ஆய்வுச் சுருக்கம்
பூமியானது எண்ணிக்கையில் அடங்காத உயிரினங்களின் தொகுதியாக உள்ளது. அவ்வுயிரினங்களைக் காக்கும் வாழ்விடங்களைக் கொடையாக அளித்துள்ளது . உயிரினங்கள் தங்களுக்குத் தகுதியான இடங்களைத் தேர்வு செய்து வாழ்கின்றன. தங்கள் உடல் அமைப்பு, அளவு, வாழ்க்கை முறை அடிப்படையில் அவை வேறுபட்டவையாகும். உலகில் , உயிரினங்கள் மலைமுகடு முதல் ஆழ்கடல் வரையிலான இடங்களில் வாழ்கின்றன. இயற்கை வளங்களில் ஒன்றான காடுகள் ‘உயிர்மப்புதையல்’ ஆகும். பல்லுயிர்களின் தோற்றமும் வாழ்விடமும் காடுகளே ஆகும். குறிப்பாக, மழைக்காடுகளில் பல்லுயிர்ப்பெருக்கம் என்பது இயற்கை புரியும் வரமாகும்.
பெருகி வரும் மக்கள் தொகை, மித மிஞ்சிய இயற்கை வளச்சுரண்டல்கள் சூழலுக்குப் பேராபத்தை ஏற்படுத்தி வருகின்றன.எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. இதில் பாதிப்படைவது நாமும் நமது தலைமுறையுமே. ஆகவே, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அவசியமாகிறது. அவ்வகையில் இயற்கை வளங்களில் மிக முக்கியமான ஒன்றான காடுகளையும் காட்டுயிர்களையும் காப்பது அவசியமானதாகும். காடழிப்பில் அழிக்கப்படுவது வெறுமனே காடுகள் மட்டுமல்ல; காடுகளின் அழிப்பு என்பது பல்லுயிரின மாறுபாட்டு இழப்பிற்கும் அழிவுக்கும் வழி வகுப்பதோடு மட்டுமல்லாது, அதன் மூலம் நாம் பெறக்கூடிய பயன்களையும் நன்மைகளையும் இழக்கச் செய்கிறது. இத்தகைய கருத்துக்களை, காடோடி நாவலில் நக்கீரன் சுட்டும் காட்டுயிர்ச் சூழலுடன் ஒப்பிட்டு அவை சிதைவுக்கு உள்ளாக்கப்படுவதற்கான காரணங்களை ஆய்வுசெய்து, சீர் செய்வதற்கான சிறந்த கருத்துகளைப் பெறுவது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
முன்னுரை
மனிதன் உயிர் வாழத் தேவையான காற்று, நீர்,உணவு ,உறைவிடம் மற்றும் ஆடம்பர வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் இயற்கையிடமிருந்தே பெறுகிறான். தொன்று தொட்டு வளங்களை மட்டுமே கொடையாக அளித்து வரும் இயற்கையின் மேன்மையை உணராத மனித இனம், அவை என்றுமே குறைவு படாது என்ற அறியாமையில் வாழ்ந்து வருகிறது. ஆனால் இன்றளவில் சந்திக்கக்கூடிய சுற்றுச்சூழல் சிக்கல்கள் அக்கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றி வருகின்றன.கற்காலம் தொடங்கியதிலிருந்தே மனிதன் அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மரங்களை வெட்டவும், பறவைகள், மிருகங்கள் போன்றவற்றை வேட்டையாடவும் தொடங்கினான். அதுவே சுற்றுச்சூழல் பாதிப்பின் தொடக்கமாகும்.
காடுகள் பூமியின் நிலைத்தன்மைக்கு ஆதாரமாகத் திகழ்பவை.இத்தகைய காடுகளில் வாழும் பல்லுயிர்களின் வாழ்க்கைச் சூழலையும் அவை சிதைவுக்குள்ளாக்கப்படுவதையும் காடோடி நாவல் வழி ஆய்வதை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.
காடோடி - அறிமுகம்
நவீனச் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்களின் அனுபவக் கதையே காடோடி என்ற நாவல் ஆகும். காடுகளையும் அங்குள்ள உயிர்களையும் பார்க்கும் ஆவலில் பணியில் சேர்ந்தவரே, இக்கதையின் நாயகன். வெட்டுப்பட்ட மரங்களும் அழிக்கப்பட்ட உயிரினங்களும் அவர் மனதில் ஏற்படுத்திய வலியின் தாக்கமே காடோடி என்ற முல்லைநிலக் கதையாகும்.
காடோடி நாவலானது,
* காடுகள் என்பது அழகியலைச் சார்ந்த விஷயம் என்பதை உடைக்கும் நூல்.
* அதிகப்படியான அறிமுக விமர்சனங்களை உடைய நூல்.
* கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, மலேசியா இரு நாடுகளுக்கு இடையில் உள்ள போர்னியோ மழைக்காட்டைப் பற்றிய ஒட்டுமொத்த ஆவணப்படம் (டாக்குமெண்ட்டரி) போன்ற நூல்.
* மரங்கள், நிலம், தாவரங்கள், உயிரினங்கள், பழங்குடிகளைப் பற்றிப் பேசும் நூல்.
* போர்னியோ காடுகளுக்கான குறிப்பிட்ட உயிரினங்களைப் பற்றிக் கூறும் நூல்.
* வெட்டுமர நிறுவனங்களின் ஊழல், உழைப்புச் சுரண்டல் பற்றி கூறும் நூல்.
* மனிதர்களால் ஏற்படும் சமநிலையற்ற சூழல் மாற்றத்தைப் பற்றிக் கூறும் நூல்.
காட்டுயிர் - வரையறை
"காட்டுயிர்"என்று குறிப்பிடும் போது கானகத்தில் உள்ள விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடி ஆகியவற்றுடன் நுண்ணுயிரிகள் என அனைத்துமே அடங்கும்.இவை மனிதனால் தோற்றுவிக்கப்படாத, இயற்கையான சூழலுடன் கூடிய வாழ்விடங்களில் வாழக்கூடியவை ஆகும்.
காட்டுயிர்களும் – கானுறையும்
"வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பிற்குரிய ஒரு வளம் பல்லுயிரியம். மரங்கள், செடி கொடிகள், பாலூட்டிகள், புள்ளினம், ஊர்வன, நீர் வாழ்வன, நண்டு போன்ற நீர் - நில வாழ்வன, பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற பல்வேறு உயிரினங்கள் அனைத்தும் இந்தப் பல்லுயிரியத்தில் அடங்குகின்றன." (கையில் இருக்கும் பூமி- பக். 19)
என்று சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் கூறும் கருத்திற்கு ஏற்ப, உயிர்க்கோளமாகத் திகழும் புவிக்கோளத்தில் உயிர்கள் நிலைபெற்று வாழ இயற்கை வளங்கள் இன்றியமையாதவை.
ஆகவே, இயற்கை வளங்கள் பாதுகாப்பு சுற்றுச்சூழலின் மிக முக்கியமான அங்கமாகும். குறிப்பாக, காடுகள் பாதுகாப்பு இன்றியமையாததாகும்.
காடுகள்,
1. ஊசி இலைக்காடுகள் (Coniferous forests)
2. மித வெப்ப மண்டல இலையுதிர்க் காடுகள் (Temperate Deciduous forests)
3. மித வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் (Temperate evergreen forest)
4. வெப்ப மண்டல மழைக்காடுகள் (Tropical rainforests)
5. மித வெப்ப மண்டல மழைக்காடுகள் (Temperate rainforests)
என வகைப்படுத்தப்படுகின்றன.
அதில் மழைக்காடுகள் என்பவை பல்லுயிர்ச் சோலையாகத் திகழ்பவை. தமிழ்நாட்டில் இவற்றிற்கு 'சோலைக்காடுகள்' என்று பெயர். பொதுவாக, காடுகள் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் அதன் வாழ்விடமாகவும், மனித வாழ்க்கைக்கும் அடிப்படையாகத் திகழ்கின்றன.
போர்னியோவும் - பல்லுயிர்த் தன்மையும்
உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோ மழைக்காடுகள், பூமியின் வளமான பல்லுயிர்ப் பெருக்க இடங்களில் ஒன்றாகும்.இது இந்தோனேசியா-மலேசியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியாகும்.
போர்னியோ பகுதியானது, மழைக்காடுகள் மற்றும் பவளப்பாறைகளின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. 15,000 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், ஆயிரக்கணக்கான விலங்குகள் , ஆசிய குள்ள யானை, பறவை இனங்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சியின் மூதாதையர்களாகக் கருதப்படும் 10 வகை பிரைமேட் குரங்குகளின் வாழ்விடமாகவும் விளங்குகிறது.
இதுகுறித்து சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் தனது படைப்பில்,
"மழைக்காடு என்பது வெறுமனே மரங்களின் தொகுப்பு அல்ல. மண் முதல் மரம் வரை, பூச்சி முதல் பறவை வரை, ஓடை முதல் அருவி வரை, தேவாங்கு முதல் தொல்குடி வரை, ஒன்றோடொன்று பிணைந்து வாழும் உலகம்" ( காடோடி - பக்.6 )
என்று கூறுகின்றார். மேலும், இந்த மழைக்காடுகளின் அமைவு முறையையும் பயன்களையும் குறிப்பிடுகையில்,
"இந்த மழைக்காடுகளில் வருடம் முழுவதும் மழையோ தூறலோ நிகழ்ந்து கொண்டே இருக்கும். இங்குள்ள மரங்கள் 200 அடி உயரம் உடையவை. உலகில் 70 சதவீதம் நிலவாழ் உயிரினங்கள் இங்குதான் வாழ்கின்றன. நமது உணவுப் பொருள்கள் 80 சதவீதம் காடுகளில் இருந்தே பெறப்படுகின்றன. 3000 வகைப் பழங்கள் இருக்கின்றன" எனவும் கூறுகின்றார். (மழைக்காட்டின் மரணம்- பக். 13)
இதே கருத்தை தியடோர் பாஸ்கரன் கூறுகையில்,
"இங்குள்ள மரங்கள் 45 மீட்டர் உயரமானவை.இலைகள் உதிர்வதில்லை. தரை எப்போதும் ஈரமாகவே இருக்கும். மூன்று அடுக்கு மாடி வீடு போன்றது. இவ்வடுக்குகளிலும் தரையிலும் பல உயிரினங்கள் வாழ்கின்றன" எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும்,
“10 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள காட்டில் 750 வகை மரங்கள், 125 பாலூட்டிகள், 400 பறவையினங்கள், 100 ஊர்வன மற்றும் 60 நீர்- நில வாழ்விகள் இருக்கலாம்” என உயிரியலாளர்கள் கூறுவதையும் சுட்டிக்காட்டுகின்றார். (கையில் இருக்கும் பூமி- பக். 184)
மேற்கண்டவாறு மட்டுமல்லாது, காடுகளின் சுற்றுச்சூழல் அமைவானது மிகப் பெரிய அளவில் கார்பன் இருப்புகளைச் சேமித்து வைக்கின்றன. நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கின்றன.இவ்வாறு இயற்கையின் சிறந்த அங்கமாகத் திகழ்கின்றன.
பல்லுயிரியத்தில் இருந்து மனிதர்கள் உணவு, எரிபொருள், தங்குமிடம் மற்றும் மருத்துவம் போன்ற பல அடிப்படைத் தேவைகளைப் பெறுகின்றனர். மேலும், சுற்றுச்சூழல் அமைப்புகள் மகரந்தச் சேர்க்கை, விதை பரவல், காலநிலை ஒழுங்குமுறை, நீர் சுத்திகரிப்பு, ஊட்டச்சத்து சுழற்சி மற்றும் விவசாய பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற முக்கியமான பணிகளைப் புரிகின்றன.இதன் மூலம் சூழல் உறுதிப்பாட்டைப் பாதுகாத்துப் பேரழிவுகளின் தாக்கத்தைக் குறைக்கின்றன.
இயற்கைச் சமநிலை - காடு மற்றும் கானுயிர்களின் பங்கு
உலகம் தழைத்தோங்க இயற்கைச் சமநிலையின் அவசியம் குறித்து திருவள்ளுவர்,
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" (திருக்குறள். 322)
என்று கூறுகிறார். மேலும்,
“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு” (திருக்குறள்.737)
ஏரி போன்ற நீர்நிலைகளும், நதிகளும், மலைகளும், காடுகளும் நாட்டிற்கு இன்றியமையாதவை என்கிற வள்ளுவரின் கருத்து உற்றுநோக்கத்தக்கது.
பூமியின் தட்பவெட்ப நிலையை நிர்ணயிப்பதிலும் காடுகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டில் மூன்றில் ஒரு பங்கு காடாக இருந்துள்ளது. ஆனால் இப்போது 23 சதவீதமாகக் குறைவுபட்டுள்ளது.
இது குறித்து தியடோர் பாஸ்கரன் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
"சுற்றுச்சூழல் சமன்நிலையில் இருக்க வேண்டுமானால், நிலப்பரப்பில் 33% காடுகளாக இருக்க வேண்டும் என்று சூழலியலாளர்கள் கூறுகிறார்கள். செயற்கைக்கோள் மூலம் எடுத்த ஒளிப்படங்கள் 17.5% குறைவாகவே காடுகள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன" என்றும் அதிலும் பல பரப்புகள் சீரழிந்தவை என்றும் கூறுகிறார். (கையில் இருக்கும் பூமி- பக். 26,38)
இயற்கைச் சமநிலைக்குக் காடுகள் மட்டுமல்லாது கானுயிர்களும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
இதனை,
"பல்லாயிரம் ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சியில் முதிர்ந்து, பல்லுயிரிய வளம் கொழிக்கும் உறைவிடம் மழைக்காடு. இந்தப் பல்லுயிர்த் தன்மையே நம் சுற்றுச்சூழலுக்கு ஒரு நிலைத்த தன்மையைக் கொடுப்பது. இப்பூமியில் வாழும் எல்லா உயிரினங்களும்-தாவரங்கள், புழு, பூச்சிகள், புள்ளினங்கள், விலங்கினங்கள் - சுழலியல் சமநிலைக்குத் தத்தம் பங்களிப்பைச் செலுத்துகின்றன. ஆகவே அவற்றை, அவற்றின் வாழிடங்களை, சோலைக்காடுகள் போன்ற பல்லுயிர்த்தன்மை மிக்க பகுதிகளைப் பேண வேண்டும்." (கையிலிருக்கும் பூமி-பக். 185)
எனும் பகுதி விளக்குகிறது.
இயற்கை உலகத்தின் ஒழுங்கு முறையை சீர்குலைக்காமல் அதன் பலன்களைப் பெருவாரியாகப் பெறுவதற்கு மனிதன் அதன் சமநிலையைப் பேண வேண்டும். இதனை,
"இயற்கையின் சமநிலையை நாம் ஆய்ந்தறிய வேண்டும். இயற்கை விதிகளுக்கு உட்பட்டு நமது வாழ்க்கையை வகுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உடல் அளவில் நல்ல நலத்துடன் நன்னெறி மிக்க உயிரினங்களாக வாழ இயலும்" (சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு - பக்.148)
என்று இப்பகுதி விளக்குகிறது.
மனிதத் தலையீடு – பல்லுயிர்ச்சிதைவு
மனிதனே இயற்கைச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துபவன் என்பதை,
"மனிதன் என்பவன் ஓர் உயிரிய விலங்காகவும் பகுத்தறிவு கொண்ட சமுதாய உறுப்பினனாகவும் தனது வசதிக்கேற்ப சுற்றுச்சூழலை மாற்றுபவனாகவும் திகழ்கிறான். இம்மூன்று இயல்புகளுக்கிடையே நிகழும் போராட்டங்களே சுற்றுச்சூழல் ஆபத்துக்குக் காரணமாகின்றன" என்று சோ. சேதுபதி அவர்கள் தனது நூலில் கூறுகிறார். (தமிழும் பிற துறைகளும்- பக்.190)
மேலும் எந்தெந்தத் தேவைகளுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன என்பதை தியடோர் பாஸ்கரன் கூறுகையில்,
"பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் மனிதர் காடுகளை அழிக்க ஆரம்பித்தனர். வெட்டு மரங்களுக்காகவும் சாலைகள் போடவும் அணைகள் கட்டவும் கனிம வளத்திற்காகவும் தேயிலை, காப்பி போன்ற பணப் பயிர்களுக்காகவும் காடுகள் சிதைக்கப்பட்டன" என்று குறிப்பிட்டுள்ளார். (கையிலிருக்கும் பூமி-பக். 208)
காடு என்பது, மரம் செடி கொடிகளால் மட்டுமே ஆனதல்ல. அங்குள்ள கானுயிர்கள், ஊர்வன, சின்னஞ்சிறு உயிரினங்கள், தாவரங்கள் என எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த ஒரு கட்டமைப்பு ஆகும்.
இக்கட்டமைப்பை மனிதன் தன் தலையீட்டால் சிதைவுக்குள்ளாக்குகிறான். இதனை காடோடி நாவலில் நக்கீரன் அவர்கள், ஒரு மரம் வெட்டப்படுவது அம்மரத்தின் அழிவோடு முடிவதில்லை. சுற்றியுள்ள மரங்கள், தாவரங்கள் மற்றும் பறவைகள், விலங்குகள், நீர் நில வாழ்விகள் என்பனவற்றின் வாழ்க்கைச் சூழல் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது என்று கூறுகிறார்.
பல உயிரியச் சிதைவுகளை காடோடி நாவலில்,
- கடமான்கள்-ஊழியர்களின் உணவு (பக் .174)
- கேழையாடுகள்- உணவு (பக் .175)
- தெம்படாவ் - (காட்டுமாடு) வேட்டை (பக்.178)
- 8ஆவது பிரைமேட் இனம் (சாம்பல் குரங்கு) வேட்டையாடப்பட்டது (பக் .191)
- ரசோங் குரங்கு (தும்பிக்கைக் குரங்கு) - ஆண் தன்மை விறைப்புக்காகக் கொல்லப்படும் செய்தி (பக் .193)
- மலைப்பாம்பு (ரெடிகுலேட்டட் பைத்தான்) பாம்பு சூப் தயாரிக்கக் கொல்லப்படுவது (பக்.206)
- குரங்கு மூளை உணவாக உட்கொள்ளப்பட்ட செய்தி - (பக் . 203-207)
- மூதாய் மரம் (சிலாங்கன் பத்து) வெட்டப்படுதல்.( பக் .254-258 )
- ஈக்கான் கலோய் (மீன்) - வளர்ப்பு மீனாகச் சுரண்டப்பட்டது.(பக் .220-222)
- கொலுகோ (வவ்வாலின் மூதாதை) - மரம் வெட்டப்பட்டதால் இறப்பு (பக்.225)
போன்ற பகுதிகள் வழியாகப் பட்டியலிட்டுள்ளார்.
இதன் வழியாக மனிதத் தேவைகளுக்கென காடழிப்பில் ஈடுபடும் மனிதர் தேவைக்கு மட்டுமல்லாது பேராசை,அலட்சியம் போன்றவற்றால் காட்டுயிர்களுக்குப் பல விதங்களில் தீங்கு செய்து கொண்டு வருகிறோம் என்பதையும் அறிய முடிகிறது.
காடு - கானுயிர் பாதுகாப்புச் சட்டங்கள்
1865இல் இந்திய காடுகள் சட்டம் இயற்றப்பட்டது. காடுகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன. முதல் வகை அரசுக்கு சொந்தமானதாகவும், இரண்டாவது வகை பாதுகாக்கப்பட்ட காடுகளாகவும், மூன்றாவது அக்காடுகளில் வாழும் மக்களின் உரிமைகள் பதிவு செய்யப்பட்டு கிராமக் காடுகளாகவும் இருந்தன.
பின்பு திருத்தங்கள் செய்யப்பட்ட இச்சட்டம் 1927இல் இந்திய காடுகள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் காடுகளில் வாழும் மக்கள் குற்றம் சாட்டப்பட்டனர். காடுகளில் புழங்கும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இச்சட்டம் பழங்குடியின மக்களை காட்டிலிருந்து மேலும் அந்நியப்படுத்தியது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிவின் விளிம்பில் தள்ளியது.
நீண்ட விவாதத்திற்குப் பிறகு 2006 டிசம்பர் 18ஆம் தேதி காட்டுரிமைச் சட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டம் பழங்குடியினரின் பாரம்பரிய உரிமைகளை மீட்டுத் தரும் நோக்கத்தில் இயற்றப்பட்டது. பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மீட்டமைக்கும் பொருட்டு காட்டினுள் தனிப்பட்ட முறையில் சாகுபடி செய்யவும் காடுபடு பொருட்களைச் சேகரிக்கவும் வழிவகை செய்வதாக இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும், இச்சட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய வனத்துறை மாநில அரசுகளின் கையில் இருப்பதால், இன்றளவில் ஓர் ஏட்டுச் சுரைக்காயாக மட்டுமே காணப்படுகின்றது.
1972இல் இந்திய காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. காட்டுயிர்களை வேட்டையாடுவது அறவே தடை செய்யப்பட்டது. பறவைகள், விலங்குகள், அரிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் எனப் பல உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இச்சட்டம் இயற்றப்பட்டது.
சரணாலயங்கள் உருவாக்கப்பட்டு உயிரினப் பாதுகாப்பும் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 10 காட்டுயிர் சரணாலயங்கள் உள்ளன. இதில் 5 தேசியப் பூங்கா என அறிவிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு சரணாலயங்கள் மூலம் காட்டுயிர்ப் பாதுகாப்பானது மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் சுற்றுலா, காட்டுப்பாதை சாலைகள்,வேட்டையாடிகள் போன்ற காரணங்களால் காட்டு உயிரினப் பாதுகாப்பானது கேள்விக்குறியாகவே உள்ளது.
மேற்கண்டவாறு காடுகள் பாதுகாப்புக்காகவும் கானுயிர்கள் பாதுகாப்புக்காகவும் அங்கு வாழும் பழங்குடியினரின் பாதுகாப்புக்காகவும் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கும் போதிலும் அவை இன்றளவில் ஒழுங்குமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் கடைபிடிக்கப்படவில்லை என்பதும் வருத்தப்படக் கூடிய ஒன்றாகும்.
சுற்றுச்சூழல் சார்ந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாததற்கு சட்டத்தில் உள்ள குறைபாடுகள், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது, வாழ்க்கைச் சூழ்நிலை, வறுமை, வேலையின்மை , சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள் போன்றவை காரணங்களாக இருந்து வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
எனினும், சட்ட வல்லுநர்களைக் கொண்டு புவியியல் சார்ந்த அறிஞர்களின் துணையுடன் மேலும் பல சட்ட திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதை இன்றைய சூழலியல் சார்ந்த கடமையாக உணர்ந்து செயல்பட பலரும் முன் வரவேண்டும். இதுவே சூழல் பாதுகாப்பிற்கு ஏற்றம் தரும் செயல்பாடாக அமையும்.
முடிவுரை
இயற்கை தனது அமைவு முறையில் இயங்கிய வரை அனைத்துச் சுற்றுச்சூழலும் நலமாய் இருந்தது. ஆனால் பெருகிவரும் மனித இனத்தின் வளர்ச்சியும் நாகரிகமும் தொழில்நுட்பமும் பல்வேறு மாற்றங்களையும் தேவைகளையும் பெற்று வருகின்றன. அதற்கேற்ப, இயற்கையின் அமைவு முறையை மனித இனம் தனக்கு ஏற்ற அமைப்பு முறையாக்கி இயக்கி வருகிறது.
இவ்வியக்கம் ஆக்கப்பூர்வமாக இருந்தால் சுற்றுச்சூழல் வளம் பெறும். ஆனால் அவ்வாறில்லாமல், மனித ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் மட்டுமே இயற்கையை மிஞ்சி வருகின்றன. இதனையே காடோடி நாவல்வழி நக்கீரன் அவர்கள் புலப்படுத்தி உள்ளார். காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாப்பதற்கான அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய காலத்தை நாம் அனைவரும் நெருங்கிக் கொண்டு உள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டிய கடமை நமக்கெல்லாம் உள்ளது.
துணைநூல் பட்டியல்
முதன்மை நூல்
1. நக்கீரன் - காடோடி, காடோடி பதிப்பகம்.
துணைமை நூல்கள்
1. தியடோர் பாஸ்கரன் - கையிலிருக்கும் பூமி,
உயிர்மை பதிப்பகம்.
2. ராமச்சந்திர குகா - சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு, (தமிழில்) - பொன் . சின்னத்தம்பி முருகேசன், எதிர் வெளியீடு
3. மாணிக்கவாசகன் ஞா. - திருக்குறள், உமா பதிப்பகம்
4. மு.உ.கருப்பதேவன்- தமிழும் பிற துறைகளும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.
5. நக்கீரன் - மழைக்காடுகளின் மரணம் காடோடி பதிப்பகம்
கட்டுரையளார்கள்:
சி .மேரி ஜீவிதா
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்)
டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி
காளப்பட்டி, கோயம்புத்தூர் – 641048, தமிழ்நாடு,இந்தியா.
நெறியாளர்
முனைவர் நீ.குப்புச்சாமி,
இணைப்பேராசிரியர் & துறைத்தலைவர்,
தமிழ்த்துறை, டாக்டர்.என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641048.