முதலியார் ஆவணங்கள் என்னும் - நூலை (தமிழினி பதிப்பகம் சென்னை 2006) நான் வெளியிடு வதற்குக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கையெழுத்துப் பிரதிகளையே பெரிதும் பயன் படுத்தினேன். அந்த நூலில் 89 ஆவணங்கள் உள்ளன. பின்னிணைப்பாக எட்டு அடிமை ஓலைகளையும் இணைத்திருந்தேன். தூத்துக்குடி பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்களின் ‘தமிழகத்தில் அடிமைமுறை’ என்ற நூல் (காலச்சுவடு பதிப்பகம் நாகர்கோவில் 2005) வெளிவந்த போது அவர் என்னிடம் இன்னும் தேடுங்கள் பழைய ஆவணங் களோ கவிமணியின் - கையெழுத்துப் பிரதிகளோ கிடைக்கும் என்றார்.

கவிமணியின் மருமக்கள் வழி மான்மியத்தின் ஆய்வுப் பதிப்பை வெளியிட (காலச்சுவடு பதிப்பகம் நாகர்கோவில் 2010) கவிமணியின் புதிய படங்களையும் மருமக்கள் வழி மான்மியத்தின் பழம் பதிப்புகளையும் தேடி அலைந்தபோது கவிமணிக்கு நெருங்கிய வரும், அவரின் ஆராய்ச்சிக்கு உதவியாளருமாக இருந்தவருமான முதுபெரும்புலவர் வித்துவான் சதாசிவம்பிள்ளை (1910-2006)யின் வீட்டிலிருந்து சில கையெழுத்துப் பிரதிகளைச் சதாசிவன் பிள்ளையின் மகன் கோலப்பன் அவர்கள் தந்தார்கள். சதாசிவம் பிள்ளையின் நூற்றாண்டு விழாவிற்காக அவரது கையெழுத்துப் பிரதிகளைத் தேடிய போது கவிமணியின் கையெழுத்துப் படிகள் கிடைத்தன என்றார்.

திரு.கோலப்பன் அவர்கள் தந்த கவிமணியின் கையெழுத்து பிரதி 1905-1915 அளவில் எழுதப் பட்டது என்று தெரிந்தது. இப்பிரதியை நான் கவனமாகப் புரட்டியபோது முதலியார் ஆவணங்கள் மட்டுமல்ல. வேறு செய்திகளும் இருப்பதைக் கண்டேன். இப்பிரதியில்

1.         முதலியார் ஆவணங்கள்

            (52 பக்கங்கள் 67 ஆவணங்கள்)

2.         அழகப்ப முதலியார் விறலி விடுதூது

            (86 வரிகள் முழுமை பெறாதது)

3.         வடமலை வெண்பா

            (3 பாடல்கள்)

4.         அஜகம்மாள் சிலுப்பம்மாள் கதைப்பாடல்

            (265 வரிகள் முழுமை அடையாதது)

5.         இரவிக்குட்டிப்பிள்ளை கதை

            (மலையாளக் கதைப் பாடலின் மொழி பெயர்ப்பு முழுமையானது)

6.         விட்டலாபுரம் கோவில் கல்வெட்டு

            (72 வரிகள்)

7.         களவாய் வண்ணம்

            (59 வரிகள் முழுமையடையாதது)

ஆகியவை உள்ளன. இவற்றில் முதலியார் ஆவணங்களைப் படிக்க ஆரம்பித்த போது இது வரை வெளிவராத இரண்டு பறையடிமை ஆவணங் களைக் கண்டேன்.

இந்த இரு ஆவணங்களில் ஒன்று 4 வரிகளும் இன்னொன்று 9 வரிகளும் கொண்டவை. இங்குக் குறிப்பிடப்படும் வரிகள் மூலஓலையின்படி அமைந் தவை. இரண்டு ஆவணங்களிலும் ஆண்டு இல்லை. ஆனால் பிற அடிமை ஆவணங்களின் மொழி, ஆவண அமைப்பின்படி 17, 18 ஆம் நூற்றாண்டு எனப் பொதுவாகக் கணிக்கலாம்.

முதல் ஆவணம் இராஜாக்கமங்கலம் என்னும் ஊரில் உள்ள பறையர் சாதியைச் சார்ந்த ஆளா மகன் மனாவின் என்பவன் அடிமையாகக் கொடுக்கப் பட்ட செய்தியைக் குறிப்பிடுகிறது. இந்த ஆவணத்தில் குறிப்பிடப்படும் இராஜாக்கமங்கலம் கன்னியா குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் வள்ளி யாற்றங்கரையில் உள்ளது. இந்த ஓலை குறிப்பிடும் அடிமையை எந்தச் சாதிக்காரர் வாங்கினார் என்று குறிப்பிடப்படவில்லை. ஆவணத்தின் சில பகுதிகள் சிதைந்துள்ளன.

இரண்டாவது ஆவணம் ஸ்ரீகனஓலை. தந்தை ஒருவர் தன் மகளின் திருமணத்தின் போது ஸ்ரீ தனமாகக் கொடுக்கும் பொருட்களைப் பட்டிய லிட்டு இவை அத்தனையும் கொடுக்கிறேன்; இவளை இன்னாருக்குக் கன்னிகாதானம் செய்கிறேன் என்னும் விவரங்களை அரசு சார்பாளரான அதி காரியின் முன்னிலையில் எழுதிக் கொடுப்பது. இதில் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும்.1

நான் 2006ஆம் ஆண்டில் வெளியிட்ட முதலியார் ஆவணங்கள் நூலில் உள்ள ஸ்ரீதன ஓலையில் கி.பி. 1431 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது என்ற குறிப்பு உள்ளது. அந்த ஓலையின் மொழிநடையும் இங்குக் குறிப்பிடப்படும் ஓலையின் மொழிநடையும் ஒத்துப் போவதால் இந்த ஆவணம் கி.பி.15 அல்லது 16 ஆம் நூற்றாண்டினது என்று ஊகிக்கலாம்.

இதற்கு வேறு காரணமும் கூற முடியும். இந்த ஓலையில் குறிப்பிடப்படும் ஆளூர் என்ற ஊரின் பின்னொட்டாகக் குறிப்பிடப்படும் விக்கிரம சோழ பாண்டியபுரம் என்ற பெயர் வேணாட்டரசர்கள் காலத்தில் (கி.பி.15 ஆம் நூற்.பின்) பெரும்பாலும் இல்லை. இதனாலும் இந்த ஆவணம் பழமை யானது என்று கூற முடியும்.

இந்த ஸ்ரீதன ஓலையை எழுதியவர் ஆளூர் விக்கிரமசோழ பாண்டியபுரம் செல்வன் திருக் குறுங்குடியோன் என்பவன் ஆவான். இவனது மகளின் திருமணத்தின்போது எழுதப்பட்டது இந்த ஸ்ரீதனஓலை.

திருக்குறுங்குடிச் செல்வன் தன் மகள் உடைய நாச்சியாரை நாஞ்சில்நாட்டில் ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அப்போது தங்க ஆபரணங்கள் 30 கழஞ்சு (96 கிராம்) வெள்ளி 20 கழஞ்சு (64 கிராம்) செம்பு பாத்திரங்கள் வயல் தடி பன்னிரண்டு; வேறு ஒரு இடத்தில் வயல் இருபது தடி ஆக 32 தடி வயலும் கொடுத்திருக்கிறான். இது உத்தேசமாக 20 ஏக்கர் வரலாம். இவற்றுடன் பறையர் சாதியைச் சார்ந்த பரமன், பறைச்சி அய்யப்பி இவர்களின் மக்கள் ஆகியோரையும் கொடுத்திருக்கிறான்.

இந்த ஓலை ஆளூர் என்ற விக்கிரம சோழ பாண்டியபுரம் நகர சேனாதிபதி கூத்தன் கண்டன் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சாட்சிக் கையெழுத்தை ஆட்கொண்டான் போட்டிருக் கிறான். ஒரு அதிகாரி சொல்ல ஆளூர் நகரத்துப் பொதுவன் (ஊர் கணக்கன்) செல்வன் என்பவன் எழுதியிருக்கிறான். இந்த ஓலையிலும் ஆண்டு இல்லை. ஸ்ரீதனம் கொடுத்தவன். வாங்கியவனின் சாதியும் இல்லை. இந்த ஓலை கூறும் முக்கியமான செய்திகள்:

திருமணப் பெண்ணுக்கு ஸ்ரீதனம் கொடுக்கும் வழக்கம் 15ஆம் நூற்றாண்டில் இருந்தது. ஸ்ரீதனப் பொருட்களைப் பட்டியலிட்டு அரசு அதிகாரிகளின் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்தது.

ஸ்ரீதனத்துடன் வீட்டு வெளிவேலைக்கும் வயல் வேலைக்கும் பறையர் சாதிப் பெண், ஆண் அவர்களின் மக்கள் ஆகியோரையும் கொடுத்தனர். இவர்களும் ஸ்ரீதனப் பொருட்களாகவே கருதப் பட்டனர். இப்படி ஸ்ரீதனமாகக் கொடுக்கப் பட்டவர்கள் தங்களின் பூர்வீக இடத்தை விட்டு மணப்பெண் செல்லும் இடத்துக்குச் சென்றுவிட வேண்டும்.2

அடிக்குறிப்புகள்

1.         ஸ்ரீதனம் கொடுப்பதை எழுதிவைத்துப் பலர் முன்னிலையில் படிக்க வைப்பது என்ற வழக்கம் தென்திருவிதாங்கூரில் இருந்தது என்பதற்கு வாய்மொழி வழக்காறுகளிலும், கோவில் சடங்கிலும் சான்று உண்டு. கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம் குமாரகோவில் முருகன் கோவிலில் நடக்கும் திருக்கல்யாண விழாச் சடங்கில், உள்ளூர் குறவர்கள் வள்ளி நாயகிக்கு ஸ்ரீதனம் கொடுப்பதும் அதைப் படிப்பதும் நடக்கும். இப்படிப் படிக்கப்படும் ஓலை ஆவணத்தில் ஸ்ரீதனப் பொருட்களின் பட்டியல் உள்ளது. இந்த ஓலை வாசகம் முதலியார் ஓலை மொழிநடையுடன் ஓத்து நடக்கிறது.

            இதே கோவிலில் ஆளடிமைக் கல்வெட்டு ஒன்றைச் செம்பவளம் ஆய்வுத்தளம் தலைவர் செந்தீ நடராசன் கண்டு பிடித்திருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைத்த ஓரே அடிமைக் கல்வெட்டு இது. கி.பி.16 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது இக்கல்வெட்டு.

2          ஸ்ரீதனமாக பறையர் மட்டுமல்லர்; வேளாளர் களும் அடிமைகளாகக் கொடுக்கப்பட்டனர் என்பதற்கு கிபி.1481 ஆம் ஆண்டு முதலியார் ஆவணத்தில் சான்று உண்டு. (அ.கா.பெருமாள்- முதலியார் ஆவணங்கள், தமிழினி 2006 ப.168) “... வெள்ளான் பிள்ளைகளில் வளத்தி மகன் அலை வாச்சியும்... நாயினாலும் நல்லி மகன்... மகன் இனச்சியும் நாச்சி மகன் நாகனும் வெள்ளாட்டிகளில் நாச்சி மகள் பிறவியும் இவன் தங்கை பெருமியும் ஆயிமகள் நல்லியும் தேவி மகள் கற்பகமும்...”

***

இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் ஆவணங்களின் மூலம்

1.         ... ஆண்டு தை மாதம் 15ஆம் தேதி பூர்வ பக்கத்து...மியும் சனிக்கிழமையும் புனர் பூசமும் பெற்ற நாள்... ... ...ட்டாறு பொ... வைகுந்த வளநாட்டு இராசாக்கமங்கல மான உலகுடைச் சதுர்வேதி மங்கலத்துப் பெரு...ந்தவளநாட்டு... மு...வில் கிடக்கும் பறையரில் ஆனா மகன் மனாவனென அடிமை... செய்து குடுத்த பரிசாவது.

குறிப்பு: இந்த ஆவணத்தில் ‘பறையரை’ வாழும் எனக் குறிக்காமல் கிடக்கும் எனக் கூறுவதைக் காண்க. வேறு ஆவணங்களிலும் இதற்குச் சான்று உண்டு.

***

1.         ... மாவது ஆளூரான விக்கிரமசோழ பாண்டியபுரத்துச் செல்வன் திருக்குறுங் குடியோன் என் மகள் உடைய நாச்சி யாரை நாஞ்சி...

2.         ... ன்னியாத் தானமாகக் குடுத்து இவருக்கு ஸ்ரீதனமாகக் கொடுக்க முப்பதின் கழஞ்சு வெள்ளி இருமதின் கழஞ்சு செம்பு...

3.         ... தடி 12 ... பா... பவுரந்தடி 12... சும் நெட்டறைந்தடி 20ம் ஆகத்தடி 32... ... மாக.

4.         பறையன் பரமனும் பறைச்சி அய்யப்பியு... மக்களும் எhகாணையும் வீடு.

5.         ...தும என் மகள் உடைய நாச்சியாருக்கு கன்னியாதானமாகக் கொடுத்தேன் செல்வன் திருக்குறுங்குடி.

6.         ... தானமாகக் கொடுத்தேன் செல்வன் திருக்குறுங்குடியென் இப்படிக்கு இவனைத்

7.         செல்வன் திருக்குறுங்குடி எழுத்து. கூத்தன் கண்டனாய நகரசேனாபதிகள் எழுத்து

8.         ...ண்டான் சேனாவதிகள் குறிக்கும் இவை ஆ(ழ)ட் கொண்டான் நம்பி எழுத்து இப்படி அறிவே.

9.         ... சொல்ல ஸ்ரீதனவோலை எழுதின மேற்படி நகரத்துப் பொதுவன் செல்வன் எழுத்து.

குறிப்பு:

ஆவணங்களின் எண், குறியீடு, கூட்டு எழுத்து ஆகியன தற்கால நிலைக்கொப்ப கொடுக்கப்பட்டு உள்ளது.

Pin It