நமது நாடு முன்னேறுதற்கு முயலும் நாடு. பல மொழிகள் பேசப்படும் நம் நாட்டில் ஆங்கிலமும் இந்தியும் அரசு அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும் காலூன்றி விட்டன. எனினும், தாய்மொழிவழிக் கல்வி கற்பிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

நமது நாட்டில் 80% மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். இவர்கள் நல்வாழ்வு பெற வேண்டுமெனில் ஊர்ப்புறங்களில் குடிசை எந்திரத் தொழில் வளர வேண்டும். கோவை, பெரியார், சேலம் மாவட்டங்களிலும், சிவகாசி, சாத்தூர் முதலிய எந்திரத் தொழிலால் கணிசமான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். எனவே, ஊர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு எந்திரச் சிறுதொழில் செய்ய நாம் தொழில் கல்விக்கூடங்களில் கற்பிக்கிறோம். இது தாய்மொழியிலிருந்தால் மிக விரைவில் கற்க இயலும்; புரிய இயலும்; செயல்படுத்த இயலும்.

பிறநாட்டுக் கல்வி வரலாறு இதை நமக்கு நன்கு விளக்குகிறது. இங்கிலாந்தில் எந்திரப் புரட்சி ஏற்பட்டதும் தொழில் செய்வோர் தாய்மொழியிலும் அறிஞர்கள் இலத்தீனிலும் கற்றனர். நியூட்டனின் ‘ஈர்க்கும் சக்தி’ பற்றிய விதி இலத்தீனில்தான் முதலில் வெளியானது. படிப்படியாக இலத்தீன் மொழி புறக்கணிக்கப்பட்டது. ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, கலைச் சொற்களை இலத்தீனிலிருந்து பெற்றுக் கொண்டனர்.robot 500சப்பானில் தாய்மொழியே 18ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வி பயிற்றும் மொழியாக இருந்துவருகிறது. பல நாடுகளுக்கும் சென்று பயிற்சி பெற்ற சப்பானிய இளைஞர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பித் தாய்மொழியில் நூல் இயற்றினர். தொழில் கல்வி பெருகியது. மக்கள் வளமாக வாழும் நிலை ஏற்பட்டது.

சோவியத் யூனியனிலும் இரஷ்யன் மொழி தவிர அங்குள்ள 133 மொழிகளிலும் அறிவியல் தொழில் நுட்ப நூற்கள் ஆக்கப்படுகின்றன. எனவே, தொழிற் கல்வியின் நோக்கம் ஊர்ப்புற வளர்ச்சிதான் என்றால் அக்கல்வி தாய்மொழி வழியே அமைய வேண்டும் என்பதில் நம்மிடையே கருத்து வேறுபாடு இருக்க இடமில்லை. தொழில் கல்வியின் நோக்கம் செல்வச் செழிப்பு, வசதியான வாழ்க்கை என்பதாகும். நம் நாட்டில் 63% ஏழ்மையில் வாடுகிறார்கள். நாம் எல்லோருமே ஏழ்மையின் எதிரிகள். ஏழ்மை போக்கவே தொழில் கல்வியைத் தாய்மொழி வழிக் கற்பிக்க விரும்புகிறோம்.

தாய்மொழி வழிக் கல்வி எனும்போது இரு கேள்விகள் எழுகின்றன.

(1) போதிய பாடநூற்கள் தமிழில் உள்ளனவா?

(2) பிற மாநிலங்களில் அல்லது நாடுகளில் தொழில் செய்ய நினைப்பவர்களுக்குத் தடையாகாதா? இவற்றைச் சிந்திக்க வேண்டும்.

போதிய அளவு நூல்கள் தமிழில் இருக்கின்றனவா அல்லது இல்லையா. தேவை ஏற்படும்போது, விற்பனை இருக்கும்போது நிறைய நூல்கள் வரும். வெளியாகும் எல்லாம் தரமானவை என்று கூற முடியாது; அடுத்தடுத்த பதிப்புகள் தரமாக அமையலாம்.

மூடநம்பிக்கை ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம், அறிவியல் கல்வி பற்றி தந்தை பெரியார் அவர்கள் வற்புறுத்திச் சொன்னார்கள். தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றியதும் அறிவியல் வளர்ச்சிக்கென சில திட்டங்களை வகுத்தது. அதன்படி, பொறியியல் பட்டப் படிப்பில் முதல் இரண்டாண்டுத் தேவைக்கான 13 பாடநூல்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் பல பாடங்கள் பல்துறைத் தொழில்நுட்பப் பயிலகங்களுக்கும் பொதுவானவை. கலைச் சொற்கள், வாய்பாடுகள் அனைத்தும் பன்னாட்டு எழுத்துக்களால் ஆக்கப்பட்டுள்ளன.

நம் காலில் நிற்பதற்காகத் தொழில் கல்வியை நாம் தாய்மொழியில் பயிற்றுவோம் என்று சொல்லும்போது, பிற மொழிகளைக் கற்க வேண்டியதில்லை என்பது பொருளன்று. எந்த ஒரு மொழியையும் விரைவில் கற்றுக் கொள்ளும் வண்ணம் மொழிப் படிப்பு எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. ஒளிக்காட்சி, மொழிச் சோதனைக்கூடம் மூலம் சில வாரங்களுக்குள் ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளலாம். ஆறு வாரங்களில் மலையாளம், கன்னடம், மராத்தி முதலிய மொழிகளைக் கற்பித்துத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெற்றி கண்டிருக்கிறது. எனவே, நம் முயற்சி அனைத்தும் ஊர்ப்புற மக்கள் செல்வ வளம்பெற, வாழ்வுத் தரம் பெருக உதவ வேண்டும். தமிழில் தாய்மொழியில் கற்பித்தால் பிரிவினை என்றோ பிறமொழி வெறுப்பு என்றோ கருதுவதைக் கைவிட வேண்டும். (இக் கருத்து ஒன்றிய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது).

தமிழ் எல்லாத் துறையிலும் இயங்கக்கூடிய மொழியாக இருக்க வேண்டும். வாழ்வியல், அறிவியல் துறைகளில் ஓரளவு பயன்படுத்தப்படுகிறது. பொறியியல், மருத்துவத் துறைகளிலும் பயன்பட வேண்டும்.

நம் நாட்டில் 60 முதல் 65% படிக்காதவர்கள். இவர்களில் 3 இல் 1 பகுதியினர் 40 வயதுக்கு மேற்பட்டவர்; பின்னொரு 3 இல் 1 பகுதியினர் 15-40 வயது வரை; மற்றவர்கள் இதற்கும் குறைவானவர்கள்.இவர்கள் எல்லோருக்கும் கல்வி புகட்ட வேண்டும் என்பதுதான் நமது அரசின் கொள்கை. இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் ஏகதேசம் 50% கல்வியறிவு பெறுவார்கள். இந்த மதிய உணவுத் திட்டத்தால் மாணவர்கள் நிறைய வருவது உண்மைதான்.இவர்கள் பினனர் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வருவார்கள்.

நம் நாட்டில் வறுமை அதிகம். கிராம இயந்திரத் தொழில் பெருகினால் வருமானமும் பெருகும். நமது மக்களில் 80% கிராமப் புறங்களில் வசிக்கிறார்கள். இவர்களது வறுமை நீங்க, தொழில் கல்விதான் உதவும். கோவை விவசாயியையும் தஞ்சை விவசாயியையும் ஒப்பிட்டால், கோவை விவசாயி செல்வ வளமும் புதியதை அறியும் ஆர்வமும் கொண்டிருப்பதை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். தஞ்சையில் அப்படி இல்லை. நல்ல செல்வச் செழிப்புள்ள மிராசுதார்கள்; கீழ்மட்டத்திலிருக்கக் கூடிய தொழிலாளர்கள். எனவே, இவர்கள் அத்தனைபேரும் முன்னேறா விட்டால் இந்தச் சமூகத்தில் பிளவு ஏற்படும். உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள், பகைமை, பூசல் - இப்படி வளர்ந்துகொண்டே போகும்.

கிராமப் புறங்களில் செல்வஞ்செழிக்க வெறும் விவசாயம் மட்டும் போதாது. கேரளம் மின் சக்தியை விற்கிறது. ஒருவர் கேட்டார், ‘நீங்கள் ஏன் 40 பைசாவுக்கு மின்சக்தியை விற்கிறீர்கள். மின்சக்தியிருப்பதால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோட்டாரும் ஏரியும் இருந்தால் எவ்வளவு நல்ல காரியம் செய்யலாம்'. இப்போது கேரளத்தில் வறுமை இல்லை. மத்திய கிழக்கிலிருந்து பணம் வருகிறது. வாழ்க்கை வசதியும் நன்றாக உள்ளது.

கிராமத்தில் வறுமையை ஒழிக்கத் தொழில் ஒரு வழி என்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம், இனி வரும் மாணாக்கர் எண்ணிக்கையும் கூடும். அவர்கள் தொழில்நுட்பக் கல்லூரிக்குத்தான் அதிக அளவில் வரப் போகிறார்கள். அவர்களுக்கு நாம் ஒரு வழி செய்ய வேண்டும்.

கங்கைக் கரை மாநிலங்களில் பெரிய நகரங்கள் தவிர கிராமங்களில் ஆங்கிலம் அவ்வளவு பரவலாக இல்லை. எல்லாம் இந்தியில் நடக்கின்றன, ஆங்கிலத்தின் தரமும் குறைந்து விட்டது. எனவே, கிராமப்புற மாணவர்கள் தாய்மொழியைத்தான் விரும்பு கிறார்கள். நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

1. ஆங்கிலமும் தாய்மொழியும் தெரிந்த ஒரு ஆசிரியர் சமுதாயம்.

2. ஆங்கிலம் அறியாத அல்லது குறைந்த அறிவுடைய ஒரு மாணவர் சமுதாயம்.

3. தாய்மொழி மட்டும் அறிந்த அல்லது அதில் விளக்கம் பெற விரும்புகிற ஒரு மாணவர் சமுதாயம்.

நாளாவட்டத்தில் இந்த மாணவர்கள் தாம் ஆசிரியர் ஆவார்கள். அப்படி ஆகும்போது, ஆங்கிலப் படிப்பில் ஏதாவது விந்தை நிகழ்ந்தால் அல்லாமல், ஆங்கில அறிவு படிப்படியாகக் குறைந்துபோகும். அந்தக் கட்டத்தில் ஆசிரியர்கள் தாய்மொழியில்தான் சொல்லிக் கொடுக்க வேண்டிவரும்.

சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, ஹாங்காங் இங்கெல்லாம் தொழில் வளம் பெருகி, வாழ்க்கை வளம் நன்கு அமைந்துள்ளது. இதில் மலேசியாவை எடுத்துக்கொள்ளலாம். அங்கு மலாய் மொழியின் எழுத்துருவை ரோமனில் ஆக்கினார்கள். தேசிய மொழியாகவும் அதை மாற்றினார்கள். தேசிய நிறுவனம் ஒன்றையும் அமைத்தனர். ஆங்கிலத்தை அகற்றவில்லை. ஆனால் பாடமொழி மலாய் மொழிதான்; சீனர், தமிழர் எல்லாம் அதில்தான் படிக்க வேண்டும். அவர்கள் தங்களிடம் உள்ளவர்களில் மிகவும் உயர்ந்த புத்திசாலிகள் எத்தனைபேர் என்று பார்க்கிறார்கள். பேராசிரியர் தகுதியில் வரக் கூடியவர்கள் 1% தான். நடுத்தரத்தில் 25-30%. ஏனையவர் - புத்தியில் சிறிது குறைந்தவர்கள் 65 -70% இவர்கள் தொழில் செய்து வாழ விரும்புகிறார்கள். ஓர் அரசு இந்த 70% மக்களுக்குத் துணை செய்யும் கடப்பாடு உடையது. 70% மக்களுக்கு நல்லது செய்து நற்பெயரைச் சம்பாதிப்பதுபோல இந்த 1% மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும். இல்லையென்றால், அறிவு தாழ்ந்துபோய்விடும். மிகவும் தகுதியுடையவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள் (பிரிட்டன், அமெரிக்கா, மே. ஜெர்மன்), அங்கே படித்தவற்றை உடனே மலாய் மொழியில் மாற்றும் நிலையும் அங்கேயிருக்கிறது.

இன்னொரு சோதனை இசுரேலில் நடந்தது. பழைய ஈப்ருவை நவீன ஈப்ருவாக்கி, atomic science வரை சொல்லிக் கொடுக்கிறார்கள். பல நாடுகளிலுள்ள இசுரேலியர்கள் தம் நாட்டுக்கு வந்து சில மாதங்கள் தங்கித் தம் மொழியில் பல நூல்களை யாத்துத் தொண்டு செய்தனர். அவர்கள் ஈப்ரு மொழியை நவீனமாக்கி, பி.எச்.டி படிப்பு வரை அதைப் பயன்படுத்துகிறார்கள்.

ரஷ்யாவில் லெனின் முதலில் வற்புறுத்தியது இதுதான்; பொதுமக்கள் உலகச் செய்திகளை அறிய வேண்டும் என்றால், அறிவியல் செய்திகளை அறிய வேண்டும் என்றால், இயந்திரப் புரட்சி ஏற்பட வேண்டுமென்றால், அவர்கள் உரிமையை அவர்கள் பாதுகாக்க வேண்டும் என்றால், அவர்களுக்குக் கல்வி வேண்டும். அது அவர்களது தாய்மொழியில் இருக்க வேண்டும். சோவியத்தில் குறைந்தது 134 மொழிகள் இருக்கின்றன. கூடுதலாகவும் இருக்கலாம். அங்கே ஒரு மொழிக் குடும்பம் இருக்கிறது. அது தமிழோடு தொடர்புடையது Finno-ugric என்று சொல்லுவார்கள். லெனின் செய்த முதல் தொண்டு, பொதுமக்களுக்கு புதுச் செய்திகளை எவ்வாறு கூறுவது... அதற்கான திட்டத்தை வகுங்கள் என்று சொன்னதுதான். அவர்கள் ஆக்கபூர்வமாக ஒரு காரியத்தைச் செய்தார்கள். நாம் அதைச் செய்யத்¢ தவறி விட்டோம். அவர்கள் ‘Central bureau of translation’ ஒன்று ஏற்படுத்தினார்கள்.

நூல், கட்டுரையை உடனே மொழிபெயர்த்து, விஞ்ஞானிகள் மேசைமீது வைத்தார்கள். ரஷ்ய மொழியில் மட்டுமில்லை, சிறு மொழிகளிலும் செய்தார்கள். பல அறிவியல் சஞ்சிகைகளைத் தோற்றுவித்தார்கள். குறைந்த விலையில் வழங்கினர்.

நமது நாட்டில் சுதந்திரத்துக்குப் பின், இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டபின் ஒரு முயற்சி நடந்தது. இங்கே மொழி பெயர்ப்புக்கென்றும், கலைச் சொல்லாக்கத்துக்கென்றும் இரு நிறுவனங்களைத் தோற்றுவித்தார்கள். இது ஏனைய மொழிகளுக்கும் பயன்பட வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை. இந்தி தவிர ஏனைய மொழிகளை மாநில அரசுதான் போற்ற வேண்டும். நாம் போற்ற வேண்டாம் என மைய அரசு ஒரு காலத்தில் நினைத்தது. இந்திக்கு அவர்கள் செய்த முயற்சி பலனில்லாது போய்விட்டது. பணத்தை வாரியிறைத்துவிட்டார்கள் என்ற குறை இந்திக்காரர்களுக்கும் உண்டு. அந்த முயற்சியோடு தொடர்பு கொண்ட பிறருக்கும் உண்டு Hindi Technical terminology உருவாக்குவது பற்றி ஒரு அமைப்பு. இதில் அந்தத் துறையில் தொடர்பும் பற்றும் இல்லாத பலரை நியமித்தனர். அவர்கள் அதைத் தங்கள் கடமையாகக் கருதாமல், ஏதோ ஒரு வேலைக்காக என்று கருதினர். இதனால், நல்ல பலன் இல்லை. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் இந்திக்காகச் செலவழிக்கிறார்கள். இருந்தும் வளம் பெற முடியவில்லை. காரணம் தக்க பார்வையும், தக்க போக்கும் முன்யோசனையும் இல்லை.

தமிழகத்திலும் நாம் ஒரு தவறு செய்தோம். 1927 இல் கில்பர்ட் சிலேட்டர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என்ற நான்கு மொழிகளுக்கும் ஒரு பொது எழுத்துருவை அமைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார். நாம் அதைச் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை.

பிறகு, காங்கிரசார் தமிழுக்குக் கலைக் களஞ்சியம் உருவாக்கவும் பல நூல்களை உருவாக்கவும் முயன்றனர். கலைக் களஞ்சியத்துக்கென ஒரு பொது மையம் உருவாக்க இயலாதது குறித்து அவினாசிலிங்கம் செட்டியாரிடம் கேட்டபோது, நமக்குள் கருத்தொற்றுமையும் நம்பிக்கையும் ஏற்படவில்லை என்றார். இதனால் பொருள் செலவுதான் அதிகம்.

பின்னர், வி. கே. ஆர். வி. ராவ், மாநில மொழிகளுக்கு ஒரு நன்மை செய்தார். அவர் ஒவ்வொரு மாநில மொழிக்கும் 1 கோடி ரூபாய் தந்தார். இதில்தான், தமிழகத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகம் பாடநூல் நிறுவனம் தோன்றின. கன்னட தேசத்திலும், ஆந்திராவிலும் அதை நன்கு பயன்படுத்தினர். ஆந்திராவில் லாபகரமாகவும் நடக்கிறது. செய்திகளைத் தெலுங்கில் கொண்டு வருகிறார்கள். கேரளத்தில் State Institute of Language தொடங்கியது. 500 நூல்கள் வரை வந்துள்ளன. முன்னர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த முயற்சி பற்றிக் குறிப்பிடப்பட்டது. மருத்துவர்கள் 35 பேர் கலந்துகொண்ட கருத்தரங்கு ஒன்று நடந்தது. அதில் பாடங்களை எவ்வாறு அமைப்பது என்பது பற்றிச் சிந்தித்தார்கள். முன்னரெல்லாம் மொழிபெயர்த்தார்கள். அந்த மொழிபெயர்ப்பில் பல கருத்துக்கள் புரியாமல் இருந்தன. எனவே, மொழிபெயர்ப்பைக் கைவிட்டு, பாடத்திட்ட அடிப்படையில் நூல்களை ஆக்குவோம் என முடிவெடுத்தனர்.

நம்முடைய மொழி வெறும் தோத்திர மொழியாக மட்டும் இருக்கக்கூடாது. அது வாழ்வின் எல்லா நிலையிலும் பயன்பட வேண்டும் என்பதுதான் இந்தப் பாட நூலாக்கத்தின் நோக்கம். இரண்டாவதாக, வறுமை நீங்க, கல்வி வேண்டும், கோத்தாரி சொன்னதுபோல, வேறு அறிஞர்கள் சொன்னதுபோல, கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும்.

தூய தமிழ்வாதிகளை அழைத்து விஞ்ஞான நூல்களைக் கொண்டுவர என்ன கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என கேட்கப்பட்டது.

முதலில் பொதுமக்களுக்குரிய நூல்கள்; இதில் கலைச் சொற்கள் அதிகம் இருக்காது. இருந்தாலும் ஆங்கிலத்தில் அல்லது சிறிது விளக்கமாகத் தமிழில் அதை அமைத்துக்கொள்வது கலைச்சொல் குறைவாகவும் செய்திகள் கூடுதலாகவும் இருக்கக்கூடிய பொது நூல்கள் Popular Series. இரண்டாவது, இடை நிலையிலுள்ள பாலிடெக்னிக், பிற தொழில் கல்வியாளர் இரண்டையும் கலந்த நிலை. அதன் பிறகு, பி.இ., எம்.பி.பி.எஸ் போன்ற முதல் நிலைக்காரர்கள். அவர்களது நூலில் பன்னாட்டுச் சொற்களை அடைப்புக்குறிகள் கொடுத்து, வேண்டுமானால் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம் என்று சொன்னார்கள். சமன்பாடு, வாய்பாடு இவை முழுதும் பன்னாட்டு முறையில் பயன்படுத்தலாம் என்று சொன்னார்கள். International technologies terms-சிலும் பல குறைகள் உள்ளன. உலகில் கலைச்சொல்லாக்கத்துக்கென ஓர் அமைப்பு இருக்கிறது. யுனெஸ்கோ ஆதரவில் இது இயங்குகிறது. கலைச்சொல் பாரமாக இருக்கக் கூடாது. எளிதாக இருக்க வேண்டும். எனவே, பன்னாட்டுச் சொற்களைப் பயன்படுத்தினாலும் அதிலும் பல குறைபாடுகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதற்காக அதை நீக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.

பாடம் சொல்லும்போது பல திருத்தங்கள் வரும். முதலில் எந்த நூலும் மன நிம்மதியைத் தராது. காரணம், ஆங்கிலக் கண்கொண்டு பார்க்கிறீர்கள். சேக்ஸ்பியரின் நூலை நான் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னால் உங்களுக்குப் பிடிக்குமா? தூக்கி எறிவீர்கள். ஏனென்றால் நீங்கள் மூலத்தைப் படித்தவர்கள். எனது மொழிபெயர்ப்பு என் புத்தி சுருக்கம், என் மொழியறிவு இவற்றால் வேறுபட்டிருக்கும். எனவே, எந்த மொழிபெயர்ப்பும் நிம்மதியைத் தராது. சமஸ்கிருத ராமாயணம், பாரதத்துக்கு நிறைய மொழிபெயர்ப்பு உண்டு. முன்னது சரியில்லை என்பதால், பின்னது வந்தது. ரிக் வேதத்தின் முதலாவது ஜெர்மன் மொழிபெயர்ப்பு சரியில்லை என்று கூறி, திரும்பத் திரும்ப மொழிபெயர்த்தார்கள். மொழிபெயர்ப்பு நாளாக நாளாகத்தான் திருந்தும்; செம்மைப்படும்.

எகிப்தில் நவீன அராபிக்கில் தற்கால அறிவியலைக் கொண்டுவர முயற்சி செய்தார்கள். அப்போது மொழிபெயர்ப்பைக் கருதாமல், கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட்டார்கள். நைல் நதியில் பல அணைகள், பாலங்களைக் கட்டிய அனுபவம் இருந்தது. அனுபவம் இருந்தால், மொழியில் கருத்தைச் சொல்வதில் சிரமம் இருக்காது. எனவே, பொறியியலை நவீன அராபிக் மொழியில் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். ரஷ்யாவில் ரஷ்ய மொழியில்தான் பாடம் என்பதை நண்பர்கள் சொன்னார்கள்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் விஞ்ஞானிகளுக்கு மதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்மபூஷண் பட்டம் பெற்ற பல விஞ்ஞானிகளைக் காண்கிறோம். அறிவியல் சூன்யம் இல்லாமல் மேலும் மேலும் நாம் வளரத்தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்துவது, ஆங்கில ஆசிரியர்களைக் கொண்டு மொழிப் பயிற்சி தரச்செய்தல், இலக்கியம் நடத்துவதற்குப் பதில், கலைச்சொல்லாக்குவது, கருத்தை வெளிப்படுத்துவது சம்பந்தமாக அவர்கள் சிந்திப்பது நல்லது. Spoken English அவர்கள் கற்பிக்கலாம். Spoken English மாத்திரமல்ல Spoken Russian, Spoken German- எனப் பல மொழிகளைக் கற்பிக்கலாம். இவற்றைப் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். பிற இடங்களுக்கு நம் மாணவர்கள் செல்வதில் தடை இருக்காது. பிற மாநில மொழிகளையும் கற்க வேண்டும்.

கலைச்சொல்லாக்கம். ஒருவர் கந்தகம் என்று எழுதுவார், மற்றவர் Sulphur என்று எழுதுவார். பௌதீகம், இயற்பியல் என்ற இரண்டு வழக்குகள் உண்டு. கலைச்சொல் பயன்பாட்டில் வற்புறுத்துதல் கூடாது. பயன்படுத்துகிற சொல்லை (பௌதீகம்! இயற்பியல் இவற்றில் ஒன்றை Physics என்பதற்குப் பயன்படுத்துதல்) glossory இல் கொடுத்துவிடலாம். பௌதீகம், இயற்பியல் என்பதைப் பாடப் பகுதியிலேயே (றிலீஹ்sவீநீs) என அடைப்பானுக்குள் கொடுக்கலாம். வற்புறுத்தினால் எதிர்ப்புதான் கிளம்பும். சுதேசமித்திரனும், தந்தைப் பெரியாரும் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தனர். யாரும் கேட்கவில்லை. மொழி வேறு, எழுத்து வேறு என்பதை அறியவில்லை. ஆனால், இன்று எழுத்து மாற்றத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

அறிவியல் மனப்பான்மை இல்லாததால் நாம் எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை. முன்னோர் வழியையே பின்பற்றுவோம்; மாற்றுவழி இருப்பதாகச் சிந்திக்க மாட்டோம். இது நம் கலாச்சாரத்தின், பாரம்பரியத்தின் ஒரு அம்சம்.

‘Standardized Lexicon’ ஒன்றை டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் கொண்டுவர இருப்பதாகச் சொல்லப்பட்டது. த.ப. கழகம் சுமார் ஒரு லட்சம் கலைச்சொற்களைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு நூல் எழுதிய ஆசிரியர்களும் பிற்சேர்க்கையில் பல கலைச்சொற்களைத் தந்திருக்கிறார்கள்.

‘தரப்படுத்துதல்’ என்பது எளிதன்று. இசுரேலில் பொது மக்களிடம் அஞ்சல் அட்டை மூலம் கலைச்சொல் கேட்கப்பட்டது. நாங்களும் பதிலிடு அட்டைகள் (Reply card) மூலம் முயன்றோம். தமிழ்ச் செய்தி மலர் மூலம் ‘சொல் தாரீர்’ என்ற பகுதியில் சில சொற்கள் கேட்டோம், Dummy என்ற சொல்லுக்குத் தமிழ்ச் சொல் கேட்டோம். ஒருவர் ‘வெள்ளோட்டப்படி’ என்றார். ‘முன்னோடிப்படி’, ‘போலிப்படி’ ‘முன்னச்சுப்படி’ எனப் பல சொற்கள். இவற்றுள் எந்தச் சொல் தேவை என்று கேட்டால், சரியாகப் பதில் சொல்வதில்லை. இசுரேலில் டி.வி. ரேடியோ செய்தித்தாள் மூலமும், மறுமொழியைச் சேகரித்தார்கள். சமூகம், மொழி வளர்ச்சிக்கு உதவும் மனநிலை அங்கு இருக்கிறது. நம்மிடம் அது இல்லை. கேரளத்தில் சாகித்ய அகாதெமி என ஒன்று இருக்கிறது. பிறமாநிலங்களிலும் உண்டு. தமிழில் ஏனோ ஒன்று இதுவரை இல்லை.

பல்கலைக்கழகம் சொல்லைப் பரிந்துரை செய்யும்; வற்புறுத்தாது. வற்புறுத்தினால் எதிர்ப்புதான் தோன்றும்.

இந்திக்காரர்கள் கலைச்சொற்களைத் தயாரித்து அதையே பயன்படுத்த வேண்டும் என்றார்கள். தமிழ்நாட்டுக்காரர்கள் மறுத்து விட்டார்கள். ‘உங்களுடைய கலைச்சொல்லை மாநிலங்களில் படித்துக் காட்டினால் அவர்களுக்கே புரியாது. எனவே, இந்திக்காரர்களே புரிந்து கொள்ளாத சொல்லை எங்களிடம் திணிக்காதீர்கள். இயன்றதை ஏற்றுக்கொள்கிறோம்' என்று மலையாளிகள் சொன்னார்கள். கர்நாடகமும் ஆந்திரமும் இவ்வாறே சொல்லின.

இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட சட்டவிதிகளை சவகர்லால் நேருவே புரிந்து கொள்ளக் கஷ்டப்பட்டார். கிராம மக்களிடம் சென்று சொற்களைத் தேடுங்கள் என அவர் வற்புறுத்தினார். Constituent Assembly அறிக்கையில் இதைத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

அமெரிக்காவில் ஒரு முயற்சி நடந்தது. ஒலி மாற்றத்தை ஒலிஸ்தாயி-கீழ் மட்டம் முதல் உயர்மட்டம் வரை 1,2,3 என்று ஒருவர் குறித்தார். மற்றவர் அதைத் தலைகீழாக மாற்றிக் கொண்டார். ஒருவர் 4 என்று குறித்ததை மற்றவர் 1 என்று குறித்தார். அவ்வாறு குறித்து, இது Pikeian System, இது Bloch System -என்றார்கள். மாறுபட்ட கலைச்சொற்களைப் பின்னிணைப்பாகக் கொடுக்கலாம். நாங்கள் தரப்படுத்த வேண்டுமென்றால், அதைப் புள்ளிவிவரப்படி - யார் எதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்களோ - அதன்படி இது முதலாவது, இது இரண்டாவது, இது மூன்றாவது எனக் கூற முடியும். கூடுதலாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லை Standard - term என்று நீங்கள் கருதிக் கொள்ளலாம்.

பல பாடங்கள் பாலிடெக்னிக்கில் உள்ளன. 80 மாணவர் இருந்தாலும் அவர்களுக்கென நூலை உருவாக்க வேண்டும். லாபநோக்கு தேவையில்லாதது, தொண்டுள்ளம் தேவை. நல்கை வழங்கி நூலை விற்க வேண்டும். பதிவு ஊதியம் (Patent’ s right) நாம் பெற முடியும்.

பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நூலாக்குவது நல்லது. அவர்களுக்குத்தான் குறை நிறை புரியும்.

என்னென்ன பொருளில் பாடநூல் வேண்டும் என்று உங்களைக் கேட்கிறோம். நீங்கள் பதில் தரலாம்.

உங்கள் அனுபவம் எங்களுக்கு உதவும், செயல்படுத்த முயலுகிறோம். நூல் வந்த பிறகுதான் வகுப்பு நடத்தலாம் என்பது ஒன்று; குறிப்புக்களை வைத்துப் பாடம் நடத்தலாம், அதை நூலாக்கலாம் என்பது மற்றொன்று.

தேர்விற்கு கேள்வித்தாளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தருவதற்கு ஏற்பாடு செய்யலாம்.

நூல்களை இருவகையில் ஆக்கவிரும்புகிறோம். (1) பல்துறைப் பயிலகப் (பாலிடெக்னிக்) பதிப்பு, (2) பொறியியல் கல்லூரிப் பதிப்பு. இவற்றையும் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளலாம். வற்புறுத்தலின்றி, பிறருக்குச் சந்தேகம் எழாவண்ணம் செய்ய, நூல் எழுதி கற்பிப்போர்க்கு தாய்மொழிவழிக் கற்பித்து, செல்வ வளத்துக்கும் தொழில் புரட்சிக்கும் தொண்டாற்றினோம் என்கிற பெருமை சேரும்.

இக்காலகட்டத்தில் எடுத்த சில முடிவுகள்

1. தொழில்நுட்பப் பயிலகங்களில் தமிழில் பாடம் நடத்துவதில் சிரமம் இல்லை. ஓர் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு பாடம் என முறைவைத்து நடத்தலாம். தொடக்கத்தில் தேர்வு இரு மொழிகளிலும் எழுதச் சொல்லலாம். கேள்வித்தாளில் தமிழும் இடம்பெறவேண்டும்.

2. பாடத்திட்ட அடிப்படையில் பாடநூல்கள் உடனே தயாரிக்கப்பட வேண்டும். பாடம் நடத்தும் அனுபவமுள்ள ஆசிரியர்களைக் கொண்டு இதைச் செய்ய வேண்டும். பாடநூல்கள் உருவாகும் வரை குறிப்புக்களை வைத்து நடத்தலாம்.

3. பாடநூல்களில் கலைச்சொற்கள், சமன்பாடுகள், வாய்பாடுகள் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை. பன்னாட்டுச் சொற்களையும் வாய்பாடுகளையும் பயன்படுத்தலாம். தமிழ்க் கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும் (நகவளைவுக்குள்) ஆங்கிலச் சொல்லையும் கொடுக்க வேண்டும், எளிய தமிழில் எழுத வேண்டும்.

4. கலைச்சொல் அகராதி தயாரிக்கப்பட வேண்டும். நூலாசிரியர்களுக்கு அதைக் கொடுக்கலாம். கலைச்சொற்களைத் தரப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் வற்புறுத்தல் தேவையில்லை.

5. தமிழ்வழிப் பயிற்றுவிக்க விரும்பும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும்.

6. வேலைவாய்ப்பு பாதிக்கப்படாத வகையில் இது அமைய வேண்டும். பிறமொழிக் கல்விக்கும் ஏற்பாடு செய்தல் நல்லது.

7. கலைச்சொல்லகராதி, பாடநூல் உருவாக்கம், ஆசிரியருக்குப் பயிற்சி வகுப்பு நடத்துதல் முதலிய செயல்பாடுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டால் அதற்கு முதல்வர்கள் முழுமனதுடன் ஒத்துழைப்பர்.

1985 இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில்நுட்பத் தமிழ் கருத்தரங்கை முன் வைத்து இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. நன்றிக்குரியவர், டாக்டர் இராம. சுந்தரம்

குறிப்பு

தமிழக அரசு, பொறியியல் படிப்புகளை தமிழ்வழியில் முன்னெடுத்துச் செல்லும்போது முன்வைக்கப்படுகிறது.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It