ஒன்று

சுசீந்திரம் திருவாவடுதுறை மடத்தின் பழைய நூல் நிலையத்தில் தட்சிணாமூர்த்தி பற்றிய ஒரு நூலைத் தேடிப்போன போது தான் சுசீந்திரம் திருவாடுதுறை ஆதீன மடம் செப்பேட்டின் பழைய கையெழுத்து பிரதியைப் பார்த்தேன். அதைத் திருவாவடுதுறை மடத்திலிருந்து பதிவு செய்தவர் வித்துவான் குமரேச பிள்ளை என்ற பெயரும் அதிலிருந்தது. அப்போது சுசீந்திரம் மடத்தின் மேலாளராக இருந்த கிருஷ்ணபிள்ளை என்பவரைத் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர் அந்த ஆதீனம் பற்றிய பழைய விஷயங்களை எல்லாம் கையெழுத்துப் பிரதியில் எழுதி வைத்திருந்ததாகக் கேள்விப்பட்டேன். இப்போது அந்த ஆவணங்கள் எவையும் இல்லை என்றார்.

சுசீந்திரம் ஊரில் சைவ சமய பிரச்சாரராக இருந்த கந்தசாமிப் பிள்ளை, பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற தமிழறிஞர் வித்துவான் குமரேச பிள்ளை ஆகிய இருவரிடம் திருவாவடுதுறை ஆதீன செப்பேடு பற்றி கேட்கலாம் என்றும் கிருஷ்ணமூர்த்தி சொன்னார். குமரேச பிள்ளை சதாவதானி செய்குத்தம்பி பாவலரின் மாணவர். நான் அவரைச் சந்தித்தபோது நான் கேட்ட விஷயத்தை விட்டுவிட்டு பாவலரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார் என்றாலும் கொஞ்சம் செய்தி கிடைத்தது.

இது நடந்து பத்து ஆண்டுகள் கழித்து சிதம்பரம் தொல்லியல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தியைத் தஞ்சை தொல்லியல் கழகக் கருத்தரங்கில் சந்தித்தேன். பேச்சுவாக்கில் நான் பார்த்த செப்பேட்டின் பிரதியைப் பற்றி சொன்னேன். அவர் அது பற்றி சிறு கட்டுரை எழுதியிருப்பதாகச் சொன்னார். மூலச் செப்பேடு திருவாவடுதுறை ஆதீனத்தில் இருப்பதாகவும் நீங்கள் உங்கள் பார்வையில் விரிவாக எழுதலாம் என்றும் சொன்னார். அவரும் சில செய்திகளைச் சொன்னார்.susheendram templeஇரண்டு

நீண்ட கைப்பிடியுடன் கூடிய இந்தச் செப்பேடு நீள் சதுரத்தில் அமைந்தது. முதல் பக்கத்தில் 22 வரிகள். இரண்டாம் பக்கம் 19 வரிகள் ஆக 49 வரிகள். வேலைப்பாடு இல்லாத செப்பேடு என்றார் கிருஷ்ண மூர்த்தி. இது சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் ஆரம்ப காலத்திலேயே இருந்தது என்றும் அது பற்றிய செய்திகள் அவர்கள் வெளியிட்ட பழைய மலர் ஒன்றில் இருந்ததாகவும் கூறினார்.

இந்த செப்பேடு பற்றி இன்னும் எழுதலாம் என்று எனக்குத் தோன்றியது. வேணாட்டு அரசர்கள் ஆண்ட மலையாள தேசத்தில் சைவத்தையும் தமிழையும் கொண்டாடிய ஆதீனம் எந்தப் பிரச்சினையும் இன்றி செயல்படுவதற்குரிய சூழல் இருந்தது. இதற்கு இவர்கள் நம்பூதிரிகளைப் போலவோ கோவில் நிர்வாகிகளைப் போலவோ உள்நாட்டுக் கலகங்களில் தலையிடவில்லை என்பது முக்கியமான காரணம்.

அந்தச் செப்பேட்டை மீண்டும் படித்த போது சைவ சித்தாந்தத்தை முறைப்படியாக கற்றுத் தேறிய உரை எழுதியவர்கள் மலையாளப் பின்னணியுள்ள ஒரு ஊரில் இருந்தார்கள்; அவர்கள் இருந்த அந்த மடம் தமிழை வளர்த்தது என்பது வியப்பிற்குரிய விஷயமாகத் தோன்றியது

 நாஞ்சில் நாட்டில் திருவாவடுதுறை ஆதீன மடங்கள் ஆரல்வாய்மொழி, தாழக்குடி, தேரூர், பறக்கை, சுசீந்திரம், பீமநகரி என்னும் ஊர்களில் இருந்தன. இந்த மடங்களுக்குத் தலைமை இடமாக சுசீந்திரம் இருந்தது. நாஞ்சில் நாட்டில் மலையாள பின்னணி முழுதுமாய்க் கொண்ட ஒரு கிராமம் சுசீந்திரம். இங்கு உள்ள கோவில் நிர்வாகம் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இங்கு நாயர் சமூகத்தினர் பெருமளவு இருந்ததும் ஒரு காரணம். அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்று மலையாளம் பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்டது. இன்னொரு பெரிய பள்ளிக்கூடத்தில் மலையாளம் வழி அறிவியல், வரலாறு போன்ற பாடங்கள் 70கள் இறுதிவரை கற்பிக்க இப்படியான ஒரு ஊரில் மடம் உருவானதன் பின்னணி இந்தச் செப்பேட்டில் கொஞ்சம் வெளிப்படுகிறது.

 சுசீந்திரம் செப்பேட்டில் காலம் மிகத் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. விருச்சகத்தில் வியாழம் நின்ற கொல்லம் 826 ஆம் ஆண்டு பங்குனி 23 ஆம் தேதி பூர்வ பட்சத்துத் திசமியும் வெள்ளியாட்சையும் திரிதி நித்தியரோகமும் பூசமும் ஆனைக் காணமும் பெற்ற நாள்" என முதல் இரண்டு வரிகளில் குறிக்கப்படுகிறது. கொல்லம் என்பது மலையாள ஆண்டு. இங்கு குறிக்கப்படும் பொ.ஆ 1651 பங்குனி 23 ஆம் தேதி (மார்ச் 21), வெள்ளியாட்சை என்பது வெள்ளிக்கிழமையைக் குறிக்கும்.

இது தானம் தொடர்பான செப்பேடு. தானம் பெற்றவர் திருவாவடுதுறை அம்பலவான பண்டார சன்னதி ஆவார். தானம் கொடுத்தவர் சொக்கலிங்க நாயக்கர். இந்தச் செப்பேட்டின் செய்திகள் வருமாறு:

வடமங்கலத்து முதலி நாயக்கர் சின்ன சொக்கலிங்க நாயக்கர் மடம் ஆதினத்திற்கு. தன்ம சாதன பட்டயம் வழங்கியுள்ளது. ஏற்கனவே ஆதீனத்திற்குச் சொந்தமான ஒரு நிலத்தை ஒற்றி வைத்துள்ளனர். அந்த சேரா ஒற்றி மூல ஆவணத்தைச் சுசீந்திரம் மடத்து (அதிகாரி) தானவன் சாத்தனிடம் கொடுத்துள்ளனர். அதோடு ஆதீனத்துக்குச் சொந்தமான மனையில் ஒரு மடம் கட்டி பிச்சா தேவருக்கு (நமசிவாய மூர்த்தி) கோவிலும் கட்டினார்கள். இதன் பின்னே தோட்டமும் உண்டு. இவற்றையெல்லாம் சொக்கலிங்க நாயக்கர் அம்பலவாண பண்டார சன்னதிக்குத் தானமாக வழங்கியுள்ளார். இது நடந்தது பொ.ஆ 1622 ஆம் ஆண்டில்.

மடத்தில் உள்ள அடியவர்களுக்காக நிலங்கள் கொடுக்கப்பட்டன. இந்த வயல்களும் தோட்டங்களும் அனுமநல்லூர் (அருமநல்லூர்,) குசத்தியறை (குறத்தியறை ) பஞ்சவன் காட்டு விளை (பார்வதிபுரம்) தேரூர் (சுசீந்திரம் அருகே உள்ள ஊர்,) உதிரப்பட்டி (நாகர்கோவில் ரயில் நிலையத்தை அடுத்த குக்குராமம்) கோட்டாறு (நாகர்கோவிலில் ஒரு பகுதி) பஞ்சவன் காடு, (கோட்டாற்றின் ஒரு பகுதியாக இருந்தது) நம்பி சாத்தன் கோயில் குளம் ஆகிய இடங்களில் இருந்தன. இந்த இடங்களில் பசு மேய்வதற்காக தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மடத்துப் பணியாளர்களான ஆண்டிச்சி, உமைய நாச்சியார், நாராயணி, மெக்கி, அம்மையடியாள் ஆகியோருக்கும் நிலம் கொடுக்கப்பட்டு இருந்தது.

நிலங்கள் மட்டுமல்ல, பசுக்களும் இவற்றை மேய்க்கும் இடையரும் தானமாகக் கொடுக்கப்பட்டிருந்தனர். இந்த இடையர்கள் அடிமைகள் அல்லர். சுசீந்திரம் தாணுமாலய சுவாமியின் மகேஸ்வர பூசை அபிஷேகச் செலவை, திருவாவடுதுறை ஆதீனம் மடமே கொடுக்க வேண்டும். மண்டகப்படி நடத்தும் பொறுப்பும் ஆதீனத்துக்குத்தான். இதற்கான சொத்துக்களை அம்பலவான பண்டார சன்னதிக்குத் தன்மதானம் பிரமாணமாக செய்யப்பட்டுள்ளது. இவற்றை சீடர் பரம்பரையாகச் செய்ய வேண்டும். இந்தச் செய்திகள் எல்லாம் செப்பேட்டின் முதல் பக்கத்தில் உள்ளன.

 இரண்டாம் பக்கத்தில் உள்ள பத்தொன்பது வரிகளில் பிரமாணம் செய்தவர், தானம் கொடுத்தவர், வாங்கியவர், பிரமாணம் எழுதியவர் குறித்த செய்திகள் உள்ளன.

 தாணுமாலயன் கோவில் திருவிழாவில் ஆதினம் திருக்கண் சாத்து நடத்த வேண்டும், மதுரை நாயக்கர் அரண்மனை சார்பாக வடமலையப்ப பிள்ளை நாராயணப் பல்லன் மூலம் ரூபாய் 5000 பணம் வழங்கியுள்ளார். இந்தப் பணத்தை ஆதீனப் பண்டார சன்னதிகளில் ஒருவரான மவுனப் பண்டாரம் வாங்கியுள்ளார். ஏற்கனவே சேரா ஒற்றி வைக்கப்பட்ட ஆதீன நிலத்தை மீட்டுத் தருவதாகவும் தானம் கொடுத்தவர்கள் வாக்களித்துள்ளனர். பத்திரத்தில் முதலி நாயக்கர் சின்ன சொக்கலிங்க நாயக்கர் (வடமண்டல அதிகாரி) ஒப்பமிட்டுள்ளார். நாஞ்சில் நாட்டு சுசீந்திரம் ஆண்டார் என்பவர் இந்த செப்பேட்டைப் பிரதி செய்து எழுதியுள்ளார்.

மூன்று

 கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மடங்கள் சுசீந்திரத்தில் மட்டுமல்ல பறக்கை, தாழக்குடி, தேரூர் ஆரல்வாய்மொழி ஆகிய இடங்களிலும் உள்ளன. இந்த மடங்கள் சைவம் தமிழ் இரண்டையும் வளர்க்கும் பொறுப்பை முறையாகச் செய்து வந்தன. தேரூர் பாணந்திட்டு மடத்தில் இருந்த சாந்தலிங்கத் தம்புரான் என்பவரிடம் கவிமணி தேசிக நாயகம் பிள்ளை தமிழ் கற்று இருக்கிறார். அப்போது தேரூர் தொடக்கப்பள்ளியில் மலையாளமே முதல் மொழியாகக் கற்பிக்கப்பட்டது. "கவிமணியும் ஆரம்பத்தில் மலையாளம் தான் படித்திருக்கிறார். தேரூர் ஆதீனத்தம்புரான் ஆன சாந்தலிங்கத் தம்பிரான் என்பவரே கவிமணிக்கு தமிழ் இலக்கண இலக்கங்களைக் கற்பித்து இருக்கிறார். இது பெரும்பாலும் 1896--1900 ஆண்டுகளில் இருக்கலாம்.

ஆரல்வாய்மொழி அகலிகை ஊற்று தெப்பக்குளம் மேற்கு வடக்கு பகுதியில் திருவாவடுதுறை மடம் இருந்தது. சில கல்வெட்டுகளும் இங்கு உண்டு. மடத்தை ஒட்டி நல்ல விநாயகர் கோவில் உள்ளது. அகலிகை ஊற்று கல்வெட்டு மலையாள வருஷம் 872ல் (பொ ஆ 1697) நிபந்தம் கொடுத்ததாக குறிப்பிடுகிறது. இதனால் இந்த மடம் சுசீந்திரம் மடம் கட்டிய பின்பு 70 ஆண்டுகள் கழிந்து கட்டப்பட்டிருக்கலாம்.

இந்த மடத்தில் 1940 ஆம் ஆண்டில் கூட மெய்ண்ட சாத்திர ஏடுகள் இருந்தன. நான் 1972 ல் ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த ஆரம்பத்தில் இந்த மடத்திற்கு ஒரு முறை போனேன். சில ஓலைச்சுவடிகள் அங்கிருந்தன. எண்பதுகளில் நான் அங்கு போனபோது தேவார திருவாசக புத்தகங்கள் மட்டுமே இருந்தன. ஓலைச்சுவடிகள் செல்லரித்துப் போனதாகவும் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அறிந்தேன். இந்த மடத்தில் 19 ஆம் நூற்றாண்டில் இருந்த தம்பிரான் ஒருவர் நாஞ்சில் நாட்டில் சிலருக்கு ஞான தீட்சை கொடுத்திருக்கிறார். தாழக்குடி "ஆதீன மடத்தில் பழைய இலக்கிய சைவ சித்தாந்த ஏடுகளைப் பார்த்ததாக பத்மநாப பிள்ளை என்பவர் எழுதி இருக்கிறார். இந்த ஊரில் உள்ள சிவன் கோயிலுக்குத் தாழக்குடி மடத்தின் மண்டகப்படியும் உண்டு.

பறக்கை ஆதீனம். இடத்தில் 19ஆம் நூற்றாண்டு பாதியில் தம்பிரான்கள் இருந்ததற்குச் சான்று உண்டு. 1976 வரை இங்கே தம்பிரான்கள் இருந்தனர். கடைசியாக ஞானசம்பந்தத் தம்பிரான் இருந்தார். இந்த மடத்தில் இருந்த முருகலிங்கத் தம்புரான் (1956-1970) சைவ சித்தாந்த சாத்திரம் நன்கு அறிந்தவர். ஜோதிடம் வைத்தியம் தெரியும். பறக்கை ஆதீனம் மடத்தின் எதிரே என் வீடு இருந்தது. நான் 1960-70 வரை இந்த மடத்தில் இருந்தே படித்தேன். முருகலிங்கத் தம்புரானிடம் சைவ சித்தாந்தம் யாப்பெருங்கலக் காரிகை. தண்டியலங்காரம் போன்றவற்றையும் படித்தேன்.

நான்கு

1956 வரை கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டில் சைவத்தையும் தமிழையும் வளர்த்த பங்கு ஆதீனங்களுக்கு உண்டு. திருநெல்வேலி மாவட்டத்திற்கு இது மிகவும் பொருந்தும் இதற்கெல்லாம் ஒரு பின்னணி உண்டு. மதுரை நாயக்க மன்னர்களில் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் (1601- 1609) முத்து வீரப்ப நாயக்கர் (1609- 1623) திருமலை நாயக்கர் ( 1623- 1659) ஆகியோர் காலங்களில் உயர் ஜாதியினராக கருதப்பட்ட மக்களை கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றும் முயற்சி நடந்தது. முக்கியமாக தத்துவ போதகர் என்று அழைக்கப்பட்ட ராபர்ட் டி நொபிலி (1577 - 1656) தன்னை இந்தியத் துறவி போல ஒப்பனை செய்துகொண்டு பிரச்சாரம் செய்தார். இவருக்கு எதிர்ப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் சேதுபதி மன்னர்கள் இவரை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்தக் காலகட்டத்தில் நாயக்க மன்னர்களின் உறவினர்கள் சிலர் மக்களிடம் சைவ சமய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்வம் காட்டினர். அவர்களில் முத்து வீரப்ப நாயக்கனின் ஒன்றுவிட்ட தம்பி செவ்வந்தி நாயக்கர் முக்கியமானவர். இவர் தென் மாவட்டங்களில் எட்டு சைவமடங்களை ஏற்படுத்தினார். இப்படியாக ஏற்படுத்தப்பட்ட மடங்களில் ஒன்றுதான் சுசீந்திரம் திருவாவடுதுறை மடம்.

தமிழகத்து சைவ மடங்களில் புகழ் பெற்றதும் தமிழ் மொழிக்குப் பெரும் பங்காற்றியதுமான திருவாவடுதுறை மடம் மயிலாடுதுறை மாவட்டம் குற்றாலம் வட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே உள்ளது: திருவாவடுதுறை ஊரில் உள்ள மடம் நமச்சிவாய மூர்த்தியால் 14ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டது என்கின்றனர்.

நமச்சிவாய மூர்த்தி சிவப்பிரகாசரிடம் தீட்சை பெற்றவர். உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவர். இந்த மடத்திற்கு 50க்கும் மேற்பட்ட கிளை மடங்கள் உள்ளன. இந்த மடத்துக்கு சொந்தமாக 75 கோவில்கள் உள்ளன. திருவாவடுதுறை மடங்களிலே பழமையானதும் பாரம்பரியம் மிக்கதுமான மடங்களில் ஒன்று சுசீந்திர மடம்.

ஐந்து

சுசீந்திரம் கோவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய யோகக்காரர்களின் மடங்களைப் போல் திருவாவடுதுறை மடமும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் மலையாள நம்பூதிரிகளின் Ôநிர்வாகத்தின் கீழ் இருந்த' சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் தமிழ். சைவம் இரண்டிற்கும் மரியாதை இருந்திருக்கிறது என்கிறார் கே.கே.பிள்ளை. தாணுமாலயன் கோவில் திருவிழாவில் ஞானசம்பந்தர் பால் குடிக்கும் காட்சி. சமணர்களைக் கழுவேற்றிய காட்சி ஆகியன 1940 வரை நாடகமாக நடிக்கப்பட்டது. இது தொடர்பான சடங்குகளை மலையாள நம்பூதிரிகளே நடத்தினர்.

முத்து வீரப்ப நாயக்கன் காலத்தில் அவரது தம்பி செவந்தியப்ப நாயக்கர் கட்டிய சுசீந்திர மடம் இப்போதும் ஊர் மக்களால் நாயக்கர் மடம் என்று அழைக்கப்படுகிறது. 1621 - 1651 ஆம் ஆண்டுகளில் இரண்டு காலகட்டங்களில் இங்கு கட்டுமான வேலை நடந்திருக்கிறது.

சுசீந்திர மடம் கோவில் தெப்பக்குளத்திற்கு வடக்கு பார்த்து உள்ளது. ஊரில் நாயக்கமடம் என்று இப்போதும் அழைக்கப்படும் இந்த மடம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. தெப்பக்குளத்தின் வடக்கு மேற்கு பகுதியில் இருப்பது மூலமடம். அதை அடுத்து முன்னூற்று நங்கை கோவிலை தொட்டு இருப்பது அலுவலகம். இது புது மடம் எனப்படுகிறது.

 நாயக்கர் மடம் எனப்படும் முக்கிய மடம். முகமண்டபம், விநாயகர் கோவில், அலங்கார மண்டபம், பின் மண்டபம், பந்திக்கட்டு, மடப்பள்ளி என்னும் அமைப்பை உடையது. முன் மண்டபம் கிழக்கு மேற்காக அமைந்தது. இந்த மண்டபத்தில் உள்ள தூண்களில் சிற்பங்கள் உள்ளன. இவை முத்து வீரப்ப நாயக்கர் செவந்தியப்ப நாயக்கர் இவர்களின் உறவினர்களின் சிற்பங்கள் என்று சொல்கின்றனர்.

இந்த மண்டபத்தின் மேற்கில் கிழக்கு பார்த்து விநாயகர் இருக்கிறார். இந்தக் கோவிலின் மேற்கு இருப்பது அலங்காரம் மண்டபம். இதில் 16 தூண்கள் உள்ளன. இந்த மண்டப வாசலில் கஜலட்சுமி சிற்பம் உள்ளது. இந்த மண்டபத்தை அடுத்து ஒரு மண்டபமும் பந்திக்கட்டும் (சாப்பாட்டு அறை,) மடப்பள்ளியும் (சமையலறை) உள்ளன

அலங்கார மண்டபத்தில் உள்ள தூண்களில் ஆதீன சன்னிதானங்களின் சிற்பங்கள் உள்ளன. இங்கே நடராஜர் சிவகாமி அம்மன் நமச்சிவாய மூர்த்தி ஆகியோரின் படிமங்கள் உள்ளன. இந்த நாயக்க மடத்தை அடுத்து இருப்பது புதுமடம் எனப்படுகிறது இது நிர்வாக அலுவலகம். இது சிறிய மடம்.

செப்பேட்டின்படி முதல் மடம் உருத்திர. கோடி தேசிகர் காலத்தில் முத்து வீரப்ப நாயக்கரின் கொடையால் கட்டப்பட்டிருக்க வேண்டும் (1622). முதுமடம் ஆன நிர்வாக மடம் முதலி நாயக்கர் சின்ன சொக்கலிங்க காலத்தில் (1651) கட்டப்பட்டிருக்க வேண்டும்.

திருவாவடுதுறை குருமகா சன்னிதானங்களாக இருந்த குமாரசுவாமி தேசிகர் 1622-1625) மாசிலாமணி தேசிகர். (1625- 1658) ராமலிங்க தேசிகர் (1658 - 1678) ஆகியோர் சுசீந்திர மடத்தில் சில காலம் இருந்திருக்கின்றனர். திருவாவடுதுறை எட்டாவது ஞானத் தேசிகரான மாசிலாமணி தேவர் சுசீந்திர மடத்தில் இளைய பட்டம் ஆக இருந்திருக்கிறார்.

ஆறு

சுசீந்திரம் கோவிலுக்கும் சுசீந்திரம் ஆதீன மடத்திற்கும் உள்ள உறவு 400 ஆண்டுகளாகத் தொடர்கிறது. சுசீந்திரம் கோவில் நாடக சாலையின் முன்பகுதி வடக்குப் புறம் உள்ள தூணில் இருப்பது திருவாவடுதுறை மடத்துத் தம்பிரான் என்பது மரபுவழிச் செய்தி. இது போலவே கோவில் கோபுரம் மாடியில் சுவரில் ஆதீனம் சன்னிதானங்களில் ஓவியங்கள் உள்ளன.

சுசீந்திரம் கோவில் சித்திரைத் திருவிழாவிலும் மார்கழித் திருவிழாவிலும் நாலாம் விழா மண்டகப்படி ஆதீனத்தின் கொடையில் நடக்கிறது. இந்த விழாவில் விழா படிம இறைவன் வலம் வருகிறார். இதற்கு மடத்தில் வைத்தே அபிஷேகம் நடக்கும். பின்னர் அலங்காரம் முடிந்த பிறகு சுவாமி கோவிலில் உள்ள பரங்கி நாற்காலியில் உலா வருவார். செப்பேட்டில் நாலாம் விழா சிறப்பு என்று குறிப்பிடுவது இந்த நிகழ்ச்சியைத்தான்.

செப்பேட்டில் குறிப்பிடப்படும் வடமலையப்ப பிள்ளை என்பவர் திருமலை நாயக்கர் காலத்தில் திருநெல்வேலி பகுதியில் வரிவசூலிக்கும் பொறுப்பில் இருந்தார். இறையூர் வடமலை நாரணகுடை வடமலையப்ப பிள்ளை ஸ்ரீரங்கம் அருகே உள்ள இறையூர் ஊரினர். சிறந்த சிவ பக்தர். தமிழ்ப் புலவர் மச்ச புராணத்தை வடமொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியம் இவருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It