பண்பாடு என்ற சொல் இன்று மிகப் பரவலாகி உள்ளது. தனி மனிதனில் தொடங்கிச் சமுதாயத்தில் நிலை கொண்ட இச்சொல் இன்று அரசியல், பொருளாதாரப் பின்புலத்திலும் கவனம் பெறும் ஒன்றாக மாறி உள்ளது.

பண்பாடு என்பதற்குப் பல்வேறு வரையறைகள் தரப்படுகின்றன. என்றாலும் மனிதனின் பண்பிலிருந்து உருவானது என்பதை அனைவரும் ஒப்புகின்றனர். ‘பண்படு’ என்பதிலிருந்து பண்பாடு வந்திருக்கலாம் என்பர். ‘பண்படுதல்’ என்பதற்கு அமைதல், உதவுதல், ஏவல் செய்தல், சீர்த்தருத்தல், செப்பமாதல் எனவும், ‘பண்பாடு’ என்பதற்குச் செல்வி, குணநலம், சீர்திருத்தம், பெருமை, தன்மை, அமைதி, இயல்பு என்று மதுரைத் தமிழ்ப் பேரகராதி பொருள் தருகின்றது.

“பெரும்பாலும் சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப்பாங்கின் வெளிப்பாட்டையே பண்பாடு என்கிறோம். அந்த வெளிப்பாடு சுவையுணர்வாகவும், நடையுடை பாவனைகளாகவும் தோன்றும். அப்பண்பாடில்லாதவனைக் காட்டுமிராண்டி என்கிறோம். வாழ்வின் பலபல போக்குகள் அமைந்த பல்வேறு நிலைகளையும் இந்தப் பண்பாடென்பது குறிக்கும். உடலைப் பற்றிய நன்னிலை, மனதைப் பற்றிய தூய்மை நிலை, பேச்சின் இனிமை இவையெல்லாம் பண்பாட்டில் அடங்கும்” (1973:5) என்ற தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் கருத்து, பண்பாடு என்பதன் உள்ளார்த்தத்தை உணர்த்தும்.

‘பண்பாடு’ எனும் சொல் வழக்கத்துக்கு வந்ததை கா. சிவத்தம்பி, “பண்பாடு என்னும் சொல் ஏறத்தாழ 50 ஆண்டுகளாக மாத்திரமே வழக்கிலுள்ளது என்ற உண்மை பலருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். 1926-31இல் தயாரிக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகனில் அச்சொல் இல்லை. ஆங்கிலத்தில் Culture எனக் குறிப்பிடப்பெறும் சொல்லைக் கலாச்சாரம் என்று கூறும் ஒரு மரபு இருந்தது. டி.கே. சிதம்பரநாத முதலியார்தான் Culture எனும் ஆங்கிலச் சொல்லுக்குப் பண்பாடு என்னும் பதமே பொருத்தமானதென மொழிபெயர்ப்பு செய்தார். அது நிச்சயிப்புச் சொல்தான் என வையாபுரிப்பிள்ளை கூறுவார்” (1994:1) என்பார்.folk artபண்பாடு எனும் சொல்தான் புதிதே தவிர அது உணர்த்தி நிற்கும் பொருள் பழமையானது. அது உலக மாந்த இனத்தின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் இயங்கியல் உறவு கொண்டது. நெகிழ்வுத் தன்மை கொண்டது. கொண்டு கொடுத்து செழுமைப்படுவது. கால வளர்ச்சியில் புதுப்பித்துக்கொள்வது.

“உணவு, உடை முதலியன தயாரிப்பதிலும் உற்பத்தி செய்வதிலும் பின்பற்றப்படும் வழக்கங்கள், பழக்கங்கள், வீடுகட்டுவதில் கவனிக்கப்படும் வழக்கங்கள், திருமணத் தொடர்புகள், மரியாதை செலுத்துதல், பொதுவான நடத்தைகள், குறியீடுகள், மரபுகள், புராணக் கதைகள், பரம்பரைக் கதைகள், கூத்துக்கள், கிராமியப் பாடல்கள், கதைகள், வைத்திய முறைகள், மாந்திரீகம், மாயாஜாலம், சமய நூல்கள், கிரியைகள், வழக்கங்கள், விழாக்கள், சடங்குகள், கல்விமுறை, இசை, நடனம், விவசாய வாழ்வு, கலைகள், கைப்பணிகள் போன்றனவும் மனித வாழ்வுடன் தொடர்புடையனவும், அவ்வாழ்வினை நெறிப்படுத்துவனவுமாகிய வேறுபல விடயங்களும் பண்பாடு என்னும் சொல்லாலே சுட்டப்படுகின்றன” (2006:23-24) என்ற அ.சண்முகதாஸின் விளக்கம் பண்பாட்டின் விரிந்தத் தன்மையைச் சுட்டும். பண்பாட்டின் வேர்களை அறிய பழங்குடிச் சமூகங்களில் இருந்தும் வாய்மொழி மரபிலிருந்தும் தொடங்க வேண்டியிருக்கிறது. எனவேதான் பண்பாடு குறித்த கற்றலுக்கும் ஆய்வுக்கும் மானிடவியல் புலம் ஓர் கற்கைநெறியாக அமைகிறது.

“ஒரு பண்பாட்டு நடத்தையின் முக்கியத்துவமானது அதை நாம் ஆங்காங்கே உள்ளதாகவும், மனிதனால் ஏற்படுத்தப்பட்டு மிகவும் மாறக்கூடிய தன்மையுடையதாகவும், புரிந்துகொண்டு விட்டால் அதோடு முடிந்துவிடாது. அது இணைந்திருக்க முற்படுகிறது. எண்ணத்திலும் செயலிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முறையைத்தான் பண்பாடும் ஒரு தனி மனிதன் போல் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பண்பாட்டிலும் மற்றையச் சமூகங்களிலில்லாத பல நோக்கங்கள் தோன்றக்கூடும். இவற்றிற்காக ஒவ்வொரு மக்களும் தங்கள் அனுபவங்களை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். நடத்தையின் தொடர்பில்லா பல விவரங்கள் இந்த நோக்கங்களை யொட்டியே ஒரு உருவகத்தை அடைகின்றன. நன்றாய் இணைந்த ஒரு பண்பாட்டால் எடுத்துக்கொள்ளப்பட்ட வகைப்படுத்தப்படாத விவரங்கள் அதன் குறிப்பிட்ட குறிக்கோள்களுக்கேற்றவாறு மாற்றங்களை அடைகின்றன” (1964:46). என்ற ரூத் பெனிடிக்ட்டின் கருத்து பண்பாட்டின் பின்புலத்தை உணர்த்தும்.

பண்பாடு குறித்து விரிவாகப் பேசும் பக்தவத்சலபாரதி, தனது பண்பாட்டு மானிடவியல் நூலில் பண்பாடு குறித்து அனைத்து தரப்புகளையும் தொகுத்துத் தருகிறார். பண்பாடு குறித்த பல்வேறு வரையறைகளில் உள்ள முரண்பட்டத் தன்மைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

அ. பண்பாடு என்பது மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. அந்த ஊடகத்தைக் கொண்டே மக்கள் தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொள்கின்றனர்.

ஆ.        பண்பாடு என்பது மக்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து செயல்படும்போது உண்டாகும் நடத்தை முறைகளின் சேர்மமாகும். இது அந்தந்தச் சமுதாயத்திற்கு மட்டுமே உரியது. இது உயிரியல் நிலையில் மரபுரிமையாக வராதது.

இ. மக்கள் தலைமுறை தலைமுறையாக குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு ஆகும்.

ஈ. பண்பாடு என்பது மனிதனின் உடல்சாராத தகவமைப்பு.

உ. பண்பாடு என்பது மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட சுற்றுச் சூழல். இதில் பொருள் சாராப் பண்புகள், சட்டங்கள், நம்பிக்கைகள் முதலானவை அடங்கும்.

ஊ.       பண்பாடு என்பது மரபு வழியில் புரிந்துகொண்டுள்ளவை பற்றிய ஓர் அமைப்பு. இது கற்றலின் மூலம் பெறப்படுவது; கற்றல் நடத்தை முறையின் வழி உருவாக்கப்படுவது.

எ.          பண்பாடு என்பது அனைவராலும் புரிந்துகொள்ளப்பட்ட கருத்துக்களும், சமுதாய மரபுரிமையாகப் பெறப்பட்ட நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் அடங்கியத் தொகுப்பாகும்.

ஏ.          பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்கங்களும் அடங்கிய முழுத் தொகுப்பாகும் (2003:151-152) என்றும் கூறுவார்.

என்று பல வரையறைகளைக் குறிப்பிடும் பக்தவத்சலபாரதி, “பண்பாடு என்பது ஒரு முறைப்படியான நடத்தை முறைக்கு மக்கள் ஏற்படுத்திக்கொள்ளும் ஓர் அமைப்பு அல்லது மன அளவிலான விதி” (2003:153) என்கிறார்.

இலக்கிய மானிடவியல்

இலக்கியம், மானிடவியல் ஆகிய இரு புலங்களைப் பற்றிய அறிவு சார்ந்தது இலக்கிய மானிடவியல். இதனைப் பக்தவத்சல பாரதி, “இலக்கிய மானிடவியல், ஒரு புதிய அறிவுப்புலம். இலக்கியத்தை மானிடவியல் நோக்கிலும், மானிடவியலை இலக்கியவியல் நோக்கிலும் அறியக்கூடிய வாய்ப்பினை இப்புலம் கொண்டிருக்கிறது. இலக்கியம், மானிடவியல் ஆகிய இரண்டு துறைகளையும் இணைத்தறியும் ‘துறையிடை அணுகுமுறை’ (Inter-disciplinary
approach) புதிய உள்ளொளிகளைக் காட்டவல்லது. இதன் மூலம் தழிழ் இலக்கியத்தில் புதைந்திருக்கும் மானிடவியல் கூறுகளை இனங்கண்டு அவற்றின் வாயிலாகத் தமிழ்ச் சமூகத்தையும் பண்பாட்டையும் நுட்பமாக அறிய இயலும்” (2020:3).

தமிழில் இலக்கியங்களை மானிடவியல் நோக்கில் - சமூகப் பண்பாட்டு மானிடவியல் நோக்கில் பார்க்கும் பார்வைகள் பெருகி உள்ளன. தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியப் படைப்புகள் வரை ஆய்வுகள் தொடர்கின்றன. எனவே இலக்கிய மானிடவியல், தமிழர் மானிடவியல் என வழங்கும் அளவுக்கு இப்பிரிவு வளர்ந்து வருகிறது. பண்பாட்டு மானிடவியலின் நீட்சியாக இனவரைவியல் அமைகிறது. தமிழில் இனவரைவு இலக்கிய ஆக்கங்களும், இனவரைவியல் இலக்கிய ஆய்வுகளும் அதிகரித்து வருகின்றன.

“கிராமபுற விவசாயிகள் - பழங்குடிகள் இடையில் இன்றும் நிலவும் சமூகப் படிநிலை வேற்றுமை ஒரு பக்கம் இருந்தாலும், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் வாழ நேர்ந்த இந்த இரு சமுதாயங்களிடையில் நிகழ்ந்த பரஸ்பர பண்பாட்டு ஏற்புகளின் மிச்ச சொச்சங்கள் இரு சமுதாயங்கள் மத்தியில் இன்றும் காணக் கிடைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், இன்று இந்த கடவுள் என அறியப்படும் ஏராளமான கடவுள்கள் தன் வேர்களைப் பழங்குடி சமுதாயங்களில்தான் கொண்டுள்ளன. இன்றைய நவீன காலத்திலும் பல சடங்குகள் பழங்குடிகள் - இந்து மத வேளாண் வகுப்புகள் இரு தரப்புக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றன. இந்தப் பழக்க வழக்கங்களை வெறும் மூட நம்பிக்கைகள் என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் இலக்கியங்கள் மட்டுமல்லாமல் தொல்லியல் எச்சங்கள், அறிவியல் ஆய்வு முடிவுகள் இவற்றுடன் இப்பழக்க வழக்கங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ய முடியும்” (2022:112). என்ற டி.டி. கோசம்பியின் கருத்து பண்பாட்டாய்வில் கவனம் கொள்ளத் தக்கது.

இலக்கியமும் பண்பாடும்

இலக்கியம், பண்பாடு ஆகியன குறித்த வறையறைகள் தனித்தனியே சொல்லப்பட்டாலும் இரண்டுக்குமான தொடர்புறவு இறுக்கமானது. பண்பாட்டின் ஒரு கூறு இலக்கியம் என்பது ஏற்கத்தக்கது. இலக்கியம் மொழிசார் கலை. அது வாய்மொழி, எழுத்து மொழி ஆகிய இரண்டு சார்ந்தும் மொழியில் நிலை கொள்ளும் இலக்கியம் தன்னைப் பண்பாட்டு வெளியாகவே வெளிப்படுத்துகிறது.

இலக்கியத்தின் மையம் மனிதன் எனில் பண்பாட்டின் மையமும் மனிதனே. மனிதப் பண்பாடு, உயிர்ப் பண்பாடு, பொருள் பண்பாடு ஆகியனவற்றின் கூட்டு மொத்தமே ஓர் இலக்கியப் படைப்பு. நிலம், காலம், சூழல், இனம் ஆகியனவற்றின் பன்மைப் பண்புகளின் திரட்சியாக பண்பாட்டையும் இலக்கியத்தையும் அணுகமுடியும்.

‘இலக்கியத்தைப் பண்பாட்டைச் சித்திரிக்கக்கூடியப் பனுவலாகவும், இலக்கியப் படைப்பாளியை அவனுடைய பண்பாட்டின் படைப்பாறிம்’ ஆ. தனஞ்செயன் குறிப்பிடுவார். இந்த அர்த்தத்தில் படைப்பு-படைப்பாளி குறித்து அவர் கூறும் கருத்து முக்கியமானது.

“படைப்பாளி என்பவன் தன்னுடைய பண்பாட்டினால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு படைப்பாகவே கருதப்படுகிறான். அத்துடன், தன்னைப் படைத்த பண்பாட்டை அவன் தன்னுடைய அழகியல் கண்ணோட்டத்திலிருந்தே பிரதிநிதித்துவப்படுத்துகிறான். அதாவது, தனக்கு உகந்த உபாயங்கள் மூலமாக - மொழியையும் உலகக் கண்ணோட்டங்களையும் குழைத்துப் பதப்படுத்தி - பண்பாட்டின் விதிகளையும் ஒழுங்குகளையும் மீறித் தன்னுடைய படைப்பின் வழியாகத் தன்னுடைய பண்பாட்டினைப் பிரதிநித்துவம் செய்கிறான். இத்தகைய இலக்கியப் படைப்பு, அவனுடைய சமூகத்தின் பண்பாட்டினை அல்லது அதன் ஒரு பகுதியை விவரிக்கும் பிரதிபலிப்பானாகத் திகழ்கிறது அல்லது அப்பண்பாட்டைப் பற்றி விவரிக்கும் ஆய்வு முறையான இன வரைவியலுக்கு உதவும் ஆதாரங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுகிறது” (2015:16).

இனவரைவியல்

தமிழில் ஆ. தனஞ்செயன், ஞா.ஸ்டீபன், ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோர் இனவரைவியல் இலக்கிய ஆய்வுகளைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், நவீன இலக்கியம் ஆகியவற்றில் செய்து நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.

இனவரைவியல் எனும் பெயரில் தொடங்கி, வரையறை, வகை, சூழல், பயன்பாடு ஆகிய எல்லாவற்றிலும் கருத்துமாறுபாடுகள் இருந்தபோதும் இனவரைவியல் இன்று பண்பாட்டாய்வுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக நிலை பெற்றிருக்கிறது.

இனவரைவியல் என்பதை பண்பாட்டை மொழிபெயர்த்தல் (Cultural translation) என்பார் பக்தவத்சலபாரதி. இனவரைவியல் குறித்த சில வரையறைகளை ஆ.தனஞ்செயன் குறிப்பிடுகிறார். தேவை கருதி அதனை அப்படியே இங்குக் காணலாம்.

“ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அல்லது வட்டாரத்தில் காணப்படும் அனைத்து வகையான மரபுகள் பற்றி மேற்கொள்ளப்படும் விளக்கமுறை ஆய்வே இனவரைவியல் (Brunvand 1986:329) என்றும், ‘ஏதேனும் ஒரு பண்பாட்டைப் பற்றி எழுதப்பட்ட வரைவு அல்லது விளக்கமே இனவரைவியல் (Herskovits, 1974:8)’ என்றும், ‘ஒரு குழு அல்லது பண்பாட்டைப் பற்றி விளக்கிக்கூறும் ஒரு வருணனைக் கலை மற்றும் அறிவியல்தான் இனவரைவியல். இந்த விவரிப்பானது, எங்கோ ஒரு நாட்டிலுள்ள சிறிய இனக்குழுவைப் பற்றியதாக இருக்கலாம். அல்லது ஒரு நடுத்தரமான நகரத்திலுள்ள ஒரு பள்ளிக்கூட வகுப்பறை பற்றிய விவரிப்பாகவும் இருக்கலாம்’ (Feeterman, 1989:11).

‘நமக்கு மிகவும் அந்நியமான உலகங்களோடு போராடி, அவற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய ஆய்வுமுறையை இனவரைவியல் என்றோ நாட்டார் பார்வையிலான விவரிப்பு (Folk description) என்றோ அழைக்கின்றனர் (Agar, 1986:12)’.

‘எழுத்தாளன் மற்றும் அவன் யாரைப்பற்றி எழுதுகிறானோ அந்த மக்கள் ஆகிய இருவருடைய வாழ்க்கை முறையைப் பற்றிய விளக்கவுரைகள், விவர அறிக்கைகளை உருவாக்கக்கூடிய விசாரணை முறை மற்றும் எழுத்து வடிவமே இனவரைவியல்’ (Denzin, 1997:XI).

இப்படியான இந்த விளக்கங்கள் இனவரைவியல் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். மனிதப் பண்பியல் சார்ந்ததாக உள்ள இனவரைவியலின் சிக்கலான பகுதி குறித்து பக்தவத்சலபாரதியின் கூற்றும் நோக்கத்தக்கது.

‘இனவரைவியல் என்பது புற மெய்ம்மைகளை மட்டுமே முன்னிறுத்தி சுயம் சாராத ஒரு நடுநிலையான, உன்னதமான பொதுமைப்பாடு கொண்டதாக இருக்காது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. காரணம் என்னவெனில் மனித சமூகத்தைப் பற்றி மனிதர்களே ஆராய்வது என்பது முதல் விமர்சனமாகும். அடுத்து, மனித சமூகத்தைப் பற்றி ஒரு தனிமனிதர் தன்வயப்பட்டே பொருள் கோடல் செய்வது இரண்டாவது விமர்சனமாகும். தகவலாளிகளைப் பார்த்து ஆய்வாளர் கேட்கும் வினாக்களும் சமூகம் பற்றி ஆய்வாளர் உருவாக்கும் உற்று நோக்கலும் அகவயமானவை என்பதை நாம் உணர முடியும். ஓர் அயற்பண்பாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் இன்னொரு பண்பாட்டை ஆராய்ந்து விளக்கும்போது அகவயத்தன்மை ஏதோ ஒரு வகையில் செயல்படுவது இயல்புதான். மேலும் ஒரு சிறிய பகுதியிலிருந்து, ஒரு பரந்த பிரதேசத்திற்குரிய சமூகத்தைக் கள ஆய்வு செய்து கூறுவது என்பதும் அகவயம் சார்ந்தே கூறுவதாகும்’ (2020:23).

இந்த விமர்சனங்களையும் கருத்தில் கொண்டே இனவரைவியல் ஆய்வுகளை நடத்த வேண்டி உள்ளது.

இனவரைவுப் படைப்புகளின் ஆழ்நோக்கை ஞா.ஸ்டீபன் இப்படிச் சுட்டிக் காட்டுவார்:

“படைப்பாக்கத்திற்கு இனவரைவியல் இன்றியமையாதது என்பதை இலக்கியப் பனுவல்களைச் சமூகப் பின்புலத்தில் வாசிக்கும்போது உணரலாம். இலக்கியம் பண்பாட்டின் உற்பத்திப் பொருள். மறுபக்கத்தில் அது பண்பாட்டைச் சமைப்பதாகவும் விளங்குகின்றது. இலக்கியப் பனுவல்களில் பரந்து காணப்படும் இனவரைவியல் தகவல்களினாலேயே இது சாத்தியமாகின்றது” (2017:25). என்பது கருதத்தக்கது.

பின்காலனியம்

பண்பாடு குறித்த ஆக்கங்களும் ஆய்வுகளும் ‘பின்காலனியம்’ சார்ந்து அமைவதையும் இதனை ஓர் அணுகல் முறையாக கைக்கொள்வதையும் காணலாம். இது சமூக அசைவியக்கத்தின் விளைபொருளாகும். வேர்களைத் தேடல், காலனிய மறுப்பு, காலனிய விடுபடல், அடையாள மீட்பு ஆகிய கூறுகள் பின்காலனிய அனுகுமுறையில் கவனம் பெறுகின்றன. இது பின் நவீனத்துவத்தின் அதிகாரம் பற்றிய பார்வையின் தொடர்ச்சியாக அமைகிறது. மேற்கு x கிழக்கு, சிவப்பு x கருப்பு, மையம் x விளிம்பு, உண்மை x போலிமை போன்ற எதிர்வுகளில் பின் காலனியப் படைப்புகள் அடையாளப்படுகின்றன. காலனியாதிக்கத்துக்குள்ளானோர் தங்கள் பண்பாட்டு வேர்களைத் தேடுதுடன், தங்கள் சுயத்தையும் அடையாளத்தையும் மீட்டுருவாக்கம் செய்தல் வழியாக காலனியக் கருத்தியலை அழிக்க முடியும் என பின்காலனியம் கருதுகிறது.

பின் - காலனித்துவம், பின்காலனித்துவம் ஆகிய இரு சொற்களின் கருத்தமைவை க.பஞ்சாங்கம், “ஆய்வாளர்கள் பலதரப்பட்ட விவாதங்களை முன்வைத்த போதும், அடிப்படையில் ‘பின் - காலனித்துவம்’ (With hyphen) என்கிற சொல், காலனித்துவ அதிகாரத்திலிருந்து ஒரு நாடு விடுதலை அடைந்த காலகட்டத்தையும், ‘பின்காலனித்துவம்’ (Without hyphen) என்கிற சொல், காலனித்துவம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இன்றுவரை பண்பாட்டு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒரு காலனிய நாடு அடைந்த பாதிப்புகளைக் குறிக்கின்ற ஒன்றாகவும் விளங்குகிறது. காலனித்துவத்திற்கு ஆட்பட்ட மக்களின் மொழி, இலக்கியம், பண்பாடு, மரபு ஆகியவற்றின் மீது காலனித்துவ சக்திகளின் இடையீடு குறித்துப் பின்காலனியம் ஆராய்கிறது. அந்த இடையீடு பெரும்பாலும் மொழியின் மூலமாகவே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. எனவே, மொழியின் மூலமாக ஆதிக்கக் கருத்தியல் எவ்வாறு பரப்பப்பட்டிருக்கிறது என்பதையும், காலனித்துவத்திற்கு ஆளான மக்கள் எவ்வாறு அந்தக் கருத்தியல்களை எதிர்ப்பது, தலைகீழாக்குவது என்பதையும் பின்காலனித்துவ ஆய்வு உள்ளடக்கியிருக்கிறது” (2011:270).

“பின்காலனித்துவ உலகம் ஒரு கலவையின் இருப்பிடம். 1968இல் மெக்லுஹன் உலகளாவிய கிராமம் என்ற கருத்தாக்கத்தைக் கண்டுபிடித்த பிறகு உலக நாடுகளில் உள்ள பண்பாடுகள் பல படிவங்கள் கொண்டதாக மாறி வருகின்றன; பல பண்பாடுகள் கலக்கின்றன; அடுத்தடுத்துக் காணப்படுகின்றன. கலப்பினக் கூறுகள் நிலைப்படுகின்றன” (2007:161) எனப் பின்காலனியம் நூல் குறிப்பிடுவது உலக அளவில் பண்பாடுகள் தமக்குள் ஊடுருவி நிற்பதை உணர்த்தும்.

பண்பாட்டு எழுத்து

திணைசார் நிலவியலை தமிழின் சங்க இலக்கியங்களில் காணலாம். இவை மனிதப் பண்பியலின் பிழிவாகவும் இயற்கை இலக்கியங்களாகவும் திகழ்வன. அதன் தொடர்ச்சியை இன்றைய நவீன இலக்கியங்களில் குறிப்பாக நாவல் இலக்கியங்களில் காணமுடிகிறது. விரிந்த களமும் வாழ்வும் மிக்க இலக்கியப் பரப்பாக நாவல் எனும் வகைமை விளங்குகிறது.

திணைச் சமூக நிலவியலை அடிப்படையாகக் கொண்டு முல்லை, குறிஞ்சி சார்ந்த பழங்குடிகள், மருதநில சமவெளிப்பரப்பைச் சார்ந்த உழுகுடிகள், நெய்தல் நிலக் கடலோடிகள் ஆகிய மக்களின் வாழ்வியல் இலக்கியப் பதிவுகளாகின்றன. அதேபோல கிராமம் சார்ந்த நிலவியலின் மறுதலையான பெருநகரத்திணை சார்ந்தும் படைப்புகள் வெளிவருகின்றன.

இப்படி நிலத்தை எழுதும் பண்பாட்டுடன் கூடவே மக்கள் குழுவின் வாழ்வும் வழக்காறுகளும் பதிவாகின்றன. இவ்வகையில் தொல்குடிகள், தலித்துகள், பெண்கள், அரவாணிகள், பால்புதுமையினர், பெரு நோயாளர்கள், விலக்கப்பட்டோர், விளிம்புநிலை­யினர் போன்றோர் இலக்கிய நாயகத் தன்மைப் பெற்று வருகின்றனர். கூடவே சமூக வரலாற்றுச் சட்டகத்தில் ஆவணங்களாகிவிட்ட நிகழ்வுகளும் இலக்கியப் படைப்புகளாகி வருகின்றன. கூட்டு மொத்தமாகப் பார்க்கும்போது இவை அனைத்தும் வெகு மக்களின் பண்பாட்டை மொழியும் இலக்கியப் படைப்புகளாக அமையக் காணலாம். பண்பாட்டு மானிடவியல், இனவரைவியல், கிராம்ஷியம், பின் காலனியம் முதலிய அணுகல் முறைகளினூடாக மக்கள் பண்பாட்டை இலக்கிய ஆக்கமாகவும் ஆய்வாகவும் வெளிப்படுத்துவதை பண்பாட்டு எழுத்து (Cultural writing) என அழைப்பது பொருத்தமானது.

ஐரோப்பிய, ஆங்கில மைய எதிர்ப்பு, மாற்று வரலாற்று உருவாக்கம், நாட்டை எழுதுதல், பண்பாட்டை எழுதுதல், திருப்பி எழுதுதல், தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு, ஆவணப் பதிவுகள், வேர்களைத் தேடுதல், அடையாள மீட்பு ஆகியன பின்காலனிய எழுத்து முறைமையாகத் தொகுத்துக்கொள்ள முடியும். மேலும், மொழி சார்ந்து புறந்தள்ளுதல், கைப்பற்றுதல், இருமுகத்தன்மை, போன்மை (Mimicry) ஆகியவை மற்றும் கலப்பினத் தன்மை , இரட்டைக் காலனித்துவம் போன்றவை பின்காலனியத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

பண்பாடு குறித்த அக்கறையும் கவனமும் நவீனத்துவத்துக்குப் பிந்தைய மற்றும் காலனியக் காலத்தில் அதிகம் ஏற்பட்டது எனலாம். பண்பாட்டியல் எனும் படிப்புத் துறையும் ஆய்வுத் துறையும் உருவாகித் தனித்தப் புலமாக உருவெடுத்ததும் கவனம் கொள்ளத்தக்கது. உலகில் மாற்றத்தை உருவாக்கும் தத்துவமாக அறியப்பட்ட மார்க்சியம் பண்பாட்டியல் குறித்துக் கவலைப்பட்டது. அது அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என்ற வகைமைக்குள் பண்பாட்டை வைத்தது. இதன் தொடர்ச்சியாக அந்தோனியோ கிராம்ஷி ‘பண்பாட்டு ஆய்வாளர்’ எனும் அடையாளப்படும் அளவுக்கு இது குறித்துப் பேசினார். அவரின் குடிமைச் சமூகம், பண்பாட்டு மேலாண்மை போன்ற கருத்தாக்கங்கள் சமூக இயக்கத்தில், சமூக மாற்றத்தில் பண்பாட்டின் இடத்தை மதிப்பிட்டன.

மானிடவியலின் கூறுகளாக அறிவாராய்ச்சித் துறையில் தொழிற்பட பண்பாட்டு மானிடவியல், இனவரைவியல் போன்ற புதிய அணுகுமுறைகளும் பண்பாட்டியல் சார்ந்து உருவாயின. அதே போல பின்னைக் காலனியம் எனும் ஆய்வு அணுகுமுறை பண்பாடு குறித்த புதிய திறப்புகளைச் சாத்தியப்படுத்தியது.

இந்தியா போன்ற நாடுகளில் சாதி, பால் (பெண்) ஆகியவற்றில் காலனித்துவம் செய்த நற்பயன்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட முடியாது.

நாவல்களும் பண்பாட்டு முன்வைப்பும்

நாவல்கள் ஆக்கத்திலும் ஆய்வுகளிலும் பண்பாடு என்பது அழுத்தம் பெற்றுவருகிறது. “ஒரு குறிப்பிட்ட சமுக அமைப்பில் வாழும் மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், உளவியல் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டெழுதும் நாவலானது அம்மனிதர்களினதும், சமூகத்தினதும் பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய வாழ்வு மற்றும் வாழ்வியல் அம்சங்களை முழுமையாகப் பிரதிபலிப்பது அவசியமாகும். அப்பொழுதுதான் அந்நாவலைப் படிக்கும் வாசகன் அதில் இடம்பெறும் சமூகச் சூழலோடு ஒன்றிவிட முடியும். அத்துடன் அந்நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் அவை சித்திரிக்கப்படும் காலச்சூழலோடு பொருந்தி நிற்கும்” (2019:7) என்பார் ஆ.சிவசுப்பிரமணியன்.

வட்டார நாவல்களில் இருந்து இனவரைவியல் நாவல்கள் வேறுபடும் விதத்தை, ஆ.சிவசுப்பிரமணியன், “இந்நாவல்கள் அனைத்திலும் ஒரு வட்டாரத்தின் சிறப்புக் கூறுகள் பதிந்திருந்தாலும் இந்நாவல்களின் சிறப்புக்குக் காரணம் அவற்றின் வட்டாரத் தன்மையன்று. இந்நாவல்களில் இடம்பெற்றுள்ள அடித்தள மக்களின் இனவரைவியல் செய்திகளும், தேக்க நிலையிலிருந்து விடுபட்டு மாறுதலை நோக்கி அவர்கள் முன்னேறுவதும் இடம் பெற்றிருப்பதுதான் இவற்றின் சிறப்புக்கு அடிப்படைக் காரணம்” (2019:25) எனச் சுட்டுவார்.

“சமூகவியல் நோக்கில் பார்க்கும்பொழுது தமிழ்நாட்டில் வாழும் அனைத்து வகை மக்களின் வாழ்வைப் பதிவு செய்யும் இத்தகைய நாவல்கள், நாவல் என்ற நிலையில் மட்டுமின்றி சமூக ஆய்வுக்கான ஓர் ஆவணமாகவும் விளங்கும் சாத்தியக் கூறு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட சாதி மற்றும் பகுதியினரின் வாழ்க்கை முறையே தமிழ்நாட்டின் பொதுவான வாழ்க்கை முறை என்று கருதும் இனமையவாதச் சிந்தனையை ஒழிக்கும்” (2019:25) எனும் ஆ. சிவசுப்பிரமணின் கூற்று இனவரைவியல் ஆய்வுகள் சாதியை மீட்டுருவாக்கம் செய்கின்றன என்பதற்கு விடை சொல்கிறது.

பல்துறைக் கூட்டாய்வு என்பதை ஆ. தனஞ்செயன் கலப்புப்புல அணுகுமுறை என்பார். மானிடவியல் சார்ந்த இவ்வகை ஆய்வுகளை இருவேறு களங்களாக அவர் சுட்டுகிறார்.

“1. இலக்கியப் படைப்புகளை முதன்மைப்படுத்தாமல் சமூக நிறுவனங்கள் மற்றும் பண்பாட்டை மட்டுமே முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் காணப்படும் கலப்புப்புல அணுகுமுறை.

2. தமிழ் இலக்கிய படைப்புகளை முதன்மைப்படுத்தி அவற்றிலிருந்து இனங்காணப்பட்ட மானிடவியல் தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் புலப்படும் கலப்புப்புல அணுகுமுறை.

இவ்விரண்டு களங்களிலும் மானிடவியல் என்பது ஒரு பொதுவான அளவுகோளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” (2014:21).

இப்படிப் பல பகுப்புகளாக உள்ள பண்பாட்டுக் கோலங்களை சமூகங்களின் வாழ்வும் இருப்பும் இடப்பெயர்வும் சார்ந்து எழுதுவது பண்பாட்டு எழுத்தாக அமையும்.

எல்லாவற்றிலும் முழு உடன்பாடு கொள்ள முடியாது. விமரிசனங்கள், போதாமைகள், விடுபடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும் இன்று பண்பாடு என்பது ஓர் அரசியல் கருத்தியலாக உலக அரங்கில் தொழிற்படும் தருணத்தில் மேற்சுட்டிய எல்லா போக்குகளையும் வரித்துக்கொண்டு வாசிக்க வேண்டி­யிருக்கிறது.

மொழி, வாழிடச் சூழல், நிலம், தொழில்

தமிழகத்தின் மக்கள் வாழ்வியல் கூறுகளை இனம் சுட்ட பக்தவத்சலபாரதி தன் ‘தமிழர் மானிடவியல்’ நூலில் தரும் விவரம் இவை குறித்த மதிப்பீட்டைத் தரும் காட்சிச் சித்திரமாக அமைகிறது.

தமிழகத்தில் வாழும் 364 சமூகங்களுள் 209 சமூகத்தவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மீதமுள்ள 155 சமூகத்தவரில் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே அதிகம். இதில் தெலுங்கு மொழியை 70 சமூகத்தினரும், கன்னடத்தை 25 சமூகத்தினரும், மலையாளத்தை 21 சமூகத்தினரும், படக மொழியை 4 சமூகத்தினரும் பேசுகின்றனர். கொங்கணி, துளு போன்ற பிற திராவிட மொழிகளைப் பேசுவோரும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கடலோரப் பகுதியில் மிகுதியான சமூகத்தவர்கள் வாழ்கின்றனர். தேசிய அளவில் இதன் சராசரி 14.80% ஆக இருக்கத் தமிழகத்தில் 39.10% ஆக உள்ளது. ஏறக்குறைய 25% கூடுதலாக உள்ளது. 142 சமூகத்தவர் கடலோரப் பகுதியில் வாழ்கின்றனர்.

மலையகப் பகுதியைப் பொறுத்தவரை தேசிய சராசரியும் தமிழகத்தின் விழுக்காடும் ஏறக்குறைய நெருங்கிக் காணப்படுகின்றன. தேசிய சராசரி 25.83%, தமிழகம் 24.45%. தமிழக மலைப் பகுதிகளில் 89 சமூகங்கள் வாழ்கின்றனர். 307 சமூகத்தவர் சமநிலப் பகுதியில் வாழ்கின்றனர். இதன் அளவு தேசிய சராசரியைக் காட்டிலும் 23% கூடுதலாகும் தேசிய சராசரி 61.38% மட்டுமே. தமிழகத்தில் இது 84.34% ஆக உள்ளது.

தமிழகத்தின் 364 சமூகங்களில் 269 சமூகத்தாருக்கு நிலமே உடைமையாகவும் வாழ்வாதாரமாகவும் உள்ளது. 73.90% அளவைக் கொண்ட இத்தன்மை தேசிய சராசரி அளவான 64.10% விட 9% கூடுதலாகவே உள்ளது. 235 சமூகங்கள் வேளாண்மை செய்து வருகின்றன. தேசிய சராசரி அளவான 53.57% காட்டிலும் இது 11% (64.56%) கூடுதலாகும். இடம் விட்டு இடம் பெயர்ந்து வேளாண்மை செய்யும் முறையை 7 சமூகத்தவர்கள் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பழங்குடியினரே.

அடுத்தாக, 113 சமூகத்தவர் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பட்டனவர், செம்படவர், கரையார், வலையர், காடையர், பரதவர், முக்குவர் போன்ற 26 சமூகத்தவர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடித் தொழில் செய்து வந்த சீவலக்காரர் இப்போது அத்தொழிலை விடுத்து விவசாயத்திற்கு வந்துவிட்டனர்.

“அவ்வாறே உப்பளம் கவனித்து வந்த உப்பிலியன்கள் அத்தொழிலை விடுத்து விவசாயத்திற்கு மாறிவிட்டனர். நாடார்கள் பெரும்பாலோர் தங்கள் மரபுத் தொழிலை விடுத்து வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். கணக்குப் பிள்ளைகளும் இவ்வாறே கிராம நிர்வாகத்­திலிருந்து விடுபட்டு நவீன கல்வியையும் குலத் தொழில் சாரா புதிய தொழில்களையும் ஏற்றுக்கொண்டனர்”. (2019:457-458)

நிலம், மொழி, தொழில், சூழல் ஆகிய இவைதான் பண்பாடு என்பதன் அசைவியக்கக் காரணிகள். இவற்றை வரலாற்றுப் பின்புலத்தில் விளங்கிக் கொள்ளவும், இவற்றின் உள் ஆற்றலைப் புரிந்துகொள்ளவும் பண்பாட்டு எழுத்துக்கள் துணை புரிகின்றன.

“பண்பாடு என்பது சிக்கலான, பலவித கருத்துநிலை மட்டங்களை உள்ளடக்கியது என்பதையும், பண்பாட்டு மாற்றங்கள் மெதுவாகவும் படிப்படியாகவுமே ஏற்படுகின்றன என்பதையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்” (2016:557) என்றும்,

“எந்தவொரு புதிய பண்பாட்டிற்காக நாம் போராடுகிறோமோ அந்தப் பண்பாடு உயிருள்ளதாகவும் அவசியமானதாகவும் இருக்குமேயானால், அந்தப் பண்பாட்டின் வீச்சு தவிர்க்க முடியாததாக இருக்கும்; அது தனக்கான கலைஞர்களைத் தானே கண்டறியும். ஆனால், அரசியல் நிர்பந்தங்கள் இருந்தும்கூட அந்தப் பண்பாட்டின் வீச்சு தவிர்க்க முடியாததாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இல்லாமல் போகுமானால் அதன் பொருள் இதுவாகத்தான் இருக்க முடியும்; அந்தப் புதிய பண்பாடு செயற்கையானது; கற்பனையானது; அது பெரும் கலைஞர்கள் தங்களுடன் ஒத்துப்போவதில்லை என்று புலம்புகிற சராசரித்தனமான மனிதர்களின் அட்டை உலகம்தான்” (2016:561) என்றும் கிராம்ஷி கூறுபவை பண்பாடு, பண்பாட்டு மாற்றம், கலைஞர்களின் சார்பு நிலை ஆகியவற்றைத் தெளிவுப்படுத்தும்.

“வாய்மொழிக் கதைகளில் பெரும்பாலும் சமூகத்தில் பாதிக்கப்பட்டோர் வெற்றி பெறுவதைக் காணலாம். இயல்பான வாழ்க்கையில் வெற்றிபெற இயலாத நலிந்த பிரிவினர் வாய்மொழிக் கதைகளில் வெற்றியாளர்களாக உலா வருவர். பெண் தருவதாகக் கூறிப் பணக்காரனால் ஏமாற்றப்பட்ட ஓர் ஏழை இளைஞன் அதீத சக்தி பெற்று அப்பணக்காரனை வெல்வான். நடைமுறை வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் பிறக்கும் மூத்தவர்கள் அதிக அதிகாரத்தைப் பெற்றவர்களாகத் திகழ்வர். வாய்மொழிக் கதைகளில் இளையோர்களே வெற்றியாளர்களாக வலம் வருவர்.

ஒரு குடும்பத்தில் பிறக்கும் அழகு வாய்ந்த சகோதரர்களை விட அக்குடும்பத்தில் பிறக்கும் அழகற்ற அல்லது ஊனமுற்ற குறைபாடுடைய சகோதரர்களே கதைகளில் வெற்றியாளர்களாகத் திகழ்வர். இத்தகைய கதைகளைக் கேட்கும் நலிந்த பிரிவினர் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைவதைக் காணமுடியும்” (2018:102) என ஆறு. இராமநாதன் வாய்மொழி மரபு பற்றிக் கூறுவது வாய்மொழி வழக்காறுகளைப் பயன்படுத்தி எழுதப்பெறும் எழுத்து ஆவணங்களுக்கும் பொருந்தக்கூடியது. மையம் x விளிம்பு, ஆதிக்கம் x அடித்தளம் என்ற எதிர்மைகளில் ஒடுக்கப்பட்டத் தன்மைக்கு ஆதரவான நிலை எடுப்பது என்பது நாட்டுப்புற வாய்மொழி மரபின் நீட்சியாகவே அமையும்.

இந்தப் பன்மைத்துவக் கூறுகள் காலம், வெளி, சூழல் சார்ந்தவை. சமூக இயக்கக் கூறுகள், பொருள்சாரா மற்றும் பொருள்சார் பண்பாட்டுக் கூறுகள் வாய்மொழி மரபிலும் எழுத்து மரபிலுமாக தொழில்படும் விதத்தை ஆராய்ந்தறிவது அவசியம். இன்று தேசிய ஒற்றைப் பண்பாடு எனும் பண்பாட்டு ஏகாதிபத்தியம் அச்சப்படுத்தும் கருத்தியலாக உருவெடுத்துள்ளது.

எனவே, தாய்மொழிகள், தேசிய இனங்கள், இனக் குழுக்கள், நிலவியல் அடையாளங்கள், காலம், சூழல் சார் பன்மியங்கள் படைப்புகளில் வெளிப்படுகின்றன. எல்லா ஆதிக்கங்களுக்கும் எதிராக, மாற்றாக அடையாள மீட்டுருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பண்பாடு இனி பண்பாடுகள் ஆகும். பொதுப் பண்பாடு ஆதிக்கப் பண்பாடாகக் கட்டமைக்கப்பட்ட நிலையில் எதிர்ப் பண்பாடு, மாற்றுப் பண்பாடு, விளிம்புநிலைப் பண்பாடு எனும் எதிர்வுகள் தவிர்க்கமுடியாதவை. எனவே பண்பாட்டுக் கல்வியில் பண்பாட்டு எழுத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும்.

பயன்பட்ட நூல்கள்             

1.            அப்பணசாமி.மூ, வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும், ஆறாம் திணை பதிப்பகம், சென்னை, 2022.

2.            இராமநாதன்.ஆறு, வாய்மொழி மரபும் எழுத்து மரபும், மணிவாசகர் பதிப்பகம், , சென்னை - 108, பதிப்பு: 2018.

3.            கீதா.வ எஸ்.வி.ராஜதுரை, கிராம்ஷி புரட்சியின் இலக்கணம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 98, பதிப்பு: 2016.

4.            சண்முகதாஸ். அ, மொழியும் பிற துறைகளும், குமரன் புத்தக நிலையம், கொழும்பு - சென்னை, பதிப்பு: 2006.

5.            சிவசுப்பிரமணியன்.ஆ, இனவரைவியலும் தமிழ் நாவலும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பதிப்பு: 2014.

6.            சுப்பிரமணியன்.கி.பூ, (தமிழாக்கம்) ரூத் பெனிடிக்ட், தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு அரசாங்கம், முதற்பதிப்பு: மார்ச் 1964.

7.            தனஞ்செயன். ஆ, தமிழில் இலக்கிய மானிடவியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113, பதிப்பு: 2014.

8.            ......, விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்(இனவரைவியல் ஆய்வு), நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை - 98, பதிப்பு: 2015.

9.            பக்தவத்சலபாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், 53,புதுத்தெரு, சிதம்பரம் - 608 001, விரிவாக்கப் பெற்ற திருத்திய பதிப்பு: ஏப்ரல், 2003.

10.         ....., தமிழர் மானிடவியல், அடையாளம், திருச்சி - 621 310, மூன்றாம் பதிப்பு: 2015.

11.         ......, இலக்கிய மானிடவியல், அடையாளம், இரண்டாவது பதிப்பு: 2020

12.         பஞ்சாங்கம். க, இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர் - 613 007, முதற்பதிப்பு: 2011.

13.         மகேசுவரன்.சி, இனக்குழுவரைவியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், சென்னை - 600 098, பதிப்பு: 2020.

14.         ராபர்ட் ஜே.சி.யங், தமிழில் மங்கை.அ, பின்காலனியம் மிகச் சுருக்கமான அறிமுகம், அடையாளம், பதிப்பு: 2007.

15.         ஸ்டீபன். ஞா, இலக்கிய இனவரைவியல், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை - 98, பதிப்பு: 2017..

- இரா.காமராசு, பேராசிரியர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர், தஞ்சாவூர்

Pin It