அண்மையில் தமிழ் மரபு வழிச் சான்றோர் தொகை குறைந்து கொண்டே வருவது கவலையளிக்கிறது. அக்காலத்தில் புலவர்கள் தமிழ்ப் பண்பாட்டையே தமது வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்தனர். தமிழ் வேறு, தாம் வேறு என்று அவர்கள் எண்ணியதில்லை. எழுத்தாலும், பேச்சாலும் இல்லாமல் செயலால் வாழ்ந்து காட்டியவர்கள் அவர்கள்.
‘நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்' என்று வாழ்ந்தார் பாவேந்தர் பாரதிதாசன். அப்படி வாழ்ந்த ஆன்றோர்களால்தான் தமிழ் இன்று வரை செம்மொழியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ.விசுவநாதம், சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், முனைவர் தமிழண்ணல், பண்டித வித்வான் கோபாலய்யர், சிலம்பொலி செல்லப்பனார், க.ப.அறவாணன் என்னும் இந்தத் தமிழ் மரபு வழியில் ஏராளமான தமிழறிஞர்கள் மறைந்து போயினர்.
தமிழுக்குப் பகையா? என்று துடித்தெழுந்த ஓவியர் சந்தானம், புலவர் கி.த.பச்சையப்பன், முனைவர் அரணமுறுவல், தமிழ்மண் இளவழகன், அன்றில் இறையெழிலன் இவர்கள் எல்லாம் இப்போது இல்லை. காலமெல்லாம் முழங்கி உதயை மு.வீரையன் தொண்டு செய்வோர் சாவதில்லை! தமிழுக்குத் வந்த இவர்கள், தமிழை மறந்து விட்டு எப்படிப் போனார்கள்?
நாற்புறத்தும் தமிழ்ப் பகைவர்
நடுப்புறத்தில் நம் தமிழ்த்தாய்
காப்பதற்கு எல்லோரும் வாருங்கள் - வீரக்
கதை முடிக்க வந்தொன்றாய்ச் சேருங்கள்
பாவேந்தரின் இந்தத் தமிழ் முழக்கப் பாடல் அன்றும், இன்றும், என்றும் அப்படியே பொருந்துகிறது. இந்த நேரத்தில் இவர்கள் இல்லாமல் போய் விட்டார்களே! இந்த வரிசையில் இப்போது மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார்.
புலவர் இரா.இளங்குமரனார் கடந்த ஜூலை 25 அன்று முதுமை காரணமாக (வயது 94) மதுரையில் அவரது இல்லத்தில் காலமானார். நிறைவாழ்வு வாழ்ந்து, தமிழுக்கு அருந்தொண்டாற்றி மறைந்த போதிலும் பேரறிஞரின் இழப்பு பேரிழப்பே என்பதில் ஐயமில்லை. திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் அவர் பிறந்த ஊராகும். 30.1.1927 அவரது பிறந்த நாள். படிக்கராமு என்ற தந்தைக்கும், வாழவந்த அம்மை என்ற தாயாருக்கும் பிள்ளையாய்ப் பிறந்தார்.
இவர் இளமையிலேயே தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆகி விட்டார். மூன்றாண்டுகள் ஆசிரியப் பணி செய்தால் புலவர் தேர்வு எழுதலாம் என்ற விதிப்படி புலவர் தேர்வு எழுதி சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்பவற்றிலும், பல்கலைக்கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக 43 ஆண்டுகள் தமிழ் வாழ்வாக வாழ வாய்த்தது என்று இளங்குமரனார் கூறுகிறார்.
முழுமையாகக் கிடைக்கப் பெறாமல் காலத்தால் செல்லரித்துப் போன குண்டலகேசி காப்பியத்தைத் தன் கற்பனைத் திறனாலும், கவிதை இயற்றும் ஆர்வத்தாலும் முழுமை செய்தார். அந்த நூலை 1958ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரகேற்றம் செய்தார்.
1963ஆம் ஆண்டு அவர் எழுதிய திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு நூலை, அன்றைய பிரதமர் நேரு வெளியிட்டார். தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், தொல்காப்பியர் ஆகியோரின் முழு படைப்புகளையும் தொகுக்கும் பணியையும் அவர் சீரிய முறையில் செய்தார்.
காரைக்குடி அருகேயுள்ள திருக்கோவிலூர் மடம் சார்பில் சங்க இலக்கிய வரிசை நூல்களைத் தொகுக்கும் பணி நடைபெற்றபோது, புறநானுற்றை எளிய தமிழில் எழுதித் தந்தார். இந்தத் தொகுப்பு நூல் 2003ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டின் மூத்த மொழியறிஞர், ஆய்வறிஞர், தமிழிய வரலாற்று ஆய்வாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர் என்னும் பன்முகம் கொண்டவர். அவரை இழந்ததினால் தமிழ்கூறு நல்லுலகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்ச் சொற்பிறப்பு அகர முதலித் திட்டத்தில் மொழியறிஞராகப் பணியாற்றிய அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவர் பட்டம் அளிக்கப்பட்டுப் பெருமைப்படுத்தப்பட்டார்.
காணாமல் போய்விட்டது என்று கருதப்பட்ட தமிழ் இலக்கண நூலாம் காக்கைப் பாடினியத்தைக் கண்டு பிடித்துப் பதிப்பித்தவர். தமிழில் பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக்கொண்ட இவர் தேவநேயப் பாவாணரின் ஆய்வுகளான ‘தேவநேயம்' பதினான்கு தொகுதிகளைத் தொகுத்தவர். அதேபோல செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம் பத்து தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளார்.
இவரது நூல்கள் அனைத்தையும் சென்னை தமிழ் மண் பதிப்பகம் பொருள்வழித் தொகுப்புகளாக வெளியிட்டு, அவர் வாழ்ந்த காலத்திலேயே பெருமைப்படுத்தியுள்ளது. அறிஞர் சி.இலக்குவனாரோடு இணைந்து களம் கண்ட பெருமையும் உடையவர் அவர்.
பாவாணர் வாழ்வு தமிழ் வாழ்வு, தமிழின வாழ்வு, தமிழ் மண்ணின் வாழ்வு, தமிழ்ப் பண்பாட்டின் வாழ்வு முற்றிலும் தமிழ்மயமான அவ்வாழ்வின் ஐம்பது ஆண்டு உழைப்பின் மொத்தத் தொகையே தேவநேயம் ஆகும்.
தொடக்க முதல் ஐயா பாவாணருடன் மிக அணுக்கமாயும் அவர் ஆய்வுகளில் ஓர் ஈடுபாடும் கொண்ட சீரிய ஆய்வறிஞர், தமிழ் மாமுனிவர் ஐயா இரா.இளங்குமரனார்; பாவாணர் படைப்புகளில் ஆழப் பதிந்து கிடக்கும் மொழியியல் கோட்பாடுகளைத் தொகுத்து நான்காயிரம் பக்கங்களுக்கு மேல், அகர வரிசைப்படுத்தி, தேவநேயம் என்று பதினான்கு தொகுதிகளாக நமக்கு வழங்கியுள்ளார் என்று தேவநேயம் பதிப்புரை கூறியுள்ளது.
புலவர் இரா.இளங்குமரனார் தமிழறிஞர் மட்டும் அல்லர். சிறந்த உழைப்பாளர். இறுதி வரையில் தமிழுக்காக உழைத்துக் கொண்டேயிருந்தார். தமிழின் வளர்ச்சிக்காகப் போராட்டக் களம் காணவும் தயங்காதவர்.
தாம் பிறந்த நெல்லை மாவட்ட வாழவந்தாள்புரத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்; பின்னர் தமிழாசிரியர் ஆனார்; தமிழாசிரியர் பணியை 1951ஆம் ஆண்டு கரிவலம்வந்த நல்லூரிலும், பிறகு தளவாய்ப்புரத்திலும் தொடர்ந்தார். மதுரை மு.மு. மேல்நிலைப் பள்ளியில் நீண்ட காலம் பணியாற்றினார். இறுதி நான்காண்டுகள் மதுரைப் பல்கலைக்கழக ஆய்வுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்விற்குப் பின் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் காவிரிக்கரையில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்து தமிழ்நெறி வாழ்வியல் பணியினை ஒருங்கிணைத்தார்.
பாவாணர் பெயரில் மிகப்பெரிய நூலகத்தை ஏற்படுத்தி நடத்தினார். அதில் 40 ஆயிரம் நூல்களை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினார். வயது முதிர்வு காரணமாக மதுரை திருநகருக்கே திரும்பிய அவர், தமிழ்ப் பணியை நிறுத்தாமல் தொடர்ந்தார்.
தமிழர்களின் இல்லங்களில் ஆரிய முறைத் திருமணங்கள் நடைபெறுவதை அவர் விரும்பவில்லை. தமிழர்கள் நீண்ட காலமாகக் கடைபிடித்து வந்ததும், பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட முறையில் திருமணங்களை நடத்தி வைப்பதிலும் அவர் ஆர்வம் காட்டினார். 1951ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பணியைத் தமது 92 வயது வரைத் தொடர்ந்தார். அதனை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்துச் சென்றார்.
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் மிக மூத்த ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும் இவர். மதுரைத் தமிழ்ச் சங்கம் பற்றிய வரலாற்று நூலையும் இவர் எழுதியுள்ளார். திரு.வி.க. போல இறுதிக் காலத்தில் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்ட நிலையிலும், தம் எழுத்துப் பணி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். 1978ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற இவர், அதன் பிறகு பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு திரு.வி.க. விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. வடஅமெரிக்க தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கனடா நாட்டு இலக்கியத் தோட்ட விருது போன்றவை அவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.
ஒரு பல்கலைக்கழகம் செய்யக்கூடிய பணியைத் தனிமனித உழைப்பால் செய்து முடித்தவர். தமிழ் இலக்கணம், இலக்கியம், ஆய்வு எனப் பல்வேறு துறைகளில் இந்த நூல்கள் அமைந்துள்ளன.
இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005ஆம் ஆண்டு திருச்சி நகரில் வெளியிடப்பட்டது. அடுத்து 2010ஆம் ஆண்டு அவரது 81ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இளங்குமரனார் தமிழ் வளம் என்னும் பொருளில் 20 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும், வெளியிடவும் வாய்த்தன.
குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரை நூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள், இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய் பால்வாய்ப் பருவத்தினர் முதல் பல்கலைக்கழக ஆய்வர் வரைக்கும் பயன்கொள்ளும் வகையில் அவை அமைந்தன.
எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒரு காலம். கதையும், நாடகமும் ஆக்கல் ஒரு காலம். பதிப்புப் பணியே ஒரு காலம். உரை காணலே ஒரு காலம். படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன - இவ்வாறு இளங்குமரனார் தம் தமிழ் வளம் முன்னுரையில் கூறியுள்ளார்.
இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மை முன் நிறுத்தாது தமிழை முன் நிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒரு நாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர் என்று தமிழ்வளம் பதிப்பாசிரியர் கூறுகிறார்.
தமிழுக்குத் தொண்டு செய்வோர்
சாவ தில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான்
செத்த துண்டோ?
என்று பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அதையே நாமும் வழிமொழிவோம். தமிழுக்காகவே காலமெலாம் வாழ்ந்த முதுமுனைவர் இளங்குமரனார் இறக்கவில்லை. தமிழாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
- உதயை மு.வீரையன்