தமிழ்வழி அறிவியல் பயிற்றும் முயற்சி பொது அறிவியல் துறைகளில் தொடங்கி இன்று மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்வி சார்ந்த அறிவியல் துறைகளுக்கும் விரிவடையும் நிலை வந்துள்ளது. இத்துறைகளில் பாடநூற்கள் தயாரித்தாலும் கலைச் சொல்லாக்கமும் இவ்விரிவிற்கு இன்றியமையாதவையாகும்.

கலைச்சொல்லாக்கம் பற்றிய பொதுக் கொள்கைகளும், உண்மைகளும்:

தமிழில் கலைச்சொற்களை வரையறை செய் வதற்குரிய நெறிமுறைகளை வகுக்குமுன், இன்று அறிவியலில் அனைத்துலக அளவில் கலைச் சொற்கள் பயன்படுத்தப்படும் முறைகள், அடிப் படை உண்மைகள் ஆகியவைகளை உணர்ந்து கொள்வது நன்மை பயப்பதாகும்.

ஒரு கருத்துக்கு ஒரு சொல்:

ஒரு கருத்துக்கு ஒரு சொல் என்ற வரை யறையும், ஒட்டுக்கள், குறியீடுகள் முதலானவற்றின் (Distinct) வரையறையும், ஆங்கிலத்தில் தீர்மான மாகிவிட்டதாகப் பலர் கருதுகின்றனர். இது மெய் அன்று. ஆங்கில மொழி தேவைக்கேற்பவே சொல்லாட்சி செய்கிறது.

எடுத்துக்காட்டாகக் கோடிக்கணக்கில் உள்ள வேதியியல் பொருட்கள் ஒவ்வொன்றையும் ஒரே பெயரிட்டு இன்னும் அமைக்கவில்லை. அனைத்துலகத் தூய மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (International Union of Pure and Applied Chemistry) வேதியியல் பெயர்களை நிறுவப் பல விதிகளை அமைத்துள்ளது.

ஆனால் காலத்தால் கனிந்த வழக்குச் சொற்களும் கூடவே பயிலப்படுகின்றன. கணிப்பொறியின் பேராதிக்கத்தால் இவ்விரு முறைகளின் பயன்பாடு களும் போதாதவை ஆயின. அமெரிக்காவில் வேதியியல் கொளுப்பணிக்குழு (Chemical Abstracts Service) வேதியியல் செய்திகளைப் பரப்பக் கணிப் பொறியைப் பயன்படுத்த நேர்ந்தது.

இத்தேவைக் கேற்ப வேதியியல் பொருட்களுக்குப் பெயரிடும் விதிகளை மாற்றியும், புகுத்தியும் அமைத்தது.

ஆங்கில வேதியியல் வழக்கு மொழி வேறு பாடுடையதாகவும், முறையில்லாமல் இருக்கிறது.

கணிப்பொறியில் பயன்படுத்தப்படுவதற்காகப் புகுக்கப்பட்ட வேதியியல் கொளுப்பணிக் குழுச் சொற்கள் (Cas) எளிமை இல்லாமலும், சிக்கல் நிறைந்தவையாகவும் உள்ளன.

பாடமொழியில் வழக்குச் சொற்களும் மிகையாக உள்ளன. ஆங்கிலத்தின் வளர்ச்சிக்குக் காரணம் தேவைக் கேற்ப அவர்கள் சொல்லை ஆள்வதுதான்.

ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அறிவியலிலும் தேவை நேரும்போது பயன்படுகின்றன. ஒரு பொருளை அல்லது கருத்தைக் குறிக்க ஒரே சொல் தான் என்று தீவிரமாகத் தீர்மானிக்கக் கூடாது.

கலைச்சொற்களில் ஒட்டுக்களின் பயன்பாடு:

அறிவியலில் முன் ஒட்டுக்களும் ((Prefixed) பின்னொட்டுக்களும் (Suffixed) பெரும் பயனை விளைவிக்கின்றன. இவைகளைத் தமிழில் ஒழுங்கு செய்துகொள்ளுதல் வேண்டும். ஆங்கிலத்தில் எல்லா ஒட்டுக்களும் ஒரு பொருளையே தருகிறது என்று கூற முடியாது. பாரா (Para) என்னும் முன்னொட்டைக் கவனியுங்கள்.

பாரா (Para) நைட்ரோபென்சாயிக் அமிலத்தில், பாரா (Para) என்னும் முன்னொட்டு கார்பாக்சிலிக் தொகுதியின் மூன்றாவது நிலையில் நைட்ரோ தொகுதியில் உள்ளது என்பதைக் குறிக்கிறது.

Paragraphic - என்பது ஒரு நோய், மூளையில் காயம் ஏற்படுவதால் நேரும் நோய். இந்நோயாளி எழுதும் போது எழுத்துக்கள் ஒழுங்கின்றி அமைகின்றன. இங்கு Para - என்பது ஒழுங்கின்மையைக் (Disorder) குறிக்கிறது.

Para-Biotic – twins என்ற சொற்றொடரில் para-biotic - என்ற சொல். இருவர் பக்கவாட்டில் இணைக்கப்பட்ட நிலையைக் குறிக்கிறது. இந்த இரட்டையரைச் சியாமிய இரட்டையர் (Siamese Twins) என்பார்கள். இங்கு Para - என்ற முன்னொட்டு பக்கவாட்டில் என்று பொருள்படுகிறது.

Para - என்ற ஒட்டுப் பின்னொட்டாகவும் பயன்படுகிறது. Primipara - என்ற சொல் ஒரு குழந்தையைப் பெற்ற தாயையும், Multipara - என்ற சொல் பல குழந்தையைப் பெற்ற தாயையும் குறிக்கும். Primipara, Multipara - என்ற சொற்கள் ஒட்டுகளின் புணர்ச்சியிலேயே விளைந் தவை என்பதையும் கவனியுங்கள்.

அறிவியலில் ஒரே ஒட்டு இடத்திற்குத் தக்கவாறு பல பொருள் களையும் கொடுத்து நிற்கிறது. ஆங்கில அகராதியைப் புரட்டினால், ஒரே ஒட்டு பல பொருள்களைத் தருவதைக் காணலாம்.

குறியீடுகள், வாய்ப்பாடுகள், சமன்பாடுகள்:

குறியீடுகள், வாய்ப்பாடுகள், சமன்பாடுகள் ஆகியவற்றை ஆங்கிலேயரும், அமெரிக்கரும், ஆங்கில மொழியில் பயன்படுத்துவதைப் போல நாம் பயன்படுத்தலாம். அராபிய எண்களையும் பயன்படுத்தலாம். இதனால் சிக்கல் இப்பொழுது தவிரும் என்பது மெய்.

ஆனால் இக்குறியீடுகளும், வாய்ப்பாடுகளும், சமன்பாடுகளும், எண்களும் அனைத்துலகக் கோட்பாடு என்று நமக்குச் சொல்லப் படுகிறது. இக்கருத்து எவ்வளவு மெய் என அறிய வேண்டும். ஆங்கிலம் அல்லாத பிறமொழி மக்கள் இவைகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய வேண்டும்.

மேலும் ஒரு குறியீட்டுக்கு ஓர் அளவைக்கு ஒரு குறியீடு என்று அணுகியதேயில்லை. சில இயற்பியல் (physical Quantities) அளவைகள் பல குறியீடுகளைப் பெறுகின்றன.

திசைவேகம் (Velocity) u, v, c - என்ற குறியீடுகளால் குறிக்கப்படுகிறது. அவாகாட்ரோ மாறிலி (Avogadre Constant) Na, I - என்ற இரு குறியீடுகளையும், அலை எண், சிக்மா என்ற குறியீடுகளையும் பெறுகின்றது. ஒரே குறியீடு பல இயற்பியல் அளவைகளையும் குறிக்கின்றது.

அனைத்துலக அளவை இயக்கம் (System Internation D Unite’s) SI அலகுகளையும் குறியீடு களையும், பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாலும், பல பழைய அலகுகளும், குறியீடுகளும் கூடவே நிலைபெறுகின்றன. இரண்டு ஆட்சியும் நேர்கின்றன.

கலைச்சொல் தேர்வில் இணக்கமும் ஆயத்தின் பங்கும்:

ஆங்கிலத்தை நாம் அறிவோம் என்ற அளவில், அம்மொழி எவ்வளவு இணக்கமாகவும் (Accommodative) வளைந்து கொடுத்தும் (Flexible) சொற்களை ஏற்கிறது என்பதை அறிய வேண்டும்.

தூய மொழிப்போராட்டம் எல்லா மொழி யினரிடமும் உண்டு. இத்தாலியில் 1582-ஆம் ஆண்டு Accademia Della Cruaea நிறுவப்பட்டது. 1635-இல் பிரெஞ்சு ஆயம் (French Academy, I ‘Academic’ Francaise ) தோன்றியது.

மொழி ஆட்சியை வரையறை செய்தல், (Standardisation), தெளிவு செய்தல் (Refining), முடிவாக்கல், (Fixing), இசைகளின் கோட்பாடு, ஆங்கிலத்திலும் மொழி ஆட்சியை வரையறுக்க ஓர் ஆயம் தேவை என்று ஆடிசன், டிரைடன், ஸிவிப்ட் (Swift) ஆகியோர் கருதினர்.

இங்கிலாந்தில் 1662-இல் நிறுவப்பட்ட மன்னர் கழகம் ((Royal Society) அறிவியல் சிந்தனைகளுக்கே முன்னுரிமை தந்தது; மொழி அறிவுக்கு அன்று; ஆங்கிலேயர்கள் தாங்களாகவே சிந்திக்கவும், செயல்படவும் எந்த ஆயமும் தடைக்கல்லாக இருப்பதை விரும்பவில்லை.

இத்தகைய விடுதலை வேட்கையின் காரணமாகத் தீவிரமான ஒரு மொழி ஆயத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. பிரெஞ்சு ஆயத்தால் நன்மையை விடவும், தீமையே மிகுதி யாக நேர்ந்ததாகப் பலர் கருதினர்.

பிரிஸ்ட்லே (Joasph Prieatley) பெரிய அறிவியல் அறிஞர். மொழி அதிகாரியும் கூட, ‘இலக்கணம்’ (Grammar) என்ற நூலை யாத்தவர். அதில் இவர் மொழி ஆயத்தின் தேவையை மறுக்கிறார்.

“ஒரு மொழியிலுள்ள சொற்களின் பயன் பாடு குறித்து நன்கு அதை அறிந்து, அதை உறுதிப் படுத்திப் புழக்கத்தில் கொண்டு வருவதற்கென அதிகாரப்பூர்வமான ஒரு பொது மன்றம் அமைக்கப்படும்.

அதன் முதன்மைத்திட்டம், இதைச் செயல் படுத்துவதுதான் அதற்காகத் தன்னம்பிக்கையோடும், ஆர்வத்தோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் சில அறிஞர்கள் செயல்படுவதுண்டு.

ஆயினும் அவர்கள் கையாளும் முறைகள் முழுவதும் ஏற்புடையதாக இருப்பதாகச் சொல்வதற்கில்லை. இதற்காக அவற்றைத் தவறாக மதிப்பிட்டு ஒதுக்கிவிடவோ, வேறொரு மொழியோடு பொருத்திப் பார்க்கவோ வேண்டியதில்லை.” என்பது அவர் கூற்று.

ஒரு மொழியின் பேச்சு வடிவங்கள் காலப் போக்கில் வளர்ச்சியுற்று தங்களது தகுதியையும், திறனையும் நிலைப்படுத்திக் கொள்ளும். இதில் நாம் ஐயம் கொள்ள வேண்டியதில்லை.

 சொற் பயன்பாடு குறித்த அறிஞர்கள் கருத்துக்களிலுள்ள நிறை, குறைகளை ஆராய்ந்து காலங்கருதி நல்ல தொரு முடிவை எடுக்க இயலும்.

அது மெல்ல நடந்தாலும், உறுதியானதொரு முடிவைத்தரும். அறிஞர்களின் செயல்பாட்டிற்கு அவர்களின் வேகமும், ஆய்வுத்திறன் குறைவும் காரணம் ஆகலாம்.

தூய ஆங்கிலக் கழகமும் (Society for Pure English ) மொழி வளர்ச்சியில் மக்களுடைய பங்கை வரவேற்றது.

“ஒரு மொழி தன்னுடைய தோற்றம் பயன் பாடு ஆகியவற்றில் தன்னியல்போடு எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாகச் செயல்படும் அல்லது செயல்பட வேண்டும் என்பது நமது நம்பிக்கையாகும்.

அந்த மொழியில் சிறந்த சொற் களை உருவாக்கிப் பயன்படுத்துவோர் படிப்பறி வில்லாத சாதாரண மக்கள்தான். அந்தப் பொது வழக்கிலுள்ள சொற்களில் பொருத்தமானவற்றை, தகுதியானவற்றை அறிவியலார் செயற்கையாக உருவாக்கும் சொற்களுக்குப் பதிலாக எடுத்தாள்வது ஏற்புடையதாகும்.”

இது போன்று மற்றொரு கருத்தாக, கே.எல்.பிக் (K.L. PIKE). எனும் மொழி அறிஞர் ஒருவருக்கு நம்பிக்கையற்ற அழகான பெண்ணைவிட அழகற்ற நம்பிக்கையுள்ள பெண்ணே ஏற்றவள் என்பதைப் போன்று சொல்லில் அழகு முக்கியமல்ல, கருத்தே (Concept) முக்கியம் என்பார்.

தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களை ஒரு முறை சார்ந்து திருத்தவும், செப்பம் செய்யவும், வரையறுக்கவும் (Standardisation of Terms) ஒரு அமைப்பு உடனடியாகத்தேவை என்ற ஆழமான எண்ணம் நிலவுகிறது.

இந்த எண்ணம் வளர்ச்சியின் அறிகுறியே என்றாலும் சில அறிஞர் களின் குழுவைக் கொண்ட ஓர் அமைப்பு தன் தீர்மானத்தை முடிவானதாகவோ, மக்கள் மீது திணிக்கக் கூடியதாகவோ கருத முடியாது.

ஓர் அமைப்பின் தீர்மானம் ஒரு வழிகாட்டியே. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்தின் தேவையைப் பொறுத்தும், இத்தீர்மானம் நிற்கும் அல்லது மாறும் அல்லது அழியும்.

தமிழைப் பொறுத்தவரையில் ஓர் ஆயம் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் துறைஅறிவு மிக்கவரே அத்துறையைச் சார்ந்த சொல்லாட்சியைத் தீர்மானம் செய்ய வேண்டும்.

 தமிழ் மொழி அறிவு மிக்கவர் அவருக்குத் துணை நிற்க வேண்டும். இத்தீர்மானம் நிலைப்பதும், அழிவதும், அதன் தகுதியைப் பொறுத்தது.

ஒரு சொல்லாட்சி தகுதி இல்லாமல் அழிந்து போவதால் மொழி அழிந்து போகாது. புதிய தகுதியுள்ள சொற்கள் தோன்றும், துறைஅறிவு மிக்கார், மொழியியல்அறிவுமிக்கார், தமிழ்அறிவு மிக்கார் என்ற வரிசையில் ஒவ்வொரு துறை ஆயமும் அமைய வேண்டும்.

இதில் மேலோர், கீழோர் பாகுபாடு இல்லை என்பதை அறிய வேண்டும். உண்மையில், ஒரு சொல் வரவேற்கப்படுவதும், வழங்கப்படுவதும், ஒதுக்கப்படுவதும் மக்களிடம்தான் உள்ளது.

ஆங்கிலேயர் கடைப்பிடிக்கும் இணக்கத்தையும், வளைத்துக் கொடுக்கும் திறனையும், நம் தமிழர்கள் ஏற்றுத் தமிழ் அறிவியல் கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபட வேண்டும்.

 கலைச் சொற்களைத் தீர்வு செய்யும் அமைப்பின் தீர்மானம் தேவைக்கேற்ப வழிகாட்டியாக அமைய வேண்டுமே தவிர, பல புதுமையான வளர்ச்சியான சிந்தனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் தடைக்கல் ஆகக் கூடாது.

கலைச்சொற்களைத் தீர்வு செய்யும் அமைப்பு என்பதைவிட ஆய்வு செய்யும் அமைப்பு என்பது பொருந்தும்.

அறிவு வளர்ச்சியும், வாழ்க்கை மேம்பாடும்:

மாணவர்களை அறிவியல் கற்பதில் மிகுந்த ஆர்வம் உடையவராக ஆக்குதல் வேண்டும். இலக்கிய எழுத்து, பேச்சுப் போட்டிகளைப் போல, அறிவியல் எழுத்து, பேச்சுப் போட்டிகள் நிகழ்த்தப் பெறுதல் வேண்டும். நூல்களைப் படிப்பதில் ஆர்வம் மிகுந்ததால்தான், நூல்களை வாங்கும் ஆர்வம் மிகும். நிறைய நூற்கள் வாங்கப் பட்டால் தான் நிறைய நூல்கள் புதிதாக எழுதப் படும். நிறைய, புதிய நூற்கள் எழுதப்பட்டால் தான், கலைச்சொல்லாக்கத்தில் தேவையான, விரும்பத் தகுந்த வரையறைகளைச் செய்ய முடியும். தமிழ் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தது.

ஒளியியலில் ஒரு பண்பு வியப்பைத் தரும். ஒரே வழி ஒளி அலையாக இயங்குகிறது. இதை அலை - துகள் இரட்டைத் தன்மை (Wave Particle Dualism) என்பார்கள். இரண்டு தன்மையும் ஒக்கும்.

முட்டையிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டையா? வித்திலிருந்து மரமா? மரத்திலிருந்து வித்தா? பலர் கேட்ட வினாக்கள், இரண்டும் ஒப்பே.

தமிழர் அடிப்படையில் வாழ்க்கை வளம் பெற்றலின் அறிவு வளர்ச்சியா? அறிவு வளம் பெற்றபின் வாழ்க்கை மேம்பாடா? நாம் கேட்கும் வினாக்கள் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஆனாலும் அடிப்படை வாழ்க்கை வளம்பெற்ற பின்தான் பிற நிகழும்.

அந்நாள் கனியும் பொழுது, தமிழர் அறிவு விரைவில் மேம்பட நாம் அடிப்படை கோல வேண்டும்; ஆயத்தமாக வேண்டும். அத்தகைய முயற்சியின் ஒரு கட்டம் தான், நாம் தேவையான விரும்பத்தகுந்த வகையில் கலைச் சொற்களை வரையறை செய்வது ஆகும்.

ஒரு சொல் தெளிதல் - முழுச் சொற்கள்:

Fungus - என்ற சொல்லுக்குப் ‘படை’, ‘பங்கி’, ‘பூஞ்சை’, ‘பூசணம்’, என்ற சொற்கள் தமிழாகத் தரப்படுகின்றன. இதில் வழக்கில் உள்ள காளான் அல்லது பூசணத்தை ஏற்றுப் பிறவற்றைத் தவிர்க்கலாம்.

Cleft Palate - அண்ண அறவு, அண்ணப் பிளப்பு என்று கொள்ளப்படுகிறது. அறவு, பிளப்பு இரண்டும் ஒக்கும் என்றாலும், ஒன்றை இயற்கையாக நேர்வதற்கும் மற்றதைச் செயற்கையாக நேர்வதற்கும் கொள்ளலாம்.

ஒட்டுக்கள்:

Pseudo - என்னும் முன்னொட்டு ‘போலி’ என்றும் ‘பொய்’ என்றும் பெயர்க்கப்படுகிறது. ‘போலி’ போதுமானது. Anti - என்ற முன்னொட்டுக்கு ‘எதிர்ப்பு’, ‘முரண்’, ‘மறி’, ‘பகை’, ‘அடக்கி’, ‘அகற்றி’, ‘ஒழிப்பு’ என்ற பல தமிழ்ச் சொற்கள் தரப்பட்டிருக்கின்றன. ‘முரண்’ என்ற சொல் முற்றும் பொருந்தும். ஐவளை- என்ற பின்னொட்டுக்குக் கூறப்பட்டுள்ள ‘அழல்’, ‘அழற்சி’, ‘வீக்கம்’ என்ற சொற்களில் ‘அழற்சி’ மருத்துவ இயலில் நிலை பெற்றுள்ளது.

இடத்திற்குத் தக்க சொல்லும் பொருளும்:

Allergy - மாற்றுவினை, இச்சொல்லிலும் ‘ஒவ்வாமை’ சிறந்ததாகக் கருதப்படுகிறது. ‘உவ்வா’ என்ற வழக்கு இப்பொழுது அரிதாக உள்ளது. இது ‘புண்’ அல்லது ‘காயத்தைக் குறிக்கும்’.

‘ஒவ்வா’, ஒவ்வாமை என்பதன் மருஉ ‘உவ்வா’ Allergy - ஒவ்வாமை என்ற நோயை மட்டுமன்று; இடத்திற்குத் தக்க Incompatible - என்ற மருந்தியல் (pharmacological) நிலையையும் குறிக்கலாம்.

Lung - ‘நுரையீரல்’, ‘சுவாசப்பை’ எனப்படுகிறது. நுரையீரல் தூய தமிழ் ஆதலால் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘Cervix’ - என்ற இலத்தீன் சொல்லுக்குக் ‘கழுத்து’ என்று பொருள்.

‘Cervix of Uterus’ - என்னும் போது ‘சூற்பை கழுத்து’ என்னாமல், ‘சூற்பை வாய்ப் பகுதி’ என நம் மொழி அமைதிக்கு முதலிடம் தந்து மொழி பெயர்த்திருப்பது நன்று.

ஒலி இணக்கமாக்கல்:

‘சீக்கு’ என்னும் சொல் ‘Sick’ - என்ற ஆங்கிலச் சொல் நகர்ப்புற மக்களிடம் பெரும்பாலும் பயிலப்பட்டாலும், ‘நோய்’ என்னும் தமிழ்ச்சொல் நெடிய காலமாக வேரூன்றிய சொல்லாகும்.

‘Carpus’ - என்பது மணிக்கட்டைக் (Wrist) குறிக்கும். ஒலி இணக்கமாகக் ‘காப்பு’ என்று மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.

 ‘மணிக்கட்டு’ வழக்கில் உள்ளதால் ‘காப்பு’ என்னும் சொல்லைத் தவிர்க்க வேண்டும். ஒலி இணக்கமாக உள்ள போது, பிற சொற்கள் கிடைக்காத வரை சொற்களை ஒலிபெயர்ப்புச் செய்து ஆளலாம்.

வழக்குச் சொற்கள்:

‘இதயம்’ என்ற சொல் பெருவழக்கிலுள்ளது. ‘நெஞ்சாங்குலை’ என்ற தூய தமிழ்ப் பெயர்ப்பு கால் கொள்ளவில்லை. Heart - என்பதற்கு இதயம், இருதயம், மார், நெஞ்சு என்ற சொற்கள் பயன்படுகின்றன. ‘இதயம்’. என்ற பெருவழக்குச் சொல்லையே தேரலாம். ‘இருதயம்’ நெருடலானது. Heart Attack - என்னும்போது மாரடைப்பையும் Heart Burn - என்னும்போது, ‘நெஞ்செரிவையும்’ பயன் படுத்தலாம்.

புதிய சொல் ஆக்கல்:

Aerosol - கூழ்மத்தில் ஒருவகை, பிரிகை நிலைமை நீர்மமாகவும், பிரிகை ஊடகம் வாயு வாகவும் அமைகிற கூழ்மம். இதற்கு ‘முகில்’, ‘தூசிப் படலம் அதிகரிப்பு’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. முகிலும் தூசிப்படலும் ‘Aerosol’- க்கு எடுத்துக்காட்டுகள், ‘Aerosol’- க்கு மொழிபெயர்ப்புச் சொற்கள் ஆகா. இதற்குப் புதிய சொல் ஆக்கியுள்ளார்கள்.

அச்சொல் ‘காற்றுக் கரைசல்’ ஆகும். ‘Fits’ வலிப்பு, ‘Epilepsy’- வலிப்பு உள்ள நோய். வலிப்பு பிற காரணங்களாலும் நேரலாம். ஆதலால் ‘Epilepsy’ இன் வகைகளான ‘Grapdmal, Petitmal’- என்ற சொற்களுக்குப் பெருவலிப்பு சிறு வலிப்பு, என்ற சொற்கள் போதுமானதாக இல்லை. புதிய சொற்களைப் படைக்க வேண்டும்.

கலைச் சொற்கள்:

சொற்களுக்குக் கூச்சம் கிடையாது. ஆனால் சொல்பவர்களுக்குக் கூச்சம் நேர்வதால் குழப்பம் உண்டாகிறது. Anus - குதம், எருவாய், கழிவாய். ‘கழிவாய்’ பொதுச்சொல், கழிவு அல்லது எச்சம், குதம் வழியே மட்டுமன்று; பிற உறுப்புக்கள் வழியேயும் வெளியேறுகிறது. ஆதலின் ‘கழிவாயைத்’ தவிர்க்க வேண்டும். ‘குதம்’. ஏற்புடைய சொல்; வழக்கில் உள்ள சொல். மருத்துவர்கள் கூச்சப் பட்டால் நோய் குணமாகாது. சொல் ஆட்சியில் கூச்சப்பட்டால் பொருள் விளங்காது.

தவிர்க்கப்பட வேண்டியவை:

Cirrhosis- ‘ஈரல் நோய்’, இப்பெயர்ப்பு தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் ஈரல் நோய்க்குள் ஒன்று ‘Cirrhosis‘ .

மேலும் ஈரல் உள்ளிட்ட பல உறுப்புக்கள் கடினமாவதைக் குறிக்கும் சொல் ‘Cirrhosis’. ‘ஈரல் இறுக்கி நோய்’ என்பதில் நோயைத் தவிர்த்து ‘ஈரல் இறுக்கி’ எனலாம். ‘நோய்’ மிகையான சொல். ‘மகோதரம்’ என்ற சொல் Cirrhosis- க்கு மட்டுமன்று, Ascites -க்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரே சொல் இரண்டு வகை நோய்க்குப் பயன்படுத்தப்படுதல் ஆகாது. சிக்கல் நேரும். Cirrhosis - என்பதற்கு ‘இறுக்கி’ என்றும். ஹளஉவைநள- என்ற சொல்லுக்குத் தமிழ்ச் சொல் கிடைக்கும்வரை ‘மகோதரம்’ என்ற பிற சொல்லையும் ஏற்கலாம்.

வழக்கிலுள்ள சொற்களை எடுத்தாளுதல்:

மக்கள் பேச்சு வழக்கில் பல சொற்கள் கலைச் சொற்களாகப் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. எடுத்துக்காட்டாக ‘இரத்த சோகை’, இச்சொல் பெரும்பாலும் எல்லோருக்கும் பழகிய சொல். Anaemia - என்பதற்கேற்ற சொல்லாக இதனைப் பயன்படுத்திக் கொள்வதில் தடை இல்லை.

() பிற நூல்களில் கண்ட சொற்களை எடுத்தாளல்:

சில கருத்துக்களை விளக்கத்தக்க சொற்கள் மக்கள் வழக்கில் இல்லாது போகலாம். ஆனால், மருத்துவ நூல் எழுதிய ஆசிரியர்கள் தகுந்த சொற் களைப் பயன்படுத்தியிருக்கலாம். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் முதலியவை சில மருத்துவ நூல்களை வெளியிட்டு உள்ளன. கலைக்கதிர் சில மருத்துவ கட்டுரை களை வெளியிட்டுள்ளது. இவற்றில் பயன்படுத்தப் பட்ட சொற்களில் ஏற்ற சொற்களை எடுத்துக் கொள்ளுதல் தரும்-

(எ.கா.):         அறுவை மருத்துவம் - Surgery

உடல் கூறியல் - Anatomy - முதலியவை.

() ஆங்கில - தமிழ் அகராதிகளைப் பயன் படுத்தித் தக்க சொற்களைக் காணல்:

டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியாரின் ஆங்கிலம்- தமிழ் அகராதி கலைக்களஞ்சியம் போன்றவைகள் கலைச்சொல் பயன்பாட்டுக்கு மிகவும் உதவும். அதே போல, இலங்கை அரசு, தமிழக அரசு வெளியிட்டுள்ள சில கலைச்சொல் பட்டியல்களும் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொகுத்த கலைச்சொல் பட்டியல்களுடன் டாக்டர் சாமி சண்முகம், முனைவர் மணவை முஸ்தபா, டாக்டர் சம்பத்குமார் அகராதிகளும் உதவும்.

சொல்லாக்கம்:

மக்கள் வழக்கு, நூல்கள், அகராதிகள், கலைச் சொல் பட்டியல்கள் ஆகியவற்றில் காணப்படாத அல்லது காணப்பட்டும் பொருத்தமில்லாததாகக் கருதப்பட்ட சொற்களுக்குப் பதிலாக புதிய சொற்களை உருவாக்கிக் கொள்ளுதல்.

Hernia - என்பது Hronas - என்கிற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. இதை Sprut என ஆங்கிலத்தில் வழங்கினர். இதற்கு ஏற்ற தமிழ்ச் சொல்லாகக் ‘குடல் பிதுக்கம்’ என்பது உருவாக்கப் பட்டது. பலரும் Hernia - ‘குடல் இறக்கம்’ என்றனர். அதைவிட, ‘குடல் பிதுக்கம்’ என்பதே பொருளுடை யதாகத் தோன்றியதால், இச்சொல் உருவாக்கப் பெற்றது.

சொல் தேர்வு:

ஒரு கருத்தை விளக்கத் தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட சொல் காணப்படும். உதாரணம்:

Inflammation - என்பதற்கு அழற்சி, அதாளம் என் பவை. இவற்றுள், அதிகப் பயிற்சியும், தெளிவும் உள்ள சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கையாளுதல், ‘அழற்சி’ என்பது ‘அதாளம்’ என்பதைவிட வழக்குப் பயிற்சி உள்ள சொல்லாகையால், அதை எடுத்துக் கொள்ளுதல் தகும்.

தமிழ்ப்படுத்தல்:

தக்க சொல்லைக் காணுதல்/ உருவாக்குதல் இயலாத கட்டத்தில், சொல்லுக்காகக் காத்திராமல், சர்வதேசச் சொற்களை அப்படியே தமிழ்ப்படுத்திக் கொள்ளுதல். protoblasms - புரோட்டோபிளாஸம்

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே:

சில சொற்களைச் சொல்லுதல் நாகரிகம் இல்லை எனக் கருதப்பட்டது. இது பொதுவான பேச்சு/ எழுத்து வழக்கில் சரியாகப்படலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றி எழுதும் விஞ்ஞான நூற்களில் இது சரிப்பட்டுவராது.

‘முலை’ என்று சொல்வது கூடாது. ‘மார்பு’ என்று தான் சொல்ல வேண்டும் என்பார்கள்.

 ஆனால், மருத்துவஇயலில், மார்பு, முலை ஆகியவை வெவ்வேறு உறுப்புக்களைக் குறிக்கும். இவற்றில் வரும் நோய்களுக்கு சிறிது மாறுபட்டவை. இவ்விடங்களில் மார்பு, முலை என்பதைத் தனித்தனியாகக் குறிக்க வேண்டும்.

பழைய தமிழ்ச் சொற்களுக்குப் புதிய பயன்பாடு தருதல்:

தமிழில் பொருள் மிக்க, ஆனால் வழக்கில் இல்லாத சொற்கள் எண்ணிலடங்காமல் உள்ளன. இவைகளை அறிவியலில் ஆளலாம். புதிய வழக்கு நேரும்.

ஒரே சொல்லின் பல வடிவங்களை, அல்லது ஒரே சொல்லின் பல பொருள்களை, இவ்வழக்கால் தவிர்க்கலாம்.

எடுத்துக்காட்டாக, அறிவியலில் மிகவும் பயன்படும் Abstract - என்ற சொல் ‘சுருக்க உரை’ என்று மொழி பெயர்க்கப்படுகிறது. அறிவியல் கட்டுரையின் Abstract வெறும் சுருக்கம் அன்று.

கட்டுரையில் மிக முக்கியமான கருத்தைக் கொண்டு விளங்குவது. புறப்பொருள் வெண்பா மாலையில் ஒரு நூற்பாவின் உட்கிடக் கையைக் கொண்டு நடக்கும் அடிகளுக்குக் ‘கொளு’ என்று பெயர். Abstract - என்பதற்கு மிகவும் பொருத்தமான தமிழ்ச்சொல் ‘கொளு’ என்பதாகும்.

முடிவுரை:

இவ்வாறான அடிப்படைக் கோட்பாடுகள்; தமிழறிவும் எழுத்துத் திறனும் உள்ளவர்கள், அறிவியல் நூல், கட்டுரைகளை எழுத முற்படும் பொழுது வேற்று மொழிச்சொற்களுக்கு நேர்த் தமிழ் கலைச் சொற்களை உருவாக்க ஒரு வழி காட்டியாக அமையக்கூடும்.

இத்துடன் பொது மக்கள் வழக்கில் உள்ளதை, சரியான பொருளைக் குறிக்க வல்லதை எளிதான, அருவருப்பற்ற, காலத்திற்கேற்ற கருத்துக்களை உள்ளடக்கிய, சொற்செட்டும் பொருட் செறிவுடன் சுருங்கிய வடிவில் அறிவியல் நூலுக்கு முதுகெலும்பான கலைச்சொற்களை வடிக்க துணை நிற்கக்கூடும்.

Pin It