பட்டுள்ளது.

வில்லிபாரதக் கூட்டணி:

பாண்டவர்களைச் சூதாட்டம் மூலம் ஆட்சியைக் கவர்ந்து கொண்டு, வனவாசம் அனுப்பிய கவுரவர்கள், வனவாசம் முடிந்து திரும்பி வந்த பாண்டவர்களுக்குரிய அரசுரிமைப் பங்கைக் கொடுக்க முடியாது என்று கூறியதுடன், கண்ணன் தூது சென்று கேட்டும், அத்தினாபுரியில் பங்கு தர முடியாது என்று துரியோதன் கூறியதற்குப் பின், போர்தான் ஒரே வழி என்று முடிவாகிறது. இப்போரில் பாண்டவர்கள், துவாரகாபுரி மன்னனான கண்ணனைத் தமது கூட்டணியில் சேர்த்துக் கொள்கின்றனர். துரியோதனன் மதுராபுரிச் சேனைகளை மட்டும் கேட்டுப் பெற்றுக் கொள்கிறான். அவனுடன் காந்தார நாட்டு சகுனியும், அங்க தேசத்துக் கர்ணனும் இருக்கின்றனர். தாத்தா வீடுமன், துரோணாச் சாரி, கிருபாச்சாரி உள்ளிட்டவர்களும் துரியோதனனுடன் இருக்கின்றனர். நட்பில் உள்ள நாட்டு மன்னர்களுடன் கூட்டணி அமைப்பது, எதிரிக்கு எதிரி நண்பன் எனும் வகையில் கூட்டணி அமைப்பது, எதிரியின் கூட்டணிக்குள் அவநம்பிக்கை ஏற்படுத்துவது, எதிரியின் கூட்டணியில் இருப்பவரைத் தன் பக்கம் இழுப்பது, எதிரியின் கூட்டணி உறுப்பினர்களின் பலத்தை அழிப்பது அல்லது குறைப்பது, எதிரியின் பலத்தைத் தூது அரசியல் மூலம் அறிதல், எதிரியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளுதல் எனும் பல்வகையாலும் கூட்டணியைக் கட்டமைத்து அரசியல் ஆட்சியில் வெற்றியைப் பெறுவது என்பது தேர்ந்த அரசியல் ராஜதந்திரியின் செயல்கள் ஆகும். இவ்விதமாக வில்லிபாரத்தில் கண்ணனும் சகுனியும் துரியோதனனும் தத்தமது கூட்டணிகளைக் கட்டமைத்து வெற்றி காண முயல்கின்றனர். அதற்காகப் போரில் தந்திரங்களை இரு பக்கங்களிலும் பயன்படுத்தியுள்ளனர். பாண்டவர் மற்றும் துரியோதனர்களுடன் கூட்டணி சேர்ந்த நாடுகளை வில்லியார் எடுத்துரைக்கின்றார்.

பாண்டவர் கூட்டணி

போர் என்பது முடிவானதும், பாண்டவ மன்னன் தருமன் தனது நட்பு நாட்டு மன்னர்களை அழைத்து போர் கட்டாயம் ஆகிவிட்டது, தமக்குரிய நிலத்தைத் தர மறுத்ததுடன், போரில் வெல்பவரே அத்தினாபுரியை ஆளட்டும் என்று துரியோதனன் முடிவாகக் கூறிவிட்டான் என்றும் போர் ஏற்பட்ட காரணத்தை விளக்கி, போர்க் கூட்டணியையும் அரசியல் கூட்டணியையும் பலப்படுத்துகிறான் தருமன். இதனை படையெழுச்சி படலத்தில் வில்லிப்புதூரார் எடுத்துரைக்கின்றார்.

"எட்டு திக்கினு முள்ளமன்னவருடன் யாகசேனனும் வந்தான்,

திட்டத்துய்மனும் திட்ட கேதுவும் விரற் சிகண்டியும் முறை வந்தார்,

ஒட்டிப் போர்பொரும் உத்தமோசாவும் வேலுதாமனுடன் வந்தார்........"

" விராட பூபனும் விறற் சிவேதனும் ஆதி

வராக கேதுவும் உத்தரகுமரனும் மச்ச நாட்டவர் வந்தார்,

பராவு பேருடைச்சேர செம்பியருடன் பாண்டியன் முதலோரும்,

குராநறும் பொழிற்கேகயத் தலைவருமுவைத்த தலைவரும் குந்தி போசரும் வந்தார்."

“அரக்கி தந்தருள் கடோற்கசக் காளையும் அபிமனோடு இரவானும்

விரிக்கும் வெண்குடை விந்தனுஞ் சோமனும் வீர கீர்த்தியும் போரிற்

செருக்கு நெஞ்சுடை புண்டலன் செயசெனன் செருவிடைத்தெவ் வோடத்

 துரக்கும் வெம்பரித் துரௌபதரை வருஞ்சூழ் படையுடன் வந்தார்".

“சாகர் மத்திரர் மாளவர் தெலுங்கர் வெங்ககலிங்கேசர்

சோனாகாதிபர் கன்னடர் மாகதர்

துலுக்கர் குச்சிர ரொட்ட...ஆடவி

ரான வெம்படை ஆதியாய் நடப்பன வையிரண்டெண் பூமி........."

எனும் நான்கு பாடல்கள் மூலம் விலாலிபாரதம் உணர்த்துகின்றது.

பாண்டவர்க்குப் பெண் கொடுத்த நெருங்கிய உறவு முறையாதலால் முதலில் பாஞ்சால தேச மன்னர்கள் கூட்டணியைக் கூறுகிறார் வில்லியார். திரௌபதியின் தந்தையான யாகசேனன் எனும் துருபதன் அவன் புதல்வன் திட்டத்துய்மன் ஆகியோரும், துருபதனுக்கும் அம்பைக்கும் பிறந்த சிகண்டியும், துருபதனின் உறவினரான உத்தமோசா மற்றும் உதாமன்யும் பாண்டவருடன் கூட்டணி சேர்ந்தனர். பின் மத்ய தேசத்து அரசனான விராடபூவனும் சதானிகன் எனும் அரசனும் ஆதி வராகி, உத்திரகுமரன் சுவேதன் உத்தரன், சேர சோழ பாண்டிய மன்னர்கள் மற்றும் குந்தியின் சுவிகாரத் தந்தையான குந்திபோசன் ஆகியோரும் வந்து சேர்ந்தனர். பின்னர் பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்த கடோத்கஜனும், அர்ச்சுனனுக்கும் உலோபிக்கும் பிறந்த அரவாணும், அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்த அபிமன்யுவும் வந்து சேர்கின்றனர். அவர்களுடன் பாண்டவர்களுக்குத் திரௌபதி மூலம் பிறந்த உப பாண்டவர்கள் விந்தன், சீதசோமன், சுருதகீர்த்தி, சுதானீகன், சுருத சேனன் எனும் ஐவரும் வந்து சேர்கின்றனர். சீன தேசத்து சாவகர் மத்திர தேசத்தார், மாளவ தேசத்தார், தெலுங்கு தேசத்தார், கலிங்கம், சோனக தேசம், கன்னட தேசம், அங்கத தேசம், துருஷ்க தேசம், கூர்ச்சர தேசம், ஒட்ர தேசம் முதலான ஐம்பத்தாறு தேசத்தாரும் பாண்டவர்களுடன் அணி சேர்ந்தனர் என்று விவரிக்கின்றார் வில்லிபுத்தூரார். இவர்கள் இல்லாமல் அரசர் பட்டம் மாத்திரம் உள்ளவர்கள், ராஜகுமாரர்களும், சிற்றரசர்களும், மந்திரிமார்களும், சேனைத் தலைவர்களும் என்று இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஏழு அக்ரோணிகள் (ஒரு அக்ரோணி என்பது யானை 21,870, தேர் 21,870, குதிரை 65,610, காலாள் 1,09,350 என்று மொத்தம் 2,18,700 கொண்டது ஒரு அக்ரோணி) படை பலமாகக் கொண்ட போர்க்கூட்டணியைப் பாண்டவர்கள் அமைத்தனர்.

கௌரவர் கூட்டணி

கௌரவர்களுக்குத் துணையாக துரியோதனன் அழைத்தபடி 11 அக்ரோணி படை திரண்டது. துரியோதன் தனக்குத் துணையாக, வீடுமன், துரோணர், கிருபன் , சகுனி, கர்ணன், அசுவத்தாமன், சல்லியன், துரியனின் தம்பியர் தொண்ணூற்றொன்பது பேர் மற்றும் பிற தேசத்து அரசர்களுடன் கூட்டணி அமைத்தான். இதனைப் படையெழுச்சிப் படலத்தில் வில்லிபுத்தூரார் விரிவாக விளக்குகின்றார்.

"சல்லியன்றானு மாயச்சகுனியுந்த

றுகண்வெம்போர்

வல்லிய மனையவின்றிமாகத பதியுங்கொற்ற.........

தானையாறொடுங்கடலிற் சூழ்ந்தார்."

"கலிங்கர்கோன் சோமதத்தன் கௌசிகன் காம்பிலீசன்

தெலுங்கர்கோன் போசனாதி

கேகயன்றிகத்த பூபன்

வலங்கொள் வேரற்கவுடராசன் மாளவன் வளவன் சேரன்

உலங்கு நீரோகனீகனெனும் பலவேந்தர் தொக்கார்."

"பங்களங்கு குரஞ்சினம் பப்பபரங் கொப்பம் வங்கஞ்

சிங்களம் துளுவ மங்கமாரி யந்திகத் தஞ்சேதி

கொங்கணங் கடாரங் கொங்கங் கூபகமிரட்டமொட்ட

மெங்கனுமுள்ள வேந்தர்யாவரும் மீண்டிமொய்த்தனர்".

"வீடுமன்கிருபன் கண்ணன் விற்கை யாசிரியன்வையம்

பாடுசீர்விகத்தசேனன் பகதத்தன் முதலாவுள்ளோர்...."

எனும் பாடல்களால் கௌரவர் அமைத்த போர்க் கூட்டணி தெரியவருகிறது. பாண்டவர்களும் கௌரவர்களும் தத்தமது படைபலத்துடன் அத்தினாபுரியின் அரசுரிமை யாருக்கு என நிர்ணயிக்கும் அதிகாரப் போட்டியை வெல்ல இந்தப் போர்க் கூட்டணியை அமைத்தமையால் இது வில்லிபாரத அரசியல் கூட்டணி ஆனது.

கூட்டணிக்குள் குழப்பம்

கூட்டணியைப் பலவீனப்படுத்த பல வழிகளையும் கையாளுகின்றனர்.

அ.சல்லியன் மன மாற்றம்

மத்திர தேசத்தின் மன்னனும் பாண்டவர்களின் நகுல சகாதேவர்களின் மாமனுமான சல்லிய மன்னன் பாண்டவர்களுக்குப் போரில் உதவ புறப்பட்டு வரும் வழியில், அதனை அறிந்து கொண்ட துரியோதனன், பாண்டவர்களே விருந்து வைப்பது போல் பிரம்மாண்டமாக விருந்து உணவுகளை ஏற்பாடு செய்து உபசரித்ததை உணராத சல்லியன், அதனை உண்டதாலும், தன்னை உபசரித்ததாலும் துரியனுக்கே துணை செய்வதாய் வாக்குத் தத்தஞ் செய்துவிட்டான். பாண்டவர்கள் கூட்டணிக்குள் இருக்க வேண்டிய சல்லியன் துரியோதனன் பக்கம் வந்துவிடுகிறான்.

ஆ.விதுரனின் கோபம்

கூட்டணியைப் பலப்படுத்தி எதிரியை வெற்றி பெறுவது என்பது ஒரு வகை எனில், எதிராளியின் கூட்டணிக்குள் சந்தேகத்தை உண்டாக்கி கூட்டணியைப் பலம் இழக்கச் செய்வதும் ஒரு வகை உத்தியாகும். இதனைப் பாண்டவர்கள் பக்கம் இருந்து கண்ணன் சாதுரியமாகச் செய்கின்றான். போர் வேண்டாம் என்பதற்காகத் துரியோதனனிடம் தூது செல்லும் வழியில் கண்ணன் விதுரனின் அரண்மனையில் தங்கி விருந்துண்டு ஓய்வெடுத்துவிட்டுப் பின் துரியோதனனைப் பார்க்கச் செல்கிறான். இதனால் துரியோதனனுக்கு விதுரனின் மீது சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறது. தனது சித்தப்பா விதுரன் என்றும் பாராமல், விதுரனைச் சபையில் அவமானப் படுத்த, அதனால் கோபம் கொண்ட விதுரன் தன்னிடமிருந்த விஷ்ணு தனுசை முறித்துவிட்டு, தான் யார் பக்கமும் போரிடப் போவதில்லை என்று சபதம் செய்து வெளியேறுகிறான். இந்நிகழ்வால், துரியோதனன் வெல்வதற்கு உதவி புரிய வேண்டிய விதுரனை, சாதுர்யமாகத் தடுத்து துரியோதனக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அவனைப் பலம் இழக்கச் செய்துவிடுகிறான் கண்ணன்.

இ.அசுவத்தாமன் மீது சந்தேகம்

கண்ணன் தூது வந்து திரும்பிய போது அங்கிருந்த அசுவத்தாமனை அருகில் அழைத்து கண்ணன் அவனிடம் ஏதோ ரகசியம் பேசுவது போல், சூரியனைச் சுட்டிக் காட்டிக் கொண்டே தன் கணையாழியை நழுவ விட்டு, அதனை அசுவத்தாமன் எடுத்துக் கண்ணனிடம் கொடுக்கி றான். ஆனால், கண்ணனுக்கு அசுவத்தாமன் ஏதோ சத்தியம் செய்து கொடுக்கின்றான் என்கின்ற சந்தேகம் துரியோதனன் மனத்தில் எழுகின்றது. இதனால் வெல்ல முடியாத அசுவத்தாமன் எனும் மாபெரும் வீரனைப் போர் முடியும் வரை போர்த் தளபதியாக நியமிக்காமல் துரியோதனன் தனது வெற்றியைத் தானே தடுத்துக் கொள்கிறான். இதுவும் கூட்டணிக்குள் சந்தேகத்தை விதைத்து, எதிராளியின் கூட்டணியைப் போருக்கு முன்பாகவே பலம் இழக்கச் செய்யும் தந்திரமாகும்.

ஈ.கர்ணனின் பலத்தைப் பறித்தல்

அங்கதேச மன்னனும் துரியோதனனின் உயிர் நண்பனுமான கர்ணனிடம் போரில் வெற்றி பெற இரண்டு பலமான அத்திரங்கள் இருந்தன. ஒன்று அவனது உடன் பிறந்த கவச குண்டலங்கள். இந்திரனை அனுப்பி கர்ணனிடம் இருந்து அவற்றைத் தானமாகப் பெற்று வரச் செய்கிறான் கண்ணன். அதேபோல், அவன் பெற்றிருந்த நாகாத்திரம் எய்யப்பட்டவரைக் கொல்லாமல் விடாது. ஆனால், குந்திதான் கர்ணனின் அன்னை என்பதை அறியச் செய்து, குந்தியைக் கர்ணனிடம் அனுப்பி, ஒரு முறைக்கு மேல் நாகாத்திரத்தை அர்ச்சுனன் மீது ஏவக்கூடாது என்றும், அர்ச்சுனனைத் தவிர மற்ற பாண்ட வர்களைப் போரில் கொல்லக் கூடாது என்பதுமான இரண்டு வரங்களையும் கர்ணனிடம் கேட்டுப் பெற்று வரச் செய்கிறான் கண்ணன். இதன் மூலம் துரியோதனன் பக்கம் வெற்றி பெறுவதற்கு உதவியாக இருக்க வேண்டிய முழு வீரனான கர்ணனின் முழு பலத்தையும் வீழச்செய்து துரியோதனன் கூட்டணியை மீண்டும் பலம் இழக்கச் செய்துவிடுகிறான் கண்ணன். துரியோதனன் கூட்டணிக்குள் பலம் பொருந்திய வீரர்களை வீழ்த்தி கூட்டணியைக் கட்டமைத்து, இறுதி வெற்றியால் பாண்டவர்கள் அத்தினாபுரி அரசைப் பெறுகின்றனர்.

முடிவுரை

அரசியல் கூட்டணியோ, அரசக் கூட்டணியோ போர்க் கூட்டணியோ எதுவாக இருந்தாலும் அறத்தின் வழி நடப்போருக்கு இறுதி வெற்றி என்பதை உலகம் உணர வேண்டும் என்பதற்காக சிற்சில தரும மீறல்களைக் கண்ணன் மூலம் நடத்தி அறத்தை நிலைநாட்டியுள்ளது வில்லி பாரதத்தின் பாண்டவர் கூட்டணி.

துணை நூற்பட்டியல்:

1.      குறிஞ்சி ஞான வைத்தியநாதன்: மகாபாரதம்: பிரேமாபிரசுரம்

2.      கோபாலகிருஷ்ணமாச்சாரியார் வை.மு: உமா பதிப்பகம்

3.      சுப்ரமணிய பாரதியார்: பாரதியார், கவிதைகள்: இந்து பப்ளிகேஷன்ஸ்.

4.      தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு: தமிழ்நாட்டு வரலாறு பாண்டியர்-பல்லவர் காலம்: தமிழ் வளர்ச்சித் துறை.

5. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு: தமிழ்நாட்டு வரலாறு பாண்டியர் காலம்: தமிழ் வளர்ச்சித்துறை.

6. நடராசன்.இ.ப: வில்லிபுத்தூராரும் நல்லாப்பிள்ளயும்: மணிவாசகர் பதிப்பகம்.

7.      பரிமணம்.அ, பாலசுப்ரமணியன்.கு.வெ: சங்க இலக்கியம், புறநானூறு - பகுதி- 1: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

8.      பரிமேலழகர்: திருக்குறள், உமா பதிப்பகம்.

9.      வெர்ஜின் சிகாமணி. ஞா: அடிப்படை அரசியல் கோட்பாடு: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்.

10.    வேங்கடகிருஷ்ணையங்கார். பி: வில்லிபாரதம்: வானதி பதிப்பகம்.

*****

தீ.சி.கே.இராஜசேகர்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, மயிலாடுதுறை.

&

முனைவர் சிவ.ஆதிரை,
ஆய்வு நெறியாளர், துறைத்தலைவர் மற்றும்
உதவிப் பேராசிரியர், தருமபுரம் ஆதீனம் கலைக்
கல்லூரி, மயிலாடுதுறை.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.